ponnoonjal14

ponnoonjal14

ஊஞ்சல் – 14

தமிழும் தெலுங்கும் கொஞ்சி விளையாடும் ஏகாம்பரகுப்பம் கிராமத்தில் பொங்கல்விழா வெகுவிமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. விழாவின் உச்சகட்ட கொண்டாட்டமாய் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகி இருக்க, அதனைக்காண கிராமத்தினர் அந்த மைதானத்தில் கூடியிருந்தனர்.

விழாவில் உறிபானை விளையாட்டு போட்டி நடப்பதற்கான அறிகுறியாக, இருமூங்கில் கம்புகள் நடப்பட்டிருந்தது. அவற்றின் மையப்பகுதியில் ஓர்உருளையும், அதன்வழி ஒருகயிறும் தொங்கவிடப்பட்டு இருந்தது.

கயிற்றின் ஒருமுனையில் சுமார் 20அடி உயரத்தில் மண்பானையைக் கட்டி, மறுநுனியை ஒருவர் பிடித்துக் கொண்டிருந்தார். அந்தப் பானையில் வண்ணக் கலவைகள் கொண்ட நீர் நிரப்பப்பட்டிருந்தது. சற்றுதூரம் தள்ளி எல்லைக்கோடுகள் போடப்பட்டு, கயிற்றைக்கட்டி பார்வையாளர்களை தடுத்திருந்தனர்.

மகளை தன்பொறுப்பில் ஏற்றுக் கொண்டிருந்த ரிஷபன், இந்த சிலமாதங்களில் கம்பு சுழற்றும் வித்தையை கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு சொல்லித்தரவும் ஆரம்பித்திருந்தான். மகளின் ஆர்வமும் தந்தையின் உற்சாகமும் கைகோர்த்து விளையாட்டுப் போட்டியில் பங்குகொள்ளும் அளவிற்கு முன்னேறியிருந்தது.

காலைக் கதிரவனின் ஆதிக்கத்தில் வியர்வையில் குளித்துக் கொண்டிருந்த ரிஷபன், தன்முறுக்கேறிய தோள்களில் முதுகோடு இறுக்கக்கட்டிய மகளைத் தாங்கிக் கொண்டவாறே நேர்கொண்ட பார்வையுடன் உறுதியாக நின்று பானையின் மேலும்கீழும் அசைந்தாடும் நிலையை கணக்கிட்டுக் கொண்டிருந்தான்.

உப்புமூட்டையாக முதுகில் அமர்ந்திருந்த செல்ல சீமாட்டியின் கண்கள் கட்டப்பட்டு, பானையை உடைப்பதற்கான கம்பு அவள் கையில் கொடுக்கப்பட்டிருந்தது.

சுற்றிலும் மக்களின் ஆரவாரம் காதைக் கிழித்துக் கொண்டிருக்க, சின்னா தன்தோழர்களுடன் சேர்ந்து தங்கையை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தான்.

“பொம்மி கம்ப கெட்டியாப் பிடிச்சுக்கோ! விசில் அடிச்சதும் மூணு தடவதான் அடிக்கனும். கவனமா நிதானமா அடி! பயப்படாம செய்யனும்” என்று தடுப்புக்கயிற்றுக்கு அந்த பக்கத்தில் இருந்து சொன்னவனின் பேச்சைக் கேட்டுக் கொண்டதன் அடையாளமாக தலையாட்டிக் கொண்டாள் பொம்மி.

ஆடாத ஜவ்வாது மணம் ஆடிடும் பொம்மி
ஆண்டவனை தாலாட்டும் இசைகேளடி பொம்மி
என்பாட்டு வந்தாலே மனம்துள்ளிடும் பொம்மி
அவன்பாட்டு இல்லாத இடம்எங்கேடி பொம்மி
என்று ஒலிபெருக்கியில் பாட்டும் போட்டுவிட்டு, தோழர்களுடன் சேர்ந்து,
ஹே பொம்மி… ஹே பொம்மி
ஹே பொம்மி… ஹே பொம்மி, என்று அந்த தருணத்தை மேலும் அழகாக்கிக் கொண்டிருந்தான் சின்னா.

கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போன்ற நிலைதான் பொம்மிக்கு. அந்த நிலையைத் தாண்டி, மேலும்கீழும் இழுத்து விடப்படும் பானையை தன்அருகில் வந்ததும் அதனை உடைத்து போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

இப்பொழுது அந்தச் சின்னசிட்டின் எண்ணமெல்லாம் வெற்றி ஒன்றையே நினைத்துக் கொண்டிருக்க, செவிகள் இரண்டையும் தன்கண்களாக மாற்றிப் போட்டி ஆரம்பம் ஆவதற்கான ஒலியை கேட்க ஆயத்தமாக இருந்தாள்.

“நாணா சொன்னதும் அடிக்கணும் சரியா அம்மு?” என்று மகளுக்கு குறிப்புகளை சொன்னவனும் தயார் நிலையில் நின்றுகொண்டான். ஒருவருக்கு ஐந்துநிமிடங்கள் விளையாட நேரம் கொடுக்கப்பட்டிருந்தது.

போட்டி ஆரம்பமானது. முதல், இரண்டாவது முறைகள் ரிஷபன் நன்றாக தாவிக்குதித்தும், பொம்மியால் பானையை உடைக்க முடியவில்லை. நூலிலையில் வெற்றியைத் தவறவிட்டிருந்தாள். ஒருநிமிடம் நின்று சுதாரித்தவன், பின் மகளிடம் மெதுவாக,

“கம்பை சுத்திட்டே இரு அம்மு! நாணா சொன்னதும் அடிச்சிரு” என்று ஆசுவாசமாக கூறிட, மகள் கம்பை சுழற்ற ஆரம்பித்ததும் முன்னைவிட நன்றாக எகிறி மேலே எழும்பியவன், “அட்ரா பொம்மி!” என்று சொல்லிக் குதிக்க, அவளும் தன்பலம்கொண்ட மட்டும் கம்பை வீச சரியாக பானை உடைந்து, அதிலுள்ள நீர் இருவரின் மீதும் அபிஷேகமானது.

மைதானம் எங்கும் கரகோஷம், விசில்சத்தம் காதைப்பிளக்க முதல்முறையாக தன்வெற்றியை அனுபவித்து ரசித்துக் கொண்டிருந்தாள் பொம்மி.

“சின்னையா நல்லா அடிச்சேனா?” உற்சாகத்துடன் அவனிடம் கேட்க,

“ஒஹ்… சூப்பர் கேர்ள் ஆயிட்ட பொம்மி! வா… சின்னப் பசங்க விளையாடற போட்டியில எல்லாம் நீயும் சேர்ந்து விளையாடலாம்.”

“நான் தனியா விளையாடமாட்டேன் எனக்கு பயமா இருக்கு” – பொம்மி.

“நீக்கு பயம் போயிந்திரா அம்மு!”(உனக்கு பயம் போயிடுச்சுடா) ரிஷபன், மகளின் தயக்கத்தைப் போக்க,

“ம்ஹும்… போலேது சீனிப்பா!” தந்தையுடன் வெளியே சுற்றிய பழக்கம், செல்லசிட்டு லேசுபாசாக தெலுங்கும் பேச ஆரம்பித்திருந்தாள்.

“நீ தைரியமா கம்பு சுத்தி அடிச்சதாலதான் நாணா போட்டியில ஜெயிக்க முடிஞ்சதுரா பங்காரம்! உன்னால தனியா விளையாட முடியும். நாணா வேடிக்கை பாக்குறேன், சின்னா உன்கூட இருப்பான்” என்று மகளை உற்சாகப்படுத்த,

“ஆமா பொம்மி! நான் இருக்கேன் வா விளையாடலாம்!” என்று அவனும் ஊக்கம் கொடுக்க, சிறுமியும் புது உத்வேகத்துடன் ஒப்புதல் அளித்தாள்.

அன்றைய தினம் தங்களால் முடிந்தவரை போட்டிகளில் கலந்து பரிசு வாங்கியவர்கள், வீட்டிற்கு வரும் பொழுது மதியவேளை கடந்திருந்தது.

“அம்மா… அம்மா.. எங்கே இருக்கீங்க? நானும் பொம்மியும் பிரைஸ் வாங்கியிருக்கோம்” என்று உற்சாகக் குரலில், துள்ளலாய் தாவிக்குதித்துக் கொண்டே, சந்தோசத்தில் தன் அன்னையை தேடினான் சின்னா.

அவன் உற்சாகத்திற்கு சற்றும் குறையாமல் தந்தையின் கைபிடித்துக் கொண்டே வந்த பொம்மியும், அண்ணனுக்கு போட்டியாக ஓடி வந்தாள்.

“ம்மா… என்னோடதுதான் ஃபர்ஸ்ட் பாக்கணும்” பொம்மி போட்டி போட,

“மெதுவாரா அம்மு! அம்மாவ தொந்தரவு பண்ணாம காட்டுங்க”

“எங்ககிட்ட காட்டுங்க பசங்களா!” என்ற சுந்தராஜுலு, ராமைய்யா தாத்தாக்களின் அறிவுரை காற்றில் பறந்து போனது இரண்டு பேருக்கும்.

“அம்மாட்டதான் ஃபர்ஸ்ட்” என்று குதித்துக் கொண்டே அசலாவிடம் சென்றாள் பொம்மி.

“பார்த்துவாடி அவசரகுடுக்க… ரெண்டு பேரோடதும் பாக்குறேன்” என்று சொன்னவாறே மெதுவாகவே சோபாவில் அமர்ந்தாள் நிறைசூல் கொண்ட அசலாட்சி.

“நான் கம்பு சுத்தி பானைய உடைச்சேனே? ஏன்மா நீ பாக்க வரல?” முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே மகள் கேட்க,

“பொம்மி! குட்டிபாப்பாக்கு கூட்டத்துல இருந்தா ஒத்துக்காது அப்படிதானேம்மா?” என்று சின்னாவும் தங்கைக்கு தெளிவாக புரியவைத்தான்.

“ப்ரைஸ் எல்லாமே அழகா இருக்கு. அடுத்த வருஷம் எல்லோரும் சேர்ந்து போவோம் சரியா? ஊர்ல இருக்குற தூசியெல்லாம் உங்க மூணுபேர் உடம்புலதான் ஒட்டியிருக்கு. மொதல்ல குளிக்கலாம் வாங்க!” என்றே கணவனை பார்த்தாள்.

எட்டு மாதங்கள் முடிந்திருக்க ரிஷபனின் பார்வை அத்தனை ஆசையாய் மனைவியை தழுவிச் சென்றது. கரையிட்ட காட்டன் புடவையில், தாலிக்கொடியோடு மெல்லிய தங்கசங்கிலி அலங்கரிக்க, அதுவே தனிதேஜஸ் கொடுத்தது. எப்பொழுதும் மனைவியின் மையிட்ட விழிகளில் மயங்குபவன், நிறைமாதத்தின் சோர்வுடன் இருந்த கண்களையும், விழி எடுக்காமல் ரசித்துக் கொண்டிருந்தான்.

பிள்ளைகளுடன் பேசிக்கொண்டே இருந்தாலும் கணவனின் விழிமொழியை அறிந்து கொண்டவளின் செயல்கள் சுறுசுறுப்பாகவே இருந்தன.

“பாவா! போய் குளிச்சிட்டு வாங்க” என்று கணவனின் பார்வையை தடை செய்ய,

“முடியாது! இங்கேதான் உக்காந்திருப்பேனாம்! என்ன செய்றதா உத்தேசம்?” குடும்பத்தின் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் புதியவனான கணவன், அந்த சமயத்தில் சிறுபிள்ளையாகத் தோன்ற,

“ஊர்காவலாளி வீட்டுக்கு காவலா உக்காரப் போறாரா? ஒன்னுக்கு அஞ்சு பெரியவங்க வீட்டுல இருக்காங்க… அவங்ககிட்டயும் சொல்லிட்டு செய்ங்க! நீங்களும் நாணாகூட உக்காரப் போறீங்களா? இல்ல குளிக்கிற ஐடியா இருக்கா?” என்று பிள்ளைகளைப் பார்த்து செல்ல அதட்டலில் கேட்க,

“அச்சும்மா… நான் பிக்கேர்ள்! நானே குளிச்சுப்பேன். சீனிப்பா மேலே நம்ம ரூம்க்கு போவோம். அம்மா சின்னாகூட கீழே இருக்கட்டும்” என்ற மகளின் சொல்லும் செயலும் தந்தையவனைச் சார்ந்தே அமைந்திருந்தது.

எங்கேயும் தந்தை தன்பின்னே நிற்கிறான் என்ற நினைவே சின்னப் பெண்ணிற்குத் துணிவைக் கொடுக்க, எதற்கும் அஞ்சாமால் தாயை விட்டுத் தனித்து இருக்கவும் பழகிக் கொண்டிருந்தாள்.

குழந்தைகளின் மேல் கவனிப்பு என்பது கேட்பதெல்லாம் வாங்கி கொடுத்து சீராட்டுவது மட்டுமில்லை, தன் கண்பார்வையில் வைத்துக் கொண்டே, உடனிருந்தே அரவணைத்துக் கொள்வதும்தான்.

பொம்மியின் பேச்சு மற்றும் செயல்களில் ரிஷபனின் கவனிப்பு தெரிய, சின்னாவின் வாட்ட சாட்டமான, அழகான வளர்ந்த சிறுவனின் தோற்றத்தில் அசலாவின் அக்கறை பட்டவர்த்தனமாய் தெரிந்தது.

“நாங்க வர்றவரை மேலே வந்து எட்டிப் பார்க்காம, ஒழுங்கா ஒரே இடத்துல உட்கார்ந்து இருக்கணும், இல்ல…” என்று செல்லமாக மனைவியை மிரட்டி, மீசையை முறுக்கிக் கொள்ள,

“இந்த பெரிய மீசைய பார்த்து நாம பயந்திடுவோமா என்ன?” என்றவளின் விளையாட்டுப் பேச்சில் ரிஷபன் முகம் மலர்ந்ததை சொல்லவும் வேண்டுமோ?

“இருக்குற இடம் தெரியாம அமைதியா இருந்தவ, புருஷனை அதட்டுற அளவுக்கு பெரிய வாயாடி ஆகிட்டா!” என்று சிரித்தே முறைத்தான்,

“உங்களையும், உங்க பிள்ளைங்களையும் கட்டிமேய்க்கிற புண்ணியம்… எனக்கும் பேச்சு தானா கொட்டுது பாவா!”

“சீனிப்பா! வாங்க போவோம்! எனக்குப் பசிக்குது, குளிக்காம அம்மா சாப்பாடு போடமாட்டாங்க…” என்ற பெரும் குற்றச்சாட்டை மகள் வைக்க, அந்த மகுடிப்பேச்சில் மயங்கியவன் இடத்தை காலி செய்தான்.

தந்தை மகளுக்கு இடையே உண்டான அழகான பந்தத்தை நினைத்து அசலாட்சி மகிழாத நாளில்லை. தன்னிடம் அடம்பிடிப்பவள், தந்தையின் பேச்சிற்கு தலையாட்டிக் கொண்டே சொல்பேச்சை கேட்பது தாயவளுக்கு புரியாத புதிராய் இருக்கும்.

எப்பேர்பட்ட கல்நெஞ்சுக்காரனும் தனக்கென்ற வாரிசு வரும்பொழுது ஒட்டு மொத்த சந்தோசத்தில் புதிய உறவை வரவேற்று மகிழ்வான். ரிஷபனும் அதற்கு விதி விளக்கல்ல.

ஆனால் அவன் மனம் முழுவதும் தான்பெறாமல் வந்த பொம்மியின் நல்வாழ்வு ஒன்றையே நினைத்திருக்க, அதற்கு தடைபோடும் எதையும் தவிர்க்கும் முடிவிற்கு வந்திருந்தான்.

அதன் வெளிப்பாடே மனைவி தங்களின் புரிதலான உறவிற்கு சாட்சி வரபோகிறது என்று சொன்னதும் மனம் மகிழ்ந்தவன் மகளை நினைத்தே வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தான்.

அசலாட்சிக்கும் சின்னாவின் மனநிலை தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. பொம்மி இப்படித்தான் என்று கணித்து வைத்திருந்தவளுக்கு, மகனிடம் தனக்கான இடம் என்னவென்று இத்தனை நாட்களில் அறிந்து கொள்ள விருப்பபட்டதில்லை.

ஏற்கனவே இரண்டு புதியவர்களை தன்னோடு இணைத்துக் கொண்ட சிறுவனுக்கு, மேலும் ஒருஜீவனை புதிதாய் இணைத்துக் கொள்வதில் விருப்பம் இருக்கும் என்பதில் அசலாவிற்கும் ஐயம் இல்லை. ஆனாலும் அதனை சின்னாவின் வாய்மொழியில் கேட்க ஆசைவர, இருவரையும் வைத்துக் கொண்டே பேச்சை ஆரம்பித்தாள்.

கணவன் மறுப்பு சொன்ன மறுநாள் வழக்கம்போல் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த பொம்மியையும், சின்னாவையும் அருகே வைத்துக் கொண்டவள், கணவனையும் அந்த சமயத்தில் தோட்டத்திற்கு வரச்சொல்லி காத்திருக்க,

“எதுக்கு இந்த நேரத்துக்கு வரச்சொன்ன சாலா?”

“எங்ககூட கொஞ்சநேரம் உக்காந்து பேசுங்க பாவா! எந்தநேரமும் வெளியே சுத்திட்டு, வீட்டுல இருக்குறவங்க மனசு உங்களுக்கு தெரியாம போயிடுது” மனைவியின் பார்வையும் பாவனையும் கணவனைக் கட்டிபோட்டது.

பொதுவாக சில விசயங்களை குழந்தைகளிடம் பேசிவிட்டு, முதலில் கணவனின் மனசுணக்கத்தை தீர்க்க எண்ணியே முதலில் மகளிடம் பேச்சை ஆரம்பித்தாள்.

“பொம்மிகுட்டி, உன்கூட விளையாட இன்னொரு பாப்பா வந்தா உனக்கு சந்தோசம்தானே?”

“ஹே… ஜாலியா இருக்கும்மா! நிறைய விளையாடலாம்”

“என் சக்கரகட்டிடி நீ! அந்த பாப்பா என்னை அம்மான்னு கூப்பிடும், என் மடியில படுத்துக்கும்… நான் அந்த பாப்பாவ தூக்கி வச்சுப்பேன்! நாணா, அவ்வா, தாத்தையா எல்லாரும் குட்டிபாப்பாவ நிறைய தடவ தூக்கி கொஞ்சுவாங்க. அப்போ பொம்மி அழுவாளா?” என்று சந்தேகமாய் மகளை கேட்டாள்.

“ம்மா… குட்டிபாப்பாவ அப்டிதானே வச்சுக்கணும். வீட்டுல குட்டிபாப்பா இருந்தா என்னை மாதிரி பிக்கேர்ள்(பெரியபொண்ணு) பக்கத்துல இருந்து பார்த்துக்கணும்னு ஸ்கூல்ல மிஸ் சொல்லி இருக்காங்கம்மா. சின்னையா உனக்கும் சொன்னங்கதானே?” என்று அதிமேதவியாய் அண்ணனை கேட்க அவன் திருதிருவென்று முழித்தான்.

அவன் எங்கே இதையெல்லாம் நினைவில் வைத்திருந்தான். உடனே ஆமாம் என்று சொல்வதற்கு. ஆனால் தாயின் பேச்சில் தங்கள் வீட்டிற்கு புதிய உறவொன்று வரப்போகிறது என்பதை தெரிந்து கொண்டவனுக்கும் மகிழ்ச்சியே! அதனால் தங்கை சொல்லியதிற்கு, ‘ஆமாம்’ என்று தலையாட்டி வைத்தான். சிறுமியை விட விவரமாக அவன் பேசிய பேச்சு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

“ஆமா பொம்மி! அப்டி வந்தா நீயும் நானும் சண்டை போடாம இருக்கலாம். நீ நிறைய பாட்டு, பாப்பாக்கு பாடிக்காட்டலாம். நானும் விளையாட்டு எல்லாம் சொல்லிக் குடுப்பேன். என்கூட ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போவேன்” என்று அவனது பங்களிப்பை கூறிவிட, இப்பொழுது முகம் வாடுவது சிறுமியின் முறையானது.

“அப்ப எனக்கு விளையாட்டு சொல்லிக் குடுக்கமாட்டியா? என்னை எங்கேயும் கூட்டிட்டு போகமாட்டியா சின்னையா?” என்று பொம்மி ஏக்கத்துடன் கேட்க,

“நீதான் ஸ்கூலுக்கு வரமாட்டேன்னு சொல்ற! என்கூட விளையாட கூப்பிட்டா சண்டை போட்ற! நீ இப்டி பேட்கேர்ளா இருந்தா நான் என்ன செய்றது?”

“போடா சின்னையா! நானும் நல்ல பாப்பாதான். நிறைய பேர் அங்கே இல்லாம இருந்தா நானும் ஸ்கூல் போவேன்” என்று தன்எண்ணத்தை வெளிப்படுத்த,

“உன்னோட கிளாஸ்ல நீ இருக்கப்போற. யாராவது உன்கூட வம்பு பண்ண வந்தா, என்னை கூப்பிடு பொம்மி, நான் வர்றேன்னு சொல்றேன்தானே!” என்றும் தான்பொறுப்பானவன் என்று மீண்டும் நிரூபித்தான் சின்னா.

அண்ணனின் பேச்சில் சற்றே யோசிக்கும் மனநிலைக்கு பொம்மி செல்ல, அசலாட்சி அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாள்.

“நீ ஸ்கூலுக்கு போனாதானேரா வர்ற பாப்பாக்கு குட்ஹாபிட் சொல்லிக் குடுக்க முடியும். அதோட நிறைய ரைம்ஸ் பாடணும்னா ஸ்கூல் போனாதானே கத்துக்க முடியும்?” என்று பேசிக்கொண்டே கணவனை பார்க்க, குழந்தைகளின் பேச்சில் மதிமயங்கினவனின் முகம் அழகான புன்னகையில் மலர்ந்திருந்தது.

“ஆமாரா பங்காரம்… நல்ல அறிவுள்ள பிள்ளையா, பெரிய பொண்ணா வளரணும்னா ஸ்கூல் போயே ஆகணும்ரா அம்முக்குட்டி” என்று உண்மை நிலையை சொல்லிட,

“அப்ப சரி! நான் ஸ்கூல் போறேன். ஆனா என்னை யாரும் எதுக்கும் கூப்பிடக் கூடாது, நான் கிளாஸ்ல மட்டுமே இருப்பேன் சீனிப்பா!” சம்மதத்தோடு, செல்லக் கட்டளைகளையும் சொல்லிட பெற்றோர்களுக்கு இதைவிட வேறென்ன மகிழ்ச்சி வேண்டும்.

“உங்க நாணா குட்டிபாப்பா இப்போ வரவேண்டாம்னு சொல்றாங்க, என்ன பண்ணலாம் பசங்களா?” அசலாட்சி தெளிவாக ரிஷபனை நோக்கி இருவரையும் திருப்பிவிட, பிள்ளைகளின் நடுவில் மாட்டிக்கொண்டு முழித்தான்.

“நாணா, பொம்மிதான் என்னை அண்ணயானு கூப்பிடல! வரப்போற குட்டிபாப்பா கூப்பிடுமே! அதுக்காகவாவது வரச்சொல்லுங்க” சந்தோஷத்துடன் சின்னா சொல்ல,

“உன் கவலை உனக்குடா!” என்ற அசலாவிற்க்கும் தன்மகனை நினைத்து பெருமையே!

“ஆமாம்மா… பொம்மி சொல்பேச்சு கேக்கலைன்னா நான் என்ன பண்ண?” அலுப்புடன் பதில் அளித்தான்.

“சின்னையா, என் பேச்சுதான் குட்டிபாப்பா கேக்கும்! நான் பாப்பாகூட நிறைய விளையாடனும். எப்போ வரும் சீனிப்பா?” என்று அடுக்கடுக்காக இருவரும் கேள்விகளை கேட்டு திக்கு முக்காட வைக்க,

“சரி… சரி, சீக்கிரம் இந்த வீட்டுக்கு குட்டிபாப்பா வருவாங்க போதுமா?” என்று மனம் நிறைந்த சந்தோசத்துடன் ஒப்புதல் அளித்து விட்டான்.

மகள் பேசிய பேச்சை மறந்து போகும் முன்னே மறுநாளே அவளை பள்ளியில் சேர்த்து விட்டு வந்தவன், மனைவியை தூக்கிச் சுற்றாத குறையாக கொண்டாடிக் கொண்டான்.

“நிறைய குழப்பத்துல இருந்தேன் சாலா! ஒருநாள்ல எல்லாத்தையும் சரிபண்ணிட்ட” மனைவியை அணைத்துக் கொண்டவாறே, அவளை தன்னுள் அடக்கிகொண்டான்.

“நீங்கதான் பாவா இதுக்கெல்லாம் காரணம்” அவனுள் அடங்கியவள் பதில் சொல்ல,

“நான் என்ன செஞ்சேன்? உன்கூட சண்டை மட்டுமே போடல, மத்தபடி பேசியே உன்மனச நோகடிச்சேனே!” என்று தன்செயலை தானே வெறுத்தவாறு பேசினான்.

“நீங்க சொன்னத செஞ்சிருந்தா இருக்குற கொஞ்ச நிம்மதியும் போயிருக்கும் பாவா! அதுக்கப்புறம் மறுபடியும் நமக்குள்ள அன்யோன்யம் வர்றதும் சந்தேகம்தான். எனக்கு ஒரு கஷ்டத்தை கொடுத்து நீங்களும், அதையே நினைச்சு தவிச்சுட்டு இருப்பீங்கனும் புரியும். நீங்க நிம்மதியில்லாம தவிக்கிறத பாக்க எனக்கு தைரியம் இல்ல” என்று யதார்த்தத்தை கூறியவளின் பேச்சில் தன்னையே மறந்து நின்றான் ரிஷபன்.

“நம்ம கல்யாணத்துக்கு பிறகுதான் மனமொத்த மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்றேன்னு என்கிட்ட சொல்லிருக்கீங்களே? அப்படி இருக்கும்போது அந்த சந்தோசத்துக்கான அடையாளத்தை நீங்க எப்படி வெறுக்க முடியும்? அந்த குழந்தை வந்தா, நம்ம பிள்ளைனு அதுமேல அதிகமா பாசம் காட்டி பொம்மிய தள்ளி வைக்கிற மனசு வந்துரும்னுதானே நீங்க வேண்டாம்னு சொன்னது?” என்று அவன் நாடிபிடித்து பார்த்தவளைப் போன்று பேசிய மனைவியை பிரமித்துப் பார்த்தான்.

“உண்மைதான் சாலா! என்பொம்மிய பாதிக்கிற எந்த விசயத்தையும் என்னால அனுமதிக்க முடியாது. அவளோட மனநிலைக்கு, வர்ற குழந்தை கூடவும் போட்டிபோட்டு ஒதுங்கி போயிட்டா என்ன பண்றதுன்னுதான் ரொம்ப சங்கடப்பட்டு அப்படி சொன்னேன்”

“வளர்ற குழந்தை போகப்போக மாறிடுவா பாவா! குடும்பச் சூழ்நிலைய இப்போதான் நீங்க கவனிக்க ஆரம்பிச்சிருக்கீங்க! அதான் உங்களுக்கு இத்தன குழப்பம் வந்திருக்கு” கணவனின் மனநிலையை கணித்து, அவனுக்கே விளக்கியவளை பார்த்தவன், நிம்மதியான பெருமூச்சினை விட்டு தன்னை ஆசுவாசபடுத்திக் கொண்டு சிரித்தான்.

“என்மேல வருத்தம் இல்லையே பாவா?” என்று மிரட்சியுடன் மனைவி கேட்க,

“அப்படி இருந்தா? என்ன செய்ய சொல்ற? பொண்டாட்டிய டீன்னு கூப்பிட்டும் பழக்கம் இல்லாத அப்பாவிமா நான்!” என்றவனின் துடுக்குத்தனமான பேச்சில், மீண்டும் அவன் கைகளுக்குள் சிறையாகி இருந்தாள்.

“அச்சோ… விடுங்க பாவா!” அவன் மார்பில் கைவைத்து இவள் விலக முற்பட,

“நாம இன்னும், நம்ம சந்தோசத்தை கொண்டாடவே இல்ல சாலா” என்று அடம்பிடித்து, சந்தோஷத்தை முறையாக கொண்டாடிவிட்டே ஓய்ந்தான்.

கர்ப்பகாலத்தில் ஏற்படும் மாற்றமும், அறியாத பலவிடயங்களையும் பெண்களின் இன்னல்களையும் தெளிவாக உணர்ந்தவன், மனைவியை கண்களுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டான்.

மனதிற்குள் நேசத்தை பகிர்ந்து கொண்டவர்களுக்கு, வெளியே தங்கள் ஆசைகளையும் பரிமாறிக்கொள்ள, அவர்களின் காதல் பொன்னூஞ்சல் அழகாய் ஆடியது.

கனகம்மா – சங்கரையா தம்பதிகளை ரிஷபன் தங்களுடனே தங்கவைத்துக் கொண்டான். தாய் கோகிலம்மாவின் உடல்நிலை, மனைவியின் கர்ப்பகாலம், பிள்ளைகளின் கவனிப்பு என்று அனைத்தையும் கொஞ்சமும் குறையாமல் செய்து வந்தான்.

மகன், மருமகளின் நிறைவான வாழ்க்கையைப் பார்த்து ராமைய்யா – கோகிலம்மா தம்பதிகளுக்கு சந்தோசம். மகளுக்கும், பேத்திக்கும் அழகான அமைதியான நல்வாழ்வு நிலைத்ததில் சுந்தரராஜுலுவிற்கும் அத்தனை நிம்மதி. தாங்கள் வளர்த்த பெண்ணின் இல்வாழ்க்கை மீண்டும் பொங்கிய பிரவாகமாய் ஊற்றேடுத்ததில் சங்கரய்யா – கனகம்மா பெரியவர்களுக்கும் ஆனந்தப் பூரிப்பு.

அந்த வீட்டின் ஒட்டுமொத்த இன்பங்களையும் தனதாக்கிக் கொண்டு, வரம் வாங்கி வந்தவளா? இல்லை வரத்தை கொடுக்க வந்தவளா? என்ற பெரிய போட்டியில், தன்அன்பால் அனைவரையும் வசப்படுத்திக் கொள்ள வந்தாள் அனுஜாக்ஷினி.

பாலோடு கலந்த ரோஜாப்பூவின் நிறத்தை தனதாக்கிக் கொண்டு பிறந்தவளுக்கு அண்ணனும், தங்கையும் ‘ரோஸ்குட்டி’ என்று பெயர் வைக்க, அதுவே குடும்பத்தில் நிலைத்துவிட்டது.

பிள்ளைகள், தாங்கள் பள்ளி செல்லும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் எல்லாம் ரோஸ்குட்டியை தூக்கி வைத்துக் கொள்ள, அவர்கள் இல்லாத நேரங்களில் பெரியவர்களின் கைகளில் தவழ்ந்தாள் குட்டி இளவரசி.

பிள்ளைகளை கவனிக்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில், குடும்பத்தையும் கணவனின் தொழிலில் தன்னால் முயன்ற பங்களிப்பையும் கொடுத்து அவனது வலதுகரமாகவே அசலாட்சி செயல்பட, முன்னை விட அதிகமாய் ஊர்காவலை கவனத்துடன் மேற்கொள்ள ஆரம்பித்தான் ரிஷபன்.

“பாப்பாவ இப்படி பிடிக்கணும்! அப்படி வச்சுக்கணும்” என்று தேர்ந்த பெரியவர்களைப்போல் பிள்ளைகள் இருவரும் சேர்ந்து மல்லிகைப் பந்தைப்போல் குழந்தையைப் பார்த்துக்கொள்ள, யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே பொம்மிக்கும் சின்னாவிற்கும் பொறுப்புகள் தானாகவே வந்தது.

சின்னா ஒருபடி மேலேபோய் மூத்தமகனாய் சிறிய தங்கையோடு அம்மாவையும் சேர்த்தே கவனித்துக் கொண்டான். அனுஜாக்ஷினியின் ஒவ்வொரு தேவையும், பேச்சும் அவனிடமே முடிந்தது. நாணா, அண்ணயா என்ற அழைப்பில் அவளுக்கு பிடித்தது அண்ணயா மட்டுமே!

ரிஷபன் வருந்தி அழைத்தாலும், சின்னா இருக்கும் பொழுது அவனிடமிருந்து அசைய மாட்டாள். ரிஷபன் தந்தையானவனாக இருந்தால், சின்னா தந்தையுமானவனாக அனுஜாக்ஷினியை பொறுத்தவரையில் மாறி இருந்தான்.

அண்ணனின் அனுசரணையான அன்பிலும், அக்காவின் அதட்டலான அரவணைப்பிலும் எல்லோருக்கும் அவள் செல்லப் பிள்ளையாக வலம்வர அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி மட்டுமே நிலைத்து நின்றது.

வருடங்களும் வளர்ச்சிகளும் பல்வேறு மாற்றங்களைத் தர பொம்மியின் நடவடிக்கைகள் நன்றாக மாறி துடுக்குத்தனமான புத்திசாலியான பெண்ணாக வளர ஆரம்பித்தாள். நாட்கள் வேகமாய் உருண்டோட, வளர்ந்த பிள்ளைகளாக நின்றவர்களின் முன்னேற்றங்களை காண்போம் தோழமைகளே!

error: Content is protected !!