kurumbuPaarvaiyile-25

kurumbuPaarvaiyile-25

குறும்பு பார்வையிலே – 25

கார்த்திக்கிடம் பேசிவிட்டு படியில் இறங்கி ஹாலில் அமர்ந்தான் ஆகாஷ். மாலைப் பொழுதுக்கு முன்னமே முடிந்துவிட்ட மீட்டிங். ஐஸ் கிரீம் பார்லர், குழந்தை என நேரத்தைச் செலவிட்டிருந்தாலும் அத்தனை நேரமாகவில்லை. யூ. எஸ் இல் சம்மர். அத்தனை விரைவாக இருட்டுவதில்லை.

ஏழு மணிக்கும் வெளிச்சமாகவே இருந்தது. வீட்டிற்கு உள்ளே வரும் பொழுதும், அனைவரையும் சந்திக்கும் முன் தான் அவனுக்கு சற்று தயக்கமாக இருந்தது . ஆகாஷுக்கு இப்பொழுது தயக்கம் இல்லை. சற்று உரிமையும் அவன் மனதில் குடிகொண்டு விட்டது.

சில நிமிடங்கள், சோபாவில் அமர்ந்திருந்தான். “நான் ஸ்ருதியை வெளிய கூட்டிட்டு  போறேன்.” என்றான். அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பும் எண்ணம் அவனுக்கு கிஞ்சித்து அளவும் இல்லை என்று அவன் முகம் அப்பட்டமாக வெளிக்காட்டியது.

பல நாட்களுக்குப் பின் பார்வதியின் முகம்  முழு சந்தோஷத்தோடு  புன்னகையை வெளிப்படுத்தியது.

‘இவர் நிச்சயம் முடிஞ்ச கையோடு ஸ்ருதியை கூட்டிட்டு போயிருவாருன்னு நினச்சேன். ஆனால், இத்தனை வருஷம் எப்படி இப்படி தனியா இருந்தாரோ?’ என்ற கேள்வியோடு ஆகாஷை பார்த்தார்.

‘வருஷம் போனாலும், இவர் மாறவில்லை.’ என்ற எண்ணமும் அவர் கேள்வியைத் தொடர்ந்தே வந்தது.

ஈஸ்வரன், பார்வதி இருவரும் சம்மதிக்க, மகனைத் தூக்கிக் கொண்டு மீண்டும் ஸ்ருதியின் அறைக்குச் சென்றான்.

‘இன்னும் ஆகாஷ் போகலையா?’ என்ற எண்ணத்தோடு, ஸ்ருதி அவனை மேலும் கீழும் பார்க்க, ஆகாஷ் ஸ்ருதியை சிறிதும் சட்டை செய்யாமல் அவள் அலமாரியைத் திறந்தான்.

“பாஸ்போர்ட் இங்க இருக்கு? என் ரூமில் என் பெர்மிஸ்ஸின் இல்லாமல் என்ன தேடுறீங்க?” என்று கேட்டபடி அவன் அருகே சென்று நின்றாள் ஸ்ருதி.

கிருஷ் அவன் விளையாட்டு சாமான்களோடு மூழ்கி விடவே, “எதுக்கு பெர்மிஸ்ஸின்? நான் கேட்டா, ஆமான்னு சொல்லுவ… இல்லை இந்தாங்கன்னு குடுக்க போற… அப்புறம் எதுக்கு பெர்மிஷன்?” என்று புருவம் உயர்த்தினான் ஆகாஷ்.

“என்ன கிண்டலா?” என்று அவள் கேட்க, “ஏன்? என் கிண்டல் பேச்சு உனக்கு புதுசா?” என்று அவள் முகம் அருகே குனிந்து அவள் கண்களைப் பார்த்து ஆழமான குரலில் கேட்டான் ஆகாஷ்.

அவன் குரலில் தவிப்பு, ‘ஏன் இப்படி செய்தாய்?’ என்ற கோபம் என அனைத்தும் இருப்பது போன்ற பிரமை தோன்ற, ஸ்ருதி அவனை இமைக்காமல் பார்த்தாள்.

பார்வை பரிமாற்றத்தில் அவர்கள் விழிகள் என்ன பேசிக்கொண்டனவோ, அவர்கள் இருவரும் நொடிக்குள் அவர்களை மீட்டுக்கொண்டார்கள். அங்கிருந்த அலமாரியில், அவள் நிச்சியாதார்த்த சேலை இருக்க, அதை எடுத்து அவளிடம் நீட்டினான்.

“இதை கட்டிக்கிட்டு, நீ என் கூட வா. நான் இன்டர்நேஷனல் லைசென்ஸ் வச்சிருக்கேன். பட் கார் இன்சூரன்ஸ் உன் பெயரில் தான் இருக்கும். நீ தான் டிரைவ் பண்ணனும். நாம வெளிய போறோம்.” என்று உறுதியாக கூற, “நீங்க ஆர்டர் போட்டா, நான் கேட்கணுமா?” என்று அவள் எகிறினாள்.

“ப்ளீஸ் குழந்தை முன்னாடி சண்டை வேண்டாமே. வா…” அவன் குரலும் பிலீசோடு சேர்ந்து கொண்டு கெஞ்சியது.

குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவன் மீண்டும் வெளியே சென்றுவிட்டான்.

“வார்த்தையிலும், குரலிலும் தான் ப்ளீஸ்… செய்றதெல்லாம் அவன் நினைத்தபடி…” அவனைத் திட்டிக்கொண்டே, சேலைக்கு மாறி வெளியே கிளம்பினாள்.

“அம்மா… ஸோ பிரெட்டி…” என்று கிருஷ் கூற, அவனை தூக்கி கொண்டு, “நான் சொல்லணுமுன்னு நினச்சேன். நீ சொல்லிட்ட டா.” என்று ஸ்ருதியை பார்த்தபடி, தன் மகனின் கன்னத்தில் இதழ் பதித்தான் ஆகாஷ்.

‘ஆகாஷ் என்ன பண்றான்’, அவன் செயலில் ஸ்ருதியின் உடல் சிலிர்த்தது.

“அம்மாவும், அப்பாவும் வெளிய போய்ட்டு வரோம். நீ பெர்மிஸ்ஸின் தரணும். ஒகே கிருஷ்?” என்று மகனிடம் அவன் அனுமதி கேட்க, கிருஷ் மறுப்பாகத் தலை அசைத்தான்.

“ப்ளீஸ் டா… கிருஷ், அம்மா, அப்பா எல்லாரும் சீக்கிரம் ஊருக்கு போகனுமில்லையா? அதுக்கு கொஞ்சம் வேலை சரியா?” என்று மகனிடமும் அவன் கெஞ்ச, “ஒகே… டன்.” என்று அவன் சம்மதிக்க, “எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா, அத்தை.” என்று கூறிக்கொண்டே, ஸ்ருதியின் கைகளையும் பிடித்து அவர்கள் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்தான் ஆகாஷ். ஸ்ருதியின் வேறு வழி இன்றி அவனோடு இணைந்து கொண்டாள்.

ஆகாஷின் சொல்படி  ஸ்ருதி வண்டியை செலுத்தினாள். அருகே இருந்த இந்தியன் ஸ்டோர்ஸ்க்கு சென்று வேண்டியதை வாங்கி கொண்டு அதன் பின் அவர்கள் முருகன் கோவிலுக்குச் சென்றனர்.

அங்கு இருந்த கோவில் நிர்வாகிகளிடம்  ஏதோ பேசிவிட்டு வந்தான் ஆகாஷ். நடக்க போவதை கணித்துவிட்டாள் ஸ்ருதி. எதுவும் பேசவில்லை, பேசி பிரயோஜனமில்லை என்றும் நினைத்துக்கொண்டாள்.

ஆகாஷ் பண்ட், ஷர்ட்டில் இருந்தான். அவள் பெரிய அலங்காரம் எதுவும் இல்லாமல், பாந்தமாகச் சேலையிலிருந்தாள்.

இறைவன் சந்நிதானத்தில் அவன் அவள் கழுத்தில் தாலியைக் கட்டினான். ‘எப்படி நடந்திருக்க வேண்டிய திருமணம்?’ இருவர் மனதிலும், இந்த கேள்வி எழுந்தது.

அவள் கண்களில் இரண்டு சொட்டு கண்ணீர், அவன் மோதிர விரலை தொட்டு சென்றது.

அவளை தன் பக்கம் திருப்பி, முகத்தை உயர்த்தி, ‘என்ன?’ என்று கண்களால் கேட்டான். மறுப்பாக தலை அசைத்துக் கொண்டாள். ‘பேச மாட்டா… இவள் பேசி இருந்தால், இவ்வளவு பிரச்சனையே வந்திருக்காது.’ அவன் மனம் இப்பொழுது கோபத்தில் கனன்றது.

இருவரும்  கோவிலுக்குள் அமர்ந்தனர். மௌனமே நீடிக்க, “அம்மா, அப்பாவையும் கூட்டிட்டு வந்திருக்கலாமோ?” என்று ஸ்ருதி கேட்க, “கிருஷ் கூட வருவான். நிறைய கேள்விகள் வரும். இந்த சம்பவம் அவன் மனசில் ஆழமாக பதியும். அது அவனுக்கு தேவை இல்லைன்னு நினச்சேன்.” என்று அவன் யோசனையோடு கூறினான்.

“பக்…” என்று சிரித்தாள் ஸ்ருதி. ஆகாஷ், அவளை கண்களை சுருக்கி, ‘எதுக்கு இந்த சிரிப்பு?’ என்பது போல் பார்த்தான்.

“இல்லை… உங்க வீட்டில் சொன்னாங்கன்னு எடுத்த, நம்ம ப்ரிவெட்டிங் போட்டோஸ் எல்லாம் எந்த முகத்தை வச்சிக்கிட்டு குழந்தை கிட்ட காட்டுவீங்கன்னு யோசிச்சேன். சிரிப்பு வந்திருச்சு.” என்று ஸ்ருதி நக்கலாகக் கேட்டாள்.

ஆகாஷ், எதுவும் பேசவில்லை. “கிருஷ் யாராவது நெருக்கமா இருக்கிற மாதிரி போட்டோஸ் பார்த்தாலே… இன்அப்ராப்ரியேட்ன்னு சொல்லுவான்.” என்று ஸ்ருதி தன் மகனை பற்றி பெருமையாக கூற, “அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தும் கூடவா?” என்று அவன் ஆச்சரியமாகக் கேட்டான் ஆகாஷ்.

“இங்க இருக்கிறதால வெட்கப்பட மாட்டான். எல்லார் முன்னாடியும் அவங்களை மாதிரி சட்டுனு சொல்லிருவான்.” என்று ஸ்ருதி கூற, ஆகாஷ் தலை அசைத்துக்கொண்டான்.

“நாம வயசில் பண்ற தப்பு, நாம் குழந்தைகளை பாதிருச்சிருதுல்ல?” என்று ஆகாஷ் ஸ்ருதியின் முகம் பார்த்துக் கேட்டான்.

அவன் கேள்வியை ஒதுக்கிவிட்டு, “நாம எடுத்த மாதிரி போட்டோ, காலம் மாறி போச்சுன்னு உங்க அம்மா அப்பாவை இப்ப எடுக்க சொன்னா எடுப்பாங்களா? அப்படி கட்டி பிடிச்சி, முத்தம் கொடுக்குற மாதிரி உங்க பாட்டி தாத்தா தான் எடுத்துப்பாங்களா?” என்று அவள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் தான் செய்த தவற்றை வசதியாக மறந்து கொண்டு.

ஆகாஷ் தன் கண்களை இறுக மூடிக்கொண்டான். ‘தவற்றை நாங்கள் செய்திருந்தாலும், தவறு ஆரம்பித்த இடம் அங்கு தானே?’ என்று அவனாலும் மறுக்க முடியவில்லை.

“ப்ரீ வெட்டிங் ஷூட் கூட இல்லை. அவங்க  எல்லாம் போஸ்ட் வெட்டிங் ஷூட் கூட அப்படி நெருக்கமா எடுக்க மாட்டாங்க. அவங்க ஸ்டேட்டஸ் போதைக்கு நான் ஊறுகாய்.” என்று ஸ்ருதியின் கோபம் வெடித்தது.

“ஸ்ருதி… அங்க நான் தப்பு பண்ணாம இருந்திருந்தால்…” என்று ஆகாஷ் கூற, “அது என்ன நான்? நாமன்னு சொல்லுங்க. நான் புத்தியோட நடந்திருக்கனும். அது இல்லாமல்  நான் பட்ட அவமானம்… போதும் ஏழேழு ஜென்மத்துக்கு போதும்.” என்று கடுப்பாக கூறினாள் ஸ்ருதி.

“நீ என் கிட்ட சொல்லிருக்கணும் ஸ்ருதி. சொல்லி இருந்தா எந்த அவமானமும் வந்திருக்காது.” அவன் உறுதியாகக் கூறினான்.

அவள் உதடுகள் ஏளனமாக வளைந்தது.

“என்னை முதலில் அவமானப்படுத்தியதே நீங்க தான். நான் அதை ஆயுசுக்கும் மறக்க மாட்டேன்.” என்று ஸ்ருதி வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.

“உன்னால் என்னை எப்படி மறக்க முடியும் ஸ்ருதி?” என்று அவன் விளையாட்டாகவே கூற, ‘எப்பொழுதும் இவனுக்கு விளையாட்டு தானா?’ என்பது போல் ஸ்ருதி அவனை முறைக்க, ஆகாஷ் அவளைச் சமாதானம் செய்ய ஆரம்பித்தான்.

“நீ என் கிட்ட முதலிலேயே குழந்தை விஷயத்தை சொல்லிருந்தால், எதுமே அன்னைக்கு நடந்திருக்காது. தப்பு எல்லாம் உன் பெயரில். அப்படியே நான் ஏதோ விளையாட்டா தப்பா பேசியிருந்தாலும், நீ சொல்லாமல் கிளம்பினது தப்பு.” என்று அவளைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினான் ஆகாஷ்.

“கரெக்ட். ஸ்ருதி உங்க கிட்ட கெஞ்சிருக்கணும். அப்படி தானே?  அன்னைக்கு நாம பண்ண தப்பால, குழந்தை வந்திருச்சு. உங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஊரு உலகம் என்னை தப்பா பேசுமுன்னு நான் உங்க கிட்ட வாழ்க்கை பிச்சை கேட்டிருக்கணும்? அப்படி தானே?” என்று ஸ்ருதி கேட்டாள்.

“என் கிட்ட கேட்கறது எப்படி பிச்சை ஆகும். ஆசையா என் கழுத்தைப் பிடித்துக் கேட்டிருக்கலாம். இல்லை, உரிமையா என் கன்னத்தில் அடித்து கூட கேட்டிருக்கலாம். நடக்கவிருந்த கல்யாணம்… அது படியே நடந்திருக்கும். எந்த பிரச்சனையும் வந்திருக்காது ” என்று ஆகாஷ் பரிதாபமாகக் கூறினான்.

“ஆமா… நீங்க கேலி பேசினது தப்பில்லை. போனவ செத்தலா, இல்லையான்னு இத்தனை வருஷம் பார்க்காம இருந்தது தப்பில்லை. நான் குழந்தை விஷயத்தை சொல்லாம இருந்தது மட்டும் தானே தப்பு?” என்று ஸ்ருதி புருவம் உயர்த்தினாள்.

“இதுல உனக்கு சந்தேகம் வேறையா? நான் என்ன கேலி பேசியிருந்தாலும், அது ரெண்டு பேருக்கும் பொது தானே ஸ்ருதி? அதனால, நீ குழந்தை விஷயம் சொல்லாதது தான் தப்பு.” என்று விளையாட்டாக பேசினாலும் உறுதியாக கூறினான் ஆகாஷ்.

“நான் குழந்தை விஷயத்தை சொல்லிருந்தா? நான் விலகி வந்திருந்தாலும், பிசினெஸ் டைக்கூன் ஆகாஷ் என் மேல் பரிதாபப்பட்டு  என்னை தேடி வந்து இப்ப போட்டிருக்க வாழ்க்கை பிச்சையை அன்னைக்கே  போட்டிருப்பாரோ? இல்லை என் மகன் வேணும்முனு காரணம் காட்டி மிஸ்டர் ஆகாஷ் அன்னைக்கே உங்க கேலி பேச்சை ஒதுக்கி வச்சிருப்பாரோ?” என்று நக்கலாகக் கேட்டாள் ஸ்ருதி.

“ஸ்ருதி… நீ என்னை விட இப்ப அழகா நக்கல் பேசுற! ஒருவேளை நான் கத்து கொடுக்காததை என் மகன் இத்தனை வருஷத்தில் கத்து கொடுத்திட்டானோ? கிருஷ் என்னை மாதிரி தானே? நீ என்னை நினைத்து தானே அவனை குறும்பான்னு கூப்பிடுவ?” என்று கண்களில் குறும்பு மின்ன கேட்டான் ஆகாஷ்.

அகப்பட்டுக்கொண்டதில், பேச்சை முடிக்க எத்தனித்தாள் ஸ்ருதி. “நான் உங்க கிட்ட எதிர்பார்த்தது காதலையும் அன்பையு மட்டும் தான். அது உங்களுக்கு என் மேல் இல்லை.” என்று ஸ்ருதி அழுத்தமாகக் கூறினாள்.

“என் அன்பை நீ புரிஞ்சிக்கலை.” என்று கூறியவன், “ம்..ச்… இல்லை ஸ்ருதி. உன் மேல் தப்பில்லை. நான் காதலிக்கும் பொழுது என் அன்பை சரியா வெளிப்படுத்தலை. அது தான் கல்யாணம் ஆகிருச்சில்லை. இன்னைக்கி ராத்திரில இருந்து பாரு. என் அன்பை எப்படி வெளி காட்டுறேன்னு.” என்று கண்சிமிட்டிச் சிரித்தான் ஆகாஷ்.

ஒரு நொடி மிரண்டவள் தன்னை சுதாரித்துக்கொண்டு, ‘ஆகாஷ் என்னை டைவர்ட் பண்றான்.’ என்று தலை அசைத்துக்கொண்டாள்.

“நல்லா புரிஞ்சிக்கிட்டேன் ஆகாஷ். இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமா? இல்லை கொஞ்ச நாள் ஜாலியா இருப்போமா? நீங்க கேட்டப்பப்பவே உங்க காதலை, அன்பை நல்லா புரிஞ்சிக்கிட்டேன்.” என்று ஸ்ருதி கூற, “தட்’ஸ் ஜஸ்ட் விளையாட்டா…” என்று அவன் சமாதானம் செய்ய முயன்றான்.

“எது விளையாட்டு? நான் தப்பு பண்ணவ தான்! ஆனால், நான் இனி என் வாழ்க்கையில் எங்கயும் தரம் தாழ்ந்து போகக்கூடாதுன்னு உங்களை விட்டு விலகி வந்தேன். அது உங்க கிட்டயா இருந்தா கூட… உங்க தங்கை இந்த மாதிரியே தப்பு பண்ணிருந்தா, அவ கிட்ட இப்பவே கல்யாணம் பண்ணிக்குறியா? இல்லை இன்னும் கொஞ்ச நாள் ஜாலியா இருந்துட்டு பண்ணிக்க போறீங்களான்னு கேட்பீங்களா?” என்று ஸ்ருதி கேட்டாள்.

“ஸ்ருதி…” என்று அவன் இறைஞ்சினான். “ஏன், உங்க வீட்டை சொன்னா வலிக்குதா? வேணாம் ஆகாஷ், நான் பழசை பேச விரும்பலை. உங்க பரிதாபம், அக்கறை, இல்லை கன்றாவி காதல் கூட எனக்கு வேண்டாம். என்னை விட்டருங்க. உங்க குழந்தையை கூட்டிட்டு கிளம்புங்க.” என்று உறுதியாகக் கூறினாள் ஸ்ருதி.

‘ஸ்ருதி, இத்தனை வருஷத்துக்கு சேர்த்து சண்டை போட தயாரா இருக்காளோ?’ என்று எண்ணிக் கொண்டு, ‘இவளை எப்படிச் சமாளிப்பது?’ என்று அவளைப் பார்த்தான்.

“குழந்தையை கூட்டிட்டு போக அப்பவே சொல்லிருந்தா, நான் போயிருப்பனே… இந்நேரம் இங்கயே வேற ஒரு அமெரிக்க பெண்ணை பார்த்து கல்யாணமும் பண்ணிருப்பேன்! அதை விட்டுட்டு உன்னை ஏன் தாங்கி தடுக்கி இங்க கூட்டிட்டு வரணும். நீயும் ஏன் என் கூட வரணும்?” என்று ஆகாஷ் கேட்க, அவள் கூறிய பதிலில் அவன் அவளை ஆராயும் விதமாகப் பார்த்தான்.

குறும்புகள் தொடரும்…

 

error: Content is protected !!