kv-1

கற்பக விருட்ஷம்

 

                                                                                                                                                       1

 

ஊரோரம் அமைந்திருந்த அந்தக் காட்டில் அன்று ஏனோ நிறைய கழுகுகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அது இரண்டு கிராமங்களை இணைக்கும் ஒரு காட்டுப் பகுதி. அந்த வழியே மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவு. அதுவும் மதியம் நான்கு மணிக்கு மேலேயே அங்கு லேசாக இருட்டுவது போல ஆகிவிடும் என்பதால் அவ்வழியத் தவிர்த்து விடுவார்கள். மற்றொரு காரணமும் உண்டு. அங்கு இருட்டிய பிறகு நிறைய பேச்சுக் குரல்கள் கேட்க ஆரம்பித்துவிடும்.

 

அதற்கு செவி சாய்க்கச் சொல்லும். ஆனால் அவற்றைக் கேட்ட பிறகு மீண்டும் அந்த காட்டிலிருந்து வெளிய வரும் வழி மறந்துவிடும். அத்தோடு அவர்களையும் மறந்து விட வேண்டியது தான். அந்தக் காட்டை பகலில் கடக்க முடியும், ஆனால் தனியாக செல்ல அனைவருக்கும் பயம். ஆனால் அந்தக் காட்டு வழி தான் இரு ஊருக்கும் சென்று வர குறுக்கு வழி. இல்லையேல் ஊரைச் சுற்றி பஸ்ஸில் போக எப்படியும் முப்பது நாப்பது நிமிடம் ஆகும்.

அப்பண்ணா ஒரு மூன்று மணி வாக்கில் அந்தக் காட்டிற்குள் நுழைத்தான். தனியாகத் தான். அவசரமாக ஒருவருக்கு மருந்து கொடுத்துவிட்டு வந்துவிடு என அவனது குருநாதர் அவனை அனுப்பியிருந்தார். அதனால் மருந்தை கொடுத்துவிட்டு வேகமாக வர அவன் இவ்வழியை தேர்ந்தெடுத்திருந்தான்.

அதன் பிறகு தான் தவாறான முடிவோ என யோசித்தான். மனதிற்குள் தனக்குத் தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தான்.

யார் உன்னைக் கூப்பிட்டாலும் திரும்பிப் பார்க்காதேஎன்று அவனுக்கு சொல்லியிருந்தார் அவனது குரு,

காட்டிற்குள் அமைதியை குத்தகைக்கு எடுத்தது போல இருந்தது. ஒரு காக்கா குருவி சத்தம் கூட இல்லாமல் இருந்தது. திடீரென எங்கிருந்தோ வந்தக் கழுகுக் கூட்டம் அப்பண்ணாவின் தலைக்கு மேல் வட்டமிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது.

கழுகளின் சத்தம் அவனது உடலைக் கூசச் செய்தது. ஈரக் குலை நடுங்கியது. கையில் இருந்த வாச்சில் மணி பார்க்க அது மூன்றரை காட்டியது. நடையைக் கைவிட்டு ஓட ஆரம்பித்தான்.

ஒய் ! அப்பண்ணா…. மெதுவாகத் தான் போயேன்ஒரு குரல் அவன் பின்னால் கேட்க, அவனது இதயமே நின்றது. கால்கள் துவண்டு நிற்கச் சொன்னாலும் , குருவின் பேச்சிற்கு மதிப்புக் கொடுத்து திரும்பிப் பார்க்காமல் ஓடியே விட்டான். காட்டின் எல்லையும் ஊரின் முகப்பும் தெரிய , போன உயிர் திரும்பி வந்தது அவனுக்கு. ஊருக்குள் நிம்மதியாகக் காலை எடுத்து வைத்தான். கழுகின் சத்தம் காணமல் போனது.

அருகில் இருந்த வாடகை சைக்கிள் கடையில் ஒரு சைக்கிளை எடுத்துக் கொண்டவன், நேரே அவனது குருவின் வீட்டிற்குச் சென்றான்.

பத்மநாப சுவாமி சித்த வைத்திய சாலைஎன்ற பெயர் பலகையைத் தாங்கி இருந்த வீட்டின் முன்பு, சைக்கிளை நிறுத்தியவன், உள்ளே சென்று தனது குருவானவரை சந்தித்தான்.

அவர் அங்கிருந்த மர அலமாரி ஒன்றில் சில கண்ணாடிக் குடுவைகளில் தான் அரைத்த இலைகளை போட்டு வைத்து அடுக்கிக் கொண்டிருந்தார்.

குருவே அவருக்கு மருந்து கொடுத்துட்டேன்.” பணிவாக நின்று கூறினான் அப்பண்ணா.

சரி .. நீ வீட்டுக்குப் போயிட்டு நாளைக்கு காலைல அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடு.” என்றார்.

சரி குருவே. நான் வரும்போது காட்டு வழியா வந்தேன். நிறைய கழுகுகள் மேலே வட்டமிட்டுது. ஆனா காட்டை விட்டு வெளிய வரப்ப அதை எல்லாம் காணும்.” முகத்தில் பயம் அப்பியபடி கூறினான்.

அவனை ஒரு நொடி உற்று நோக்கினார் குரு. பின் கண்ணை மூடிப் பார்க்க,

அது உனக்கு துணையா தான் வந்திருக்கு. பயப்படாத. போயிட்டு வா.” என அனுப்பிவைத்தார்.

வெளியே வந்த பிறகு தான், காட்டில் அவனை யாரோ அழைத்ததும் நினைவுக்கு வர, ஒரு வேளை அதுக்குத் தான் கருட பட்சிகள் துணைக்கு வந்துதோ… என்று சரியாக யோசித்தான். மனதிற்குள் குருவிற்கு நன்றி சொல்லி மகிழ்ந்தான்.

அவன் இந்த சித்த வைத்திய சாலையில் வேலைக்கு சேர்ந்ததிலிருந்து அவனை தன் பிள்ளை போல பார்த்துக் கொள்கிறார் குரு அனந்தாச்சாரி. மிகவும் நல்லவர். அவரிடம் மருத்துவத்தை தாண்டி ஒரு தெய்வ சக்தி இருப்பதை இந்த ஊர் மக்கள் நம்புகின்றனர். அதனால் தான் எத்தனையோ ஆங்கில மருத்துவர்கள் இருந்தும் இவரிடம் இன்னும் வைத்தியம் செய்து கொள்கின்றனர். இவர் மருந்து கொடுத்தால் எப்பேர்பட்ட நோயும் குணமாகும் என்று நம்புகின்றனர். அவர் குனமாக்கியும் விடுவார்.

அவர் மருத்துவம் மட்டும் இல்லாமல், மந்திரிப்பது, கயிறு கட்டுவது, தாயத்து போன்றவற்றையும் கொடுப்பார். ஆனால் நல்லதற்கு மட்டுமே அவர் செய்து கொடுப்பார்.

அப்பண்ணா சென்றபிறகு அவரும் தனது வைத்தியசாலைய மூடிவிட்டு வீட்டிற்குள் வந்தார். வீட்டின் முன்வாசல் அறையில் தான் வைத்தியம் பார்க்க ஒதுக்கி இருந்தார். நான்கு மணிக்கு மேல் மருந்து அரைக்க மாட்டார். அது அவரது வழக்கம். வீட்டிற்குள் வந்து ஒரு கட்டங்காப்பி போட்டு எடுத்து வந்தார். டிவியை போட்டு அதில் செய்தியை கேட்க ஆரம்பித்தார்.

அவர் கேட்ட செய்தி அவருக்கு துக்கத்தைக் கொடுத்தது.

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

டில்லி தலைநகரில் அதிகாலையில் சூரியன் கண்விழிக்கும் முன்னரே தனது ஜாக்கிங்கை முடித்துக் கொண்டு தனது சிறிய அப்பார்ட்மெண்டுக்கு வந்துவிட்டான் விஜய் பூபதி . வந்தவன் குளித்துவிட்டு பூஜை அறை என வைத்திருக்கும் ஒரு சிறு மாடத்தின் முன் நின்று சந்தனத்தைக் குழைத்து சிறிதாக நெற்றியில் தீட்டிக் கொண்டான்.

அவனது தந்தை அவனுக்கு சொல்லிக்கொடுத்த சூரிய நமஸ்காரத்தை தனது பால்கனியில் நின்று அப்போது தான் உறங்கி எழுந்து வரும் சூரியக் கதிர்களைப் பார்த்துச் செய்தான். பின் அலுவலகம் செல்லத் தயாரானான். அவனுக்கு உணவு அனைத்தும் அங்கேயே தரப்படும் என்பதால் ஆபீஸ் ஃபைல்களை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அவனுக்காக கார் தயாராக வாசலில் நின்று கொண்டிருந்தது. எதுவும் பேசாமல் அதில் ஏறிக்கொள்ள , டிரைவர் வண்டியை ஓட்டிச் சென்றார்.

அவன் எங்கு வேலை பார்க்கிறான் என்று அவன் தந்தையிடம் கேட்டால், சென்ட்ரல் கவர்ன்மென்ட் உத்தியோகம் என்று மட்டும் தான் கூறுவார். ஏனெனில் அவனது வேலை அத்தனை ரகசியமாக காக்கப் படவேண்டிய ஒன்று. ஆம்! அவன் இந்திய அரசின் சீக்ரெட் ஏஜென்சியில் வேலை செய்கிறான். அதுவும் சென்ட்ரல் மினிஸ்டரின் கீழ் இருந்தான். அவரை தினமும் சந்திக்க வேண்டி வரும். அவன் ஒரு கிரிப்டாலஜிஸ்ட்.

மற்ற நாடுகளிடமிருந்து வரும் ரகசியத் தகவல்கள் கோட் வேர்ட்களில் (code word) தான் இருக்கும். அவற்றை அவன் தான் சரியாக டீகோட் செய்து கொடுக்கவேண்டும். அது மட்டுமில்லாமல் அவன் மிகவும் புத்திசாலி. எதையும் ஆராய்ந்து அடி ஆழம் வரை தோண்டுபவன். அவன் கூரான பார்வையே அடுத்தவரை உண்மை பேச வைத்துவிடும். ஆறடி உயரம் அதற்கேற்ற உடலமைப்பு , சிறிதும் சிரிக்காத அவனது முகம் மற்றவர்கள அவனிடம் நெருங்கவே விடாது எனலாம்.

கேண்டீனில் சென்று அன்றைய மெனுவைப் பார்த்துவிட்டு, ஒரு தட்டில் தனக்கு வேண்டியவற்றை செல்ஃப் சர்வீஸ் செய்து கொண்டான். ‘டிபன் கூட ஒரு காபி குடிச்சா தான் அது கம்ப்ளீட் ஆன மாதிரி இருக்குஎன தந்தை கூறுவது நினைவில் வந்தது. பின் சூடாக ஒரு பில்டர் காபியை குடித்தவன் சரியாக எட்டு மணிக்கு அவனது கேபினில் இருந்தான். அன்றைய ஈமெயில்களைப் பார்த்தவன் வேலையில் மூழ்கினான்.

மதியம் அவனை மினிஸ்டர் அழைக்கிறார் என்று ஆள் வந்து கூற, அவரது அறைக்குச் சென்றான்.

வாங்க மிஸ்டர். விஜய். உக்காருங்க.” எதிரில் இருந்த இருக்கையைக் கை காட்டிக் கூறினார் மினிஸ்டர்.

மரியாதையாய் அதை ஏற்றவன் தேங்க் யூ சர்என அமர்ந்தான்.

உங்களுக்கு ஒரு ரெண்டு வாரம் லீவ் சாங்க்ஷன் பண்ணிருகோம். நீங்க இப்ப அதை யூஸ் பண்ணிக்கலாம்என்றார்.

! தேங்க்ஸ் சார். பட் எனக்கு இப்போ அது தேவைப்படாது. நான் அப்பறமா யூஸ் பண்ணிக்கறேன்.” எதையோ மனதில் வைத்து மறுத்தான்.

உங்க லீவ் தான். நீங்க அதை எப்பவேனாலும் யூஸ் பண்ணலாம் தான். ஆனா இன்னும் ஒரு மாசத்துல ஒரு இன்டெர்னல் வொர்க் வரும்னு எதிர்ப்பார்க்கறேன். அதுக்கு உங்க உதவி கண்டிப்பா தேவைப்படும். அந்த சமயத்துல லீவ் எடுத்துடாதீங்க.”

இன்டெர்னல் வொர்க்கா? நம்ம நாட்டுல எதாவது ப்ராப்ளமா? தீவிரவாதிங்க கோட் மாதிரிஎதாவதா?” விஜய் ஆர்வமானான்.

ச்ச ச்ச அதெல்லாம் இல்ல. இது ஒரு பழைய ப்ராஜெக்ட். இரண்டாம் உலகப் போர்ல ரஷ்யா உபயோகப் படுத்தின சில டெக்னிக்ஸ். அத நம்ம நாட்டுல ட்ரை பண்ண அப்ப போதுமான அளவு நிதி பத்தல. இப்பயும் அவ்வளவு நிதி இல்ல. ஆனா அதை முதல் கட்டமா ஆரம்பிக்க சொல்லிருக்காங்க. அதுக்கு சில ஆர்கியாலஜிஸ்ட் வராங்க. அவங்களுக்கு உங்க உதவி தேவைப்படும் இல்லையா. அதுக்குத் தான் சொல்றேன்.” சிறு விரிவுரையை அவனுக்குக் கொடுத்தார்.

வாவ்..தட்ஸ் சோ இன்டரஸ்டிங் சார். கண்டிப்பா நான் அங்க இருப்பேன். ஆனா இப்ப எனக்கு லீவ் வேண்டாம்.” மறுத்தான்.

ஓகே.. அப்ப சரி. ஒரு வேளை நீங்க மனச மாத்திக்கிட்டா உங்களுக்கு ரெண்டு நாள் டைம் தரேன். அதுக்குள்ள சொல்லிடுங்க. இல்லனா நான் வேற ஒருத்தருக்கு இந்த டைம்ல லீவ் அப்ப்ரூவ் பண்ணுவேன். அதுக்குத் தான்.” அவனுக்கு யோசிக்க நேரம் கொடுத்தார்.

தேங்க்ஸ் சார்.” எழுந்து கொண்டான்.

வாழ்வில் அடுத்து நடக்கவிருப்பதை மனிதின் முன்னமே அறிந்து கொண்டால், அவனை வெல்ல யாரும் இல்லை. அதனால் தானோ என்னவோ கடவுள் சிலவற்றை அவனது அறிவுக்கு எட்டாமல் மறைத்து வைத்திருக்கிறார். விஜய் தனக்கு லீவ் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டாலும் விதி அவனை மீண்டும் சென்று லீவ் வேண்டும் என்று கேட்க வைத்தது.

மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வந்தவன், தனது லேப்டாப்பில் மூழ்கிப் போனான். அவனுக்கு எப்போதும் படிக்கவும் , சில ஆராய்ச்சிகளை செய்யவும் இருந்துகொண்டே தான் இருக்கும். நேரம் போனதே தெரியாமல் இருந்தான். பசி தான் அவனுக்கு நேரத்தை நினைவு படுத்த லேப்டாப்பை மூடிவிட்டு எழுந்தான்.

டிவியில் அப்போது தான் நியூஸ் சேனலை ஓடவிட்டு விட்டு கிச்சனுக்குள் சென்று நேற்று வாங்கி வைத்திருந்த தோசை மாவை எடுத்தான். கை சூடானதும் இரண்டு தோசைகளைப் போட்டுக் கொண்டு வந்து டிவி முன் அமர்ந்த்வனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது,

கேரளாவில் பரபரப்பு என்று ஆரம்பித்த செய்தி , பத்மநாப ஸ்வாமி கோவில் அருகே உள்ள தெப்பக்குளத்தின் படிக்கட்டுகளில் மர்மமான முறையில் ஒருவர் இறந்து கிடப்பதாகவும் , அவர் அங்கிருந்த அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் என்றும் சொல்லிக்கொண்டே போக விஜயின் கண்களில் இருந்து நீர் அருவியாக வழிந்தது.

ஏனெனில் இறந்து கிடப்பதாகக் காட்டியது அவனது தந்தையை! நேரம் காலம் பார்க்காமல் உடனே மினிஸ்டருக்கு போன் செய்தான். அவன் உள்பட ஒரு பத்து பேருக்கு மட்டுமே அவரது பர்சனல் நம்பர் கொடுக்கப்பட்டு இருந்தது.

சார் என்னோட ரெண்டு வார லீவை நான் எடுத்துக்கறேன். இப்பவே ஊருக்குக் கிளம்பனும்.” என்றான் பதட்டமாக.

என்ன விஜய். சடனா என்ன ஆச்சு?” அவரும் சற்று பரபரப்பானார்.

என் அப்பாஅப்பா இறந்துட்டாரு சார். உடனே கிளம்பனும்வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசினான்.

ஓ காட்… ஐ அம் சாரி விஜய்.. என்ன ஆச்சு?” விசாரிக்க,

எனக்கு சரியா தெரியல சார். போய் தான் பார்க்கணும். நேரமில்ல சார்.. நான் கிளம்பறேன்.” என்றான் அவசரமாக.

டேக் கேர் விஜய். எப்ப முடியுமோ அப்ப வாங்க. அவசரமில்ல. நான் ரெண்டு நாள் கழிச்சு பேசறேன்.” என இணைப்பைத் துண்டித்தார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் ஏர்போர்ட்டில் இருந்தான் விஜய்.

ஊரில் அவனது வீட்டில் இருந்தவர்கள் விஜய்க்கு ஒரு போன் கூட செய்து சொல்லவில்லை. காரணம் அவனை யாருக்கும் அங்கு பிடிக்காது. அவனது தந்தையைத் தவிர. அவன் அவனது தந்தைக்கு சொந்த மகன் இல்லை. வளர்ப்பு மகன் மட்டுமே! அவரே சென்ற பிறகு இனி அவன் யாருக்கு அங்கு வேண்டியவனாக இருக்கப் போகிறான்? யார் அவனை உறவு கொண்டாடப் போகிறார்கள்? அதை நினைக்கையில் அவனுக்கு மீண்டும் அனாதையாக்கப்பட்ட உணர்வு நெஞ்சத்தை பிசைந்தது.

ஆனால் அவன் வருகைக்காக மூன்று பேர் காத்திருந்தனர். ஒன்று அந்த ஊரில் நிலவும் மர்மம். இரண்டு அவன் தந்தை இறந்ததை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த அனந்தாச்சாரி. மூன்றாவது…… ??