kv-3

3

1700 களில் திருவிதாங்கூர் மன்னர் திரு மார்த்தாண்ட வர்மா தனது அரசு , ராஜ்ஜியம், செல்வம் அனைத்தும் பத்மநாப சுவாமிக்கு பட்டயம் எழுத்தித் தந்தார். அன்று முதல் அந்த ஊரை ஆட்சி செய்வது சாட்சாத் அந்த மாஹவிஷ்ணு தான் என்பது ஐதீகம். அதனை உறுதி செய்ய மன்னர் அவரது உடை வாளையும் கிரீடத்தையும் அந்த பத்மனாபரின் முன் வைத்து சரணாகதி அடைந்தார். தனது வம்சம் முழுவதும் இந்த பத்மநாப சுவாமிக்கு அடிமை என்றும் கூறினார். அதனால் அவரது பரம்பரயினர் பத்மநாபதாசர்என்று அழைக்கப் பட்டனர்.

 

இன்று வரை இந்தக் கோவிலை அரச குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். இந்தக் கோவிலில் பல ரகசியங்கள் அடங்கி இருப்பதாக இன்று வரை பேசப்பட்டு வருகின்றது. அதற்கு சாட்சியாக இந்தக் கோவிலின் பாதாளத்தில் மொத்தம் ஆறு ரகசிய அறைகள் உள்ளது என்றும் அதை உடனே திறந்து பார்க்க வேண்டுமென்றும் அதே கோவிலில் பனி புரிந்த ஒருவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதன் படி உச்சநீதிமன்றம் அந்தக் கதவுகளை திறந்து பார்க்க உத்தரவிட்டது. அப்படித் திறந்து பார்த்ததில் வைரங்கள், வைடூரியங்கள், மாணிக்கங்கள், தங்கத்தால் செய்த நகைகள், வைரம் பதித்த வாள், தங்கத்தால் ஆன மூன்று அடி உயரமுள்ள விஷ்ணுவின் சிலை, பல பைகள் நிறைய தங்கக்காசுகள் , பல அறிய வகைக் கற்கள் என ஏராளமான பொக்கிஷங்கள் கிடைத்தது. இவை அனைத்துமே ஐந்து கதவுகளைத் திறந்ததில் கிடைக்கப் பெற்றது. இவை மட்டுமல்லாது பல நாட்டு நாணயங்கள் கிடைத்து.ஒவ்வொரு நாணயமும் ஒன்றரை கோடி பெரும்.

ஆனால் ஆறாவது கதவைத் திறக்க முடியவில்லை. அந்தக் கதவில் நாகங்களின் உருவங்களை செதுக்கி இருந்தனர். அவற்றை திறக்க முற்படும் போது அரச குடும்பத்தினர் தடுத்தனர். இந்தக் கதவின் பின்னால் பல பின்னணிகள் இருப்பதாகவும். இந்தக் கதவைத் திறந்தால், கடவுள் குத்தம் ஆகிவிடும் என்றும் கூறினர். ஆனால் அந்தக் கதவையும் திறக்க உத்தரவு வந்தது.

பல நாட்கள் முயற்சிக்குப் பிறகு அதையும் திறந்தனர். அரச குடும்பத்தினர் மிகுந்து கோபம் கொண்டனர். ஆனால் அந்தக் கதவைத் திறந்ததும் அதற்குள் ஒரு இரும்பினால் செய்யப்பட்ட கதவு இருந்தது. அதிலும் நாகங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைத்தது போல செதுக்கி இருந்தனர். ஆனால் இந்தக் கதவைத் திறக்க பூட்டோ சாவியோ இல்லை. அந்தக் கதவைத் திறப்பதற்கான எந்த ஒரு வழியும் அங்கே தென்படவில்லை. கதவைத் திறக்க சில மந்திரங்களைச் கூற வேண்டும் என்றும், அதைச் சொல்ல இன்றைய காலத்தில் யாரும் இல்லை என்றும் அரச குடும்பத்தினர் எச்சரித்தனர்.

சாதாரண மனிதர்களால் அந்தக் கதவைத் திறக்க முடியாது என்று சாதித்தனர். அந்தக் கதவில் காதை வைத்துக் கேட்க, கடல் அலைகளின் ஓசை கேட்டது. அன்று இரவு நடை சாத்திய பின்னர் அந்தக் கதவின் வழியே நிறைய சத்தங்கள் கேட்க ஆரம்பித்தது.

அதே சமயம் வழக்கைத் தொடர்ந்தவர் தன் வீட்டில் இறந்து கிடந்தார். அனைவரும் அரச குடும்பத்தினர் கூறியதை நம்ப ஆரம்பித்தனர்.

இதற்காக இத்தனை நாள் அரச குடும்பத்தினர் சார்பாக வாதாடியது விஜயின் தந்தை வெங்கடேசன் தான். ஆனால் இன்று அவரே இறந்துவிட்டார்.

கேஸ் பேப்பர்களை படித்து முடித்தான் விஜய் பூபதி. இது அனைவருக்கும் பொதுவாகத் தெரிந்த ஒன்று தான்.புதிதாக அதில் ஒன்றும் இல்லை.

அரவிந்த் வேறு தந்தை கொலை செய்யப்பட்டார் என்று கூற , அவருக்கு என்ன ஆகி இருக்கும்? இதில் அவர் மீது பகை கொள்ள என்ன இருக்கிறது என்று பூமராங் போல ஆரம்பித்த இடத்திலேயே வந்து நின்றான்.

நள்ளிரவிற்கு மேல் ஆகிவிட களைப்பில் அந்த டேபிளிலேயே படுத்து உறங்கி விட்டான்.

வீடு உள் பக்கம் பூட்டித் தான் இருந்தான். ஆனாலும் சாமியார் அவன் உறங்கிய பின்னர் அவனைச் சுற்றி நடந்தார். அவன் தூக்கத்தில் இருந்த போது அவனது எண்ண அலைகளை கிரகிக்க முயன்றார்.

ஆனால் விஜய் திடமான உள்ளம் கொண்டவன். எப்போதும் எண்ணங்களை சிதற விடுபவன் அல்ல. அதனால் தூக்கத்திலும் அவனது மனவோட்டங்கள் கட்டுக்குள் இருந்தது.

இது பல பேருக்கு சாத்தியப் படாது. நாம் உறங்கும்போது ஒரு கோமா நிலைக்குத் தள்ளப்படுகிறோம். அப்போது சில கருவிகளின் மூலம் நமது கனவுகளை அப்படியே களவாட முடியும். இந்தக் கால அறிவியலில் அதையும் சாத்தியப் படுத்தி விட்டனர். ஆனால் இதை எப்போதோ நம் சித்தர்கள் கற்றுத் தேர்ந்து இருந்தனர்.

அப்படி ஒருவரின் கனவுகளை திருடுவதன் மூலம் அவர்களின் எண்ணங்களுக்குள் நுழைய முடியும். அப்படி நுழைந்துவிட்டால் அவர்கள் என்ன கனவு காணவேண்டும் என்று தீர்மாணிக்கலாம், அல்லது அவர்களின் மூளையில் பதிந்து இருக்கும் விஷயங்களைக் கூட சுலபமாக கண்டுபிடித்துவிடாலம்.

அதைத் தான் இந்த சாமியார் இப்போது விஜயிடம் செய்ய முயற்சித்தார். ஆனால் விஜய் எப்போது பிரணாயாமம் செய்து புலன்களை கட்டுக்குள் வைத்திருந்தான். அதனால் அத்தனை சுலபமாக அவன் மூளைக்குள் செல்ல முடியாமல் தவித்தார்.

பிரம்ம முஹுர்த்தம் ஆரம்பிக்கும் நேரம் வரை தான் அவரால் பொறுமையாக இருக்க முடிந்தது. அவரது முயற்சி வீணாய்ப் போக அங்கிருந்து மறைந்தார்.

அர்த்த ஜாம வேளையில் அரண்மனையின் பின் புறம் உள்ள தோப்பில் மரங்களின் அணிவகுப்பிற்கு நடுவே ஒரு சிறு மண்டபம் இருந்தது. இரண்டு தீப்பந்தங்கள் மட்டுமே வெளிச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அதன் ஒளியில் தைரியமாக தனித்து அமர்ந்து சாமியாரின் உடலைப் பாதுகாத்துக் கொண்டிருந்தாள் ஜானவி என்கிற ஜானவி வர்மா. அந்த அரண்மனையின் தற்போதைய மன்னர் ப்ரித்விராஜ வர்மா வின் செல்ல மகள்.

கையில் கட்டியிருந்த அவளது தங்க கை கடிகாரம் மணி இரண்டைக் காட்டியது. மனதில் பலவித எண்ணங்கள் ஓட, சாமியாரின் ஆத்மா வருவதற்காகக் காத்திருந்தாள். சரியாக அதே நேரத்தில் ஆத்மா

காற்றைக் கிழித்துக் கொண்டு சாமியாரின் உடலில் வந்து அமர்ந்தது.

கண்விழித்தார் கிருஷ்ணமாச்சாரி! ஆம் அவர் அனந்தாச்சாரியின் இரட்டை சகோதரர். இருவரும் பார்க்க ஒன்று போல இருந்தாலும், சற்று கவனமாகப் பார்த்தால் நன்றாகவே வித்தியாசம் தெரியும்.

என்ன ஆச்சு? அவன் எதுவும் தெரிஞ்சிக்கிட்டானா? என்ன யோசிக்கறான்?” பரபரத்தாள் ஜானவி.

கொஞ்சம் பொறுமையா இரு. அவன் நாம நினைக்கற மாதிரி சாதாரணமான ஆளா தெரியல. அவன் மூளைக்குள்ள என்னால போக முடியல. யோகசக்தி அவன்கிட்ட இருக்கு. புலன்களை அடக்கத் தெரிஞ்சவன்.” ஜானவியைப் பார்க்க முடியாமல் எங்கோ பார்வைய செலுத்தினார்.

உங்களப் போய் பெரிய பலமா நான் நம்புனேனே..ச்ச…ஒரு சாதாரண மனுஷன் புத்திய கலைக்க முடியல உங்களால.. என்ன தாந்த்ரீக மாந்த்ரீக சக்தி இருக்கு உங்ககிட்ட..” தலையில் கைவைத்து அங்கிருந்த மர ரஜாயில் அமர்ந்தாள்.

ஜானவி, என்னோட சக்திய மட்டும் தப்பா பேசாத. உனக்கு அதோட வீரியம் தெரியும். உனக்காகத் தான் இரண்டு உயிர்களை பறிச்சேன். என்னையே நீ சொல்றியா..” சற்று கோபம் கொண்டார்.

பின்ன என்ன.. அவன் யோகா படிச்சிருக்கலாம். அதுனால என்ன, இந்தக் காலத்துல எல்லாரும் தான் யோகா கத்துக்கறாங்க…” அந்த நடுக் காட்டில் கத்திக் கொண்டிருந்தாள்.

யோகா கத்துகிற எல்லாருக்கும் புலன்களை அடக்கற சக்தி கிடச்சிறாது. அதுக்கு பிறப்பிலேயே சில விஷயங்கள் வேணும். அது அவன் கிட்ட இருக்கு, புரிஞ்சுக்கோ. அதுவும் இல்லாம அவன் இன்னும் எந்த விஷயமும் தெரிஞ்சுக்கல. அவன் அப்பா மேஜை மேல இருந்த கேஸ் பத்தின தகவல் மட்டும் தான் தெரிஞ்சுகிட்டான். அந்த வெங்கடேசன் கிட்ட வேற என்ன இருக்கு. இவனுக்கு எந்த வகைலயும் எதுவம் தெரிய வாய்ப்பில்ல.” விஜயின் நிலையைக் கூறினார்.

அவன் மூளைய வெச்சு அவன் மோப்பம் பிடிச்சு வந்துட்டா என்ன செய்யறது, உங்களுக்குத் தான் அவன் மூளைய குழப்ப முடியலையே…” மீண்டும் அவரைக் குற்றம் சொல்ல,

ஜானவி, எப்போதும் ஒருத்தன் ஒரே நிலைல இருக்க மாட்டான். அவனுக்கும் ஒரு நேரம் இருக்கு, அதை நான் சரியா பயன்படுத்தி அவன திசை திருப்பறேன். நீ கவலைப் படாத.” அவளைச் சமாதானம் செய்தார்.

உங்களைத் தவிர நான் இப்ப வேற யார நம்பறது.. சரி எனக்கு நேரமாச்சு. நான் கிளம்பறேன்.” அங்கிருந்து ஒரு தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணமாச்சாரி, மனதில் பல திட்டங்களை வகுக்க ஆரம்பித்தார்.

அதன்பிறகு ஜானவிக்கு தூக்கம் எங்கிருந்து வரும், அவள் எப்போதும் அவளது தாத்தாவுடன் பத்மநாபசுவாமியின் அதிகாலை தரிசனத்திற்குச் செல்வது வழக்கம். நேரே சென்று குளித்தவள், அவர்களின் பாரம்பரிய உடையான வெண்பட்டை அவளது சிறுத்த இடையில் உடுத்தி , குளித்த தலையை லேசாக காயவிட்டு பின் நீளமான கூந்தலை காதோரம் மட்டும் கிளப்பில் அடக்கி பின் தலையில் முல்லைச் சரம் சூடினாள். சந்தனப் பொட்டிட்டு , கண்மை தீட்டி , அவளுக்கே உரித்தான பிரத்யேக சென்ட்டை தெளித்துக் கொண்டாள்.

அவள் அந்த இருள் வேளையில் தேவலோக மங்கையாகவே காட்சியளித்தாள். அந்தப் பூவுக்குள் ஒரு பூகம்பம் இருப்பதை யாரும் அறியவில்லை.

அவளுடைய தாத்தா அவளுக்குக் கூறிய தேவ ரகசியங்கள் இது வரை அவள் பத்திரமாகப் பாதுகாக்கிறாள். அதற்காக அவள் இழந்தது பல. ஆனால் அவள் குறிக்கோள் ஒன்று தான். அதை நிறைவேற்றித் தரும்படி அந்த மகாவிஷ்ணுவின் முன் வேண்டிக்கொள்ள யாரும் இல்லாத அந்த கர்பகிரகத்திற்கு வந்தாள்.

பத்மநாபசுவாமி கோவிலில் ஒரு விசேஷம் என்னவென்றால், அந்த அனந்த சயன பெரிய ரூபத்தை மூன்று வாசல்கள் வழியாகத் தான் தனித் தனியே காண முடியும். ஒரே மூச்சாகக் ஒரு உருவத்தில் காணும் பாக்கியம் அரச குடும்பத்துக்கு மட்டும் தான் உண்டு.

அத்தனை பெரிய உருவத்தை இருள் அப்பிய அந்த கர்பகிரகத்தில் தனியே நின்று காண ஒரு மனத் தெம்பு வேண்டும். அது ஜானவியிடம் அதிகமாகவே இருந்தது. அர்ச்சகர் வரும் முன்பே அவள் அங்கு தனியாக நின்றாள்.

அந்த கர்பகிரகத்தின் கீழே இருபது அடி ஆழத்தில் தான் அந்த ரகசிய கதவு இருந்தது. அவளுக்குள் ஒரு உந்துதல் வர, ஒரு சிறு தீபத்தை மட்டும் எடுத்துக் கொண்டு , அந்த பத்மநாபனை வணங்கிவிட்டு சுரங்கம் வழியாக அந்த திறக்கப்படாத நாகக் கதவை நோக்கிச் சென்றாள்.

நாக பந்தனம் செய்யப் பட்ட கதவு என்று அவளது தாத்தா கூறி இருந்தார். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பல அதீத சக்தி கொண்ட சித்தர்களும் மாந்த்ரீகர்களும் சேர்ந்து தான் இந்த நாகபந்தன கட்டு மந்திரத்தை ஜெபித்து இந்த வாசலை அடைத்தனர் என்றும். அதற்குள் இருப்பது தெய்வ சக்தி என்றும் சொல்லி இருந்தார்.

அதை திறப்பதற்கு மீண்டும் அந்த சித்தரே தான் வர வேண்டும் ஆனால் அவரை அழைப்பதே பிரம்மப்பிரயத்தம் என அவளிடம் கதை போலக் கூறினார். ஆனால் அந்தக் கதவைத் திறந்துவிட்டால் நீ நினைத்தது நடக்கும். அதற்கு மேலேயும் இருக்கலாம் என அவளுக்கு ஆசை காட்டி இருந்தார்.

ஆசை மனித மனத்தின் கடிவாளமற்ற குதிரை. அதற்கு மயங்காத உயிர் இந்த உலகத்தில் இல்லை. ஜானவி வர்மா ஆசை அதிகம் உள்ளவள் தான். ஆனால் அவள் எதற்கு ஆசைப்படுகிறாள் என்பது அவளுக்குக் கதை சொன்ன அவளது தாத்தா கூட அறிய மாட்டார்.

ஜானவி அந்தக் கதவை தன் கைகளால் தடவினாள். உடல் எங்கும் சிலிர்த்தது. மயான அமைதி கொண்ட அந்த இடம் ஜானவியின் கை பட்டதும் கடல் கொந்தளிப்பின் ஒலியை எழுப்பியது. அவள் காதை கதவில் வைத்து அது என்ன என்பதை ஆராய நினைத்தாள். கடல் அலை சுனாமி வந்தது போல சத்தம் கேட்டது. கேட்டதுகேட்டுக் கொண்டே இருந்தது. சில நேரம் கழித்து அந்த சத்தத்தின் நடுவே யாரோ அங்கு பேசும் சத்தமும் கேட்க அந்த குரலில் தன் மனதை ஒருநிலைப் படுத்த முயன்று கொண்டிருந்தாள்.

அலைகளின் சத்ததில், அந்தக் குரல் மிகவும் மெதுவாகவே கேட்டது. ஆனாலும் முயன்றாள். ஒரு குரல் அல்ல, பல குரல்கள், ஒன்று சேர்ந்து எதுவோ சொல்லவது போல இருந்தது. இப்போது ஜானவியின் காதுக்குள் அது மட்டுமே கேட்டது.

மந்திரங்கள்… பூஜைகள் ஏதேதோ அவள் காதுகளைத் துளைத்தது. கண்ணை மூடி இருந்தவளின் கண்முன்னே பல பேர் சேர்த்து எங்கோ நடந்து செல்வது போல இருந்தது. யாருக்கும் உடல் இல்லை, வெறும் ஒளி ரூபம் மட்டுமே செல்கிறது. ஒவ்வொரு ஒளியும் ஒன்றன்பின் ஒன்றாக மறைகிறது. அத்தோடு அந்த மந்திரங்களும் அடங்கியது.

மேலே அர்ச்சகர்கள் வரும் சத்தம் ஜானவியை அசைக்க, வேகமாக மேலே சென்றாள்.