KVI-12

அலைபேசி அழைப்பை, ஏற்றவளிடம் ரேவ் மூலமாக, ‘அமைச்சரிடம் சக்திவேல் பெயர் சொல்லப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது. ‘சரி உடனே கிளம்பி வரேன்’ என்று அழைப்பை துண்டித்துக் கொண்டாள்.

அருகில் இருந்த பூச்செண்டை பார்த்தவள், “நீதான் தூக்கத்தை கெடுக்கிறனு நினைச்சா, இப்போ இவளும் ஆரம்பிச்சிட்டா?” என்று சொல்லிக் கொண்டே, கிளம்பிச் சென்றாள்.

*****

அந்த இருள் பிரியாத விடிகாலைப் பொழுதில், கொஞ்சமும் பதட்டமோ, பயமோ இல்லாமல், என்ஃபீல்ட் எழிலாக ஓட்டப்பட்டது.

சைட் ஸ்டேண்ட் மட்டுமே, இன்று.

படியேறி, நேராக ரேவ் மற்றும் கனகா மேம் இருக்கின்ற அறைக்குள் நுழைந்தாள், சயனா.

அறையில், ரேவ் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள். அவளின் கண்ணீரைத் துடைத்துச் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார், கனகா மேம்.

‘ப்ச்.. ஆஆ’ என்று சொல்லிக் கொண்டே, கனகா மேம் முன்னே வந்து நின்றாள், சயனா.

‘ஏன் இப்படி?’ என்பது போல் பார்வை பார்த்தாள். பார்வையின் அமைதிக்கு ஏற்ப, வாயில் சுவிங்கம் சுவைக்கப் பட்டது.

“சயனா…” என்று கனகா மேம் ஆரம்பிக்கும் போதே, அறையின் வாயிலில் நிழலாடியது.

காவல்துறையேதான்.
திரும்பிப் பார்த்தாள், சயனா.
நிமிர்ந்து பார்க்கவில்லை, ரேவ்.
முறைத்துப் பார்த்தார், கனகா மேம்.

‘என்ன’ என்பது போல் பார்த்து, தனது புருவத்தை உயர்த்தினாள், சயனா.

“வா, அமைச்சர் வெயிட் பண்றாரு” – காவலின் கடுஞ்சொல்.

“இங்க பேசிட்டு, அங்க வரேன்னு சொல்லு” – சயனாவின் சாட்டையடி.

“ஏய்! அவர் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காரு. தெரியாதா?”

“அது தெரியாமத்தான், அப்படி சொன்னேனு நினைக்கிறியா?” என்று கேட்டுக் கொண்டே, காவலின் அருகே வந்தாள், சயனா.

ஒரு, ஒரே ஒரு சாண் அளவாவது, அந்தக் காவலின் கால்கள் பின்னோக்கிச் சென்றன.

கனகா மேமின் கண்களில், மெல்லிய திருப்தி.

“நான் ஏன் சொல்றேன்னா? விடிஞ்சா பிரஸ் வந்திடும். ஏன்? என்னன்னு? கேள்வி கேட்டா பிரச்சனை ஆயிடும். யோசி. ” – காவலின் கலவரம்.

“அது உன் பிரச்சினை. அதுக்கு நான் ஏன் யோசிக்கனும்?? ” – சயனாவின் சாதுரியம்.

காவலின் நிழல் கூட அங்கில்லை.
திரும்பவும் கனகா மேமின் எதிரில் வந்து நின்று கொண்டாள்.

“சரி, சொல்லுங்க மேம். ஏன் இப்படி பண்ணீங்க? ”

“சயனா, உனக்காகத்தான்” – குரல் கரகரத்தது.

“புரியல. இதுல எனக்கு என்ன லாபம் இருக்கு”

“சயனா, நீ மனோகர கல்யாணம் பண்ணிக்கணும். அதுக்காக.. ”

“அய்யோ.. அதான் புரியலன்னு சொல்றேன். மனோவ கல்யாணம் பண்றதுக்கு, இந்த மூவ் ஏன்?”

“நேத்து, சக்திவேல மீட் பண்ணப் போயிருக்க”

“ஆமா.. ”

“ஸோ, சக்திவேலப் பத்தி அமைச்சர்கிட்ட சொல்லிட்டா, அவங்க பார்த்துப்பாங்க. அதுக்கப்புறம் உனக்கு வேற ஆப்ஷன் இருக்காது.. ”

“ஒன்திங் கிளாரிபை பண்ணிறேன். லவ் லைப்ல, எனக்கு ஆப்ஷனே கிடையாது. சக்தி மட்டும்தான்.”

“சயனா, உன் அம்மாவோட கஷ்டம், நீ பார்க்கிற வேல. உன்னோட லைஃப்ல சக்திவேல் இருந்தா, அது உன் வேலைக்கு நல்லதில்லை. இப்படி ரேவ் சொன்னா, அதான் இந்த முடிவு ”

“அப்படியே நீங்க எனக்கு நல்லது பண்ணனும்னு நினைச்சீங்கன்னா, அன்னைக்கு உட்கார்ந்து பேசனீங்க பாத்தீங்களா?? அந்தமாதிரி என்கிட்ட, வீட்டுக்கே வந்து பேசியிருக்கலாம்”

அந்தக் கேள்வியே உணர்த்தியது, கனகா மேமிற்கு ‘தான் எடுத்த முடிவு தவறென்று’.

“இப்படிச் செஞ்சிருக்க வேண்டாம்”

எடுத்த முடிவினால், கனகா மேமின் முகம் வாடியது.

“அதுசரி, சக்தி என்னோட லைஃப்ல இருக்கிறதுக்கும், என் ஜாப்புக்கும் என்ன சம்பந்தம்?? ”

‘இது என்ன கேள்வி’ என்பது போல் கனகா மேம் முறைத்துப் பார்த்தார்.

“சொல்லுங்க மேம்”

“சக்திவேல் ஹேக் பண்ணிருக்கான். அவன் ஒரு அக்யூஸ்ட்”

‘இதையே எத்தனை தடவைதான் சொல்லப் போறீங்க’ என்பது போல் பார்த்தாள், சயனா.

“இதுவரைக்கும் அமைச்சர்க்குத் தெரியாது. இப்போ தெரிஞ்சிடுச்சி. அதுவேற பிரச்சனை ”

“இதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. சக்தி எப்படி அக்யூஸ்ட்? ”

“இப்பதான சொன்னேன். அவன்தான் ஹேக் பண்ணியிருக்கான்”

“ஓ…ஹேக் பண்ணியிருக்கான்!!! சரி, அது யாருக்குத் தெரியும் ”

“உனக்கு, எனக்கு.. தென் அமைச்சர்.. ஐ மென்ட் அந்த நாலு பேருக்குத் தெரியும் ”

“இப்ப, நான் கேட்கிறதுக்குப் பதில் சொல்லுங்க. இதுல யாரு வெளியில போய் சொல்லுவாங்க? ”

“அல்ரெடி டோல்ட். அமைச்சருக்கு இப்போ, சக்திவேல் ஹேக்கர்ன்னு தெரிஞ்சிருச்சி. ஸோ…”

பாதியிலே, இடைவெட்டினாள்…

“மேம், இதான் உங்க பிரச்சனைனா? அன்னைக்கு இங்க வச்சி, சக்திய அக்யூஸ்ட்னு நீங்க சொல்றப்ப.. நேத்து, மால்ல இவ சொல்றப்ப.. நான் சொல்ல வந்தத, ஒரு நிமிஷம் கேட்டிருந்தீங்கனா? இந்த மாதிரி நடந்திருக்காது”

அவருக்குப் புரியவில்லை. புரியாமல் சயனாவைப் பார்த்தார். ரேவும் நிமிர்ந்து பார்த்தாள்.

“நல்லா கேளுங்க. பர்ஸ்ட் டே, இந்தக் கேஸ்பத்தி தெரிஞ்சதும், அந்த நாலு பேரும், பிரஸ்மீட் வச்சி, நாங்கதான் முன்வந்து வரி கட்டினோம்னு சொல்லியாச்சி”

அந்த நாள் ஞாபகம் வந்தது.

“இப்ப போய் அக்கவுண்ட்ட ஹேக் பண்ணிட்டாங்கன்னு, சொன்னாருனு வைங்க, பைத்தியம்னு நினைக்க மாட்டாங்க.”

“… ”

“அதவிடுங்க, ஏன் ஹேக் பண்ணாங்கனு கொஸ்டின் வரும், அப்ப என்ன பதில் சொல்வாரு? ”

“…. ”

“அந்த ஒரு நம்பிக்கையிலதான், நான் இந்த கேஸ டிலே பண்ணலாம்ன்னு சொன்னேன். சக்தி மேல வச்சிருக்கற லவ்வுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”

“… ”

“இது புரிஞ்சிக்காம, ரெண்டு பேரும் எவ்வளவு பெரிய விஷயத்தை பண்ணி வச்சிருக்கீங்க”

“…. ”

“ஸாரி மேம், இப்படி சொல்ல, எனக்கு ரைட்ஸ் கிடையாது. பட், ஒரு தடவை என்கிட்ட கேட்டிருக்கலாம்”

“… ”

“சக்திய ஏன் பார்க்கப் போறேன்னு? வார்ன் பண்ணியிருக்கலாமே. அந்த உரிமை உங்களுக்கு இல்லையா? இல்ல இவளுக்கு இல்லையா?? ”

இதைக் கேட்டவுடன், ரேவ் எழுந்து அழுதுகொண்டே, அவள் அறையை நோக்கிச் சென்றாள்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த சயனா, “இதைத் தவிர வேற எதுவும் தெரியாது” என்று முணுமுணுத்துக் கொண்டே, அவள் இருக்கைக்குச் சென்று, அமர்ந்து கொண்டாள்.

அடுத்த கட்ட நடவடிக்கைக்காக, தான் சேகரித்து வைத்திருந்த தகவல்களை எடுத்துப் பார்த்தாள். முதலில், அந்த பில்டர். அதற்கப்புறம் சில காவலர்கள். கடைசியாக அமைச்சரின் துரோகிகள். இப்படி அனைத்தையும் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.

‘யாரை – எப்படி? எந்தவிதத்தில்? எந்த இடத்தில்? பயன்படுத்தலாம்’ என்று கவனமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

“சயனா, அமைச்சர் வெயிட் பண்றார்”

“இனிமே, அங்க போய் சும்மா நிக்க முடியாது. ஏதாவது ஸ்டார்ங் கண்டன்ட் வேனும்” – இன்னும் கவனம் சிதறவில்லை.

கனகா மேம், சயனாவின் அருகில் வந்தார்.

“சயனா..”

“மேம், அப்புறமா பேசலாம். ப்ளீஸ்”

“நான் ஒன்னே ஒன்னு சொல்லிட்டுப் போயிருவேன்” – குரலில் வருத்தம்.

“சொல்லுங்க மேம்” – அலுவலகம், அதற்கான இடமில்லை என்றபடி.

“நம்ம ரேவ அடிச்சிட்டாங்க”

சயனாவிற்கு அதிர்ச்சிதான்.
இதுதான், ரேவின் கண்ணீருக்கு காரணமா?? தனக்குத் தெரியாமல், இப்படி ஒரு காரியம் செய்ததால்தான், அழுகிறாள் என்று நினைத்தாளே!!

சயனாவின் அமைதி, கனகா மேமை மேலும் சொல்ல ஊக்கியது.

“ரேவ, அந்தப் போலீஸ் அடிச்சிட்டான்” என்று ஆரம்பித்து, நடந்ததை ஒன்றுவிடாமல் ஒப்பித்தார்.

இதற்கு இடையே, காவல்துறை வந்து, “சீக்கிரம் வா” என்று இருமுறை எச்சரித்துவிட்டுச் சென்றது.

சயனா, யோசிக்க ஆரம்பித்தாள். கல்லூரியிலிருந்தே ‘யாராவது, வரம்புமீறினால், தன்னிடம் வந்து முறையிடுவாள். இப்படி ஒன்று நடந்திருக்கும் போது, தன்னிடம் எதுவும் சொல்லவில்லை.’ என்று கோபம் வந்தது.

உடனே, ரேவின் அறையை நோக்கி சென்றாள். அங்கும், ரேவ் அழுது கொண்டுதான் இருந்தாள்.

சயனா, ரேவ் அருகே சென்று அவளது நாடியைப் பிடித்து உயர்த்தினாள்.

“அடிச்சானா?” – சங்கடத்துடன் சயனா.

சயனாவின் சங்கடம், ரேவிற்கு ஆறுதல் தந்தாலும், அதுவே அவளின் அழுகையை அதிகரிக்கச் செய்தது.

“ரேவ், இதல்ல சொல்லி, என்னய கூப்பிட்டிருக்கனும்” என்றாள்.

இன்னும் அழுகைதான்…

“முதல்ல அழுகிறது நிறுத்து. என்கூட வா, நான் கேட்கிறேன். ”

“நான் வரல. அவனுங்கள பார்க்கவே எனக்குப் பிடிக்கல. டிஜிபி, ஹையர் அபிஷியல்ஸ்னு யார்கிட்டயாவது அவனைப்பத்தி கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறேன்” – அத்தனை அழுத்தம் திருத்தமாக, அவர்களது அத்துமீறல் மேலான கோபம்.

“என்ன கம்ப்ளைன்ட் பண்ணப் போற” – சலசலப்பே இல்லாமல் சயனா.

“சிஐடி ஆபீஸ்ல வந்து ஸ்மோக் பண்றாங்க. ஒரு சிஐடி ஆபீஸர கை நீட்டி அடிக்கிறாங்க. ஹவ் சீப் தே ஆர்” – தன் வலியை வார்த்தைகளால் வலியுறுத்திச் சொன்னாள், ரேவ்.

“ஓ”

“என்ன ஓ?? இவ்வளவு சொல்றேன், உனக்கு கோபமே வரலையா?”

” வருது, ஆனா உங்கமேலதான்”

“நாங்க என்ன தப்பு பண்னோம்? ”

“பர்ஸ்ட், மீட்டிங் அரேஞ்ச் பண்ணது. செகன்ட், சிஐடி ஆபிஸ்ல மீட்டிங் அரேஞ்ச் பண்ணது. லாஸ்ட், இவன்தான் ஹேக்கர்னு சொல்லிட்டு வராம, எதுக்கு தேவையில்லாத பேச்சு?? ”

“அப்போ, அவன் அடிச்சது தப்பில்ல. அப்படித்தான” – ரேவ்.

“அவன் உன்னைய அடிச்சானா, நீயும் திருப்பி அடிச்சிருக்க வேண்டியதான” – பழிக்குப் பழி என்ற கோணத்தில், சயனா.

“ஒரு போலீஸ் ஆபிஸர, யாராவது அடிப்பாங்களா? ” – இது நியாயமான கேள்வி.

“ஓ, சிஐடி ஆபிஸர அடிக்கலாமா? ” – இதுவும் நியாயமான கேள்வி.

தனது நிலையை அருவருப்பாக உணர்ந்தாள், ரேவ். தலை கவிழ்ந்துவிட்டது.

“ரேவ், நான் ஒன்னு சொன்னா, தப்பா நினைச்சுக்க மாட்டியே”

“சொல்லு”

“சக்தி செஞ்சதயோ… உனக்கு நடந்ததையோ… யார்கிட்டயாவது சொல்லி, நியாயம் கேட்க முடியாது.”

“ஏன்?? ” – குரலில் கனம் கூடிவிட்டது.

“ஏன்னா? அது உங்க ரெண்டு பேரையும், நல்ல விதமா போர்ட்டிரை பண்ணாது. ஸோ புரிஞ்சுக்கோ”

சரிதானே! சக்திவேல் செய்ததையோ, ரேவிற்கு நடந்ததையோ – வெளி உலகத்திற்கு சொன்னால், அவர்கள் இருவருமே இழிவான பார்வைக்கு உள்ளாவார்கள்.

“அப்போ என்ன பண்ண? ” – குரலில் இயலாமை தெரிந்தது.

“என்ன நம்புங்க. நான் உங்க ரெண்டு பேருக்கும் நியாயம் வாங்கித்தரேன்”

“எப்படி?”

“எப்படின்னு எனக்கு தெரியாது. ஆனா வாங்கித்தரேன். நீ வேடிக்கை மட்டும் பாரு . சரியா ”

“இங்க நியாயமா எதுவுமே பண்ண முடியாதுல” – ரேவின் குரல் வெறுமை காட்டியது.

“ஆமா ரேவ். அது உண்மை. ” – இந்த வெறுமை, கனகா மேம் குரல்.

இருவரது வெறுமையைப் பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்துவிட்டாள், சயனா.

“அய்யய்ய.. என்ன பெரிய நியாயம். இந்த கேஸ் வந்தப்போ தெரியாதா? இது நியாயமில்லன்னு. அவங்க வரியே கட்டல. அது நியாயமா?? அப்ப அமைதியாதனா இருந்தீங்க. அப்போ எங்க போச்சு உங்க நியாயம்??? ”

நிச்சயமாக சயனாவின் பேச்சில் நியாயம் இருந்தது.

“என் ஹையர் அபிஷியல், எனக்கு என்ன சொல்றாங்களோ, அதத்தான் நான் கேட்டேன். அவ்ளோதான்”

“அவ்வளவுதான. உன் வேல முடிஞ்சதுல. நீ ஒதுங்கிக்கோ. நான் பாத்துக்கிறேன்” – சயனா.

“என்ன பார்க்கப்போற? ”

“வெயிட் அண்ட் வாட்ச்” – சினந்தாள் சயனா.

கனலினி, ரேவ் – எல்லாம் ஒரே ரகம். தன் அதிகாரத்திற்கு உட்பட்டு நின்று, அட்டூழியத்தை எதிர்க்க வேண்டும், என்று நினைப்பவர்கள். ஆனால், அது எல்லா நேரங்களிலும் உதவாது.

பூனைக்கு யாராவது மணி கட்டியே ஆக வேண்டும் அல்லவா!!!

அதிகாரத்தை எதிர்க்க, அதிகாரம் தேவையில்லை. அந்த அதிகாரத்தின் மீதான அலட்சியப் போக்கே போதும், ஜெயித்துவிடலாம்.

இது அங்கனைக்கு கைவந்த கலை.

சயனா யோசித்தாள். பின் கனகாவை பார்த்தாள்.

“மேம், இறங்கி அடிக்கலாமா??” – சயனா.

“நான் உன்கூட நிக்கிறேன் சயனா. ஆனா ஒன்னே ஒன்னு!! அவனுங்க கூட, என்னால பேச முடியாது. ஹையர் ஆபீசர்கிட்ட ஏதாவது ஹெல்ப் வேணும்னா, பாலிஸ்ஸா பேசி, நான் வாங்கித் தரேன்” – மேம்.

தன் முழுக்கைச் சட்டையை, முழங்கை வரை மடித்து விட்டுக்கொண்டே, ரேவ் அறையிலிருந்து வெளியேறினாள்.

இது பொறுப்பதில்லை
எரிதழல் கொண்டு வா
         – சயனாவின் சினம்.

சட்டையின் ஒவ்வொரு மடிப்பிற்கும், சயனாவின் மூளை, வழக்கின் ஒவ்வொரு மூலையிலும் போய் மோதிக்கொண்டு வந்தது.

செய்வது துணிந்து செய்
சொல்வது தெளிந்து சொல்
       – சயனாவின் வீரம்.

முதலில் அவர்களது பலம்!! நால்வர் கூட்டணி. இன்று அதில், இரண்டை கழட்டி விட வேண்டும். இதுதான் முதற் கட்டம்.

மனதில் உறுதி வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்!!
     – சயனாவின் வியூகம்.

நால்வர் இருக்கும் அறை…

சட்டச்சட சட்டச்சட டட்டா – என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
 – இப்படி ஒரு இடிமுழக்கம் போலத்தான், அந்த அறைக்குள் நுழைந்தாள் சயனா.

சயனா உள்ளே நுழையும் போதே, காவல்துறை தடுத்தது.

“கொஞ்ச நேரம் கழிச்சி வா, இப்ப அமைச்சர் பேச மாட்டார்” – காவல் பழிவாங்குகிறதாம்!!

உடனே சிரிப்போசைகள் வேறு.

ரெளத்திரம் பழுகு.
– அதையும் மீறி, சயனா உள்ளே நுழையப் பார்த்தாள்.

அப்பொழுது காவல்துறை, அவள் முன்னே வந்து நின்று, “உனக்கும் வேணுமா? ” என்று கேட்டு முடிக்கும் முன்பே…

….
….

காவல்,
அமைச்சரின் முன் இருந்த மேசை முன்னே…
கைகைகள் பின்னே முறுக்கப்பட்ட நிலையில்…
காவலின் கரங்கள்… சயசயனாவின் காவலில்…
“டீல் பேசலாமா??” – சயனாவின் குரல்.

என்ன நடந்தது என்று யாராலும் ஊகிக்க முடியவில்லை. ஒருநிமிடம் மூளையை ‘ரிவைன்ட்’ செய்து ஸ்லோமோஷனில், காட்சியை ஓட்டிப் பார்த்தார்கள். அதில் தெரிந்தது…

“உனக்கும் வேணுமா?” என்று கேட்ட காவலிடம், வேண்டியது கொடுக்கப் பட்டிருந்தன.

திரும்பவும் கரங்கள் உயர்த்த முயன்ற காவலின் மணிக்கட்டை பிடித்து, பின்புறமாகக் முறுக்கிக்கொண்டாள், சயனா.

காவலின் முதுகில், தன் கை முட்டி கொண்டு தட்டினாள். காவல் பலம் இழந்ததும், முன்னே தள்ளிச் சென்றாள். காவல் வலி மிகுதியில் முணங்கியது.

மேசையின் அருகே கொண்டு சென்று, காவலின் தலையை…ஓங்கி மேசையின் மேல் கிடத்தினாள். வலி கொஞ்சம் அதிகம் போல, காவல் கதற ஆரம்பித்தது.

“டீல் பேசலாமா??” – சயனாவின் குரல்.

இன்னும், கனகா மேம் உட்பட யாரும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

சயனா நாசி, மேலும் கீழும் சென்று வந்தது. புகை நெடி.

தொழில், இன்னமும் புகைவண்டி ஓட்டிக்கொண்டிருந்தது.

தன், ஒரு கரத்தால் சைகை செய்து, தொழிலின் ‘சிகரெட்டை’ கேட்டாள், சயனா.

காவலுக்கு, வலி அதிகமாகியது போல, கதறல் கத்தலாக மாறியது.

தொழிலோ ‘டூ யூ ஸ்மோக்! ‘ என்று யோசித்தபடியே, சயனாவிடம் கொடுத்தது.

அதனை வாங்கியவள், காவலின் கைகளில் வைத்து நசுக்கினாள். கண்டிப்பாக, நன்றாக எரியும்.

“இது என் ஆஃபீஸ். இங்க நான் சொல்ற மாதிரிதான் இருக்கனும். உன் இஷ்டத்துக்கு எல்லாம் நடக்க முடியாது” – சயனாவின் வருகையால், தொழிலுக்கு ஏற்பட்ட முதல் நட்டம்.

அது, உயிரற்ற அறையே நடுங்கும் கணீர் குரல். உயிருள்ள ஆட்கள் கதி என்னவாகுமோ??

“போதும். விஷயத்துக்கு வா. விடியப் போகுது. பிரஸ் வந்தா பிரச்சனை ஆயிடும்” – அமைச்சர்.

“என்ன பிரச்சனை?? நான், நீ, இந்தப் போலீஸ் எல்லாரும் சேர்ந்து, டிபார்ட்மென்ட் கேஸ் டீடெயில்ஸ் பேசிக்கிட்டு இருக்கோம். பிரஸ் கேட்டா, இப்படிச் சொல்லுங்க”

“கரெக்ட்.. சமாளிச்சிரலாம்” – அமைச்சரின் அற்ப சந்தோஷம்.

“ஓ, நான் உங்கள மறந்திட்டேன். ஸாரி.” – தொழிலதிபரைப் பார்த்து சயனாவின் பரிதாபம்.

‘இவளுக்கு, பிஸினஸ் மேல் ஏன் இந்த கரிசனம்? ‘ என்று யோசித்தது, அமைச்சர்.

“அமைச்சரும் மறந்துட்டார் போல” – இது கரிசனமல்ல!! சயனாவின் கயிங்கரியம்.

சயனா, அமைச்சரைப் பற்றி, அவர் முன்னேயே, தொழிலதிபரிடம் ‘பற்ற’ வைத்திருக்கிறாள்.

தொழில் யோசிக்க ஆரம்பித்தது. பிரச்சனையின் போக்கு மாறுவது போல் இருந்தது, தொழிலுக்கு.

“இப்பச் சொல்லு டீல் பேசலாமா?” – இது, சயனா அமைச்சரிடம்.

“என்ன மிரட்டுரியா. எனக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிடுச்சு. யார், யார் இதுல சம்பந்தப்பட்டு இருக்காங்கனு தெரிஞ்சிருச்சி, இனிமே உன்னோட தேவை எதுவும் தேவையில்லை ”

“இப்பவும் கேட்கிறேன், டீல் பேசலாமா?” – அமைதியான குரலில், அமைச்சரிடம். கைகளில் அழுத்தம், காவலிற்காக.

“இந்த ஹேக்கிங் மேட்டர யார்கிட்ட சொல்லப் போறியா? ” – தொழில்.

தொழில், கொஞ்சம் கொஞ்சமாக, அவளைப் புரிய ஆரம்பித்தது. அவள், அதனைக் கவனித்துக்கொண்டாள்.

‘ஆமாம்’ என்பது போல், தலையை மேலும் கீழும் ஆட்டினாள். ஆனால், அதில்தான் எவ்வளவு அலட்சியம்!!

“என்ன நெனச்சிகிட்டு இருக்கிற. இதை வெளியே போய், பப்ளிக்கிட்ட சொல்லலாம்னு நினைக்கிறியா? ” – அமைச்சரின் முதல் கணிப்பு.

‘இல்லை’ – திரும்பவும் தலையசைப்பு மட்டுமே.

“எதிர்க்கட்சியில சொல்லலாம்னு நினைக்கிறியா?? ” – இரண்டாவது கணிப்பு.

‘இல்லை’ – தலையசைப்பு இல்லை, நய்யாண்டிப் புன்னகை. அதுவே போதுமே!!

கனகா மேமும், கொஞ்சம் சிரித்துக் கொண்டார்.

இங்கு இன்னொன்று நடந்தது. அது, அமைச்சரின் கணிப்புகள் தோற்பது கண்டு, தொழிலின் மூளையில், அவரின் மீதான அதிருப்தி தூவப்பட்டது.

“மீடியாகிட்ட… ” – இது மூன்றாவது கணிப்பு.

“நான் பப்ளிக்கிட்ட கொண்டு போனா, இதவிட பெரிய பிரச்சினையை காட்டி, இத மறக்கடிச்சிருவ. எதிர்க்கட்சிகிட்ட கொண்டு போனா, அவங்களுக்கு எப்போ தேவையோ, அப்பதான் யூஸ் பண்ணுவாங்க. மீடியாகிட்ட…. இங்கதான இருக்குது”

“அப்புறம், என்ன பண்ணப் போற” – அமைச்சரின் அதிகாரம்.

ஆனால், அது அதிகாரம் போல் இல்லை. ‘என்ன செய்யப் போற.. சொல்லேன்’ என்று அகப்பட்டுக் கொண்டது போல் இருந்தது.

“ஒன் கட்சியில, உன்னைய கீழ தள்ளிட்டு வரனும்னு ஒருத்தன் நினைப்பான்ல, அவன்கிட்ட போய் சொல்வேன்”

அமைச்சர் டெபாசிட் ஆட்டம் கண்டது.

“இங்க எதிரியைவிட துரோகிக்கு ஸ்டெர்ன்த் அதிகம்”

டெபாசிட் இழக்க நேரிடலாம்.

“எதிரி சொல்றதகூட உண்மையா பொய்யானு யோசிப்பாங்க. ஆனால் துரோகி சொல்றது யோசிக்கவே மாட்டாங்க. அப்படியே நம்புவாங்க ”

டெபாசிட் இழந்தது.

“இப்ப டீல் பேசலாமா? ” – இது, முதலிலிருந்து சயனாவின் குரல்.

அவர் ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினார். அதன்பின்னே சயனா, காவல்துறையை விடுவித்தாள்.

திரும்பவும் போலீஸ் சீறிக்கொண்டு வந்தது.

“ஏன் வாங்கனது பத்தலையா?” – சயனா.

மூன்று சிரிப்பொலிகள்.
ஒன்று சயனா.
இரண்டாவது கனகா மேம்.
மூன்றாவது தொழில்!!

“நான் பேசி முடிக்கிற வரைக்கும், இந்த ஆள் ” என்று காவலைக் கை காட்டினாள், “பேசக்கூடாது. அப்படின்னா நான் பேசறேன்” என்று முடித்தாள்.

“உட்காருய்யா” – டெபாசிட் இழந்த அமைச்சர்.

“இல்ல, நான் தெரியாமத்தான் கேட்கிறேன். அவங்களுக்கு ஒரு பிரச்சனைனு, அவள அடிச்சியே! இன்னைக்கு உனக்கு ஒரு பிரச்சினைனா யாராவது வந்தாங்களா? யோசி” – இது தூபம்தான்.

இன்றைய நாளில் காவல் மனதில் விதைக்கப்பட்டது. என்றாவது ஒரு நாள், அறுபடை நடக்கும்.

அமைச்சரைப் பார்த்தது, காவல்.

“யோவ், உட்காருய்யா” – அமைச்சர்.

அந்த மேஜையின் மீது, ரேவ் ஒப்படைத்த கோப்புகளை எல்லாம் ஒன்றாக சேகரித்தாள், சயனா.

தொழிலதிபரை பார்த்து, ” லைட்டர் இருக்கா” என்றாள்.

‘எதற்காக’ என்பது போல் தொழிலின் பார்வை.

“ஆங்! எரிக்க” என்று இடைவெளி விட்டு “பேப்பரை” என்றாள், சயனா.

கோப்புகளையும், லைட்டரையும் கனகா மேமிடம் கொடுத்து, ‘பாத்ரூம்’ நோக்கி கைகாட்டினாள். அவரும் வாங்கிக் கொண்டு, சென்றார்.

‘யார் தலைமை?’ என்ற கேள்வி நால்வரிடமும் வந்தது. நடப்பதைப் பார்த்து, நிச்சயம் வந்தே ஆக வேண்டும்.

“ஏன் அதை எரிக்கனும்?? ” – காவல்.

“ஓகே, டீல் பேசலாமா?? ” – சயனா.

முன்னிருந்த நாற்காலியில் நன்றாக, அமர்ந்து கொண்டாள்.

“ஏன் இந்த எவிடென்ஸ்ஸ, என்னால கலெக்ட் பண்ண முடியாதா?? ” – அமைச்சர்.

“ரொம்ப குழப்பம் போல. இதை நான் வெளில சொல்லக் கூடாதுனுதான், இப்ப நம்ம டீலே பேசப் போறோம் ”

“அப்புறம் எதுக்கு எரிச்ச?”

“ரிலாக்ஸா உட்கார்ந்து யோசிச்சிப் பாருங்க, உங்களுக்கே புரியும்”

“கொரியரா? ” – தொழில்.

“ஏன்? அந்தக் கொரியர் ஆபீஸ் போய், இதப்பத்தி டிடெயில்ஸ் வாங்க முடியாதா? ” – அமைச்சரின் சறுக்கல்.

“திரும்பவும் சொல்றேன். நான் இத வெளியே சொல்லக் கூடாதுனுதான் டீல் ” – சறுக்காமல் சயனா.

“ம்ம்ம் எனக்கு வேல இருக்கு. நான் கிளம்பறேன். ” – தொழில்.

“ஏன்யா பிஸினஸ்? ” – அமைச்சர்.

“எனக்கென்னவோ இது சாதாரண பிரச்சனை மாதிரி தெரியல. ”

நால்வர் கூட்டணியில் வேறுபாடு.

“பிஸினஸ், நம்மள குழப்புறாய்யா. பேசாம உட்காரு”

“நீ குழம்பிட்ட. அந்தப் பொண்ணு டிடெயில்ஸ் கொடுத்தப்ப, பேசாம வாங்கிட்டு போயிருக்கனும்”

நால்வர் கூட்டணியில் முரண்.

“கரெக்ட்தான்… ”

“தேவையில்லாம, அந்தப் பொண்ண அடிச்சி, அழவச்சி பிரச்சனைய பெரிசாக்கிருக்கீங்க. அதான், இந்தப் பொண்ணு இப்படி நடக்குது”

நால்வர் கூட்டணியில் விரிசல்.

“என்னய்யா பேசற? இது சாதாரண விஷயம். ”

“இது தேவையில்லாத பிரச்சனை எனக்கு. அந்தப் பொண்ணு, உன்னய மட்டும்தான் டார்கெட் பண்ணுது. நான் எதுக்கு மூக்க நுழைக்கனும்.”.

நால்வர் கூட்டணி இருக்கா??

“உன் பணமும் போயிருக்கில”

“என் பிசினஸ்ல நட்டம்னு, நினைச்சிப் போய்கிட்டே இருப்பேன்”

தொழிற் சந்தையில், அமைச்சர் சரிவைச் சந்தித்தார். தொழிலுக்கும் நட்டம்தான். ஆனால், அதைப்பற்றி அதிக நாட்டமில்லை. சென்றுவிட்டார்.

மூவர் கூட்டணி முன் சயனா…

“சரி சொல்லு, உன் டீல் என்ன?” – அமைச்சரே டீல் பேசினார்.

இப்போது சயனாவின் பார்வை, நியூஸ் சேனல் மீது விழுந்தது.

‘அடுத்து நான்தானா’ என்று செய்தி கூறியது நியூஸ் சேனல்.

“சேனலுக்கு, கண்டன்ட் இருக்கா? ”

” கண்டன்ட்டா?? ”

“அதான், பிரேக்கிங் நியூஸ்?.”

“இது என்ன??” – அமைச்சரின் சிறு சந்தேகம்.

“அன்னைக்கு, அவரு இங்க வந்தப்ப, கண்டெண்ட் வேனும்னு கேட்டாரு.”

அமைச்சரின் பார்வையில் அளவுக்கு அதிகமான சந்தேகம், பத்திரிகை மேல்.

“ஐய்யா, அது அப்போ ” – புது நியூஸ் சேனல்.

“ஆனா இன்னைக்கு உங்களுக்கு நிறைய கிடைச்சிருச்சில. போலீஸ் ஆபிஸர் சிஐடி ஆபிஸரை அடித்தார். பேரெல்லாம் கூட போட வேண்டாம். பப்ளிக்கே பில் பண்ணிப்பாங்க”

”ச்சே ச்சே… ”

“வேண்டாமா?? சிஐடி ஆபீஸில் அமைச்சர்! இது ஓகேவா. ”

அமைச்சரின் சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. ‘யாரை நம்ப’ என்று தெரியவில்லை.

அதனால் பத்திரிக்கையைப் பார்த்து, ” நீ கிளம்பிப் போ. நாங்க ரெண்டு பேரும் பேசிட்டு வரோம். ராத்திரி மீட் பண்ணலாம்” என்றார், அமைச்சர்.

“ஐயா, அந்தப் பொண்ணு சொல்றத நம்பாதீங்க”

“நீ போப்பா. இது எங்க பிரச்சனை. நாங்க பார்த்துப்போம்”

இன்றைய செய்திகள், இத்துடன் நிறைவடைந்தன. செய்திகள் வாசித்தது, வேறு யார்?? சயனாதான்.

இருவர் கூட்டணி…

அமைச்சரை நேருக்கு நேராகப் பார்த்தாள். இனிமே சயனாவிற்கும் அமைச்சருக்கும் இடையே நடக்கப் போகும் போர்.

போர்களத்தில், அவர் அதிகாரம் இருக்கும் இடமாகப் பார்க்கப்படப் போவதில்லை. அவள் அதிகாரியும் அல்ல!!

இருவருக்குமான தனிப்பகை.

சயனாவின் பார்வை மொத்தமும், அமைச்சரைப் பார்த்தது.
அமைச்சரின் பார்வை மொத்தமும், சயனாவைப் பார்த்தது.
இருவரின் கண்களில் வெறி தெரிந்தது.

‘யார் யாரைத் தோற்கடிக்க போகிறார்கள்?’ என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பது போல் இருந்தது.

இருவரின் மூளையும் ‘அநியாயமாக’ செயல்படத் தொடங்கியது.

சயனாவின் பார்வைதான் அமைச்சர் மேல் இருந்ததே தவிர, அவள் மூளை முழுவதும் காவலிடம்தான் இருந்தது.

“உன் டீல் என்ன?” – அமைச்சர்.

“உன் ப்ளான் என்னன்னு சொல்லு. அதுல, எனக்குத் தேவையானதை கேக்கிறேன்”

“இன்னைக்கு தேதிக்கு, கனலனி, சக்திவேல் இந்த ரெண்டு பேருமே என்னோட எதிரிங்க”

சக்திவேல் பெயர் கேட்கும் போதே, உள்ளுக்குள் சலனம் வந்து, சரிய ஆரம்பித்தாள் சயனா. இருந்தும்…

“ஓகே, எனக்கு கனலினி மேடம்க்கு எதுவும் ஆகக்கூடாது”

“கனலினி மேல, உனக்கு எதுக்கு இவ்வளவு பாசம்”

“டீல் பேசறப்ப காரணம் எதுக்கு?. டீல் ஓகேவா? ”

“ஓகே, அந்தப் பைத்தியத்த வச்சி நான் என்ன செய்யப் போறேன். எனக்கு தேவையில்ல. எனக்கு தேவை சக்திவேல் ”

சயனா எதிர்பார்த்ததுதான்.

“சக்திவேலைக் கூட்டிட்டு வந்து, உன்கிட்ட ஒப்படைக்க வேண்டியது என் பொறுப்பு. ”

“அவனை வச்சி, நான் என்ன செய்யப் போறேன். ”

“அப்புறம்”

“அவன் எனக்கு வேண்டாம்”

” புரியல ”

“அவன், வேண்டவே வேண்டாம். இப்ப புரியுதா? ”

காதால் இந்தவுரை கேட்டேன் – ‘அட
கண்ணா! என்றலறி வீழ்ந்தேன்’
      – அதிகாரத்தின் பிடியில் காதல்.

இதயம் முழுக்க காதலை வைத்துக் கொண்டு, எதிர் இருப்போரின் முன் காட்டத்தைக் காட்டுவது கொடுமை. இது சயனாவின் நிலை.

“சக்திவேல் வேண்டாம். ஆனா அவன் உயிர் வேனும். ”

சயனா, சுயத்தை மறந்து சுருண்டு கொண்டாள். அவளது உயிரை, அவளிடமே கேட்கிறார்களே!!

சயனா, தன் காதலை, சாதல் இன்றி காப்பாற்றுவாளா??