KYA – 12

KYA – 12

                 காலம் யாவும் அன்பே 12

 

அவர்கள் இந்த ஊருக்கு வந்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் அந்தக் கற்பகிரகத்துக்குள் செல்ல வேளை வரவில்லை. எப்போது வாகீசன் உள்ளே செல்ல நினைத்தாலும் வேறு வேலை அவனை இழுத்துக் கொண்டது.

அவன் இன்று எப்படியும் உள்ளே செல்ல வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான். ஆனால் அதற்குள் இயல் பின்புறம் இருந்த சிற்ப்பத்தைக் காட்ட , அந்த நாள் முழுதும் அதிலேயே கழிந்தது.

இதுவும்  முக்கியமான ஒன்றாகவே அவனுக்குப் பட்டது. இயலை உறங்க அனுப்பிய பிறகு இரவு முழுதும் அந்த சிற்பமே கண் முன் வந்தது.

செவ்வக வடிவமும் , பக்கத்தில் இருந்த ராட்சஸ உருவமும் அவனுக்கு எங்கோ பார்த்தது போலவே இருக்க, திரும்பத் திரும்ப யோசித்தான். முடியாமல் போகவே, படுக்கையில் வந்து விழுந்தான்.

உடனே இமைகள் ஓய்வெடுக்க அவனைக் கெஞ்சியது. அதன் வேண்டுதலை நிறைவேற்றியவன், சில நேரத்திலேயே கனவிற்குள் தள்ளப் பட்டான்.

அப்போது எதைப் பற்றி சிந்தித்தானோ அதற்கு விடை கிடைத்தது. அந்த சிற்பத்தில் இருந்த  செவ்வக வடிவமும் , இரண்டு ராட்ஸசர்களும் பூதாகரமாக வளர்ந்துகொண்டே சென்றன. அப்போது தான் புலப்பட்டது.

அவ்விரண்டும் அந்த கற்பகிரகத்தின் வாயிலில் அமைந்தவை. செவ்வக வடிவம் அந்த கற்பகிரத்தின் வாசல், இரண்டு ராட்சசர்களும் துவாரபாலகர்கள். அந்தப் படிகளில் தான் நின்று கொண்டிருந்தான். உள்ளே செல்ல நுழைந்தவனை , ஒரு அமானுஷ்ய இருட்டு இழுத்துக் கொண்டது. எங்கிருக்கிறோம் அருகில் என்ன உள்ளது என்று கூட தெரியவில்லை.  கத்தினான். அவன் சத்தம் அவனுக்கே கேட்கவில்லை.

யாரோ அவனை அழைத்துக் கொண்டே இருப்பது போன்ற பிரம்மை. இவன் பதில் கூற நினைத்தால் , அவனால்  பேச முடியவில்லை.

பதறி உடனே உறக்கத்திலிருந்து விழிக்க, அப்போது தான் அது கனவு என்று உணர்ந்தான்.

சற்று நேரத்தில் வியர்த்து கொட்டியிருந்தது. அனைத்தும் நேரில் நடந்தது போல இருந்தது.

மறுநாள் காலை அங்கு செல்லும் வரை அவனுக்கு பொறுக்கவில்லை. முதல் வேலையாக பின் புற சுவருக்குச் சென்றனர் அனைவரும்.

வாகீ முதலில் நிற்க, அருகில் மற்றவர்கள் , அவன் ஏன் இப்படி ஓடி வந்தான் என்று தெரியாமல் நின்றனர்.

முதலில் அந்த சிற்பத்தை நன்றாக கவனித்துக் கொண்டான்.

“இந்த சிற்பம் எதோட சம்மந்தப் பட்டது தெரியுமா?! இந்தக் கோயில் கற்பகிரகத்தோட…” அந்த சிற்பத்தை கையால் தடவிப் பார்த்து வாகீ சொல்ல,

“வாட்?!!” ஆகாஷ் யோசனையாகப் பார்க்க,

“இதுவே அந்த கற்பகிரகத்தோட பின் புறம் தானே! அதை ஏன் இங்க சின்னதா செதுக்கி வைக்கணும்?” வந்தனாவுக்கு சந்தேகம் வர,

இயல் விளக்கினாள். “சில கோயில்கள்ல இந்த மாதிரி குறிப்புகள சிற்பிகள் விட்டுட்டுப் போவாங்க. அதாவது கல் எப்பவும் அழியாது. வேற எங்கயாவது எழுதி வெச்சா யாராவது அதை மறச்சு வெச்சு சில தகவல்கள் நம்மள மாதிரி பிற்கால சந்ததிகளுக்குத் தெரியாமலே அழிக்க வாய்பிருக்கு. அதுனால தான் அந்தக் காலத்துல இப்படி கோயில் தூண்கள் , சுவர்கள் , சில  சிற்பங்களுக்கு நடுவுல சொல்லாம சொல்லிருப்பாங்க.

விஷயம் தெரிஞ்சவங்களுக்கு இது ஒரு க்ளு மாதிரி. தெரியாத சாதாரண மக்களுக்கு அது வெறும் சிற்பம்”  அவளின் பேச்சில் வாகீ அவளின்  அறிவுக் கூர்மையை அறிந்தான்.

“ கல்வெட்டுகள் சிற்பங்கள் பத்தி தெரியும், ஆனா இப்படி க்ளு வ இப்போ தான் பாக்கறேன்..” நம்பாமல் வந்தனா அருகில் சென்று பார்க்க,

வாகீ பின்னே வந்தான். இயல் வாகீயைப் பார்க்க,

அவனோ மெச்சும் விதமாக அவளைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்டினான்.

‘என்னடா இது.. தல நம்மள ரெண்டு நாளா பாராட்டறாரு, இன்னிக்கு மழை வருமோ!’ சிரித்துக் கொண்டே தலையை மட்டும் ஆட்டினாள்.

வாகீசன் சென்று அந்தக் கோயில் கற்பகிரகத்துக்கு முன்னே நின்றான்.  அங்கிருந்த வாயிலையும், துவாரபாலகர்களையும் உற்று நோக்கினான். தன் கனவில் வளர்ந்து நின்றது போலவே இருந்தது.

அவனுக்கு அப்போதே உறுதி ஆயிற்று. பின்னால் இருக்கும் சிற்பக் குறிப்பு உள்ளே இருக்கும் ஏதோ ஒரு ரகசியத்தைத் தான் குறிக்கிறது என்று.

அவனுக்குப் பின்னால் வந்த அனைவரும் அந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து அதிசயித்தனர். ஆகாஷ் உடனே கையில் டார்ச் மற்றும் கம்பு இவற்றை தயாராக வைத்துக் கொண்டான்.

மண்ணிற்குள் இருந்து வெளி வந்ததால் , உள்ளே ஏதேனும் பாம்பு தேள் போன்றவை இருந்தால் அடிப்பதற்கு!

இயலும் வந்தனாவும் ஆளுக்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலை வைத்திருந்தனர். அதில் மயக்க மருந்து இருந்தது. அதை பூச்சிகள் மேல் அடித்தால் அது தற்காலிகமாக மயங்கிவிடும்.

வாகீ படிக்கட்டுகளில் ஏறத் தயாரானான்.

இயல் தன்னுடைய பிரகதீஸ்வரரை மனதில் வேண்டிக் கொண்டாள்.

வாகீ முன்னே செல்ல அவனைப் பின்தொடர்ந்தான் ஆகாஷ். அதன் பின்னே பெண்கள்.

அந்த வாயிலைத் தாண்டி உள்ளே அடியெடுத்து வைத்தான். அந்தப் பிரமிடுக்குள் நுழைந்த போது அடித்த வாசம் போலவே இப்போதும் உணர்ந்தான் வாகீ. அவன் உடல் சிலிர்த்தது.

அதே போன்ற இருட்டு. கையில் இருந்த டார்ச்சின் உதவியால் கொஞ்சம் தெளிவாகப் பார்க்க முடிந்தது. வெளியில் இருந்து பார்த்தால் அந்த இடம் மிகவும் சிறியதே. ஆனால் உள்ளே அளவில் கொஞ்சம் பெரியதாகவே தோன்றியது.

அந்த அறையில் இருந்த சுவர்களில் ஏராளமான படங்கள் வரையைப் பட்டு , மக்கிய நிலையில் இருந்தது. உள்ளே நின்ற இடத்திலிருந்தே இவை அனைத்தையும் பார்க்க , அடுத்து இரண்டடி முன்னே வைத்தான்.

சல சல வென்ற ஓடும் நதியின் சத்தம் மெலிதாகக் கேட்டது. முன்னே சென்றவன் நின்று ஆகாஷைப் பார்க்க,

“உனக்கு எதாவது சத்தம் கேட்குதா?”  

“ ஆமா ஹெட்! ஏதோ தண்ணி போற சத்தம் மாதிரி கேட்குது. மீண்டும் இரண்டடி முன்னேற , டார்ச் லைட்டும் கைவிட்டது. 

“எதிர்ப்பார்த்தேன்.” என்றவன் பெருமூச்சு விட ,

உடனே பின்னால் வந்த இயல் “ கையில் இருந்த மெழுவர்த்திகளில் ஒன்றை ஏற்றினாள். அதை ஆகாஷிடம் கொடுக்க, அவன் வாகீயின் கையில் திணித்தான்.

அந்த ஒளியை முன்னே காட்டி , அங்கிருப்பதைப் பார்க்க, வெறும் சுவர் மட்டுமே இருந்தது. அனைவரும் அவன் அருகே வந்தனர்.

“இது என்ன வெறும் அறையா! உள்ளே இருக்க வேண்டிய மூலவர் எங்கே!” வாகீ பேச,

“ஒரு வேளை அந்தக் காலப் போர்ல இங்கிருந்த சிலையை யாராவது எடுத்துட்டுப் போயிருப்பாங்களோ!” ஆகாஷ் அவன் மனதில் பட்டதைக் கூற

“வாய்ப்பிருக்கு . அப்படியும் நடந்திருக்கலாம்” ஆமோதிப்பாய் வாகீ பதிலுரைத்தான்.

“ஆனா வெளில இருக்கற சிற்பம் வேறு கதை சொல்லுது. சம்திங் இங்க கண்டிப்பா இருக்கு” மீண்டும் சொன்னான்.

ஆனால் அந்த நீரின் சத்தம் மட்டும் இப்போது அதிகமாகக் கேட்டது.

அந்த இடம் முழுதும் மீண்டும் மெழுவர்த்தியால்  தேட, ஒன்றும் அகப்படவில்லை.

அதுவே சிறிய இடம் அங்கு இனி எதைத் தேடுவது!

“இங்க ஒண்ணுமில்ல போலிருக்கே!” வந்தனா கூற, அவளுக்கு அந்த சிற்பத்தில் இருப்பது தான் இங்கே இருக்கிறது என்ற நம்பிக்கை இல்லை என்பது தெரிந்தது.

இயல் , தன் பார்வையை அந்த இடத்தை சுற்றி சுழலவிட்டாள். ஏதோ அகப்பட்டது.

“ ஹெட்! அந்த கார்னர்ல பாருங்க” இயல் கூற, அனைவரும் அங்கே பார்த்தனர்.

சிறு சூரியஒளி அந்தக் கல் கூரையின் மேலிருந்து உள்ளே வந்துகொண்டிருந்தது. ஒரு சிறு கொடு தான் தெரிந்தது. அதுவும் அந்த சன்னிதியின் ஒரு ஓரத்தில் அந்தத் துவாரம் இருந்தது.

அது தரையில் படும் இடத்தை வாகீ பார்க்க, தரையில் அந்த ஒளி படரவில்லை. உடனே அந்த இடத்திற்கு சென்று பார்க்க, ஆச்சரியம் காத்திருந்தது.

அந்த அறையின் மூலையில் இருக்கும் தரையில் ஒரு ஆள் உள்ளே செல்லும் அளவு துவாரம் இருந்தது. அங்கு தான் அந்த ஒளி பட்டதும்.

“ஹே! இங்க ஒரு பாதாள அறை மாதிரி இருக்கு!” என்றவன் அதில் எட்டிப்பார்க்க, அங்கிருந்து கீழே செல்ல படிக்கட்டுக்கள் இருப்பதைக் கவனித்தான்.

“எல்லாரும் ஒரு கேண்டில் வெச்சுக்கோங்க, என் பின்னாடி வாங்க” உத்தரவிட்டு அந்த படிகளில் இறங்கினான்.

அதே போல அனைவரும் அவனைத் தொடற, அந்தப் படிக்கட்டுக்கள் நீண்டு கொண்டே சென்றது.

“ ஒன்னு கவனிச்சீங்களா! ஹெட் சொன்ன மாதிரி  வெளில அந்த சிற்பத்துல இருந்த மாதிரியே அந்த செவ்வகத்துக்குக் கீழ ஒரு பெரிய வளஞ்ச பாதாள வழி!” இயல் சொல்லவும் தான் வந்தனாவும் ஆகாஷும் உணர,

“ஆமா!” என இருவரும் மனம் கனக்க பார்த்துக் கொண்டனர்.

ஏனோ வாகீ சொன்னதை இவர்கள் நம்பவில்லை என்றதும் இயலுக்கு  உள்ளே சி….று கோபம். இப்போது அவன் யோசித்தது சரியே என்பதை இவர்களுக்குத் தெளிவு படுத்தியதில் சற்று நிம்மதியடைந்தாள்.

முன்னே சென்ற வாகீசன் , வேகமாக படிகளில் இறங்கிக் கொண்டிருந்தான். ஒரு குகை போன்ற அமைப்பில் அந்தப் படிகள் அமைக்கப் பட்டிருந்தது. பாதி படி இறங்கிய நிலையில்  சில்லென்ற குளுமையை உணர ஆரம்பித்தான்.

அந்தப் படிகளின் முடிவில் ஒரு பெரிய சதுரக் கிணறு போன்ற அமைப்பு. கடைசிப் படியில் இப்போது நின்றுகொண்டிருந்தான் வாகீசன். நிச்சயம் இங்கு தான் தண்ணீர் இருக்க வேண்டும். இது ஒரு கிணறு என்று யோசித்தவன்,

தலையை மட்டும் நீட்டி உள்ளே எட்டிப் பார்த்தான்.

 

அங்கே இருப்பதைப் பார்த்து வேகமாகத் துடித்தது அவன் இதயம் . 

எதிர்ப்பார்பிற்கு மாறாக உள்ளே ஒரு பெரிய சிவலிங்கம் வீற்றிருந்தது. அதைச் சுற்றிலும் கீழே தண்ணீர் குளம். ஆனால் கடல் போல கொந்தளித்துக் கொண்டிருந்தது. ஆக்ரோஷமாக!

திடீரென நடுநாயகமாக வீற்றிருக்கும் பரம்பொருளைக் கண்டதும் அவனது கண்ணில் அவனையும் அறியாமல் நீர் பெருகியது. அனைவரும் அங்கே வந்து பார்க்க, பேச்சிழந்து நின்றனர்.

 

திருவாசகம்: 

விலங்கும் மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே

பொருள்:
ஒருமைப்படாமல் சிதறுகின்ற சிந்தனைகளை உடைய மனத்தால், மாசிலாதவனே, உன்னிடம்
கலந்து நிற்கின்ற அன்பு நிறைந்து, அந்நிறைவால் கசிந்தும், உள்ளம் உருகி நிற்கின்ற
நல்ல தன்மை இல்லாத சிறுமையுடையவனாகிய என்க்கும் அருள்செய்து,
இந்த உலகில் உணரத்தக்க வண்ணம் கருணையால் வந்து,
உன்னுடைய நீண்டு அழகிய கழலணிந்த திருவடிகள் காட்டி,
நாயினும் கேவலமான நிலையில் கிடந்த அடியேனுக்குப்
பெற்ற தாயினும் அதிகமான அன்பு உடையவனான தத்துவப் பொருளே !

 

 

 

 

error: Content is protected !!