காலம் யாவும் அன்பே 24

 

வர்மாவைத் தெளிவான முடிவுடன் வரும்படி அனுப்பிவைத்தார் பரஞ்சோதி சித்தர். அவன் தனியாக இருக்கும் பட்சத்தில் எதைப் பற்றியும் யோசிக்காமல் உடனே தன் ஆராய்ச்சிக்காக சென்றிருப்பான். ஆனால் இப்போது தன் உயிருக்கும் மேலான பாகீரதி , தன்னில் பாதியாகி இருப்பவள், அவளை நிர்கதியாக விட்டுச் செல்லும் எண்ணம் துளியும் வரவில்லை.

அவளிடம் சொன்னால் , இதை எப்படி எடுத்துக்கொள்வாளோ என்ற கலக்கம் வேறு வாட்டியது. நிச்சயம் அனுப்பிவைப்பாள்! ஆனால் உள்ளுக்குள் தாளாத வேதனையால் தன்னை வருத்திக் கொண்டு தான் அதைச் செய்வாள். அது நிச்சயம் தெரியும்.

அவளுக்கு அப்படி ஒரு துயரை தெரிந்தே கொடுக்க அவனுக்கு மனம் வரவில்லை. ஆசைக் காதலி, காதல் மனைவி, தன் மொத்த வாழ்வின் ஜீவநாடி அவள் மட்டுமே! அவள் இல்லாமல் தன்னால் ஒரு நாள் கழிக்க முடியுமா என்று சிந்தித்தால் , சிந்தனையிலும் வேதனையே மிஞ்சியது!

இரண்டு நாட்கள் .. நிம்மதியான உறக்கம் இல்லை.. சரியான சாப்பாடு இல்லை.. ரதியைப் பார்க்கும் போதெல்லாம் அடிவயிற்றிலிருந்து கிளம்பும் துக்கப் பந்து.. இப்படி அவன் இருந்ததே இல்லை. ரதியிடம் எதையும் சொல்லாமலும் இருந்ததில்லை.

அவனின் நடவடிக்கை கண்டு அவளே பலமுறை கேட்டும் அவன் பிறகு சொல்வதாக காலம் கடத்திக் கொண்டிருந்தான்.

அவள் கொஞ்சலில் மயங்கிக் கிடந்த போது , ‘காலங்களுக்கிடையில் சிக்கிக் கொண்டால் இந்த இன்பம் இனி கிடைக்குமா ?’ என்ற நினைப்பே உயிரை வதைத்தது.

அவளின் அணைப்பில் இருக்கும்போது , ‘இந்த கதகதப்பு ஆராய்ச்சியின் வெற்றியில் கிடைக்குமா?’ மனம் ஏங்கியது.

அவளா அல்லது ஆராய்ச்சியா என்றபோது தராசுத் தட்டு அவள் புறமே தாழ்ந்தது.

இத்தனை ஆண்டுகள் முயற்சி செய்து இந்த ஆராய்ச்சியின் வெற்றி  கைகூடி வரும் வேளையில் அதனை அவனே தவிர்த்துவிட எண்ணினான்.

அன்றிரவு அவன் வீட்டின் கொல்லைப்புறத்து  கயிற்றுக் கட்டிலில் இரு கைகளையும் தலைக்குப் பின்னால் கொடுத்து படுத்துக்கொண்டு கண்ணுக்குத் தெரியாத அந்த இன்னொரு உலகத்தை இங்கிருந்தே பார்த்துக் கொண்டிருக்க,

கொலுசொலியும் மெட்டியொலியும் அவன் அருகில் கேட்க , தலையை மட்டும் திருப்பிப் பார்த்தான்.

தலைநிறைய மல்லிகை மலரும், அவனை மயக்கும் புன்னகையும் , கையில் பித்தளை தூக்குச் சட்டியுமாய்  அவன் காலடியில் வந்து அமர்ந்தாள் ரதி.

அவளைக் கண்டதும் மனதில் எப்போதும் போல துள்ளல் வர, எழுந்து அமர்ந்தான்.

அவளது மை தீட்டிய கண்களும் மஞ்சள் முகமும் அதற்கு மேலும் அவன் உள்ளத்தில் இருப்பதை மறைத்து வைக்க விடவில்லை.

தன் மனதில் அழுத்திக் கொண்டிருக்கும் பாரத்தை வெளியே தூக்கி எறிந்துவிட முடிவு செய்து ,

“ ரதி!” அவளது தோளை சுற்றி வளைத்து கை வைத்துக் கொண்டான்,

“ அத்தான். முதலில்  சாப்பிடுங்கள், உங்கள் மனதில்  என்ன துன்பம் வேண்டுமானாலும்  இருக்கட்டும், அதை என்னிடம் எப்போது வேண்டுமானாலும் சொல்லுங்கள். அதைப் பற்றி நீங்கள் சிந்திக்கவாவது உடலில் பலம் வேண்டும். இந்தாருங்கள்…” தூக்குச் சட்டியில் கொண்டு வந்த வத்தல் குழம்பு சாதத்தை நல்லெண்ணெய் வாசத்தோடு கையில் எடுத்து அவனுக்கு ஊட்டினாள்.

அவளது உள்ளங்கை வாசமும் , அவளின் சமையல் சுவையும் சேர்ந்து , மனதில் இருக்கும் பாரத்தையும் போக்கியது. தானும் அவளுக்கு ஊட்டிவிட்டு மகிழ,

அந்த நிலவொளியும் , மரங்கள் கொடுத்த காற்றும் , மனையாளும் வர்மாவின் மனதை எளிதாக மாற்றியது.

உண்டு முடித்து கிணற்றடியில் கை கழுவி மீண்டும் அந்த ஒருவர் மட்டுமே படுக்கக் கூடிய கயிற்றுக் கட்டிலுக்கு வந்தனர். அவன் அமர்ந்து கொள்ள அருகில் ரதியும் வந்தமர்ந்தாள்.

“இப்போது சொல்லுங்கள் அத்தான்.” எனவும்,

“ரதி! இதை நீ முழுமையாகக் கேள். நானும் இதற்கு முடிவெடுத்து விட்டேன், அதையும் இறுதியாகச் சொல்கிறேன்.” என்றவன்,

சித்தர் கூறிய அனைத்தையும் , அதில் இருக்கும் சிக்கல்கள் வரை எல்லாம் சொல்லி முடித்தான்.

அனைத்தையும் எந்த சலனமும் இல்லாமல் கேட்டுக் கொண்டாள்.

“ இதில் உங்கள் முடிவு பின்வாங்காமல் இருப்பது என்று நினைக்கிறேன் அத்தான் !” என்று அவள் தெளிவாகக் கூற ,

அவள் வார்த்தைகள் அவனுக்கு அதிர்வைக் கொடுத்தது.

“ ரதி! உன்னை விட்டு நான்…” என்ன கூறுவது என்று வர்மா குழம்பிய சமயம் ,

“ அத்தான், நீங்கள் என்ன சிறு பிள்ளையா? லிங்கத்தை தொலைக்கும் அளவிற்கு நீங்கள் பொறுப்பற்றவர் அல்ல. சென்று உங்கள் பனி முடிந்த பின் பத்திரமாக என்னிடம் வந்து சேருங்கள்.” அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டு அவள் சொல்ல,

‘இத்தனை நாள் நான் பட்ட கவலை எல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல பேசிவிட்டாளே!’ என்று தான் அவனுக்கு நினைக்கத் தோன்றியது.

‘ஆனாலும் அவள் இதிலிருக்கும் சிக்கல் முழுமையாகப் புரியாமல் பேசுகிறாள்’ , அவளது தலையைக் கோதியபடியே கண்மூடியவன்,

“ ரதி! உனக்கு இதில் இருக்கும் சில சிக்கல் புரிகிறதா ?” மெல்லக் கேட்டான்.

“ எனக்கு உங்களைப் புரியும் அத்தான். வேறு எதுவும் புரிய வேண்டாம். உங்களால் என்னைப் பிரிந்திருக்க முடியாது. என்னாலும் இயலாது. ஆனால் இத்தனை நாட்கள் நீங்கள் இரவெல்லாம் விழித்திருந்து கண்ட உங்கள் ஆராய்ச்சிக் கனவு முடியாமல் போக நான் விடமாட்டேன். அதில் நீங்கள் சாதிக்க வேண்டும். உங்களுக்காக எத்தனை யுகங்கள் வேண்டுமானாலும் நான் காத்திருப்பேன் அத்தான்.” நிமிர்ந்து அவனைப் பார்த்துச் சொல்ல,

அவளது கண்கள் அதற்கு மாறாக போகாதே என்றது. வர்மாவிற்குப் புரிந்தது, தனக்காக அவள் சொல்கிறாள் என்று.

“ எனக்கு உன்னை விட்டுப் பிரிந்து சென்று எதையும் ஆராயும் எண்ணம் இல்லை காதலே!” அவள் நெற்றி முட்டி கனமான அந்த நேரத்தை காற்றில் மிதக்கும் இறகு போல மாற்ற முயற்சித்தான்.

அவன் செயலை ரசித்தவள், “ விளையாடாதீர்கள்! நான் மனதார தான் கூறினேன். உங்கள் முயற்சி வெற்றி அடைய வேண்டும். எதிர்கால நமது சந்ததிகள் உங்கள் பெயர் சொல்லி என்றும் பாராட்ட வேண்டும்.” அவனது திடமான மார்பில் கோலமிட்டாள்.

அவளிடம் இனி பேசிப் பலனில்லை என்று உணர்ந்தவன்,

“சரி இப்போது நான் கேட்பதற்கு நீ மறைக்காமல் என் மீது ஆணையாக பதில் சொல்ல வேண்டும். சம்மதமா!” கோலமிட்ட அவளது கையைப் பற்றிக் கொண்டு தன் தோள்மீது மாலையாக அணிந்து கொண்டான்.

அவன் கேட்கப் போவது தெரிந்தும் கூட சரி என்றே சொன்னாள் பெண்ணவள்.

“ என் மீது நம்பிக்கை இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், தப்பித்தவறி அந்த லிங்கம் தொலைந்தால்..அப்போது அங்கே நான் சிக்கிக்கொள்ள , என்னை நினைத்து வருந்தி, அனுப்பியது தவறு என்று உணர்வாயா?” அவன் சொல்லி முடிக்கும் முன்பே தன் மெல்லிதழால் அவனது இதழ்களை சிறை செய்தாள்.

அவளது முத்தத்தின் தீவிரத்திலேயே அந்த நிகழ்வை அவளால் நினைத்தும் பார்க்க முடியவில்லை என்பதை உணர முடிந்தது.

மெல்ல தன் இதழ்களை அவளிடமிருந்து பிரித்தவன்,

“இத்தனை காதலும் பயமும் வைத்துக் கொண்டு ஏன் இப்படிச் சொன்னாய்?” கலங்கிய அவளது கண்களைக் கண்டு  கேட்க,

“ நான் சுயநலமாக யோசித்துவிடக் கூடாது என்று தான் அத்தான். உங்கள் பணி நடக்க வேண்டும். அதற்கு நான் சில தியாகங்கள் செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் செய்வேன். ஆனால் உங்களையே தியாகம் செய்வது தான் வேதனையாக உள்ளது.” கண்களிலிருந்து வழிந்த நீர் அவள் கன்னம் தாண்டும் முன் தன் கைகளால் துடைத்திருந்தான்.

அவளை கட்டி அனைத்துக் கொண்டு அந்தக் கட்டிலில் சரிந்தான்.

“இதற்கு நான் ஒரு நல்ல தீர்வு காண்பேன் காதலே! உன்னை வருத்தி எதையும் செய்ய மாட்டேன். அதே நேரம் ஆராய்ச்சியும் உனக்காக செய்து முடிக்கிறேன். நீ கவலைப் படாதே!” அதற்கு மேல் அதைப் பற்றிப் பேசி அவளை வருத்தாமல் , ஆறுதலாக அவளைத் தழுவிக் கொண்டு படுத்திருந்தான்.

அவன் சொன்ன ஆறுதல் சற்று தெம்பளிக்க அவன் மீதே உறங்கிப் போனாள் பேதை.

இதற்கு என்ன வழி என்று உறங்காமல் அவளைத் தாங்கியபடியே விழித்திருந்தான் வர்மா. ஆனால் ஆராய்ச்சியை விட இருந்தவனை அந்த எண்ணத்தையே கைவிடும் படி செய்திருந்தாள் ரதி.

இப்போது அதற்காக முன்னெச்சரிக்கையுடன் சில திட்டங்களைத் தீட்டினான் .

இதைப் பற்றி சேனாவிடமும் கூற, அவனும் உதவுவதாக வாக்களித்தான்.

நாட்கள் சென்று கொண்டிருந்தன. வர்மா உடனடியாக எதையும் செய்ய விரும்பவில்லை. சற்று பொறுமையாகவே இருந்தான்.

சேனா அதற்குள் சித்தரிடம் சீடனாக அமர்ந்திருந்தான். ஆசைகள் எதுவுமில்லாத அவனுக்கு அனைத்துமே வெகு சீக்கிரம் வசமானது.

ஒரு நாள் அவனாகவே பரஞ்சோதி சித்தரிடம் ஒன்றைக் கேட்டான்.

“ ஐயா! நான் ஒரு சிரமமான விஷயம் ஒன்றை உங்களிடம் கேட்க விழைகிறேன்!” பீடிகையுடன் ஆரம்பித்தான் சேனா.

சித்தரோ அவன் மனதில் இருப்பதை எளிதாகவே உணர்ந்தார்.

“ சேனா! உன் எண்ணம் நான் அறிவேன். அது மிகவும் சூட்சுமம் நிறைந்தது.” என எச்சரிக்கை செய்ய,

“தெரியும் ஐயா. நான் இருக்கும் வரை அதை வெளியில் சொல்லாமல் பாதுகாப்பேன். என் நண்பனுக்காக எதையும் செய்யவும் தயங்க மாட்டேன்” உறுதியாக அவன் சொன்ன பின்பு அவனுக்கு அதை கற்றுத் தந்தார்.

மிகவும் ரகசியமாக அவர் சொன்னதை , வர்மா விடம் செயல் படுத்த ஏற்பாடு செய்தான் சேனா.

உடனே அவன் இல்லத்திற்குச் சென்றவன் , இருவரையும் அழைத்தான். அவர்கள் வந்ததும் , அவசரமாக

“ இந்திரா, நீயும் என் சகோதரியும் உங்கள் ரத்தத்தை சிறிதளவு என்னிடம் கொடுக்க வேண்டும்.” பரபரப்பாகக் கூற,

வர்மாவிற்கு அவன் செய்யப் போவது தான் கேட்ட விஷயம் தான் என்று தெரிந்தது.

அடுத்தநொடி சேனா கொண்டு வந்திருந்த சிறு சிறு மண்பாண்டத்தில் இருவரும் தங்கள் கையைக் கிழித்து சிறிது ரத்தத்தை அதில் நிரப்பினர்.

மனநிறைவுடன் சென்றான் சேனா. சித்தர் சொன்ன முறைப் படி அதைப் பதப்படுத்தும் செயலில் இறங்கினான்.

ரதி தன் அத்தானிடம் அதற்கு விளக்கம் கேட்டாள். சிரித்த வர்மா,

“ரதி! இதை ஏற்கனவே ஒருவர் செய்த முறை தான். அதை நானும் இப்போது செய்கிறேன்.” ஆயாசமாக ஊஞ்சலில் அமர்ந்து சொல்ல,

அவனையே கவனித்தாள்.

“ என்னைப் போன்ற ஒரு வானியல் நிபுணன் ஒருவன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியை ஒரு விண்கல் தாக்க வரப் போகிறது என்றும், அப்படி அது நேர்ந்தால் இந்த உலகில் பல பகுதி அழிந்துவிடும் , நீருக்குள் மூழ்கிவிடும் என்றும், அனைத்து உயிரினமும் அழிந்துவிடும் என கணித்துக் கூறினான்.

அதற்குள் அப்போதிருந்த அரசன் , ரிஷிகளின் உதவியால்  இந்த பூமியை மீண்டும் பழைய உயிரினங்களுடன் தாவரங்களுடன் உருவாக்க எண்ணி, ஒவ்வொரு உயிரினத்தில் இருந்தும் அதனுடைய உயிரணுக்களை சேகரித்துக் கொண்டனர். அதே போல தாவரகளின் விதைகள் மற்றும் மருத்துவ குணநலன்கள் உள்ள விதைகள் அனைத்தையும் பத்திரப் படுத்தி வைத்ததுக் கொண்டனர்.

பிரளயம் வந்து பல உயிர்கள் அழியும் முன் அவர்கள் கைலாய மலையின் உச்சியில் தஞ்சம் புக, பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இங்கு வந்து புது உலகில் அனைத்தையும் மீண்டும் உருவாகினர்.

அதை செய்ய வைத்த அரசன் பெயர் மனு. மீண்டும் ஆணையும் பெண்ணையும் அவன் உருவாக்கியதால் அவனிலிருந்து நமக்கு (மனு)ஷன் என்றும் (மனு)ஷி என்றும் பெயர் வந்தது.

இப்போது இருக்கும் தாவரங்கள் , உயிர்கள் என அனைத்தும் அவன் புத்துயிர் அளித்ததே! உயிரணுக்களை மட்டும் வைத்தே அனைத்தையும் மீண்டும் உயிர் பெறச் செய்தனர்.

அதே போல இப்போது நமது உயிரணுக்களை சேகரித்து வைக்கச் சொல்லி இருக்கிறேன்.”  விஷமமாக அவளைப் பார்க்க,

ஆச்சரியத்தில் அவளது கண்கள் விரிந்தது.

“அத்தான்….அப்போ நாம மீண்டும் பிறப்போமா!” மயக்கம் வராத குறையாக இருந்தது அவளுக்கு.

“ காலம் யாவும் நாம் சேர்ந்தே இருப்போம் அன்பே!” அவளை தன்னோடு அணைத்தபடி வர்மா சிரித்தான்.

 

 

திருநீற்றுப் பதிகம்:

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே

திருநீறு, முக்தி இன்பத்தை தருவது. முனிவர் பெருமக்கள் அணியும் பெருமை உடையது. எக்காலத்திலும்மேலானதாக விளங்கி நலம் தருவது. இத்தகைய திருநீற்றின் மகிமை அறிந்து, சிவனடியார்கள் போற்றுகின்றனர்.திருநீறானது மன்னுயிர்களுக்கு, சிவபக்தியைத் தருவதாகும். அதனைப் போற்றி வாழ்த்த இனிமை நல்கும். எட்டு வகையான சித்திகளைத் தரவல்லது. அது ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.

 

error: Content is protected !!