KYA 29

KYA 29

காலம் யாவும் அன்பே 29

 

வர்மா ரதியை நினைத்து முதலில் திருவாசகம் சொல்ல ஆரம்பித்தவன், போகப் போக அந்த பாடலில் மூழ்கி பக்தியில் திளைத்தான்.

சேனா நண்பனின் இந்த தீவிரத்தை கண்டு அசந்தே போனான். அவனது உயிரான ரதி கிடைக்கவேண்டும். அதே சமயம், அவனுடைய கண்டுபிடிப்புகளும் வீணாகக் கூடாது என்று எண்ணினான்.

இரவு பகல் பாராமல் திருவாசகம் படித்த வர்மாவை  சற்று ஓய்வெடுக்குமாறு கூறி அழைத்தான் சேனா.

நண்பனின் பேச்சை தட்டாமல் வர்மா அந்த சுரங்கத்திலிருந்து வெளியே வந்தான்.

“ என்ன சேனா? எதற்கு இப்போது அழைத்தாய்!?” வர்மா கேட்க,

அவன் முகம் மட்டும் ஒளிர்ந்ததே தவிர, அவனது உடல் மிகவும் தளர்ந்து போய் காணப்பட்டது. சரியான உணவு இல்லாமல் அவன்  இறைவனை தியானிப்பது நன்றாகவே தெரிய,

“ நண்பா, நீ செய்யும் பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உண்டு, ஆனால் அதற்கு முன் நீ இன்னொரு வேலை செய்ய வேண்டும்.” சேனா அவனைத் தேற்ற,

“ சொல் சேனா! இன்னும் என்ன செய்ய வேண்டும்?”

“ நீ கண்டுபிடித்த அனைத்தும் , பிற்காலத்திலும் உதவ வேண்டும். அதற்காக நீ அதை பாதுகாத்து வைக்க வேண்டாமா?” சேனா தொளைநோக்குப் பார்வையோடு பேசினான்.

நண்பன் சொன்ன பிற்காலம் எது என்று தெரியாமல் வர்மாவும் ஒத்துக்கொண்டான்.

“ நண்பா, எனக்கு ஓலைச்சுவடிகள் வேண்டுமே! இங்கு எங்கேயும் ஓலைகள் இருப்பதாகத் தெரியவில்லை. இங்குள்ள மரங்களும் சிறிய இலைகளே கொண்டுள்ளது.  பதப்படுத்தி உபயோகம் செய்ய நாள் அதிகம் பிடிக்கும். என்ன செய்வது?” யோசனையோடு இருக்க,

“ ஓலைகள் வேண்டாம் நண்பா. காலப்போக்கில் அழியவும் வாய்ப்பிருக்கும். அதனால் உனக்கு நான் தகடுகள் எடுத்து வந்தேன். கெட்டவர்கள் கையில் கிடைத்தாலும் அவர்களுக்கு புரியாத அளவு  குறித்து வை . எழுதுவதற்கு  இங்குள்ள உளியால் எழுதி விடு.” அவன் கையோடு கொண்டு வந்திருந்த சில தகடுகளை அவனிடம் கொடுக்க,

அதை பெற்றுக்கொண்டு,  தன் கண்டு பிடிப்புகளை அதில் பொறிக்க ஆரம்பித்தான்.

அதை பத்திரப் படுத்த சேனா தன் சிற்பக் கலையைப் பயன்படுத்தி ஒரு அழகிய பெட்டியைச் செய்தான்.

வர்மா தன் கண்டுபிடிப்பு வானமண்டலத்தைச் சார்ந்தது என்பதற்காக நட்ச்சத்திரக் கூட்டத்தையும், பலவிதமான சூரியக் குடும்பத்தையும் அதில் வரைந்தான்.

அவற்றை அவன் சாதரணமாக வரைந்து வைக்காமல், தன் கையில் இருந்த ஐந்து கற்களின் மூலம் மட்டுமே அவை தெளிவாகத் தெரியும்படி வரைந்து வைத்தான்.

அந்தக் கற்கள் உள்ளிருப்பதை வேறு விதமாகக் காட்டும் கண்ணாடி போன்ற கற்கள். அதனால் அவற்றையே உபயோகப் படுத்திக் கொண்டான் வர்மா..

இது வானமண்டலத்தில் இருப்பதைப் பற்றி மட்டும் தான்!

  அடுத்த தகடில் கோவிலைப் பற்றியும் அங்கே தான்தோன்றியாக வந்த சிவலிங்கம், மாயக் கதவு பற்றி குறித்து வைக்க முடிவு செய்தான்.

அதற்குள் சேனா தான் செய்த பெட்டியை எடுத்து வந்து வர்மாவிடம் கொடுக்க, அதன் கலைநயத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தான்.

“ நண்பா, உன் குறிப்புகள் அடங்கிய தகடுகளை இதில் பத்திரப் படுத்தி வை” என்று அவனிடம் கொடுக்க,

அப்போதே அதில் முதலில் செய்த தகடினையும், அந்த ஐந்து கற்களையும் போட்டு வைத்தான்.

மகிழ்ந்த சேனா, “ நாளை மற்ற குறிப்புகளை தகடில் செய்துவிட்டு நீ மீண்டும் அந்தச் சுரங்கத்தில் திருவாசகம் சொல்வாயாக!”

மனம் உறுத்த அவனிடம் கூறினான்.

வர்மாவும் சிரித்து விட்டு அன்றிரவு உறங்கச் சென்றான்.

சேனாவிற்குத் தெரிந்தது. விரைவில் நண்பன் அந்த மாயக் கதவிற்குள் மீண்டும் செல்வான் என்று. சென்றால் எப்போது திரும்புவான் என்று அவனுக்கு அனுமானம் இல்லை.

அதற்காகத் தான் அவசரமாக அனைத்தையும் தகடில் பதிய வைத்தான். நாளை எப்படியும் மீதம் உள்ள குறிப்புகளையும் செய்து விட்டால் பிறகு கவலை இல்லை. பின்னாளில் இது அவனுக்கே உதவும் என்று தான் யோசித்து வைத்திருந்தான்.

ஆனால் விதி வேறு விதமாக இருந்தது. வர்மா ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது , அந்தச் சுரங்கத்தில் மாயக் கதவு இப்போது உருவாகி அவனை அழைப்பது போலக் கனவு கண்டான்.

கதவிற்குப் பின்னால் ரதி நின்றுகொண்டு , “அத்தான்! என்னை அழைத்துச் செல்லுங்கள், தனியாக நிற்கிறேன்.” என கதறுகிறாள்.

மனம் பதைபதைக்க அந்த அர்த்த ஜாமத்தில் விழித்துக் கொண்டான் வர்மா.

சிறு விளக்கின் ஒளியில்  இன்னும் அந்த குடிசையில் இருப்பது தெரிந்தது. சேனா ஒரு மூலையில் கையை தலையணையாக வைத்துப் படுத்திருந்தான்.

கனவு என்று தெரிந்தாலும், வர்மாவால் அங்கே நிற்க முடியவில்லை. ரதியை அப்போதே காண வேண்டும் என்று தோன்ற, தன்னிடம் இருந்த அந்த ஐந்து கற்களை மட்டும் எடுத்துக் கொண்டு மீண்டும் அங்கே செல்ல நினைத்தான்.

அவசரமாகத் தேட, பெட்டி கண்ணில் பட்டு, அத்தோடு எடுத்துக்கொண்டு சுரங்கத்திற்கு சென்றான்.

எப்போதும் மாயக் கதவு தோன்றும் சமயம் , நீரில் மூழ்குவது  போல, “களுக் புளுக்” என்ற ஒலி கேட்கும்.

சுரங்கத்தின் மேலே நின்று கொண்டு பார்க்க, வர்மாவின் காதுகளில் இந்தச் சத்தம் கேட்க,

“கதவு தோன்றிவிட்டதா!” என்று பதட்டமாக தனக்குத் தானே சொல்லிக் கொண்டு, அவசரமாக உள்ளே இறங்கினான்.

அவனை ஏமாற்றாமல் அங்கே மாயக் கதவு உருவாகி நின்றது. இது ஒன்றே அவனுக்குப் போதும். கனவில் வந்தது போல,  நிச்சயம் ரதி  கதவின் பின்னால் தனக்காகக் காத்திருப்பாள் என்று உறுதியாக நம்பினான்.

அவசரமாக அந்த ஸ்படிக லிங்கத்தை சாஷ்டாங்கமாக வணங்கி விட்டு , அதை எடுத்துக் கொண்டான்.

அவனது நாக்கு  திருவாசகத்தை  அவனையும் அறியாமல்  சொல்லத் தொடங்கியது.

சிவலிங்கத்தை நெஞ்சோடு அணைத்தபடி, கதவிற்குள் நுழைந்திருந்தான்…

ஆனால் சேனா கொடுத்த அந்த பெட்டியை அவசரத்தில் அங்கேயே விட்டுவிட்டான். ஐந்து கற்கள் மற்றும் அந்த தகடோடு பெட்டி அந்தச் சுரங்கத்திலேயே கிடந்தது.

மனம் துடிக்க, தூக்கத்திலிருந்து விழித்தான் சேனா. அவன் நினைத்தது போலவே வீட்டில் வர்மா இல்லை. அவசரமாக ஓடிச் சென்று சுரங்கத்திற்குள் எட்டிப் பார்க்க,

தான் செய்து கொடுத்த பெட்டி மட்டுமே கிடந்தது. நண்பனைக் காணவில்லை.

சேனாவிற்கு இப்படி நடக்கும் என்பது தெரியும். ஆனாலும் இன்றே நடக்கும் என சிறிதும் எதிர்ப்பார்க்க வில்லை.

அவனைக் காப்பாற்ற தேவையான வழிகளை தகடில் குறிப்பிடச் சொன்ன போதும், அதை வர்மா நிறைவாகச் செய்வதற்கு முன்பே அவன் ரதியைச் தேடிச் சென்றுவிட்டது வருத்தமே!

‘இனி உயிருக்கு உயிரான தனது இந்திரவர்மனை எப்போது காண்பேன்!’ தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.

என்ன தான் உணர்வுகளைக் கட்டுப்படுத்த கற்றிருந்தாலும், நண்பனை மட்டும் அவனால் விட முடியவில்லை.

அப்படி அவன் சோர்ந்து அமர்ந்திருந்தது வெகு சில நேரமே! அடுத்து தான் செய்யவேண்டிய வேளைகளில் அவன் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

இரண்டாவது சிவலிங்கம் தோன்றுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது.

ஆனால் அதை இங்குள்ளவர்கள் பார்த்துவிட்டால், அனைவரும் ஈசனுக்குக் கிடைக்கும் அமைதியை கெடுத்துவிடக் கூடும் என்று யோசித்து,

முதலில் அந்தச் சுரங்கத்திற்கு மேலே ஒரு கோவில் அமைக்க ஏற்பாடு செய்தான்.

அங்குள்ள மக்களின் உதவியால் கோவில் கட்ட முடிவு செய்து, அவர்களிடம் , “இந்த இடத்தில் நாம் ஒரு கோயில் கட்டவேண்டும்” என்றான்.

அவர்கள் அவன் சொல்வதை விடுத்து , ‘ வர்மா எங்கே’ என்று கேட்டு துளைக்க ஆரம்பித்தனர்.

அவன் சென்ற விதத்தையோ சென்ற இடத்தையோ  இவர்களிடம் கூற இயலாது. அதனால் வேறு வழியின்றி மனதைக் கல்லாக்கிக் கொண்டு  , “அவன் இந்த இடத்தில் நேற்று தியானம் செய்யும் போது இறந்துவிட்டான். அவனை நான் அங்கேயே புதைத்து விட்டேன். அதனால் இதற்கு மேல்  ஒரு கோயில் அமைத்து விடலாம்”  என அவர்களிடம் கேட்க,

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“இறந்து போன ஒருவரின் சமாதியின் மேல் கோவில் கட்டுவதா..?”

“ எங்கள் கூட்டத்தில் யாராவது இறந்தால் , வெறும் மண்ணால் மூடித்தான் பழக்கம்..”

“ கோவில் கட்டக் கூடாது.. வெறும் சமாதி எழுப்புங்கள்..”

அங்கிருந்தவர்கள் பலவாறு தங்களுக்குள்ளே விவாதம் செய்தனர்.

“ அப்படியே இருந்தாலும் , அவன் நம் இனத்தவனும் இல்லை. அதனால் சமாதியும் வேண்டாம். சேனா சொன்னபடி கோவில் என்பது கடவுள் இருக்கும் இடம். ஆகையால் அதுவும் வேண்டாம்…” என ஒருவன் சொல்ல,

“வர்மா நமக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறான். அதனால் நிச்சயம் அவனுக்காக எதாவது செய்தே ஆகா வேணும்” மற்றொருவன் கூற

இவர்களிடம் எதுவும் பேசாமல் சேனா அமைதி காத்தான். அவர்களே தீர்மானிக்கட்டும்  என விட்டுவிட்டான்.

கடைசியில் ஒரு முடிவிற்கு வந்தனர். அது , அந்தச் சுரங்கத்தின் மேலே ஒரு பிரமிட் கட்டுவது என்று.

 

அங்கிருந்த மக்களைப் பொறுத்தவரை பிரமிட் அவர்களது நாகரீகம் இல்லை. எகிப்தியகர்ளின் நாகரீகம்.  ராணி ராஜாக்கள் இறந்த பின்னர் அவர்களை அங்கே பதப் படுத்தி வைப்பார்கள் என்பது வரை மட்டுமே தெரியும். வர்மாவிற்கும் ஒரு ராஜ மரியாதை அளிக்க, இந்த யோசனையை அமுல்படுத்த முடிவானது.

அதைக் கேட்டவுடன் சேனா அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. பிரமிட் சாதாரண விஷயமல்ல என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். தமிழர்கள் தான் பிரமிட்களின் முன்னோடி.

  மாயன் இனத்தவர்கள் உருவாக்கியது தான் இந்த பிரமிட்கள்.  கடல் கோள்களின் சீற்றத்தால் சில தமிழர்கள் நாடு கடந்து சென்று வாழ ஆரம்பித்தனர். புலம் பெயர்ந்த மக்கள் தங்களுக்கு என்று ஓர் இனம் அமைத்துக் கொண்டு மாயன் என்று சொல்லிக்கொண்டு வாழ்ந்தனர்.  அவர்களோடு சேர ஆரம்பித்த பிறகு,

எகிப்த்தியர்கள் சில முறைகளை தனதாக்கிக் கொண்டனர். அதில் பிரமிட் என்பதும் ஒன்று.

பிரமிட் ஒரு சாதாரண விஷயம் அல்ல. அதில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கிறது.

தமிழர்கள் வானியலில் எப்போதும் சிறந்து விளங்கியவர்கள். சூரியனைப் பார்த்து மணி சொல்வது. நிலவைப் பார்த்து கிரகணத்தை கணிப்பது. நட்ச்சத்திரங்களின் சேர்க்கையை வைத்து ஜாதகம் அமைத்து ஒருவரின் தலையெழுத்தையே சொல்வது என்று அவர்கள் அறிவில் சிறந்து விளங்கியவர்கள்.

அப்படிப் பட்டவர்கள் மாயன் இனத்தில் இருக்கத் தான் செய்தார்கள். அவர்கள் அமைத்தது தான் முதல் பிரமிட். அவர்கள் கடல் சீற்றத்தால் இடம் பெயர்ந்ததால், அவர்களுடைய பிரமிட்கள் அனைத்தும் மீன ராசிக்கு உரிய நட்ச்சத்திரக் கூட்டத்தை குறிப்பதாகவே இருந்து வந்தது. பிரமிடின் உச்சி அந்த நட்சத்திரக் கூட்டத்தை சுட்டிக் காட்டி இருக்கும்.

அதே போல, எகிப்த்தியர்கள் பிரமிட்கள் அனைத்தும் ஓரியன் நட்ச்சத்திரத்தைக் குறிப்பவை.

இந்த ஓரியன் நட்ச்சத்திரக் கூட்டத்தில் உள்ள நட்ச்சத்திரங்களை சேர்த்தால் அவை லிங்க வடிவம் கொள்ளும். திருவாதிரை நட்ச்சத்திரத்தின் குறியீடு .

அதைத் தான் நம் முன்னோர்கள் அந்த கூட்டணியை ஆருத்ரா தரிசனம் என்றனர்.

ஓரியன் என்னும் ஆங்கில வார்த்தை தமிழில் ஆருத்த்ரா என்பதிலிருந்து வந்ததே!

இவர்கள் அமைக்கப் போகும் பிரமிடும் அதைச் சார்ந்தது தான் என்பதை சேனா அறிந்து கொண்டான். சரியாக அன்றிலிருந்து அந்த பிரமிட் கட்டி முடிக்கப் போகும் நாள் ஆருத்தரா தரிசனம். அன்று தான் அந்தச் சுரங்கத்தில் லிங்கம் குடியேறப் போகும் நாள். முன்பே கணித்து வைத்தான் சேனா.

அதனால் நடப்பதை பேசாமல் வேடிக்கை மட்டுமே பார்த்தான்.

அவர்கள் கற்களைக் கொண்டு வந்து சிறிய அளவிலான பிரமிட்டை கட்ட ஆரம்பித்தனர்.

ஆரம்பித்த நாள் அன்று இரவு, சேனா அந்த கற்கள் அடங்கிய பெட்டிய எடுத்து பத்திரப் படுத்திக் கொண்டான்.

அவர்கள் சுரங்கத்தை முழுதாக அடைக்காமல் , பள்ளத்தொடு விட்டு , மேலே பெரிய அளவிலான கல்லை வைத்து அடைத்து அதன் மேல் பிரமிடை அமைத்தனர்.

முதலில் ஒன்று பின் இரண்டு அதற்குப் பின் மூன்று என பிரமிட்கள் உருவானது. அவற்றின் முனை நேரே அந்த நட்ச்சத்திரத்தை குறித்தது.

ஒவ்வொரு பிரமிட் அமைக்கும் போதும் அங்கே சேனா சென்றான். இது தமிழனுக்குச் சொந்தம் என்னும் வகையில் அங்கே உயிர் எழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் வைத்து அந்தச் சுவற்றில் குறியீடுகளை அமைத்தான்.

பாதுகாக்கப் பட வேண்டிய அந்தப் பெட்டியை மூன்றாவது பிரமிடில் சேனா வைத்து விட,  யாரும் திறக்க முடியாத படி பிரமிடை அடைத்துவிட்டனர். அவர்களுக்கு அந்தப் பெட்டி இருப்பதே தெரியவில்லை.  இப்போது அந்தப் பெட்டியை எடுக்க அதிக சிரமம் மேற்கொள்ள வேண்டும்.

மந்திரக் கட்டு போட்டு வைத்தான் சேனா. அதாவது இதை வர்மா ஒருவனால் மட்டுமே திறக்க முடியும் என்பதான மாயக் கட்டு.

இரண்டாம் பிரமிட் முடிந்த பிறகு அங்கே காற்றுக்குரிய சக்தியும் நீரின் குளுமையும் நிறைத்து வைத்தான். அனைத்தையும் அங்கே லிங்கம் தோன்றியபிறகு அது ஈர்த்துக் கொள்ளும். வேறு யாரவது உள்ளே சென்றால் அங்கே மூச்சுத் திணறல் ஏற்படும்.  அந்த காற்றும் நீரும் சேர்வதால் அந்த இடத்தில் ஒரு அமானுஷ்ய சத்தம் உண்டாகும்.

அவற்றால் மக்கள் நிச்சயம் பயந்து உள்ளே செல்ல மாட்டார்கள். ஈசன் அமைதி பெறுவார் என்பதற்காக ஏற்பாடு செய்தான்.

மூன்றாவது பிரமிட் அமைத்து அதனை முழுமை அடையச் செய்தனர்.

என்று வர்மா இங்கு வந்தாலும் அவனது கால் பட்டால் இங்குள்ள சக்தி அவனுக்குள் சென்று அவனுக்கு அவன் கண்டுபிடிப்புகளை மீண்டும் பெற உதவும் என்பது தான் சேனா பிரமிட் மூலம் போட்டு வைத்து முடிச்சு.

பிரமிட் கட்டி முடித்த இரவு , ஓரியன் கூட்டணி ஒன்று கூட, ஆருத்த்ரா தரிசனம் பிரமிட் உச்சி மூலம் ஈர்க்கப் பட, சுரங்கத்தில் ஈசன் தோன்றினார்.

“ ஓம் நம சிவாய……..” ஞானக் கண்ணால் சேனா தரிசனம் பெற்று வெளியே நின்று வணங்கினான்.

மற்ற அனைவரும் வர்மாவின் ஆத்மா சாந்தி அடைய அங்கே வேண்டிக்கொண்டனர்.

வந்த வேலை முடிந்தது. சேனா தன் ஊருக்குப் புறப்பட்டான். இனி மூன்றாவது லிங்கம் தோன்ற வழி வர்மா திரும்பி வந்த பிறகு தான் கிட்டும்.. அதற்காக காத்திருந்தான் சேனா.

***

“ ஹெட் கண் முழிச்சுட்டாரு ஆகாஷ்….” வந்தனா ஓடிவந்தாள்.

“ இயல் எப்படி இருக்கா?” பதட்டமாக ஆகாஷ் கேட்க,

“ இல்ல, அவ இன்னும் மயக்கமா  தான் இருக்கா…”

வாகீயையும் இயலையும் நீருக்கு அடியில் சென்று தூக்கி வாந்திருந்தான் ஆகாஷ்.

அந்த வயதான சித்தராக வந்த நமது சேனா சென்ற பிறகு, அப்படியே அவர்களை விட்டுச் செல்ல மனமின்றி,

தன் இடுப்பில் கயிறைக் கட்டிக்கொண்டு உள்ளே குதித்து ஒவ்வொருவராக தூக்கி வந்திருந்தான் ஆகாஷ்.

மிகவும் சிரமப் பட்டு முதுகில் சுமந்து மேலே கொண்டு வந்தவன், அவர்களை தாங்கள் தங்கி இருந்த அந்த வீட்டிற்கு வாகியின் ஜீப்பில் அழைத்து வந்தான்.

வந்தவர்கள், கண் விழிக்கவில்லை. ஒரு நாள்.. ஒரே நாள் தான் ஆகியிருந்தது. வாகி இப்போது கண் விழுத்து விட்டான்.

நடந்த அனைத்தும் அவர்களின் மனக் கண்ணில் படமாக ஓடி முடிந்திருந்தது.

 

 

 

 

 

 

 

error: Content is protected !!