KYA28
KYA28
காலம் யாவும் அன்பே 28
மனைவியின் அருகாமையில் மகிழ்ந்தவன், நண்பனின் வயதையும் மனதில் கொண்டு, விரைந்து தன் கண்டுபிடிப்புகளை சேகரித்து , சொந்த உலகம் போய்ச் சேர எண்ணம் கொண்டான்.
இப்போது அவனுக்கு பல விஷயங்கள் தெளிவாகப் புரிந்தது.
அவன் கண்டுபிடித்த முதலாம் பகுதி, இந்தப் பிரபஞ்சத்தில் பல்வேறு உலகங்கள் உள்ளது. அதிலும் அங்கிருக்கும் மக்கள் நம் உலகத்தில் உள்ளவர்களைப் போலவே இருப்பார்கள் என்பது தான்.
இரண்டாவது, நான்காம் பரிமாணம் என்ற ஒன்று இருப்பதை உறுதிப் படுத்திக் கொண்டான். நான்கு மட்டுமல்ல, ஐந்து ஆறு என பல்வேறு பரிமாணங்கள் உள்ளதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
ஆனால் அதை எல்லாம் மூன்றாவது பரிமாணமாகிய நம் உலகத்தில் இருந்துகொண்டு , கற்றுக்கொள்ளுதல் அல்லது புரிந்து கொள்ளுதல் என்பது மிகவும் சிரமமே!
வர்மா தன் உலகில் ஆராய்ச்சி செய்த போது, அவனுடைய உலகம் அல்லாது அதே போன்று இன்னொரு உலகம் இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதை நட்சத்திர மண்டலத்தின் கூட்டணியை வைத்துத் தான் ஓரளவு தெரிந்துகொண்டான். ஆனால் காலப் பயணம் செய்து வந்தபிறகு, ஒன்றல்ல ஓராயிரம் உள்ளது தெளிவானது.
அதே போலத்தான் பல விஷயங்கள் நாம் சிறிது என்று நினைக்கும் போது அதன் பின்னணி மிகப் பெரியதாக இருக்கலாம்.
அந்த நான்காம் பரிமாணத்தில் தான் இப்போதும் இருந்தார்கள். அவர்கள் அங்கே கண்ட காட்சி , சொல்லிப் புரியவைக்க முடியாத அளவு பிரமிப்பை ஏற்படுத்தியது.
அங்கே அவர்கள் இந்த உலகத்தில் இது வரை நடந்த நிகச்சிகளைக் கண்டனர். நடந்து கொண்டிருக்கும் நிகச்சிகளைக் கண்டனர். நடக்கப் போகும் நிகழ்வுகளைக் காண முற்படும் போது,
அவர்களுக்கு முன் மீண்டும் அந்த மாயக் கதவு தோன்றி அவர்களை அழைத்தது.
இதுவே விதி. என்ன தான் அறிவியல் அறிவியல் என்று வர்மா பேசிக்கொண்டாலும் , நம்ம மீறிய சக்தி உள்ளதை ஏற்றுக்கொண்டே தீரவேண்டும்.
அது அவர்களை எதிர்காலத்தை பார்க்க விடாமல் தடுத்தது.
அப்படி அவன் கண்டிருந்தால் வரப்போகும் இன்னலை அறவே தவிர்த்திருக்கலாம்.
“அத்தான்! வாருங்கள் போகலாம். அநேகமாக இம்முறை நம் உலகிற்குத் தான் செல்வோம்.” அவனுக்கு முன்னால் அங்கே நின்று கொண்டு ரதி கூற,
“ ம்ம் நிச்சயம் ரதி! காலங்கள் பல சென்றுவிட்டது. இனியும் தாமதம் வேண்டாம்.” கிளம்பத் தயாரானான்.
“ஆனால்….” அவன் ஏதோ தயங்க,
“என்ன அத்தான்?” மாயக் கதவின் அருகில் நின்று அவனைத் திரும்பிப்பார்த்தாள். வர்மா சிறிது இடைவெளி விட்டு நின்றிருந்தான்.
“நமது எதிர்காலம் பார்த்துவிட்டுச் செல்லலாமா என நினைத்தேன். நீ என்ன சொல்கிறாய்!” அவளை கை நீட்டி இழுக்க நினைத்து கை கொடுத்தவன்,
அவனிடமிருந்து எப்போதும் போல விளையாட நினைத்து, ஒரு அடி பின்னே வைத்தாள் ரதி!
அவளின் வாழ்வே மாறிய தருணம் அது. மாயக் கதவினுள் கால் பதித்திருந்தாள்.
“ரதீதீ…….!” அவன் இரண்டடி முன்னே எடுத்து வைப்பதற்குள் அவள் கதவினுள் அடித்த சூறாவளிக் காற்றால் இழுத்துச் செல்லப் பட்டிருந்தாள்.
ஒரு நொடி கலங்கினாலும், அடுத்த நொடி தாவி உள்ளே குதித்துவிட்டான் வர்மா.
இருவரும் தனித்தனியே சென்று கொண்டிருந்தனர். ‘அவளிடம் சிவலிங்கம் வேறு இல்லை. என்ன நடக்குமோ எங்கு சென்று விழுவாளோ!’ கலங்கிப் போனான் வர்மா…
அடித்துச் செல்லும் காற்றிலும் அவனுக்கு அவள் கவலையே முன்னே நின்றது. “கடவுளே! எப்படியாவது அவளை எங்கள் உலகத்திலேயே சேர்த்துவிடு” காற்றில் கத்திக் கொண்டிருந்தான்.
அவள் இல்லாமல் ஒவ்வொரு நொடி யுகமாகக் கரைந்தது. அவளைக் காணும் வரை அவன் உயிர் அவனிடம் இல்லை.
அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பயணம் முடிந்து ஒரு வழியாக சொந்த உலகத்தின் மடியில் விழுந்தான். கண்கள் முதலில் தேடியது அவனுடைய ரதியைத் தான்.
சிவலிங்கம் இல்லாமல் பயணம் செய்தால் எங்கு வேண்டுமானாலும் தொலைந்து விடலாம் என்று பரஞ்சோதி சித்தர் சொன்னபோது கூட அவனுக்கு ரதியை விட்டுப் பிரியும் பயம் தான் இருந்ததே தவிர தொலைந்து விடும் பயம் இல்லை.
இப்போது தன் காதலியே தொலைந்தது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
விழுந்த அந்த இடம், உலகின் எந்தப் பகுதி என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் விழுந்த மயக்கம் தெளியும் முன்பே ரதியைத் தேடி அங்கும் இங்கும் அலைந்தான்.
அவனுக்குத் தெரிந்தவரை அங்கு யாருமே இல்லை. வெறும் பொட்டல் காடு. ஆங்காங்கே ஒன்றிரண்டு மரங்கள் மட்டுமே இருக்க, வெறும் சமநிலமாக இருந்தது.
இதில் எங்கிருந்து அவளைத் தேடுவது! துக்கம் கண்ணீராக வெளிப்பட, கண்ணை நிரப்பி எதிரே உள்ள பாதையை மறைத்தது.
நீண்ட நேரம் அலைந்து பின் ஒரு மரத்தின் அடியில் உயிரற்று அமர்ந்தான்.
முதலில் எதையும் யோசிக்கும் நிலையில் அவன் இல்லை. நேரம் செல்லச் செல்ல, சித்தர் சொன்னது அவனுக்கு நினைவிற்கு வந்தது.
‘சிவலிங்கம் இல்லாமல் பயணம் செய்தால் , அங்கேயே சிக்கிக் கொள்ள நேரிடும் என்று சொன்னாரே!’
‘ ஒரு வேளை அவள் அந்த மாயக்கதவினை விட்டு வெளியே வரவே இல்லையோ! அங்கேயே சிக்கிக் கொண்டு தவிக்கின்றாளோ!?’ காயம்பட்ட இடத்தில் உப்பினை வைத்தது போல துடித்துப் போனான்.
நினைத்து நினைத்து பித்துப் பிடித்துப் போனது. நின்றான்! நடந்தான்! யாருமில்லா அந்த இடத்தில் தொண்டை கிழியக் கத்தினான். படுத்துப் புரண்டான்! மனம் ஆருவதாகத் தெரியவில்லை. மீண்டும் அந்த மாயக் கதவு திறந்தால் , லிங்கத்தை விட்டு விட்டு உள்ளே குதிக்கக் கூட தயாராக இருந்தான்.
ஆனால் அவனது மூளை அப்போதும் வேலை செய்ய, ஒரு வேளை இதை வைத்து மீண்டும் ரதியை கொண்டு வர முடிந்துவிட்டால் , அப்போது என்ன செய்வது!
இதற்கு யார் தீர்வு சொல்வார்கள்!
‘பரஞ்சோதி சித்தர்….!’ யோசித்தான்…
அவரை மனமுருகி வேண்டினான். “ ஐயா…..! வழிகாட்டுங்கள்….” காற்றில் கலந்து போனது அவனது குரல்.
எதுவும் நடக்கவில்லை. அவரும் வரவில்லை…
திக்குத் தெரியாமல் , மனைவியை அநியாயமாக பறிகொடுத்து விட்டு மனம் வெதும்பி , கண்கள் அழுது சிவந்து .. வானத்தைப் பார்த்து படுத்து விட்டான்.
எந்தப் பக்கம் திரும்பினாலும் அவளின் மலர் முகமே கண்ணுக்குள் வந்து நின்றது. அவளின் முத்துப்பல் சிரிப்பும், அத்தான் என்ற அழைப்பும் கருத்தை விட்டு கலைவதாக இல்லை.
“என்னை மன்னித்துவிடு ரதி!!! எப்போதும் பிரியாமல் இருப்பதாக வாக்களித்து உன்னை இப்போது ஏமாற்றி விட்டேன்… மன்னித்து விடு காதலே!” உயிரோடு பிணமானான்.
“ இந்திரா……!” அபயம் அளிக்கப் போகும் குரல்…..! எங்கோ கேட்டது…
சட்டென எழுந்து அமர்ந்தான்.
தூரத்தில் வந்து கொண்டிருந்தான் அவனது ஆபத்பாண்டவன்…அவனுடைய நண்பன். அஷ்டசேனா!
“சேனா….!” கதறினான். ஓடிச் சென்று அவனது காலைப் பிடித்துக் கொண்டு விழுந்துவிட்டான்.
அவனைத் தூக்கி ஆரத் தழுவிக் கொண்டான் சேனா….
“நண்பா….கலங்காதே! மார்க்கம் உள்ளது!”
‘கண்டேன் சீதையை!’ என்று அனுமன் ராமனிடம் கூறியதைப் போல மூன்றே வார்த்தையில் வர்மாவின் இருண்ட இதயத்தில் தீபம் ஏற்றினான் சேனா.
“நண்பா… என்ன சொன்னாய்…. வழி உள்ளதா?! நிஜமாகவா…!” பரபரத்தான்.
“ஆம் நண்பா… கவலையை விடு! என்னுடன் வா…” அவனது கலங்கிய கண்களைத் துடைத்து அவனை தன்னுடன் அழைத்துச் சென்றான்.
இத்தனை நேரம் இருந்த துன்பம் நண்பனின் வார்த்தையால் இன்பமாக மாறியது. வர்மா துள்ளிக் குதிக்காத குறையாக அவனுடன் சென்றான்.
இப்போது தான் இந்த இடத்தை நன்றாகப் பார்க்கிறான். என்ன இட இது! உலகின் எந்தப் பகுதி இது என்று யோசித்தான்.
சேனாவிடம் கேட்க, “நம் ஊர் இருக்கும் பகுதிக்கு நேர் எதிர்ப்பகுதி இந்த இடம். அதவாது இப்போது நீ உலகத்தின் மறு பகுதிக்கு வந்துட்டாய்!” என்றான்.
நண்பன் இப்போது ஆளே மாறி இருந்தாலும் , நட்பு மட்டும் மாறவில்லை.
சேனாவும் வர்மாவும் இப்போது சற்று மக்கள் நடமாடும் இடம் போன்றதொரு பகுதிக்கு வந்தனர். அங்கே மக்களைக் காண முடியவில்லை. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு கீற்றுக் கொட்டகை போட்ட குடிசைகளைப் பார்க்க முடிந்தது.
“ இது எந்த ஊர் நண்பா… ? மனிதர்கள் யாரையும் காணவில்லையே..?” இது வரை ஒருவரும் தென் படவில்லை என்பதால் கேட்டான் வர்மா.
“ இந்திரா இது மனிதர்கள் அதிகம் இல்லாத பகுதி. நாகரீகம் நம் அளவிற்கு இல்லை . பசிக்காக இவர்கள் பச்சை மாமிசம் போன்றவற்றை தின்கிறார்கள். பழங்கள் இயற்கையாகக் கிடைக்கிறது. இன்னும் நம் அளவிற்கு சமைத்து உண்ணத் தெரியவில்லை. ஒரு காட்டுவாசிப் போலத் தான் இவர்கள் வாழ்க்கை. நான் இங்கு வந்த பிறகே அவர்களுக்கு வீடுகள் போன்ற அமைப்பை செய்து காட்டினேன்.” பேசிக்கொண்டே ஒரு குடிசைக்குள் சென்றார் சேனா.
வர்மாவும் சற்று நண்பன் கொடுத்த நம்பிக்கையால் சற்று தெளிந்திருந்ததினால் இதையெல்லாம் கவனித்தான்.
அந்தக் குடிசைக்குள் சென்ற பிறகு, சேனா அவனுக்கு பருக நீரும், சில பழங்களும் கொடுக்க,
கவலையில் மூழ்கி இருந்தபோது தெரியாத பசி இப்போது கட்டுக்கடங்காமல் வெளிப்பட்டது. இருந்த அனைத்தையும் அவனே உண்டு விட்டான்.
அமைதியாக சேனா அவனைப் பார்த்துக் கொண்டிருக்க,
அவனுக்கு ஏதும் கொடுக்காமல் உண்டது அப்போது தான் உறுத்தியது வர்மாவிற்கு.
“மன்னித்துவிடு நண்பா…நானே உண்டுவிட்டேன்.!” வருத்திக் கூற,
“நான் இப்போது பசி தாகம் இல்லாதவன் நண்பா…! பரஞ்சோதி சித்தர் எனக்கு அளித்த வரத்தால் நானும் இப்போது ஒரு சித்தர் என்பதை நீ உணரவில்லையா!?” தன் நிலையை தானே நண்பனுக்கு எடுத்துச் சொன்னார்.
“ எனக்கு நீ எப்போதும் நண்பன் மட்டுமே! அதற்கு மிஞ்சி எதுவும் வேண்டாம்..” பாசத்தோடு வர்மா அவனைத் தழுவிக் கொண்டான்.
சேனா அனைத்தையும் துறந்தவன், நிதர்சனத்தை உணர்ந்தவன், அதனால் கலங்காமல்,
“ நண்பா…அடுத்து செய்யவேண்டியதைப் பார்ப்போம். முதலில் நீ இங்கு ஒரு பாதாளச் சுரங்கம் அமைக்க வேண்டும்.” நேராக விஷயத்தைத் தெரிவித்தான்.
“ என்ன! மீண்டும் சுரங்கமா!?” கேள்வியாய் சேனாவைப் பார்க்க,
“ஆம்! நாம் அன்று அமைத்த கோயில் போல இங்கும் பாதாளத்தில் ஈசன் குடியிருக்க ஓர் இடம் வேண்டும்.” வழிகாட்டினான் சேனா.
“நீ என்ன சொன்னாலும் நான் தட்டாமல் செய்வேன், இப்போது மட்டுமல்ல எப்போதுமே!” லேசான புன்னகையுடன் வர்மா கூறிவிட்டு,
சேனா கைகாட்டிய இடத்தில் சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டான்.
“ரதியைப் பற்றிக் கவலைப் படாதே! நமக்கு இங்கு ஆண்டுகள் ஆனாலும் அவளுக்கு அது வெறும் நொடிகளும் நிமிடங்களுமே! அதனால் நாம் பயப்படத் தேவை இல்லை.” தைரியம் கூறி வர்மாவைத் தேற்றினான்.
இவன் சுரங்கம் அமைக்க அங்கிருந்த கற்பாறைகளை செதுக்கி சீராக்கி, மண் வெட்டி போல மாற்றிக் கொண்டான்.
இதனை அங்கிருந்த மக்கள் கவனிக்க, இவர்களிமிருந்து நாகரீகத்தை மெல்லக் கற்க ஆரம்பித்தனர்.
நாகரீகத்தில் சிறந்து விளங்கியர்வர்கள் தமிழர்கள் மட்டுமே!
அவர்களிடமிருந்தே மற்றவர்கள் கண்டும் கேட்டும் கற்றுக் கொண்டனர்.
வர்மாவும் சேனாவும் அங்கிருந்த மக்களுக்கு உணவு சமைத்து உண்ணவும், விவசாயம் செய்து பயிர்களை விளைவிக்கவும் கற்றுத்தந்தனர். சரியாக ஆடை உடுத்தவும், முறையாக பேசவும் சொல்லித்தந்தனர்.
இதற்குப் பதிலாக, அவர்களும் வர்மாவிற்கு சுரங்கம் அமைக்க உதவி செய்தனர்.
அழகிய சதுர வடிவத்தில் இருபதடி ஆழத்தில் ஊரில் அமைத்தது போலவே சுரங்கம் அமைந்தது.
“சுரங்கம் முடிந்துவிட்டது. ஆனால் இங்கு நீர் வரவில்லை. வெறும் கற்பாறைகள் தான். இந்த இடத்தை ஏன் தேர்ந்தெடுத்தாய் சேனா?” வர்மா நீரை இங்கும் எதிர்ப்பார்த்திருந்தான்.
“ இந்த இடம் வெறும் நிலம் சார்ந்த இடம். நீர் இந்த இடத்தில் கிடைக்கை இன்னும் நீ தோண்ட வேண்டும். ஆனால் இதுவே போதும். நான் இதைத் தேர்ந்தெடுக்க ஒரு காரணம் உள்ளது.
இந்த இடம் தான் நாம் அன்று கோயில் கட்டச் சொன்ன இடத்திற்கு பூமத்திய ரேகையில் ஒரே நேர்க்கோட்டில் அமைந்த இடம். அதனால் இரண்டுக்கும் ஒரு தொடர்பு எப்போதும் இருக்கும்.” விளக்கம் கொடுத்தான் சேனா.
புரிந்துகொண்ட வர்மா, “இனி அடுத்து என்ன செய்வது நண்பா!” ரதியைக் காண ஒவ்வொரு நொடியும் துடித்துக் கொண்டிருந்தான் வர்மா..
“உன்னிடம் இருக்கும் ஸ்படிக லிங்கத்தை அங்கே பிரதிஷ்டை செய்! அதற்கு தினமும் பூஜை செய்!” சேனா சொல்ல,
“ என்ன இது சேனா… ! இன்னும் எத்தனை நாள் என்னை வருத்துவதாக எண்ணம்! அவள் இல்லாமல் என்னால் ….” மனம் உடைந்தது. சோர்ந்து அமர்ந்து விட்டான்.
“ இந்திரா… இது சாதாரண விஷயம் இல்லை. நீ நாடு விட்டு நாடு செல்லவில்லை… பிரபஞ்சத்தை கடந்து சென்றவர்கள். சித்தர் சொன்ன பிரச்சனைகள் உனக்கு நினைவில் உள்ளதா! அங்கே சிக்கிக் கொண்டால் மீள்வது கடினம். அதற்குத் தான் அந்த இறைவனை நீ அணுக வேண்டும். உன்னையே கரைக்கும் பக்தியில் மூழ்கினால் தான் பலன் இருக்கும்!” திட்டவட்டமாக உணரவைத்தான்.
இயலாமையாமல் துடித்த மனதை அடக்கி , சேனாவின் வார்த்தைகுக் கட்டுப்பட்டான்.
“ என்ன பூஜை செய்ய வேண்டும் சொல் நண்பா..” பணிந்து வந்தான்.
“ திருவாசகம்…! திருவாசகத்திற்கு உருகாதவர் எவரும் இல்லை. அந்த ஈசனும் விதிவிலக்கல்ல… அவரைக் கரைய வைக்க இதுவே உனக்கு வழி! தினமும் நீ அதைச் சொல்லச் சொல்ல அந்த இறைவன் உனக்கு வழி விடுவார். மீண்டும் மாயக் கதவு தோன்றும். நம்பிக்கையுடன் இரு.
அப்போது ரதியை நினைத்துக் கொண்டு இந்த சிவலிங்கத்தோடு உள்ளே செல், அவளை மீட்டுக் கொண்டு திரும்புவாய்…” வழியை சேனா சொன்னதும், வர்மாவிற்கு மனம் பூவாய் மலர்ந்தது…
மீண்டும் ரதியைக் காணும் ஆவலில் , தினமும் திருவாசகத்தால் அந்த ஈசனை கரைய வைக்க ஆரம்பித்தான்.
மெல்ல மெல்ல ஆரம்பித்தவன் , நாளடைவில் திருவாசகத்திற்குள் அவனே மூழ்கி விட்டான்.
பசிதாகம் இன்றி, ஈசனோடு ஐக்கியமாகி அந்த இருபதடி சுரங்கத்திற்குள் அமர்ந்த வண்ணம் இருந்தான்.
அவன் எதிர்ப்பார்த்த நாளும் வந்தது..
திருவாசகம்:
தாமே தமக்குச் சுற்றமுந்
தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.
பொருள் :
தமக்குச் சுற்றமும் தாமே – ஒவ்வொருவருக்கும் உறவினரும் அவரே, தமக்கு விதி வகையும் தாமே – நடைமுறைகளை வகுத்துக்கொள்பவரும் அவரே; ஆதலால், அடியவர்களே, நீங்கள், யாம் ஆ£¢ – நாம் யார், எமது ஆர் – எம்முடையது என்பது யாது, பாசம் ஆர் – பாசம் என்பது எது, என்ன மாயம் – இவையெல்லாம் என்ன மயக்கங்கள்? என்று உணர்ந்து, இவை போக – இவை நம்மை விட்டு நீங்க, கோமான் – இறைவனுடைய, பண்டைத் தொண்டரொடும் – பழைய அடியாரொடும் சேர்ந்து, அவன்றன் குறிப்பே – அவ்விறைவனது திருவுளக் குறிப்பையே, குறிக்கொண்டு – உறுதியாகப் பற்றிக்கொண்டு, பொய் நீக்கி – பொய் வாழ்வை நீத்து, புயங்கன் – பாம்பணிந்தவனும், ஆள்வான் – எமையாள்வோனுமாகிய பெருமானது, பொன் அடிக்கு – பொன் போல ஒளிரும் திருவடிக்கீழ், போம் ஆறு அமைமின் – போய்ச் சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்.