Lovely Lavi – 4

Lovely Lavi – 4

 

அத்தியாயம் – 4

லவி ஒயிலாக நடந்து, தன் வகுப்பறைக்குள் செல்ல, “ஓ…ஓ…” என்று மெல்லிய சத்தம் பெண்கள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழ, வகுப்பிலிருந்த ஆண்களின் பார்வை சத்தத்தை நோக்கித் திரும்பி, உள்ளே நுழைந்த லவி, நித்திலா இருவர் மீதும் விழுந்தது.

பல மாணவர்களின் பார்வை அவர்கள் வேலையில் திரும்ப, சிலரின் பார்வை இவர்கள் இடத்தை வட்டமடித்தது.

“ஹாய்… சுமி, சுவி, வசு, சுவீட்டி…” என்று நீளமாய் லவியின் பெயர் பட்டியல் நீண்டு கொண்டே போனது.

அப்பொழுது வகுப்பாசிரியர் உள்ளே நுழைய, அங்கு அமைதி நிலவியது.

ஆசிரியை வந்ததும் கோபமாக இரண்டு கேள்விகளைக் கேட்டுவிட்டுப் பாடத்தைத் துவங்க, “ஏன் கல்யாணத்தை பண்ணனும்? இப்படி கஷ்டப்படணும்?” என்று பரிதாபமாகக் கேட்டாள் லவி.

“ஏண்டி அப்படி சொல்ற? கல்யாணம் பண்ணா ஜாலி தான்… படிக்க வேண்டாமில்லை…” என்று அவள் அருகே அமர்ந்திருந்த சுவீட்டி நியாயம் பேசினாள்.

“எனக்கு அப்படி தோணலை… மேடம் பாரு… பாவம்… இன்னைக்கி வீட்ல திட்டு  வாங்கிருப்பாங்க போல… அங்க திட்ட முடியலை. மன சாந்திக்கு நம்மளை திட்டிட்டு கிளாசை ஆரம்பிக்கிறாங்க.” என்று சோகமாக லவி கூற, “அமைதியா இரு லவி….” என்று தன் பற்களைக் கடித்தாள் நித்திலா.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்த லவி, “மேடம் கழுத்தில் இருக்கிற செயினை பாரேன்…” என்று தன் கழுத்தைக் குனிந்து கொண்டு கிசுகிசுத்தாள் லவி.

“அதுக்கு என்ன? நீ ஏன் அவங்களை பாக்குற? பாடத்தைக் கவனி…” என்று நித்திலா முணுமுணுக்க, “இல்லை தேரை இழுக்கற மாதிரி இவ்வுளவு தடியா தாலி செயின் போட்டிருக்காங்களே… எவ்வளவு தடியா செயின் போடுறாங்களோ… அவ்வுளவு வருசத்துக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்திருப்பாங்களோ? இல்லை…” என்று லவி கேலியாக இழுக்க, “கொள்…” என்று சிரித்தாள், அவள் முன்னே அமர்ந்திருக்கும் சுமி.

“ஊ ஐஸ் தட்?” என்று ஆசிரியர் மாணவர்களை நோக்கிக் கேட்க, “செய்றதெல்லாம் அவுங்க… மாட்டிக்கிறது நம்ம…” என்று கிசுகிசுத்தான் ஒரு மாணவன்.

லவி முணுமுணுத்த மாணவனைப் பார்த்து நக்கலாகச் சிரித்தாள்.

“லவி… நான் என்ன ஜோக் சொல்றேன்னா?” என்று கோபமாகக் கேட்டார் அந்த ஆசிரியை.

“சொல்லிட்டாலும்…” என்று லவி முணுமுணுக்க, “கம் அகைன்… என்ன முணுமுணுப்பு?” என்று கோபமாகக் கேட்டார் அந்த ஆசிரியை.

லவி எதோ முணுமுணுக்க, அவளைச் சுற்றி அமர்ந்திருந்த மாணவிகள் புன்னகைத்தனர்.

“லவி… முன்னாடி வா… சிரிக்கிறது உடம்புக்கு நல்லது… அதை ஏன் நீங்க மட்டும் செய்யணும்… இங்க வந்து எல்லாரும் சிரிக்கிற மாதிரி சத்தமா ஒரு ஜோக் சொல்லிட்டு போ…” என்று தான் பெரிய நகைச்சுவை கூறிவிட்டது போல் மார்கெரை கீழே வைத்துவிட்டு கெத்தாக லவியின் இடத்திற்கு அருகே வந்தார் அந்த ஆசிரியை.

லவி சிறிதும் தயக்கமின்றி முன்னே செல்ல, ‘இவளுக்கு இதே வேலை…’ என்று லவியை மனதில் திட்டியபடி அமர்ந்திருந்தாள் நித்திலா.

“மேம்… பெரிய ஜோக் சொல்லனுமா? இல்லை சின்ன ஜோக் சொல்லட்டுமா?” என்று தன் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு மெதுவாகக் கேட்டாள் லவி.

“அது என்ன பெரிய ஜோக்? சின்ன ஜோக்?” என்று ஆசிரியை கடுப்பாகக் கேட்க, “பெரிய ஜோக் பெருசா இருக்கும்… சின்ன ஜோக் சிறுசா இருக்கும்…” என்று லவி மென்மையாகக் கூற, வெளி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு மாணவ மாணவிகள் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

லவியின் முகம் பாவமாகக் காட்சி அளித்தாலும், அவள் கண்களில் குறும்பு மின்னியது.

“சின்ன ஜோக் சொல்லு போதும்… நான் கிளாஸ் எடுக்கணும்…” என்று தன் கைகளைக் கட்டிக் கொண்டு அனைவரையும் பார்த்தபடி ஆசிரியை கூற, லவி சம்மதமாகத் தலை அசைத்து, தன் தொண்டையை செருமிக் கொண்டாள்.

அனைவரும் லவியை ஆர்வமாகப் பார்க்க, “ஜோக்…” என்று தீவிரமாகக் கூற, ஆசிரியை, “சொல்லு லவி…” என்று கண்டிப்போடு கூறினார்.

“மேம்… அது தான் சொல்லிட்டேனே… இதை விடச் சின்ன ஜோக் எப்படி சொல்றது?” என்று அப்பாவியாகக் கேட்க, ஒரு சில மாணவர்கள் தன் வாயை மூடிக் கொண்டு நக்கலாகச் சிரித்தனர்.

அப்பொழுது ஹரி, “எங்களுக்குச் சிரிப்பே வரலை…” என்று லவியை பார்த்தபடி அவளைக் கேலி செய்யும் நோக்கோடு, தோளைக் குலுக்கினான்.

ஒரு நொடி கூடத் தாமதியாமல், “கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?” என்று லவி இன்முகமாக மாற, வகுப்பறை எங்கும் சிரிப்பலை பரவியது.

நண்பர்கள் முன் லவி செருப்பைக் காட்டும்பொழுது கூட ஏற்படாத அவமானம், அனைவரும் சிரிக்க, அது ஹரியின் தன் மானத்தைச் சீண்டி விட்டு வேடிக்கை பார்த்தது.

ஹரி சிரித்தபடி அதைச் சமாளித்துக் கொண்டான்.

“லவி… ஷட் அப்… கோ டு யுவர் பிளேஸ்… பேசாம கிளாஸாய் கவனிங்க…” என்று லவியை மிரட்டிவிட்டு தன் பாடத்தைத் தொடர்ந்தார்.

லவி தன் தோழிகளைப் பார்த்துக் கண்ணடித்து, தன் இடத்தில் வந்தமர்ந்தாள்.

ஆசிரியை தன் வகுப்பை முடித்துவிட்டு, வெளியே செல்ல… லவியும் அவள் தோழிகளும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

கவலை மறந்து, சின்ன சின்னக் காரணங்களுக்கும் சிரிக்கும் அழகிய பருவம் அன்றோ! லவியும் அவள் தோழிகளும் ரசித்து வாழ்ந்தனர்.

மத்திய வேளை நெருங்க, உணவு முடிந்து லவி உள்ளே நுழைய, சுமியின் புத்தகம் சரிந்து கீழே விழுந்தது.

அதை எடுத்த, லவியின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.

“ஏய்… எல்லாரும் இங்க வாங்க… நம்ம சுமி எழுதின கவிதையைப் பாருங்களேன்…” என்று லவி அனைவரையும் அழைக்க, “லவி ப்ளீஸ் டீ… அதைக் கொடுத்திரு…” என்று சுமி கெஞ்சினாள்.

“லவி… அவளோடதை கொடு…” என்று நித்திலா லவியை மிரட்டினாள்.

“பர்சனல்ன்னா டைரியில் எழுதி வீட்டில் வச்சிருக்கணும்…” என்று கூறிக் கொண்டு லவி ஓட, அதைப் பிடுங்குவதற்கு அவளைத் துரத்தினாள் சுமி.

எதிரே வந்த மாணவன்மீது லவி மோத, “சாரி…” என்று கூறிக்கொண்டு அவனிடமிருந்து விலகி வகுப்பறைக்குள் தன் ஓட்டத்தைத் தொடங்கினாள் லவி.

“இது சரிப்பட்டு வராது…” என்று கூறி அங்கிருந்த மேஜை மீது ஏறி நின்றாள் லவி.

லவி மேஜை மீது ஏறிவிட, மற்ற மாணவிகள் மேலே ஏறச் சங்கடப்பட்டு அவளைப் பரிதாபமாகப் பார்த்தனர்.

“உன்னைப் பார்த்தும் 

முகத்தில் புன்னகை பூ.

மனதில் மத்தாப்பூ.

பூத்ததே காதல் பூ!”

கவிதை என்ற பெயரில் சுமி எழுதியதை லவி ஏற்ற இரக்கத்தோடு வாசிக்க, சுமி வெட்கப்பட்டு தன் முகத்தை மூடிக் கொள்ள, மற்ற மாணவிகள் கவிதையை ரசித்துச் சிரித்தனர்.

“லவி… ப்ளீஸ் டீ… அதைக் கொடுத்திரு…” என்று சுமி கெஞ்ச, ‘அதைக் காதுக் கொடுத்துக் கேட்பேனா?’ என்று மேலும் தொடர்ந்தாள் லவி.

“காதல் கடலில் மூழ்கினேன்

கல்யாண முத்தெடுக்க…”

என்று அடுத்த கவிதையைப் படித்த லவி சுமியை மேலும் கீழும் பார்த்தாள்.

இவர்கள் அடித்துக் கொண்டிருக்கும் கூத்தை மாணவர்கள் ஓரக் கண்களால் பார்த்துக் ரசித்துக் கொண்டிருந்தனர்.

“சுமி… நான் சொல்றேன் கேளு… உன் கவிதை எல்லாம் படு கேவலமா இருக்கு… இதைக் கவிதைன்னு சொல்லவா… ஹைக்கூன்னு சொல்லவா? இல்லை கிறுக்கல்ன்னு சொல்லவா?” என்று தன் முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு மேஜையின் மீது அமர்ந்தபடி கேட்டாள் லவி.

“நான் சொல்றேன் பார் ஹைக்கூ….” என்று கூறி, தன் தொண்டையைச் சரி செய்தாள் லவி.

“இப்ப நோட் பண்ணுங்க…” என்று தன் லவி தன் கைகளை அசைக்க, “நினைப்பு தான்… நான் அதெல்லாம் நோட் பண்ண முடியாது…” என்று நித்திலா கடுப்பாகக் கூறினாள்.

“இட்’ஸ் ஒகே…” என்று கூறி கவிதை மழையைப் பொழிய ஆரம்பித்தாள் லவி.

“காதல் கடலில் மூழ்கினேன்…

ஏறினேன் கல்யாண பாடையில்…” என்று லவி கூற, “ச்சீ…” என்று கூறி அவளை மொத் மொத்தென்று மொத்தினாள் நித்திலா.

“சரி. சரி. டென்ஷன் ஆகாத. இப்ப நால்லதா ஒன்னு சொல்றேன் கேளுங்க… ” என்று தன் கவித் திறமையை வெளிப்படுத்தினாள் லவி.

 

“வேணா வேணா

கடல்ல மீனா

காதல் வேணா

வேணா வேணா

பாகுபலிக்கு சேனா

கல்யாணம் பண்ணா

நாசமா போனா…” என்று லவி ரசனையோடு கூற, அவளைச் சுற்றியிருந்த பெண்கள் கூட்டம் கைத்தட்டி ஆர்ப்பரித்தது.

“எப்புடி?” என்று லவி தன் சட்டையைத் தூக்கி பெருமையாகக் கேட்க, நித்திலா தலையில் அடித்துக் கொண்டு தன் இடத்தில் அமர்ந்தாள்.

“ஏன் நித்திலா? மை கவிதை  நாட் குட்…” என்று லவி ஆர்வமாகக் கேட்க, “படு கேவலம்…” என்று நித்திலா அசட்டையாகக் கூறினாள்.

“சோ சாட்… சோ சாட்…” என்று லவி வருத்தம்போல் பாவனையைக் காட்ட, “இதைவிட வருத்தப்படுற விஷயம் நிறைய இருக்கு…” என்று தீவிரமாகக் கூறினாள் நித்திலா.

‘என்ன?’ என்பது போல் லவி நித்திலாவை பார்த்தாள். “ஹரி… பாக்கிற பார்வையே சரி இல்லை… நீ அவன் விஷயத்தில் கொஞ்சம் ஒதுங்கி இரு…” என்று நித்திலா கூற, “பார்வை சரி இல்லைனா கண்ணாடி வாங்கி குடுத்திருவோம்…” என்று லவி கேலியாகக் கூறினாள்.

“லவி…” என்று நித்திலா கடுமையாக அழைக்க, “மேடம் சொல்லி எதைக் கேட்காம இருந்திருக்கேன்…” என்று நித்திலாவை செல்லம் கொஞ்சி, “பச்சக்…” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் லவி.

“லூசு… லூசு…” என்று நித்திலா லவியை திட்ட, “இந்நேரம் கோபம் குறைஞ்சிருக்கணும்… என் டார்லிங்க்கு…” என்று லவி கண்சிமிட்ட நித்திலா அழகாகப் புன்னகைத்தாள்.

“லவி…” என்று ஆழமான குரலில் லவியின் அருகே அமர்ந்திருந்த நித்திலா அழைத்தாள். “சொல்லு நித்தி…” என்று லவி தன் புத்தகத்தில் முகம் பதித்த படி கேட்க, “என்னைக்காவது ஒரு நாள் நீ கல்யாணம் பண்ணித் தானே ஆகணும்? உனக்கு ஏன் இந்தக் கல்யாணம் மேல் இத்தனை வெறுப்பு?” என்று நித்திலா பேனாவை சுழற்றியபடி மென்மையாகக் கேட்டாள்.

 

“கல்யாணம்… ம்… ச்…” என்று சலிப்பாகக் கூறினாள் லவி. “கல்யாணம் ஒரு மரணம் தான்…” என்று அழுத்தமாகக் கூறினாள் லவி நித்திலாவின் முகத்தை பார்த்தபடி . “லவ் மேரேஜ் சூசைட்… அரேஞ்செட் மேரேஜ் மர்டர்…” என்று கூறி லவி சிரிக்க, அவளைக் கோபமாக முறைத்தாள் நித்திலா.

“கல்யாணம்ங்கிற பெயரில் ஒரு பெண்ணோட சுதந்திரம் கொலை செய்யப்படுது… அவள் ஆசை, நிம்மதி, சந்தோசம், அவள் விருப்பு…இதெல்லாம் மண்ணுக்குள் புதைக்கப்பட்டு… ஒரு ஆணுக்காகச் சிந்திக்கச் சொல்லி, அந்த வீட்டுக்காக அவள் சிந்தனையை மாற்றி, அவளுக்கு என்ன பிடிக்கும்ங்கிறதையே மறக்கடிக்க வைத்து அவள் சுயத்தைக் கொலை செய்வது தான் திருமணம்…” என்று லவி கூற, அவளை அதிர்ச்சியாகப் பார்த்தாள் நித்திலா.

“எந்த ஆணாவது, ஒரு பெண்ணைச் சந்தோஷமா வசிக்கிறதுக்காகத் திருமணம் செய்றேன்னு சொல்லிருக்கானா? இல்லை அவ கனவை நிறைவேத்தறேன்னு அவளைக் கல்யாணம் செய்றேன்னு சொல்லிருக்காங்களா? அவன் சந்தோசமா இருக்கனும்… அவன் குடும்பத்தை நல்லா பார்த்துக்கணும்… அவனுக்கு வாய்க்கு ருசியா சமைக்கணும்… இதுக்கு தான் கல்யாணம் பண்ணிப்பாங்க… நான் ஏன் என் வாழ்க்கையை எவனோ ஒருத்தனுக்கு அடமானம் வைக்கணும்? நான் மேல படிப்பேன்… எனக்குன்னு ஒரு கம்பெனி ஆரம்பிக்கணும்… லவி அப்படிங்கிற பெயரில் ஒரு சாம்ராஜ்யம் உருவாகணும்…” என்று தன் கை அசைத்துப் பெருமையாகக் கம்பீரமாகக் கூறினாள் லவி.

அவளைக் கடந்து சென்ற ஹரி, ‘ஒன்னும் நடக்காது… உன்னை என் வலையில் விழ வைத்து, என் குழந்தையைச் சுமக்க வைத்து, அது தான் உன் வாழ்க்கைனு வாழ வைக்கிறேன்… அடுத்த வருடப் படிப்பு முடிவதற்குள் இது நடக்கும்…’ என்று புன்னகையோடு எண்ணியபடி அவன் இடத்தில் சென்றமர்ந்தான்.

லவ்லி லவி வருவாள்…

 

error: Content is protected !!