Sokkattan paarvai prefinal

Sokkattan paarvai prefinal

வைஷாலி வேகமாக வரவும் , சத்யவதி கண்களில் கண்ணீர் பெருக அவளை நோக்கித் தன் கைகளை நீட்டினார் . ஆனால் அவர் கைகளுள் அடைக்கலம் புகாமல் , சிவசங்கரியைத் தன் கைகளுள் புகுத்திக் கொண்டாள் வைஷாலி . 

ஆம் , மயங்கி சரிந்த நிலையில் வைஷாலியால் தாங்கப் பட்டிருந்தார் சிவசங்கரி . 

” ம்மா , என்ன ஆச்சு ? ” 

என்றபடி அவரின் கன்னங்களைத் தட்ட , 

அவரோ அசைவே இல்லாமல் கிடந்தார்.

உடனே ஓடி சென்று தண்ணீரை எடுத்து வந்து அவரின் முகத்தில் அடித்தாள். அதில் அவரின் கண்மணிகள் சற்றே அசைந்து வைஷாலியின் எண்ணத்திற்கு இசைந்தது . 

கொஞ்சம் நீரை சிவசங்கரியின் வாயில் ஊற்றியவள் , அங்கே என்னவென்று சொல்ல முடியாத பாவத்தில் நின்றிருந்த சத்யவதியை கவனிக்கவே இல்லை எனலாம்.

” ம்மா , இப்ப பரவால்லையா ? இதுக்கு தான் நேரத்துக்கு சாப்பிடுன்னு சொல்லறேன் . கேட்டா தான “

லேசாகக் கண்களைத் திறந்த சிவசங்கரியிடம் சலித்துக் கொண்டாள் வைஷாலி.

” நீ எதுக்கு இவ்ளோ சீக்கிரம் வந்த ? “

தீனமான குரலில் பதட்டம் தொனிக்க சிவசங்கரி கேட்க , அப்பொழுதே அவர் தன்னை மெதுவாக வர சொன்ன நினைவு வந்தது அவளுக்கு.

‘ எதுக்கா இருக்கும் ?”

என்று அந்த நொடி தான் அவளும் ஆராய்ந்தாள்.

அப்பொழுது அருகே ஏதோ நிழலாட , நிமிர்ந்து பார்த்த வைஷாலி 

‘ இவங்களை எங்கயோ பார்திருக்கோமே !! ‘

என்று யோசித்துப் பின் , 

” நீங்க ?… அம்மாவோட ஃப்ரெண்ட் தான!!! “

என்று உற்சாகப்பட்டவள் , 

” ஓஹோ , உங்க ஃப்ரெண்ட் கூட நீங்க என்ஜாய் பண்றப்போ நான் குறுக்க வரக் கூடாதுன்னு தான் இப்படி ஒரு ஆர்டர் போட்டீங்களா ?? “

என்று சிவசங்கரியை நோக்கிப் பெரிய கண்டுபிடிப்பு போலக் கூறினாள்.

இதைக் கேட்டு சிவசங்கரி இன்னும் பதறினார் என்றால் சத்யவதியின் நிலைமையைக் கேட்கவா வேண்டும் ?!

அவர் அதிர்ச்சியுடன் நடப்பதைக் கண்டு வாயடைத்துப் போனார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு , காணாமல் போன மகளைக் கண்டது மகிழ்ச்சி தான் என்றாலும் அவளின் பேச்சு மனதைப் போட்டுப் பிசைந்தது .

அதுவும் மஹேந்திரன் வீட்டிலேயே இருப்பாள் என்று கனவிலும் கூட நினைத்துப் பார்த்ததில்லையே !

“ஆன்டியா ? நானா ? “

மனதில் எழுந்த நடுக்கம் வெளியே தெறிக்க , அவரின் கேள்வியில் ஆச்சரியம் கொண்டாள் வைஷாலி.

” சாரி , வேற எப்படி 

கூப்பிடணும் உங்களை “

சாதாரணமாக அவள் கேட்க அதுவே பூதாகரமாக வெடித்தது . 

” நல்லா இருக்குடி உன் பேச்சு . இவ அம்மான்னா நான் யாரு உனக்கு ? பெத்தவளை விட மத்தவ உசத்தியா போயிட்டாளா உனக்கு ?!”

இயலாமை கலந்த ஆத்திரத்துடன் சத்யவதி வெடிக்க , அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் ஆணியடித்தார் போன்று நின்றாள் வைஷாலி. 

எது நடக்கக் கூடாது என்று சிவசங்கரி நினைத்தாரோ அது அவரின் கண்முன்னே நடக்க , 

” சத்யா , நிறுத்துங்க . யாருக்கிட்ட என்ன பேசறோம்னு தெரிஞ்சு பேசுங்க “

என்று அழுத்தமாகக் கூறினார் . 

அவரின் தொனியில் இன்னமும் கொந்தளித்தார் சத்யவதி.

” என் பொண்ணுகிட்ட எப்படி பேசணும்னு எனக்கே சொல்லித் தரீங்களா ? நீங்க யாரு அவளை என்கிட்ட இருந்து பிரிக்க ? “

” நான் ஒன்னும் பிரிக்கல . உங்க புருஷனோட சுயநல புத்தி தான் பிரிச்சது. நிம்மதியான வாழ்க்கையை இப்பதான் அவ வாழ்ந்துட்டு இருக்கா . ப்ளீஸ் அதைக் கெடுக்காதீங்க “

 ” அப்போ வேணும்னே தான் இதெல்லாம் பண்ணறீங்க அதான ?? நல்லா இருக்கே உங்க நியாயம் ! தாயையும் சேயையும் பிரிச்ச பாவம் உங்களை சும்மாவே விடாது “

” இனிமே அவ எனக்கு தான் பொண்ணு சத்யா . நீங்க பேசாம போயிருங்க “

” பத்து மாசம் சுமந்து பெத்தது நான். பத்து மாசம் கூட வளர்க்காத நீங்க உரிமை கொண்டாடுறீங்களா ? “

வைஷாலி என்று ஒரு ஜீவன் அங்கிருப்பதை மறந்து அவளைப் பங்கு போட்டுக் கொண்டிருந்தனர் இருவரும். 

இந்த சத்தம் கேட்டு மாடியில் இருந்து வந்த மஹேந்திரன் , நடப்பதைக் கண்டு பதறினார்.

வைஷாலி வேறு அங்கு நின்று கொண்டிருக்கவும் அவளின் நிலை மோசமடைவதைத் தடுக்க எண்ணி வேகமாகக் கீழிறங்கினார்.

” போதும் நிறுத்துங்க ரெண்டு பேரும் . வைஷாலியைப் பத்தி கொஞ்சமாச்சும் யோசிக்கிறீங்களா ? “

வந்தவர் கோபமாகக் கேட்க , அப்பொழுதே நிலைமையை உணர்ந்த சிவசங்கரி தவித்துப் போனார். 

சத்யவதிக்கு அப்பொழுதும் சூழ்நிலை பிடிபடவே இல்லை.

” என்ன மஹேந்திரன் ? என் பொண்ணைக் கடத்தி வெச்சு அதை மறைக்க டிராமா வேற போடுறீங்களா ? நான் சும்மா விட மாட்டேன் உங்களை “

என்று ஆவேசத்துடன் கூறியவர் அடுத்து செய்த காரியம் இன்னமும் பீதியடைய செய்தது .

” வாடி போகலாம் . உங்க அப்பாகிட்ட சொல்லி இவங்களை உள்ள தள்ளறேன் பாரு “

என்றபடி வைஷாலியின் கையைப் பிடித்து இழுத்தார்.

ஏற்கனவே உச்சகட்ட அதிர்ச்சியில் இருந்தவள் சத்யவதியின் இந்த செயலைக் கண்டு 

மேலும் தொய்ந்து போனாள். 

மனதின் உறுதி உருக்குலைந்து போனதால் உடலும் வலுவிழந்து போக , சத்யவதியின் இழுப்பிற்கு சென்றாள். 

இதைக் கண்டு மறுபுறம் வந்து வைஷாலியைப் பிடித்துக் கொண்டார் சிவசங்கரி.

” வைஷாலி , நீ என்னை விட்டுட்டு எங்க போவ ?”

என்று தவித்துப் போய் பிதற்றினார் .

மஹேந்திரனுக்கு ஒரு நிமிடம் என்ன செய்வதென்றே புரியவில்லை. இவர்களை என்ன சொல்லி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவது என்று தெரியாமல் குழம்பினார்.

இப்பொழுது விட்டால் பின்னர் எப்பொழுதுமே சத்யவதிடம் நட்புறவு அறுந்து விடும் . 

மேலும் வைஷாலிக்கு அதிர்ச்சியில் எதுவும் ஆகக் கூடாது என்பதால் தீர்மானமாகப் பேச ஆரம்பித்தார் அவர்.

“கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க சத்யா . நான் சொல்றதைக் கேட்டுட்டு உங்க பொண்ணைக் கூட்டிட்டு போங்க “

என்று தெளிவாகக் கூற , வெடுக்கெனத் திரும்பிய மனைவியைக் கண்களால் சமாதானம் செய்தார்.

” என்ன சொல்லணும் இதுக்கு மேல ? பூசி மொழுக பார்க்காதீங்க மஹேந்திரன் “

சத்யவதி கடுப்பாக , மெல்ல சிரித்தவர் 

” அதைத் தானே டெய்லி பண்ணறேன். வாசலைப் பூசி மொழுகலன்னா என் பொண்டாட்டி அந்த சாணியை வெச்சே எனக்கு சமாதி கட்டிடுவா… அப்படிதான !!”

என்று சிவசங்கரியிடம் வேறு கேட்டு வைத்தார்.

‘அடப்பாவி மனுஷா ! இப்படியே மொக்க போடு , பேசற வாயைப் பொக்க ஆக்கறேன் ‘

‘ அடிப்போடி பொண்டாட்டி …நீ சொல்லற பஞ்ச் டயலாக கேட்கறதுக்கு , என் வாயில பஞ்ச் பண்றதே பெட்டர் ‘

இருவரும் மனதில் குரைத்து , வெளியில் முறைத்துக் கொண்டிருக்க 

 ” இப்படியெல்லாம் பேசி டைவர்ட் பண்ணாம சீக்கிரமா சொல்லுங்க “

சத்யவதி சற்றே இறங்கி வர ,  நல்ல வாய்ப்பை நழுவ விடாமல்

” வைஷாலி , நீ ரூம்ல ரெஸ்ட் எடும்மா . கொஞ்ச நேரத்துக்கு அப்பறமா வா”

என்று சொல்லிவிட…

அவ்வளவுதான் பொங்கிவிட்டாள் வைஷாலி. 

” எல்லாருமா சேர்ந்து என்னை முட்டாளாக்க நினைக்கிறீங்களா ? இங்க இருந்து ஒரு அடி கூட நகர மாட்டேன் . என்ன முடியுமோ பண்ணுங்க “

என்று கூறியவள் சொன்னதற்கு எதிர்மாறாக வேகமாக மாடியேறித் தன் அறையினுள் புகுந்து கதவை அறைந்து சாத்தினாள்.

செல்லுமிடமெல்லாம் மர்மமான பேச்சுகள் , நடத்தைகளே தொடரவும் வைஷாலியால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை . 

மேலும் , தன்னுடைய மகள் என்று யாரோ வந்து சொல்லவும் அப்படியே நொறுங்கிப் போனாள் அவள். தனக்கே தெரியாமல் ஏதோவொன்று நடந்திருக்கிறது ! அது என்ன ?? 

ஒரே வாய்ப்பு என்னவென்றால் , வாழ்வின் முற்பகுதியை மறந்திருக்க வேண்டும் . ஆம் , அப்படி தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டவள் , தன்னுடைய சிறு வயது நிகழ்வுகளை அசை போட முயன்றாள். ஆனால் , அவளின் சந்தேகத்தை உறுதியாகும் வகையில் ஒன்றுமே நினைவுக்கு வரவில்லை.

இவ்வளவு நாள் எவ்வாறு இதைக் குறித்தெல்லாம் எண்ணாமல் இருந்தோம் என்று அவளுக்கே புரியவில்லை . சிவசங்கரி , மஹேந்திரன் இருவரும் பொய் உரைத்தார்களா தன்னிடம் ?? ஆனால் , அவர்களும் தனக்கு மிகவும் நெருங்கிய சொந்தம் போல் தானே தோன்றுகிறது ?? நினைக்க நினைக்க தலைவலி அதிகரிக்க , கால்களை மடக்கி கீழே அமர்ந்தாள் வைஷாலி .

எதையும் சிந்திக்க இயலாமல் வாய் விட்டுக் கதறி அழ வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. எண்ணத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ,எதற்கு அழுகிறோம் என்றே தெரியாமல் அழுது தீர்த்தாள் வைஷாலி . 

அப்பொழுது அவள் மொபைல் ஒலிக்க , இருந்த ஆத்திரத்தில் அதனைப் போட்டு உடைக்கும் எண்ணத்தில் கையில் எடுத்தாள் .

‘ கிருஷ் காலிங் ‘

என்று திரையில் தெரிய , அதையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்துகொண்டாள் வைஷாலி.

விடாமல் அவன் அழைத்துக் கொண்டே இருக்க , இவளும் அழுத்தத்துடன் எடுக்காமல் இருந்தாள் . 

சற்று நேரத்தில் மெசேஜ் மழை கொட்டியது . ஃபோனை அணைத்துவிட்டு தூர எறிந்தவள் , அப்படியே கால்களைக் கட்டிக்கொண்டு கவிழ்ந்து கொண்டாள்.

கண்கள் கண்ணீரைப் பொழிய , மனமோ அழிந்த நினைவுகளை அறிய விழைந்தது.அப்பொழுது தொபுக்கடீரென்று சத்தம் கேட்க என்னவென்று பார்த்தால் , பால்கனி வழியாக கிருஷ் எகிறி குதித்து அவளின் அறையினுள்ளே

வந்திருந்தான்.

அதிர்ச்சியுடன் எழுந்தவள் , 

” ஹௌ டேர் யூ கம் லைக் திஸ் கிருஷ் ? இவ்ளோ உரிமையை யாரு தந்தது ? வெளிய போ “

என்று அழுத்தமாகக் கூற , 

” ஃபோன எதுக்கு நீ அட்டெண்ட் பண்ணல ? அதான் இப்படி வந்தேன் “

என்று அவனும் விளக்கமாகக் கூறினான். அவனை முடிந்த மட்டும் அவள் முறைத்தாள் .

” அதுக்கு இப்படி தான் வருவியா ? வாசல்னு ஒன்னு இருக்கு தான “

” ஆனா அங்க ஏதோ மாநாடு நடக்குது ஷாலு. நமக்கெதுக்கு அதெல்லாம். சொல்லு , என்னதான் உன் பிரச்சனை ? “

என்று விடாமல் கேட்டான் . 

“நானே பிரச்சனை தான் போல . என்ன நடக்குதுன்னே தெரியல என்னை சுத்தி. எனக்கு பழச்செல்லாம் மறந்து போயிடுசுன்னு தோணுது கிருஷ் . எதை உண்மைன்னு 

நினைக்கிறது ? “

கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் வைஷாலி . ஆனால் , அவளின் குரல் பேதம் காட்டிக்கொடுக்க , வேகமாக அவளருகே வந்து அவளின் தலையைக் கோதினான்.

” ஷாலு , என்ன இது ? தேவை இல்லாம ஸ்ட்ரைன் பண்ணாத . அது உனக்கு நல்லதில்லை “

மென்மையாகக் கூறியவனை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தவள் , 

” ஏன் நல்லதில்லை ? அப்போ ஏதோ ஒன்னு நடந்திருக்கு எனக்கு. என்னன்னு சொல்லு கிருஷ் . ஆஃபீஸ்லயே சொன்ன தான ஏதோ உண்மையை சொல்லறேன்னு .சொல்லு இப்ப “

சொல்லியே ஆக வேண்டும் என்ற கண்டிப்பு கலந்த பிடிவாதம் அவளிடம் இருந்தது . ஆழ மூச்செடுத்தவன் , மெல்ல அவளின் கைகளைத் தன் கைகளுக்குள் கைது செய்து 

” நீ என்னை லவ் பண்ணறியா ஷாலு ? “

என்று கேட்டுவிட்டான் . ‘ பே ‘ என்று முழித்தவள் சம்பந்தமே இல்லாமல் பேசுபவனை என்ன செய்யலாம் என்பது போல் பார்த்தாள் . தன்னால் இப்பொழுது இதற்கான பதிலைக் கூற முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை .

” இப்ப எதுக்கு இதைக் கேட்டுட்டு இருக்க ? எனக்கு முதல்ல எல்லாத்தையும் சொல்லு . அப்பறம் நான் சொல்லறேன் “

” இல்ல ஷாலு , இந்த கேள்வி இப்ப முக்கியம் தான். உன்னோட பாஸ்ட் தெரிஞ்சு இந்த கேள்விக்கு நீ ஆன்ஸர் சொல்றதை நான் விரும்பல . இந்த நிமிஷம் உன் மனசு என்ன சொல்லுதோ அதை சொல்லு “

” எனக்கு கொஞ்சம் டைம் வேணும் கிருஷ் . எதையுமே யோசிக்க முடியல என்னால . மனசெல்லாம் சொல்லத் தெரியாத ஃபீலிங்ல இருக்கு . என்னை எல்லாரும் ஏமாத்திட்டு இருக்காங்களோன்னு பயமா இருக்கு”

அவள் கூறியதைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தான் கிருஷ் . அவளைக் காண வேண்டும் என வேகமாக வந்தவன் , கீழே சத்யவதியுடன் பெரிய போராட்டமே நடத்திக் கொண்டிருந்தவர்களைக் கண்டு ஓரளவு ஊகித்திருந்தான் நடப்பை . 

ஆனாலும் , வைஷாலி தன்னைக் காதலிப்பதை அவள் வாயால் கேட்டபின் தான் எதையும் கூற வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான் . 

நினைவுகள் மறந்திருப்பினும் நிகழ்வுகள் நீடித்து தானே இருக்கும் . 

அவள் , அவளாகத் தன்னைக் காதலிக்க வேண்டும் என்று அவன் விரும்பினான். 

அவளுக்கு மறந்தவைகள் நினைவு வந்திருந்தால் மகிழும் முதல் ஜீவன் கிருஷ் தான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் , இப்பொழுது எல்லாவற்றையும் கூற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதே. அதைக் கூறியதும் அவள் காதலை உரைப்பதில் அவனுக்கு உடன்பாடில்லை. 

அவன் காத்திருந்த காலம் அனைத்தும் அவளின் காதல் வேண்டித் தானே. அது கடுகளவும் கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று அவன் விரும்புவதில் தவறேதும் இல்லையே ! 

மெதுவாக அவளை மெத்தையில் அமர வைத்தவன் , சற்றே இடம் விட்டு அருகே அமர்ந்தான் .

” இங்க பாரு ஷாலு.  எனக்கு இந்த மொமெண்ட் ரொம்ப முக்கியம் . நான் சொல்லறதைக் கேட்டு பொறுமையா  யோசிச்சு உன் பதிலை சொல்லு “

என்றுவிட்டு  அவளை நோக்க முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டவள் சம்மதமாகத் தலையை ஆட்டினாள் .

” ஏமாத்திடுவேன்னு நினைக்கறியா நீ ? அப்படி நினைச்சா என்னை நம்பி உண்மையை சொல்ல சொல்லிருப்பியா ஷாலு ? “

” இல்லை கிருஷ் . உன்மேல நம்பிக்கை இருக்கு “

மெல்ல உரைத்தாள் ஷாலு . 

” தட்ஸ் குட் .ஆரம்பத்துல என் மேல கோவமா இருந்த மாதிரி நீ இருந்தாலும் , அப்பப்போ என்னை சைட் அடிச்ச தான ? “

 அவனின் உதட்டோர சிரிப்பில் அவளின் மனதில் இருந்த கள்ளத்தனதைக் கண்டுகொண்டான் என்று உணர்ந்த வைஷாலி மனதில் அவளையே திட்டிக் கொண்டாள்.

‘ அவ்ளோ ஒப்பனாவா சைட் அடிச்சோம் ? இல்லை இவன் சும்மா டகால்டி அடிக்கறானா ?’

கண்களை சுருக்கி அவனைப் பார்த்தவள் , 

‘கண்டுபிடிச்சுட்டான் தான் போல’ என்று நினைத்துக் கொண்டு வெளியே மறுப்பாக தலையசைக்கப் போனாள் .

” விநாயகர் மேல சத்தியமா சொல்லணும் “

என்று சரியாக கிடுக்கிப் பிடித்தான். அவளுக்கு இஷ்ட தெய்வம் விநாயகர் தான் என்று இவனுக்கு எவ்வாறு தெரியும் என்பது போல் பார்த்தவள் , பின்பு எப்படியேனும் உண்மையைக் கண்டறிய வேண்டி இதைப் புறம் தள்ளினாள் .

” சரி , அக்சப்ட் பண்ணறேன் . ஆனா , லைட்டா தான் . அதுவும் சஞ்சனா தான் உங்களை சைட் அடிச்சு என்னை உசுப்பேத்தி விட்டா.  அப்போ தான் நான் உங்களை லவ் பண்ணறேன்னு ரியலைஸ் பண்ணேன். ஆனா , நீங்களும் என்னை சீண்டிட்டே இருக்கவும் , எனக்கு கடுப்பு கணக்கே இல்லாம வர ஆரம்பிச்சது . இந்த லவ் அதுல வெளிய தெரியல கிருஷ் “

என்று ஒரே மூச்சாகக் கூறியவள் , கிருஷ்ஷின் பார்வை மாற்றத்தைக் கண்டதும் தான் அவனைக் காதலிப்பதை கடலை மிட்டாய் வாங்கியதைப் போல் கூறியதை உணர்ந்தாள் .

‘ அட கடவுளே ! இதென்ன வைஷாலிக்கு வந்த 

விபரீதம் ‘

” கம் அகயின் ஷாலு . டூ யூ லவ் மீ !! “

அவளருகே நெருங்கி அமர்ந்தவன் , ஆர்வமுடன் அவளின் கையைப் பற்ற 

” அது வந்து … லவ்வான்னு தெரியல கிருஷ் “

சிரித்தபடியே  மழுப்பலாக வைஷாலி சொல்ல , 

இன்னமும் அவளின் வாயைக் கிண்ட முடிவெடுத்தான் .

‘ நீ கிண்ட அதென்ன கிச்சடியா ? ‘ 

மனதின் குரலை உரல் வைத்து இடித்தவன் ,

” ஷாலு , அன்னைக்கு ரௌடீஸ் கிட்ட மாட்டுனப்போ நான் வந்தேன் தான ? அந்த டைம்ல என்ன ஃபீல் பண்ண ?”என்று கேட்க , 

‘ திரும்பவும் முதல்ல இருந்தா ?’என்று நம்முடன் சேர்ந்து வைஷாலியும் சோர்ந்தாள்.

” சேஃப்பா  ஃபீல் பண்ணேன் கிருஷ் . அன்னைக்கு மட்டும் நீ வரலைன்னா நான் என்ன பண்ணிருப்பேன்னு உண்மையா தெரியல .நெக்ஸ்ட் நீ எங்க வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்துக்கிட்ட இல்ல !! அப்ப ரொம்ப ஹேப்பியா இருந்தேன் “

அவனின் அடுத்த கேள்வியைக் கணித்து அதற்கும் பதிலை சொல்லிவிட்டாள் வைஷாலி.

” ஹ்ம்ம் . நீ ஹேப்பின்னு தெரியும் ஷாலு . என்னோட கேள்வி அது இல்ல “

‘ நம்ம புத்திசாலித்தனத்தைப் பாராட்ட மாட்டானே ‘

என்ன கேள்வி என்பது போல் அவனையே பார்த்தாள் வைஷாலி .

” யாரோ ஒருத்தன் , உங்க வீட்ல யாரும் இல்லாதப்போ உன்கூட இருந்தது உனக்குத் தப்பா தெரியலையா ? எப்படி ஷாலு அதை அலௌ 

பண்ண ?”

” யாரோ ஒருத்தன்னா கண்டிப்பா அலௌ பண்ணிருக்க மாட்டேன்.

என்னோட கிருஷ் கூட இருக்கும்போது எனக்கென்ன பயம் ! “

என்று சொல்லிவிட்டு முன்னைப் போலவே மாட்டிக்கொண்டதை உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டாள் .

” எனக்கான ஆன்ஸர் கிடைச்சாச்சு ஷாலு . இது போதும் “

அவளின் தோளின் மேல் உரிமையாகத் தன் கையைப் போட்டபடி கிருஷ் கூற , சற்றே நெளிந்தாள் வைஷாலி . என்னவென்பது போல் அவன் பார்க்க , 

” இல்ல , நான் இன்னும் சொல்லவே இல்லையே …”

என்று இழுத்தாள் அவள் .

” நீ இந்த ஜென்மத்துல சொல்ல மாட்ட ஷாலு . இத்தனை நாளா மரியாதை தந்தவ இப்பவெல்லாம் நீ,  வா , போன்னு தான் என்கிட்ட பேசற . நீயே அதை நோட்டீஸ் பண்ணிருக்க மாட்ட ஷாலு . 

தென் , அன்னைக்கு கார்த்திக் கல்யாணத்தப்போ உன்னை தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொன்னேன் . அப்பவும் சரி , அப்பறமும் சரி  அதை எதிர்த்து எதையும் நீ சொல்லல . 

உன்னை ஷாலுன்னு கூப்பிட்டா உனக்கு எப்பவும் பொசுக்குன்னு கோபம் வரும் . ஆனா இப்ப ?? இதுவே எனக்கு போதும். 

ஆனாலும் உன் வாயால அதைக் கேட்கணும்னு ஆசைப்பட்டேன். எங்க இந்த கன்னிப் பையன் ஆசை கானல் நீர் தான் போல “

பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கிருஷ் கூற , 

அவன் சொன்னதெல்லாம் உண்மை தான் என்று அப்பொழுதே உணர்ந்த வைஷாலி , அடுத்த நொடி  என்ன செய்கிறோம் என்று யோசிக்காமல் பூட்டவிழ்த்த பொம்மை போல் அவனின் கன்னத்தில் மென்மையாகத் தன் முதல் முத்திரையைப் பதித்து அவன் சுதாரிக்கும் முன்னர் ஓடப் பார்த்தாள்.

ஒரு நொடி தான் என்றாலும் இனிமையாக அதிர்ந்த கிருஷ் , அவளின் கையைப் பிடித்து தன்னருகே இழுத்து அவளை நகர விடாமல் அமர்த்திக் கொண்டான்.

” எனக்கு எதையுமே வட்டி முதலுமா திருப்பி தர பழக்கம் இருக்கு ஷாலு “

மிக அருகே கேட்ட அவனின் காதலான குரலில் தடுமாறினாள் வைஷாலி .

“கிருஷ் , ப்ளீஸ்..”

என்றபடி கண்ணை இறுக மூடிக் கொண்டாள்.

அவளின் நிலையைக் கண்டு தடம் புரண்ட மனதை அடம் பிடித்து அடக்கி வைத்தான் கிருஷ் .

சட்டென எழுந்து கொண்டவன் , 

“உன்னோட பாஸ்ட் பத்தி எல்லாமே நீ தெரிஞ்சுக்கோ ஷாலு. நான் சொல்லறேன் “

என்க , கண்களைத் திறந்த அவளின் மனநிலையும் உடனே மாறியது.

கிருஷ் ஆரம்பம் முதல் சுருக்கமாக அவளுக்கு நேர்ந்த விபத்து வரை கூறினான் .

கோபம் , காதல் , கடுப்பு , கனிவு , குரோதம் , குஷி என அனைத்தும் கலந்த கலவையான உணர்ச்சி அவளுள் பொங்கியது. 

தந்தையின் தகிடுதத்தம் , கிருஷ்ஷின் காதல் , ரஞ்சித்தின் ரௌடித்தனம் , ஜகதீஷின் ஜகஜ்ஜாலம் எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டாள்.

அவன் கூறி முடித்ததும் அவளிடம் சற்று நேரம் பேச்சே வரவில்லை . பின்னர் , மெல்ல கிருஷை நோக்கியவள் ,

” கிருஷ் , நம்ம லவ் பண்ணோமா முன்னாடியே ! எனக்கு எதுவும் நியாபகம் இல்லையே “

கண்களில் நீர் துளிக்க , தொண்டை கமறக் கேட்டாள் வைஷாலி . 

அவளின் முன்னே சென்று கீழே மண்டியிட்டு அமர்ந்த கிருஷ் , 

” இங்க பாரு ஷாலு . இதுக்காக தான் உன்கிட்ட சொல்லாம இருந்தேன் . இப்ப நீ என்னை லவ் பண்ணற தான . அது போதுமே நமக்கு ! தேவை இல்லாம யோசிக்காத “

என்று பொறுமையாகக் கூறினான்.

” எனக்கு கில்டியா இருக்கே கிருஷ் . உன்னோட லைஃப் ஸ்டைலே மாறி போச்சே .எல்லாம் என்னாலதான . “

” நீ என்ன பண்ண ஷாலு ? நம்ம லவ் எப்பவுமே ஸ்ட்ராங்கா இருக்கான்னு கடவுள் சின்ன டெஸ்ட் வெச்சிருக்காரு அவ்ளோதான் “

” இல்ல கிருஷ் , எவ்ளோ கஷ்டம் உனக்கு ? ஆனா இது எதுவுமே தெரியாம நான் நல்லா வாழ்ந்திருக்கேன் நம்ம பிரிஞ்சப்போ “

” அதையே திரும்ப திரும்ப சொன்னா அவ்ளோதான் ஷாலு . அடிச்சு பல்லைத் தட்டிடுவேன் பாரு . எனக்கு நம்ம பாஸ்ட் முக்கியமே இல்லை .உனக்கு நியாபகம் வரலைன்னாலும் பரவால்ல. எனக்கு நீ , உனக்கு நான் அவ்ளோதான் . புரியுதா ! “

என்று முடிவுபோல் கூற , அதற்கு மேல் பேச முடியாமல் இருந்துவிட்டாள் வைஷாலி.

” சரி , உனக்குத் தெரிய வேண்டிய எல்லாமே தெரிஞ்சுதா இப்ப ? “

அவனின் கேள்விக்குத் தலையை ஆட்டியவள் , 

” என்னோட அம்மா இன்னிக்கு வந்தவங்க தான். ஆனா , எனக்கு அவங்களையும் தெரியல . பெத்த அம்மாவ கூட மறந்துட்டேனா “

மறுபடியும் அழப் போனவளை ஒரு அதட்டு அதட்டி அடக்கினான் கிருஷ் .

” இனிமே நடக்க வேண்டியதைப் பாரு . உன்னோட அப்பாவை நீ பார்க்கணும் தான . வா , நான் கூட்டிட்டு போறேன் “

என்றபடி எழுந்தான் கிருஷ் .

” நான் வரலை கிருஷ். அவரு பண்ண காரியத்தைக் கண்டுக்காம இருக்க நானா என்ன கல்லா ? “

” சகிச்சுக்கோன்னு எப்ப சொன்னேன் ஷாலு ? என்ன இருந்தாலும் அவரு உன்னோட அப்பா . அவரோட கடைசி ஆசையை நீ நிறைவேத்த மாட்டியா !”

அவன் இவ்வாறு கூறியதும் அதிர்ச்சியுடன் நிமிர்ந்தவள் , அவனது கூற்றின் பொருளை அறிந்தாள் . 

பின்னர் ஒரு முடிவுடன் அவளும் சரி என்றாள். 

” இப்ப பால்கனி வழியா தான் போகணும் ஷாலு “

என்றவன் முன்னே செல்ல , 

” ஏன் ? “

என்று சந்தேகமாக அவள் கேட்க , 

” சுபம் சீக்கிரம் ஷாலு. எண்டிங் சீன் கொஞ்சம் சென்டியா இருக்கட்டும் . இப்ப போனா நீ அம்மா கூட தான் இருப்பேன்னு அடம் பண்ணுவ “

என்று சிரித்தான் . அவள் வேகமாக சென்று அவனின் முதுகில் மொத்த , அதை சுகமாக வாங்கிக் கொண்டே இருவரும் இறங்குவதற்கான முயற்சியில் இறங்கினான்.

அந்த பிரம்மண்டமான பங்களாவில் கிட்டத்தட்ட பைத்தியம் போல் அமர்ந்திருந்தான் ரஞ்சித் . அவனருகே வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தார் ராஜஷேகர்.

” கமிஷனர் சர் , உங்க கன் ரெடி தான ? கிருஷ் வந்துட்டே இருக்கான் . பீ ரெடி டு ஷூட் ரஞ்சித் “

என்று தர்ஷினி சொல்ல , மெல்லத் தன் துப்பாக்கியைத் தடவிக் கொண்டார் ராஜஷேகர் . 

கண்கள் ரஞ்சித்தை நோக்க , அவனின் கெஞ்சலான பார்வை அவரை ஒன்றும் அசைத்துவிடவில்லை . 

தன்னுடைய பெண்ணை மீட்டுவிட்டால் போதும் என்ற ஒரே குறிக்கோளுடன் அவர் இருக்க , வைஷாலியோ அதற்கு நேர் எதிர் எண்ணத்துடன் வந்து கொண்டிருந்தாள்.

சொக்கட்டான் பார்வை தொடரும்…

error: Content is protected !!