Lovely Lavi – Epiosde 10

அத்தியாயம் – 10

ஹரி, யாதவ், சங்கர், லவி, நித்திலா என அனைவரும் தங்கள் வாழ்வின் போக்குத் திசை மாறப்போவது தெரியாமல், செமினார் அறையில் அவரவர் சிந்தனையில் மூழ்கி இருந்தனர்.

ஹரி, லவி விஷயமறிந்து மாணவர்கள் குழுமியிருக்கும், செமினார் அறைக்குள் நுழைந்த பிரின்சிபல், “என்ன நடக்குது இங்க? ஒரு டிசிப்ளின் இல்லை. ஹரி, லவி இரண்டு பேரையும் நான் டிஸ்மிஸ் பண்றேன்.” என்று அவர் கோபமாகக் கூற, அவரை அசட்டையாகப் பார்த்தான் ஹரி.

யாதவ், சங்கர், நித்திலா மூவரும், அவரை அதிர்ச்சியாகப் பார்க்க, “எதுக்கு சார் என்னை டிஸ்மிஸ் பண்ணனும்? சொல்லப்போனா, நீங்க இந்த விஷயத்தைப் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு போயிருக்கணும். எனக்குப் பாதுகாப்பு கொடுக்கணும்.” என்று லவி தெளிவாகக் கூற, ‘இவளுக்குப் பாதுகாப்பா?’ என்று ஹரி உற்பட, அனைவரும் லவியை பிரமிப்பாகப் பார்த்தனர்.

காவல் நிலையம் என்ற சொல்லில், அனைவரும் லவியை அதிர்ச்சியாகப் பார்க்க, “சார், நீங்க என்ன நடந்ததுன்னு என்கிட்ட கேட்ருக்கணும். நீங்க எதுவுமே கேட்கலை.” என்று லவி அழுத்தமாகக் கூற, “லவி, நாங்க என்ன பண்ணனும்ன்னு நீ சொல்ல வேண்டாம். எனக்குத் தெரியும்.” என்று பிரின்சிபல் கராறாக கூறினார்.

சங்கர், யாதவ் இருவரும் அவருடைய முன்னாள் மாணவர்கள். நன்மதிப்பும் பெற்றவர்கள். “சார், பொண்ணுங்க பாவம். அவங்க எந்தத் தப்பும் பண்ணலை. கொஞ்சம் அவசரப்பட்டுட்டாங்க அவ்வுளவு தான். இப்படி டிஸ்மிஸ் பண்ண அவங்க லைப் ஸ்பாயிலாகிடும்.” என்று மென்மையாக மரியாதையாக எடுத்துரைத்தான் சங்கர். “சார், கொஞ்ச நேரத்தில் கம்பெனி ஹெச்.ஆர் வந்துருவாங்க. அவங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா, நம்ம காலேஜ் இமேஜ் ஸ்பாயிலாகிடும்.” என்று யாதவ் சங்கரின் கூற்றுக்கு வழு சேர்ப்பது போல் பவ்யமாகக் கூறினான் யாதவ்.

பிரின்சிபல் சிந்திக்க, “சார்… நான் எந்தத் தப்பும் பண்ணலை. கையில் வச்சிருக்கிற பையில் பெப்பர் ஸ்ப்ரே, சில்லி பவுடர் வச்சிருக்கிறது மட்டுமில்லை. இந்த மாதிரி சைபர் கிரைம், எப்படி டீல் பண்ணணுமுன்னு எங்களுக்குத் தெரியும், ஆதாரத்தோடு ஒரு மெயில், எங்க மொபைல் நம்பர் கொடுத்தா போதும். பக்காவா ஆக்ஷன் எடுப்பாங்க. நான் டீல் பண்ணிக்குறேன். அவங்க சொல்லுவாங்க என்மேல் தப்பு இருக்கா இல்லையானு.” என்று உறுதியாகக் கூறினாள் லவி.

‘இவ பிரச்சனையை விடமாட்டா போலியே. மாமா என்ன சொல்லுவாங்களோ?’ என்று யாதவ் லவியை பரிதாபமாகப் பார்க்க, “சார், இந்தப் பொண்ணு நடந்ததை நினைச்சி பயப்படலை. பயந்தா, நாம அதைக் காரணமா வச்சி, மிரட்டி இந்த விஷயத்தை மூடி மறச்சிறலாம். ஆனால், லவி போலீஸ், சைபர் கிரைம் அப்படி இப்படின்னு விவரமா பேசுது சார். இந்தப் பொண்ணை எதிர்த்தா, நமக்குத் தான் சிக்கல். நம் காலேஜில் பொண்ணுக்கு பாதுகாப்பில்லைன்னு நம்ம மேல விஷயத்தைத் திசை திருப்பிருவாங்க.” என்று ஒரு பெண் ஆசிரியர் அவர் காதில் கிசுகிசுத்தார்.”ஹரி பண்ணது தப்பா இருந்தாலும், நீ பண்ணது சரியா?” என்று லவியை பார்த்துக் கிடுக்கு பிடியாகக் கேட்டார், தலைமை ஆசிரியர்

“சார். ரொம்ப சென்சிட்டிவான விஷயம், அது தான் அவசரப்பட்டிருப்பாங்க.” என்று சங்கர் கூற, ‘இவன் ஏன் குறுக்கப் பேசுகிறான்?’ என்ற எண்ணத்தோடு, “அதுக்கான பனிஷ்மென்ட் என்னன்னு சொல்லுங்க. ஐ வில் அக்செப்ட் இட்.” என்று அவள் தவறை ஒத்துக்கொள்ளும் விதமாக நிமிர்வாகக் கூறினாள் லவி.

“ஹரி வில் பீ டிஸ்மிஸ்ட். லவி இஸ் சஸ்பெண்டட் பார் எ வீக்.” என்று கூறி பிரின்சிபல் வெளியே செல்ல, ஹரி கோபமாக வெளியே சென்றான்.

“உன்னை அப்பா நல்லவன்னு சொல்றதில் ஒரு உண்மை இருக்கு. நல்லா நடிக்குற அப்பாவி மாதிரியே…” என்று சங்கரைப் பார்த்துக் கேலியாகக் கூறியபடி, அவள் இடத்தை நோக்கிச் சென்றாள் லவி.”ஏய்!” என்று யாதவ் தன் பற்களைக் கடிக்க, சங்கர் யாதவின் கைகளைப் பற்றி மறுப்பாகத் தலை அசைத்தான்.

           “சங்கர், நித்திலாவை பாரு… எப்படி பயந்திருக்கான்னு. லவியை பாரு, கொஞ்சம் கூடப் பயமில்லை. லவிக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? எவ்வுளவு பெரிய விஷயம் நடந்திருக்கு? வீட்டுக்குத் தெரிஞ்சா என்ன ஆகும்? இப்படி பயமில்லாம எவ்வளவு தெனாவட்டா போறா பார்த்தியா?” என்று பதட்டமாகவும், அக்கறையாகவும் கேட்டான் யாதவ்.

“யாதவ், நீ அவளைப் பாராட்டணும்.” என்று சங்கர் கூற, அவனைக் கோபமாக முறைத்தான் யாதவ். “இல்லை, இவ இதுக்கு முன்னாடி செய்ததெல்லாம் நான் சரின்னு சொல்லமாட்டேன். ஆனால், இன்னைக்கி செய்தது நூறு சதவீதம் சரி. பயந்து என்ன ஆகப்போகுது? பொண்ணுங்க தைரியமா நின்னாலே, பாதி பிரச்சனை சரி ஆகிடும். குருட்டு தைரியம் வேண்டாம். ஆனால், இவ கிட்ட இருக்கிறது குருட்டு தைரியமெல்லாமில்லை. தெளிவா பிளான் பண்ணி ஹரிக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கா.” என்று சங்கர் கூற, யாதவ் சிந்தனையில் வாய்ப்பட்டவனாகத் தலை அசைத்தான்.

கல்லூரியில் மரத்தடியில் அமர்ந்திருந்த ஹரி, அருகே இருந்த மரப்பலகையைக் கோபமாகக் குத்தினான்.

“டேய்… லவியை கதற விடணும்டா.” என்று கூற, அவன் நண்பனோ, “ஒன்னும் பண்ண முடியாது.” என்று ஹரியின் முகம் பார்த்துக் கூறினான். ஹரி வேகமாக எழுந்து நின்று, கொத்தாக அவன் சட்டையைப் பிடிக்க… “என் சட்டையைப் பிடிச்சி ஒரு பிரயோஜனமில்லை. லவி விவகாரமானவ, வேண்டாமுன்னு நான் சொல்லியும் நீ கேட்கலை. லவி உன்னை மிரட்டணுமுன்னு நினைச்சிருந்தா  தனியா அமைதியா மிரட்டியிருக்கலாம். அவ வேணுமுன்னே திட்டம் போட்டு ஊரறிய விஷயத்தைப் பெருசு பண்ணிட்டா. நீ அவளை மிரட்டணுமுன்னு திட்டம் போட்டிருந்த… பொதுவா இந்த மாதிரி விஷயத்தைப் பொண்ணுங்க யார் கிட்டயும் சொல்லப் பயப்படுவாங்க. அது தான் நமக்குச் சாதகம். ஆனால், லவி புத்திசாலித்தனமா மொத்த காலேஜீக்கும் சொல்லிட்டா. இன்னைக்கி அவ வீட்டுக்கும் விஷயம் தெரிஞ்சிரும். இனி, அவளை நீ மிரட்ட முடியாது. அதுமட்டுமில்லை, இனி லவிக்கு என்ன பிரச்சனைனாலும், உன்மேல் சந்தேகம் திரும்பும். தைரியமா, புத்திசாலித்தனமா அவ விஷயத்தை வெளிப்படுத்தித் தன்னை பாதுகாத்துக்கிட்டா.” என்று நிலைமையை எடுத்துக் கூறினான் ஹரியின் நண்பன்.

“எதை எதைத் தனியாகச் சமாளிக்க வேண்டும். எதை எதை வெளியே சொல்லணுமுன்னு லவிக்கு சரியா தெரிந்ச்சிருக்கு.” என்று ஹரியின் நண்பன் கூற, இதே விஷயத்தை லவி நித்திலாவிடமும், சங்கர், யாதவிடமும் கூறிக்கொண்டிருந்தனர்.

தன் நண்பனின் பேச்சிலிருந்த நியாயத்தில், ஹரியின் கைகள் தானாகக் கீழே இறங்கியது.

ஹரி யோசனையாக அந்த மரத்தடி பலகையில் அமர்ந்தான். “வெளிய தெரியப்படுத்தி அவ புத்திசாலித்தனமா நடந்துக்கிட்டா, நாம விட முடியுமா?” என்று நக்கலாகக் கேட்டான் ஹரி.

ஹரியின் கேள்வியில், நண்பர்கள் அவனைக் குழப்பமாகப் பார்க்க, “அவளுக்கு ஏதோ கல்யாணம் பேசிருக்காங்கன்னு நான் கேள்விப்பட்டேன். நாமளும் அவ பாணியிலே போவோம். அவங்க வீட்டில் இந்த விஷயத்தை நமக்கு சாதகமாகத் தெரியப்படுத்துவோம். இனி நேரடி தாக்குதல் இல்லை.மறுமுகமாக அடிக்கணும். அவ வாழ்க்கை முழுக்க, என் கண்முன்னாடி கதரனும்.” என்று கூறி ஹரி நகர்த்திய அனைத்து காய்களும் வெற்றிகரமாக நகர்ந்தது.

மாலையில், லவியின் சஸ்பெண்ட் விஷயமறிந்து, லவியின் தந்தை நடராஜ் யாதவ், சங்கர், லவி, நித்திலா என அனைவரையும் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

அனைவரும் ஒரே பதிலாக லவியின் மீது எந்தத் தப்புமில்லை, என்று லவிக்கு சாதகமாகப் பேசிக் கொண்டிருந்தனர். கல்யாணி எதுவும் பேசவில்லை. மௌனமாகத் தன் மகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். லவியின் முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லை. வழக்கமாக இருக்கும் கேலியோ, குறும்போ இன்றில்லை. ‘எதையும் வெளிக்காட்ட மாட்டா…’ என்று எண்ணி, தன் கவனத்தை தன் கணவனின் பக்கம் திருப்பினார்.

அப்பொழுது, நடராஜின் தங்கை, யாதவின் தாயாகக் கோபமாக லவியின் வீட்டிற்குள் நுழைந்தார்.

“அண்ணி வாங்க…” என்று யாதவின் தாயாரை, வரவேற்றார் கல்யாணி. “நான் விருந்து சாப்பிட வரலை அண்ணி. நீங்க லவியை சரியாகக் கண்டிக்கிறதில்லை. உங்க வளர்ப்பு சரி இல்லாதது தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்.” என்று கல்யாணியைக் குற்றம் சாட்டினார் யாதவின் தாயார்.

“அம்மா…” என்று யாதவ் தன் தாயைக் கோபமாக அழைக்க, “நீ சும்மா இரு டா… பெண்களை அடக்கி, அடக்க ஒடுக்கமா வளர்க்கணும்.” என்று கோபமாகக் கூறினார் யாதவின் தாயார்.

“எதுக்கு?” என்று தெனாவட்டாகக் கேட்டாள் லவி.

“நீங்க அமைதியா இருந்தா ஒரு பிரச்சனையும் வராதில்லை…” என்று தன் அறிவை முழுமையாக பயன்படுத்தி கூறினார் யாதவின் தாயார்.

“அத்தை… முதலில் நாட்டுநடப்பைக் கண்ணைத் திறந்து பாருங்க. எல்லா விஷயத்தையும் காது கொடுத்துக் கேளுங்க. பிரச்சனை பசங்களால்தான் அதிகமுன்னு புரியும்.” என்று லவி உறுதியாகக் கூறினாள்.

“லவி… இப்ப நான் புரிஞ்சிக்கிறது முக்கியமில்லை… நாம பிரச்சினையைப் பார்த்து ஒதுங்கிப் போக வேண்டியது தானே? எதுக்கு எல்லாத்தயும் சுருட்டி, நம்ம தலையில் போட்டுக்கணும்.” என்று தனக்கு நியாயம் என்று பட்டதை யாதவின் தாயார் கேட்க, நடராஜ் அவர்களை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“உன்னை ஒரே பொண்ணுன்னு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சு…” என்று தன் அண்ணனையும், அண்ணியையும் குற்றம் சாட்டும் விதமாகக் கூறினார் யாதவின் தாயார்.

சங்கர், யாதவ் இருவரும் செய்வதறியாமல் இருக்க, நித்திலா லவியை அமைதியாக இருக்கும் படி செய்கை காட்டி கெஞ்சினாள்.

“குற்றம் செய்றவங்க மட்டும் தப்பானவங்க இல்லை அத்தை. அதை அமைதியா பார்த்துட்டு ஒதுங்கிப் போறவங்களும் தப்பானவங்க தான்.” என்று லவி கோபமாகக் கூற, “லவி…” என்று நடராஜின் குரல் ஓங்கி ஒலித்தது. அப்பொழுதே நடராஜின் நெற்றியில் வியர்வை துளிகள். அவர் நெஞ்சில் சுருக்சுருக்கென்று வலி எடுக்க ஆரம்பித்தது.

“அண்ணா… இப்ப கண்டிச்சி என்ன பிரயோஜனம்.” என்று யாதவின் தயார் கேட்க, “அம்மா… நீங்க வீட்டுக்குக் கிளம்புங்க.” என்று யாதவ் கெஞ்சினான்.

“யாதவ்… நீ சொன்னது சரி தான் டா… இவ கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த வேலைக்காக மாட்டா. இந்தக் கல்யாணம் வேண்டாம்டா…” என்று யாதவின் தயார், யாதவை பார்த்து வருத்தமான குரலில் கூற, “அண்ணி…” என்று அலறினார் கல்யாணி.

தன் தங்கை யாதவின் தாயாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டு, அவர் நெஞ்சோரமாக இருந்த வலி கொஞ்சம் கொஞ்சமாக முதுகு பக்கம் பரவியது.

“அத்தை… நீங்கப் பொறுமையா இருங்க. ” என்று கல்யாணியை பார்த்துக் கூறி, தன் கவனத்தை தாயின் பக்கம் திருப்பினான் யாதவ்.

“அம்மா, நீங்கக் கல்யாணம் பேசும் போதும் நிதானமா இல்லை. இப்பவுமில்லை. எனக்கும், லவிக்கும் கல்யாணம் நடக்கும். நீங்க நினைக்கிறபடி கல்யாணத்தை உறுதி செய்றது, நிறுத்தருதுன்னு விளையாடுறீங்களா? அம்மா நீங்கத் தலை கீழா நின்னாலும், எனக்கும் லவிக்குமான திருமணத்தை நிறுத்த முடியாது. ” என்று காட்டமாகக் கூறினான் யாதவ்.

தாய்க்கும், மகனுக்கும் மோதல் ஏற்பட, அதை உணரும் நிலையில் நடராஜ் இல்லை. வலியால் மௌனமாகத் துடித்துக்கொண்டிருந்தார்.

சங்கர், நித்திலா, கல்யாணி என் மூவரும் யாதவையும், அவன் தாயையும் செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

‘இவன் இப்ப பார்த்துப் பாசத்தை பொழியரானே.’ என்று எண்ணியபடி, லவி தாய்க்கும் மகனுக்கும் இடையில் புகுந்து, “அத்தை… ஒரு பிரச்சனையுமில்லை. ஒரு நல்ல அடக்கமான, அமைதியான, நீங்க என்ன சொன்னாலும் தலையை ஆட்டுற மாதிரி ஒரு நல்ல மருமகளை பாருங்க.” என்று லவி நக்கலாகக் கூற, ‘இவ வேற நேரங்காலம் தெரியாம…’ என்று லவியின் கைகளைப் பிடித்து, அமைதியாக இருக்கும் படி தன் கண்களால் சமிங்கை செய்தாள் நித்திலா.

வலி அதிகமாகி நடராஜ் தான் அமர்ந்திருந்த இடத்தில், சோர்வாக சாய்ந்தார்.

இங்கு நடந்து கொண்டிருந்த பிரச்சனையில் யாரும் அவரைக் கவனிக்கவில்லை.

“வேற எங்கையோ ஏன் லவி பொண்ணு தேடணும். நித்திலா தான் என் மருமகள். அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம்.” என்று யாதவின் தாய் கூற, அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர்.

‘படித்துக் கொண்டிருக்கும் தன் தோழியின் வாழ்க்கையை தானே கெடுத்துவிட்டோம்.’ என்ற குற்ற உணர்வு லவியின் முகத்தில் தோன்றியது. பாவம் லவி அறியவில்லை அவளுக்கும், அவளைச் சுற்றி இருப்பவர்களுக்கும் இன்னும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கிறதென்று!

‘லவியின் வாழ்க்கைக்கு நான் இடைஞ்சலா. என் உயிருள்ள வரை என்னால் அப்படிச் செய்ய முடியுமா?’ என்ற கேள்வி நித்திலாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

யாதவ் தன் தாயின் சொல்லில் சங்கடமானான், ‘ஏதோ ஒரு பெண்ணின் உள்ளத்தைக் காயப்படுத்த வேண்டுமென்பது என் விதியா?’ என்ற எண்ணமே அவனுக்கு மேலோங்கியது.

சங்கரின் கவனம் நடராஜின் பக்கம் திரும்ப, அவர் சரிந்து கீழே விழுந்தார். “அங்கிள்…” என்று சங்கர் பயத்தோடு அழைக்க, “அப்பா… அப்பா… அப்பா.” என்று அலறினாள் லவி.

    ஒரு பெண் துணிந்து, நிமிர்ந்து வாழ்ந்தால் இந்த சமுதாயம், அவள் குடும்பம் அவளை அப்படியே ஏற்றுக் கொள்ளுமா?

 லவ்லி லவி வருவாள்…