Vizhi17

மின்னல் விழியே – 17

 

“அண்ணா..!! அண்ணா..!! நான் காலேஜ் கிளம்புறேன்..” வீட்டு வாசலில் நின்று கத்திக் கொண்டிருந்தாள் சுமித்ரா… உள்ளே தனது ப்ராஜக்ட் ரிப்போர்ட்டுகளை சரி பார்த்துக் கொண்டிருந்த திரு அவளது கத்தலில் வெளியே ஓடி வந்தான்…

 

சுமித்ரா அவள் வீட்டின் அருகிலுள்ள கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி நர்சிங் படிக்கிறாள். அனைவரும் டாக்டராக வேண்டும் என ஆசை படும் போது அவள் நர்சிங் படிப்பை தேர்ந்தெடுத்தாள். நோயாளிகளுக்கு நேரடியாக உதவி புரிய வேண்டும் என்பதே அவளது லட்சியம்.. பனிரெண்டாம் வகுப்பில் நிறைய மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அவளது ஆசையை மதித்து நர்ஸிங் படிப்பில் சேர்த்துவிட்டிருந்தார் அவளது தந்தை தயாளன்.  

 

“சுமி… எத்தனை தடவை தான் இதை சொல்லுவ??? வீட்டுக்குள்ள வச்சி என் காதுலையும் அப்பா காதுலையும் ரத்தம் வர்ற அளவுக்கு கத்தின இப்போ வாசல்ல வச்சி… பாரு பக்கத்து வீட்ல இருக்கிறவங்க கூட எட்டிப் பார்க்குறாங்க…” தங்கையை நினைத்து அலுத்துக் கொண்டான் திரு.

 

“ப்ச்… பாசத்துல பண்ணின நீ இப்படி தான் சொல்லுவ… போ நான் நாளைல இருந்து உன்கிட்ட சொல்ல மாட்டேன்…” சிறு பிள்ளையாக அடம்பிடித்தவளை கண்டு திருவிற்கு சிரிப்பு வந்தது.. இன்று இப்படி கூறுபவள் நாளையும் இதே போல் தான் கத்துவாள் என்பது அவனுக்கும் தெரியுமே…

 

“நேத்து கூட நீ இதை சொன்னதா எனக்கு ஞாபகம் சுமிம்மா….” என்றவன் சிரிக்க, அதில் வெகுண்டவள் தரையை காலால் உதைத்துவிட்டு, தன் கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள்… இவை அனைத்தையும் பக்கத்து வீட்டு பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் அகில்.

 

அகிலுக்கும் அவன் தந்தைக்கும் எப்போதும் ஒத்துப் போகாது என்பதால் அவன் சென்னையில் அத்தனை கல்லூரிகள் இருந்தும் பெங்களூரில் தங்கி படித்துக் கொண்டிருந்தான். இங்கே முதல் நாள், கல்லூரியில் அறிமுகமானவன் தான் திரு.

 

திரு மிகவும் கலகலப்பானவன் என்பதால் எளிதாகவே அகிலோடு நட்புக் கொண்டான். அதுவும் அனைவரும் தன்னை திருவென்று அழைக்கும் போது அகில் மட்டும், வகுப்பில் பார்த்த முதல் நாளிலிருந்து அரசு என்றே அழைப்பது திருவிற்கு அவனது தாயை ஞாபகப்படுத்த, அன்றிலிருந்து அகில் திருவிற்கு உற்ற தோழனாகி போனான்.

 

நான்கு வருடங்ளில் அவர்களின் நட்பும் இறுகியிருந்தது. அதுவே இருவரையும் மீண்டும் ஒரே கல்லூரியில் எம்.பி.ஏ சேர வைத்தது. பி.ஈ படிக்கும் போது அகில் ஹாஸ்டலில் தங்கியிருந்தான் ஆனால் மேற்படிப்பின் போது அவனுக்கு ஹாஸ்டல் பிடிக்காமல் போகவே திருவின் வீட்டின் அருகே, காலியாக இருந்த இந்த வீட்டில் திருவின் உதவியோடு குடிபுகுந்தான்.

 

முதலில் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் பின் திருவின் தந்தையின் கட்டாயத்தின் பேரில் அவர்கள் வீட்டில் சாப்பிட ஆரம்பித்தான் அதுவும் காலை வேளை மட்டுமே… மதியம் காலேஜ் கேன்டினிலும், நைட் ஹோட்டலிலும் பார்த்துக் கொள்வான். காலை கூட சுமி காலேஜிற்கு கிளம்பி சென்ற பிறகே அவர்கள் வீட்டுக்கு செல்வான். அவள் எப்போது செல்கிறாள் என்பதை தினமும் கேட்கும் இந்த சத்ததில் அறிந்துக் கொள்வான். இப்போதும் அதே போல் அவன் பால்கனியில் இருந்து சுமியை கவனித்துக் கொண்டிருந்தான்.  

 

ஓரக்கண்ணால் அகில் கவனிப்பதை கவனித்துவிட்ட சுமியும் திரு அறியாமல் அவனுக்கு ஒரு புன்னகையை சிந்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.. தினமும் இந்த அழைப்பு தனக்கானது என்பதால் அகிலும் அவளை மென்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவன் இங்கு குடிபுகுந்த இரண்டாண்டுகளில் அவனது மனதை கொள்ளையடித்திருந்தாள் சுமித்ரா.. சாந்தமான முகமும் பொறுப்பான அவளது குணமும் அகிலை அவளிடம் கட்டிப்போட்டது. கடந்த நான்கு வருடங்களில் என்னத்தான் திருவின் உயிர்த் தோழனாக இருந்தாலும் அகில் சுமியை பார்த்தது இல்லை. தங்கை இருக்கிறாள் என்று திரு கூறியிருந்தாலும் அதற்கு மேல் அகில் அவனிடம் எதுவும் கேட்டது இல்லை…ஆனால் இந்த வீட்டிற்கு வந்த பின் தான் அவர்களின் பாசப்பிணைப்பை கண்டு அவர்கள் கூட்டில் இணைய ஆசைப்பட்டது அவன் மனம்.

 

எப்போதும் பணம் பணம் என்று ஓடும் தந்தையை பார்த்து வளர்ந்தவனுக்கு முதன் முதலாக திருவின் குடும்பத்தை பார்த்து பொறாமையாக இருந்தது. திருவின் தந்தை தயாளன் வங்கியில் சாதாரண வேலையில் இருந்தாலும், தனது பிள்ளைகளிடம் நண்பன் போல் பழகுவதை பார்த்து அவனுக்கும் அப்படி ஒரு தந்தை வேண்டும் என்று பேராவல் எழுந்தது. கண்களில் ஏக்கத்துடன் அவன் பார்த்திருக்கும் போது திருவின் வீட்டினருக்கு உருகிவிடும். தங்களின் கூட்டில் அவனையும் இணைத்துக் கொண்டார்கள்.

 

சுமித்ராவுக்கும் அவனை பிடித்தது. எப்போதும் கண்ணியத்துடன் பழகும் அவனை விரும்ப தொடங்கியிருந்தது அவளது இதயம்.  இருவரும் காதலிக்க தொடங்கி இரண்டாண்டுகள் ஓடிவிட்டது. ஆனால் இந்த பார்வை பரிமாற்றத்தை தவிர வேறு எதுவும் பேசிக்கொண்டதே இல்லை… காதலை கூட பார்வையால் உணர்த்தினார்களே தவிர வாய் திறந்து சொல்லிக் கொண்டது இல்லை. அகிலுக்குள் ஒரு உறுத்தல் எங்கே தங்களது விஷயம் திருவிற்கு தெரிந்து தங்களை தவறாக நினைத்துவிடுவானோ என்று. அதனாலே சுமியுடன் பேச வேண்டும் என்று கொள்ளை ஆசை இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டான்.

 

சுமியும் தன் அண்ணன் தவறாக நினைத்துவிடுவானோ என்று நினைத்து, இந்த பார்வையை தவிர வேறு எதுவும் அவனிடம் பேச முயன்றதில்லை… அவனது ஒற்றை பார்வையே அவளுள் பூத்திருந்த காதலுக்கு போதுமானதாக இருந்தது.

 

இருவரின் பார்வை பரிமாற்றத்தை கண்டும் காணமல் திரு பார்த்துக் கொண்டு இருந்தான். தினமும் இந்த அழைப்பு அகிலுக்கானது என்று அவனுக்கும் தெரியும். ஆனால் காட்டிக் கொண்டது இல்லை.. அவர்களாக தன்னிடம் சொல்லும் நாள் வரை, அவன் கேட்க வேண்டாம் என்று நினைத்திருந்தான். அதோடு அகில் அவனின் உயிர் தோழன். தன்னை விட மிகவும் நல்லவன். இப்படி ஒருவன் தன் தங்கையின் வாழ்வில் வந்தால் நிச்சயம் அவள் நலமாக இருப்பாள் என்பது அவனது நம்பிக்கை.. ஒரு வேளை இருவரும் காதல் என்ற பெயரில் ஊர் சுற்றியிருந்தாலோ இல்லை பொய் சொல்லியிருந்தாலோ நிச்சயம் திரு கண்டித்திருப்பான். ஆனால் அவர்களின் பார்வை பரிமாற்றத்தை தவிர ஒரு நாள் கூட இருவரும் பேசி அவன் பார்த்தது இல்லை.. அதுவே தன் தங்கையை அகில் நிச்சயம் நன்றாக பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையை அவனுள் விதைத்திருந்தது..

 

சுமி சென்ற பின் திருவின் வீட்டிற்கு வந்த அகில் சாப்பிட்டுவிட்டு திருவோடு கல்லூரிக்கு கிளம்பினான். இது எம்.பி.ஏ படிப்பின் இறுதி வருடம் என்பதால் அவர்களுக்கு ப்ராஜக்ட் என நிறைய வேலைகள் இருந்தன.

 

நாட்கள் இப்படியே விரைய, சுமி படிப்பை முடித்து ஒரு மருத்துவமனையில் நர்ஸாக தன் பணியை தொடங்கினாள். திருவும் அகிலும் தங்களது எம்.பி.ஏ யை முடித்துவிட்டு ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்துக் கொண்டிருந்தார்கள்.

 

அகில் தன் குடும்பத்தை பற்றி எப்போதுமே பெரிதாக எதுவும் கூறியதில்லை. சுருக்கமாக தன் சகோதர சகோதரியை பற்றி கூறியிருந்தான். எதை பற்றியும் கவலை கொள்ளாமல் சுதந்திரமாக சுற்றி திரிந்த திருவுக்கும் அகிலின் குடும்பத்தை பற்றியெல்லாம் தோண்டி துருவி விசாரிக்க தோன்றியதில்லை.. ஆனால் விசாரித்திருக்க வேண்டுமோ என்று அவன் எண்ணும் நாளும் வந்தது.

 

திரு வேலை செய்துக் கொண்டிருந்த கம்பெனியில் அவனின் திறமையை பார்த்து அவனை டெல்கியில் இருக்கும் தங்களது தலைமை அலுவலகத்திற்கு மாற்றியிருந்தனர். அகிலுக்கும் வாய்ப்பு வந்தது, ஆனால் அவன் வேண்டாம் என மறுத்துவிட, திரு மட்டும் டெல்கி சென்றான்.  

 

திரு டெல்கி சென்று மூன்று மாதங்கள் கடந்திருக்க அகிலும் தன் அண்ணனின் திருமணத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்னை சென்றிருந்தான்.

 

அவனை காணாமல் சுமி தான் மிகவும் சோர்ந்த போனாள். அதுவும் அகில் சென்று ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட அவளுக்கு பயம் அதிகரித்தது. வந்துவிடுவான் வந்துவிடுவான் என்று எவ்வளவு தான் தன்னை தானே தைரியப்படுத்திக் கொண்டாலும் நாட்கள் செல்ல செல்ல மனதளவில் சோர்ந்து போனாள். அது அவளது முகத்திலும் பிரதிபலித்தது.

 

எப்போதும் உற்சாகமாக வளைய வரும் மகளின் சோர்வு தயாளனுக்கு யோசனையாக இருந்தாலும் வேலையில் ஏதாவது பிரச்சனையாக இருக்கலாம் என்று விட்டுவிட்டார். ஆனால் நாட்கள் கடக்க கடக்க சுமி எதிலும் நாட்டம் இல்லாமல் பித்து பிடித்தவள் போல் திரியவும் அவருக்கு பயம் எழுந்தது.. பலவிதமாக அவளிடம் கேட்டு பார்த்தும் அவள் பதில் கூறாததால் அவரும், அவளாக சரியாகி விடுவாள் என்று நினைத்தார். முடிந்தளவு வீட்டில் அவள் வேலை செய்யாமல் பார்த்துக் கொண்டார்.

 

அகில் சென்னை சென்று மூன்று மாதங்கள் கழிந்திருக்க, அன்று விடுமுறை நாள் என்பதால், ஹாலில் அமர்ந்துக் கொண்டு டீ.வியை பார்த்துக் கொண்டிருந்தாள் சுமி. கண்கள் தொலைக்காட்சியில் நிலைத்தாலும் எண்ணம் முழுவதும் அகிலை பற்றியே இருந்தது. சோர்ந்து அமர்ந்திருக்கும் மகளை பார்த்த தயாளனும் அவளின் மனநிலையை மாற்றும் பொருட்டு, அவளுக்கு பிடித்த சிக்கன் பிரியாணியை செய்ய தொடங்கினார்.

 

அவர் கிட்சனில் சமைத்துக் கொண்டிருக்க, சுமிக்கு அந்த சிக்கன் வாசனையில் வாந்தி வரும் போல் இருந்தது.. ஓடிச் சென்று பாத்ரூமில் வாந்தியெடுத்தவளின் சத்தத்தில் தயாளனும் அவள் பின்னே ஓடி வந்தார்… அதற்குள் சுமி தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு தன் வயிற்றை பிடித்துக் கொண்டு அழுதுக் கொண்டிருக்க, தயாளனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை… புரியாமல் பார்த்தவருக்கு அவளின் அழுகை பீதியை கிளப்பியது.

 

“சுமி????” அவளது வயிற்றில் இருக்கும் கையை பார்த்துக் கொண்டே தயாளன் அழைக்க, அடுத்த நிமிடம் தாய் மடியை தேடும் கன்றுக்குட்டியை போல் அவரின் நெஞ்சில் புதைந்துக் கொண்டு கதறிவிட்டாள் சுமி… அதில் அவளது அழுகை எதற்க்காக என்று அவருக்கு புரிந்து போனது…

 

அவரால் நம்பக்கூட முடியவில்லை… தன் மகளா இப்படியென்று??? எதுவும் பேசாமல் கண் கலங்க அவர் நிற்க, சுமி அவர் காலில் விழுந்தாள்..

 

“என்னை மன்னிச்சிடுங்க அப்பா.. சாரிப்பா.. நான் தப்பு பண்ணிட்டேன் ப்பா.. எனக்கு ரொம்ப பயமா இருக்குப்பா… மன்னிச்சிடுங்க ப்பா.. அவன் சொன்னதும் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருந்திருக்க கூடாது… காதல் தான் பெருசுன்னு பெரிய தப்பு பண்ணிட்டேன் ப்பா…” அவளின் கதறலை கேட்ட தயாளனுக்கோ இதற்கு காரணமானவனை கொல்ல வேண்டும் போல் இருந்தது.. முதலில் என்ன நடந்தது என அறிய வேண்டும் என நினைத்தவர், சுமியை எழுப்பி அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்தார்.

 

“என்ன நடந்துச்சு ??? இதுக்கு யார் காரணம்???” கோபமாக அவர் கர்ஜிக்க., சுமியின் தளிர் மேனி நடுங்கியது..

 

தந்தையை பார்க்க முடியாமல் தலையை தாழ்த்திக் கொண்டவள், “அகில்” என்க,

 

தயாளனால் நம்ப முடியவில்லை… தன் மகன் போல் பார்த்துக் கொண்டவனா இப்படி தன் மகளின் வாழ்வை கேள்விக்குறியாக்கினான் என்று உடைந்துப் போனார்..

 

தந்தையின் குற்றப்பார்வையை தாங்க முடியாது சுமியும் தாங்கள் இருவரும் காதலித்ததை கூறினாள்…

 

“நாங்க ரெண்டு பேரும் இரண்டு வருஷமா லவ் பண்றோம் ப்பா… ரெண்டு மாசம் முன்னாடி ரிஜிஸ்டர் ஆபிஸ்ல வச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. அகில் அப்பாவுக்கு தெரிஞ்சா எங்களை பிரிச்சிடுவார் அதனால உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்னு அகில் கெஞ்சவும், அவன் சொன்னதை நம்பி யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… அகிலோட அண்ணன் கல்யாணம் முடிஞ்சதும், உங்ககிட்ட பேசுறதா ப்ராமிஸ் பண்ணிருந்தான் ப்பா.. ஆனா அகில் போய் மூணு மாசமாச்சு.. இன்னும் அவன்கிட்ட இருந்து ஒரு போன் கால் எதுவுமே வரல.. எனக்கு பயமா இருக்குப்பா…” ஒவ்வொரு வார்த்தையையும் தந்தையிடம் சொல்வதற்குள் சுமி உள்ளுக்குள் செத்து பிழைத்தாள்..

 

திடிரென்று ஒரு நாள் தன் முன் வந்து கல்யாணம் செய்துக் கொள் என்று அகில் கேட்டதும் சுமி சிறகில்லாமல் வானத்தில் பறக்க தான் செய்தாள் ஆனால் உடனே பதிவு திருமணம் செய்ய வேண்டும் என அகில் கூறவும் அவள் மிரண்டு போனாள். அடுத்த ஒரு வாரமும் அவள் பின்னே கெஞ்சி கூத்தாடி அவன் திரிய, சுமியும் ஒரு கட்டத்தில் சம்மதித்துவிட்டாள்… என்றாக இருந்தாலும் அவனை தானே கட்டிக்கொள்ள போகிறோம் என்ற நம்பிக்கை அவளை சம்மதிக்க வைத்தது. அன்று தந்தைக்கு தெரியாமல் தான் செய்த காரியம் இன்று எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்று நினைக்கும் போதே சுமிக்கு அழுகை வந்தது…

 

அழும் மகளை தேற்றுவதா இல்லை தன் மகளை ஏமாற்றி சென்றுவிட்டவனை தேடுவதா என அவர் சோர்ந்துப்போனார்… பதிவுத் திருமணம் செய்து தான் கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பது மட்டுமே அவருக்கு சிறிது ஆறுதலளித்தது…

 

“கிளம்பு ஹாஸ்பிட்டல் போகலாம்… டாக்டரை பார்த்துட்டு வந்துடுவோம்…” அவள் முகம் பார்க்காது அவர் கூற, சுமி பயத்தில் நாற்காலியோடு ஒன்றினாள்…

 

“ப்பா.. இது என் குழந்தை ப்பா.. இதுக்கு எதுவும் ஆக விடமாட்டேன் ப்பா…” எங்கே ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்று குழந்தையை அழிக்க சொல்லி விடுவாரோ என பயந்துப் போனாள் சுமி…

 

அவள் கூறியதை கேட்டு திரும்பி பார்த்தவர்., “நாளைக்கு சென்னை போகணும்.. ட்ராவல் உனக்கு ஒத்துக்குமான்னு டாக்டர்கிட்ட கேட்க தான் போறோம்… ஒரு உயிரை கொல்ற அளவுக்கு உன் அப்பா கேடு கெட்டவன் கிடையாது மா…” அவள் செய்து வைத்திருக்கும் செயலுக்கு அவருக்கு ஆத்திரமாக வந்தாலும் சிறு வயதில் இருந்து அன்பை மட்டுமே கொட்டி வளர்த்த மகளை அவரால் காயப்படுத்த முடியவில்லை…

 

தந்தை கூறியதை கேட்டு மேலும் அழுதவள் தன் நிலையை நொந்தவாறே ஆஸ்பத்திரிக்கு கிளம்பினாள்.. இருவருமாக ஆஸ்பத்திரிக்கு சென்று சுமி நலமாக இருப்பதை, டாக்டர் உறுதி செய்த பின்னரே அகிலை தேடி சென்னை கிளம்பினார்கள்.. சுமிக்கு நாளை என்ன நடக்கும் என்று மனதில் பயம் இருந்தாலும், அகில் நிச்சயம் தன்னை விட்டுவிட மாட்டான் என்று நம்பிக்கை இருந்தது. தயாளனுக்குமே அந்த நம்பிக்கை இருந்ததால் அமைதியாகவே அமர்ந்திருந்தார்..

 

மறுநாள் காலை இருவரும் சென்னையை வந்தடைந்தார்கள்.. அகில் ஏற்கனவே அவனின் முகவரியை ஒரு முறை தயாளனிடம் கூறியிருந்ததால் எளிதாகவே அவனது வீட்டை கண்டுபிடித்து சென்றார்கள்.. அந்த வீட்டின் பிராம்பாண்டமமே சுமியை அச்சுறுத்தியது.. தந்தையின் கையை இறுக பற்றிக் கொண்டவள் அந்த வீட்டு காவலாளியிடம் தாங்கள் அகிலை சந்திக்க வந்திருப்பதாக கூற, அவன் யாருக்கோ அழைத்து பேசிவிட்டு அவர்களை உள்ளே அனுப்பினான்..

 

உள்ளே சென்றதும், அவர்கள் பார்த்தது கம்பீரமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த அகிலின் தந்தை கிருஷ்ண குமாரை தான்….தன் வீட்டு வேலைக்காரியாக இருப்பதற்கு கூட ஒரு தகுதியிருக்க வேண்டும் என்று நினைப்பவருக்கு அவர்களின் எளிய தோற்றத்தை பார்த்ததுமே அவர்களை பிடிக்கவில்லை..

 

பார்வையால் அவர்களை அமரும்படி சைகை செய்தவர் கூர்மையாக அவர்களை பார்க்க.. அவரின் பார்வையில் சுமிக்கு உள்ளுக்குள் உதறியது… வரும் வரை இருந்த நம்பிக்கை மெதுவாக ஆட்டம் காண, கண்களை சுழற்றி வீட்டில் வேறு யாரும் இருக்கிறார்களா என்று பார்த்தாள். யாரையும் காணாது போகவும் மீண்டும் அகிலின் தந்தையிடமே பார்வையை திருப்பிக் கொண்டாள்.

 

“நீங்க தான் என் மகன் சொன்னவங்களா????” என்றவரின் குரலில் அப்பட்டமாக நக்கல் கலந்திருந்தது… அதில் தயாளனுக்கு கோபம் வந்தாலும் தன் மகளின் வாழ்க்கைக்காக அமைதியாக தாங்கிக் கொண்டார்.

 

“எங்களை பற்றி அகில் சொல்லியிருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு… நாங்க அகிலை தேடி தான் வந்தோம்.. அவனை பார்க்கலாமா???” சுற்றி வளைத்து பேசவெல்லாம் பிடிக்காமல் அவர்கள் அகிலை சந்திக்க வந்ததை நேரடியாக கூறினார் தயாளன்.

 

அவர்களை பார்த்து கேலியாக சிரித்த குமார், மாடியை பார்த்து அகில் என்று குரல் கொடுக்க வேகமாக படிகளில் இறங்கி வந்தான் அகில்… அங்கே சுமியை கண்டதும் அவன் முகத்தில் எந்த அதிர்ச்சியோ ஆச்சரியமோ எதுவும் தென்படவில்லை… முகத்தை நிர்மூலமாக வைத்திருந்தான்… நேராக வந்து அவன் தந்தையின் அருகில் அமர்ந்தவன் சுமியை நோக்கி ஓர் அறிமுகமில்லா பார்வையை வீசினான்…

 

அவன் படிகளில் இறங்கி வரும் போதே பார்வையால் அவனை நிரப்பிக் கொண்டிருந்தாள் அவள்.. மூன்று மாதங்கள் கழித்து அவனை பார்த்ததும் அவளுக்குள் அத்தனை மகிழ்ச்சி…. அவனை இப்போதே கட்டிக்கொண்டு அழ வேண்டும் போல் இருந்தது ஆனால் அவன் முகத்தில் இருந்த ஒட்டாத்தன்மை அவளை யோசிக்க வைத்தது…

 

“அகில்… இவங்க உன்னை பார்க்க வந்திருக்காங்க…” சுமியையும் அவளது தந்தையையும் சுட்டிக் காட்டியவர் தன் போனை எடுத்து நோண்ட தொடங்கிவிட்டார்…

 

“சொல்லுங்க அங்கிள்… என்ன விஷயமா என்னை பார்க்க வந்துருக்கிங்க???” அகில் சாதரணமாக வினவ,

 

எப்போதும் அப்பா என்று அழைப்பவன் இன்று அங்கிள் என்றதுமே தயாளனுக்கு புரிந்துவிட்டது, தான் பேசப்போவது பழைய அகிலிடம் இல்லை என்று… மகளை திரும்பி பார்த்தவர் அவளின் வாழ்க்கையை நினைத்துக் கவலை கொண்டார்…

 

“எப்படி இருக்க அகில்???? நீ இப்படி ஒரு காரியத்தை பண்ணுவன்னு நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கல அகில்….” தன் மேல் தவறே இல்லை என்பது போல் அமர்ந்திருக்கும் அகிலிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் திணறியவர் தன் மகளின் வாழ்வை கருத்தில் கொண்டு கேட்டார்…

 

“நான் என்னப் பண்ணினேன் அங்கிள்??? ஓ… சொல்லாம வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்துட்டதுனால அப்படி கேட்கிறிங்களா??? ஹம்ம்.. இங்க அப்பாவோட பிஸினஸ் இருக்கு, அதை பார்த்துக்கலாம்னு இருக்கேன். அதோட எனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகிருக்கு.. கண்டிப்பா பத்திரிக்க அனுப்புவேன்… வந்துடணும்…” தெரிந்தவர்கள் என்ற முறையில் அகில் பேச, சுமி மொத்தமாக நொறுங்கிப் போனாள்…

 

“என்ன அகி பேசுற??? கல்யாணம் பண்ணிக்க போறியா?? அப்போ என்கூட பழகினது???” அவள் வாழ்க்கையை கெடுத்துவிட்டு எதுவும் நடவாதது போல் பேசும் அவன் மேல் கோபம் கொப்பளித்தது சுமிக்கு…

 

“அதெல்லாம் கெட்ட கனவா நினைச்சி மறந்துடு சுமித்ரா.. நமக்குள்ள ஒத்து போகாது… என் ஸ்டேட்டஸ் வேற… உன் ஸ்டேட்டஸ் வேற….” முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு அகில் கூற, சுமித்ரா கோபத்தில் எழுந்து அவன் சட்டையை பற்றினாள்..

 

“என்னடா என்ன சொன்ன???? ஒத்துப் போகாதா??? இதெல்லாம் உனக்கு என்கூட பழகுறதுக்கு முன்னாடி தெரியாம போச்சா??? என் கூட பழகிட்டு இப்போ இப்படி பேசுற… உன்னை சும்மா விட மாட்டேன் டா.. ஏன் டா என் வாழ்க்கையை கெடுத்த…” அவன் சட்டையை உலுக்கியவள் அவன் நெஞ்சில் சாய்ந்துக் கதறினாள்.. ஆனால் அவனோ கல்லாக நின்றிருந்தான்..

 

“ப்ளீஸ் அகி.. நான் எதாச்சும் தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சிடு  ஆனா இப்படி எனக்கு தண்டனை கொடுக்காத.. எனக்கு ரொம்ப வலிக்குது டா…” கண்ணீரில் கரைந்தவாறு அவள் அகிலின் நெஞ்சில் புதைய,  அவளை மேலும் காயப்படுத்தினான் அகில் குமார்…

 

“இந்த வீடு இதெல்லாம் பார்த்தா உனக்கு ஆசை வர்றது சகஜம் தான் சுமி.. நான் வேணும்னா உன்கூட பழகினதுக்கு பிராயசித்தமா பணம் தர்றேன்…” வார்த்தைகளின் வீரியம் தெரியாமல் கொட்டினான் அகில்..

 

அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் சிலையாகியிருந்தாள் சுமி… பணம் தருகிறானா??? எதற்கு??? தான் என்ன பணத்திற்க்காக தன்னையே விற்ப்பவளா??? அப்படித்தான் இத்தனை நாள் தன்னை பற்றி நினைத்திருக்கிறானா இவன்??? அவன் கேட்டதில் அவள் கண்களில் கண்ணீர் வருவது கூட நின்றிருந்தது. அவன் அருகே நிற்பது கூட அருவெறுப்பாக இருக்க வேகமாக அவனை விட்டு இரண்டடி பின்னே நகர்ந்தாள்…

 

தன் மகளை பார்த்து என்ன கூறிவிட்டான் என்று அதிர்ந்த தயாளன் அவன் கன்னத்தில் பளாரென்று அறைய, கிருஷ்ண குமார் இடையில் புகுந்து அவரை விலக்கினார்..

 

“என் வீட்டுக்குள்ள வந்து என் பையன் மேலேயே கை வைக்கிறிங்களா??? உடனே வெளிய போங்க…. இல்ல கழுத்தை பிடிச்சி வெளியே தள்ள வேண்டியதா இருக்கும்…” தயாளனை அகிலிடம் இருந்து பிரித்து தள்ளிவிட்டவர் அவர்களை முறைக்க, சுமி அவள் தந்தையின் கையை பற்றிக் கொண்டாள்.. ஆனால் தயாளனால் அதை சதாரணமாக விட முடியவில்லை.. நிற்கதியில் நிற்பது தன் மகளாயிற்றே…

 

கௌரவம் பாராது அகிலிடம் கெஞ்சவே தொடங்கிவிட்டார்., “அகில் கண்ணா… ஏன் பா இப்படி பேசுற??? இது என் பொண்ணோட வாழ்க்கை… தயவு செஞ்சி அதை அழிச்சிடாதா… அவ மனசுல உன்னையும்….” என்றவர் குழந்தையை பற்றி கூற வர, அதற்குள் சுமியின் குரல் அவரை தடுத்தது…

 

“போதும் நிறுத்துங்க…” கையை உயர்த்தியவள், தந்தையை பேச வேண்டாம் என்பது போல் பார்த்துவிட்டு அகில் முன்னே வந்து நின்றாள்..

 

“உன்னை லவ் பண்ணினதுக்கு ரொம்ப நல்லாவே என்னை ஏமாத்திட்ட… பணத்துக்காக ஆசைப்படுறேனா??? யாருக்கு வேணும்டா உன்னோட பணம்??? எனக்கு தேவையே இல்ல… எங்க அண்ணா நினைச்சா உன்னை விட அதிகமா சம்பாதிப்பான்.. ஆனா அவன்கிட்டயும் ஃப்ரெண்ட்னு சொல்லி ஏமாத்திட்ட… இனி தயவு செஞ்சு என் முகத்துல முழிச்சிடாத..இப்படி ஒருத்தனை லவ் பண்ணிட்டேனேன்னு எனக்கு அருவெறுப்பா இருக்கு.” அவனை புழுவை பார்ப்பது போல் பார்த்தவள், தன் தந்தையை அழைத்துக் கொண்டு வெளியேறிவிட்டாள்…

 

அது தான் சுமி அவனை கடைசியாக சந்தித்தது… என்னத்தான் அவனிடம் வீர வசனம் பேசிவிட்டு வந்தாலும், தான் இப்படி ஏமாந்து போனோமே என்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. அதில் இருந்து மீளும் வழி தெரியாமல் தூக்க மாத்திரைகளை விழுங்க போனவளை தயாளன் பார்த்துக் காப்பாற்றிவிட்டார்…

 

அவர்கள் பதிவு திருமணம் செய்துக்கொண்ட சான்றிதழை வைத்து அவன் மேல் புகார் செய்யலாம் என்று தயாளன் எவ்வளவு கூறியும் அவள் கேட்கவில்லை.. அவனிடம் வாழ்க்கை பிச்சை கேட்க அவள் தன்மானம் இடம் கொடுக்கவில்லை…

 

மகளின் வாழ்வை நினைத்து அவரும் தினம் தினம் மனதுக்குள் புழுங்கினார். திருவிடம் சொல்லலாம் என்றால் சுமி அவரை தடுத்துவிட்டாள். திருவாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று தங்களது சோகத்தை மறைத்து அவனோடு போன் பேசும் போதெல்லாம் எதுவும் நடவாதது போல் இருவரும் பேசினார்கள்.

 

இது எதுவும் தெரியாத திரு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என அயராது உழைத்தான். மிகவும் திறமைசாலி என்பதால் அவனுக்கு ஆபிஸில் நல்ல பெயர் கிடைத்தது. வீட்டிற்கு செல்ல வேண்டும் என ஆசை இருந்தாலும் அவனுக்கு வழங்கப்பட்டிருந்த ப்ராஜக்ட் மிகவும் முக்கியம் என்பதால் ஒரு வருடத்திற்கு அவனால் அவனது கம்பெனியில் இருந்து அசையக் கூட முடியவில்லை… ஓய்வு நேரமும் குறைவு என்பதால் வாரம் ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு அழைத்து பேசினான்.. அகிலுக்கு அழைத்தால் அவனது போன் ஸ்விட்ச் ஆப் என்றே வந்தது… சுமிக்கு தெரிந்திருக்கும் என அவளிடமும் கேட்டுப் பார்த்தான், ஆனால் அவள் தெரியாது என கூறிவிட அதற்கு மேல் அவனாலும் அவளிடம் விசாரிக்க முடியவில்லை… அதற்கு அவன் வேலையும் அவனை விடவில்லை…

 

ஆயிற்று எட்டு மாதங்கள் ஓடிவிட்டது திரு டெல்கி வந்து.. அவனது உழைப்பால் ஒரு வருடத்தில் முடிய வேண்டிய ப்ராஜக்ட் எட்டே மாதங்களில் முடிந்திருந்தது.. அவனை வெகுவாக பாராட்டி… பதவி உயர்வும் கை நிறைய சம்பளத்துடன் அமெரிக்கா ஆன்சைட் ப்ராஜக்டில் சேர்வதற்க்கான வாய்ப்பும் கிடைத்தது… மிக மிக சந்தோஷமாக ஊருக்கு கிளம்பினான்… வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாக  அகிலை சந்தித்து ஏன் தன்னிடம் பேசவில்லை என்று கேட்க வேண்டும் என பல பல கற்பனைகளோடும் சந்தோஷத்தோடும் வந்தவன் தன் வீட்டின் முன் நின்றிருந்து கூட்டத்தை பார்த்து ஸ்தம்பித்தான்…

 

என்னவென்று புரியாமல் அனைவரையும் தாண்டி உள்ளே சென்றவன் அங்கே கண்டது பிணமாக கிடந்த அவனது தந்தையையும் நிறை மாத கர்பிணியாக தன் முன் நின்றிருந்த சுமியையும் தான்… மகளின் வாழ்வை நினைத்து வருந்தியே ஹார்ட் அட்டாக்கில் உயிரை விட்டிருந்தார் தயாளன்.

 

இறந்துகிடக்கும் தந்தையை பார்த்து அழுவதா இல்லை தன்னை பார்த்ததும் ஓடி வந்து தன் மேல் சாய்ந்து கதறி அழும் தங்கையின் நிலையை கண்டு அழுவதா என அவனுக்கு தெரியவில்லை… வாழ்வே இருட்டாக தெரிந்தது… ஒன்றும் செய்ய முடியாமல் ஓய்ந்து அமர்ந்துவிட்டான்… யார் யார் வந்தார்கள் என்ன நடந்தது என எதுவும் தெரியாமல் தங்கையை அணைத்தவாறு அமர்ந்திருந்தான்..

 

தந்தையின் இறுதி சடங்குகளை இயந்திரமாக செய்தவன் மனதுக்குள் சிறிது சிறிதாக இறுகிக் கொண்டிருந்தான். அதிலும் அக்கம் பக்கத்தினர் எல்லாம் அவனை பொறுப்பில்லாதவன், தந்தையையும் தங்கையையும் கவனிக்காது பணத்துக்காக வெளியூரில் இருந்தவன் என குற்றம் சுமத்த அவன் மனதுக்குள் கல்லாகி போனான்…

 

உறவினர்கள் என்று பெரிதாக அவர்களுக்கு யாரும் இல்லை என்பதால் அன்று மாலையே அனைவரும் கிளம்பிவிட, அவனும் சுமியும் மட்டுமே வீட்டில் இருந்தனர்… தந்தையின் போட்டோ அருகிலே வெறும் தரையில் தன் பெரிய வயிற்யை பற்றியவாறு படுத்திருக்கும் தங்கையை பார்க்க பார்க்க அவனுக்கு மனது பிசைந்தது.. அவளின் இந்த நிலைக்கு காரணமானவனை கண்டம் துண்டமாக வெட்ட வேண்டும் என அவனின் ஒவ்வொரு அணுவும் துடித்தது…

 

தங்கையின் அருகே சென்றவன் அவள் தலையை ஆதூரமாக தடவினான்.. அண்ணனின் ஸ்பரிசத்தில் விழித்தவள் திருவின் மடி சாய்ந்து அழுதாள்…

 

“என்னடா ??? என்ன நடந்துச்சு.. இந்த அண்ணனை ஒதுக்கி வச்சிட்டிங்களா???” தன்னிடம் மறைத்துவிட்டாளே என அவனால் தங்கையிடம் கோபம் கொள்ள முடியவில்லை… இதற்கு காரணமானவனை கண்டுபிடிக்க வேண்டும் என மனம் ஓலமிட்டது.. அதனால் அவளிடம் பொறுமையாகவே கேட்டான்..

 

திரு கேட்டதும் சுமியும் மௌனமாக அழுதாளே தவிர வேறெதும் சொல்லவில்லை… திரு எப்படி கேட்டும் கண்ணீர் மட்டுமே அவளிடமிருந்து பதிலாக கிடைத்தது.. திருவும் மறுநாள் விசாரித்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருக்க அன்று இரவே சுமிக்கு பிரசவ வலி ஏற்ப்பட்டது.. என்னத்தான் பெரிய கம்பெனியில் வேலை பார்த்து திறமையானவன் என்று பெயர் வாங்கியிருந்தாலும் இத்தனை நாட்கள் தந்தையின் சிறகின் அடியில் இருந்த அந்த இருபத்திநான்கு வயது திருவால் சூழ்நிலையை சமாளிக்க முடியவில்லை…

 

பிரசவ வலியில் சுமி துடிக்கும் போதெல்லாம் திரு தான் அதிகம் துடித்தான்.. ஒரு வழியாக ஒற்றை ஆளாக நின்று அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்து., சுமி குழந்தையை பிரசவிக்கும் வரை அவன் உயிர் அவனிடம் இல்லை… அதிலும் டாக்டர் கேட்ட, குழந்தையின் தந்தையின் பெயரை அவன் எங்கிருந்து சொல்லுவான்… கண்கள் கலங்க அவரை ஏறிட்டவனின் முகத்தில் என்ன கண்டாரோ அதன்பின் அவனிடம் அவர் எதுவும் கேட்கவில்லை…

 

குழந்தையை முதலில் அவன் கையில் தான் கொடுத்தார்கள்.. குழந்தையை உற்றுப் பார்த்தான்… அவள் முகத்தில் இருந்து அவளின் தந்தையை கண்டுபிடிக்க முயன்றானா என்பது அவனுக்கு மட்டுமே தெரியும். அவன் கையில் வாங்கியதுமே அவன் சுண்டு விரலை பற்றிக் கொண்டது குழந்தை.. அதில் அவன் உடம்பு சிலிர்த்தது.. ரோஜா மொட்டு ஒன்று தன் கையில் இருப்பது போல் உணர்ந்தான்.. குழந்தையை மெலிதாக அணைத்துக் கொண்டவன், சுமியின் மயக்கம் தெளிந்த பின் அவளை காண செல்ல, அவள் குழந்தையை பார்த்து கண்ணீர் வடித்தாளே தவிர வேறு எதுவும் கூறவில்லை… திருவும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை…

 

மூன்று நாட்கள் ஹாஸ்பிட்டலில் இருந்துவிட்டு ஹனியோடு வீடு திரும்பியிருந்தாள் சுமி. ஹாஸ்பிட்டலில் இருந்த வரை சுமியை கவனித்துக்கொள்ள டாக்டரிடம் பேசி தனியாக நர்ஸ் ஏற்பாடு செய்திருந்தவன், வீட்டில் பார்த்துக் கொள்ள ஒரு வயதான பெண்மணியையும் வேலைக்கு சேர்த்திருந்தான்…

 

தன்னிடம் உண்மையை கூறுவாள் என தினமும் திரு சுமியின் முகத்தை பார்க்க, அவளோ அவன் முகத்தை பார்ப்பதையே தவிர்த்தாள்… அதிலும் வந்ததில் இருந்து அகிலையும் பார்க்க முடியாதது வேறு அவனுக்கு உறுத்திக் கொண்டே இருந்தது.

 

மேலும் ஒரு வாரம் எந்த ஆரவாரமும் இல்லாமல் சென்றது. திருவும் சுமியாக தன்னிடம் கூறுவாள் என காத்திருக்க நாட்கள் ஓடியதே தவிர, அவளிடம் இருந்து ஒரு வார்த்தையை கூட வாங்க முடியவில்லை… இதற்கிடையில் அவனது ஆன்சைட் பிராஜக்டிற்க்காக அமெரிக்கா செல்ல வேண்டிய நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது… அனைத்தும் அவனுக்கு மனஅழுத்தத்தை கொடுக்க, இன்று இதற்கெல்லாம் ஒரு முடிவு தெரிந்தே ஆக வேண்டும் என கோபத்தோடு சுமியை காண வீட்டிற்கு வந்தான்.

 

வீடு முழுவதும் சுமியை தேடியவன் அவளை காணததும் குழந்தை அருகே வந்து அமர்ந்தான்.. பக்கத்தில் எங்காவது போயிருப்பாள் என அவன் எண்ணிக் கொண்டிருக்க, குழந்தையின் அருகில் இருந்த கடிதம் அவன் கண்ணில் பட்டது..

 

அதை பார்த்ததும் எதுவோ தவறாக பட, அதை எடுத்து வாசித்தான்..  சுமி தான் எழுதியிருந்தாள்… அவனது கேள்விகளுக்கான விடை அதில் இருந்தது.. தான் அகிலிடம் ஏமாந்ததை எழுதியிருந்தவள் இறுதியாக.,

 

“என்னால இங்க இருக்க முடியல அண்ணா… என்னால தான் அப்பா இறந்துட்டாங்கன்னு ஒவ்வொரு நிமிஷமும் மனசு கொல்லுது… என்னால உன் முகத்தை பார்த்து எதுவும் சொல்ல முடியல.. என்னை மன்னிச்சிடு.. ஹனியை பார்த்துக்கோ அண்ணா.. அவளை என்கூட அழைச்சிட்டு போனா… எங்க அவளையும் கொண்ணுட்டு நானும் செத்துடுவேனோன்னு பயமா இருக்கு… நீ பயப்படாத அண்ணா.. நான் எதுவும் பண்ணிக்க மாட்டேன்.. கண்டிப்பா ஒரு நாள் என் பொண்ணை பார்க்க நான் திரும்ப வருவேன்.. அகிலை பத்தி தெரிஞ்ச அப்புறம் அவனை பழி வாங்க போறேன்னு என் பொண்ணை அனாதையாக்கிடாத அண்ணா… அவனுக்கு இப்படி ஒரு பொண்ணு இருக்கிறதே தெரியாது.. கடைசி வரைக்கும் தெரியவும் வேண்டாம்… நான் போறேன் அண்ணா என்னை மன்னிச்சிடு…”  என முடிந்திருந்தது அந்த கடிதம்.. அதோடு இன்னொரு பேப்பரில் ஹனியின் மொத்த உரிமையும் திருவுக்கே என்றும் எழுதி கையொப்பமிட்டிருந்தாள்…

 

அதை முழுதாக படித்தவனுக்கு அத்தனை ஆத்திரமாக வந்தது.. நண்பன் என்று நினைத்து துரோகியிடம் தன் குடும்பத்தை ஒப்படைத்துவிட்டு சென்றிருக்கிறோம் என துடித்தான்.. இப்போதே கிளம்பி சென்று அவனை ஒன்றில் இரண்டு பார்க்க வேண்டும் என்ற வெறியில் கிளம்பியவனை கட்டிலை விட்டு இறங்க விடாமல் அவன் சுண்டு விரலை தன் மொத்த கையால் பிடித்திருந்தாள் ஹனி..

 

மீண்டும் அவள் அருகில் அமர்ந்தவன் ஹனியை கையில் ஏந்திக் கொண்டு கண் கலங்கினான். இந்த குழந்தை என்ன பாவம் செய்தது..  அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..

 

“குட்டிம்மா.. உன் அப்பாவுக்கு நீ இருக்கிறதே தெரியலை.. உன் அம்மா அவளோட நிம்மதிய தேடி போறாளாம்.. உன்னையும் என்னையும் அநாதையாக்கிட்டு எல்லாரும் போய்ட்டாங்க… இனி உனக்கு நான்.. எனக்கு நீ… இந்த டேடி உன்னை பத்திரமா பார்த்துக்குவேன்..” ஹனியிடம் உறுதியளிக்க ஹனி அவன் விரலை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்..

 

அன்று தொடங்கியது அவர்களின் உலகம்…அகில் மீது மட்டும் இல்லாமல் வாழ்க்கையை எதிர்த்து போராடாமல் கோழையாக ஓடிப் போன தங்கையின் மீதும் கோபம் கொண்டான்… அவளாக திரும்பி வரும் வரை தானாக அவளை தேட வேண்டாம் என முடிவு எடுத்தவன் இனி ஹனிக்காக வாழ்வது என  உறுயெடுத்துக் கொண்டான்..

 

அடுத்த பதினைந்து நாட்களில் ஹனியின் கார்டியன் என்ற முறையில் அவளுக்கு பாஸ்போர்ட் எடுத்து, ஹனியோடு அமெரிக்காவிற்கு கிளம்பினான்… ஒரு நண்பனால் அவன் குடும்பமே சிதைந்துவிட்டது என்பதால் அவன் நண்பர்களிடம் இருந்த தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துக் கொண்டான்…

 

ஏர்போர்டில் ஒற்றை ஆளாக ஹனியை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவனை, ஹனியும் தொல்லை செய்யாமல் அவன் கைகளில் தூங்கிக் கொண்டிருந்தாள்.

 

ஹனி தூங்கும் அழகை கண்கொட்டாமல் பார்த்திருந்தவன் தன்னருகில் அமர்ந்து ஹனியின் கையை தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்த அந்த சிறுமியை பார்த்து புன்னகைத்தான். அந்த குழந்தையும் அவனை பார்த்து புன்னகைக்க அவளது குடும்பம் அவளுக்கு அடுத்ததாக அமர்ந்திருந்தது. அவர்களும் அவள் குழந்தையிடம் விளையாடுவதை ரசித்துக் கொண்டிருந்தார்கள்..

 

“அங்கிள்… மே ஐ???” குழந்தையை தூக்கி கொள்ளவா என்பது போல் அந்த சிறுமி கேட்க திருவும் புன்னகைத்தவாறு அவள் மடியில் ஹனியை கொடுத்தான்.. அந்த சிறுமியும் தன் தாய் தந்தையிடம் ஹனியை காண்பித்து மகிழ்ந்துக் கொண்டிருக்க, திரு ஏதோ நெடுநாள் பழகிய குரல் கேட்டு திரும்பி பார்த்தான்… அங்கு அகில் யாரிடமோ சண்டையிட்டுக் கொண்டிருந்தான்… அவனை பார்த்ததும் அவன் செய்த துரோகமும் ஞாபகம் வர, கண்களில் ரௌத்திரத்துடன் அவனை பார்த்தான்.

 

அருகில் இருந்த சிறுமியின் குடும்பத்தினரிடம் ஹனியை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, அகிலின் அருகே வந்தவன் அவன் முன் சென்று நிற்க., அகிலும் அவனை அங்கு எதிர்பாராமல் திடுக்கிட்டான்…

 

“உனக்கு என்னடா பாவம் செஞ்சேன் என் குடும்பத்தையே அழிச்சிட்டியே டா… உன்னையெல்லாம் சும்மாவிடக்கூடாது…” என்னத்தான் அகிலை தேடி அவன் செல்லவில்லை என்றாலும் கண் முன் நிற்கும் துரோகியை அப்படியே விட்டுச் செல்ல முடியாமல், அகிலின் கழுத்தை நெறித்தான் திரு…..

 

“என் அப்பாவை கொண்ணுட்ட.. என் தங்கச்சி வாழ்க்கையை சீரழிச்சிட்ட… எல்லாம் பண்ணிட்டு நீ மட்டும் எப்படி டா கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கிற??? இதே நிலைமை உன் தங்கச்சிக்கு வந்திருந்தா சும்மா இருந்திருப்பியா டா???” ஆவேசமாக கத்தியவன் அவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்தான்…

 

அனைத்தையும் அகில் வாங்கிக் கொண்டானே தவிர எதிர்த்து எதுவும் பேசவில்லை… எதோ அதிர்ச்சியில் உறைந்திருப்பவன் போன்று அவன் நிற்க, அவன் அருகில் நின்றிருந்தவன் திருவை அவனிடமிருந்து விலக்கினான்… அதோடு ஹனியின் அழுகுரலும் கேட்க, தன்னை நிலைபடுத்திக் கொண்டவன், அகிலை பார்த்து,

 

“ஒரு நாள் திரும்ப வருவேன் டா.. என் குடும்பத்தை சிதைச்ச மாதிரி உன் குடும்பத்தையும் அழிப்பேன்.. என் தங்கச்சி கஷ்டப்படுற மாதிரி உன் தங்கச்சியும் கஷ்டப்படுவா… கஷ்டப்படுத்துவேன்…” கண்களிலும் குரலிலும் சீற்றத்தோடு கூறியவன் அவனை திரும்பி பாராமல் செல்ல,  அகிலையும் அவன் அருகில் நின்றிருந்தவன் இழுத்துச் சென்றான். அதுவே அவர்களின் கடைசி சந்திப்பானது…

 

அமெரிக்கா வந்த திருவும் சிறிது நாட்களில் ஹனியோடு ஒன்றிப் போனான்.. அடிக்கடி தன் தங்கையின் நினைவு வாட்டினாலும் அவன் மனதில் எல்லோரின் மீதும் கணன்று கொண்டிருந்த கோபம் அவனை யாரையும் பற்றி சிந்திக்க விடவில்லை… அகிலை பழி வாங்க வேண்டும் என துடித்த இதயம் ஹனியின் முகத்தை பார்க்கும் போது பறந்து போகும்.

 

வருடங்கள் கழிந்த போதும் தங்கையிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என்றதும் பழிவெறி மறந்து ஹனியை தாய்க்கு தாயாக இருந்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவனிடம் எஞ்சியிருந்தது. அதனால் தான் திரும்ப பெங்களூர் வந்தான். அகிலையோ சுமியையோ தேட அவன் எந்த முயற்சியும் செய்யவில்லை… ஹனிக்காக மட்டுமே வாழ ஆரம்பித்தான். ஆனால் அவன் உலகில் புயல் போல் உள்ளே நுழைந்து அவனை மொத்தமாக ஆக்கிரமித்தாள் வினு.. தன் கூட்டை விட்டு வெளியே வந்தவன் மீண்டும் அவள் அகிலின் தங்கை என்றதும் தன் கூட்டிலே அடைந்துக் கொண்டான்….

 

வினு அனைத்தையும் சொல்லி முடிக்கவும் சரியாக அவர்கள் சென்றுக் கொண்டிருந்த பஸ்சும் பஞ்சராகி நின்றது. அனைத்தையும் வாய் பிளக்காத குறையாக கேட்டுக் கொண்டிருந்தான் விக்கி…

 

“அப்போ ஹிட்லரை தேடி தான் நாம வந்தோமா???” விக்கிக்கு இன்னும் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.

 

“ம்ம்… ஆனா இங்க வந்த அப்புறம் தான் நாம தேடி வந்தது ஹிட்லரைன்னு எனக்கு தெரியும்.. எப்படியாச்சும் அகில் அண்ணாவோட ப்ரெண்ட் திருவை கண்டுபிடிச்சி அவர் தங்கச்சியையும் நம்ம அண்ணாவையும் சேர்த்து வைக்க தான் நாம வந்தோம்..”

 

“உனக்கு யார் இதையெல்லாம் சொன்னது???”

 

“அனு அண்ணி தான்.. அரசு, அகில் அண்ணா, அனு அண்ணி மூணு பேருமே ஒரே காலேஜ்ல படிச்சவங்க.. ஆனா அனு அண்ணி மட்டும் வேற டிபார்ட்மென்ட்… ஒரு தடவை அகில் அண்ணா தான் அனு அண்ணிக்கிட்ட அவன் சுமியை லவ் பண்றதை சொல்லியிருக்கான்… ஆனா அண்ணி பீ.ஈ முடிச்சதும் ஊருக்கு வந்துட்டதுனால டச் விட்டு போச்சாம்.. அப்புறம் இப்போ நாலு வருஷமா அகில் அண்ணா இப்படி சோகமா சுத்துறதுக்கும் சுமிக்கும் எதாச்சும் சம்பந்தம் இருக்கும்னு என்கிட்ட ஒரு நாள் சொன்னாங்க..”

 

“நான் தான் அண்ணாவோட லவ் சேரணும்னு சுமி அண்ணியை தேடிப் போக நினைச்சேன்.. அனு அண்ணியும் விசாரிச்சி பார்த்தாங்க, ஆனா எந்த நியூசும் கிடைக்கல… திரு அந்த கம்பெனில வொர்க் பண்றது மட்டும் தான் தெரிஞ்சுது.. அதனால தான் அந்த கம்பெனில வேலைக்கு சேர்ந்து சுமி அண்ணியை பத்தி கண்டுபிடிக்க ட்ரை பண்ணிணேன்… ஆனா அகில் அண்ணாவுக்கு சுமி அண்ணிக்கூட கல்யாணமாகி குழந்தை இருக்கிறது எல்லாம் எனக்கு திரு சொல்லி தான் தெரியும்…” வினு தனக்கு தெரிந்த அனைத்தையும் கூற, ஏதோ சினிமா பார்த்தது போல் உணர்ந்தான் விக்கி…

 

“நம்ம அண்ணா அப்படி சுமி அண்ணியை ஏமாத்தியிருப்பானா வினு???” விக்கியால் இன்னும் தன் அண்ணன் அப்படி செய்திருப்பான் என நம்ப முடியவில்லை.

 

“ம்ம்ஹூம் இருக்காது டா… அப்படி இருந்திருந்தா அண்ணா இப்போ கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருந்திருப்பானே.. ஏன் இப்படி தேவதாஸ் மாதிரி சுத்த போறான்.. இதுல என்னமோ இருக்கு.. அது அகில் அண்ணாவுக்கு மட்டும் தான் தெரியும்.. ஆனா அவன் தான் வாயை இறுக்க மூடிட்டு இருக்கானே….” பெருமூச்சு ஒன்றை விட்டவள் ஜன்னல் கம்பியில் சாய்ந்துக் கொண்டாள்… வெளியே மழை லேசாக சாரல் போட்டுக் கொண்டிருக்க, அதையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்…

 

“எல்லாம் போச்சு… அகில் அண்ணாவோட வாழ்க்கையை எப்படியாச்சும் சரி பண்ணிடலாம்னு நினைச்சேன்.. ஆனா எல்லாம் போச்சு.. என்னோட அரசு கூட என்னை தப்பா நினைச்சிட்டான்…” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் உருண்டோடியது…

 

அவளை ஒரு நொடி ஆழந்து பார்த்த விக்கி, “நீ இப்போ எங்க போற வினு” என்க, அவள் அவனை லூசா டா நீ என்பது போல் நிமிர்ந்து பார்த்தாள்…

 

“என்னடா கேட்குற??? அதான் நம்ம அண்ணன் ஊருக்கு இழுத்துட்டு போறது தெரியலையா???”

 

“நீ எதுக்காக இங்க வந்த வினு… உன் அண்ணாவோட லவ்வை சேர்த்து வைக்கத்தானே??? ஆனா இப்போ உன்னோட காதலையும் தொலைச்சிட்டு சென்னைல போய் என்னப் பண்ண போற??? நம்ம அண்ணாவும் சுமி அண்ணியும் பண்ணின அதே தப்ப நீயும் பண்ண போறியா???” விக்கி அவளிடம் கேட்க, வினுவிற்கு ஒன்றும் புரியவில்லை…

 

“என்னடா சொல்ற???”

 

“ம்ம் ஐஸ்கிரீம்க்கு ஐஸ் இல்லைன்னு…” கடுப்பாக விக்கி கூற, வினு ஙே என்று விழித்தாள்… அவள் பாவனையில் அவனுக்கு சிரிப்பு வர, அவள் கையை பற்றிக் கொண்டவன்,

 

“நீ யாரு?? தி கிரேட் வினு.. என்னோட அக்கா எப்பவும் பிரச்சனையை பார்த்து பயந்து ஓட மாட்டா…. அது அவளுக்கு தெரியவும் செய்யாது… உன்னை பார்த்து அந்த ஹிட்லர் என்னவெல்லாம் பேசிட்டாரு.. அவரை சும்மா விட்டுட்டு சென்னைல போய் நீ என்னப் பண்ண போற??? போ போய் உன் லவ்வர் பாய்க்கு நீ யாருன்னு புரிய வை… நீ சுமி அண்ணியையும் அகில் அண்ணாவையும் சேர்த்து வைக்க தானே இங்க வந்த??? அத முடிக்காமலே போகப் போறியா???” விக்கி கேள்வியாக அவளிடம் கேட்க, வினுவின் முகத்திலும் விக்கி சொல்வது சரி தானே என்று தோன்றியது…

 

“விக்கி… ஆனா அகில் அண்ணா…” பின்னால் அமர்ந்திருக்கும் அகிலை நினைத்து வினு தயங்க…

 

“அட நீ போ வினு.. அவனை எப்படி சமாளிக்கிறதுன்னு எனக்கு தெரியும்… பெங்களூர் விட்டு நீ வரும் போது ஹிட்லரோட தங்கச்சி நமக்கு அண்ணியா தான் வரணும்…” தீவிரமாக கூறியவன் பின்னால் திரும்பி பார்க்க அகில் ஜன்னல் கம்பியில் தலைசாய்த்து தூங்கிக் கொண்டிருந்தான்.. பார்ப்பதற்கே பரிதாபமாக தெரிந்தான்…

 

“போ வினு…. அண்ணா தூங்கிட்டு தான் இருக்கான்… ஹிட்லரை பார்த்ததும் எனக்கு ஒரு மெஸேஜ் மட்டும் பண்ணிடு…” என்றவன் வினுவிற்கு வழிவிட, வினுவும் புது உத்வேகத்தோடு கிளம்பினாள்.. விக்கியின் தலையை கலைத்துவிட்டவள் தன் அண்ணனை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு பஸ்சில் இருந்து இறங்கிவிட்டாள்.

 

பஸ் ஏற்கனவே பஞ்சர் என்பதால் ஓரமாக நிறுத்தி டையரை மாற்றிக் கொண்டிருந்தார்கள்.. வெளியே மழை மெலிதாக தூவிக் கொண்டிருந்ததால் யாரும் வெளியே இறங்கவில்லை. வெளியே பஸ்சின் டிரைவரும் இன்னொரு பையனும் சேர்ந்து டையரை மாற்றிக் கொண்டிருக்க, அவள் இறங்கியது அகிலுக்கு தெரியாமலே போனது.

 

பஸ் இன்னும் சிட்டியை தாண்டாததால் எளிதாகவே ஆட்டோ கிடைக்க… அதில் ஏறியவள் தன் அரசுவை நோக்கி பயணப்பட்டாள் மனம் முழுவதும் கோபத்தோடு…!!!!

 

விழிகள் தொடரும்…..