அத்தியாயம் – 13
அனைத்தும் நடந்து முடிந்து சுமார் ஏழு எட்டு ஆண்டுகள் முடிந்திருந்தாலும், தன் வாழ்வின் கசப்பான நிகழ்வுகளை எண்ணி மனம் கலங்க விரும்பாமல் யூ.எஸ். ரிச்மாண்ட் இல்லத்தில் நித்திரையில் ஆழ்ந்தாள் லவி.
சங்கர் முன்பைவிட கம்பீரமாக இருந்தான். அவர்கள் வீட்டு ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். லவி இங்கு வர ஒத்துக் கொண்டதே அவனுக்குப் பெரிய விஷயமாக இருந்தது. அது இரண்டு படுக்கையறைகொண்ட அபார்ட்மெண்ட். அவன் மற்றோரு அறையை குழந்தை விளையாடும் டாய்ஸ் ரூமாக ஏற்பாடு செய்திருந்தான். அவன் நினைத்திருந்தால் அவர்களுக்கு தனித்தனி அறை ஏற்பாடு செய்திருக்கலாம். ஏனோ அவனுக்கு அதில் உடன்பாடில்லை. காலம் தாழ்த்தியேன்னும் அவர்கள் வாழ்வைச் சரிசெய்தாக வேண்டும் என்று தீர்மானமாய் இருந்தான் சங்கர்.
பலத்த யோசனைக்குப் பின் லவி மற்றும் குழந்தை ராஜ் உறங்கிக் கொண்டிருக்கும் அறைக்குள் நுழைந்தான் சங்கர்.
ஜெட் லாக் காரணமாக லவியும், குழந்தையும் ஆழ்ந்த நித்திரையிலிருந்தனர். முதல் முறையாக லவியை உரிமையாக பார்த்தான் சங்கர்.
லவியின் தலை முடி சீராக வெட்டப்பட்டு அடர்த்தியாக இருந்தது. அதை ஒய்யாரமாகத் தூக்கி முடித்திருந்தாள் லவி. அவள் மேனி இந்த அலைச்சலுக்குப் பின்னும் தகதகவென்று மின்னியது. அவள் கீழ் உதடு அழுத்தமாக மடிக்கப்பட்டு அவள் அழுத்தம், பிடிவாதம் என இரண்டையும் தெளிவாக எடுத்துக் காட்டியது.
‘முன்பு அவள் முகத்தில் இருக்கும் குறும்பு, கேலி இப்படி எதுவும் இப்பொழுது இல்லை…’ என்று எண்ணினான் சங்கர். ‘முன்பு டான்ஸ்,ஏரோபிக்ஸ் இப்படிப் பல கிளாஸ்சுக்கு போவா… இப்பவும் போவ போல?’ என்று லவியின் உடற்கட்டு அவனைச் சிந்திக்க வைத்தது.
இவை அனைத்தையும் தாண்டி, சங்கரின் கண்முன் குறும்புக்கார லவி தோன்றினாள். இன்று காலையில் பளாரென்று கை நீட்டிய லவியும் தோன்றினாள். ஏனோ சங்கரால் லவியிடம் கோபித்துக் கொள்ள முடியவில்லை.
ரிச்மண்டிலிருந்து வாஷிங்டன் மீண்டும் வாஷிங்டனிலிருந்து ரிச்மண்ட் என ஐந்து மணி நேரத்திற்கு மேல் கார் ஒட்டி களைப்பாக உணர்ந்தான் சங்கர். லவி அருகே குழந்தை படுத்திருக்க, குழந்தை அருகே இடம் காலியாக இருந்தது. லவி படுத்திருக்கும் அதே மெத்தையில் படுக்கும் எண்ணம் தோன்ற சங்கரின் மனதில் கிலி பரவியது.
‘எதைச் செய்தலும் அவள் முழித்திருக்கும் பொழுது செய்ய வேண்டும்…’ என்று எண்ணியவனாக ஹாலில் இருக்கும் சோபாவில் படுத்துக் கொண்டான்.
சில மணி நேரத்திற்கு பின் லவி எழுந்து வர, அவள் காலடி ஓசையில் முழித்துக் கொண்டான் சங்கர். லவியின் முகம் வாடியிருக்க, “சாப்பிடு… எவ்வுளவு நாள் சாப்பிடாம இருப்ப?” என்று கேள்வியாக நிறுத்தினான் சங்கர்.
லவி சங்கரைக் கோபமாகப் பார்க்க, ‘இவளுக்கு என் மீதான கோபம், வெறுப்பு என்றாவது குறையுமா?’ என்று லவியை ஏக்கமாகப் பார்த்தான் சங்கர்.
லவி எதுவும் பேசாமல் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள, அவளுக்கு மிதமான சூட்டில் பால் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டாள் லவி.
அவளுக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. “மாவு இருக்கு. இட்லி தோசை சாப்பிடறியா? இல்லை நூடுல்ஸ், பாஸ்தா பண்ணட்டுமா?” என்று சங்கர் லவியை பார்த்து அக்கறையாகக் கேட்டான்.
“என்னைக் கிண்டல் பண்றியா?” என்று புருவம் உயர்த்தி கேட்டாள் லவி. ‘நான் எப்ப கிண்டல் பண்ணேன்…’ என்று சங்கர் லவியை புரியாமல் பரிதாபமாகப் பார்க்க, “இன்னமும் இந்த அப்பாவி பார்வையை நீ விடலை?” என்று தன் கண்களைச் சுருக்கி காட்டமாகக் கேட்டாள் லவி.
சங்கரின் மௌனத்தை எதிர்பார்த்தது லவி மேலும் பேச தொடங்க, சங்கர் அவளை இடை மாறித்தான்.
“என்ன கிண்டல் பண்ணேன்னு எனக்கே உண்மையில் தெரியலை.” என்று மெதுவாக, நிதானமாக லவிக்கு புரிய வைக்கும் நோக்கோடு கூறினான் சங்கர்.
“ஏற்கனவே பிளைட்ல ப்ரெட்டும், ஸ்வீட்டும் சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு… இதுல யாரவது இப்ப நூடுல்ஸ், பாஸ்தா சாப்பிடுவாங்கலா?” என்று லவி கடுப்பாகக் கேட்க, சங்கர் முகத்தில் அழகாக ஓர் புன்முறுவல் பூத்தது.
அதை லவி அறியா வண்ணம் மறைத்துக் கொண்டான் சங்கர்.
“இட்லி பண்றேன்… ” என்று கூறி சங்கர் சமையல் அறைக்குள் நுழைந்து கொள்ள, லவி சோபாவில் சாய்ந்தமர்ந்தாள்.
அவளுக்கு இன்னும் தூக்கம் கண்களை சுழட்டிக் கொண்டு வந்தது.
சில நிமிடங்கள் கழித்து சமையலறையிலிருந்து வெளியே வந்த சங்கர், லவியை பார்த்து, “ஜெட் லாக் இப்படி தான் தூக்கம் வரும். கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கோ… ஒரேடியா நைட் தூங்கிட்டா சரியாகிரும்.” என்று சங்கர் கூற, ‘இவன் கூறுவதை எல்லாம் நான் கேட்க வேண்டும். என் தலை எழுத்து.’ என்று தன் விதியை நொந்து கொண்டு தலை அசைத்தாள் லவி.
சங்கர் சூடாக இட்லி, சட்னி எடுத்து அதை மேஜை மீது வைத்தான். “சாப்பிடு…” என்று சங்கர் கூற, இட்லியைத் தட்டில் வைத்து விட்டு இட்லியைச் சட்னி தொட்டுச் சாப்பிட ஆரம்பித்தாள் லவி. சங்கர் சோபாவில் அமர்ந்திருக்க, ‘இவனை சாப்பிடக் கூப்பிடலாமா, வேண்டாமா?’ என்ற தீவிர ஆலோசனை நடந்து கொண்டிருந்தது லவியின் மனதில்.
சங்கரைச் சாப்பிட அழைக்க, அவள் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அழைக்காமல் சாப்பிட அவள் மனம் இடம் கொடுக்கவில்லை. மனமும், மானமும் போட்டியிட… சங்கர் தன் ஓரக் கண்களால் லவியை பார்த்தபடி தன் கவனம் தொலைக்காட்சியில் இருப்பது போல் காட்டிக்கொண்டான்.
‘இவன் கூப்பிட்டா தான் சாப்பிட வருவானா? நான் தான் இவன் வீட்டு விருந்தாளி. இது அவன் வீடு தானே! அப்படியே சாப்பிட உட்கார வேண்டியது தானே?’ என்று மனதிற்குள் சங்கரைத் திட்டியபடி அமர்ந்திருந்தாள் லவி.
‘இந்த ஆறு வருட இடைவெளியில் இவனுக்கு நல்ல கொழுப்பு ஏறியிருக்கு.’ என்று சங்கரைப் பார்த்தபடி எண்ணினாள் லவி.
“ஏன் சாப்பிடாம உக்காந்திருக்க? ஆண்ட்டி செஞ்ச மாதிரி இருக்காது. எதோ சுமாரா செய்வேன். பிடிக்கலீயோ?” என்று அக்கறையாகக் கேட்டான் சங்கர். மறுப்பாகத் தலை அசைத்து, “நல்லா தான் இருக்கு.” என்று கூறினாள் லவி.
“நீயும் சாப்பிட வேண்டியது தானே? ஏன் சாப்பிடாம டிவி பாக்குற? இல்லை நான் தான் உன் சமையலுக்குச் சோதனை எலியா? என்னை வச்சி டெஸ்ட் பண்றியா?” என்று தன் தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் சங்கரைச் சாப்பிட அழைத்தாள் லவி.
சங்கர் முகத்தில் புன்னகை, அதே நேரத்தில் அவன் கண்களும் கலங்கியது. அதை லவி அறியாவண்ணம் மறைத்துக் கொண்டு அவளோடு உண்பதற்காக அமர்ந்தான் சங்கர்.
“நல்லா தான் பண்ணிருக்க…” என்று லவி தன் கவனத்தை இட்லியில் வைத்தபடி கூற, அப்பொழுது ராஜ் முனங்கும் சத்தம் கேட்க… லவி பதட்டமாகக் குழந்தை அருகே சென்றாள்.
சங்கர் அவளை பின் தொடர, “இப்படி தூங்கவே மாட்டான்… ரொம்ப சுறுசுறுப்பா இருப்பான்… இன்னைக்கி ரொம்ப நேரம் தூங்கறானே…” என்று ராஜைப் பார்த்தபடி சங்கரிடம் வருத்தமாகக் கூறினாள் லவி.
‘தாய்… எத்தனை உன்னதமான பதவி. எப்படிப்பட்ட பெண்களையும் அசைத்துப் பார்த்துவிடும்.’ என்ற எண்ணத்தோடு, “டைம் ஸோன் மாறுதுல… அதனால் தான்… இரண்டு நாள் காலையில் சீக்கிரம் எழும்புவான்… பகல்ல தூங்குவான்… அப்புறம் சரியாகிரும்…” என்று லவிக்கு ஆறுதலாகக் கூறினான் சங்கர்.
மீண்டும் இருவரும் உண்ண ஆரம்பிக்க, ராஜ் முனங்க லவி எழ ஆயத்தமானாள்.
சங்கர் லவியை அமரும்படி செய்கை காட்டி, படுக்கையறைக்குச் சென்று ராஜைத் தூக்கி தன் தோள் மேல் போட்டுக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான். குழந்தை சங்கரிடம் பொருந்திக் கொள்ள, அதைப் பொறாமை ததும்பும் விழிகளோடு பார்த்தாள் லவி. அதை மறைத்துக் கொண்டு, “கார் ஓட்ட கத்துக்கிட்டியோ?” என்று சங்கரிடம் கேட்டபடி சாப்பிட ஆரம்பித்தாள் லவி.
“ஏதோ…” என்று சங்கர் தலை அசைத்துக் கூற, “இல்லை… நல்ல தான் ஓட்டுற…” என்று லவி அவனை பாராட்டும் விதமாக உணவை ருசித்தபடி கூறினாள் லவி.
‘இவள் தான் லவி… இவளிடம் அன்புண்டு… பரந்த மனமுண்டு… அதைத் தாண்டியும் பிடிவாதம், கோபம்… இவையும் உண்டு…’ என்று எண்ணி ஒரு புன்னகையோடு, “இங்க வேற வழி கிடையாது… கத்துக்கிட்டு தான் ஆகணும்.” என்று தன்னடக்கத்தோடு கூறினான் சங்கர்.
“சந்தோஷமா இருக்கப் போல?” என்று புருவம் உயர்த்தி கூர்மையாக வந்தது லவியின் கேள்வி.
‘இதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும்.’ என்றறியாமல் லவியை சங்கர் அளவிடும் விதமாகப் பார்க்க, “இல்லை… நல்ல படிப்பு, நல்ல வேலை, ராஜ போக வாழ்க்கை அதைக் கேட்டேன்.” என்று எகத்தாளமாகக் கூறினாள் லவி.
சங்கர் எதுவும் பேசாமல் தன் உணவை முடித்துக் கொண்டு ராஜை மடியில் கிடத்தியபடி குழந்தையைப் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தான்.
“நீ ஏன் இத்தனை வருஷத்தில் வேற கல்யாணம் பண்ணலை?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள் லவி.
தூக்கி வாரிபோட்டவனாக லவியை அதிர்ச்சியாகப் பார்த்தான் சங்கர். “நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு…” என்று லவி சங்கரை மிரட்ட, “கொடுத்த பொறுப்பைப் பாதியில் தட்டிக் கழிக்கிற குணம் என்கிட்ட கிடையாது.” என்று சங்கர் அழுத்தமாகக் குழந்தையின் தலையை வருடியபடி கூற, அவனை நக்கலாகப் பார்த்தாள் லவி.
“அடேங்கப்பா… இத்தனை வருஷம் சார் எப்படி இருந்தீங்க…” என்று வார்த்தைகளால் அவனைக் குத்தினாள் லவி.
“நீ வேறு யாரையாவது கல்யாணம் பண்ணிருந்தா உன்னை தொந்தரவு செய்ய வேண்டாமுன்னு நினச்சேன்.” என்று சங்கர் சளைக்காமல் பதில் கூற, “ஒரு தடவை கல்யாணம் பண்ணதே பெரிய தப்புன்னு நான் நினைக்கிறேன். இதில் இன்னொரு கல்யாணம் வேற எனக்கு ஒரு கேடா?” என்று காட்டமாகச் சலித்துக் கொண்டாள் லவி.
சங்கர் முகம் வாடி லவியை பார்க்க, “உன்னைக் காலையில் அடிச்சது தப்பு தான்… சாரி.” என்று ஏதோ நினைவு வந்தவளாக லவி குரல் கம்ம கூற, சங்கர் லவியை ஆச்சரியமாகப் பார்த்தான்.
‘வயது தந்த பக்குவம் போலும். சாரி சொல்லலும் அளவிற்கு!’ என்றெண்ணி சங்கர் லவியை வியப்பாய் பார்க்க, “நீ இனி என் குழந்தை மேல் உரிமை எடுத்துக்காத. அது தான் எனக்கு கோபம் வந்திருச்சு.” என்று கூறி அவனிடமிருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு தன் அருகே படுக்க வைத்துக் கொண்டாள் லவி.
‘கல்யாணம் பிடிக்காது. ஆனால், குழந்தை பிடிக்குமா?’ என்ற எண்ணம் சங்கருக்குத் தோன்ற, “எனக்கு உரிமை இல்லைனா? அப்ப யாருக்கு உரிமை இருக்கு?” என்று ஒற்றை புருவம் வளைத்து லவியை பார்த்து நக்கலாகக் கேட்டான் சங்கர்.
லவ்லி லவி வருவாள்…
Next episode on Thursday or Friday Friends…