Lovely Lavi – Episode 15
Lovely Lavi – Episode 15
அத்தியாயம் – 15
சங்கர் கண் கொட்டாமல் லவியை ஆர்வமாகப் பார்க்க, ராஜ் தன் தாயைக் கண்களைச் சுருக்கி பார்த்தான்
சங்கர், ராஜ் இருவரும் அமர்ந்திருக்க, அவர்கள் முன் இடுப்பில் கைவைத்து அவர்களைப் பார்த்தபடி நின்றாள் லவி.
“ராஜ்! உங்க அப்பாவை எந்திரிக்க சொல்லு. நீயும் நில்லு.” என்று லவி தோரணையாகக் கூற, ராஜ் தன் தந்தையின் கைகளைப் பிடித்து எழுந்து நிற்க, சங்கரும் எழுந்து கொண்டான்.
“உங்க அப்பாவை, இப்ப உன்னைத் தூக்க சொல்லு.” என்று லவி கட்டளையிட, சங்கர் லவி கூறவருவதைப் புரிந்து கொள்பவன் போல், லவியை மனதில் மெச்சியபடி தன் மகனை உயரமாகத் தூக்கினான்.
“யாரு டா பெருசா இருக்கா?” என்று லவி தன் மகனிடம் கேட்க, “நான் தான்…” என்று தன் இருக்கைகளையும் உயர்த்தி குதூகலித்தான் ராஜ்.
“அம்மாவுக்கு உன்னைத் தான்டா ரொம்ப பிடிக்கும்…” என்று லவி புன்னகையோடு கூற, “டேய்… உங்க அம்மா விளையாடறது போங்காட்டம்…” என்று சங்கர் லவியை பெருமையாகப் பார்த்தபடி கூற, “நீங்க என் வாழ்க்கையில் விளையாடியதை விடவா?” என்று லவி சங்கரைப் பார்த்து கடினமாகக் கேட்க, ராஜ் தன் தாயின் பேச்சைப் புரியாமல் பார்க்க, சங்கர் எதுவும் அறியாதவன் போல் ராஜுடன் இணைந்து பஸில் விளையாட ஆரம்பித்தான்.
லவி அங்கிருந்து சமையலறைக்குள் நுழைந்து, உப்புமா செய்ய வெங்காயம், பச்சை மிளகாய்… எனத் தேவையானவற்றை நறுக்க ஆயுத்தமாக, அரிவாள்மணையைத் தேடினாள்.
“இங்கு எல்லாமே கத்தி தானா?” என்று சமயலறயில் நின்றபடி லவி கேட்க, “ஆமா…விதவிதமா இருக்கும்.” என்று சங்கர் தலை அசைக்க, “சும்மாவே நான் சூப்பரா சமைப்பேன். இப்படி எனக்குத் தேவையானது கூட இல்லைனா அவ்வுளவு தான்.” என்று முனங்கிக் கொண்டே காய்களை நறுக்க ஆரம்பித்தாள் லவி.
“நான் நறுக்கித் தரவா?” என்று ராஜுடன் விளையாடியபடி சங்கர் கேட்க, “வேண்டாம்… நீ குழந்தையோடு இரு.” என்று கூறிக் கொண்டே தன் வேலைகளைச் செய்தாள் லவி.
சிறிது நேரத்தில், லவி எதையோ திருப்ப, அங்கு அமைக்கப்பட்டிருந்த அடுப்பு, “பீம்… பீம்… பீம்…” என்று அலறியது.
லவி சற்று எரிச்சல் கலந்த கண்களோடு, அந்த அடுப்பைப் பார்க்க, அவள் என்ன திருப்பியும் அந்த சத்தம் நிற்கவில்லை.
‘ஐயோ! அவன் சொல்லி கொடுக்கிறேன்னு சொன்னானே… அப்பவே கேட்டுருக்கலாமே… இப்ப நான் இவன் கிட்ட கேட்கணுமா?’ என்ற எண்ணத்தோடு சமையலறையில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க, சங்கர் அவளை ரசனையோடு பார்த்தான்.
லவி சற்று நேரம் தடுமாறிவிட்டு, சங்கர் அருகே வந்தது, “ம்… ச்…” என்று குரல் எழுப்பி, அவனிடம் உதவி கேட்க மனமில்லாமல் மீண்டும் சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
லவியை மேலும் தவிக்க விட மனமில்லாமல், அவள் அருகே சென்று லவி தவறாக அழுத்தியிருந்த பட்டனை ஆப் செய்து விட்டு, அடுப்பை ஆன் செய்ய கற்றுக் கொடுத்துவிட்டு ராஜை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
“நான் ரொம்ப நேரம் இதுகிட்ட சண்டை போடுறேன்னு உனக்கு தெரியும் தானே? அப்பவே வர வேண்டியது தானே?” என்று சங்கரின் வழியை மறித்து கேட்டாள் லவி.
சங்கர் பதில் கூறாமல் அவள் முகத்தைப் பார்த்தான். ‘இப்பல்லாம் லவி யார் கிட்டயும் பேசுறதே இல்லை. அவ பேசினா நிறைய விஷயம் சரியாகிடும்.’ என்று யாதவ் கூறியது நினைவு வர, லவியை அளவிடும் விதமாக பார்த்தான் சங்கர்.
“பேசிறாதே… பேசாமலே என்னை கொல்லு.” என்று சங்கரிடம் கடுப்பாகக் கூறிவிட்டுச் சமையல் வேலையைத் தொடங்கினாள் லவி.
அவர்கள் முன் உணவை வைத்துவிட்டு, “சங்கர் நீ சாப்பிடு. ராஜுக்கு நான் குடுக்கிறேன்.” என்று கூறி லவி அவனுக்குக் கொடுக்க தயாராக, “அம்மா… நான் பிக் பாய் நானே சாப்பிடணுமுன்னு சொல்லிருக்கீங்கள்ல?” என்று கேட்டுத் தானே சாப்பிட ஆரம்பித்தான்.
“நீங்க ரெண்டு பெரும் சாப்பிடுங்க. நான் அப்புறம் சாப்பிடறேன்.” என்று கூறி லவி விலகிக் கொள்ள, “ராஜ் உங்க அம்மாவைச் சாப்பிடக் கூப்பிடு. ” என்று அதிகாரமாகக் கூறினான் சங்கர். சங்கரின் குரலில் லவி இவர்களுடன் சாப்பிட வேண்டும் என்ற கட்டளை மறைமுகமாக இருப்பது போன்ற எண்ணம் தோன்ற, ‘இவன் யார் என்னை அதிகாரம் செய்ய?’ என்ற எண்ணத்தோடு லவி அவனைச் சீறும் விதமாகப் பார்த்தாள்.
“அம்மா…” என்று ராஜ் பேச ஆரம்பிக்க, “ராஜ்… நீ சாப்பிடு.” என்று தோரணையாக ஒலித்தது லவியின் குரல்.
“எனக்கு தான் அம்மா இல்லை ராஜ். தனியாவே சாப்பிடுறேன். நீ ஏன்டா தனியா சாப்பிடணும்?” என்று சங்கர் உணர்ச்சி வசப்பட்டுக் கூற, லவி அவனைப் பதட்டமாகப் பார்த்து, “சின்ன புள்ளைக் கிட்ட என்ன பேசுற? அறிவில்லை உனக்கு?” என்று கூறிக் கொண்டு கோபமாக அவர்களோடு அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள் லவி.
“அப்பா… உங்களுக்கு யாருமில்லையா?” என்று ராஜ் கேட்க, தன் தவற்றை உணர்ந்து கொண்டவனாய், “அது தான் நீ இருக்கியே?” என்று கூறி குழந்தையைத் தழுவிக் கொண்டான் சங்கர்.
“அப்பா… அம்மா… தான் இருக்காங்களே.” என்று கூறி, ராஜ் லவியை காட்ட, தன் மகனை ஆமோதிப்பது போல் தலை அசைத்து லவியை கண்களால் ஆரத்தழுவினான் சங்கர்.
இவர்கள் உரையாடலை ஒதுக்கிவிட்டு, ‘இத்தனை வருடங்கள் இல்லாமல், இவனுக்கு என் மேல் என்ன திடீர் அக்கறை?’ என்று லவியின் அறிவு சிந்திக்க, மனமோ, ‘நீ தானே அவனைக் கண்ணில் காண விடாமல் செய்தாய்.’ என்று லவியை இடித்துரைத்தது
‘சரி.. நான் செய்ததே தப்பாக இருக்கட்டும். இப்ப மட்டும் இவனுக்கு என் மேலையும் என் குழந்தை மேலையும் என்ன அக்கறை?’ என்று லவி மீண்டும் அதையே யோசிக்க, அவள் தலை விண்வினென்று வலித்து லவியை சுருக்கென்று தைத்தது.
லவி முகம் சுழிக்க, ‘பாவி… சொல்ல மாட்டாள்… எதையும் சொல்ல மாட்டாள்.’ என்று லவியை மனதில் சபித்தபடி, “சாப்பிடாம என்ன யோசனை?” என்று அவனுக்கு தோன்றிய பதட்டத்தை மறைத்து கேட்டான் சங்கர்.
மறுப்பாகத் தலை அசைத்து தன் கவனத்தை உணவில் திசை திருப்பினாள் லவி.
லவியிடம் பேச அச்சம் கொண்டு, சங்கர் ராஜுடன் மெத்தையில் படுத்துக் கொள்ள, லவி வேலைகளை முடித்துவிட்டு படுக்கை அறைக்குள் நுழைய, அந்த மெத்தையைச் சற்று அதிர்ச்சியாகப் பார்த்தாள் லவி
அங்கிருந்த போர்வையை எடுத்துக் கொண்டு, “நான் கீழே படுத்துகிறேன்.” என்று லவி வீராப்பாகக் கூற, தன் முகத்தில் கோபமாகத் தலையணையும், போர்வையையும் எறிந்த லவி கண்முன் வர, அவனுக்கு லவியின் மேல் கோபம் வருவதற்குப் பதில், ‘இந்த சமுதாயம் இவளுக்குக் கொடுத்து என்ன? பிரச்சனைகளைத் தைரியமாக எதிர் கொண்ட ஒரு பெண்ணை அடக்கி ஆள நினைக்கும் கொடூரமான சமுதாயம்.’ என்று அவனையும் மீறி அவன் குணத்திற்கு நேர் எதிர்மாறாக, சங்கரின் மனது இந்த சமுதாயத்தை நிந்திக்க ஆரம்பித்து, தான் செய்த தவற்றையும் சுட்டிக் காட்டி அவனை இம்சித்தது.
“அம்மா… என் பக்கத்தில் படுங்க.” என்று ராஜ் கூற, “இல்லை டா. இடம் இருக்காது.” என்று கூறி அந்த போர்வையை கார்பெட் மீது விரித்தாள் லவி.
“இந்த ஊரு குளிருக்கு கீழ படுக்க முடியாது. நேரமாக ஆக, குளிர் தரை வழியாக மேல ஏறி நம்மளை நடுங்க வச்சிரும்.” என்று லவியை அச்சுறுத்தும் விதமாகக் கூறினான் சங்கர்.
“என்னை நீ சொல்றதை எல்லாம் நம்புற பச்சை புள்ளைன்னு நினைச்சியா?” என்று கேட்டுக்கொண்டே, அந்த போர்வை மீது தலையணை வைத்து அதில் படுத்தாள் லவி.
“குளிர் அதிகமாச்சுன்னா, பெரிய பிரச்சனை ஒன்னும் இல்லை. கொஞ்சம் கையும் காலும் வெட்டி வெட்டி இழுக்கும். அதனால் என்ன ஆகப்போகுது.. சில சமயம் கை கால் மரத்து போகும்… நானும், ராஜும் உன்னை அப்ப மெத்தை மேல தூக்கி போட்டிருவோம். ராஜ் அப்பா மாதிரி ஸ்ட்ரென்த் இருக்கா?” என்று தன் முறுக்கேறிய கைகளை சங்கர் ராஜிடம் காட்ட, “அப்பா… எனக்கும் ஸ்ட்ரென்த் இருக்கு” என்று தன் பிஞ்சு கைகளை தன் தந்தையிடம் காட்டினான் ராஜ்.
“சூப்பர் டா… நைட் நாம அம்மாவை மெத்தை மேல தூக்கி போட்டுருவோம்.” என்று கூறி தன் மகனிடம் ஹைப்பை செய்ய, “ஒன்னும் தேவையில்லை…” என்று மிடுக்காகக் கூறி, அவர்களோடு மெத்தையில் படுத்துக் கொண்டாள் லவி.
‘ஏதோ இந்த நாட்டுக்கு புதுசு. இந்த ஊர் குளிரைப் பத்தி தெரியாதுன்னு ரொம்ப பொய் சொல்ற… உன்னை அப்புறம் கவனிச்சிக்கிறேன்.’ என்று மனதில் சங்கரைத் திட்டிக் கொண்டு ராஜைப் பார்த்தபடி படுத்திருந்தாள் லவி.
தூக்கம் கண்களை சுழட்ட, தூங்காமல் லவி ராஜை பார்த்தபடி படுத்திருக்க, “நீ தூங்கு… நான் குழந்தையை பாத்துக்கிறேன்.” என்று சங்கர் அக்கறையோடு கூற, “இல்லை. அம்மாவுக்கு உடம்பு முடியாது. ராஜ் என்னைத் தவிர வேற யார்கிட்டயும் படுத்துக்க மாட்டான்.” என்று லவி சங்கருக்கு மறுப்பு தெரிவிக்க…”என்னைக்கினாலும், பழகித்தானே ஆகணும்.” என்று கூறி குழந்தையை தன்னோடு அனைத்துக் கொண்டான் சங்கர்.
சங்கரிடம் மேலும் பேச்சு வளர்க்க விரும்பாத லவி, அவர்கள் இருவரையும் அமைதியாகப் பார்த்தபடி படுத்திருந்தாள் லவி. லவியின் மனம் ஒருபக்கம் பாரம் இறங்கியது போல இருக்க… ‘இத்தனை வருடம் இவனுக்குக் குழந்தை விஷயம் தெரியாதா? இல்லை தெரிந்து ஒதுங்கி இருந்தானா? இத்தனை வருஷம் கழித்து என்னை ஏன் தேடி வரணும்?’ போன்ற கேள்விகள் லவியின் மனதை மீண்டும் மீண்டும் வண்டாய் குடைந்தது.
“அப்பா பாட்டு பாடுங்களேன். நித்திலா சித்தி வீட்டுக்கு வந்தா என்னைப் பாட்டுப் பாடி தான் தூங்க வைப்பாங்க.” என்று குழந்தை அவன் மீது கால் போட்டு கூற, சம்மதமாகத் தலை அசைத்துப் பாட ஆரம்பித்தான் சங்கர்.
” கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாய வா.
புண்ணான நெஞ்சை பொன்னான கையால் பூப்போல நீவ வா.”
பாடல் குழந்தைக்காக இருந்தாலும், அவன் கண்கள் லவியை அவளறியாவண்ணம் அளவிட்டுக் கொண்டிருந்தது.
“நான் காத்து நின்றேன் காலங்கள் தோறும் என் ஏக்கம் தீருமா
நான் பார்த்து நின்றேன் பொன் வானம் எங்கும் என் மின்னல் தோன்றுமா”
‘சங்கர் ஏதோ சொல்ல நினைக்கிறான்? ஆனால்… ஆனால்… ‘ என்று அதற்கு மேல் லவியால் சிந்திக்க முடியவில்லை.
“கண்ணீராய் மேகம் தூவும் கண்ணீர் சேரும் கற்கண்டாய் மாறுமா
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ”
ராஜ் மட்டுமில்லை, லவியும் உறங்கிவிட்டாள். லவி உறங்கிவிட்டதை உறுதி செய்து கொண்டு, அவள் அருகே சென்றான் சங்கர். லவியின் தலை கோதி அவள் முகத்தைக் கூர்மையாகப் பார்த்தான்.
‘என்னை மன்னிச்சிரு லவி.’ அவளிடம் மானசீகமாய் மன்னிப்பு கேட்டான் சங்கர். ‘எல்லாம் என்னால் தான்! எல்லாம் என்னால் தான்!’ என்று சங்கரின் மனம் ஊமையாய் அழுதது.
“எப்படி அனைத்தையும் சரி செய்யப் போகிறாய்?” என்ற கேள்வி சங்கரின் முன் பூதாகரமாய் நின்றது.
லவ்லி லவி வருவாள்…