SSKN — epi 16

அத்தியாயம் 16

 

பருவத்திலே ஒரு முறை பூத்தேன்

பார்த்ததிலே மறு முறை பூத்தேன்!!!

 

பூவிதழ் விழுந்தால் கூட பேரோசையாக கேட்கும் அளவுக்கு பலத்த அமைதி அந்த கோயிலில். எல்லோரும் அதிர்ச்சியாக, எழுந்து நின்றிருந்த மீராவைப் பார்த்தார்கள்.

“மீராம்மா!” கோபத்தில் குரல் கொடுத்தது நம் கவியேதான்.

அமைதியாம அவளைப் பார்த்திருந்தார் மீரா.

“என்ன பேச்சு பேசறீங்க? கல்யாணம் உங்களுக்கு விளையாட்டாப் போச்சா? உங்க சம்மதம் கிடைச்சுதானே எல்லா ஏற்பாடும் செஞ்சோம்?” கோபத்தில் முகம் சிவக்க ஆக்ரோஷமாகக் கத்தினாள் அவள்.

அடிக்கடி அவளின் கோபத்தைப் பார்த்துப் பழகி இருந்த மணிக்குக் கூட இப்பொழுது அவள் நிற்கும் பத்ரகாளி தோற்றம் கிலியைக் கொடுத்தது.

“இரும்மா ஹனி! கோபப்படாதே! அப்பா என்னன்னு விசாரிக்கறேன்” என்ற வெங்கியும் எழுந்து நின்றிருந்தார்.

“எந்த விசாரணையா இருந்தாலும் இருபது நிமிஷத்துக்குள்ள முடிங்க. நல்ல நேரம் முடியப் போகுது!” என்றார் ஐயர்.

‘எப்போ தாலி கட்டற முன்னே படக்குன்னு எழுந்து நின்னாளோ அப்பவே எனக்கு நல்ல நேரம் முடிஞ்சிருச்சிய்யா’ வெங்கி மனதுக்குள்ளேயே ஒரே புலம்பல்.

மற்றவர்கள் நடப்பதை அமைதியாக பார்த்திருக்க, சாமுவேல் மட்டும் இவர்கள் முன்னே வந்து நின்றார்.

“மீராம்மா என்னாச்சு? இவங்க உன்னை ஃபோர்ஸ் பண்ணி கல்யாணத்துக்கு நிக்க வச்சிருக்கறாங்களா? எதா இருந்தாலும் வாய் திறந்து சொல்லு. உனக்கு நான் இருக்கேன், ரெண்டுல ஒன்னு பார்த்துரலாம்” என சப்போர்ட்டுக்கு வந்தார்.

சம்பந்தி வீட்டுக்காரர்கள் மட்டும் இல்லையென்றால், வெங்கி அவர் மேல் பாய்ந்து மீதி இருக்கும் முடிகளையும் புடுங்கி இருப்பார். அப்படி ஒரு கொலைவெறி முகத்தில் நர்த்தனமாடியது.

“வேல், நீங்க கவலைப்படாம உட்காருங்க! பீபீ ஏறிட போகுது. இந்த பிரச்சனைய நானே சமாளிப்பேன்” என்றார் மீரா.

“ஓஹோ, உங்க சாமு நொண்ணனுக்கு மட்டும் தான் பீபீ ஏறுமா? இப்ப நீ பண்ண காரியத்துல மண்டை வெடிக்கற அளவுக்கு கொதிச்சுப் போய் நிக்கற எங்களுக்கு ஏறாதா?” மெல்லிய குரலில் கடுகடுத்தார் வெங்கி.

ஒன்றும் பேசாமல் தலைக்குனிந்திருந்தார் மீரா.

“சொல்லு மீரா? எதுக்கு கல்யாணத்தை நிறுத்துன? உனக்கு என்ன பிரச்சனைனாலும் கல்யாணம் முடிஞ்சு பேசித் தீர்த்துக்கலாம்! இப்போ வா, கழுத்த காட்டு” மெல்லிய குரலில் மன்றாடினார் வெங்கி.

“எதுக்கு முனுமுனுன்னு பேசறீங்க? சத்தமா பேசுங்க மிஸ்டர் வெங்கி! வந்துருக்கறவங்க எல்லாம் உங்க சொந்தமாகப் போறவங்கத்தான். அவங்களுக்கும் நம்ம பிரச்சனைத் தெரியட்டும்” சத்தமாக சொன்னார் மீரா.

“பிரச்சனை, பிரச்சனைன்னு சொல்லுறீங்களே! அது என்ன பிரச்சனைன்னும் சொல்லுங்க மீராம்மா!” கோபத்தை அடக்கி சாந்தமான குரலில் கேட்டாள் கவி. ஊசலாடுவது தன் தகப்பனின் வாழ்க்கை அல்லவா!

“நீதான் பிரச்சனையே” விரல் நீட்டி கவியை சுட்டிக் காட்டினார் மீரா.

கோபம் பொங்கி விட்டது வெங்கிக்கு.

“ஏய்! என்ன பேச்சு பேசற? என் மக உனக்கு என்னடி பிரச்சனைப் பண்ணா?” எகிறிவிட்டார் ஒரு அப்பாவாக.

“ஆமா, உங்க மகதான் எனக்குப் பிரச்சனை! இத்தனை வருஷம் கழிச்சு நானே இப்போத்தான் எனக்கு மனசுக்குப் பிடிச்ச ஒருத்தரப் பார்த்து காதல் கொண்டு மணக்கப் போறேன். நீங்க எனக்கு முதல் தாரம்னாலும், உங்களுக்கு நான் ரெண்டாம் தாரம் தானே? ஆனாலும் காதல் வந்து கண்ணை மறைக்க அதை நான் கண்டுக்கல. ஆனா பழைய வாழ்க்கையோட மிச்சமா உங்கப் பொண்ணும் கூட வரதுனா எப்படி? அதுவும் நம்ம காலம் பூரா!”

சட்டென வெங்கியின் விழிகள் பளிச்சிட்டன. ஜீனியஸ் மூளை பற்றிக் கொண்டது.

“அதெல்லாம் இல்ல மீரா! அவ கல்யாணம் செஞ்சிட்டுப் போயிருவா. அதுக்கப்புறம் நீயும் நானும்தான். ப்ளிஸ் புரிஞ்சுக்கோ மீரா. என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ” கெஞ்சவே ஆரம்பித்து விட்டார்.

யாரிடமும் தலை வணங்காத தன் தகப்பன், இப்படி கெஞ்சும் படி ஆனதை நினைத்து கவிக்கு ரத்தக் கண்ணீரே வந்தது.

“அதெல்லாம் நான் நம்பமாட்டேன்! காலம் முழுக்க நம்ம கூட இருக்கறதுக்குத் தான் உங்க மக ப்ளான் போடுறா! கல்யாணம், குழந்தை, குட்டிலாம் அவ லிஸ்ட்லயே இல்ல. அது சரி மிஸ்டர் வெங்கி, நமக்குன்னு ஒரு குழந்தையோ குட்டியோ வராதா?” சந்தேகமாக வெங்கியைப் பார்த்தவாறே கேட்டார் மீரா.

“அதெல்லாம் வரும், இது சத்தியம். நம்பு மீரா, ஐம் ஜஸ்ட் ஃபார்ட்டி நைன்!”

கீழே நின்றிருந்த சாமுவேலுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“நீங்க அடிச்சு சத்தியம் பண்ணறதனால நம்பறேன். அப்படி நமக்குன்னு பிள்ளை வரும் பட்சத்துல இவளையும் என்னால சேர்த்து கவனிச்சுக்க முடியாது.”

“மீராம்மா உங்க வாழ்க்கைக்கு இடைஞ்சல் பண்ணாம நான் என் வழிய பார்த்துப் போயிருவேன். அதை நினைச்சுக் கவலைப்பட வேணாம் நீங்க”

“பாருங்க, பாருங்க! இப்ப கூட வழிய பார்த்து போவேன்னு தான் சொல்லுறாளே தவிர கல்யாணம் பண்ணிட்டுப் போறேன்னு சொல்ல மாட்றா! கொஞ்ச நாள் அங்க இங்கன்னு சுத்திட்டு மறுபடி நம்ம கிட்ட தான் வருவா”

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த பிரகாஷ்,

“மீராம்மா! இப்படி வளவளா கொளகொளான்னு பேசி டைம் வேஸ்ட் பண்ண வேணாம்! இந்த கல்யாணம் நடக்கனும்னா கவி என்ன செய்யனும்?” என பாயிண்டைப் பிடித்துக் கேட்டான்.

“அவ கல்யாணம் பண்ணனும். இப்பவே, இங்கயே!”

“கவி கல்யாணம் மட்டும்தான் சொலுஷனா?” கேட்டான் பிரகாஷ்.

“ஆமா, அவ கல்யாணம் செஞ்சா தான் எங்கள தொல்லைப் பண்ண மாட்டா. அவ குடும்பம், அவ வாழ்க்கைன்னு போயிருவா.”

“இல்ல, இல்ல! எனக்கு கல்யாணம் வேணா!” மணியைப் பார்த்தபடியே கதறினாள் கவி. மணிக்கு கை முஷ்டிகள் இறுகின. தன்னோடு வாழ்வது இவளுக்கு அவ்வளவு கஸ்டத்தைக் கொடுக்கிறதா எனும் எண்ணம் அவனின் காதல் மனதை அறுத்துக் கிழித்தது.

“சரி, மேடைய விட்டு நகருங்க. மணி போடா, கவிய கூட்டிட்டு மேடையில போய் உட்காரு”

“ஜீஜூ!” அதிர்ந்தான் மணி.

“ஜீஜூ எது செஞ்சாலும் உன் நன்மைக்குத்தான் செய்வேன்னு உனக்கு நம்பிக்கை இருக்குல்ல?”

ஆமென தலையாட்டினான் மணி.

“அப்போ போ”

பாக்கேட்டில் இருந்த நகை டப்பாவை எடுத்து மணி கையில் கொடுத்தான் பிரகாஷ். இதெயெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை கவி. அவளுக்குத்தான் கண்களில் மாலை மாலையாக கண்ணிர் ஊற்றியதே!

தன் ஜீஜூ கொடுத்த டப்பாவில் இருந்த தாலி கோர்த்த கொடியை வருடிக் கொடுத்தான் மணி. இது சித்ராவுக்கும், நிலாவுக்குமே கூட அதிர்ச்சிதான். சிவா மட்டும் புன்னகையுடன் நின்றிருந்தான்.

தன் அக்காள்களின் முகத்தைப் பார்த்து கண்களால் சம்மதம் கேட்டான் மணி. இருவருமே, கண்களில் நீர் நிறைய சரி என தலையாட்டினார்கள்.

அழுது கொண்டிருந்த கவியை நெருங்கியவன், அவள் கைப்பற்றி இழுத்துப் போய் தாங்கள் பேசுவது கேட்காத தூரத்தில் நிறுத்தினான்.

“கவிலயா!” லயனஸ் கவிலயாவாகி இருந்தது.

நீர் நிறைந்த கண்களுடன் நிமிர்ந்துப் பார்த்தாள் கவி.

“என்னைப் பிடிக்கல, என் கூட கல்யாணம் பிடிக்கலன்னு நிக்கறவள ஃபோர்ஸ் பண்ண எனக்கும் பிடிக்கலதான். ஆனா என் ஜீஜூ சொன்னத மறுத்து எனக்குப் பழக்கமில்ல. மேரி மீ கவிலயா! தாலி மட்டும்தான் உன் கழுத்துல ஏற போகுது! அதுக்கப்புறம் நாம கப்பிள்ஸ்சா இருந்தப்போ இருந்த நெருக்கம் கூட நமக்குள்ள இருக்க நான் அனுமதிக்கப் போறது இல்ல. தாலி நம்மள இணைச்சாலும், இனி நீ தனி நான் தனிதான். உங்கப்பாவுக்காக கழுத்த நீட்டு. உன் கழுத்தக் கூட தொடாம இந்த ஸ்க்ரூவ போட்டுடறேன். அவங்க ரெண்டு பேரும் செட்டில் ஆகற வரைக்கும் என்னை சகிச்சுக்கோ! அப்புறம் உன் இஸ்டம்” குரலில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் பேசினான் மணி.

எல்லோருக்கும் செக் வைக்கும் கவியை மீராவும் பிரகாஷும் சேர்ந்து செக்மேட் வைத்து கவிழ்த்துவிட்டார்கள்.

இவள் வருகிறாளா இல்லையா என கூட பார்க்காது மேடை ஏறினான் மணி. அவன் பின்னோடே வந்து மீரா அமர்ந்திருந்த இடத்தில் இவள் அமர, வெங்கியின் இடத்தில் இவன் அமர்ந்தான்.

‘என்னடா ஒரு கல்யாணத்துக்கு காசு கட்டிட்டு இப்போ ரெண்டு கல்யாணம் பண்ணுறீங்க!’ என முழித்தார் ஐயர்.

அவர் அருகே வந்த சிவா,

“ஏன் ஐயரே, உங்க ஊருல தான் அடிக்கடி ஒன்னு வாங்குனா ஒன்னு ஃப்ரீன்னு ஆப்ஃபர் போடறீங்களே! அதே மாதிரி ஒரு கல்யாணம் செஞ்சா இன்னொரு கல்யாணம் ஃப்ரீன்னு ஆஃபர் குடுக்க மாட்டீங்களா?” என கேட்டு சூழ்நிலையை சகஜமாக்கினான்.

சாங்கியம் எல்லாம் செய்ய நேரம் இல்லாததால், இவர் ஸ்ட்ரேய்டாக கெட்டி மேளம் சொல்ல, கைப்படாமல் கஸ்டப்பட்டு தாலியைக் கட்டினான் மணி. சந்தோஷமாக அவன் எதிர்பார்த்த தருணம் இப்படி கவியின் கண்ணீரில் நடந்ததில் உள்ளம் நொந்திருந்தான் அவன்.

வெங்கிக்கு கண்ணில் நீர் வழிந்தது. தன் மகளின் மணக்கோலத்தை மறைக்கும் கண்ணீரை அவசர அவசரமாக துடைத்துக் கொண்டே அந்த காட்சியை உள் வாங்கி மனப்பெட்டகத்தில் பூட்டி வைத்துக் கொண்டார். நிமிர்ந்து மீராவைப் பார்த்து கண்களாலே நன்றி உரைத்தார் வெங்கி. அந்த நேரம் கலங்கிய விழிகளுடன் மீராவும் வெங்கியைத்தான் பார்த்திருந்தார். அவருக்குத் தெரியும் இனி கவி தன்னிடம் ஒட்டவேப் போவதில்லையென. அதிரடியாக தன்னிடம் அன்பைப் பொழிந்த ஜீவனை தானே விலக்கி வைக்கும்படியானதை நினைத்து மனம் வருந்தினார் மீரா.

‘போகட்டும்! என்னைக் கண்டிப்பா புரிஞ்சுகிட்டு மறுபடி வருவா! அப்போ என் கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துக்குவேன்’ கண்ணீரை சுண்டி விட்டார் அவர்.

சிறிய ஜோடிகள் எழுந்ததும்,

“இன்னும் மூனு நிமிஷம் தான் இருக்கு நல்ல நேரம் முடிய! சட்டுன்னு வந்து உட்காருங்கோ” என குரல் கொடுத்தார் ஐயர்.

மகளையும் மருமகனையும் கட்டிப் பிடித்து தன் மகிழ்ச்சியைக் காட்டிய வெங்கி, ஐயரின் குரலுக்கு விலுக்கென நிமிர்ந்தார்.

“போங்க அங்கிள்! மறுபடியும் மனசு மாறிடப் போறாங்க” என தங்களை இணைத்துப் பிடித்து கட்டிக் கொண்டிருந்த வெங்கியை விலக்கி விட்டான் மணி. அப்படியே கவியிடம் இருந்து விலகி நின்றுக் கொண்டான்.

“கவிம்மா!”

“போங்கப்பா! எனக்காக வாழ்ந்தது போதும். இனி உங்களுக்காக வாழுங்க” கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சிரித்த முகமாகவே சொன்னாள் கவி.

இறுக தன் மகளை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டவர்,

“நான் வாழறதே உனக்காகத்தான்மா! யார் பாதியில வந்தாலும், எப்பவுமே உனக்குத்தான் முதல் உரிமை” என கண் கலங்கினார். இன்னும் பாச மழையைப் பொழிந்து எங்கே மணியுடன் அவள் போகாமல் தன்னுடனே இருக்கும் படி செய்துவிடுவாரோ என பயந்த மீரா,

“இப்ப தாலி கட்ட் வரீங்களா? இல்ல வேற ஆப்ஷன் பார்க்கட்டுமா?” என கேட்டார்.

“தாலி அவன் கைக்குப் போச்சு, சாமு மவனை கொன்னுருவேன்டி!” என மெல்லிய குரலில் மிரட்டியவர், மணமேடையில் போய் அமர்ந்துக் கொண்டார்.

ஐயர் மீண்டும் கெட்டிமேளம் சொல்ல, தன் மனதிற்கினிய மந்தாகினிக்கு தாலியை அணிவித்து தன் மறுபாதி ஆக்கிக் கொண்டார் வெங்கி. சந்தோஷமாய் ஜொலித்த தன் தகப்பனின் முகத்தைப் பார்த்து, கவிக்கு மெல்லிய சிரிப்பு மலர்ந்தது. மறந்தும் அவள் மீராவின் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.

“அரே பாப்ரே! கல்யாணம் முடியறதுக்குள்ள பாதி உயிர் போயிருச்சு எனக்கு” சொன்னது வேறு யாரும் இல்லை சித்ராதான்.

“ஹிந்தில இத ஒன்ன மட்டும் கத்துகிட்டு நீ பண்ணற அலும்பு இருக்கே!” சிரித்தான் பிரகாஷ்.

“நீ பேசாத கப்பூரு! எனக்கு தெரியாம ப்ளான் பண்ணி கல்யாணத்த முடிச்சிருக்க! கேடிடா நீ! நான் செம்ம கோபத்துல இருக்கேன் பாத்துக்கோ”

திருமணம் முடிந்து அந்த கோயிலிலே வந்தவர்களுக்கு சைவமாக உணவு ஆர்டர் கொடுத்திருந்தார்கள். சித்ராவும், பிரகாஷும் சாப்பிட்டப்படியே மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“எல்லாமே சடன் பிளான் தான் சிமி. நீ வேற மணிய நினைச்சு ரொம்ப கவலைப்பட்டியா, அதனால எனக்கு வேற வழி தெரியல. மணியும், கவியும் பேசனத பெட்ஷீட் மாத்தலாம்னு போன மீராம்மா கேட்டுட்டாங்க. அவங்களுக்கு எங்க கவி இப்படியே நின்னுருவாளோன்னு பயம் வந்துருச்சு. என் கிட்ட வந்து பேசனாங்க. நாங்க ரெண்டு பேரும் தான் இந்த மாஸ்டர் ப்ளான போட்டோம். சிவா இன்னும் சென்னைல இருக்கவும், போன் போட்டு நம்ம குடும்ப தாலிய எடுத்துட்டு வர சொன்னேன். சோ எங்க மூனு பேருக்கு மட்டும் தெரியும்”

“எனக்கு ஏன் சொல்லல ப்ரௌனி?”

“நீ எக்சைட் ஆகிருவடி! உன் முகமே எல்லாருக்கும் காட்டிக் குடுத்துரும். நீயே ரகசியமா வச்சிருக்க நினைச்சாலும், கவிய தனியா அலங்கரிக்கறதுல, மெஹெந்தி வைக்கறதுல, நகைங்கள போட்டு விடறதுலன்னு எப்படியாச்சும் காட்டிக் குடுத்துருவ! அந்தப் பொண்ணும் கண்டுப்பிடிச்சிருக்கும். இப்போ கூட இமோஷனலா இருக்கறதுனால கவி இந்த விஷயத்தைக் கண்டுப்பிடிக்கல. ஆனா கண்டிப்பா கண்டுப்புடுச்சுருவா. அப்போ நம்ம மேல உள்ள கோபம் எல்லாம் மணி மேல திரும்பும். அதுக்குள்ள நாம பெட்டிய கட்டிரலாம். கல்யாணத்தை முடிச்சுட்டோம், இனி உன் தம்பியே சமாளிப்பான். என் மச்சான்டி அவன், அழகா சமாளிப்பான்”

கோயிலில் எல்லாவற்றையும் முடித்து, வீட்டுக்குப் போய் காரைப் பார்க் செய்தார்கள். எல்லோரும் இறங்கி இருக்க, கவி காரில் இருந்து அசையவே இல்லை.

“கவிலயா, இறங்கு! வீடு வந்துருச்சு”

அவனை உறுத்து விழித்தாள் அவள்.

“இந்த வீட்டுக்குள்ள இனி நான் காலடி எடுத்து வைக்கமாட்டேன். எல்லோரும் ப்ளான் பண்ணி எனக்கு பிடிக்காத விஷயத்தை செய்ய வச்சிட்டீங்கல்ல! இனி இது அந்தம்மா வீடு. நான் வர மாட்டேன். ப்ளான் பண்ணி என்னை சிக்க வச்சல்ல, உன் பொண்டாட்டிக்கு இங்கிருக்கப் பிடிக்கல. புருஷன் தானே நீ, எதாச்சும் பண்ணு”

தங்கத்தாலி மார்பில் மின்ன, கோபத்தில் முகம் சிவக்க பிடிவாதமாக சிலை போல அமர்ந்திருந்தவளை உணர்ச்சியற்ற பார்வைப் பார்த்தான் மணி. பின் பெருமூச்சொன்றை வெளியிட்டவன்,

“இங்கயே இரு! முக்கியமான திங்ஸ் மட்டும் எடுத்துட்டு வரேன். இன்னிக்கு ஹோட்டேல்ல தங்கிக்கலாம். அதுக்கப்புறம் என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம்” என்றவன் வீட்டின் உள் நுழைந்தான்.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் உறுப்பினரான மணி, இன்றையில் இருந்து கடுப்பில் திரியும் கணவர்களின் சங்கத்தின் உறுப்பினர் ஆகிறான்.

 

(கொட்டும்)