Lovely Lavi – Epsiode 28 – Final
Lovely Lavi – Epsiode 28 – Final
அத்தியாயம் – 28 – Final Episode
“ம்.. ச்…” என்று சத்தம் எழுப்பி, “அனுதாபம் எல்லாம் இல்லை. உன் மேல் யாருக்காவது அனுதாபம் வருமா?” என்று சங்கர் கேலியாக கேட்க அவனை கோபமாக முறைத்தாள் லவி.
சங்கர் புன்னகையோடு அவளைப் பார்க்க, “ஓ… அனுதாபமில்லை…. அப்பக் காதலோ?” என்று லவி நக்கலாகக் கேட்க, மறுப்பாகத் தலை அசைத்தான் சங்கர்.
‘அது தானே பார்த்தேன்.’ என்று லவி அசட்டையாக சிந்திக்க, “அதுக்கும் மேல.” என்று புன்முறுவலோடு கூறினான் சங்கர்.
“நீ சொன்ன வாரத்தை ஞாபகம் இருக்கா? நான் இல்லைனா, நீ சந்தோஷமா இருப்பன்னு சொன்ன.. அந்த வார்த்தைக்குக் கட்டுப்பட்டுத் தான், நான் உன்னை இத்தனை வருஷம் தள்ளி இருந்தே கண்காணிச்சிட்டு இருந்தேன். ராஜ் பிறந்தப்ப கூட, நான் உனக்கு தெரியாமா அவனை பார்த்துட்டேன். நீ நான் இல்லாம சந்தோஷமா இருக்கிறதா நம்பினேன். ஆனால், நீ நான் இல்லாம சந்தோஷமா இல்லை.” என்று சங்கர் லவியை பார்த்தபடி உறுதியாக கூறினான்.
“அப்படி எல்லாம்…” என்று ஆரம்பித்து, மேலும் பேசாமல் லவி தன் வாயை மூடிக் கொண்டாள்.
“பிடிவாதம் பண்ணாத… நீ இங்க வந்த பிறகு தான் சந்தோஷமா இருக்க.” என்று சங்கர் அழுத்தமாகக் கூற, லவி அவனிடம் ஒத்துக் கொள்ள மனமில்லாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள்.
“ஏன்? என் மேல் இந்த திடீர் அக்கறை?” என்று லவி தன் முகத்தைச் சுருக்கிக் கொண்டே கூற, சங்கர் தன் கண்களை இறுக்கமாக மூடினான். ‘அந்த நாள் ஞாபகம் போலும்.’ என்று லவி எண்ண, “அன்னைக்கி நீ தூக்கத்தில் என்ன சொன்ன தெரியுமா?” என்று கலக்கமாகக் கேட்டான் சங்கர்.
“டேய்… எனக்கு கல்யாணம் பிடிக்காது. அது தான் உன்னைக் கல்யாணம் செய்யவும் பிடிக்கலை. ஆனால் நீ நல்லவன்னு நினச்சனே. உன் கூட இருக்கும் பொது ஒரு பாதுகாப்பிருக்கும்னு நினைச்சி தானே கல்யாணம் நடந்தாலும் பரவாலைன்னு அமைதியா இருந்தேன்.” என்று லவி தூக்கத்தில் கூறிய வார்த்தைகளை சங்கர் கூற, லவி அவனை யோசனையாகப் பார்த்தாள்.
‘தான் அவ்வப்பொழுது நினைத்தது தான்.’ என்று லவியின் மனம் கூறியது.
“இந்த நம்பிக்கை, காதலை விட ஒரு படி அதிகமில்லையா?” என்று சங்கர் கேட்க, லவி அவனைக் கண்கொட்டாமல் பார்த்தாள்.
“நான் செஞ்ச தப்பை விட, உன் நம்பிக்கையை உடைச்சது தான் எனக்கு ரொம்ப வலிச்சுது.” என்று சங்கர் கண்கலங்க, “ஏய்… நீ என்ன சின்ன புள்ளை மாதிரி. நான் அன்னைக்கி ரொம்ப பேசிட்டேன். நான் பேசினது தப்பு தான். நானும் சுயநினைவில் இல்லை. நீயும் சுயநினைவில் இல்லை. ஏதோ அன்னைக்கி சூழ்நிலை.” என்று சங்கரிடம் அவனுக்காகவே லவி வக்காலத்து வாங்க, சங்கர் ஒரு தலை அசைப்போடு அவனை மீட்டுக் கொண்டான்.
“அங்கிள் அமைச்சு கொடுத்த வாழ்க்கையைச் சரி செய்யணும்னு நினைச்சன். ஆனா, துளியும் அன்பில்லாத வாழ்க்கையை எப்படி சரி செய்ய முடியும்னு யோசிச்சப்பத்தான் நீ என் மேல் வச்சிருந்த நம்பிக்கை தான் ஆதரம்முன்னு நம்பினேன். அது காதலைவிட உசத்தின்னு தோணுச்சு. அந்த நம்பிக்கையை மீட்டெடுக்க தான் நான் இத்தனை வருஷம் தனியா காத்திருந்தேன்.” என்று சங்கர் கூற, லவி மௌனமாக அவனைப் பார்த்தாள்.
சங்கர் மேலும் தொடர்ந்தான். “ஆனால், நான் சொன்னவுடனே இங்க கிளம்பி வந்த பாரு. அதுவும் ராஜை என்கிட்டே ஒப்படைக்கனுமுனு, அப்ப புரிஞ்சிகிட்டேன், நான் செஞ்ச வேலையால் உனக்கு என் மேல் இருந்த நம்பிக்கை உடையலை. கோபம் தான். அப்படின்னு…” என்று சற்று மூச்செடுத்து, “அங்கிள் என்னை நம்பி உன்னை ஒப்படைச்ச மாதிரி? நீயும் என்னை நம்புற தானே?” என்று சங்கர் ஆர்வமாக கேட்க, லவி புன்னகைத்தாள்.
“ஏன் பேச மாட்டேங்கற?” என்று சங்கர் கேட்க, “என்னை மாதிரி நீ பேசுற. அது தான் நான் உன்னை மாதிரி சிரிச்சி பழகிக்கலாமுன்னு பாக்கறேன். வீட்டில் ஒருத்தர் பேசினா தான் நல்லா இருக்கும்.” என்று லவி தன் புன்னகையை மறைத்துக் கொண்டு கண்களில் குறும்போடு கூற, மருத்துவர் வரவும் நேரம் சரியாக இருந்தது.
“நோ ஸ்ட்ரெஸ்…” என்று ஆரம்பித்து மருத்துவர் சில பல விஷயங்கள் கூற, இருவரும் கேட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.
அனைவரும், அவர்கள் வாழ்வில் சில திருப்பங்களோடே ரிச்மண்ட் திரும்பினர்.
நித்திலா, யாதவின் வாழ்வு சிறப்பாகச் சென்று கொண்டிருக்க, லவியின் மனதில் ஒரு சிறு குறை இருக்கத்தான் செய்தது.
சங்கர், லவியிடம் பொறுமையாகவும், அன்பாகவும், அக்கறையாகவும் தான் நடந்து கொள்கிறான். ஆனால், லவி என்று அவன் அழைப்பதில்லை என்ற குறை அவள் மனதில் வீற்றிருக்க, “இன்னைக்கி கிளைமேட் நல்லாருக்கு. ராஜை ஸ்கூலுக்கு பஸ் ஏத்தி அனுப்பிட்டு, நாம வாக்கிங் போவோமா?” என்று சங்கர் கேட்க, லவி சம்மதமாகத் தலை அசைத்தாள்.
இருவரும் ஏரியைச் சுற்றி இருக்கும் அந்த நடை பாதையில் , அங்குப் பூத்திருந்த பூக்களை ரசித்தபடி நடந்து அங்கிருந்த அபார்ட்மெண்ட் அருகே வர… பால்கனியில் அமர்ந்திருந்த ஹரி, லவியை பார்த்ததும், “லவி.” என்று சத்தமாக அழைத்தான். சத்தம் வந்த திசையை நோக்கி சங்கர், லவி இருவரும் திரும்பினர்.
ஹரியை பார்த்த சங்கர், ‘ஐயோ. லவி கோபப்படுவாளோ? டென்ஷன் ஆகிருவாளோ?’ என்று அச்சத்தோடு லவியை பார்த்தான் சங்கர்.
“ஹரி. எப்படி இருக்க?” என்று லவி நிதானமாகக் கேட்க, “நல்லா இருக்கேன். நான் கீழ வந்து உன்கிட்ட பேசட்டுமா? உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லையே?” என்று ஹரி பதவிசமாக கேட்க, லவி சம்மதமாகத் தலை அசைத்தாள்.
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.” என்று கூறி, ஒரு வயதான பெண்மணியின் உதவியோடு, சக்கர நாற்காலியில் வந்தான் ஹரி.
இருவரும் ஹரியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, ஒரு நொடிக்குள் தங்களைச் சுதாரித்துக் கொண்டனர்.
“என்ன இப்படி ஆகிருச்சுனு பாக்கறீங்களா? அன்னைக்கி லவியை துரத்திட்டு வர வழியில் ஆக்சிடென்ட் ஆகிருச்சு. இரண்டு காலையும் எடுத்தாச்சு. தப்பு செய்ய நினச்சா அந்த பாவம் சும்மா விடுமா?” என்று ஹரி கேலியாகக் கேட்க, சங்கர், லவி இருவரும் தர்மசங்கடமாக ஹரியைப் பார்த்தனர்.
பேச்சை மாற்றும் விதமாக, “லவி, நீ எப்படி இருக்க?” என்று ஹரி கேட்க, “நல்லா இருக்கோம்.” என்று கூறிய லவி, “கீழ இல்லாம ஏன் மேல வீடு பாத்துருக்கீங்க.” என்று லவி பொதுவாக பேச ஆரம்பிக்க, “பால்கனி வியூ நல்லாருக்கும். அதுக்கு தான்…” என்று பேச ஆரம்பித்து, சில நிமிட பேச்சுக்குப் பின் அவர்கள் கிளம்பினர்.
‘வயதில் தப்பு செய்துவிட்டு பின்னால் வருந்துகிறோம்.’ என்ற எண்ணத்தோடு சங்கர், லவி இருவரும் மௌனமாக நடக்க, வீட்டிற்கு வந்ததும் “நீ இவ்வுளவு பொறுமையா பேசுவன்னு நான் நினைக்கலை.” என்று சங்கர் சோபாவில் அமர்ந்தபடி கூற, “இப்படி பொறுமையா நான் அப்பவே இருந்திருந்தா எங்க அப்பாவை நான் இழந்திருக்க மாட்டேன்.” என்று லவி தன் கண்ணீரை உள்ளித்து தன் வேதனையை மறைத்துக் கொண்டு கூறினாள்.
ஹரியின் சந்திப்பு லவியின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி யிருகிறது என்று புரிந்து கொண்டான் சங்கர். சங்கர் அவளை ஆழமாகப் பார்க்க, “நான் பொறுமையா இருந்திருந்தா, உனக்கும் இவ்வுளவு கஷ்டம் வந்திருக்காது.” என்று லவி கூற, அவள் தலை கோதி லவியை கண்கலங்கப் பார்த்தான் சங்கர்.
சிறிது நேரத்தில் உணர்ச்சி வசப்பட்டு, “அம்மா சொன்னது சரி தான். நான் தான்… நான் தான்… என் பொறுமையின்மையால் எங்க அப்பாவை இழந்துட்டேன்.” என்று பல நாட்கள் மறைத்து வைத்திருந்த துக்கத்தைத் தலையில் அடித்தபடி தேம்பினாள் லவி.
“அன்னைக்கி என் கிட்ட இந்த பொறுமையும், நிதானமும் ஏன் இல்லாம போச்சு?” என்று கண்ணீரோடு பரிதாபமாகக் கேட்டாள் லவி.
‘அழட்டும்… அழுதாள் அவள் பாரம் குறையும்.’ என்ற எண்ணத்தோடு லவியை தன் தோளில் சாய்த்துக் கொண்டு, லவியை தன்னோடு அணைத்துக் கொண்டான் சங்கர்.
லவி சற்று தேற, “யாரும். எதுக்கும் காரணம் கிடையாது. எதோ நடக்கணுமுன்னு இருந்திருக்கு நடந்திருச்சு.” என்று சங்கர் கூற, லவி தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு தலை அசைத்தாள்.
லவியின் மனதை மாற்ற எண்ணி, அவள் கல்லூரி காலத்தில், கூறுவது போல், “லவ்லி….” என்று ஆரம்பித்து சங்கர் முடிக்காமல் நிறுத்த, “லவ்லி லவி. சொன்னா குறைஞ்சா போயிருவ.” என்று லவி சிணுங்க, “நீ இப்ப லவ்லி தான். இன்னைக்கி உன்கிட்ட இருக்கிற பொறுமை மட்டும் தான் இத்தனை வருஷம் மிஸ்ஸிங். அது தான் என்னால லவ்லின்னு சொல்ல முடியலை. இன்னைக்கி உன்கிட்ட இருக்கிற பொறுமை அன்னைக்கி இருந்திருந்தா எத்தனையோ பிரச்சனையைத் தவிர்த்திருக்கலாம்.” என்று சங்கர் கூற, லவி ஆமோதிப்பாகத் தலை அசைத்தாள்.
“பொண்ணுங்க பொறுமையா இருக்குகணுமுன்னு சொல்லலை. இருந்தா ரொம்ப நல்லாருக்கும்.” என்று சங்கர் லவியை பார்த்து கண்சிமிட்டி கூற, “ஏன் அது பெண்களுக்கு மட்டும் தானா?” என்று லவி சண்டைக்குத் தயாராக, மறுப்பாகத் தலை அசைத்தான் சங்கர்.
“பெண்கள் பொறுமையா இருந்தா அவங்களுக்கு நல்லது. ஆண்கள் பொறுமையா இருந்தால் நாட்டுக்கே நல்லது.” என்று சங்கர் சரணாகதி அடைய , “அது…” என்று செல்லமாக மிரட்டிவிட்டு சமையலறைக்குள் சென்றாள் லவி.
அவள் பின்னோடு சென்று, “நான் ஏன் உன் பெயரைச் சொல்லிக் கூப்பிடலைத் தெரியுமா?” என்று சங்கர் வம்பிழுக்க, “ஒன்னும் தேவையில்லை. நீ உன் இஷ்டப்படி இரு.” என்று தன் மனக்கிலேசத்தை மறைத்துக் கொண்டு தன் வேலையைத் தொடர்ந்தாள் லவி.
சங்கர் லவியை இழுத்து சுவரோடு சாய்த்து, தன் கைகளை இருபக்கமும் ஊன்றி, “நீ உன் பெயரை மாத்தினது எனக்கு பிடிக்கலை.” என்று கண்ணில் குறும்போடு, புருவம் உயர்த்தி கூறி, லவியின் முழு பெயரை அவள் மட்டும் கேட்கும்படி லவியின் காதில் கிசுகிசுத்தான் சங்கர்.
லவி கோபப்பட முயன்று, சங்கரின் காதல் பார்வையில் தோற்று அவன் மார்பில் சரண் புகுந்தாள்.
அப்பொழுது கதவு தட்டும் ஓசை கேட்க, லவி கதவைத் திறந்தாள்.
யாதவ், நித்திலா இருவரும் உள்ளே நுழைய, லவி வெட்க புன்னகையோடு உள்ளே திரும்ப, “தப்பான நேரத்தில் என்ட்ரி கொடுத்துட்டோமோ?” என்று யாதவ் கேட்க, “ச்ச… ச்ச..” என்று லவி தடுமாற, “உங்க ரெண்டு பேர் என்ட்ரியும் எப்பவும் தப்பான நேரத்தில் தான்.” என்று சங்கர் குறைப்பட்டான்.
லவி சங்கரைக் கோபமாக முறைத்துப் பார்க்க… அவர்களின் சின்ன சின்ன சண்டைகளும், சீண்டல்களும் தொடரும். அவை தானே நம் வாழ்வை என்றும் இளமையாகவும் இனிமையாகவும் வைத்திருக்கிறது.
கோபம், பிடிவாதம் இவை தவறல்ல. நல்ல செயலுக்குப் பிடிவாதம் செய்வதும், தவறான செயலுக்குக் கோபம் கொள்வதும் சரி தானே? ஆனால், மனிதனாக பிறந்தவன் பொறுமை கொள்ள வேண்டும். நாம் பொறுமையை கடைப்பிடித்தால் லவி மட்டும் லவ்லி லவி அல்ல. நாம் அனைவரும் லவ்லி மனிதர்கள் தானே?
நாமும் லவ்லியாக வாழ்வோம் என்ற உறுதியோடு,
அன்புடன் அகிலா கண்ணன்.