MA – 1

MA – 1

அத்தியாயம் – 1

சூரியன் கிழக்கே பயணத்தைத் தொடங்கும் நேரத்தில் அந்த மாநகரமே பரபரப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தது. சாலைகளில் மின்னல் வேகத்தில் சென்ற வாகனங்களின் மீது பார்வையைத் திரும்பிய மேகா, ‘இன்னைக்கு நேரத்திற்கு ஆபீஸ் போக முடியாது’ என்ற எண்ணத்துடன் வண்டியை எடுத்தாள்.

ஹைத்ராபாத் மாநகரின் பிரதான சாலையில் ஸ்கூட்டியில் சென்ற மேகா அடுத்து வண்டியை நிறுத்திய இடம் ஒரு பிரபலமான காபி ஷாப். அவள் கையில் உள்ளே கடிகாரத்தைப் பார்த்து, ‘இந்த நேரம் புயல் வேகத்தில் பறக்குது’ என்ற மேகா வேகமாகப் படிகளைக் கடந்து காபி ஷாப்பின் உள்ளே நுழைந்தாள்.

‘இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆபீஸில் இருக்கணும். ஆல்ரெடி லேட். இவருக்கு நேரம் காலமே தெரியாது நினைச்சா போன் பண்ணி காபி ஷாப் வான்னு சொல்வது’ என்று மனதிற்குள் அவனை வருத்தேடுத்தாள் மேகா.

அவளின் மனம் படபடவென்று அடித்துக்கொள்ள, ‘இவர் எதுக்கு என்னை இவ்வளவு சீக்கிரம் வரச் சொன்னாரு..’ என்ற கேள்வியுடன் நிமிர்ந்த மேகாவின் பார்வை காபி ஷாப்பை சுற்றிவந்தது. பத்து பதினைந்து டேபிள்கள் வரிசையாக இருக்க அங்கே சிலர் அமர்ந்திருக்க அவனைக் காணாமல் தேடியது அவளின் பார்வை.

அவரவர்கள் ஜோடியாக அமர்ந்திருக்க அவனைக் காணாமல் போனை எடுத்து அவனுக்கு அழைத்தாள்.

அவளின் அழைப்பைக் கவனித்துவிட்டு, ‘ஓஹோ மேடம் வந்துட்டாங்களா?’ என்று நிமிர்ந்தவனின் பார்வை அவளின் மீது நிலைத்தது.

நேராக வகிடுடேத்து பின்னபடாத கூந்தலை ஒரு கிளிப்பில் அடைக்கப்பட்டிருந்தது. நேரான நெற்றியும் அதில் வழிந்த வியர்வையே சொன்னது அவள் வந்த வேகத்தைப் பற்றி.

அங்கும் இங்கும் அலைப்பாய்ந்துடும் கண்களில் தவிப்பு வெளிப்படையாகத் தெரிந்தது.  இதழ்கள் எதையோ முணுமுணுக்க அவளின் கரங்கள் செல்போனை காதிற்கு கொடுத்துவிட்டு நின்றிருந்த அவளின் மற்றொரு கையில் பர்ஸ் இருக்க வெள்ளை நிற அனார்கலி சுடிதாரில் ஐந்தடி பாவையை கண்டு மெய்மறந்து அமர்ந்திருந்தான் ராகவன்.

அவளை இதற்கு மேலும் தவிக்க விட வேண்டாம் என்ற எண்ணத்தில், “மேகா..” என்ற அழைப்புகேட்டு திரும்பிப் பார்த்தாள்.

அங்கே கடைசியாக இருந்த டேபிளில் கைதூக்கியவனைப் பார்த்துப் பெருமூச்சுடன், “இவ்வளவு இடத்தை விட்டுட்டு இங்க வந்து உட்கார்ந்திருக்கீங்க” கோபத்துடன் அவனை நெருங்கி மேகா அவனின் எதிரே அமர்ந்தாள்.

அவளின் பார்வை அங்கும் இங்கும் அலைபாய, “என்ன கோபமா” குறும்புடன் கண்சிமிட்டினான்.

வேண்டுமென்றே இதழை வளைத்துச் சிரித்தவள், “இல்ல”  கடுப்புடன் அவள் பல்லைக்கடிக்க அவனின் இதழில் புன்னகை வந்து சென்றது.

“சரி இரு காபி ஆடார் பண்றேன்..” என்றவன் பேரரை அழைத்து, “இரண்டு காபி..” என்று என்று சொல்லிவிட்டு அவளின் பக்கம் திரும்பினான்.

அவளோ கோபத்துடன், “எதுக்கு இப்போ என்னை அவசரமாக வரச் சொன்னீங்க..” என்று பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையை இழுத்து பிடித்தவண்ணம் கேட்டாள்.

“இரு காபி வரட்டும்..” அவன் சாதாரணமாகவே. அங்கிருந்த ஒரு சில டேபிளில் ஜோடியாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த காதல் ஜோடிகளை வட்டமிட்டது ராகவின் பார்வை.

“ராகவ் விளையாடாமல் சீக்கிரம் சொல்லுங்க. ஏற்கனவே ஆபீஸிற்கு லேட் ஆச்சு..”  என்று படபடத்தவளை பார்வையால் வருடியவன், அவளின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் சீட்டில் சாய்ந்து அமர்ந்தான்.

அவ்வளவு அழுத்தமாக அமர்ந்திருந்த அவனைப் பார்த்து அவளுக்குக் கோபம் வந்தது என்னவோ உண்மைதான். அதையும் மீறி அவனை அளவெடுத்தது அவளின் பார்வை.

அலையலையாகக் கேசமும், ஐந்தடிக்கும் சற்று அதிகமான உயரமும், திரண்ட தோள்களுடன் சேரில் அமர்ந்திருந்தவனின் கம்பீரம் தான் அவள் காதலில் விழுக காரணமே!

ராகவனின் பார்வை செய்யும் மாயத்தை இப்பொழுது நினைத்தாலும் அவளுக்குச் சிரிப்பு வந்துவிடும். எவ்வளவு கோபம் இருந்தாலும் ஒரே பார்வையில் நம்மைச் சிரிக்க வைத்துவிடுவான். அப்படியொரு மாயம் அவனின் பார்வையில்..

நேரான பார்வை, நீளமான மூக்கு, அளவான மீசை என்றவளின் பார்வை அவனை வட்டமிட்ட, “சார்..” என்று வந்து சேர்ந்த பேரரின் குரல்கேட்டு தன்னிலைக்கு மீண்டவள் காபியைக் கையில் எடுத்தாள்.

ராகவன் – மேகா இருவரும் ஐந்து வருடமாக உயிருக்கு உயிராகக் காதலிக்கின்றனர். தன்னுடைய தங்கையின் திருமணம் முடிந்த பிறகு தன்னுடைய திருமணம் என்று இருக்கிறான் ராகவ். ஆனால் அதற்கு மாறாக மேகாவின் வீட்டில் இப்போது வரன் பார்க்கத் தொடங்கினர்.

முதலில் இந்த விஷயம் தெரிந்ததும் மேகா ராகவனிடம் சொல்லவே, காலையில் காபி ஷாப் வரும்படி கூறியதால் அவனைச் சந்திக்க வந்திருக்கிறாள்.

“மேகா உங்க வீட்டில் உனக்கு மாப்பிள்ளை பார்த்தாங்க என்று சொன்ன இல்ல..” பேச்சைத் தொடங்கிட அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“ம்ஹும். இதைச் சொல்லத்தான் வரச் சொன்னீங்களா?” என்றாள் அவள் கடுப்புடன் கேட்க அதைத் தலையசைத்து மறுத்தான் ராகவ்.

“உங்க வீட்டில் அவனுக்கு எவ்வளவு பவுன் போடுவாங்க..” என்று கேட்க அவனைப் புரியாதப் பார்வை பார்த்தாள் மேகா. சிறிது நேர ஆழ்ந்த சிந்தித்தவளை பார்த்து ராகவனின் புருவங்கள் கேள்வியாக உயர்ந்தது.

“சொல்லு மேகா..” என்றான்.

“என்ன ஒரு பதினைந்து பவுன் போடுவாங்க..” என்றாள் அவளின் பதிலில் சிறிதுநேரம் சிந்தித்த ராகவ் முகத்தில் ஓடும் குழப்பரேகைகள் வந்து போனதைக் கண்டு மேகாவின் மனத்தில் படபடவென்று அடித்துகொண்டது.

ராகவன் எதையுமே ரொம்ப பிராக்டிகலாக யோசிப்பான். நாளை நடப்பது இதுதான் என்று இன்றே கணித்துவிடும் குணம் உடையவன் என்ற ஒரு வரி போதும்.

அவன் என்ன சொல்லப் போகிறானோ என்ற எதிர்பார்ப்புடன் அவனையே இமைக்காமல் பார்த்தவள், “என்ன ஓடிபோய் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்லப் போறீயா?” அவனை வேண்டுமென்றே வம்பிற்கு இழுத்தாள்.

ராகவனின் பார்வை அவளின் மீது நிலைக்கவே, “இல்ல மேகா. உங்க அண்ணாகிட்ட நான் வந்து பேசறேன். அதுவும் என்னோட குடும்பத்துடன் வந்து பேசறேன்..” என்ற ராகவனின் குரலில் உறுதி இருந்ததா?

அவளின் முகம் பூவாக மலர அடுத்து அவன் சொன்ன விஷயம் கேட்டு, “ராகவ் என்ன சொல்றீங்க..” என்று அதிர்ச்சியுடன் கேட்டவளைக் கூலாக பார்த்தவன்,

“அதைவிட பத்து பவுன் உங்க அண்ணாவை அதிகமாகப் போட சொல்லு. நான் என்னோட குடும்பத்துடன் வந்து உன்னைப் பெண் கேட்கிறேன்..” என்று அவன் அசராமல் குண்டைத்தூக்கி போட, அவளின் முகம் நொடியில் மாறிப்போனது..

“இப்போ பத்து பவுன் அதிகமாகக் கொடுத்தால் கல்யாணம் பற்றிப் பேசறேன்னு சொல்றீங்க?” அவன் நேரடியாகவே கேட்க,

“ஆமா அதைதானே நானும் திரும்பத் திரும்ப சொல்றேன்..” என்றான் ராகவன்.

“காதல் என்ன காய்கறி வியாபாரமா?” என்றவளின் உள்ளம் கொதித்தது.

ஒரு நொடியில் தன்னுடைய ஐந்து வருட காதல் கானல்நீராக மாறியதை நினைத்து அவளின் மனதில் துடித்தது. விழிநீர் பெருகி கலங்குவதற்கு தயாராக இருக்க தன்னைக் கட்டுபடுத்திக்கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள் மேகா.

“ராகவ் என்ன இப்படி பேசறீங்க?” என்று தடுமாற்றத்துடன் ஒலித்தது அவளின் குரல்.

“வேற எப்படி பேசறது?” என்று புன்னகை மாறாத முகத்துடன் கேட்டவனை என்ன செய்யலாம் என்ற கொலைவெறி நெஞ்சுக்குளிக்குள் இருந்து ஈட்டியாகக் குத்தியது.

“நம்ம காதலுக்கு நீங்க விலை பேசறீங்க. அது உங்களுக்குப் புரியுதா? இல்லையா?” என்றாள் அவள் எரிச்சலோடு

“உன்மேல் காதல் இருக்கு மேகா, அதில் மாற்றம் இல்ல. ஆனா அதே நேரத்தில் என்னோட தங்கச்சிக்கு பெரிய இடத்திலிருந்து மாப்பிள்ளை வந்திருக்கு. அவளுக்கும் மாப்பிள்ளை பிடிச்சிருக்கு..” என்றவன் சொல்லிகொண்டிருக்க இடையில் புகுந்தவள்,

“அதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்..” என்றாள்

“நான் சொல்வதை பொறுமையாகக் கேளு..” என்றான் ராகவ் அழுத்தமாகவே.

“சரி சொல்லுங்க..” என்றாள் அவளும் பொறுமையாகவே.

“இப்போ அவங்க அதிகமாகப் பவுன் கேட்கிறாங்க. கொடுக்க முடியாதுன்னா அவரோட தங்கையைக் கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க. இப்போ கூட நான் உன்னைப் பற்றி யோசிச்சுதான் இப்படி கேட்க வேண்டியதா போச்சு..” என்று சர்வசாதாரணமாகக் காரணத்தைச் சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான்.

ஐந்து வருடத்தின் காதலை அவன் மதிக்கவில்லை என்பதைக் காட்டிலும் அவனின் சுயநலமான புத்தியை நினைத்து அவளுக்குத் தலையே சுற்றியது.

காதலை விலைபேசும் ஒருத்தனை காதலித்த தன்னோட மடத்தனத்தை நினைத்து மனதிற்குள் நொந்து போனவளோ, “அதாவது இப்போ கூட நீங்க என்னைபற்றித்தான் யோசிக்கிறீங்க இல்ல..” என்று எகத்தாளமாகக் கேட்டாள்.

“பரவல்ல சொல்லாமல் புரிஞ்சிகிட்ட..” என்றான் ராகவ் சீரியசான பாவனையுடன்.

அவள் சிறிதுநேரம் அமைதியாக இருக்க அவளைப் பார்த்துக்கொண்டே காபியை நிதானமாகப் பருக அவளின் முகத்தில் குழப்பம் அதிகரிப்பதை நோக்கிய அவனின் பார்வையில் சுவாரசியம் கூடியது.

“ரொம்ப தெளிவாக யோசிக்கிறீங்க..” என்றாள் மேகாவும் விடாமல்.

“அது காதலிக்கும்போது வாழ்க்கை பற்றி நமக்குத் தெரியாது மேகா. ஆனா வாழ்க்கைன்னு வரும்போது நம்ம இதெல்லாம் யோசிக்கணுமே..” என்றான் குறும்புடன் கண்சிமிட்டி.

“லாஜிக் கரெக்டா பேசறீங்க. இப்போ நம்ம காதலுக்கு நீங்கப் பத்து பவுன் விலையாகக் கேட்கிறீங்களே இது உங்களுக்கே நியாயமாக இருக்கா?” ஆதங்கத்துடன் கேட்டவளை புன்னகையுடன் ஏறிட்டவன்,

“உன்னை பொண்ணு பார்க்க வருகிறவன் யாராக இருந்தாலும் இதெல்லாம் கேட்பாங்க மேகா. நிதர்சனம் இதுதான். பொண்ணு என்று பூமியில் பிறந்தாலே அவளைப் பொன்னில் வைத்து எடை போடும் கலிகாலம் இது. இப்போ காதலைப்பற்றிப் பேசற..” என்று கூறி அவளின் பிபியை ஏற்றினான் ராகவ்.

அவன் கொடுத்த பதிலில் அடிக்குமேல் அடிவிழவே அவளோ வாயடைத்து அவனின் எதிரே பதுமை போல அமர்ந்திருந்தவளை பார்வையில் வருடினான் ராகவ்.

“யாருக்கோ பவுன் போட்டு உன்னைக் கட்டிகொடுக்க போறாங்க. அதுக்கு அவங்க எனக்கே கட்டிகொடுக்கலாமே..” என்று சட்டமாகக் கால்மேல் கால்போட்டு கேட்ட ராகவனை எரித்துவிடுவது போலப் பார்த்தாள் மேகா.

ராகவிற்கு மேகாவை விட அவளை அடைய வேண்டும் என்ற எண்ணம்தான் அதிகம். ஆனால் தங்கைக்கு இப்பொழுது வந்திருக்கும் மாப்பிள்ளை பெரிய கோடிஸ்வரன். இப்பொழுது கூட இவளிடம் காதல் வசனம் அவளை மயக்கிவிட அவனால் முடியும்.

ஆனால் இப்பொழுது விட்டுவிட்டால் தங்கைக்கு அப்படியொரு பணக்கார இடம் கிடைக்கவே கிடைக்காது. இது பெஸ்ட்டா இல்ல அது பெஸ்ட்டா என்று யோசிக்கும்போது அவனுக்கு அதுதான் பெரிதாகத் தோன்றியது.

“என்னை முறைத்து ஆகபோவது எதுவுமே இல்ல மேகா..” எந்தவிதமான சலனமும் இல்லாமல் அவளின் பார்வையை எதிர்கொண்டான் ராகவ்.

விழிமூடி ஆழமூச்செடுத்து தன்னை நிலைபடுத்திக்கொண்டவளோ, “ராகவ் நீங்கக் கேட்கிற அளவுக்கு எங்க அண்ணா பவுன் போடமாட்டான். இப்போ உங்க முடிவு என்ன?” என்றாள் இறுதி முடிவாக.

“இதோட நம்ம சந்திப்பு கடைசி சந்திப்பு..” என்றான் அவனும் ஒரு முடிவுடனே.

“அப்போ நம்ம காதல்?” என்று கேட்டவளின் உள்ளம் வலிக்க,

“பிரேக்கப்..” என்றான் ராகவ் கறாராகவே.

ஐந்து வருடம் காதலித்தவன் நொடியில் தன்னைத் தூக்கி எரிந்தது நினைத்து அவளின் மனம் ரெத்தகண்ணீர் வடித்தாலும் அதை அவனிடம் காட்டி பரிதாபத்தை விலைக்கு வாங்க அவள் தயாராக இல்லை.

“ஓகே ராகவ்.. நீங்கக் கிளம்புங்க..” என்றதும் எழுந்த ராகவன் இரண்டு எட்டு எடுத்து வைக்கச் சொடக்குப் போட்டு, “ராகவ்..” என்றாள்.

அவன் அவளின் முடிவு மாறிவிடுமோ என்று அவளின் எதிரே அமர்ந்த ராகவனின் பார்வையில் எதிர்பார்ப்பைத் தேக்கி நிற்க, “என்னை வேண்டான்னு தூக்கி எறிஞ்சிட்டு போறது நீங்கதான்..” என்று நிறுத்திவிட்டு அவள் மீண்டும் தொடர்ந்தாள்.

“சோ இன்னொரு முறை நம்ம நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய சூழ்நிலை அமைந்தால், இந்தப் பிரிவு என்னால் நிகழ்ந்துன்னு என்னை நீங்கக் காரணகர்த்தாவாகக் கூடாது..” என்றாள் அவளும் தெளிவாகக் கூறினாள்.

“ஓகே டன்..” என்று கட்டைவிரலை கட்டிவிட்டு எழுந்து சென்றவனை பார்த்துக் கலங்காமல் சிறிதுநேரம் சிந்தனையுடன் அமர்ந்திருந்தவள் பேரர் வர அவருக்குப் பில் கட்டிவிட்டு நிறுவனம் நோக்கிப் புறப்பட்டாள்.

காதலுக்கும்போது கொடுக்கும் வாக்குறுதிகள் எல்லாம் கல்யாணம் என்று வரும்போது மாறும் என்பதை அவளுக்குத் தெளிவாக பாடம் கற்றுக்கொடுத்தவனின் சுயநலமான புத்தியை நினைத்து நினைத்து அவளின் மனம் வலித்தது.

அன்று சீக்கிரமே அலுவலகத்தின் உள்ளே நுழைந்தவளின் மனமோ தன்னுடைய குடும்ப சூழ்நிலையை எண்ணிப் பார்த்தது. பத்து வயதில் தாய் – தந்தை இழந்து நின்றனர் மேகாவும், அவளின் அண்ணன் சேதுராமனும்.

அதன்பிறகு ஆசரமத்தில் அவர்களின் படிப்பை முடித்து வெளியே வந்தும் சேதுராமனுக்கு வேலை கிடைக்கவே, அவர்களின் வாழ்க்கை சீராகச் சென்றது. ஒரு கட்டத்தில் சேதுராமன் ஒரு பெண்ணை காதலித்துத் திருமணம் செய்தான்.

அவளுக்கு அண்ணியாக அந்த வீட்டில் அடியெடுத்து வைத்த நீலாம்பரி குணம் அவனுக்குப் பிடிக்க தன்னுடைய தங்கையை அவளிடம் ஒப்படைத்தான். ஆனால் அண்ணியின் குணம் சடுதியில் மாறிப்போனது என்னவோ விதியின் விளையாட்டுதான்.

அடுத்த ஒரு வருடத்தில் நீலாம்பரிக்கு ஒரே பிரசவத்தில் அருணும், தருணும் பிறந்தனர். இப்பொழுது மேகாவிற்கு திருமணத்தை முடிக்க வேண்டும் என்று  பிடிவாதம் பிடிக்கச் சேதுராமன் தங்கைக்கு வரன் தேட துவங்கியிருந்தான். இவள் ஹைதராபாத்தில் ஹாஸ்டலில் தங்கி வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் மேகவர்ஷினி.

தன்னுடைய கடந்த காலத்தை நினைவுகளிலிருந்து மீண்டவள், “எல்லாம் முடிந்தது..” என்று நிமிர்ந்து தன்னுடைய மனதை வேளையில் திருப்பினாள்.

அன்று பொழுது சீக்கிரமே ஓடிமறைய மாலை மழையில் நனைந்தவண்ணம் ஹாஸ்டல் வந்து சேர்ந்தவளுக்கு அறையில் தனிமை கிடைக்கவே வாய்விட்டுக் கதறி அழுதாள். அப்படியே எவ்வளவு நேரம் அழுதாலோ அவள் அறியவில்லை.

அதன்பிறகு மனதில் கொஞ்சம் தெளிவு பிறக்க விழிகளைத் துடைத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தவள் வெளியே வரும்போது அவளின் செல்போன் சிணுங்கியது.

error: Content is protected !!