UUP–EPI 23 (Part 2)

எபி 23—பார்ட் 2

நடந்ததைக் கதையாய் சொன்னவனை அமைதியாக பார்த்தப்படி இருந்தாள் சண்மு. என்னமோ வில்லங்கமாய் வர போகிறது என மட்டும் தோன்றியது. இது வரை பார்த்ததிலும் கேட்டதிலும் கூட தன் உயிர் உடலோடு தானே ஒட்டி இருக்கிறது. இதற்கு மேல் எது வந்தாலும் கூட மனம் மரித்துப் போகுமே தவிர கல்லு போல இந்த உயிர் அப்ப்டியே தான் இருக்கும் என கசப்பாய் நினைத்தவள் சொல்லு என்பது போல பார்த்திருந்தாள்.

“இந்த விஷயத்த யார் கிட்டயும் சொல்லவே கூடாதுன்னு நெனைச்சேன். ஆனா சுயநலமா அவள நான் கல்யாணம் பண்ணிட்டேன்னு உங்கக்கா நினைக்கறாளே, அது இல்லைன்னு நிரூபிக்க சொல்லித்தான் ஆகனும் பேபி. ஆனா, இத சொல்லற முன்னுக்கு என்னைப் பிரிய மாட்டேன்னு சத்தியம் பண்ணு பேபி. நடந்த விஷயத்துல எனக்கு எந்த சம்பந்தமும் இல்லைன்னு நீ நம்பனும்! அப்போத்தான் சொல்லுவேன்” என முகத்தைப் பாவமாய் வைத்து கண்ணனிடம் உறுதிமொழி கேட்டான் ப்ரதாப்.

அக்காவின் முகத்தை தயக்கமாய் ஏறிட்டுவிட்டு மெல்லிய குரலில்,

“என் முதல் காதலும் கடைசி காதலும் நீதான் ப்ரது!”  என சொன்னான் கண்ணன்.

“தேங்க்ஸ்டா! தேங்க் யூ சோ மச்!” என சொன்னவன் சற்று இடைவெளி விட்டு

“எங்க கல்யாணத்துக்கு முன்ன சண்முவ ரேப் பண்ண ட்ரை பண்ணானுங்களே அது எங்கப்பா வச்ச ஆளுங்கதான்” என படபடவென கொட்டி விட்டான்.

“வாட்! என்னடா சொல்லற? கடவுளே!” என கதறிவிட்டான் கண்ணன்.

எந்த வித ரியாக்‌ஷனையும் முகத்தில் காட்டாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் சண்மு.

“ஹ்ம்ம். ஆமாடா! அந்த ஆளுக்கு மனசாட்சியே இல்லடா! எங்க அடிச்சா எங்க வலிக்கும்னு நல்லா தெரிஞ்சவன் எங்கப்பன். இவள ரேப் பண்ணற மாதிரி பயம் காட்ட ஆளுங்கள அனுப்பி வச்சது அவந்தான். அக்காவுக்கு இப்படி ஆச்சுன்னு நீ போனுல அழுது தீர்த்தப்போ உன்னைப் பார்க்க கிளம்பிட்டு இருந்தேன். அப்போ அந்தாளு ரூமுக்கு வந்தான். என்னடா, பய பயந்துட்டானானு ஒரே சிரிப்பு. எனக்கு உடம்புலாம் ஆடிப்போச்சு! உங்கம்மா மூத்த மவன்னு உன் மேல உசுர வச்சிருக்கா! அவளுக்கு நீ கல்யாணம் குடும்பம்னு நல்லா இருக்கனும். எனக்கு என் பொண்டாட்டி நீண்ட ஆயுளோட நல்லா இருக்கனும். அவ என் குலசாமிடா! என் வாழ்க்கையில உங்கம்மா வந்த பிறகுதான் பணம் பல மடங்கா கொட்டுச்சு! அரசியல், செல்வாக்குலாம் என்னைத் தேடி வந்துச்சு! அவ உன் கல்யாணத்த பார்க்க ஆசைப்படறா! அது பொம்மைக் கல்யாணமா இருந்தாலும் சரி, நடந்தே ஆகனும். வாரிசு இல்லைன்னா போகுது! நீ கட்டிக்கிட்டவ மலடின்னு கதய பரப்பிட மாட்டேன்! நம்ம குடும்பத்துக்கு ராஜா கணக்கா உன் தம்பி வாரிசு குடுப்பான்டா! அவன் ஒன்ன மாதிரி இல்ல! இப்பவே இடுப்ப சுத்திப் பொண்ணுங்கள வச்சிருக்கான். உனக்கு அந்த நாதாரி கூட தான் வாழனும்னா நான் சொல்லற மாதிரி அவன் அக்காவ கட்டிக்க. இப்ப காட்டுன மரண பயத்துல, நீ கல்யாணம்னு போய் நின்னா கால்ல விழுந்து கட்டிக் குடுப்பாங்க. அதுக்குப் பிறகு ஆஸ்திரேலியா போய் என்னா வேணா பண்ணு. கொன்னுக் கூட போடு அவள! எனக்கு கவலை இல்ல! என்ன சொல்லுறடா ப்ரதாப்பு? உன் கர்மம் புடிச்ச காதலு, உங்கம்மா கேட்ட கல்யாணம், என்னோட கௌரவம், ஒரே கல்லுல மூனு மாங்கா! இல்லைன்னா, நீ கவலைல செத்தா கூட பரவாயில்லன்னு உன் கூட்டுக்காரனா நம்மாளுங்கள விட்டு குனிய விட்டு குதறிபோட சொல்லிருவேன்! நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதாடா ப்ரதாப்னு கேட்டு கதி கலங்க வச்சிட்டாரு!” சொல்லும் போதே அவனுக்கு குரல் நடுங்கியது.

“உன்னைக் காப்பாத்த எனக்கு வேற வழி தெரியலடா! உங்கக்கா வாழ்க்கையா இல்ல உன்னோட சேப்டியான்னு வரப்போ எனக்கு நீதான்னு தோணிருச்சு. உன் மேல யாராச்சும் கைய வச்சிட்டா என்னால தாங்கிக்கவே முடியாதுடா! எங்கப்பனையும் எதிர்க்க முடியாது! அவனுக்கு ஆள் பலமும் இருக்கு பணபலமும் இருக்குடா! நான் வீரசாகசம் எதாவது செய்யப் போய் பொசுக்குன்னு உன்னை எதாவது பண்ணீட்டா, நான் என்னடா செய்வேன்? உன்னைக் கூட்டிட்டு ஓடிடலாம்! ஆனா உன் குடும்பத்த எதாவது பண்ணிட்டா நீ தாங்குவியா? அது எங்கப்பாத்தான்னு தெரிஞ்சா என் கூட வாழ்வியா? அதான் எங்கப்பன் கௌரவத்துக்காக உன்னை இமோஷனாலா மிரட்டி, இந்தக் கல்யாணத்த செஞ்சிக்கிட்டேன்!”

அவன் சொல்லி முடித்த விஷயத்தைக் கேட்டு அக்கா தம்பி இருவரும் வாயடைத்து நின்றிருந்தார்கள். கௌரவம், அரசியல் வாழ்க்கை என மற்றவர்கள் வாழ்க்கையில் குற்ற உணர்ச்சியே இல்லாமல் விளையாடி இருந்த ப்ரதாப்பின் அப்பாவை குற்றம் சொல்வதா? தன் காதலனின் பாதுகாப்புக்காக இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ப்ரதாப்பை குற்றம் சொல்வதா? காதலன் உயிரை மரித்துக் கொள்வானோ என பயந்து தமக்கையின் வாழ்க்கையை பகடைக்காய் ஆக்கிய கண்ணனை குற்றம் சொல்வதா? மகள் ராணி மாதிரி வாழ வேண்டும் என அவசரமாக கல்யாணத்தை முடித்த மீனாட்சியை குற்றம் சொல்வதா? எவ்வளவுதான் நீங்கள் ப்ளான் போட்டாலும் அதை நடத்திக் காட்டுவது நானன்றோ என மனிதனை எள்ளி நகையாடும் விதியை குற்றம் சொல்வதா?

“அக்கா இது எதுவும் எனக்குத் தெரியாதுக்கா! உன்னை கல்யாணம் முடிச்சா மட்டும்தான் நாங்க ஆஸ்திரேலியா போக முடியும்னு சொன்னான்கா. அப்போ எங்கக்கா வாழ்க்கைக்கு என்னடா வழின்னு கேட்டப்போ, இங்கயே நெறைய இந்தியன்ஸ் இருக்காங்க. நல்ல மாப்பிள்ளையாப் பார்த்து உனக்கு கட்டிவைச்சு நம்ம கூடவே வச்சிக்கலாம்னு சொன்னான்கா! நான் சுயநலாம முடிவு எடுத்தாலும் உன் நலத்த நினைக்காம இல்லக்கா”

“கண்ணா நம்ம கூட வந்துடற வரைக்கும் எங்க விஷயத்தை மறைச்சு வைக்க முடிவு பண்ணோம்! உங்கம்மா உடம்பு முடியாம போக இவன் வரது லேட்டாகிருச்சு. அதுக்கு முன்ன சொன்னா நீ எப்படி ரியாக்ட் பண்ணுவியோ, தனியா என்னால சமாளிக்க முடியுமோன்னு உன் தம்பி பயந்தான். இப்போ உனக்கே தெரிஞ்சிடுச்சு எல்லாம். எங்கள மன்னிச்சிரு சண்மு” என சொல்லிய ப்ரதாப்பை உறுத்து விழித்தாள் சண்மு.

தலைக் குனிந்தவன்,

“நான் கதிர உன் கூட இணைச்சு வச்சு கண்டபடி பேசனது எல்லாம் தப்புத்தான். முதலிரவு அன்னிக்கு உன்னைத் தள்ளி நிறுத்த தான் அப்படி பேசனேன். அதுக்குப் பிறகு என் பக்கமே வரமாட்டன்னு நினைச்சேன்! ஆனாலும் சில சமயம் என்னை ஆவலா பார்க்கறப்போ என்னால தாங்கிக்க முடியல. அந்தப் பொண்ணுங்க என்னைப் பண்ண டார்ச்சர்லாம் ஞாபகம் வந்துடுது. அதான் என்னை அடக்க முடியாம கோபமா பேசிடறேன்! நீயே சொல்லு, என்னை நெருங்கி வராத வரைக்கும் உன்னை நல்லாத்தானே பார்த்துக்கிட்டேன்! நீ நெருங்கறத தடுக்கத்தான் அடிக்கடி வெளியூர் போனேன்! மத்த ட்ரைனர் போகறத கூட தடுத்துட்டு நானே போனேன்!” என சொன்னான்.

இவளுக்கு அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை. தானாகவே தாம்பத்தியத்தைக் கேட்டு வருவது என்பது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு மன உளைச்சலாக இருந்திருக்கும்? பல வருடம் திருமண பந்தத்தில் இருப்பவர்களுக்கே அந்த நிலைமை எனும் போது, புதிதாய் மணம் புரிந்தவளுக்கு எப்படி இருந்திருக்கும்! மாமியார், அம்மாவின் டார்ச்சர் ஒரு பக்கம்! செய்யாத காதலுக்கு தண்டனை கொடுக்கிறானே என ஆதங்கம் மறுபக்கம் என எத்தனை இரவுகள் தூங்காமல் அழுதிருப்பாள் சண்மு!

கட்டிய கணவன் தன்னை ஏறெடுத்தும் பார்க்காமல் இருப்பது என்பது ஒரு பெண்ணின் தன்னம்பிக்கைக்கு எவ்வளவு பெரிய அடியாக இருக்கும்! ஐயோ என்ன தப்பு செய்து விட்டோம் நாம், அழகாக இல்லையா, எடை கூடிவிட்டோமா, அசுத்தமாக இருக்கிறோமா, மேலே எதாவது வாடை அடிக்கிறதா, உடலழகை சரியாக பேணவில்லையா, நம்மை சந்தேகப்படுகிறாரா என ஒவ்வொரு கேள்வியும் மனதை வண்டாய் குடையுமே! கட்டினவனே பாக்கல, இனி எதுக்கு அழக பேணிக்காக்கனும் என அலட்சியமாய் தன்னைப் பேணாமல் இருக்கும் பெண்கள் நம்மில் எத்தனையோ பேர்!

அடிக்கடி ப்ரதாப் தனியாக விட்டுப் போகும் போதெல்லாம் அவள் அடைந்த மன உளைச்சலுக்கு வேறொருத்தியாய் இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பாள். ஆனால் இவளோ தனக்குள்ளே இருக்கும் நண்பனிடம் பேசிக் கொண்டு, வேலை ஒன்றை பார்த்துக் கொண்டு இந்த இரண்டரை வருடங்களை கடந்து வந்திருந்தாள். இதெல்லாம் இவர்களின் காதலினாலா! மனது வெறுத்துப் போனது சண்முவுக்கு.

வேலையிடத்தில் அவளது முதலாளி ஜேசன் மை பாய்ப்ரேண்ட் என அறிமுகப்படுத்திய சின்ன வயது பையன் மனதில் வந்து போனான். அப்பொழுது நண்பர்கள் என எண்ணியிருந்தவளுக்கு, இப்பொழுது வேறு என தோன்றியது. இருவரும் இடுப்பை சுற்றிக் கைப்போட்டுக் கொண்டு வெளியே கன்னத்தோடு கன்னம் இழைந்து சிரித்துக் கொள்வது எல்லாம் இப்பொழுது வேறு மாதிரி தோன்றியது சண்முவுக்கு.

‘நான் என்னடா செய்யட்டும் கதிரு? இப்படியும் காதல் வரும்னு எனக்குத் தெரியலையே! கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்குடா! இதை ஏத்துக்க முடியாம மனசு அடம் பண்ணுது! வேற ஒருத்தன்னா எப்படியோ போகட்டும்னு நினைக்க முடியுது! ஆனா நம்ம குடும்பத்துலாயான்னு நெனைக்கறப்போ நெஞ்சு துடிக்குதேடா! ஐயோ, ஐயோ! சத்தியமா என்னால தாங்க முடியலடா’ கண்ணில் மீண்டும் புதிதாக கண்ணீர் இறங்கியது.

கிட்டே நெருங்கி அவள் கன்னத்துக் கண்ணீரைத் துடைத்து விட்ட கண்ணனின் கையைப் பற்றிக் கொண்டவள்,

“கதிர் என் கிட்ட காதல் சொன்னத ப்ரதாப் கிட்ட யார் சொன்னா?” என கேட்டாள்.

“அது..வந்து.. நான் தான் சொன்னேன்கா” தடுமாறினான் கண்ணன்.

வாய்விட்டு சிரித்தாள் சண்மு.

“அதாவது இதை எங்கக்கா முன்னுக்கு யூஸ் பண்ணு! மனசு வெடிச்சுப் போய் உன் பக்கமே வரமாட்டான்னு சொல்லிருக்க”

“அ..அக்கா! அப்படிலாம் இல்லக்கா”

“எப்படிலாம் இல்லடா? இந்த ஓரினசேர்க்கைய நான் ஏத்துக்கறதும் ஏத்துக்காம போறதும் ஒரு பக்கம் இருக்கட்டும்! உங்க உறவ காதல்னு சொல்லறியே. அப்போ காதல் வந்துட்டா பந்தபாசம்லாம் அந்துப் போயிருமாடா? சொல்லுடா கண்ணா! காதல் வந்துட்டா அக்கா, அம்மா, குடும்பம் எல்லாம் இல்லாம போயிடுமா? உங்கப்பன் காதல்னு சொல்லித்தான் நம்மல எல்லாம் நட்டாத்துல விட்டுட்டுப் போனான்! அதே மாதிரி நீயும் காதல்னு உங்கக்காவ கூட்டிக் குடுத்துட்ட இல்ல! ஒனக்கும் உங்கப்பனுக்கும் என்னடா வித்தியாசம்? அது சரி! அவன் ரத்தம் தானே உன் உடம்புலயும் ஓடுது! கதிரு போன் போட்டப்போ கூட எங்க கல்யாணத்த நிறுத்திடுவானோன்ற பயத்துல போனை எடுக்காம, கமுக்கமா அவசரமா கல்யாணத்த முடிச்சிட்டல்ல! எனக்கு ஒன்னுன்னா கேட்க யாருமே இல்லைன்னு நினைச்சிட்டியா? என் நண்பண் கதிரு இருக்கான்டா! நல்லா வண்ணம் வண்ணமா கேப்பான்!”

“அக்கா!” என கதறிவிட்டான் கண்ணன்.

“நான் ஒரு படம் பார்த்தேன்டா கண்ணா! அதுல ரம்பா தன் அக்கா தேவயானிக்காக தன் காதலையே விட்டுக் குடுப்பா! ஆனா நீ????? உன் காதலுக்காக அக்காவ விட்டுக் குடுத்துட்டல்ல? அப்படி என்னடா பெரிய சனியன் புடிச்ச காதலு? என் நண்பன் கதிரு அத்தனை வருஷ நட்ப காதல்னு சொல்லி உசுர பொசுக்கிட்டான். நீ காதல்னு சொல்லி என் மனச பொசுக்கிட்டடா! காந்துதுடா கண்ணா! தொண்டைக் குழியில ஆரம்பிச்சு உடம்பு முழுக்க காந்துதுடா!” என தங்களை நெருங்க விடாமல் கதறியவளை செய்வதறியாது கண்ணீருடன் பார்த்திருந்தனர் இருவரும்.

தேம்பியபடியே,

“இந்த ப்ரதாப்ப வேணும்னா தொடைநடுங்கி, அப்பன எதிர்த்து நிக்க முடியாத பேடின்னு எக்கேடோ கெட்டுப் போன்னு விட்டுருவேன்! ஆனா உன்னை மட்டும் மன்னிக்கவே மாட்டேன்டா கண்ணா! உன் காதலுக்காக என்னை இந்த நரகத்துல்ல தள்ளி தவிக்க வச்சத மன்னிக்கவே மாட்டேன்! என்னை மாதிரி கிராமத்து ஆளுக்கெல்லாம் தாலிங்கறது புனிதமானதுடா! வாழ்க்கையில ஒரு தடவைத்தான் கழுத்துல ஏறனும், புருஷன் செத்தாத்தான் அத கீழ இறக்கனும்! இந்த தாலிக்கு மதிப்புக் குடுத்துத்தான் இத்தனையும் தாங்கிகிட்டு என் புருஷன், என் குடும்பம்னு வாழ்ந்தேன். அக்னி சாட்சியா உன்னை பாதுகாக்கற காவலனா இருப்பேன்னு சொல்லிதான் தாலிய கட்டறாங்க! இங்கதான் வேலியே பயிர மேயுதே! இது வெறும் பொம்மை கல்யாணம் தானே! இனி எதுக்கு எனக்கு இந்த தாலி? எதுக்கு இந்த கல்யாண பந்தம்? போதும்டா சாமி, போதும்! என்னை விட்டுருங்க! நான் என் தாய் மண்ணுக்கே போயிடறேன்!” என கதறிவிட்டாள் சண்மு.

இங்கேயே இரு, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என எவ்வளவு எடுத்து சொல்லியும் அசையவில்லை சண்மு. விவாகரத்து கொடுத்தே ஆகவேண்டும் என ஒற்றைக் காலில் நின்றாள். யாருக்கும் தெரியாமல் சென்னைக்கு இவர்கள் மட்டும் போய் அப்ளை செய்து விட்டு வந்தார்கள். விவாகரத்து கிடைக்கும் வரை ஆஸ்திரேலியாவிலே இருப்பது தான் நல்லது என அவர்கள் சொல்ல, இவளும் ஏற்றுக் கொண்டாள். இல்லாவிட்டால் மீனாட்சி குட்டையை குழப்பி விடுவாறோ என பயம்.

ப்ரதாப் மட்டும் அப்பாவிடம் விவாகரத்து அப்ளை செய்ததை சொல்லியிருந்தான். அவரே தெரிந்துக் கொண்டால் ஏடாகூடமாக எதாவது செய்து விடுவாறோ என பயம் அவனுக்கு. என்னமோ செய்துக் கொள்,விஷயம் இங்கே யாருக்கும் தெரியக் கூடாது என மட்டும் சொல்லிவிட்டார். தெரிந்தாலும் அவருக்கா சமாளிக்க தெரியாது! விவாகாரத்து என்றாலே இந்தப் பெண் என்ன செய்தாளோ, எந்தப் புற்றில் எந்தப் பாம்போ என பேசுவதற்கு நம் மக்களுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்!

அங்கிருந்தவரை இருவரிடமும் பேசவேயில்லை சண்மு. கண்ணன் எவ்வளவு கெஞ்சியும் முகம் கொடுக்கவே இல்லை. ஒரு நாள் மாலை வேலை முடிந்து வந்தவள்,

“சாமி ரூமுக்கு வாங்க” என பொதுவாக அழைத்தாள் இருவரையும்.

அமைதியாக வந்து நின்றவர்களைப் பார்த்தவள், கண் மூடி கடவுளை வேண்டிக் கொண்டு தன் கழுத்தில் அணிந்திருந்த மாங்கல்யத்தைக் கலட்டி அங்கிருந்த பால் டம்ளரில் போட்டாள்.

“ப்ரதாப்புக்கும் எனக்கும் உள்ள பந்தம் இதோட முடியுது! இனி அவன் எங்கம்மாவுக்கு மட்டும்தான் மருமகன். எனக்கு புருஷன் கிடையாது.”

பாக்கேட்டில் இருந்து நகை டப்பாவை எடுத்தவள்,

“எனக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்தா, கல்யாணம் ஆகாம இப்படி சேர்ந்து வாழறத நான் ஒத்துக்கவே மாட்டேன். ஆனா தம்பியா…” தொண்டை கமறியது அவளுக்கு. செறுமிக் கொண்டவள்,

“தம்பியா போய்ட்டான்! அதான் இப்படி…” என சொல்லியவள் மோதிரத்தை இருவர் கையிலும் கொடுத்தாள்.

“மோதிரம் மாத்திக்குங்க!”

அதில் உடைந்தே போனான் கண்ணன்.

“ஐயோ அக்கா! உனக்குப் போய் துரோகம் பண்ண எப்படிக்கா எனக்கு மனசு வந்துச்சு! ஐயோ! இதுக்கு நீ என்னை அடிச்சே கொன்னிருந்தா கூட என் மனசு ஆறிருக்கும்கா! என்னை மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லுக்கா! இப்படி மூனாம் மனுஷனா தள்ளி வச்சு எனக்கு மரண தண்டனைய குடுக்காதக்கா! என்னை மன்னிச்சிடுக்கா, மன்னிச்சிடு” என அவள் காலில் படாரென விழுந்துவிட்டான்.

“நீ செஞ்ச துரோகத்த மன்னிக்க நான் பரமாத்மா இல்லடா! காலம் எந்த காயத்தையும் ஆற்றும்! அப்படி ஒரு நாள் வந்தா உன்னை மன்னிக்கறேன். அது வரைக்கும் தயவு செஞ்சு என் மூஞ்சுல முழிச்சிடாதே! இப்போ மோதிரம் மாத்திக்கோ!”

தன் முன்னே இருவரும் மோதிரம் மாற்றுவதை அமைதியுடன் பார்த்திருந்தாள் சண்மு.

அதோடு விவகாரத்து கிடைத்து திரும்பி வந்தவள் தான். இருவரும் மாற்றி மாற்றி போன் செய்து கூட பேசவேயில்லை. தொழில் தொடங்க அவர்கள் கொடுத்த பணத்தைப் பெற்றுக் கொண்டாள், கடனாகத்தான். ஏன் விவாகரத்து என கதறிய அம்மாவிடம், தனக்கு அவனுடன் வாழ பிடிக்கவில்லை, மிரட்டி விவாகரத்து வாங்கிக் கொண்டேன் என பழியைத் தன் மேலே போட்டுக் கொண்டாள். தனக்கே அவர்கள் இருவரின் உறவை ஏற்றுக் கொள்ள இவ்வளவு நாள் பிடித்ததே, பழமைவாதியான மீனாட்சி எப்படி தாங்கிக் கொள்வார்! படபடவென அடிக்கும் அவர் நெஞ்சம் படக்கென நின்றுப் போனால், அவளுக்கும் யார்தான் இருக்கிறார்கள் அன்பு செய்ய. அவள் அமைதியால் தம்பி சுத்தாத்மா ஆகிவிட, இவள் கழிசடையாகி போனாள்.

“பச்சை குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்
பாலக் குடிச்சுபுட்டு பாம்பாகக் கொத்துதடி

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், உலகம் புரிஞ்சுக்கிட்டேன்,
கண்மணி என் கண்மணி!
ஞானம் பொறந்திருச்சு, நாலும் புரிஞ்சிருச்சு,
கண்மணி என் கண்மணி!”

 

(உயிர் போகும்)

(அடுத்து எபிலாக்ல சந்திக்கலாம் மக்களே. இந்த கதைக்கு பல வகையான ரெஸ்பாண்ஸ்! இப்படி ஒரு கருவ எடுத்ததுக்கு தில்லு வேணும்னு தொடங்கி சாபம் குடுக்கற வரைக்கும் போயிடுச்சு! இந்தக் கதை தொடங்கனதுல இருந்தே ரொம்ப ஸ்ட்ரெஸ்புல் தான். ஒரு கதாசிரியரா எல்லா கேரக்டருக்கும் நியாயம் செய்யனும் நான். என்னால முடிஞ்ச அளவுக்கு எல்லாருக்கும் நியாயம் பண்ணிருக்கேன்! ப்ரதாப் கண்ணாவோட உறவ தப்புன்னு சொல்ல நான் யாரு? கடவுளா? இந்தக் கதை கருவே இப்படி செக்‌ஷுவலிட்டி உள்ளவங்க தயவு செய்து இன்னொரு பெண்ணோட அல்லது ஆணோட வாழ்க்கையில விளையாடாதிங்க அப்படின்றது தானே தவிர ஹோமோசெக்ஸ் நல்லதா கெட்டதான்றது இல்ல! என்னோட பல நாள் ஆதங்கத்த கதையா எழுதி தீர்த்துக்கிட்டேன் அவ்வளவுதான்.

நெட்ப்ளீக்ஸ்ல டியர் டாட் னு ஒரு படம். ஐ நம்ம அரவிந்சாமின்னு நெனைச்சுட்டுப் படம் பார்க்க ஆரம்பிச்சேன். கேய் பத்தின படம்னு தெரியாது எனக்கு. அதுல கல்யாணம் ஆகி ரெண்டு புள்ளைங்க அவருக்கு. பதினைஞ்சு வயசு மகன். மனைவி கிட்ட டிவோர்ஸ் கேப்பாரு. ஆக்சுவலி நான் கேய்! என்னால இனிமே இந்த மாதிரி வாழ முடியாதுன்னு. எனக்கு செம்ம ஷாக். அதுக்கும் மேல பார்க்க முடியல படத்த. என்னோட ஆதங்கம்லாம் நீ கேயா இரு, ஆனா இத்தனை வருஷம் ஒரு பொண்ண ஏம்மாத்திட்டு இருந்துருக்க இல்ல! அவ உன் கூட வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்? அப்பாவுக்கு பயந்து, சொசைட்டிக்கு பயந்து கல்யாணம் பண்ணி, கஸ்டப்பட்டு அவ கூட வாழ்ந்து பிள்ளையும் பெத்துட்டு, நான் கேய்னா என்ன அர்த்தம்? டென்ஷன் ஆச்சு எனக்கு. அதோட தாக்கம் தான் இந்தக் கதைக் கரு! அதோட நெருங்கிய சொந்தத்துல இப்படித்தான் கோலாகலமா கல்யாணம் பண்ணி குடுத்து, அவள கண்ணுல காட்டல கொஞ்ச நாளா. அவன் கிட்ட அடி, உதை! யார்கிட்டயும் சொல்லாம அப்படியே வாழ்ந்திருக்கா! கடைசில தான் அவன் கேய்னு கண்டுப்புடிச்சு எலும்பும் தோலுமா இவள கூட்டிட்டு வந்தாங்க. டிவோர்ஸ் ஆகி இப்போ இன்னொரு கல்யாணமும் ஆச்சு! இப்படி எத்தனையோ கேஸ் என் காதால கேட்டுருக்கேன்! அதோட வெளிப்பாடுதான் இந்தக் கதை. யாரயும் கெட்டவங்க நல்லவங்கன்னு இதுல நான் பின்பாய்ண்ட் பண்ணல. இது ரொம்ப ஹேவியான சப்ஜேக்ட்னு தெரியும். எப்படி எடுத்துட்டுப் போக போறோமோ கதையன்னு ஒரு பயம் வேற! பாதி டைம்ல டைப் பண்ணவே முடியாது,. கண்ணன் மண்டையில உக்காந்துட்டு குடைஞ்சிட்டே இருப்பான். தூங்கக் கூட முடியாது! ஷாப்பா! இந்த கதை டோட்டலி டிப்ரண்ட் எக்ஸ்பீரியன்ஸ் எனக்கு. இப்படித்தான் கதைப்போக்குன்னு அம்மா கிட்ட சொன்னப்போ அவங்களுக்கும் ஷாக் தான். சொந்தத் தம்பியான்னு கொஞ்ச நேரம் அமைதியாகிட்டாங்க! அப்புறம் தான், எழுது நாட்டுல நடக்காததான்னு க்ரீன் லைட் குடுத்தாங்க.

என்னோட ஆதங்கம் சரியா தவறான்னு நீங்களே முடிவு பண்ணுங்க! இந்தக் கதை சக்சஸ் ஆகறதும் ஆகாததும் உங்க கையில. இனிமே கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிட்டு எபிலாக் எழுதி போடறேன். அது வரை நான் எழுதனது எந்த வகையிலாச்சும் உங்கள பாதிச்சிருந்தா ஐம் சாரி! வாழ்க வளமுடன்.)