MA – 10 Pre – Final

அத்தியாயம் – 10

சில வருடங்களுக்குப் பிறகு..

சென்னை மாநகரின் மையத்தில் அமைத்திருந்த அந்த வீட்டின் உள்ளிருந்து  “அப்பா..” என்ற குரல்கேட்டு ஓடிவந்த தந்தையைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தாள் திவ்யா.

“இன்னைக்கு இவினிங் என்னை வந்து பிக்கப் பண்ணிகோங்க..” என்ற மகளைப் பார்த்து, “இதைச் சொல்ல இவ்வளவு தூரம் உயிரைக் கொடுத்துக் கத்தணுமா?” என்று பொறுமையுடன் கேட்ட தந்தையின் தோள்களில் கைபோட்டுக் கொண்டாள்

“என்னப்பா பண்றது நான் அப்படி உன்னோட மனைவி சாயலில் இருக்கேனா..” என்று அவள் விளையாட்டாகத் தொடங்கும் பொழுதே,“ஏய் அவ உன்னோட அம்மா..” என்று ஒரு தந்தையாகத் திருத்தினான் முகிலன்.

“ம்ம் ஆமா என்னோட அம்மா தான்” என்றவள் தொடர்ந்து, “அவங்களை மாதிரியே எதை எப்படி செய்யன்னு தெரியாம இப்படி கத்திட்டு அப்புறம் ஏண்டா கத்தினோம்ன்னு யோசிக்கிறேன்..” என்ற மகளின் முகத்தைத் தன்பக்கம் திருப்பினான் முகிலன்..

“அவ கத்தி அடம்பிடித்து ஒரு பொருளை வாங்குவது அல்ல. அவளுக்கு வேண்டும்னு தோணுச்சா அது வேண்டும். அது வேண்டான்னு முடிவு பண்ணிட்ட அந்தப் பொருள் இருக்கும் திசை பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டா. நான் பார்த்த பெண்களில் இவ ரொம்ப வித்தியாசமான பொண்ணு..” என்று தந்தை சொல்லும் கதைகளை எல்லாம் காது கொடுத்துக் கேட்ட மகளோ அவளிடம் விளையாட நினைத்தார்.

“என்ன சொல்லி என்னப்பா பண்ண. உன்னோட மனைவிக்கு உன்னோட மனசு புரியலையே..” என்று சொல்லிவிட்டு முகிலனின் கைகளுக்கு அகபடாமல் சிட்டென்று பறந்துவிட்டாள்..

“திவ்யா பார்த்து கவனமாகப் போம்மா. அப்பா சாயந்திரம் உன்னை ஸ்கூலில் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்..” என்று சொல்ல, “சரிப்பா..” என்று சொல்லிவிட்டு தோழிகளோடு பஸில் சென்றாள்.

அவள் சென்றபிறகு ஆபீஸில் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் பட்டியலிட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்த முகிலன் கம்பெனிக்குக் கிளம்பிச் சென்றான்.

கார்முகிலன் – மேகவர்ஷினியின் மகள் திவ்யதர்ஷினி. இப்பொழுது ஸ்கூலில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறாள். அவளின் படிப்பை மனதில் வைத்து கோவையிலிருந்து சென்னை வந்து செட்டில் ஆகியிருந்தான் முகிலன். இன்று அவளுக்குப் பள்ளியின் இறுதிநாள் அதுதான் மாலை தன் தந்தையை ஸ்கூலிற்கு வரச் சொல்கிறாள்.

மாலை நேரம் நெருங்கிட மகள் ஸ்கூலிற்கு வரச் சொன்னதை மனதில் வைத்துக் கொஞ்சம் முன்னாடியே வந்து பள்ளிக்கூடத்தின் முன்னே காரில் நின்றிருந்தான் முகிலன்.

பள்ளியில் பெல் சத்தம் கேட்டும் பிள்ளைகள் எல்லோரும் வரிசையாக வெளியே வர அவர்களுக்கு நடுவே மேகாவும் வருவதைக் கவனித்தவனின் விழிகள் சந்தோஷத்தில் லேசாகக் கலங்கியது.

அவளைவிட்டு பிரிந்த நாளிற்கு பிறகு இன்றுதான் அவளை நேரில் பார்க்கிறான். கொஞ்சம் உடம்பு மட்டும் பூசினார் போல இருக்க அவளின் தோற்றத்தில் அதிகம் மாற்றம் இல்லாமல் இருக்க தன்னை மறந்து மனைவியை ரசித்தான் முகிலன்.

அன்றும் சரி இன்றும் சரி அவளை ரசிப்பதில் மட்டும் அவனின் பார்வையில் மாற்றவே இல்லை.  மூன்று பிரிவு சாலையில் ஒரு வழியில் அவள் வர எதிர்புறம் காரில் நின்றிருந்தான் முகிலன்.

அந்த இரண்டு புறத்திற்கும் நடுவே ஒரு தெருவில் செல்ல நினைத்துத் திரும்பியவளின் முன்னே பைக் வந்து வழியை மறித்து நின்றது. காரின் கண்ணாடியை இறக்கிவிடு கதவைத் திறக்க நினைத்தான்.

அவள் நிமிர்ந்து எதிரே நின்றவனின் முகம் பார்க்க, “நீ இன்னும் ஹைத்ராபாத்தில் இருப்பேன்னு நினைச்சிட்டு இருந்தேன். நீ இப்போ சென்னையில் தான் இருக்கியா?” என்று ஏளனமாகக் கேட்டவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள் மேகா.

அவள் நின்றதே அவனுக்கு வசதியாகப் போகிவிட,“அன்னைக்கே உங்க அண்ணா பத்து பவுன் அதிகமாகப் போட்டிருந்தால் இப்படி நீ தனியாக நடந்து வர அவசியமே இருந்திருக்காது..” என்று அவன் இகழ்ச்சியாக உதடு வளைத்துக் கேலியாக கூறியவனைப் பார்த்து அவளின் கோபம் எகிறியது.

ராகவன் தான் அவளின் வழியை மறித்து நின்று அப்படியொரு கேள்வியைக் கேட்டு வைக்க, “நான் எப்படி இருக்கேன்..” என்று அவள் அவனைப் பார்த்து அழுத்தத்துடன் கேட்டாள்.

“நீ தனியாக நடந்து போகும்போதே தெரியல நீ தனியாக ஒற்றை மரமாக நின்னுட்டன்னு. அதே நேரத்தில் நம்ம இருவரும் ஒன்னு சேர்ந்திருந்தா எத்தனை சந்தோசமாக இருந்திருப்போம்..” என்று அவன் சொல்வதைக் கேட்டு முகிலனின் முகம் இறுகியது.

“நான் சொன்னது உனக்கு மறந்து போச்சுன்னு நினைக்கிறேன்..” என்றவளின் பார்வையில் அனல் பறந்தது.

“என்ன சொன்ன?” என்று அவன் தீவிரப்பார்வையுடன் கேட்க, “பியூச்சரில் என்னை நீ பார்க்க நேர்ந்தால் நம்ம பிரிவுக்கு என்னை நீ காரணகர்த்தாவாக ஆக்கக் கூடாது சொன்னது உனக்கு மறந்துபோச்சுன்னு நினைக்கிறேன். என்ன நான் சொல்வது சரிதானே..” என்று இடது புருவம் தூக்கிய அவளின் கம்பீரத்தை காருக்குள் இருந்து ரசித்தான் முகிலன்.

ராகவ் வாயடைத்துப் போய் நின்றிருக்கவே, “என்னை வேண்டான்னு நீ தூக்கி எரிச்சிட்டு போயிட்டன்னு நான் தனிமரமாக நின்னுட்டேன்னு நீ நினைச்சா அது உன்னோட மிஸ்டேக்..” என்றதும் அவன் பார்வையைத் திருப்பினான்.

அவன் முகத்திற்கு முன்னாடி சொடக்குப் போட்டு அவனின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்த மேகாவை அவன் கேள்வியாக நோக்கிட அவள் அடுத்து என்ன பேசப் போகிறாள் என்ற ஆர்வத்துடன் அவளின் மீது பார்வைப் படரவிட்டான் முகிலன்.

“எனக்கு அழகான குடும்பம் இருக்கு. உன்னைவிட என்னோட முகிலன் எதிலும் தாழ்ந்து போகல. அவரோட பணம், அந்தஸ்து, படிப்பு, உழைப்புக்கு முன்னாடி நீ அவரோட கால்தூசிக்கு பெற மாட்ட. இப்போ கூடப் பெற்ற பிள்ளையை விட்டுட்டு கட்டிய கணவனைத் தூக்கி எறிஞ்சிட்டு வந்து நான் சுயமாக உழைச்சு சாப்பிடறேன்..” என்று அவள் பேசப் பேச ராகவின் முகம் இறுகிவிட முகிலனின் முகம் பிரகாசமானது.

“அவரை நான் பிரிந்து ரொம்ப வருஷம் ஆச்சு. என்னோட மகள் இந்நேரம் ஸ்கூல் படிப்பையே முடிச்சு இருப்பா. இன்னைக்கு வரைக்கும் எந்த ஒரு தேவைக்கும் மனைவி என்று சொல்லி என்னைத் தேடி அவர் வரல. அவரு ஆம்பிள ஆனா நீ?” என்றவளோ ராகவை ஏறயிறங்க பார்த்தாள்.

“நான் கேட்டேன்னு சொல்லிப் பிரிவுக்கு கூடச் சம்மதம் சொன்ன அவரு மனுஷன். இன்னைக்கு வரைக்கும் அவர் என்னை மறந்திருக்க மாட்டார். அது எனக்கு நல்லாவே தெரியும்..” என்றவளைக் காயப்படுத்துவிடும் நோக்கத்துடன் நிமிர்ந்தான் ராகவ்.

“என்னாதான் இருந்தாலும் நீ என்னைக் காதலிச்சவ தானே..” என்றதும் தான் அவளின் உதட்டில் புன்னகை அரும்பியது.

“உன்னைச் சந்திக்கிறதுக்கு முன்னாடி நான் அவரைச் சந்தித்து இருந்தா அவரைத்தான் லவ் பண்ணிருப்பேன்..” என்று சொல்லிவிட்டு மறுப்பாகப் தலையசைத்தவளை முகிலன் கேள்வியாக நோக்கினான்.

“இல்லல்ல இன்னைக்கும் நான் அவரைத்தான் மனத்தார காதலிக்கிறேன். இதை ஏன் உன்கிட்ட சொல்றேன் தெரியுமா? நீ உனக்காகத் தான் நான் இப்படியொரு முடிவை எடுத்தேன்னு யோசிக்க கூடாது இல்ல..” என்றுசொல்ல இங்கே முகிலனின் மனதில் சந்தோசம் உற்றேடுத்தது.

அவனின் உண்மையான நேசம் தோற்றுப்போனதோ என்று அவன் இத்தனை வருடமாக நினைத்திருந்தான். ஆனால் அது தோற்றுப் போகவில்லை. தன் மனைவி தன்னை நேசிக்கிறாள் என்று உணர்ந்த நொடியே அவனின் மனதிலிருந்த பாரம் முழுவதும் இறங்கியது.

முகிலன் மீண்டும் அங்கே நடப்பதைக் கவனிக்க, “அப்புறம் எதுக்கு உன்னோட கணவனைப் பிரிஞ்சி இருக்கிற..” என்று கோபத்துடன் கேட்டான் ராகவ்.

“நீ செய்த தவறுக்கு பதிலடி கொடுக்க எனக்கு இத்தனை வருஷம் ஆச்சு. ஆனா அவரு செய்த தவறுக்கு நான் அப்போவே தண்டனை கொடுத்துட்டேன்..” என்றவளின் முகம் களையிழந்தது.

“எங்க அப்பா – அம்மா இறந்த நாளான்று அவர் மட்டும் என்னிடம் ஒரு வார்த்தை ஆறுதலாகப் பேசியிருந்தா இன்னைக்கு நீயெல்லாம் என் முன்னாடி நின்று கேள்வி கேட்டிருக்க முடியாது..” என்று திமிராகப் பதிலுக்கு பதில் கொடுத்தாள் மேகா.

அவள் சொன்ன நாள் என்னவென்று நினைவலையில் வேகமாகத் தேடிய முகிலனுக்கு உடனே பதில் கிடைத்துவிடவே, ‘ச்சே.. அன்னைக்கா உன்னைக் காயப்படுத்தினேன்..’ என்று நிஜமாகவே மனம் வருந்தினான்.

தன் எதிரே நின்றிருந்த ராகவைத் துச்சமாகப் பார்த்துவிட்டு, “இன்னொரு முறை என் கண் முன்னாடி வந்துவிடாதே. அது உனக்கு நல்லதில்ல..” என்று சத்தமே இல்லாமல் அவனை மிரட்டிவிட்டு நகர்ந்த தன் மனையாளைப் பார்த்து,

“ஐ லவ் யூ வர்ஷா பேபி..”அவனின் உதடுகள் முணுமுணுக்கச் சந்தோசத்தில் தன்னை மறந்து சிரித்தான் முகிலன். அந்தநொடி அவனின் காதல் மனம் குத்தாட்டம் போட்டது.

காரின் மறுப்பக்கம் வந்து ஏறிய திவ்யா, “அப்பா என்னப்பா ஆச்சு. இவ்வளவு சந்தோசமாக இருக்கீங்க..” என்றுபுன்னகை முகம் மாறாமல் கேட்ட மகளிடம் காரணத்தைச் சொல்லாமல்,

“தியா நம்ம இன்னைக்கு வெளியே போலாம் அப்பா உனக்கு ட்ரீட் தரேன்..” என்று சந்தோஷத்துடன் சொன்னதும், “எனக்கு ஐஸ்கிரீம் கேக் என்றாள் மகள் வேகமாகவே..

“ஓகே..” என்ற முகிலன் காரை எடுக்கவனின் மனதில் சந்தோஷ அலைகள்!

தன் மனைவி தன்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறாள் என்ற ஒரு விசயமே அவனுக்குப் போதுமானதாக இருந்தது. இத்தனை நாளாக அவன் அனுபவித்த தனிமை வலி அனைத்தும் நொடியில் மறைவதைப் போல உணர்ந்தான்.

மீண்டும் சில வருடங்களுக்குப் பிறகு..

கிழக்கு வானம் செவ்வானமாக மாறிகொண்டிருக்கும் காலை நேரத்தில் சமையலறையில் பம்பரமாகச் சுழன்றார் மேகா. அவளின் வயதிற்கு ஏற்றார்போல் அவளின் தோற்றமும் மாறிப்போனது.

“டேய் சித்து சீக்கிரம் கிளம்பிவாடா..”அவனின் அறையை நோக்கிக் குரல் கொடுக்க, “இதோ இன்னும் பத்து நிமிஷம் அம்மா..” அவருக்கு பதில் கொடுத்தபடியே அவனின் அறையில் ஹாஸ்பிட்டல் கிளம்பினான் சித்தார்த்.

மேகாவின் சமையல் வாசனை கமகமவென்று வந்து அவனின் மூக்கைத் துளைக்க, “ஐயோ அம்மா மசால் தோசை மனுஷனை வா வான்னு இழுக்குது..” என்று சிரித்துகொண்டே தலை வாரிவிட்டு வழக்கம்போல டைனிங் டேபிள் நோக்கி வந்த சித்தார்த்தின் செல்போன் சிணுங்கியது.

அவனுக்குச் சாப்பாடு எடுத்து வைத்தவர், “முதலில் உன்கிட்ட இருக்கும் இந்தப் போனைப் பிடிங்கி வைக்கணும் சித்து..” என்று எரிச்சலோடு மொழிந்த தாயைப் பார்த்துக் குறும்புடன் கண்சிமிட்டினான்.

“இப்படி கண்சிமிட்டி அம்மாவோட கோபத்தை குறைத்துவிடு.. கேடி பயபுள்ள..” என்று திட்டிகொண்டே சென்ற தாயைப் பார்த்தபடியே போனை எடுத்தான் சித்தார்த்.

“ஹலோ சித்தார்த் ஹியர்..” என்றான்.

“நான் தர்ஷினி பேசறேன் சார்..” என்றாள்.

“ம்ம் சொல்லுங்க தர்ஷினி என்ன விஷயம்?” என்றவன் டைனிங் டேபிளில் அமர்ந்தவன்,

அடுத்து அவள் சொன்னதைக்கேட்டு, “இன்னும் அரைமணிநேரத்தில் அங்கே இருப்பேன்..” என்றவன் நிமிர்ந்து பார்க்க அவனை முறைத்துக்கொண்டே நின்றிருந்தார் மேகா.

“டேய் காலையில் சாப்பிடாமல் எங்க கிளம்பற. ம்ம் உட்காரு..” என்று அவர் போடும் அதட்டலை சமாளிக்க தெரியாதவன் நம்ம சித்தார்த் அல்லவே.

“என் செல்லம்மா இல்ல. ஒரு முக்கியமான பேஷண்ட் உயிருக்குப் போராட்டி இருக்காங்க அம்மா. எனக்கு இன்னைக்கு சாப்பாடு வேண்டாம் வந்து சாப்பிடறேன் வரமுடியலைன்ன நான் வழக்கம்போலக் கேண்டினில் சாப்பிட்டுகிறேன்..” என்று நகர்ந்த மகனின் கரம்பிடித்து அருகே இழுத்தார் மேகா.

“டேய் சாப்பிட உட்கார்ந்துவிட்டு சாப்பிடாமல் எழுந்தால் எனக்குக் கெட்ட கோபம் வருமுன்னு உனக்கு நல்லாவே தெரியுமில்ல..” என்ற தாயை டைனிங் டேபிளில் அமரவைத்து அவருக்குச் சாப்பாட்டை பரிமாறினான் சித்தார்த்.

“நீங்க தெம்பாகச் சாப்பிட்டு இருங்க. நான் இதோ ஒன் ஹௌர்ல வந்துடுறேன்..” என்றவன் அதற்கு மேலும் நேரத்தைத் தாழ்த்தாமல் வேகமாக வாசலை நோக்கி நடக்க அந்த நடையில் மிளிர்ந்த கம்பீரத்தைக் கண்டு தன்னைமறந்து அவனையே பார்த்தார் மேகா.

“அம்மா என்னை வேடிக்கைப் பார்த்துட்டு சாப்பிடாமல் இருக்காதீங்க..” என்ற கண்டித்துவிட்டு சென்றவன் நேராகச் சென்ற இடம் மருத்துவமனை.

அவனின் ஆசையைக்கேட்டு அதை நிறைவேற்றிய மேகாவின் பாசத்தில் சமுதாயத்தில் ஒரு நல்லவனாக வலம் வந்தான். அதற்கு முழுக்க முழுக்க காரணம் மேகாவின் வளர்ப்புதான் என்று அவன் நம்பினான்.

காற்றில் அணைய இருக்கும் தீபத்திற்கு ஒரு தூண்டுகோலாக இருந்த மேகாவும் அவன் துவண்டு விழுகும் பொழுதெல்லாம், ‘நீ உன்னோட கனவை அடையத்தான் போகிறாய்..’ என்று அவனைத் தோள் சாய்த்து கொள்ள அவள் கொடுத்த தைரியத்தில் இன்று சித்தார்த் ஒரு டாக்டர்.

அந்த மின்மினியின் ஆசைகளை நிறைவேற்றிய மேகாவின் மனமோ எல்லை இல்லாத மகிழ்ச்சியில் திகைத்தது. அவரவர் ஆசைகளைக் கேட்க இங்கே ஆளில்லை என்ற பொழுதில் கலங்கி நின்றவளின் முன்னே ஒரு சிறுவன் கலங்கினான்.

அவனின் ஆசைகளுக்குச் செவிசாய்த்து அதை அவன் அடைய உறுதுணையாக நின்றவளோ அவன் வெற்றி அடைந்த தருணத்தில் தானே வெற்றிப் பெற்றதாக உணர்ந்தாள் மேகா.

பழைய நினைவுகளின் தாக்கத்திலிருந்து வெளியே வந்த மேகா சாப்பிட்டுவிட்டு அவனுக்குச் சாப்பாட்டை எடுத்துச் சென்றார். அவர் வேலை செய்யும் பள்ளிக்கு அருகில் அவன் வேலை செய்யும் ஹாஸ்பிட்டல் அமைத்திருந்தது.

அவன் ஒரு முக்கியமான பேஷண்ட்டிற்கு ட்ரீட்மெண்ட் முடித்துவிட்டு வெளியே வருவதற்குள் ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆனது.

அவன் அந்த ரூம்விட்டு வெளியே வரும்போது, “என்ன தர்ஷினி நைட் சிப்ட் ஓவர். இப்போ வீட்டிற்கு கிளம்பிருவீங்க..” என்று தன்னுடன் வேலை செய்யும் நர்சுடன் பேசியபடி அவனின் தனியறையை நோக்கி நடந்தான் சித்தார்த்

அவனோடு இணைந்து நடந்த தர்ஷினி,  “ம்ம் அப்பா வரேன்னு சொல்லி மெசேஜ் பண்ணிருக்கார்..” என்றவள் அவனைக் கடந்து செல்ல அவளைப் பார்த்தபடியே ஹாஸ்பிட்டல் உள்ளே நுழைந்தார் மேகா.