MA – 11 (Final)

MA – 11 (Final)

அத்தியாயம் – 11

மேகாவின் பார்வை அந்தப் பெண்ணின் மீது நிலைத்திட, “என்னம்மா இப்படி பண்றீங்க..” என்று அவனின் அருகே வந்தவனின் பக்கம் திரும்பியவர்,

“இனிமேல் நீ நைட் தான் சாப்பிடுவ. அதன் நானே கொண்டு வந்துட்டேன். முதலில் சாப்பிடு அப்புறம் வேலையைப் பாரு..” என்று மகனை அதட்டியவரின் பார்வை மீண்டும் அவளின் மீதே நிலைத்தது.

தாயின் பார்வை சென்ற திசையில் தன் பார்வையைச் செலுத்திய சித்தார்த், “என்னம்மா தர்ஷினியை அப்படி பார்க்கிறீங்க..” என்று குறும்புடன் கண்சிமிட்டியபடி கேட்டான்.

“அந்தப் பொண்ணு யாரோட சாயலில் இருக்கான்னு தெரியல சித்து. ஆனா அவளை இதற்கு முன்னாடியே எங்கோ பார்த்த மாதிரி தோணுது” என்றவர் அங்கே தூரத்தில் நின்றிருந்த தர்ஷினியின் மீதே இருந்தது.

“ம்ம் எனக்கும் அதுதான் அம்மா தோணுது. ஆனா எங்கே பார்த்தேன்னு தான் ஞாபகம் வரல” என்றவன் உதட்டைப் பிதுக்கினான்.

அவளின் மீதே பார்வையை பதித்த வண்ணம் நின்றிருந்த தாயைப் பார்த்துவிட்டு, “நீங்க இப்படியே நின்னு யோசிங்க நான் சாப்பிட்டுவிட்டு வந்து பேசறேன்..” என்று அவனின் அறைக்குள் சென்று மறைந்தான்.

தன்னருகே நின்ற சித்துவைக் காணாமல் திரும்பிய மேகா யாரின் மீதோ மோதிக்கொள்ள, “ஸாரி..” என்று நிமிர்ந்தவளைப் பார்த்தும் அவனின் உதட்டில் புன்னகை அரும்பிட, இவளோ வியப்புடன் அவனையே இமைக்காமல் பார்த்தாள்.

“மேக.. வர்ஷா..” என்று அவளின் பெயரை எப்படி உச்சரிப்பது என்ற தடுமாற்றத்துடன் பேசியவனின் உருவத்தை உள்வாங்கிய மேகாவிற்கு பேச்சு வர மறுத்தது.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு மேகாவின் முகத்தைப் பார்த்த முகிலனுக்குமே கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அவளை அங்கே சந்திப்பான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

கிட்டதட்ட இருபத்தி மூன்று வருடங்களுக்குப் பிறகு பார்த்த மேகாவின் பார்வை அவனை அளவேடுத்தது. கண்களில் கண்ணாடியுடன் காதோரம் நரைத்த முடி சிலவை எட்டிப்பார்க்கத் தன் கம்பீரத்தில் சிறிதும் மாற்றம் இல்லாமல் நின்றவனை தன்னை மறந்து பார்த்தாள் மேகா.

இருவரும் சுற்றிமுற்றும் மறந்து சிலையாகி நின்றிருக்க,  “சார் கொஞ்சம் நகருங்க..” என்ற டாக்டரின் அதட்டலில் தன்னிலைக்கு மீண்டனர். அவர் செல்ல வழிவிட்டு விலகி நின்ற முகிலனிடம் முதலில் பேசியது மேகாதான்.

“எப்படி இருக்கீங்க முகில்?” என்று புன்னகையுடன் கேட்டவளை நிமிர்ந்து பார்த்த முகிலன், “நல்லா இருக்கேன் வர்ஷா..” என்ற அவனும் இயல்பாகப் புன்னகைத்தான்.

“நீங்க இங்கே எப்படி?” என்று அவள் அடுத்த கேள்வியைத் தொடுக்க, “புரியல..” என்றான் முகிலன்.

“இல்ல நீங்க கோயம்புத்தூரிலிருந்து சென்னை வந்திருக்கீங்க அதுவும் ஹாஸ்பிட்டல்..” என்று புரியாமல் இழுத்தவளுக்கு புன்னகையைப் பதிலாகப் கொடுத்தவன்,

“மகளோட படிப்புக்காக வந்தது. இங்கேயே செட்டில் ஆகிட்டேன்..” என்றவன் அவளை ஊடுறுவி பார்த்தவண்ணம்,

“நீங்க எப்படி இருக்கீங்க வர்ஷா..” என்றவனின் வார்த்தைகளில் அக்கறை வெளிப்படையாகவே தெரிந்தது.

அவனின் பார்வையில் தன்னை சுதாரித்த மேகா, “ம்ம் குட்..” என்று சொல்லிவிட்டு, “உங்க மனைவி எப்படி இருக்காங்க..” என்று அவனை நோக்கி கேள்வியைத் தொடுத்தாள்.

அவளை ஆழ்ந்து நோக்கிய முகிலன், “ம்ம் அவளுக்கு என்ன நல்லாவே இருக்கிறா..” என்று குறுஞ்சிரிப்புடன் இருப்பொருள்பட கூறினான்.

அதன் உள்ளத்தர்த்தம் புரியாத மேகாவோ, “உங்க மக படிப்பை முடிச்சிட்டாளா..” என்று ஆர்வத்துடன் கேட்டவளின் மீது பார்வையைப் படரவிட்டான் முகிலன்.

“ம்ம் நர்சிங் முடிச்சிட்டு இந்த ஹாஸ்பிட்டலில் தான் வேலை பார்க்கிறா..” என்ற இருவரும் ஹாஸ்பிட்டல் என்பதை மறந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“சார் இங்கே நின்னு பேசாதீங்க..” என்று நர்ஸ் ஒருத்தி போகும் போக்கில் சொல்லிவிட்டுப் போக முகிலனும், மேகாவும் புன்னகையுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“சரி வாங்க வெளியே தோட்டம் இருக்கும் அங்க போய்ப் பேசலாம்..” என்று முகிலன் இயல்பாக அழைக்க, அவளோ அசையாமல் நின்றிருந்தாள். ஏனோ அவளின் மனம் படபடவென்று அடித்துகொண்டது.

“என்னங்க இத்தனை வருஷம் கழிச்சு சந்திச்சு இருக்கோம். என்னிடம் இரண்டு வார்த்தை பேசக்கூட பஞ்சமாகிவிட்டதா?” என்றவனின் குரலில் இருந்த குறும்பு கண்டு, “அப்படியெல்லாம் இல்ல..” என்றாள் மேகா.

அவன் முன்னோக்கி கைக் காட்டவே அவனின் பின்னோடு சென்ற மேகா தோட்டத்தில் இருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர இருவருக்கும் இடையே இடைவெளி விட்டு அமர்ந்தான் முகிலன்.

“பொண்ணு யார் மாதிரி இருக்கிறா..” அவள் தயக்கத்துடன் கேட்டவளை இமைக்காமல் பார்த்த முகிலனோ, “அவ அப்படியே அவங்க அம்மா மாதிரி..” என்றான் .அவள் திரும்பும்போது பார்வையை வேறுப்பக்கம் திருப்பிக் கொண்டான்.

“அப்பா..” என்ற அவளின் சத்தம்கேட்டு திரும்பிப் பார்த்தாள் மேகா.

குறும்பு புன்னகையும், விழிகளில் நேர் கொண்ட பார்வையுடன் நிமிர்வாக நடந்து வந்தவளைப் பார்த்துப் பிரம்மித்துப் போனவளோ, ‘இது இவரோட மகளா?’ என்றவளின் மீது மீண்டும் பார்வையைப் படரவிட்டாள்

அவளின் குரல்கேட்டு திரும்பிப் பார்த்த முகிலன், “வாம்மா திவ்யா..” என்றுழைக்க அதற்குள் அவர்களின் அருகே வந்து சேர்ந்தாள் தர்ஷினி.

முகிலனின் அருகே வந்தவளை பார்த்து, “உன் பேரு தர்ஷினிதானே? இவரு உன்னைத் திவ்யா..” என்று இருவரையும் பார்த்துப் புரியாமல் குழம்பினாள் மேகா.

அவளோ மேகாவைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு தந்தையைப் பார்த்து, ‘ம்ம்..ம்ம்..’ என்று குறும்புடன் கண்சிமிட்டிய மகளின் முதுகில் ஒரு அடிபோட்ட முகிலன், “வாலு..” என்று சொல்லிவிட்டு மேகாவின் பக்கம் திரும்பினான்.

“திவ்யதர்ஷினி இவளோட பேரு..” என்று மேகாவிற்கு மகளை அறிமுகம் செய்ய,

“அப்பா நான் சொல்வேன் இல்ல சித்தார்த் அம்மான்னு அவங்க இவங்கதான்..” என்று தந்தையிடம் மேகாவை அறிமுகம் செய்தாள்.

அதற்குள், “தர்ஷினி அந்தப் பேஷண்ட் கண் முழிச்சிட்டார்..” என்று இன்னொருத்தி தூரத்தில் நின்று குரல்கொடுக்க, “அப்பா ஒரு பத்து நிமிஷம் நான் இதோ வந்துவிடுகிறேன்..” என்று சொல்லிட்டு ஓடிப்போனவளை தன்னை மறந்து பார்த்தாள் மேகா.

“திவ்யாவை இமைக்காமல் பார்க்கிற என்ன விஷயம்..” என்று அவளின் பார்வைக் கவனித்துவிட்டுப் புரியாமல் கேட்டான் முகிலன்.

“இவளைப் பார்த்த நாளில் இருந்தே இவளோட சாயல் யாரோடது என்ற கேள்வி மனசுக்குள் இருந்துட்டே இருந்தது..”என்ற மேகாவின் பார்வை தூரத்தில் நின்றிருந்த தர்ஷினியின் மீதே நிலைப்பதைக் கண்டான் முகிலன்.

“அவ அப்படியே அவங்க அம்மா சாயல்..” என்றான் மர்மபுன்னகையுடன்.

அதற்குமேலும் பொறுமை இல்லாமல் அவனின் பக்கம் திரும்பியவளோ,  “அவங்க அம்மாவை நான் பார்க்கணும் முகில்..” என்று ஆர்வத்துடன் கேட்டவளின் கண்கள் அங்கும் இங்கும் அலைப்பாய்ந்தது.

“ஓ பார்க்கலாமே..” என்றவன் தொடர்ந்து, “இந்த ஹாஸ்பிட்டலில் எண்ட்ரன்ஸ்ல போய்ப் பாருங்க..” என்றான் அவனும் சீரியசாகவே.

“இங்கேதான் இருக்காங்களா? நீங்க இங்கேயே இருங்க நான் பார்த்துட்டு வரேன்..” என்று சென்ற மேகாவின் தோற்றத்தை மனபெட்டக்கத்தில் சேகரித்தவனின் முகத்தில் பளிச்சென்று ஒரு புன்னகை வந்து போனது.

திவ்யாவின் முகம் பார்த்தும் ஆர்வத்தை அடக்க முடியாமல் ஓடிச்சென்று எண்ட்ரன்ஸில் பார்க்க அங்கே இருந்த ஆளுயரக்கண்ணாடி அவளின் முகமே தெரிந்தது.

‘இதென்ன கண்ணாடி இருக்கு?’ என்று முதலில் புரியாமல் குழம்பிய மேகாவின் முகத்தில் இருக்கும் சாயலைக் கண்டதும், ‘என்னோட சாயல் தர்ஷினிக்கு என்றால் அவ அவ என்னோட மகளா’ என்ற உண்மையை உணர்ந்து அவளின் கண்கள் சந்தோஷத்தில் கலங்கியது.

இத்தனை நாளாக விடை தெரியாத கேள்விக்கு இன்று விடை கிடைத்துவிட்டதாக நினைத்தாள் மேகா.

மெல்ல அந்த உண்மையை உள்வாங்கிய மேகா தோட்டத்திற்கு செல்ல, “என்ன வர்ஷா என்னோட பொண்ணு அப்படியே என்னோட மனைவி மாதிரியே இருக்கா இல்ல..” என்று புன்னகையுடன் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“நீங்கக் கல்யாணமே பண்ணிக்கல..” என்று அதிர்ச்சியுடன் கேட்க,

“ம்ஹும்..” என்று இடமும் வலமும் தலையசைத்து மறுத்தவன், அவளைப் பார்த்தபடியே மேலும் தொடர்ந்தான்

“என்னோட வாழ்க்கையில் உன்னோட இடத்தை வேறொரு பெண்ணுக்குக் கொடுக்க எனக்கு மனசு வரல..” என்றவனைப் பார்த்துப் புன்னகைக்க முயன்று தோற்றவளின் விழிகள் கலங்கியது.

“நீ வந்தபிறகு மகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற எண்ணம் மனசில் நிலையாகத் தங்கிவிட்டது வர்ஷா. அதுவும் அவள் வளர வளர அவளோட சாயலில் உன்னைக் கண்டவன் அப்படியே இருந்துட்டேன்..” சிரித்துக்கொண்டே கூறியவனின் வார்த்தைகளில் சந்தோசம் இருந்ததே தவிர வருத்தம் துளியும் இல்லை.

“அப்புறம் எதற்கு டைவர்ஸ் பேப்பரில் சைன் கேட்டீங்க..” என்றவளின் கேள்வியில் வாய்விட்டுச் சிரித்த முகிலனைப் புரியாத பார்வை பார்த்தாள் மேகா.

“உனக்கே விடை தெரியும் என்பது என்னோட கணிப்பு..” என்றவனை ஆழ்ந்து நோக்கியவள், “என்னைப் போக விடக்கூடாதுன்னு நீங்க டைவர்ஸ் கேட்டிங்க..” என்றாள் அவனின் கேள்விக்குப் பதிலாக..

“கரெக்ட்..” என்ற முகிலன் அவளின் பக்கம் திரும்பி, “வார்த்தை என்ற உளியில் அடித்து அடித்துக் கல்லாக இருந்த என்னைச் சிற்பமாக மாற்றிவிட்டு நீ போயிட்ட. ஆன அந்த உளியின் மீது காதல் கொண்ட நான் காலம் முழுக்க தனிமையில் இருந்துட்டேன்..” என்றான் பளிச்சென்ற புன்னகையுடன்.

“நா.. நான் உங்களிடம் இதை எதிர்பார்க்கல..” மேகா சற்று தடுமாற்றத்துடன் உரைக்கவே,

“ஆனா நீ என்னிடம் எதிர்ப்பார்த்த மாதிரி நம்ம மகளை நான் நல்லா வளர்த்திருக்கேன்..” என்ற முகிலன் நம்ம மகள் என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தான்.

அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, “அப்பா வேலை முடித்தது..” என்றபடி வந்து சேர்ந்த மகளின் தோளில் இயல்பாகக் கைப்போட்ட முகிலன், “இது யாருன்னு தெரியுதா திவ்யா..” என்று கேட்க மகள் திரும்பித் தாயைப் பார்த்தாள்.

“ஓ நல்லா தெரியும் அப்பா. என்னோட அம்மா மேகவர்ஷினி. நான் அவங்க சாயலில் தானே இருக்கேன்..” என்று அவளையே அதிர வைத்தாள் மகள்.

“இதுதான் வர்ஷா என்னோட வளர்ப்பு..” என்று பெருமையாகப் புன்னகைத்தான். அந்தநொடி அவனின் புன்னகை முகத்தைத் தன் மனபெட்டக்கத்தில் சேகரித்தாள் மேகா.

அவர்கள் மூவரும் பேசியபடி நின்றிருப்பது பார்த்து அவர்களை நோக்கி வந்தான் சித்தார்த்.

அவன் அருகே வருவதைக் கவனித்த தர்ஷினி, “வாங்க சித்தார்த்..” என்று அழைத்தவள்,

“இது என்னோட அப்பா கார்முகிலன். இது என்னோட அம்மா மேகவர்ஷினி..” என்று இருவரையும் அவனுக்கு அறிமுகப்படுத்தினாள்.

அவர்கள் இருவரையும் பார்த்ததும் மேகாவை எப்படி அம்மா என்று அழைப்பது என்ற தயக்கத்துடன் நின்றவனின் அருகே சென்றவளோ, “டேய் சித்து நான் என்னைக்கும் உனக்கு அம்மாதான். இந்தத் தயக்கத்திற்கு அவசியமே இல்ல..” என்றார் ஒரே வார்த்தையில் அவனின் வருத்தத்தைப் போக்கிவிட்டாள்.

அப்பாவும், மகளும் மேகாவைப் பார்க்க, “இவன் என்னோட மகன் சித்தார்த். இவனோட ஆசைகளை நிறைவேற்றி வைப்பதில் என்னோட காலமும் போயிருச்சு. இப்போ இவன் டாக்டர்..” என்று பளிச்சென்று புன்னகைத்தான்.

அவள் மகன் என்ற வார்த்தையில் சித்தார்த் திரும்பிப் பார்த்த முகிலனுக்கு மட்டும் தெரியும் மேகா யாரை கல்யாணம் பண்ணிகொள்ளவில்லை என்று.

அப்படியிருக்க தன் முன்னே நின்ற சித்தார்த் வயதை சரியாகக் கணித்துவிட்டவனோ, “மேகாவின் வளர்ப்பில் ஏதாவது அர்த்தம் இருக்கும்..” என்று அவனோடு கைக் குலுக்கிய முகிலனைப் பார்த்தாள் மேகா.

“சரி முகிலன் நான் கிளம்பறேன்..” என்றவள் மகனோடு ஒரு திசையில் சென்றவளை பார்த்துக்கொண்டே நின்றிருந்த தந்தையின் அருகே வந்த திவ்யா அவரின் கைகளில் தன் கையைக் கோர்த்து, “அப்பா நம்ம போலாம்..” என்றாள்.

மகளின் கரத்தைக் கெட்டியாகப் பிடித்தவன், “ம்ம் போலாம்மா..” என்றவர் அவர்கள் சென்ற திசைக்கு எதிர்புறமாகத் திரும்பினார்.

அப்பொழுது நின்ற திவ்யா, “சித்தார்த்..” என்றழைத்தவளின் குரல்கேட்டு மற்ற இருவரும் திரும்பிப் பார்த்தனர்.

“என்னோட அம்மா உங்கம்மா ஆகலாம். ஆனா என்னைக்குமே உங்கம்மா என்னோட அம்மா ஆக முடியாது..” என்று கூறிய மகளின் கம்பீரமான பேச்சில் பூரித்துப் போனது தாய் உள்ளம்.

மேகா கணவனைப் பார்க்கக் குறுஞ்சிரிப்புடன் கண்ணாடியைச் சரி செய்தான் முகிலன் கர்வத்துடன்!

“நீங்கச் சொன்னது சரிதான் தர்ஷினி..” என்ற சித்தார்த் பார்வை இப்பொழுது முகிலனின் மீது படிந்தது.

“உங்களை இப்படித்தான் வளர்க்க போறாரு உங்க அப்பான்னு எங்க அம்மாவுக்கு நீங்கப் பிறந்த அன்னைக்கே தெரியும். அதன் உங்க அப்பாகிட்ட உங்களைத் தைரியமாக விட்டுட்டு வந்துட்டாங்க..” என்றவன் நிறுத்திவிட்டு தாயின் தோளில் கைப்போட்டு நின்றான்.

“இவங்க எனக்குக் கடவுள் கொடுத்த பரிசு. அதை நீங்கக் கேட்டதும் நான் கொடுப்பேன்னு நீங்க நினைச்சா அது முட்டாள்தனம்..” என்ற சித்தார்த் தாயின் பக்கம் திரும்பினான்.

“அன்னைக்கு நீங்கக் சொன்னப்போ நான் நம்பலம்மா. இன்னைக்கு நான் நம்பறேன். உங்களோட கணிப்பு எப்பவும் சரியாக இருக்குன்னு..” என்றான் சித்தார்த்.

மேகாவின் வாழ்க்கை அனைத்தும் அவனுக்கே தெரியும் என்பதை உணர்த்த அவனின் பேச்சே போதுமானதாக இருந்தது. அவளின் வளர்ப்பில் தனி கம்பீரம் இருப்பதை பார்வையால் உணர்ந்தான்.

சித்தார்த் பேச்சில் கவரப்பட்ட முகிலன், ‘உன்னோட வளர்ப்பே தனிதான்..’ என்று பார்வையால் அவளுக்குத் தெரியபடுத்தவே கர்வபுன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டவளிடம் கடைசியாக ஒரே கேள்வியை மட்டும் கேட்டான் முகிலன்.

“பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு வந்த மின்மினியே உன்னோட ஆசைதான் என்னன்னு சொல்லாமல் போறீயே..” என்று குறும்புடன் கண்சிமிட்டினான்.

“என்னோட ஆசை தாய், தந்தையின் கரங்களில் பாதுக்காப்பாக வளரனும் என்றது என்னோட சின்ன வயசு ஆசை..” என்றவள் குறும்புடன் புன்னகைத்து அவனைப் போலக் கண்சிமிட்டினாள்.

“அது பொய்..” என்று சொல்லி வாய்விட்டுச் சிரித்தான் முகிலன்.

அவன் கண்டுகொண்டான் என்று உணர்ந்து அவளும், “என்னோட மனசை புரிந்து என்னைக் காதலோடு கரம்பிடித்தவனுடன் கடைசி வரை இணை பிரியாமல் வாழனும் என்பது என்னோட ஆசை..” என்றவளின் பார்வை அவனின் மீது நிலைத்து நின்றது.

“அது நடக்கல இல்ல..” என்று முகிலனுக்கு மட்டும் புரியும் வண்ணம், ‘எனக்கு என்னோட ஆசை நிறைவேறிவிட்டது. இந்தக் கண்ணனை மனதிற்குள் நேசித்தபடியே நாட்களைக் கடந்துவிட்டாள் உன் மீரா..’  தன் பதிலைப் பார்வையில் கூறினாள்.

அவளின் காதலை அவளின் பார்வையில் உணர்ந்த முகிலனின் முகத்தில் நிறைவான புன்னகை தவழ்ந்தது. மேகா அவளின் வழியில் திரும்பிச்செல்ல, சித்தார்த் தாயைப் பின்தொடர்ந்தான்.

“நீங்க வாங்கப்பா..” என்று தந்தையும் மகளும் அதற்கு எதிரே இருந்த திசையில் நடந்தனர்.

அப்பொழுது ஹாஸ்பிட்டலின் உள்ளிருந்து வெளியே வந்த ஒருவனின் செல்போனிலிருந்து கசிந்த பாடல் வரிகள் முகிலன், மேகாவின் காதுகளை எட்டியது..

நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்..

சேரும் நேரம் வந்தது மீது தூரம் பாதியில்..

பாதை ஒன்று ஆன போதும் திசைகள் வேற அம்மா..

உனது பாதை வேறு எனது பாதை வேற அம்மா..

மீராவின் கண்ணன் மீராவிடமே..

எனதாருயிர் ஜீவன் என்னை ஆண்டாளே..” என்ற வரிகளைக்கேட்டு இருவரும் திரும்பிப் பார்க்க அவர்களின் பார்வை ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டது.

ஒரு புன்னகையுடன் சின்னத் தலையசைத்துடன் இருவரும் பார்வையை விலக்கிவிட்டு அவரவர் திசையில் நடந்து சென்றனர்.

இருவரும் சிலகாலங்கள் சேர்ந்து வாழ்ந்தபோது அவர்களின் மனம் ஒன்றிணைய மறுத்தது. அதே பிரிந்தபிறகு இருவரின் மனமும் வாழ்க்கை என்ற ஒரே பாதையில் பயணித்தது.

இருவரும் இணைந்து காதலுடன் வந்து பிரிவதை விட, இருவரும் பிரிந்து காதலோடு வாழ வேண்டும் என்று வாழ்ந்து வெற்றியும் கண்டனர்.வாழ்க்கை மிகவும் வினோதமான பாதை!

வாழ்க்கை என்ற பாதையில் மின்மினியின் ஆசைகள் எல்லாமே நினைத்தும் நடப்பதில்லை. அது நடக்கும்போது காலம் நம் கையில் இருப்பதில்லை..

மின்மினி போல மின்னி மறையும் மறையும் ஆசைகள் என்று அவள் அன்று சொன்ன வார்த்தை அவளின் மனதில் காதல் என்ற விதையாக விழுந்ததில் அவளின் ஆசையும் நிறைவேறியது.

பிரிவு என்பது முடிவு அல்ல. நல்ல ஆரம்பத்தின் சிறிய தொடக்கமே!

 

error: Content is protected !!