Maane – 12

Maane – 12
அத்தியாயம் – 12
அவன் சந்தோஷத்தில் துள்ளி குதிப்பதை கண்டு அவளின் முகம் பூவாக மலர்ந்தது. தன் தோழியை நேரில் கண்ட சந்தோஷத்தில் விஷ்வாவின் கோபம் எல்லாம் தற்காலிகமாக பின்னுக்கு தள்ளபட்டது.
“ஏய் எதுக்குடா இப்படி கத்தி ஊரைக் கூட்டுற?” அவள் வழக்கம்போலவே அவனை வம்பிற்கு இழுத்தாள்.
“இதையெல்லாம் நீ கண்டுக்காத மானும்மா.. நான் இத்தனை வருடத்திற்கு பிறகு இன்னைக்குதான் ரொம்ப சந்தோசமாக இருக்கேன்..” விரிந்த புன்னகையுடன் கூறியவன் அவளின் தோளில் மாட்டபட்டிருந்த பேக்கை வாங்கி தோளில் மாட்டிக் கொண்டான்.
அவள் சிரிப்புடன் அவனின் கையைக் கோர்த்து கொள்ள, “எனக்கே உன்னை அடையாளம் தெரியல.. ஆமா நீ எப்படி என்னை அடையாளம் கண்டுபிடிச்ச மானு..” என்று விளக்கம் கேட்டான்.
“அதுவா உங்க அம்மா இரயில் ஏறுவதைப் பார்த்தேன். நீ அவங்களோட பேசவும், நீயாக இருக்கோமோ என்ற சந்தேகத்தில் தான் பேசினேன்..” என்றவள் காரணத்தை தெளிவாக சொல்லி முடிக்கும்போது இருவரும் காரின் அருகே வந்தனர்.
விஷ்வா அவளின் பேக்கை பின் சீட்டில் வைப்பதை கண்டு, “காரில் போறோமா?” புருவம் சுருக்கி யோசித்துவிட்டு, “வேண்டாம் விஷ்வா.. இப்படியே பொடிநடையாக நம்ம வீடுக்கு போலாமே..”சலுகையோடு சிணுங்கியவளை முறைத்தான் விஷ்வா.
“வீடு பக்கத்தில் இருக்குன்னு நினைப்பா உனக்கு? நாளைக்கு சைக்கிளில் ஊரையே சுத்தலாம்.. இப்போ காரில் ஏறும்மா..” என்று கையெடுத்து கும்பிட்டவனை பார்த்து கலகலவென்று சிரித்தபடி காரின் முன்பக்கம் கதவை திறந்து ஏறி அமரவே காரை எடுத்தான்.
அவள் வெளிப்புறம் வேடிக்கைப் பார்க்க, “சிங்கார சென்னை எல்லாம் எப்படி இருக்கு? இன்னும் அப்பா அங்கேதான் இருக்காரா? எப்போ இங்கே வர போறீங்க?” சாலையில் பார்வையை பதித்தபடி அவளிடம் கேள்விகளை அடுக்கினான் விஷ்வா.
“டேய் ஒரு நிமிஷத்தில் ஓராயிரம் கேள்வி கேட்டா நான் எப்படியா பதில் சொல்வேன். விஷ்வா நீ இவ்வளவு பேசுவியா.. நீ வளரும்போது வாயும் இரண்டு இன்ச் சேர்ந்து வளர்ந்துவிட்டது” வியப்புடன் விழி விரிய பார்த்தவளுக்கு பதில் சொல்லமல் காரை செலுத்தினான்.
இத்தனை வருடம் கழித்து பார்த்த நண்பனிடம் பொய் சொல்ல பிடிக்காமல், “சென்னையில் படிப்பை முடிச்சதும் அப்பா என்னை கொழும்பு கூட்டிட்டு வந்துட்டார்” என்றாள்.
“ஓ இப்போ இங்கே வந்து எத்தனை நாளாச்சு?” சாதாரணமாக கேட்டான்.
“அதையேன்டா கேட்கிற? கொழும்பு வந்து செட்டில் ஆகி ஒரு வருஷமாச்சு. ஆனால் இன்னைக்கு தான் அந்த காட்டுப்பூனை லீவு கொடுத்துச்சு. அதன் உடனே இங்கே கிளம்பி வந்துட்டேன்” என்றவள் முடிக்க, “வாட்?!” என்றபடி காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.
அதுவரை சந்தோசத்தில் பளிச்சென்று இருந்த முகத்தில் மெல்ல கடுமை ஏறிடவே, “ஒரு வருஷத்தில் இப்போதான் உனக்கு லீவ் கொடுத்தாங்களா? ஏன் மானு இப்படி பொய் சொல்ற? சென்னையிலிருந்து கொழும்பு வந்ததை இடையே ஒருமுறை வந்துட்டு போக நேரமில்லையா? ஆமா நீ என்னை நண்பனாக நினைச்சிருந்தா நேரில் வந்திருப்பல்ல” என்று முறுக்கிக்கொண்டு வேறுபுறம் முகத்தை திருப்பினான்.
அவன் தாயிடம் காட்டும் அதே கோபத்தை அவளின் மீது காட்டினான். இதில் கொடுமையாக விஷயம் அதை அவனே உணரவில்லை என்பதுதான்.
ஆனால் அவனின் பேச்சில் இருந்த கோபம் புரிந்தபோது, ‘இவ்வளவு விரக்தியுடன் பேசுகிறானே.. ஐயோ நாங்க மூணு பேரும் பிரிஞ்சி போகாமல் இருந்திருந்தால் எல்லாம் நல்லதாக நடந்திருக்குமோ?’ என்று எண்ணி தவித்தது பெண்ணின் உள்ளம்.
“விஷ்வா நீயாவது என்னை புரிஞ்சிக்கோ.. இந்த ஒரு வருஷத்தில் என்னன்னவோ நடந்துபோச்சு. வீட்டுக்குப் போனதும் எல்லாமே தெளிவாக சொல்றேன். பிளீஸ் கோவிச்சுக்காமல் வண்டியை எடுடா. பசி வயிற்றை கிள்ளுது” என்றாள் அவள் பாவமாக.
உடனே காரை எடுத்த விஷ்வா அமைதியாக வந்தபோது அவனின் முகத்தில் இருந்த சிடுசிடுப்பை கவனித்தவள் அதை கலைக்கும் விதமாக, “நீ இப்போ என்னடா பண்ணிட்டு இருக்கிற” என்று கேட்டாள்.
“பார்த்த தெரியல கார் ஓட்டிட்டு இருக்கேன்” என்று கடுப்படித்தான்.
அவனை கோபத்துடன் முறைத்தவள், “அது எனக்கு தெரியுது. இப்போ படிப்பு முடிச்சிட்டு வேலைக்குப் போயிட்டு இருக்கிறாயா?” என்றாள் வேலையில் அழுத்தம் கொடுத்து.
அவன் ஆமோதிப்பது போல தலையசைக்கவே, ‘இன்னும் கோபம் குறையல போலவே’ என்று நினைத்துக்கொண்டு, “நான் எதுவுமே கேட்கல. நீ காரையே ஓட்டு” என்று சொல்லிவிட்டு வெளிப்புறம் வேடிக்கைப் பார்க்க தொடங்கிவிட்டாள் மித்ரா.
சிறிதுநேரம் அமைதியில் கழியவே காரை நிறுத்திவிட்டு, “மானு வீடு வந்துவிட்டது இறங்கு” என்றான்.
அப்போதுதான் வந்திருக்கும் இடத்தை கவனித்தவள், “என்னடா உங்க அம்மாவோட கஸ்தூரி பாட்டி வீட்டுக்கு பக்கத்தில் தானே இருந்தீங்க? இப்போ என்ன இங்கே கூட்டிட்டு வந்திருக்கிற?” என்று கேட்டபடியே காரின் கதவுகளைத் திறந்து இறங்கினாள் மித்ரா.
“அது அம்மா வீடு” என்று சொல்லிவிட்டு வீட்டின் கதவுகளைத் திறந்தவனை விநோதமாக பார்த்தபடி வாசலில் நின்றிருந்தாள் மித்ரா.
அதற்குமேல் கோபத்தை இழுத்துபிடிக்க முடியாமல், “நான் படிப்பை முடிக்கும் வரை அம்மாவோடு தான் இருந்தேன் மானு. அப்புறம் வேலை கிடைத்தபிறகு அவங்க என்னை அப்பாவோடு ஒப்பிட்டு தப்பாக பேச தொடங்கினாங்க. சரியோ தவறோ ஒருத்தரை நேருக்கு நேர் பேசிட்டா யாருக்கும் பிரச்சனை இல்ல. ஆனால் இவங்க பேசுவதுகேட்டு வாழ்க்கையே வெறுப்பாகிருச்சு. அதுதான் இங்கே தனியாக வீடு எடுத்து தங்கிட்டேன்” என்று தன் நிலையைத் தெளிவாக விளக்கிவிட்டு அவளின் பொருட்களை எடுத்து சென்று வீட்டிற்குள் வைத்தான்.
விஷ்வாவின் இந்நிலை கண்டு அவளின் மனதில் பாரம் ஏறியது. ஒருபக்கம் அங்கே இந்தரின் நிலையோடு இதை ஒப்பிடும்போது அவன் எடுத்த முடிவு சரியென்று தோன்றியது.
அவள் சிந்தனையோடு வீட்டிற்குள் நுழையவே, “மரவள்ளி கிழங்கு சூட இருக்கு சாப்பிடுறீயா?” என்று அக்கறையோடு கேட்கவே அவளும் ஒப்புதலாக தலையசைத்தாள். அவன் வேலையைத் தொடர வீட்டைச் சுற்றி பார்வையைச் சுழலவிட்டாள்.
ஹால், படுக்கையறை, சமையலறையுடன் கூடிய வீட்டை மிகவும் நேர்த்தியாக பரமரித்திருந்தான். அதே நேரத்தில் அவனின் செல்போன் சிணுங்கிடவே அதை எடுத்து பேசியபடி இருவருக்கும் காபி கலக்கி எடுத்துக்கொண்டு வெளியே வரும்போது சில்லென்று மழை பொழிய தொடங்கியது.
“மித்ரா அங்கே பின்னாடி பாத்ரூம் இருக்கு. முதலில் போய் முகம் கழுவிட்டு வா..” என்று அவளை அங்கிருந்து அனுப்பியவன் தன் நண்பனுக்கு அழைத்தான்.
மறுப்பக்கம் போன் எடுக்கபட்டவுடன், “டேய் உங்க அம்மாவிடம் சொல்லி பக்கத்தில் இருக்கும் பாட்டி வீட்டைச் சுத்தம் பண்ண சொல்லுடா. கஸ்தூரி பாட்டியின் பேத்தி ஊரிலிருந்து வந்திருக்கிறாள். அவ தங்குவதற்கு என்னன்ன வசதி வேணுமோ அதெல்லாம் செய்” என்று அவனுக்கு கட்டளையிட்டுவிட்டு போனை வைக்கும்போது மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தாள்
“உனக்கு காஃபி பிடிக்கும் இல்ல” என்றவன் டைனிங் டேபிளில் வைத்துவிட்டு, “தேங்க்ஸ் விஷ்வா” அவன் கொடுத்த காஃபியை அவள் ரசித்து பருகியபடி, மரவள்ளி கிழங்கையும் ருசிபார்த்தாள்.
அவன் எதுவும் பேசாமல் இருப்பதை கவனித்த மித்ரா, “என்னடா எதுவும் பேசாமல் இருக்கிற? என் விஷ்வா படபடன்னு பேசுவானே” என்றவள் யோசிப்பது போல பாவனையோடு அவனை ஓரவிழியால் பார்த்தாள்.
சிறிதுநேரம் அமைதிக்குப் பிறகு, “சாரி மானு. அம்மாவோட பேச்சை சகிக்க முடியாமல் அவங்களை பயமில்லாமல் அதட்ட கோபத்தை வளர்த்துகிட்டேன். அதுமட்டும் இல்லாமல் கேள்வி கேட்டே இருப்பதால் என் இயல்பே மாறிபோச்சு. நீ கொழும்பு வந்து ஒரு வருடம் ஆகிருச்சு சொன்னதும் என்னையும் அறியாமல் கோபம் வந்துடுச்சு” தன்னிலை விளக்கம் கொடுத்தான்.
விஷ்வா தன் இயல்பைத் தொலைத்துவிட்டு இருப்பதை கண்டு மனம் வருந்திய மித்ரா, “சரிவிடுடா. நீ யாரிடம் கோபபட்ட என்னிடம்தானே?! அதுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத விளக்கம்” என்று அந்த பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்தவள் மரவள்ளிக்கிழங்கை சாப்பிட தொடங்கினாள்.
“ஏய் என்னடி இவ்வளவு கம்மியா சாப்பிடுற? நான் செய்த சமையல் அவ்வளவு மோசமாகவா இருக்கு” என்றவன் அவளின் தட்டைப் பறித்து ஊட்டிவிட தொடங்கினான்.
அவனின் செயலை ஆச்சர்யத்துடன் பார்த்தவள், “இதுதான் என் விஷ்வா” என்று சொல்லிவிட்டு அவன் ஊட்டிவிட சாப்பிட்டு முடித்தவள், “நானே செய்து சாப்பிட்டு நாக்கு செத்துப்போச்சு விஷ்வா. அதனால் ஒருவாரம் உன்கையில் சாப்பிட்டு உடம்பை தேத்திக்கிட்டு போய்தான் அவனோட மண்டையை உடைக்கணும்” என்றாள் தீவிரமான குரலில்.
அவளின் விளக்கத்தைக் கேட்டு வாய்விட்டு சிரித்தவன், “உன் கையில் அடிவாங்க காத்திருக்கும் அந்த மகராசன் யாரும்மா” என்று பரிதமாககே கேட்டான் விஷ்வா.
“எனக்கு ஒருத்தனை ரொம்ப பிடிச்சிருக்குன்னு நேரில் போய் லவ் சொன்னேன். ஆனால் அவன் என்னையே வேண்டான்னு சொல்லிட்டான் விஷ்வா. அவன் என்னைக் காதலிக்கல என்றாலும் சரி போடன்னு விட்டுட்டு வந்திருப்பேன். அவன் என்னை ரொம்ப லவ் பண்றான். என்னை நினைக்காதேன்னு சொன்னதுக்கே அதுக்கு விஷத்தை கொடுத்து கொன்னுட்டு போயிருன்னு சொல்றான்.” அவள் பெயரைக் குறிப்பிடாமல் விஷயத்தை விரிவாக விளக்கிட அவளை விநோதமாக பார்த்தான் விஷ்வா.
அவனின் பார்வைக்கான அர்த்தம் புரியாமல், “என்ன விஷ்வா” என்றாள்.
“இல்ல நீ என் அண்ணாவைக் கொழும்பில் பார்த்தியா? அவங்கிட்டதான் இப்போ காதலிக்கிறேன்னு சொல்லிட்டு வந்திருக்கிறாயா?” ஓரளவு விஷயத்தை யூகித்து கேட்ட நண்பனை மனதிற்குள் மெச்சிக்கொண்டு, “அவனை நான் பார்க்கவே இல்ல விஷ்வா” என்றாள் சீரியசான முகத்துடன்.
“ஓ” என்று விஷயத்தை உள்வாங்கிய விஷ்வா, “சரி பரவல்ல. இப்போ உன் ஆளு என்ன சொல்றாரு” என்று பேச்சை திசை திருப்பினான்.
“நான்தான் சொன்னேனே” அவள் மீண்டும் நினைவுபடுத்திடவே, “இப்போ இதுக்குதான் இங்கே வந்தீயா?” சந்தேகத்துடன் அவளை பார்த்தபடி அவளுக்கு ஊட்டி விட்டான்.
அவனைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டி, “எனக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை என் உயிர் நண்பனிடம்தானே சொல்ல முடியும்? அதுதான் உன்னைப் பார்க்க ஓடி வந்துட்டேன்” என்றவள் ஏற்ற இறக்கத்துடன் சொல்லவே, “வாலு!” என்று அவளின் தலையைச் செல்லமாக கலைத்துவிட்டான்.
“பீம்பாய்.. பீம்பாய்.. நீதான் ஜிம் எல்லாம் போய் பாடியில் ஆம்ஸ் எல்லாமே ஏற்றி வைத்திருக்கிற இல்ல. அவன் தலையில் நாலுப்போட்டு என் கழுத்தில் தாலிகட்ட வை பீம்பாய். நான் அவனை கண் கலங்காமல் பார்த்துக்கறேன்” என்று சிரித்தபடி அவள் சொல்லவே தன்னை மீறி சிரித்தான் விஷ்வா.
“ஏண்டி உன் கல்யாணத்தில் கூட இப்படியொரு கலாட்டா செய்யணும்னு எத்தனை நாள் உட்கார்ந்து பிளான் போட்ட” என்றவன் காலியான பாத்திரத்தை சிங்கிள் போட்டுவிட்டு கையை கழுவிவிட்டு வெளியே வந்தான்.
அவனின் சிரித்த முகத்தை ரசித்தபடி, “ஒரு எட்டு.. இல்ல ஒன்பது வருஷமா இதே யோசனையில்தான் இருக்கேன்” என்றவளின் மீது கோபமே வரவில்லை விஷ்வாவிற்கு.
இத்தனை நாளாக கோபத்தை நெஞ்சுக்குள் வைத்துகொண்டு சிரிக்க கஷ்டப்பட்டவன், “சத்தியமா சொல்றேன் மித்ரா. அவன் போன ஜென்மத்தில் ரொம்ப பாவம் பண்ணிருப்பான் போல. உன்னை கல்யாணம் பண்ணி என்னவெல்லாம் அனுபவிக்கணும்னு அவன் தலையில் எழுதி இருக்கோ” என்று சொன்னபடி மீண்டும் அவளின் எதிரே அமர்ந்தான்.
“அதுதான் நீயே சொல்லிட்டியே போன ஜென்மத்தில் செய்த பாவம்னு. இதுக்குமேல் எதுக்குடா தேவையில்லாமல் பேசற. எனக்கு அவன் வேணும். அவனை நீ கடத்திட்டு இங்கே வந்துரு. நம்ம ரம்போட ஆஞ்சிநேயர் கோவிலில் வைத்து நான் அவனைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்” அவள் திட்டம்போட்டு அவனை ஆர்வமாகப் பார்க்க அவனோ சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டுக் கொண்டிருந்தான்.
அவன் சிரிப்பை அடக்க முயற்சி செய்வதை கவனித்தவள், “விஷ்வா” என்று கத்தினாள் கோபத்துடன்.
அவளை கையெடுத்து கும்பிட்ட விஷ்வா, “ஹா.. ஹா.. அடியே ஆஞ்சிநேயர் கட்ட பிரம்மச்சாரி. அவர் கோவிலில் ஒரு பிரம்மச்சாரியோட வாழ்க்கையைத் தீர்த்து கட்டிட இவ்வளவு வேகமா பிளான் போடுறீயே.. உன்னையெல்லாம் என்னடி பண்றது” என்றவன் வயிற்றை பிடித்துகொண்டு சிரிக்க தொடங்கினான்.
“அவரு கல்யாணம் பண்ணாமல் இருந்தா அதுக்கு நான்தான் காரணமா? நீ சும்மா ஆஞ்சிநேயருக்கு சப்போர்ட் பண்ணாதே” என்று கடுப்படிக்க அவனின் சிரிப்பு பீறிட்டுக் கிளம்பியது.
“மானு சத்தியமா முடியலடி. இப்போ உனக்கு அவனை கல்யாணம் பண்ணி வைக்கணும் அவ்வளவு தானே?” என்றவன் கேட்க அவளின் தலை வேகமாக ஆடி ஆமோதித்தது.
“சரி நானே உங்க கல்யாணத்திற்கு சாட்சி கையெழுத்து போடுறேன் போதுமா? வீட்டுக்கு கிளம்பலாம் வா” என்றவன் அவளின் பேக்கை எடுத்துகொண்டு முன்னே நடந்தான்.
அப்போதுதான் வீட்டிற்கே போகவில்லை என்ற எண்ணம் வரவே, “ஐயோ இனிமேல் போய் எல்லாம் சுத்தம் செய்யறதுக்குள் விடிந்து வெள்ளை கோழி கூவிடும்” என்று சலித்தபடி அவனின் பின்னோடு நடந்தாள்.
இருவரும் வெளியே வர குளிர் உடலை உறைய வைத்துவிடும் போல இருந்தது. அவள் கையைக் குறுக்கிக்கொண்டு வெளியே வரவே, “ஒரு நிமிஷம்” என்றவன் வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு அவளுடன் இணைந்து நடந்தான்.
சிறிதுநேரம் இருவரும் அமைதியாக வரவே, “உன்னைப் பார்க்க ஜித்து வரவே இல்லையாடா” என்று மெல்லிய குரலில் தயக்கத்துடன் கேட்டாள்.
சட்டென்று அவனின் நடை தடைபடவே, “அண்ணா என்னைப் பார்க்க வரவே இல்ல மித்து” என்றவனுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று அவளுக்கு தெரியவில்லை. அவளால்தானே அவன் இன்றுவரை தன் உடன்பிறந்தவனை பார்க்கக் கூட சொந்த ஊருக்கு வராமல் இருக்கிறான் என்ற கழிவிரக்கம் அவளை மௌனமாக்கியது.
அவள் அதிர்ச்சியுடன் விஷ்வாவின் கைகளைப் பிடிக்க, அதில் சுயநினைவு அடைந்தவன், “எல்லாமே எங்க அப்பா, அம்மா பண்ணுகின்ற வேலை.. அவங்க இருவரும் சேர்ந்து இருந்தால் எங்க வாழ்க்கையும் இன்னைக்கு நன்றாக இருந்திருக்கும். இப்படி வெறுப்பு, விரக்தி, கோபம்னு ஆளே மாறிபோகும் அளவிற்கு நான் இருந்திருக்க மாட்டேன்” என்றவன் தன்னை மீட்டுக்கொண்டு முன்னே நடந்தான்.
மறுப்பேச்சு இல்லாமல் அவள் பின்தொடரவே, “மித்து வீட்டில் எல்லாமே ஏற்பாடு செய்ய சொல்லிட்டேன். வீட்டை சுத்தம்பண்ணி வைத்திருப்பாங்க” அவன் சொல்லும்போதே வீட்டிலிருந்து இருவர் வெளியே வருவதைக் கவனித்தாள் மித்ரா.
அவனிடம் கொடுத்துவிட்டு, “நீ சொன்ன மாதிரி வேலையை முடிச்சிட்டேன்” என்றவன் சாவியைக் கொடுத்துவிட்டு கிளம்பினான்.
மித்ராவிடம் வீட்டின் சாவியைக் கொடுத்து, “நீ ரயிலில் வந்ததில் களைப்பா இருந்திருப்ப. முதலில் போய் குளிச்சிட்டு நிம்மதியாகத் தூங்கு. நாளைக்கு சமையல் எதுவும் செய்யாதே. நான் வீட்டிலிருந்து கொண்டு வரேன் இருவரும் சாப்பிடலாம்” என்றவன் அவளிடம் விடைபெற்று கிளம்பினான்.
அவனை பார்த்தபடி நின்ற மித்ரா, ‘இரண்டு பேரையும் இயல்புக்கு கொண்டு வரணும். ஜித்துவை கல்யாணம் ஆனபிறகு அவனை சரியாக்கிவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கு. விஷ்வாவின் வாழ்க்கையை இப்படியே விட முடியாதே’ என்ற சிந்தனையோடு உறங்க சென்றாள்.