நினைவு – 19

eiE6SA598903-e4026749

நினைவு – 19

அர்ஜுன் கண்களை மூடி மயங்கி சரிந்ததுமே ஹரிணி பதட்டத்துடன் அவனது கன்னத்தில் தட்ட வருணோ அவனை தன் கைகளில் ஏந்திக் கொண்டு அவசரமாக பார்க்கிங்கை நோக்கி விரைந்து சென்றான்.

ஹரிணியை அந்த சேலையில் பார்த்ததுமே அர்ஜுனிடம் வித்தியாசமான நடவடிக்கைகள் பிரதிபலிக்கும் என்பது அவனுக்கு முன்பே தெரிந்திருந்தாலும் இப்போது அதனை நேரடியாக பார்க்கும் போது அவனால் அதை இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

வைத்தியர் இளங்கோ ஏற்கனவே அவர்கள் இருவரையும் அன்று சந்திப்பதற்கு நேரம் வழங்கி இருந்ததனால் தன் காரை அவர் இருக்கும் வைத்தியசாலையை நோக்கி செலுத்தியவன் பதட்டத்துடன் அவரது கையை பிடித்து கொண்டு நின்றான்.

“டாக்டர் அர்ஜுனுக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக்கோங்க! அவனுக்கு ஏதாவது ஒன்னு நடந்தால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது அவன் தான் எனக்கு முக்கியம்! ப்ளீஸ் அவனை எப்படியாவது சரி செய்துடுங்க டாக்டர்!” வருண் கண்கள் கலங்க தவிப்போடு அவரைப் பார்த்து கூறவும் பதிலேதும் பேசாமல் அவனது தோளில் ஆதரவாக தட்டிக் கொடுத்தவர் அர்ஜுன் வைக்கப்பட்டிருந்த அறையை நோக்கி நகர்ந்து சென்றார்.

“ஏன் அர்ஜுனுக்கு மட்டும் இவ்வளவு கஷ்டத்தை கொடுக்குற கடவுளே? அவன் வாழ்க்கையில் சந்தோஷமே கிடைக்காதா? அவன் ஆசைப்பட்ட விடயங்களை எல்லாம் அவன் கிட்ட இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து எடுப்பதால் உனக்கு என்ன தான் கிடைக்கப்போகிறதோ?” ஆற்றாமை தாளாமல் அருகில் இருந்த சுவற்றில் ஓங்கி குத்தியவன் தன் தலையை பிடித்து கொண்டு அங்கிருந்த நாற்காலியில் சோர்வாக அமர்ந்து கொண்டான்.

“வருண் அண்ணா! அர்ஜுனுக்கு எதுவும் ஆகாது தானே?” கண்கள் கலங்க தன் உதட்டை கடித்து அழுகையை சிரமப்பட்டு அடக்கியபடி நின்று கொண்டிருந்த ஹரிணியை நிமிர்ந்து பார்த்தவன் அவளது ஓய்ந்து போன தோற்றத்தை பார்த்து மறுப்பாக தலையசைக்க

அவன் முன்னாலேயே மண்டியிட்டு அமர்ந்து கொண்டவள்
“எல்லாம் என்னால் தான்! நான் மட்டும் அர்ஜுன் வாழ்க்கையில் வராமலே போய் இருந்தால் இப்படி எல்லாம் நடந்து இருக்காது! அவங்க இப்போ எவ்வளவு சந்தோஷமாக இருந்து இருப்பாங்க! எல்லாம் என்னால் தானே!” தன் முகத்தை மூடிக் கொண்டு குலுங்கி குலுங்கி அழ

அவளது அருகில் வந்து அமர்ந்து கொண்டு அவளைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்ட விஷ்ணுப்பிரியா
“இப்போ நீ அழுதால் எல்லாம் சரியாகிவிடுமா சொல்லு ஹரிணி? வீணாக உன் உடம்பும், மனதும் தான் கெட்டுப் போகும் இன்னைக்கு வீட்டில் இருந்து வரும் போது என்ன சொன்ன உனக்கு வேறு எதுவும் தேவையில்லை அர்ஜுனோட இந்தக் காதல் மட்டும் போதும்னு சொன்ன தானே? அப்படி சொல்லிட்டு அவருக்கு உறுதுணையாக இருக்காமல் இப்படி அழுது வடிஞ்சுட்டு இருக்க!
முதல்ல கண்ணைத் துடை! எழுந்திரு! அர்ஜுன் சாருக்கு நீ தான் துணையாக இருந்து இனி வரப்போகும் பிரச்சினைகளை எல்லாம் சமாளிக்கணும் அதை விட்டுட்டு இப்படி அழுது அழுது இருந்தேன்னு வை அப்புறம் இரண்டு பேரும் சேர்ந்து சோக கீதம் தான் பாடணும் இப்படியே எல்லாவற்றுக்கும் உன்னையே குற்றம் சொல்லிட்டு இருந்தேனா நாளைக்கு அம்மா, அப்பா கிட்ட இதைப் பற்றி எல்லாம் எப்படி சொல்லி சமாளிப்ப? எழுந்திருச்சு வா இப்படி வந்து உட்காரு! முகத்தை துடைச்சுக்கோ வா!” அவளது தோளைப் பற்றி எழுப்பி அருகில் இருந்த நாற்காலி ஒன்றில் அமரச் செய்ய அவர்கள் எதிரில் அமர்ந்திருந்த வருணோ அவளது பேச்சையே கண் இமைக்காமல் எந்தவொரு அசைவும் இல்லாமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.

வயதில் வேண்டுமானால் அவள் அவர்களை விட சிறியவளாக இருக்கலாம் ஆனால் அவளது பேச்சு அதில் தெரியும் முதிர்ச்சி அவன் கூட அந்தளவிற்கு தைரியத்தை அந்த நேரத்தில் ஹரிணிக்கு கூறி இருப்பானா என்று தெரியாது அந்தளவிற்கு பக்குவம் இருந்தது அவளது பேச்சில்.

சிறிது கண்டிப்பும் அதே நேரமும் பாசமும், அன்பும் கலந்திருக்கும் அவளது பேச்சில் ஹரிணி தன் அழுகையை கை விட்டு விட்டு இயல்பாக அமர்ந்திருக்க வருணின் கண்களோ விஷ்ணுப்பிரியாவையே ஆராய்ச்சியாக அளவிட்டுக் கொண்டிருந்தது.

தாங்கள் கல்லூரி படிக்கும் காலத்தில் ஹரிணி எப்படியான முகத் தோற்றத்தில் இருந்தாலோ அதே மாதிரியான தோற்றத்தில் தான் இப்போது விஷ்ணுப்பிரியா இருந்தாள் ஆனால் ஹரிணியை விடவும் சற்று பூசினாற் போல இருந்தது அவள் தேகம்.

தன் அக்காவை இயல்பான மனநிலைக்கு கொண்டு வரும் நோக்கில் அவள் விடாது கதை பேசிக் கொண்டு இருக்க அதைப் பார்த்து கொண்டிருந்த வருண் அவர்களது பாசப் பிணைப்பை பார்த்து இயல்பாக புன்னகைத்த படியே அமர்ந்திருந்தான்.

அதற்கிடையில் வருணிற்கு சாவித்திரியிடமிருந்து இரண்டு, மூன்று முறை அழைப்புகளும், ஹரிணிக்கு ஜெயலஷ்மியிடமிருந்து பல அழைப்புகளும் வந்திருக்க அவர்களிடம் வெளியே இருப்பதாக சொல்லி சமாளித்திருந்தவர்கள் அர்ஜுன் மயக்கமடைந்து வைத்தியசாலையில் இருக்கும் விடயத்தை தெரிவித்திருக்கவில்லை.

வீணாக தங்கள் பெற்றோரை இந்த நேரத்தில் பதட்டம் அடையச் செய்ய வேண்டாம் என்று எண்ணியிருந்தவர்கள் வீட்டிற்கு சென்று நடந்த விடயங்களை பற்றி கூறலாம் என்று முடிவெடுத்திருந்தனர்.

மறுபுறம் வருண் இளங்கோ அர்ஜுன் வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து எப்போது வெளியே வருவார் என்ற சிந்தனையோடே வெகு நேரமாக அந்த அறையின் வாயிலைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அவர்கள் அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வது போல இரண்டு மணி நேரம் கழித்து அந்த அறைக்குள் இருந்து வெளியேறி வந்த வைத்தியர் இளங்கோ புன்னகை முகமாக வருணை வந்து ஆரத் தழுவிக் கொள்ள அவனோ குழப்பமாக அதே நேரம் ஆச்சரியமாக அவரைப் பார்த்து கொண்டு நின்றான்.

“டாக்டர் என்ன ஆச்சு? அர்ஜுன் நல்லா இருக்கான் தானே?”

“என்னப்பா நீ எப்ப பார்த்தாலும் இப்படியே கேட்குற? சந்தோஷமாக உன்னை வந்து கட்டிப் பிடித்து இருக்கேன் அப்போவும் நல்லதாக யோசிக்க மாட்டியா?”

“ஸாரி டாக்டர் ஏதோ ஒரு டென்ஷன் அதுதான்! அர்ஜுன் நல்லா இருக்கான் தானே?”

“நீ மாறமாட்ட! அதை விடு! அர்ஜுன் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கான் இன்னும் சொல்லப்போனால் உன்னுடைய இத்தனை வருடப் போராட்டம், தவிப்பு இது எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வந்தாச்சு!”

“அப்… அப்படின்னா அர்…ஜுனுக்கு எல்லாம் சரியாகிடுச்சா டாக்டர்?” தன் மனதிற்குள் எழுந்த உற்சாகமும், ஆர்வமும் தன் முகத்தில் அப்பட்டமாக தெரிய தன் எதிர்பார்ப்பு இல்லாமல் போய் விடக்கூடாதே என்ற எதிர்பார்ப்பாடு கேட்டவனின் தோளில் தன் கரத்தை ஆதரவாக வைத்தவர்

“அர்ஜுன் இப்போ பழைய அர்ஜுனாக மாறிட்டான் அதாவது அந்த விபத்தைப் பார்ப்பதற்கு முன்னாடி எப்படி நம்மைப் போல சாதாரண மனிதனாக இருந்தானோ அப்படியே இப்போ திரும்பி வந்துட்டான் இத்தனை நாள் எடுத்த ட்ரீட்மெண்ட், அந்த பொண்ணோட வருகை, உன்னோட கவனிப்பு இது எல்லாமே அவனை பழைய நிலைக்கு கொண்டு வந்துடுச்சு இனி அர்ஜுன் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதனாக இருப்பான்” என்று கூற

“டாக்டர்! தாங்க் யூ தாங்க் யூ சோ மச் டாக்டர்!” என்றவாறே அவரை இறுக அணைத்து விடுவித்தவன்

சந்தோஷம் தாளாமல் அவரைத் தூக்கி சுற்ற அவரோ
“அடேய் வருண் என்னை இறக்கி விடுடா! உன் நண்பன் குணமாகிட்டான்னு என்னை பெட்டில் படுக்க வைத்து விடுவ போல இருக்கு என்னை இறக்குடா!” பதட்டத்துடன் தன் தலையை பிடித்து கொண்டு அலற வாய் விட்டு சிரித்துக் கொண்டே அவரை இறக்கி விட்டவன் மீண்டும் ஒரு முறை அவரை இறுக அணைத்து விட்டே விடுவித்தான்.

“நான் போய் அர்ஜுனைப் பார்க்கவா டாக்டர்?” ஆவல் ததும்ப கேட்டவனை பார்த்து புன்னகைத்துக் கொண்டவர் அப்போதுதான் அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்த இரு பெண்களையும் திரும்பி பார்த்தார்.

“வருண் இது?”

“ஓஹ்! ரியலி சாரி டாக்டர் உங்க கிட்ட சொல்ல மறந்துவிட்டேன் இவங்க தான் ஹரிணி! அதாவது ஹரிணிப்பிரியா!”

“ஆஹ்! அர்ஜுனோட பிரியா! கரெக்டா?” வைத்தியர் இளங்கோவின் கேள்வியில் முகம் சிவக்க வெட்கத்தோடு அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவள்

“டாக்டர் நாங்க போய் அர்ஜுனைப் பார்க்கலாமா?” என்று கேட்கவும்

சிறிது நேரம் யோசனையுடன் தன் தாடையை நீவி விட்டு கொண்டவர்
“வருண் அன்ட் பிரியா நான் சொல்லப் போகும் விடயம் கொஞ்சம் உங்களுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும் ஆனாலும் சொல்லி தான் ஆகணும் வேறு வழி இல்லை! அர்ஜுனுக்கு எல்லாம் குணமாகி விட்டது என்பது உண்மை தான் இந்த ஒரு மணி நேரமும் அவருக்கு முழுமையாக செக்கப் அன்ட் ட்ரீட்மெண்ட் எல்லாம் பண்ணி பார்த்துட்டு தான் அவருக்கு குணமானதை கன்பர்ம் பண்ணிட்டு உங்களை நான் சந்திக்கவே வந்தேன் ஆனாலும் இன்னும் ஒரு சிக்கல் இருக்கு!”என்று கூற

“சிக்கலா? என்ன அது?” வருணும், ஹரிணியும் ஒருசேர அவரைப் பார்த்து வினவினர்.

“நான் உன் கிட்ட முன்னாடியே சொன்னது தான் வருண் அர்ஜுனுக்கு இந்த நிலைமை வர்றதுக்கு முதல் அவன் இறுதியாக சந்தித்த விஷயம் பிரியாவோட விபத்து! அந்த விபத்து வரைக்கும் தான் அவனுக்கு தெரியும் அதற்கு அப்புறம் அவன் இப்படி ஒரு நிலைமையில் இருந்ததோ மறுபடியும் பிரியாவை சந்தித்ததோ எதுவுமே அவனுக்கு நினைவில்லை அவனுக்கு பிரியா உயிரோடு இருக்கிறாளா? இல்லையான்னு கூட தெரியாது நாம என்ன சொல்ல போறோமோ அது தான் அவனுக்கு தெரியப் போகும் விடயம் அதனால் பழைய விடயங்களை எல்லாம் அர்ஜுன் கிட்ட சொல்லும் போது மொத்தமாக எல்லாவற்றையும் சொல்ல வேண்டாம் கொஞ்சம் கொஞ்சமாக அவராக கேட்கும் போது எடுத்து சொல்லுங்க அவரு புரிஞ்சுப்பாரு ஆனால் எல்லாவற்றிலும் பொறுமையும், கவனமும் ரொம்ப ரொம்ப அவசியம்
முதல் இருந்த நிலையை விட இப்போ தான் அர்ஜுனை ரொம்ப கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் சரியா? அர்ஜுனுக்கு இனி எந்த பிரச்சனையும் வர்றதுக்கு வாய்ப்பு இல்லை தான் இருந்தாலும் நம்ம எல்லோரையும் ஆட்டுவிக்கும் ஒரு சக்தி இருக்கு அதனால் எதற்கும் கவனமாக இருந்துக்கோ வருண்!” இளங்கோ பேசப் பேச ஒரு வித பதட்டத்துடன் அவரைப் பார்த்து கொண்டு நின்றவன் இறுதியாக அவர் சொன்ன அர்ஜுனுக்கு இனி எந்த பிரச்சனையும் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்ற வசனத்தை கேட்ட பின்பே சிறிது ஆசுவாசமாக உணர்ந்து கொண்டான்.

“நான் அர்ஜுனை நல்ல படியாக பார்த்து கொள்ளுவேன் டாக்டர்!” வருண் உறுதியான குரலில் புன்னகை முகமாக கூற

அவனது தோளில் தட்டிக் கொடுத்தவர்
“அது எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும் சரி நீங்க போய் அர்ஜுனைப் பாருங்க! கொஞ்ச நேரம் கழித்து அவனை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம்” என்று விட்டு அங்கிருந்து சென்றுவிட

அவனோ முகம் கொள்ளாப் புன்னகையுடன் அர்ஜுன் வைக்கப்பட்டிருந்த அறையை நோக்கி சென்று விட்டு பின்னர் சட்டென்று ஏதோ நினைவு வந்தவனாக
“டாக்டர்!” என்றவாறே இளங்கோவின் முன்னால் ஓடி வந்து நின்றான்.

“என்னாச்சு வருண்?”

“டாக்டர் ஹரிணியை அர்ஜுன் கிட்ட இப்போ அறிமுகப்படுத்துவதில் ஒரு சிக்கல் இருக்கு!”

“சிக்கலா? இது என்ன புதுக் குழப்பம்?”

“ஆமா டாக்டர் ஹரிணிக்கு ஆக்சிடென்ட் ஆன நேரம் முகத்திலும் நிறைய காயங்கள் வந்ததால் அவங்களுக்கு சர்ஜரி பண்ணி இருக்காங்க அதனால் அவங்க முகத் தோற்றம் நாங்க காலேஜில் பார்த்த போது இருந்த மாதிரி இல்லை அதனால் தான் நான் முதல் தடவை அவங்களை சந்தித்த போது அவங்களை அர்ஜுனோட பிரியா தான்னு அடையாளம் காண முடியல ஆனா அர்ஜுன் அவங்களை அந்த நிலைமையிலும் சரியாக அடையாளம் கண்டு கொண்டான் தான் இருந்தாலும் இப்போதும் அப்படியே அடையாளம் கண்டு கொள்ளுவானா? ஒரு வேளை அவன் அடையாளம் கண்டு கொள்ளா விட்டால்?”

“அட கடவுளே! இப்போ இது வேறயா? சரி பரவாயில்லை அது தான் அவங்க இப்போ வந்துட்டாங்க தானே? அர்ஜுன் கிட்ட மெல்ல மெல்ல அவங்க தான் பிரியான்னு எடுத்து சொல்லுவோம் எப்படியும் ஆக்சிடென்ட் ஆனது அவனுக்கு நினைவு இருக்கு தானே?”

“ஆனா டாக்டர்…”

“என்ன வருண் எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லு!”

“ஹரிணி நாங்க காலேஜில் பார்க்கும் போது எப்படி இருந்தாங்களோ அதே தோற்றத்தில் தான் அவங்க தங்கை இப்போ இருக்காங்க நான் கூட அவங்க தான் பிரியான்னு நினைத்து கொஞ்சம் கன்பியுஸ் ஆகிட்டேன் அதற்கு அப்புறம் தான் இந்த விடயம் எல்லாம் எனக்கு தெரிய வந்தது அது மட்டுமில்லாமல் ஹரிணிக்கும், எனக்கும்…” வருண் தான் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் தவிப்போடு அவரைப் பார்த்து கொண்டு நிற்க

அவனது கைகளை பிடித்து மெல்ல அழுத்தி கொடுத்தவர்
“எதுவாக இருந்தாலும் இப்போவே சொல்லிடு வருண் நீ தயங்கி தயங்கி இருப்பதால் எதுவும் மாறப் போவதில்லை” என்று கூற தன் கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு கொண்டவன் ஹரிணி மற்றும் விஷ்ணுப்பிரியாவை சந்தித்த நாள் முதல் இது நாள் வரை நடந்து முடிந்த விடயங்களை எல்லாம் கூற அவரோ அதை எல்லாம் கேட்டு தன் தலையில் கை வைத்து கொண்டு நின்றார்.

“ரொம்ப சுலபமாக தீர்க்க வேண்டிய விடயங்களை இப்படி இடியாப்பம் மாதிரி சிக்கல் ஆக்கி வைத்து இருக்கீங்களேப்பா! இப்போ பெரியவங்களை விடுங்க அவங்களை சமாளிக்கலாம் ஆனால் அர்ஜுன் அவனை எப்படி சரி பண்ணுவது? அவனோட பிரியாவை அவனுக்கு அடையாளம் சொல்லுவதிலேயே பெரிய பிரச்சினை வந்து இருக்குதுன்னு பார்த்தால் இப்போ நிச்சயதார்த்தம் வரைக்கும் வந்து வைத்து இருக்கீங்க!
நான் முற்றுப் புள்ளி வைத்து சுபம்ன்னு முடித்து வைக்கப் பார்த்த விஷயத்தை நீங்க காற்புள்ளி வைத்து தொடரும் ஆக்கி வைத்து இருக்கீங்க! இப்போ முன்னரை விடவும் ரொம்பவும் கவனமாக எதையும் பண்ண வேண்டும்” என்ற இளங்கோ வருணையும் அவன் பின்னால் தவிப்போடு தன் கைகளை கோர்ப்பதும், பிரிப்பதுமாக நின்று கொண்டிருந்த ஹரிணியையும், அவளது தோளில் கை வைத்து நின்ற விஷ்ணுப்பிரியாவையும் பார்த்து விட்டு

மீண்டும் அவனது புறம் திரும்பி
“வருண் நீ முதல்ல என் கூட வா! அதற்கு அப்புறம் ஒரு ஐந்து நிமிடம் கழித்து நான் சொன்ன பிறகு பிரியாவை வர சொல்லு” என்று கூற

“எந்த பிரியாவை டாக்டர்?” வருண் பாவமாக அவரைப் பார்த்து வினவினான்.

“என்னடா கேள்வி இது? அர்ஜுன் சொல்லுற பிரியாவை தான் ஏன் இங்க வேறு யாரும் பிரியா இருக்காங்களா என்ன?”

“ஆமா டாக்டர் இருக்காங்க! ஹரிணிப்பிரியாவோட தங்கை பேரு விஷ்ணுப்பிரியா அவங்களும் பிரியா தான்!”

“அட ராமா! என்னால முடியல வருண்! மனநோய்க்கு வைத்தியம் பார்க்குற நான் இப்போ அப்படி ஆகிடுவேன் போல இருக்கு!” இளங்கோ இயல்பாக சிரித்துக் கொண்டே கூற

அவரைப் பார்த்து சிறிது புன்னகைத்துக் கொண்டவன்
“அர்ஜுனைப் பார்க்கப் போகலாமா டாக்டர்?” என்று கேட்க அவனைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவர் முன்னால் நடந்து செல்ல அவனும் அவரைப் பின் தொடர்ந்து சென்றான்.

அர்ஜுன் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைவதற்கு முன்னர் ஹரிணியின் முன்னால் வந்து நின்று கொண்ட இளங்கோ
“நீங்க தானே பிரியா? ஐ மீன் அர்ஜுனோட பிரியா?” என்று கேட்கவும்

அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவள்
“நானும் உள்ளே வந்து அர்ஜுனைப் பார்க்கலாமா டாக்டர்?” என்று கேட்க

அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவர்
“முதல்ல நானும் வருணும் உள்ளே போறோம் நாங்க உள்ளே போய் சரியாக ஐந்தாவது நிமிஷம் நீங்க இரண்டு பேரும் ஒன்றாக உள்ளே வாங்க அதற்கு அப்புறம் தான் என்ன நடக்கும்னு எனக்கே தெரியும்” என்று விட்டு அந்த அறைக்குள் நுழைந்து விட வருண் அவளைப் பார்த்து கொண்டே அர்ஜுனைக் காண விரைந்து சென்றான்.

தன் இத்தனை வருட வாழ்க்கையில் என்னன்னவோ நடந்து இருந்தாலும் தான் எப்படியான ஒரு நிலையில் இருந்து மீண்டு வந்து இருக்கிறோம்? அந்த நிலைமையிலும் தனக்கு உறுதுணையாக தன் நண்பன் இருந்து இருக்கின்றானே? என்ற எண்ணத்தோடும் அர்ஜுன் அந்த விசாலமான அறையில் இருந்த கட்டிலில் கண் மூடி படுத்திருந்தான்.

தன் கண் முன்னால் நடந்த அந்த பாரிய விபத்தில் தன் காதல் ஒட்டுமொத்தமாக சுங்கத் சுக்கலாக நொறுங்கிப் போய் விட்டதே என்ற கவலையோடும், பிரியா இப்போது இருக்கின்றாளா? இல்லையா? என்ற யோசனையோடும் அர்ஜுனிருக்க இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் நடந்த விடயங்களை கொஞ்சம் கொஞ்சமாக வைத்தியர் இளங்கோ அவனிடம் பகிர்ந்து இருந்தார்.

அவனை எப்படி கையாள வேண்டும் என்பது அவருக்குத் தெரியுமாகையால் அவனிடம் பழைய விடயங்களை பகிர்ந்து கொள்ளுவதில் அவருக்கு எந்தவொரு சிக்கலும் இருக்கவில்லை வைத்தியக் கண்காணிப்பின் கீழ் தான் எல்லாவற்றையும் அவனிடம் அவர் பகிர்ந்து இருந்தார் அதிலும் பிரியா பற்றிய விடயங்களை தவிர்த்து.

அவருக்கு அந்த விடயத்தை பற்றி முழுமையாக தெரியாதிருந்தமையால் தான் அப்போதே அவர் அதைப் பற்றி அவனிடம் சொல்லி இருக்கவில்லை ஒரு வேளை முன்னரே இந்த பிரச்சினை, குழப்பங்கள் பற்றி அவருக்கு தெரிந்து இருந்தால் அவர் அதற்கான வழிமுறைகளை செய்து இருக்கக்கூடும் இருந்தாலும் இப்போதே அவர் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டதால் அவனைத் தன் கண்காணிப்பின் கீழ் வைத்து மீண்டும் பரிசோதிக்க அவர் எண்ணியிருந்தார்.

இத்தனை வருடங்களாக நடந்த எதையும் உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் இருந்து விட்டு சட்டென்று எல்லா விடயங்களையும் ஒன்றாக திணிக்க அவனது மனது ஒன்றும் இயந்திரம் இல்லையே!

வைத்தியாராக இருப்பது மட்டுமின்றி ஒரு மனிதனின் மனதைப் பற்றி பல வருடங்களாக படித்து கொண்டு இருப்பவர் அவர் அதனால் தான் அர்ஜுனின் சிகிச்சையில் அவர் இத்தனை நிதானத்தை கடைப்பிடித்தும் வருகிறார்.

எதுவாக இருந்தாலும் நல்லதே நடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அந்த அறைக் கதவை திறந்து கொண்டு வருணும் இளங்கோவும் உள் நுழைய அங்கே அர்ஜுன் பலவிதமான மன உளைச்சலோடு கண்களை மறைத்தவாறு தன் ஒற்றை கையை வைத்து கண் மூடி உறக்கத்தில் இருப்பது போல் படுத்திருக்க குரல் கம்ம நடை தடுமாற அவனருகில் வந்து நின்ற வருண்
“அ..ர்ஜு..அர்ஜுன்!” தவிப்போடு அழைக்க

அவனது குரல் கேட்ட அடுத்த கணமே தன் கையை விலக்கி கண்களை திறந்து கொண்டவன்
“வருண்!” என்ற கூவலோடு அவனை தாவி அணைத்துக் கொள்ள இருவரது கண்களுமோ விடாமல் கண்ணீரை வடிக்கத் தொடங்கியது.

“வருண்! எப்படிடா இருக்க? ஸாரிடா உங்க எல்லோரையும் ரொம்ப தவிக்க வைத்து விட்டேன் போல! அம்மா, அப்பா எல்லாம் எங்கே?” அர்ஜுனின் கேள்வியில் அதிர்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்த்தவன்

“ஐயோ! அம்மா கிட்ட சொல்ல மறந்தே போயிட்டேன் இரு இப்போவே போன் பண்ணி சொல்லுறேன்” என்றவாறே தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்த போனை எடுக்கப் போக

அவசரமாக அவனது கையை பிடித்து வேண்டாம் என்று தடுத்தவன்
“நான் இத்தனை பெரிய பிரச்சினையில் இருந்து வெளியேறி வந்து இருக்கேன் அதை போனில் சொல்லுறது சரி இல்லை நேராக வீட்டுக்கு போய் சொல்லலாம் சாவித்திரி ம்மா, ராமுப்பாக்கு ஒரு சர்ப்பரைஸாக இருக்கட்டும்” என்று கூற அவனது கூற்றில் கண்கள் கலங்க சிறு புன்னகையுடன் அவனைப் பார்த்து சரியென்று தலையசைத்தவன் மீண்டும் அவனை இறுக அணைத்து கொண்டான்.

சிறிது நேரம் நண்பர்கள் இடையே கனத்த அமைதி நிலவ அந்த அமைதியை கலைப்பது போல அவர்கள் முன்னால் வந்து நின்ற வைத்தியர் இளங்கோ
“அர்ஜுன் நீங்க என் கிட்ட ரொம்ப நேரமா ஒரு விடயத்தை பற்றி கேட்டீங்களே ஞாபகம் இருக்கா?” தன் கைக்கடிகாரத்தை திரும்பி பார்த்தபடியே கேட்க

அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவன்
“எஸ் டாக்டர் ரொம்ப நல்லா நினைவு இருக்கு! சில்..ஐ மீன் பிரியாவை பற்றி தான் கேட்டேன் டேய் வருண்! பிரியா எப்படி இருக்கா? அந்த ஆக்சிடென்டில் அவளுக்கு எதுவும் ஆகல தானே? அவ நல்லா இருக்காளா? அவ என்னைத் தேடி வந்தாளா? நான் அந்த நிலைமையில் இருந்ததைப் பார்த்து ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பா இல்லை? என்னடா நான் கேட்டுட்டே இருக்கேன் நீ எதுவும் பேசாமல் இருக்க?” வருணின் தோளில் செல்லமாக அடித்தபடியே கேட்க அவனோ தன் முன்னால் நின்று கொண்டிருந்த இளங்கோவைத் தவிப்போடு நிமிர்ந்து பார்த்தான்.

“என்னடா அமைதியாக…”

“எக்ஸ்கியூஸ் மீ டாக்டர்” அர்ஜுன் தன் கேள்வியை மறுபடியும் வருணைப் பார்த்து கேட்க போக அதேநேரம் அவன் பின்னால் இரு பெண்களின் குரல் கேட்டது.

அந்த இரு குரல்களில் ஒரு குரல் அவன் மனதிற்குள் ஆழப் பதிந்து போன குரல் ஆகையால்
“சில்லு!” உற்சாகமும், ஆனந்தமும் தாண்டவமாட சட்டென்று தன் பின்னால் திரும்பியவன் அந்த அறையின் வாயிலில் நின்று கொண்டிருந்த இரு பெண்களையும் பார்த்து குழப்பமடைந்து போய் நின்றான்…….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!