Maane – 17

Maane – 17
அத்தியாயம் – 17
விஷ்வா மற்றும் ரகுவரன் இருவரும் காரில் பயணிக்கும்போது அவரின் மனதில் இப்போது யாரின் வீட்டிற்கு அழைத்துச் செல்வர்கள் என்ற குழப்பம் எழுத்து. ஒருப்பக்கம் பாஸ்கர் வீட்டிற்கு சென்றால், ‘நீயேன் இங்கே வந்தே?’ என்று கேட்பார்.
மற்றொரு பக்கம்,‘ஏன் இன்னைக்குதான் என்னைக் கண்ணு தெரிந்ததா?’ வாசலில் நிற்க மரகதம் இரக்கமே இல்லாமல் பேசுவர்.
ஒவ்வொரு நாளும் பார்த்து பார்த்து வளர்த்த மகளின் நிலை இப்படியாகும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. தன் மகளைப் பற்றிய கவலையை மனதில் தேக்கி வைத்தபடி அமைதியாக இருந்தார் ரகுவரன்.
இந்தர்ஜித் – சங்கமித்ரா இருவரும் காரில் ஏறுவதற்கு முன்னரே வினோத்திடம் வீட்டின் சாவியைக் கேட்டு வாங்கிய சங்கமித்ரா அதை யாரும் அறியாதவண்ணம் சம்யுக்தாவின் கையில் திணித்து அர்த்தம் பொதிந்த பார்வையொன்றை வீசிவிட்டு வேகமாக காரில் ஏறியமர்ந்தாள்.
வினோத் காரை எடுக்கவே இருவரின் இடையே மௌனம் குடிகொண்டது. கார் வீட்டை நோக்கி பயணிக்க, வெளிப்புறம் வேடிக்கைப் பார்ப்பது போல திரும்பிய மித்ரா, ‘அண்ணா வீட்டு அட்ரஸ் அனுப்பு’ என்று வினோத் நம்பருக்கு ஒரு மெசேஜ் அனுப்பினாள்.
அவன் மெசேஜ் படித்தவுடன் கார் கண்ணாடியின் வழியாக பின்னாடிப் பார்தத்தவன்,‘உன் புருஷன் உனக்காக வாங்கிய புது வீட்டுக்குத்தான் போயிட்டு இருக்கோம். ஆமா ஏன் திடீர்னு ஏன் அட்ரஸ் கேட்கிற?’ என்று டைப் செய்து அனுப்பினான்.
அதை பார்த்தவுடன் அவளின் முகம் பூவாக மலர்ந்தபோதும், ‘எல்லாம் காரணமாத்தான் அண்ணா கேட்கிறேன் பிளீஸ் சொல்லு’ என்று கெஞ்சியவளுக்கு மறுப்பு சொல்லாமல் உடனே முகவரியை அனுப்பிவிட்டு சாலையில் தன் கவனத்தை திருப்பினான்.
உடனே அந்த முகவரியை குரூப்பில் ஷேர் செய்தவள் அடுத்தடுத்து செய்ய வேண்டிய அனைத்தையும் பட்டியலிட்டு அனுப்பிவிட்டு நிமிர்ந்தாள். காரில் ஏறியதில் இருந்து அவளின் நடவடிக்கையைக் கவனித்துக் கொண்டிருந்த இந்தர்ஜித் அவளை கேள்வியாக நோக்கினான்.
அவனின் பார்வை தன்மீது படிவத்தை உணர்ந்து, “ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேசிட்டு இருந்தேன் ஜித்து” என்று சிரித்த முகமாக கூறியவளின் கரங்களை தன் கரங்களுக்குள் கோர்த்து கொண்டான்.
அவள் திகைப்புடன் அவனைப் பார்க்க,“யாரின் மனசும் கஷ்டப்பட கூடாதுன்னு ஏதோ செய்யறன்னு புரியுது மித்து” என்றவனை தன்னை மறந்து பார்த்தாள் சங்கமித்ரா.
அவனின் பார்வை அவளின் விழிகளுக்குள் ஊடுருவிச் சென்றது. சட்டென்று மின்னல் தாக்கியதை போன்ற படபடப்புடன் அவள் அவனையே பார்த்தாள்.
இருவரின் மனம் மட்டும் மௌன பாசை பேசிக்கொண்டு இருக்க நிமிடங்கள் கரையத் தொடங்கியது. பார்வைகள் சொல்லாத பல விஷயங்களை அவனின் கைவிரல் அழுத்தங்கள் அவளுக்கு உணர்த்தியது. கோர்த்த கரங்கள் இணைந்தே இருப்பதைக் காட்டிய அவனின் தோள்களில் தோகையவள் சாய்ந்து கொண்டாள்.
இருதய துடிப்பில் காதல் என்னும் இசை மீட்டப்பட்டது. அதை ரசிக்கும்படி மௌனங்கள் அங்கே ஆட்சி செய்ய இரு உடல் ஒரு உயிர் என்ற நிலையில் இருந்த இருவரையும், “வீடு வந்துடுச்சு இறங்குங்க” என்றான் வினோத்.
அவனின் குரல்கேட்டு நடப்பிற்கு திரும்பிய இருவரின் கண்களும் சிரித்துக்கொள்ள காரின் கதவைத் திறந்து இறங்கினர். அவர்களின் பின்னோடு ரகுவரன் மற்றும் விஷ்வா இருவரும் வரவே, ‘பொண்ணுக்கு ஆரத்தி எடுக்கக்கூட ஒரு ஆள் இல்லையே’ என்று நினைத்து பெருமூச்சுடன் மகளை பார்த்தார் ரகுவரன்.
அவளோ தந்தையின் கரங்களைப் பிடித்து அழுத்தம் கொடுக்கவே, “அண்ணா நீங்க இங்கேயே நில்லுங்க. நான் போய் ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வரேன்” விஷ்வா சொல்லும்போது வீட்டின் கதவுகளைத் திறந்துகொண்டு, “இந்தர் ஸார் அங்கேயே நில்லுங்க” வேகமாக வெளியே வந்தாள் சம்யுக்தா.
அவளின் பின்னோடு சங்கமித்ராவின் நண்பர்கள் பட்டாளமே வருவதைக் கண்ட இந்தர்ஜித் தன்னவளை நோக்கிட, “முதல் முதலாக புகுந்த வீட்டுக்கு வரும்போது ஆரத்தி எடுக்கக்கூட ஆள் இல்லன்னு வருத்தபடுவேன் என்று நினைச்சீங்களா? நாங்க எல்லாம் எப்பவும் தன் கையே தனக்குதவி, வாய் இருக்க வழி எதற்கு என்று வாழும் கேஸ். அதுதான் அப்போவே அனைத்து ஏற்பாடும் சிறப்ப செய்ய சொல்லிட்டேன். நம்ம பசங்க இதில் எல்லாம் ஜெகஜால கில்லாடிங்க. காரியத்தை காதும் காதும் வைத்த மாதிரி செய்து முடிச்சிட்டாங்க” என்றவளின் குரலில் குறும்பு கூத்தாடியது.
மற்ற பெண்களைப் போல இல்லாமல் தன் மகள் மாற்றி யோசிப்பதை நினைத்து பெருமைப்பட்ட ரகுவரன், “வாலு” என்று தன் மகளின் தலையைப் பாசத்துடன் வருடினார். அவரின் கவலை எல்லாம் காற்றில் கரைந்த கற்பூரமாக மாறிப்போனது.
அவளின் கையில் இருந்த ஆரத்தியைப் பார்த்த வினோத், ‘ஓ இதுக்குதான் மேடம் அப்போவே வீட்டு சாவியை வாங்கி இவகிட்ட கொடுத்தாளா? ம்ம் அப்பாவையும் விட்டுகொடுக்காமல், தன்னவனையும் விடாமல் ஹப்பா இந்த பொண்ணுங்களை நினைத்தால் ரொம்ப பெருமையா இருக்கு’ என்று நினைத்துக்கொண்டே அவளைப் பார்த்து புன்னகைத்தான்.
அங்கிருந்த அனைவரும் சிரிக்கவே, “நீ கொடு நான்தான் எங்க அண்ணனுக்கு ஆரத்தி எடுப்பேன்” என்று அவளுடன் சண்டைக்கு நின்றான் விஷ்வா.
“விஷ்வா பிளீஸ் விடுங்க நானே எடுக்கிறேன்” என்று கெஞ்சியவளை பார்த்தும் அவனின் மனம் இறங்க மறுத்தது.
இருவரின் சண்டையைக் கண்டவன், “ஏய் என்னடா அந்த பொண்ணுக்கிட்ட வம்பு பண்ற. விடு அவங்களே எடுக்கட்டும்” இந்தர் சம்யுக்தாவிற்கு பரிந்துகொண்டு வந்தான்.
“இதெல்லாம் தெரிஞ்சி வச்சிகிட்டு தான் பொண்ணுங்க நம்மள எல்லாம் ஏமாத்துறாங்க அண்ணா. அதனால் இந்த முறை நான்தான் உனக்கு ஆரத்தி எடுப்பேன்” என்று ஒற்றைக்காலில் நிற்காத குறையாக சொன்ன தம்பியிடம் பேசி ஜெய்க்க முடியாது என்ற எண்ணம் தோன்றவே, “இப்போ என்ன மாமா பண்றது” என்று பெரியவரான ரகுவரனிடம் கேட்டான்.
அவரும் சிந்தனையோடு நிற்கவே, “அதுக்கு என்ன விஷ்வா நீயும், சம்முவும் சேர்ந்து எடுங்க. எனக்கு நல்லது நினைக்கிற நீங்க இருவரும் ஆர்த்தி எடுத்தால் நான் என்ன வேண்டான்னு சொல்ல போறேனா?” என்றவுடன் சம்யுக்தாவின் முகம் பளிச்சென்று மலர விஷ்வாவின் முகமோ ப்யூஸ் போன பல்பு போலானது.
மற்றவர் கவனிக்கும் முன் முக பாவனையை மாற்றிகொண்ட விஷ்வா, சம்யுக்தாவுடன் இணைந்து ஆரத்தி எடுத்தான்.
அவர்களுக்கு பொட்டு வைத்து உள்ளே அனுப்பிவிட்டு வெளியே வரும்போது, “ஆம்பள புள்ள ஆரத்தி எடுக்கிறதெல்லாம் இங்கேதான் நடக்குது” என்று ஏளனமாக கூறிய தாயை வெட்டி கூறுபோடும் அளவிற்கு கோபம் வந்தபோதும் பல்லைக் கடித்துக்கொண்டு மௌனமானான் விஷ்வா.
அவர் பேசுவதையும், விஷ்வாவின் கோப முகத்தையும் கவனித்த சம்யுக்தா, “பெத்த மகன் கல்யாணத்திற்கு கௌரவம் பார்த்துட்டு வராமல் இருந்த உங்களுக்கு இதெல்லாம் பேச தகுதியே இல்ல” பட்டென்று பதில் கொடுத்துவிட்டு வீட்டிற்குள் சென்று மறைந்தாள்.
அதுவரை கோபத்துடன் நின்றிருந்த விஷ்வாவின் பார்வை அவளைப் பின் தொடர்ந்தது. அவளின் பிறந்தநாள் அன்று சங்கமித்ரா சொன்ன விஷயம் அவனின் நெஞ்சின் ஓரத்தில் முணுக் முணுக் என்று அவளின் நினைவை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. தனக்கு யாருமில்லை என்று அவள் எப்படி வருந்துகிறாள் என்று மித்ரா சொன்னபோது, ‘நான் இருக்கும்போது அவ ஏன் வருத்தப்படணும்’ என்று மனதிற்குள் நினைத்தான்.
அதன்பிறகு சம்யுக்தாவை ஒருநாள் கூட விஷ்வா மறந்ததில்லை. அவள் மண்டபத்திற்கு வந்த அன்று மித்ரா அவளை அறிமுகம் செய்து வைத்தவுடன் அவளின் முகம் பளிச்சென்று மலர்ந்ததை அவனும் கவனித்தான். ஏற்கனவே தன் தாய் தந்தையைப் பார்த்து வளர்ந்தவனுக்கு காதல் என்ற வார்த்தையே கசந்து கிடந்தது.
அதனால் அவளிடம் பேசாமல் விலகி நிற்கவே நினைத்தான். ஆனால் மித்ராவைப் போல அவளும் சின்ன சின்ன செயல்களுக்கு தன்னிடம் வந்து நிற்கும்போது அவனின் மனம் தடுமாறியது. அதனால் தான் போட்டோ எடுக்கும்போது அவளிடம் எரிந்து விழுந்தான்.
ஆனால் இப்போது அவள் பேசியதைக் கேட்டு, ‘என் கோபத்தை ஒரு வார்த்தையில் புரிஞ்சிட்டு முகத்தில் அடிச்ச மாதிரி பதில் கொடுத்துட்டுப் போகிறாளே’ என்ற எண்ணம் ஒருப்பக்கம் ஓடி மறைய அவளின் மீதான தன் கருத்தை மாற்றிக் கொண்டான்.
பாசத்திற்கு எங்கும் உள்ளத்தை தானும் தன் பங்கிற்கு காயப்படுத்தி விட்டதை நினைத்து மனம் வருந்தியவன் வீட்டிற்குள் நுழையும்போது அவனை பார்வையால் தேடியவளிடம், “தேங்க்ஸ் அண்ட் சாரி..” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.
மணமக்களுக்கு பாலும், பழமும் கொடுத்து முடித்ததும், “எங்க ஊரை சுத்தி பார்த்துட்டு தான் எல்லோரும் கிளம்பணும்” என்ற வினோத் அவர்களை அழைத்துச் செல்லவே விஷ்வா மற்றும் சம்யுக்தா தவிர மற்ற அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்.
மணமக்கள் இருவரையும் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு ரகுவரன் தன் சொந்தக்கார பெண்மணியிடம் மற்ற பொறுப்புகளை ஒப்படைத்தார். அதே நேரத்தில் மாடிக்கு சென்று வானத்தை வேடிக்கைப் பார்த்தபடி கால்நீட்டி தரையில் அமர்ந்த சம்யுக்தாவின் மனம் விஷ்வாவை மட்டுமே சுற்றி வந்தது.
சங்கமித்ரா அவனைப் பற்றி சொல்லும்போது, “எனக்கு இந்த பாசம் கிடைக்காதா?”என்று அவளின் உள்ளம் ஏங்கும். அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக அவனின் மீது காதலாக உருமாறியதை அவள் உணரவில்லை. ஆனால் பிறந்தநாள் அன்று அவனின் வாழ்த்தைக் கேட்டு அவளின் உள்ளம் அவளுக்கு புரிந்தது.
தனக்கு திருமணம் என்று மித்ரா சொன்னவுடன், ‘நான் என் விஷ்வாவைப் பார்க்க போறேன்’ என்ற சந்தோஷத்தில் இலங்கை கிளம்பி வந்தாள். இங்கே வந்தபிறகு ஒவ்வொரு விஷயத்திலும் அவன் மித்ராவின் மீது காட்டும் அக்கறை, பாசம் அனைத்தும் கண்டவளின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தான் விஷ்வா.
இந்த ஊரிலிருந்து செல்வதற்கு முன்னர் அவனின் நினைவுகளை சேகரிக்க நினைத்த சம்யுக்தா கிடைத்த சமயத்தை பயன்படுத்தி அவனின் முன்னே சென்று நின்றாள். ஒவ்வொரு முறையும் அவன் எரிந்து விழுந்தாலும் அவளுக்கு அது சந்தோசமாகவே இருந்தது.
சற்றுமுன் அவன் “தேங்க்ஸ் அண்ட் சாரி” என்று சொன்னபோது அவளின் மனதில் சந்தோசம் பரவியது. அதெல்லாம் நினைத்தபடி அவள் அமர்ந்திருக்க தன் அருகே யாரோ அமரும் ஆரவாரம் கேட்டு பட்டென்று நிமிர்ந்தவளின் விழிகள் வியப்பில் விரித்தது.
அவளின் எதிரே புன்னகையுடன் நின்றிருந்த விஷ்வா, “சாரி சம்யுக்தா நான் உங்களை ரொம்ப காயப்படுத்திட்டேன்” என்று உண்மையான வருத்தத்துடன் கூறினான்.
“பரவல்ல” என்றவளின் முகத்தில் இருந்த நிறைவை மனதில் குறித்துக் கொண்டான் விஷ்வா.
“இது உங்க பிறந்தநாள் அன்னைக்கு விஷ் பண்ணிய பிறகு வாங்கிய கிப்ட். சாரி அன்னைக்கே கொடுக்க முடியல” என்று அவளிடம் கொடுத்தான்.
அவனிடமிருந்து இதை எதிர்பார்க்காத சம்யுக்தா, “தேங்க்ஸ்” என்று சொல்லி வாங்கிக் கொண்டாள்.
அவன் கொடுத்துவிட்டு திரும்பிச் செல்ல நினைக்கவே, “நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று அவனைத் தடுத்தாள்.
அவன் அவளைக் கேள்வியாக நோக்கிட, “என்னடா பார்த்து இரண்டுநாள் ஆனா ஒருத்தனிடம் இப்படி பேசறேன்னு நினைக்காதீங்க. நீங்க எனக்கு அறிமுகம் ஆனது சங்கமித்ராவால் தான். உங்களைப் பற்றி நிறைய விஷயம் அவ சொல்லி தெரிஞ்சிகிட்டேன். நாளைக்கு ஊருக்கு கிளம்பும்போது சொல்ல டைம் கிடைக்காது” என்று பீடிகையுடன் தொடங்கினாள்.
ஏற்கனவே அவளின் பார்வைக்கான அர்த்தத்தைப் புரிந்து வைத்திருந்தவன் அவளை கரம்நீட்டி தடுத்துவிட்டு, “காதல், கல்யாணம் இந்த இரண்டைத் தவிர நீங்க எதுவேண்டும் என்றாலும் தாரளமாக என்னிடம் பேசுங்க. நான் வேண்டான்னு சொல்லவே மாட்டேன்” என்று சொன்னவுடன் அவளின் முகமே மாறிப் போனது.
“ஏங்க..” என்றவளை தீர்க்கமாகப் பார்த்தவன், “நீங்க மானுவின் பெஸ்ட் ஃபிரெண்ட் என்பதால் தான் இயல்பாக உங்களிடம் பேச வந்தேன். அதை நீங்க தவறாக புரிஞ்சிகிட்ட நான் அதுக்குப் பொறுப்பாக முடியாது. இன்னைக்கு மட்டும் இல்ல என்னைக்குமே காதல், கல்யாணம் என்ற வார்த்தைக்கு என் வாழ்க்கையில் இடமில்லை. அதனால் நீங்க கொஞ்சம் உங்களை மாத்திகோங்க. அதுதான் எல்லோருக்கும் நல்லது” என்றவன் அவளைவிட்டு விலகி நடக்கத் தொடங்கினான்.
அவன் சொன்னதைக்கேட்டு கண்கள் கலங்கிட வேகமாக கண்களைத் துடைத்துக்கொண்டு, “அப்படின்னா இந்த கிப்ட் எனக்கு வேண்டாம் விஷ்வா. அதை நீங்களே எடுத்துட்டுப் போயிடுங்க. நமக்கு இடையில் நட்பு வர வேண்டான்னு நான் நினைக்கிறேன். அதுதான் எனக்கு நல்லது” என்று அவன் கொடுத்த பரிசை பிரித்து பார்க்காமல் கைப்பிடி சுவற்றின் மீது வைத்துவிட்டு அவனைக் கடந்து சென்றாள்.
அவளிடம் இதை எதிர்பார்க்காத விஷ்வா கடந்து சென்ற அவளின் மீது பார்வையை வீசிவிட்டு பரிசு பொருளை கையில் எடுத்துச் சென்றுவிட்டான். அதன்பிறகு விஷ்வாவும் அவளிடம் பேச முயற்சிக்கவில்லை. அவளும் அவனிடம் வழிய வந்து பேசவில்லை.
நேரம் கடந்து செல்லவே அறையை அலங்கரித்து இரவு இந்தர்ஜித் – சங்கமித்ராவை அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு தன் தோழிகள் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டாள் சம்யுக்தா.
அண்ணனை அறைக்குச் செல்ல சொல்லிவிட்டு விஷ்வா அவனின் வீட்டிற்கு சென்றுவிட்டான். திருமணத்திற்கு வந்தவர்களில் முக்கியமான சிலர் மட்டும் அந்த வீட்டின் விருந்தினர் அறையில் தாங்கிக்கொள்ள அவர்களைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ரகுவரன்.
இரவின் தனிமையில் அளவான ஒப்பனையோடு அறைக்குள் நுழைந்தாள். அங்கே இந்தர்ஜித் இல்லாமல் இருக்கவே யோசனையோடு பார்வையைச் சுழற்றிய மித்ரா படுக்கையில் அமர்ந்தாள். நேரம் சென்றதே தவிர இந்தர்ஜித் வரவில்லை என்றவுடன் படுக்கையில் படுத்து உறங்கிவிட்டாள்.
அதன்பிறகு அறைக்குள் நுழைந்த இந்தர் அவளின் அருகே வந்து படுத்தவன் மெல்ல அவளின் கூந்தலை வருடிவிட்டு நெற்றியில் இதழ் பதித்தான்.
ஆழ்ந்த உறக்கத்தில் அவனின் ஸ்பரிசம் உணர்ந்து அவனின் நெஞ்சம் என்ற மஞ்சத்தில் முகம் பதித்து தன் தூக்கத்தை தொடர்ந்தாள் சங்கமித்ரா. அவளை இறுக்கியணைத்த இந்தர், “ஐ லவ் யூடா” என்று சிரிப்புடன் கூறிவிட்டு விழிமூடி நித்திரையில் ஆழ்ந்தான்.
இரு மனங்களும் உடல் சங்கமத்தை தவிர்த்துவிட்டு இதயங்களின் காதல் பாசையை புரிந்துகொள்ள நினைத்து முதலடி எடுத்து வைத்தனர்.