Maane – 24

20119200c6037d1-648cbe10

Maane – 24

அத்தியாயம் – 24

அடுத்த நிமிடமே வினோத்தை எழுப்பிட அவனோடு விஷ்வாவும் சேர்ந்து கண்விழித்து எழுந்து அமர்ந்தான். இந்தரின் முகத்தில் இருந்த பதட்டத்தை கண்டவுடன், “அண்ணா என்னாச்சு. ஏன் நீ இவ்வளவு பதட்டமாக இருக்கிற” என்று விசாரித்தான்.

“ரகுமாமாவிற்கு திடீரென்று நெஞ்சுவலி வந்துருச்சுடா. அவவேற அங்கே தனியாக இருக்கிற. இப்போவே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகணும். துணைக்கு யாருமே இல்லடா” என்ற இந்தருக்கு அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை.

அவன் சொல்வதை முழுவதுமாக கேட்ட வினோத், “நீ பயப்படாமல் இருடா. அவருக்கு எதுவும் ஆகாது. நான் எங்க அப்பாவை அங்கே போக சொல்றேன்.” என்று நண்பனிடம் கூறியவன் தன் வீட்டிற்கு அழைத்து விவரம் சொன்னான்.

அடுத்து என்ன செய்வதென்று  புரியாமல் நின்றவள் இந்தர் சொன்னதை கேட்டவுடன் அதிர்ச்சியில் இருந்து தன்னை மீட்டுக்கொண்டு அடுத்து என்ன செய்வதென்று யோசிக்கும்போது வினோத் அப்பா காருடன் அங்கு வந்து சேர்ந்தார்.

அவரைப் பார்த்தவுடன் பதட்டம் சற்று குறைந்துவிடவே, “வாங்கப்பா. திடீர்ன்னு அப்பா நெஞ்சு வலிக்குது சொல்றாரு” என்றபடி இருவரும் சேர்ந்து ரகுவரனை காரில் ஏற்றினர்.

மருத்துவமனைக்கு செல்லும்போதுதான் கையில் பணமில்லை என்ற நினைவு வரவே, “அங்கிள் நீங்க அப்பாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போங்க. நான் வீட்டிற்கு போய் பணம் எடுத்துட்டு ஸ்கூட்டியில் பின்னாடியே வருகிறேன்” என்றவளை தடுத்தார் வினோத் தந்தை.

 “விடும்மா அரேஞ் பண்ணிக்கலாம்” என்றவர் சொல்லவே, “இல்ல அங்கிள்.. இந்நேரத்தில் யாரையும் தொந்தரவு பண்ண வேண்டாம்” காரிலிருந்து இறங்கிய மகளின் கையை ரகுவரன் பிடித்துக் கொண்டார்.

அவரின் கையைப்பிடித்து அழுத்தம் கொடுத்தவள், “அப்பா பதட்டப்படாமல் இருங்கப்பா. உங்களுக்கு ஒன்றுமே இல்ல” என்று சொல்லி அவரை தேற்றிவிட்டு, “நீங்க கிளம்புங்க” என்றவள் வேகமாக வீட்டை நோக்கி நடந்தாள்.

அவள் வேகமாக சென்று இந்தர் புதிதாக தொடங்க வைத்திருந்த பணத்தைக் கையில் எடுத்துகொண்டு வீட்டின் கதவைப் பூட்டி கிளம்பினாள். கேட் வாசலில் நின்று கத்தினால் அத்தைக்கு கேட்கதென்று தோன்றவே வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி மறுபுறம் குதித்தாள்.

மித்ரா மரகதம் வீட்டின் காலிங்பெல்லை அடிக்க, “யாரது” என்றபடி வந்து கதவைத் திறந்தார்.

வீட்டின் கடிகாரத்தில் மணியைப் பார்த்தவருக்கு விஷயம் விபரீதம் என்று புரியவே பதறி நின்ற மருமகளிடம், “மித்ரா யாருக்காவது ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டார்.

உடனே, “அத்தை அப்பாவுக்கு திடீர்னு நெஞ்சுவலி. ஹாஸ்பிட்டலில் சேர்த்து இருக்கேன். நீங்க கொஞ்சம் கூட வரீங்களா? வீட்டில் இந்தர், விஷ்வா யாருமே இல்ல” என்று விஷயத்தை விளக்கிவிடவே அவள் சொன்னதைகேட்டு பதறிய மரகதம் உடனே வீட்டைப் பூட்டிவிட்டு அவளோடு கிளம்பிவிட்டார்.

இருவரும் ஸ்கூட்டியில் மருத்துவமனைக்கு செல்ல அங்கே வினோத் தந்தை இவர்களுக்காக வாசலில் காத்திருந்தார்.

மித்ராவின் பதட்டம் புரியவே, “அப்பாவிற்கு சிகிட்சை பண்ணிட்டு இருக்காங்க” என்று சொல்லவே மூவரும் டாக்டரின் வரவிற்காக காத்திருந்தனர்.

இரவில் தன் வயதின் சோர்வை கண்டுகொள்ளாமல் வந்து நின்றவரிடம், “சரிங்க அங்கிள் நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. நான் இனிமேல் பார்த்துகிறேன்” என்றாள் மித்ரா.

“அதுனால என்னம்மா நான் இங்கேயே இருக்கேன்” என்றவர் சொல்லவே டாக்டர் வெளியே வந்து, “பெசண்ட் ரிலேடிவ் யாருங்க?” என்று கேட்டார்.

“நான் அவரோட மகள்” என்ற சங்கமித்ராவை அவரின் அறைக்கு அழைத்து, “உங்க அப்பாவிற்கு உடனே ஹார்ட் சர்ஜரி பண்ணனும். இல்லன்னா அவரோட உயிருக்கு ஆபத்து” என்றவுடன் மித்ராவின் மனதில் பாரம் அதிகமானது.

ஆனால் யோசிக்க இது நேரமில்லை என்று உணர்ந்தவள், “நீங்க ஆப்ரேஷன் பண்ணுங்க டாக்டர். நான் பணம் கட்டுவிடுகிறேன்” உடனே முடிவெடுத்து அதை செயல்படுத்திய மருமகளை வியப்புடன் பார்த்தார்.

மற்ற பெண்களைப்போல அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல் கேட்ட பணத்தைக் கட்டிவிட்டு ரசீதுடன் வந்தவளிடம், “உன்னிடம்  எதும்மா இவ்வளவு பணம்?” என்றார்.

தன் அத்தையின் கேள்விக்கு பதில் சொல்லும் கடமை தனக்கு இருப்பதை உணர்ந்து, “அவர் புதுசாக பிஸ்னஸ் தொடங்க வைத்திருந்த பணம் அத்தை. திடீரென்று அப்பாவிற்கு இப்படியாகும் என்று நினைக்கல. அதுதான் அந்த பணத்தை எடுத்துட்டு வந்து கட்டிட்டேன்” என்று சொல்லவும் அவரின் முகம் லேசாக மாறத் தொடங்கியது.

அவள் செய்த காரியத்தினால் பின்னாடி பின் ஏற்படபோகும் பின்விளைவுகளை யோசித்த மரகதம் நிமிர்ந்து மருமகளைப் பார்த்தார். எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் சாந்தமாக நின்றிருந்தவளின் மனநிலையை அவரால் கணிக்க முடியாமல் போனது.

ஓரளவு தன்னை சமாளித்துகொண்டு அவளின் பக்கம் திரும்பியவர், “இந்த பணத்தை நீ இங்கே கட்டியது தெரிந்தால் இந்தர் கோபபட மாட்டானா? உன்மீது சந்தேகப்பட மாட்டானா?” என்று மனம் படபடக்க கேட்டவரை வேற்றுகிரகவாசியைப் பார்ப்பது போல பார்த்தாள் மித்ரா.

அப்போதுதான் அவரின் பேச்சைக் கவனித்தவள், “என்னை எதுக்கு சந்தேகப்படனும் அத்தை? எனக்கு சத்தியமாகப் புரியல” குழப்பத்துடன் அவரை ஏறிட்டாள் மித்ரா. திடீரென்று இந்த கேள்வி கேட்க காரணமென்னவென்று அவளுக்கு புரியவில்லை.

அவளின் முகத்தை கண்டு விஷயம் இதுவென்று தெளிவாக சொல்லாமல், “புதிதாக தொடங்க இருக்கும் பிஸ்னஸ் பணம் காணாமல் போனால் கேட்க மாட்டானா? உன்னை வேற ஆணோடு ஒப்பிட்டு தவறாக பேசுவது, அவனுக்கு நீ பணத்தை தூக்கிக் கொடுத்துட்டு ஏமார்ந்து போயிட்ட” என்றவர் தொடங்கவே அதுவரை சாந்தமாக இருந்தவளின் முகம் மாறவே அவளின் புருவங்கள் ஏறி இறங்கியது.

மரகதம் அவளிடம் பதிலை எதிர்பார்க்க,  “பணம் காணாமல் போயிடுச்சு என்று பொய் சொல்வேனோ என்பது மாதிரி இருக்கு அத்தை நீங்க கேட்கும் கேள்வி. செய்த தவறை மறைக்க பொய் சொல்வங்கதான் பயப்படணும். நான் உண்மையைப் பேசுவதால் எனக்கு அந்த பிரச்சனை என்னைக்குமே வராது” பட்டென்று பதில் கொடுத்துவிட்டு அவரை ஆழ்ந்து நோக்கினாள்.

“என்னைச்சுற்றி இருக்கிற அத்தனை பேரும் என்னை தவறு செஞ்சிட்டா என்று சொன்னாலும் அவர் நம்பமாட்டார். நான் எப்படிபட்டவன்னு என்னோடு வாழ்ந்த என் புருஷனுக்கு தெரியும்” என்றாள் மித்ரா தைரியமாக.

அந்த ஒரு வாக்கியம், அதில் பொதிந்திருந்த ஆயிரம் அர்த்தங்கள் அனைத்தும் மரகதத்தின் மனதில் பெரிய பிரளயத்தையே உருவாக்கிக் கொண்டிருப்பதை பாவம் அவள் அறிய வாய்ப்பில்லாமல் போனது. அவள் சொன்ன பதிலில் அவரின் மனம் அமைதியடைய மறுத்தது.

“உங்க அப்பாவிற்கு செலவு செய்ததாக நீ சொன்னால் அதை என் மகன்  ஏற்றுக்கொள்ள மாட்டான் இல்ல” திரும்ப கேள்வி கேட்டவரை பொறுமையிழந்து பார்த்த மித்ரா ஒரு நிமிடம் நிதானித்தாள்.

அவரின் முகத்தில் வந்து சென்ற கலவையான உணர்ச்சிகளை கண்டு, “உங்க பிள்ளை அப்படியெல்லாம் சொல்ல மாட்டார் அத்தை. எனக்கு தேவையான அனைத்தையும் செய்யும் கடமை அவருக்கு இருக்கு. அதில் மாமனாரின் உயிரைக் காப்பாற்றும் கடமையும் அடக்கம்தான். அதனால் பணத்தை கேட்காமல் எடுத்து கட்டியதற்கு எல்லாம் என்னைத் திட்ட மாட்டார்” என்றவள் நம்பிக்கையோடு கூறவே மரகதம் வாயடைத்து நின்றார்.

அவளின் செல்போன் சிணுங்க உடனே போனை எடுத்து காதில் வைக்க, “ஹலோ மித்ரா மாமாவை ஹாஸ்பிட்டலில் சேர்த்திட்டியா? டாக்டர் என்ன சொன்னாரு” என்றவன் அக்கறையோடு விசாரித்தான்.

அவள் அடுத்த நிமிடமே நடந்த அனைத்தும் கூறி, “அப்பாவுக்கு சர்ஜரி பண்ணனும்னு சொல்லிட்டாங்க. அதுதான் நீ புது பிஸ்னஸ் தொடங்க என்னிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு வந்து கட்டிட்டேன்” அவள் சொல்லி முடிக்க மரகதத்தின் பார்வை மருமகளின் மீது படிந்தது.

உடனே போனை ஸ்பீக்கர் மோடில் போட்டு அத்தையின் முன்னே நீட்டவே, “நானும் இதெல்லாம் எதிர்பார்க்கல மித்ரா. எனக்கு ஏன் ஊருக்கு வந்தேனோ என்று இருக்கு. பாவம் அவரை வைத்துகொண்டு நீ தனியாக சமாளிப்பதை நினைத்தால் மனசுக்கு வருத்தமாக இருக்கு” இந்தரின் குரல் வருத்ததுடன் ஒலித்தது.

“ஜித்து அந்த பணத்தை எடுத்து கட்டிட்டேன் என்று உனக்கு வருத்தமா?” என்றவள் கேட்கவே, “உன்னிடம் அதைத் தவிர வேற பணமில்லை என்று எனக்கு நல்லாவே தெரியும். அதுதான் ஹாஸ்பிட்டலில் கட்ட பணம் தேவையென்றால் அதை எடுத்துட்டுப் போய் கட்டு மற்றது எல்லாம் நான் வந்த பிறகு பார்த்துக்கலாம்னு சொல்லத்தான் இப்போ போன் பண்ணினேன்” என்று சொல்லவே மரகதத்தின் முகத்தில் தெளிவு பிறந்தது.

தன் கணவனை புரிந்து வைத்திருந்த மித்ராவின் உதட்டில் புன்னகை மலரவே, “நான் சொல்லும் முன் நீயே அதை செய்தது சந்தோசம்டா.நமக்கு மாமா உயிர்தான் முக்கியம். பணம்தானே அது எப்ப வேண்டுமானாலும் சம்பாரிச்சுக்கலாம்” என்றவன் சொல்லவே மரகதம் மருமகளை போய் பேசும்படி சைகை செய்யவே அவள் போனை எடுத்துகொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

மருமகளின் பேச்சும், மகனின் புரிதலும் கண்டு தாயுள்ளம், ‘நானும் அன்னைக்கு உண்மையைச் சொல்லியிருந்தால் இன்னைக்கு என் வாழ்க்கை இப்படி ஆகிருக்காதோ’ முதல் முறையாக தன் பக்கமிருக்கும் தவறை உணர்ந்து சிந்திக்கத் தொடங்கினார்.

மித்ரா சிறிதுநேரம் பேசிவிட்டு போனை வைத்தவுடன், “வினோத் நீயும் விஷ்வாவும் இங்கிருந்து அனைத்து வேலைகளையும் முடிச்சிட்டு வாங்கடா. பாவம் மித்ரா அங்கே ஆறுதல் சொல்லக்கூட ஆள் இல்லாமல் தவிச்சிட்டு இருப்பா. நான் உடனே இங்கிருந்து கிளம்பறேன்” என்றவன் பிளைட் டிக்கெட் புக் பண்ணினான்.

“டேய் இவ்வளவு தூரம் வந்தபிறகு வேலையை முடிக்காமல் போறேன்னு சொல்ற. எங்களைவிட உனக்குத்தான் இதெல்லாம் நன்றாக தெரியும்” என்று சொல்லவே,

“எனக்கு உங்க இருவரின் மீதும் நம்பிக்கை இருக்கு. அதே நேரத்தில் மித்ராவிற்கு உதவி செய்ய அங்கே யாருமில்ல. அப்பா, அம்மாவைக் கூப்பிட்டாலும் அவளை குத்திக்காட்டி பேசுவாங்களே தவிர உதவிக்கு வரமாட்டாங்க. அதுதான் நான் கிளம்பறேன்னு சொல்றேன்” என்று தன முடிவில் பிடிவாதமாக நின்றான்.

சிறிதுநேர சிந்தனைக்குப் பிறகு அவனின் முடிவே சரியென்று தோன்ற, “சரிடா நீ கிளம்பு. நாங்க எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அதற்குள் வேலையை முடிச்சிட்டு கிளம்பி வருகிறோம்” என்று வினோத் சொல்லவே இந்தரின் மனம் நிம்மதியானது.

அவன் கிளம்பும்போது தோளைத் தட்டி ஆறுதலாக அணைத்த விஷ்வா, “உங்க மாமாவிற்கு எதுவும் ஆகாதுடா. அவருக்கு ஆப்ரேஷன் முடிந்து கண்விழிக்கும் முன் நீ அங்கே இருப்பாய். மித்ரா ரொம்பவே பயந்து போயிருப்பான்னு நினைக்கிறேன். நீ அவளுக்கு கொஞ்சம் ஆறுதல் சொல்லி புரியவைடா” நண்பனுக்கே உரிய பதட்டத்துடன் கூறிய தம்பியை நிமிர்ந்து பார்த்தான் இந்தர்.

“மித்ரா நம்மள மாதிரி இல்லடா. ரொம்ப போல்டான பொண்ணு. அவள் ஒவ்வொரு விஷயத்தை பதட்டப்படாமல் ஹேண்டில் பண்ணுவாள். என்ன இருந்தாலும் அவளுக்கு ஆறுதலுக்கு ஒரு துணை வேணும் இல்ல. அதுதான் இப்போவே கிளம்பறேன்” என்று இந்தர் விளக்கம் கொடுக்கவே விஷ்வாவும் ஒப்புதலாக தலையசைத்தான்.

தன் உயிர் தோழியைப் பற்றி தெரிந்ததால், “நீ சொல்வதும் உண்மைதான் அண்ணா. விளையாட்டுத்தனமாக இருந்தாலும் ஒரு விஷயத்தை கையால்வதில் அவளை மாதிரி பக்குவபட்ட பெண்கள் யாருமில்லை” என்று சொல்லி அவனை சென்னையிலிருந்து அனுப்பி வைத்தனர்.

மித்ரா கணவனிடம் பேசிவிட்டு போனை வைத்தபிறகு, “அத்தை நீங்க டீ குடிக்கிறீங்களா? நான் கேண்டீனில் போய் வாங்கிட்டு வரவா?” என்று அக்கறையோடு விசாரித்தாள்.

ரகுவரனுக்கு ஆப்ரேஷன் நடக்கும் விஷயம் தெரிந்தும் அவளின் தெளிவாக பேச்சு அவரை பிரம்மிக்க வைத்தது.  அவர் சட்டென்று நிமிர்ந்து பார்க்க அவளின் முகத்தில் கவலை இருந்தபோதும் பதட்டமில்லாமல் தெளிந்திருந்தது.  

“உனக்கு பயமாக இல்லையாம்மா” என்றவர் மருமகளை அருகே அமரவைத்து கேட்டார்.

அத்தையின் கரங்களைப் பிடித்துகொண்டு, “அம்மா திடீரென்று இறந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் பெருசான பிறகு நிறைய ஆக்ஸிடென்ட் பார்ப்பது, அவங்களை காப்பாற்றுவது இதெல்லாம் பழகி போச்சு” என்ற மித்ராவின் குரலில் அவர் எப்படி உணர்கிராறேன்று அவருக்கே புரியவில்லை.

“பிளட் கொடுக்கப் போகும்போது நிறையப்பேர் உயிர் பிழைக்க வாய்ப்பு இருந்தும் பதட்டத்தில் தைரியமும் ஊக்கமும் சொல்ல ஆள் இல்லாமல் இருந்து போவதை பார்த்து இருக்கேன்” என்று கூறியவளின் தலையை வருடிவிட்டார் மரகதம்.

“அப்பாவை சரியான நேரத்திற்கு ஹாஸ்பிட்டல் கொண்டு வந்து சேர்த்துவிட்டோம். அதுமட்டும் இல்லாமல் அவரும் அடுத்த பிளைட்டில் கிளம்பி வரன்னு சொல்லி இருக்காரு. அதனால் பதட்டம் கொஞ்சம் குறைவாக இருக்கு. அப்பாவிற்கு எதுவும் ஆகாது என்ற நம்பிக்கை இருப்பதால் பயப்படாமல் இருக்கேன்” என்றவளின் தெளிவான பேச்சு அவருக்கு மனநிறைவைக் கொடுத்தது.

அதன்பிறகு சங்கமித்ரா காஃபி வாங்கிவர எழுந்து சென்றுவிட சிந்தனையோடு அமர்ந்திருந்தார்.

அத்தையின் கோபத்தையே பார்த்து பழைய மித்ராவிற்கு, ‘இவங்க என்ன இன்னைக்கு இவ்வளவு நிதானமாக இருக்காங்க. மற்ற நாளாக இருந்தால் சுவர் ஏறி குதித்து கதவைத் தட்டியதற்கு கடிச்சே வைச்சிருப்பாங்க’ குறும்புடன் நினைத்துக் கொண்டாள்.

இரவுவேளை பதட்டத்துடன் எழுப்பி விஷயம் சொன்னால், ‘உங்க அப்பா எக்கேடு கேட்டல் எனக்கென்ன?’ என்று கேட்பாரோ என்ற பயம் அவளின் மனதில் இருந்துகொண்டே இருந்தது. தனக்கு உதவி செய்யவே மாட்டார் என்ற எண்ணத்தை சுக்குநூறாக உடைத்தெறிந்தார் மரகதம்.

ரகுவரனுக்கு ஆப்ரேஷன் முடிந்து அவர் கண்விழிக்கும் வரை மருமகளுடன் இருந்தவர் அவள் சோர்வாக இருப்பது போல தெரிந்தால் ஆறுதல் சொல்லவும், அடிக்கடி அவளின் பேச்சை திசை திருப்புவதுமாக இருந்தார்.

அவரிடம் இருக்கும் நல்ல குணத்தைக் கண்டுகொண்ட மித்ராவின் மனமோ, ‘ஹாஸ்பிட்டல் வந்து பணத்தைக் கட்டியதற்கு ஏன் இவங்க பதட்டமாக பேசினாங்க?’ என்ற சந்தேகம் எழுந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!