Maane – 26

cuore-8829-bcb38344

Maane – 26

அத்தியாயம் – 26

இந்தர் சாப்பாடு எடுத்துகொண்டு ஹாஸ்பிட்டல் செல்ல தந்தையின் அறைக்கு வெளியே அமர்ந்திருந்தாள் சங்கமித்ரா. எதர்ச்சியாக திரும்பிய மித்ரா கணவனைக் கண்டவுடன் தாயைத் தேடி ஓடும் கன்றுக்குட்டியாக மாறிப் போனாள்.

அவள் ஓடி வருவதைக் கண்ட இந்தர், “மித்ரா” என்றதும் அவனைக் கட்டியணைத்துக் கொண்டு கதறினாள். ஒரு கையால் மனைவியை அழைத்துக்கொண்டு அவன் மெளனமாக இருக்கவே அவனின் மார்பில் முகம் புதைத்து அழுதவளின் முதுகை ஆறுதலாக வருடிவிட்டு மெளனமாக நின்றான்.

“இங்கே பாருடா மாமாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லையில்ல. அப்புறம் எதற்காக இப்படி அழுகிற” அவளை சமாதானம் செய்யும் விதமாக பேசினான்.

“அப்பா நேற்று நைட் ரொம்ப பயமுறுத்திட்டார் ஜித்து. ஒரு நிமிஷம் என் உயிர் என்கையில் இல்ல தெரியுமா? நீயும், விஷ்வாவும் இல்லாத நேரத்தில்..” என்றவளால் அதற்கு மேல் பேச முடியாமல் விசும்பினாள்.

பெசண்ட் கண்விழித்து விட்டதாக சொல்ல வந்த நர்ஸ் இருவரையும் பார்த்து, “நேற்று அவ்வளவு பொறுமையாக இருந்தவங்களா இவங்க?” என்று ஆச்சரியப்படவே இந்தர் குறும்புடன் மித்ராவைப் பார்க்க அவளோ முகத்தை மறைக்க அவனின் மார்பிற்குள் இடமிருக்கிறதா என்று தேடினாள்.

அவளின் அழுகையும் குறைந்திருக்க, “இவளுக்கு சந்தோசமோ துக்கமோ தனியாக இருந்தால் யாரிடமும் கட்டமாட்டா சிஸ்டர். அதே என்னைப் பார்த்துவிட்டால் அனைத்தையும் கொட்டி தீர்த்துவிடுவாள்..” அவன் புன்னகையுடன் விளக்கம் கொடுக்க, “ஜித்து” என்று சிணுங்கினாள்.

நர்ஸ் சிரித்தபடியே, “அவங்க அப்பா கண்ணு முழித்துவிட்டார். நீங்க இருவரும் போய் பாருங்க” என்று சொல்லிவிட்டு செல்லவே மனைவியுடன் அறைக்குள் நுழைந்தான் இந்தர்.

கையில் இருந்த கூடையை ஓரமாக வைத்தவன், “என்ன மாமா திடீர்ன்னு இப்படி எங்களை எல்லாம் பயமுறுத்திட்டீங்க. மித்ரா ரொம்பவே அழுகிற பாருங்க. என்னால் சமாதானமே சொல்ல முடியல” அவன் மாமனின் அருகே அமர்ந்து கையைப் பிடித்துக் கொண்டான்.

அவரின் மறுபுறம் அமர்ந்து, “அப்பா” என்ற மகளின் தலையைச் செல்லமாக வருடிவிட்டு அவளின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து, “எதற்காகவும் அழுகக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல” என்று கடிந்து கொண்டாள்.

தந்தையின் கையில் குழந்தையாக மாறிப்போனவள், “ரொம்ப பயந்துட்டேன் அப்பா. எங்கே நீங்களும் என்னைவிட்டு போயிருவீங்களோன்னு” என்றவள் சொல்ல அவரோ மறுப்பாக தலையசைக்கவே அவளின் முகத்தில் தெளிவு பிறந்தது.

மருமகனின் பக்கம் திரும்பியவர், “நீங்க எப்போ வந்தீங்க மாப்பிள்ளை” என்று கேட்கவே, “இன்னைக்கு காலையில்தான் மாமா கிளம்பி வந்தேன். திடீர்ன்னு நெஞ்சுவலி என்று சொன்னதில் நானே பயந்துட்டேன். வேலையெல்லாம் விஷ்வா, வினோத்திடம் கொடுத்துட்டு வந்துட்டேன்” என்றவன் சொல்ல அவரும் சரியென்று தலையசைத்தார்.

அதன்பிறகு அவரின் அறையிலிருந்து வெளியே வந்ததும், “மித்ரா நான் இங்கே இருக்கேன். நீ போய் சாப்பிட்டுவிட்டு வா” என்று அவளை அனுப்ப அவளோ பிடிவாதத்துடன் நின்றாள்

“நான் போக மாட்டேன்” என்று பிடிவாதம் பிடித்தாள் மித்ரா.

வேறு வழியில்லாமல் நர்ஸிடம் திரும்பி, “நீங்க கொஞ்சம் பார்த்துகோங்க சிஸ்டர்.. நாங்க இருவரும் சாப்பிட்டு வருகிறோம்” என்றவர் சொல்ல அவரும் சரியென்று தலையசைத்தார்.

சங்கமித்ராவுடன் கேண்டீன் சென்றவன், “மித்து குழந்தை மாதிரி அடம்பிடிப்பது நல்லாவே இல்ல” அவள் மெளனமாக சாப்பிடவே கையைப்பிடித்து அழுத்தம் கொடுக்கவே லேசாக கண்கள் கலங்கியது.

“ஷ்.. சாப்பிடு” என்று மனைவியோடு சேர்ந்து சாப்பிட்டு எழுந்தனர்.

அடுத்த இரண்டு வாரம் மின்னல் வேகத்தில் செல்ல ரகுவரனை கண்ணும் கருத்துமாக மித்ரா பார்த்துக்கொள்ள, இந்தர்ஜித் வழக்கம்போல ஆபீஸ் சென்று வீடு திரும்பினான். 

விஷ்வா புதிய நிறுவனத்திற்கான வேலைகளைக் கவனிக்க, வினோத் கிளையின் கணக்குகளை சரிபார்க்கும் வேலையில் நாட்கள் நீரோடை போல நகர்ந்தது.  விஷ்வா மற்றும் வினோத் இருவரும் ஊருக்கு கிளம்பும் நாளும் வந்தது. சென்னை வந்து இத்தனை நாளான பிறகும் தன்னவளை பார்க்கவில்லையே என்ற வருத்ததுடன் காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தான் விஷ்வா.

அவன் ஸ்டேரிங்கை பிடித்தபடி சுற்றிலும் பார்வையைச் சுழற்றவே சுரேஷ் மாலில் இருந்து வெளியே வருவதைக் கவனித்து அவனின் பெயர் சொல்லி அழைத்தான்.

அவனின் குரல்கேட்டு சட்டென்று திரும்பிப் பார்த்தவன், “இன்னைக்கு ஊருக்கு கிளம்பறேன்னு சொல்லிட்டு இருந்தீங்க?” என்ற கேள்வியுடன் அவனை எதிர்கொண்டான் சுரேஷ்.

“மதியம் பிளைட்” என்றவன் சொல்லவே, “விஷ்வா செம தலைவலி. ஒரு கப் காபி குடிச்சா நல்ல இருக்கும், காரை நல்ல காபி ஷாப்க்கு விடு” என்றபோது தான் சுரேஷ் அங்கே நிற்ப்பதை கவனித்தான்.

“ஹாய் சுரேஷ்.. இன்னைக்கு என்ன இங்கே வந்திருக்கீங்க” என்றவன் விசாரிக்கவே தான் வந்த வேலையைப் பற்றி கூறியவனிடம் காபி ஷாப் எங்கிருக்கு என்று இருவருமே விசாரித்தனர்.

அவன் சிரிப்புடன் பைக்கை எடுத்துகொண்டு, “என் பின்னாடியே வாங்க ஸார்” என்று சொல்லிவிட்டு செல்லவே வினோத் காரில் ஏறியதும் அவனைப் பின்தொடர்ந்தான்.

சுரேஷ் சென்னையிலிருந்த அத்தனை தெருக்களிலும் வளைந்து செல்வதை கண்ட வினோத், “விஷ்வா சத்தியமா முடியலடா. இவன் என்ன இவ்வளவு தூரம் போறான். ஒரு கப் காபிக்கு என்னை இந்தப்பாடு படுத்தறானே” பொறுமை இழந்து புலம்பினான்.

விஷ்வாவின் கவனம் சாலையில் மீதிருந்த போதும், ‘தினமும் எனக்கு போன் பண்ணிட்டு இருந்தா? நான் பேசல என்றாலும் அவளே கேள்விகேட்டு அதற்கு பதிலை வாங்கி விடுவாள். இப்போ இரண்டு வாரமாக அவளிடம் இருந்து ஒரு மெசேஜ் கூட வரலையே?’ என்ற எண்ணத்துடன் சுரேஷ் வண்டியின் பின்னோடு காரை நிறுத்தி திரும்பிப் பார்த்தான்.

அடுக்குமாடி குடியிருப்பைக் கண்டதும், “என்ன சுரேஷ் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டீங்க போல” என்றான் விஷ்வா புருவத்தை சுருக்கி கேலியாக கேட்டான்.

“முதலில் எல்லாம் காஃபி என்றால் அது மித்ரான்னு சொல்லுவோம். அவ இங்கிருந்து போன பிறகு சம்மு காஃபிதான் பெஸ்ட். வாங்க அவளிடம் சண்டை போட்டாவது உங்களுக்கு காஃபி வாங்கி தரேன். நீங்க இருவரும் வந்த விஷயம் அவளுக்கு தெரியாது. நேரில் பார்த்தால் ரொம்பவே ஷாக் ஆகிடுவா” என்று சொல்லிக்கொண்டே அவன் முன்னே சென்றான்.

அவனின் பேச்சில் வெளிபட்ட உரிமையைக் கவனித்த விஷ்வா, ‘சம்யுக்தாவை தான் சொல்றானோ’ என்றவன் யோசித்தான்.

“இன்னைக்கு காஃபி கிடைக்காமல் இருக்கட்டும் அப்புறம் இருக்கு..” என்று வினோத் கடுப்பில் திட்டி தீர்த்தான்.

மூவரும் லிப்டில் பயணித்து வீட்டின் முன்னே சென்று நின்றனர். சுரேஷ் காலிங்பெல் அடிக்கவே, “ஐயோ கதவு திறந்துதான் இருக்கு உள்ளே வா” எரிச்சலுடன் கத்தினாள் சம்யுக்தா.

“சம்மு மூணு கப் காஃபி” என்று ஆர்டர் கொடுக்க சமையலறையில் இருந்து வெளியே வந்து அவனை முறைத்தாள்.

 “ஏன்டா வெளியே எந்த கடையுமே உனக்கு கிடைக்கலயா? நீ மட்டும் ஏன்தான் உயிரை வாங்கிறீயோ? இன்னைக்கு என்ன மூணு கப் கேட்கிற?” என்றவள் இடையில் கையூன்றி அவனிடம் கேட்டவளின் பின்னோடு விஷ்வா மற்றும் வினோத் இருவரும் நுழைந்தனர்.

சுரேஷ் அவளைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டிட, “அவன் போகட்டும் உன்னை அப்புறம் கவனிச்சுக்கறேன்” என்று கடுப்புடன் கூறிய சம்யுக்தாவின் பார்வைக்கு குறும்பையே பதிலாக கொடுத்தான்.

இருவரையும் புன்னகையோடு வரவேற்று அமர வைத்துவிட்டு, “எப்போ இலங்கையில் இருந்து வந்தீங்க? ஏதாவது ஆபீஸ் விஷயமாக வந்திருக்கீங்களா?” என்ற கேள்வியுடன் சமையலறைக்குள் நுழைந்தாள்.

“நாங்க வந்து இரண்டு வாரம் ஆகப்போகுது சம்மு. மித்ராவின் அப்பாவிற்கு திடீரென்று நெஞ்சுவலி அதனால் இந்தர் வந்த அன்னைக்கே திரும்பிப் போயிட்டான். நானும், விஷ்வாவும் மட்டும்தான் இங்கே வேலையை முடிச்சிட்டு இன்னைக்கு கிளம்புவதாக முடிவெடுத்து இருக்கோம்” என்றவன் பதில் கொடுத்தான்.

அவர் சொன்னதைகேட்டு பதறாமல், “மித்ரா எங்களுக்கு போன் பண்ணி சொன்னா அண்ணா” என்று சம்யுக்தா காபியுடன் வரவே மூவரும் எடுத்துக்கொண்டனர்.

சம்யுக்தா அவனின் பார்வை பதித்தபடி அமைதியாக இருக்க செல்போனை நொண்டியபடி அமர்ந்திருந்த விஷ்வாவின் மீது கோபமாக வந்தது. சுரேஷ், வினோத் இருவரும் தங்களுக்குள் வேறு விஷயங்களை பேசி கொண்டிருந்தனர். விஷ்வா தனக்கு வரும் போன் நம்பருக்கு அழைக்க திடீரென்று சம்யுக்தாவின் போன் அலறியது.

அவள் எழுந்து செல்ல நினைக்க, “சம்மு உனக்கு அம்மா மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்காங்க. நீ போட்டோ பார்த்தபிறகும் பதில் சொல்லாமல் இருக்கிறன்னு வீட்டில் சரியான சண்டை” என்றான் சுரேஷ் வேண்டுமென்றே.

விஷ்வா சட்டென்று நிமிர்ந்து அவளை முறைக்க, “அம்மாவுக்கு பிடிச்சிருந்தா சரின்னு சொல்லிரு சுரேஷ்” என்றாள் தோள்களைக் குலுக்கியபடி. சம்யுக்தா சரியென்றதும் சுரேஷ் முகம் பளிச்சென்று மலர்ந்துவிட விஷ்வாவின் முகம் கடுகடுத்தது.   

“சம்மு உனக்கு கல்யாணமா? அண்ணனுக்கு எல்லாம் அழைப்பு உண்டா?” வேண்டுமென்றே வம்பிற்கு இழுக்க, “உங்களுக்கு தான் அண்ணா முதல் அழைப்பே” என்றவளின் பார்வை அழுத்தத்துடன் விஷ்வாவின் மீது படிந்து மீண்டது. அவன் மீண்டும் அவளின் நம்பருக்கு அழைக்கவே போன் அடிக்க தொடங்கியது.

அவள் எடுக்காமல் அங்கேயே அமர்ந்து, “விஷ்வா உங்களுக்கு எப்போ கல்யாணம்?” என்று அவனை வெறுப்பேற்றினாள்.

“உன் கல்யாணத்து அன்னைக்குதான்” என்றவன் வார்த்தைகளை கடித்து துப்பினான். அவனின் வார்த்தைகளில் வெளிபட்ட கோபத்தை கவனித்த சுரேஷ் புருவங்கள் கேள்வியாக சுருங்கியது.

வினோத் இருவரையும் மாறி மாறி பார்க்க, “காதல், கல்யாணம் உங்க வாழ்க்கையிலேயே இல்லன்னு சொல்லிட்டு இருந்தீங்க. ஆனால் மனுஷங்க மனசு மாறிட்டே இருக்கும்னு உங்களைப் பார்த்தா புரியுது” என்றாள் முகத்தை சுளித்தபடி.

“அதை நீ சொல்றீயா? அன்னைக்கு என்னை லவ் பண்றன்னு சொல்ல வந்தவள், இன்னைக்கு வேறொருத்தனை கல்யாணம் பண்றதுக்கு சரின்னு சொல்ற” என்றவன் எகிறினான்.

இந்த கேள்விக்காக காத்திருந்தவள் போல, “பின்ன காலம் முழுக்க உங்களை நினைச்சிட்டு  கன்னியாகவே இருக்கணுமா?” என்று எகிறினாள்.

அதுவரை பொறுமையை இழுத்து பிடித்து வைத்திருந்த விஷ்வா, “அப்புறம் எதுக்குடி தினமும் போன் பண்ணி மனுஷனை உயிரை வாங்கின? தினமும் மறக்காமல் மெசேஜ் பண்ணுவ. நீ நினைச்ச நெருங்கி வந்து என் நிம்மதியைக் கெடுப்ப. பிடிக்கலன்னா விலகி நின்று மனுசனோட உயிரை வாங்குவியா?” என்று அவனுடன் சண்டைபோட்டான்.

அவள் எதுபற்றி யோசிக்காமல், “பிடிக்காதுன்னு சொல்றவனை நினைக்க நான் என்ன முட்டாளா?” என்றவள் சொல்லவே அடுத்தநிமிடம் அவனின் கரங்கள் அவளின் கன்னத்தை பதம் பார்த்தது.

அவள் கன்னத்தில் கைவைத்தபடி நிற்க“என்னடி விட்டா பேசிட்டே போற? நான் இலங்கையில் நிம்மதியாக இருந்தேன். நீயாக வந்து காதலைச் சொல்லி கல்யாணமே வேண்டான்னு இருந்தவன் மனசில் கல்லை எறிஞ்சிட்டு இப்போ வேறொருத்தனை கல்யாணம் பண்றன்னு என்னிடமே சொல்ற” என்றவன் விரல்நீட்டி எச்சரித்தான்.

தன் தோழியை அடித்த கோபத்தில் எழுந்த சுரேஷ், “என்ன விஷ்வா மித்ராவோட க்ளோஸ் பிரெண்ட் என்பதால் தான் அமைதியாக இருந்தேன். சம்முவையே கை நீட்டி அடிக்கிறீங்க. அவ்வளவு உரிமையை யாருங்க உங்களுக்கு கொடுத்தது” என்று கேட்டான்.

சட்டென்று அவனை திரும்பிப் பார்த்த விஷ்வா, “எனக்கு அடிக்க உரிமை இல்லன்னு இவளை சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்” என்றவன் கேட்க சம்யுக்தா உதட்டைக் கடித்துக்கொண்டு அவள் தரையை நோக்கினாள்.

சுரேஷ் அர்த்தம் பொதிந்த பார்வையை அவளின் பக்கம் வீசிவிட்டு, “சம்மு ஏன் மெளனமாக இருக்கிற” என்றவன் கேட்கவே அவள் பதில் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள்.

அவனை விளக்கி அவளின் எதிரே வந்து நின்ற விஷ்வா அவளின் விழிகளை நேருக்கு நேர் சந்தித்து, “உன்னை எனக்கு பிடிக்காதுன்னு நீயாக நினைச்சுகிட்ட என்ன அர்த்தம்? நான் உன்னிடம் சொன்னேனா உன்னை பிடிக்கவே இல்லன்னு.. காதல், கல்யாணம் பிடிக்கல என்றுதான் சொன்னேன். ஆனால் உன்னை பிடிக்கலன்னு சொல்லலடி” என்றதும் அவளின் கண்கள் கலங்கியது.

சுரேஷ் மற்றும் வினோத் இருவரும் அமைதியாக நின்றிருக்க, “சங்கமித்ரா உயிர் தோழி நீ உனக்கு யாருமில்லன்னு தெரிஞ்ச நாளில் இருந்தே உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் அனுபவிக்காத சந்தோஷத்தை உனக்கு காட்டணும் என்ற எண்ணம் இருக்கும். உன்னை பிடிக்காமல் அன்னைக்கு அப்படி சொல்லல சம்மு” என்றவன் தவிப்புடன் தன் செயலுக்கான விளக்கத்தை கொடுத்தான்.

அவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ சிவந்திருந்த கண்களில் பார்வையைப் பதித்தபடி, “ஏதோவொரு கோபத்தில் அடிச்சிட்டேன் மன்னிச்சுக்கோ” என்றான்.

அவளோ முறுக்கிக்கொண்டு, “நீ அடிச்சிட்டு சாரி சொன்னால் சமாதானம் ஆகணுமா? எனக்கு இப்பவே ஐஸ்கிரீம் வாங்கி தா..” என்றவள் சிணுங்கலோடு கூறவே அவனும் சிரிப்புடன் தலையசைத்தான்.

அடுத்த நிமிடமே அவனோடு ஐஸ்கிரீம் பார்லர் கிளம்பியவளை கண்ட சுரேஷ், “சம்மு எப்படியோ அவரோட வாயைக் கிளறி உண்மையை வாங்கிட்ட. சீக்கிரமே கல்யாண ஏற்பாட்டைக் கவனிக்க சொல்லி மித்ராவிடம் சொல்லணும்” என்றவன் குறும்புடன் பதில் கொடுத்தான்.

அவள் வெக்கத்துடன் விஷ்வாவின் தோள் சாயவே, “மித்ராவிடம் சொல்லாதீங்க. நான் நேரில் போய் அவளிடம் சொல்லிக்கிறேன்” என்றவன் சிரிப்புடன் கூறினான்.

சுரேஷிற்கு அவசரமாக ஆபீஸ் போன் வரவே, “சரி நீங்க இருவரும் போயிட்டு வாங்க” என்றான்.

வினோத் எதிரே வந்து நின்ற சம்யுக்தா, “அண்ணா நீங்களும் வாங்க” என்றதும், “இல்லம்மா இப்போதான் காபி குடிச்சேன். நீங்க இருவரும் போயிட்டு வாங்க” அவர்களுக்கு தனிமைக் கொடுக்கும் விதமாக கூறினான்.

“காபி குடிச்சா ஐஸ்கிரீம் சாப்பிட கூடாதா?” என்று கேட்க, “இல்லம்மா மித்ரா அன்னைக்கு அறைந்தில் இருந்து ஐஸ்கிரீம் பெயரைக் கேட்டாலே அவ அடிச்சதுதான் ஞாபகம் வருது” என்றான் இடது கன்னத்தை தடவியபடியே.

அடுத்த நிமிடமே வலது கன்னத்தைப் பதம் பார்த்தது சம்யுக்தாவின் கரங்கள்!

விஷ்வா மற்றும் சுரேஷ் இருவரும் சிரிக்க, “அண்ணன் தம்பி இருவரும் காதலிக்கிற பொண்ணுங்களுக்கு கை நீளமாகவே இருக்கே அது ஏன்டா?” என்று பரிதாபமாக கேட்டான்.

சம்யுக்தாவின் பக்கம் திரும்பி, “இப்போ ஏன் நீ அன்னை அடிச்ச?” என்று கேட்கவே, “மித்ரா அடிச்சதும் ஐஸ்கிரீம் நினைப்பே இல்லன்னு சொன்னீங்க இல்ல. இப்போ நான் அடிச்சதும் கோபம் வந்திருக்கும். இப்போ ஐஸ்கிரீம் சாப்பிட்டா கோபம் மறந்து போயிரும்” என்று லாஜிக் பேசிய தன்னவளை ரசித்தபடி நின்றான் விஷ்வா.

“ஆகமொத்தம் மித்ராவின் உயிர் தோழி என்று நல்லாவே நிரூபிக்கிற! என்னை அடிக்கதுக்கு மட்டும் எங்கிருந்துதான் கிளம்பி வராங்களோ. நான் பிறந்த நேரமே சரியில்ல போல சரி வா போலாம்” என்று புலம்பியபடி  இருவரையும் அழைத்துக்கொண்டு சென்றான் வினோத்.

 

     

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!