Maane – 30 Final

images (89)-b6718215

Maane – 30 Final

அத்தியாயம் – 30

இதற்கிடையே…

மரகதம் வீட்டு மாடிப்படிகளில் அமர்ந்து சிந்தனையில் மூழ்கி இருந்தாள் சங்கமித்ரா. ஒருபக்கம் இந்தரின் தவிக்கவிட்ட நினைவு வந்து அவளை கொள்ளாமல் கொன்றது. மற்றொரு பக்கம் நண்பனின் வாழ்க்கை நன்றாக இருக்க இதை செய்யதுதான் ஆகவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது.

வீட்டிற்குள் பாஸ்கர் – மரகதம் இருவரும் பேசியபடியே சமைப்பத்தை கண்டு அவளின் நினைவுகள் பின்னோக்கி சென்றது. கடைசியாக அவர் வீட்டைக் காலி செய்து செல்வதாக சாவியைக் கொடுத்துவிட்டு சென்றபிறகு இவள் அவர்களைக் கவனிக்கவில்லை. ஆனால் அவர்கள் அன்றே இணைந்துவிட்டனர்.

விஷ்வா சென்னையிலிருந்து வருவதற்கு ஒருநாள் முன்னதாக அத்தையின் வீட்டை எட்டியே பார்க்கவில்லையே என்ற எண்ணத்துடன் சுவர் ஏறிக் குதித்து சென்றபோது அங்கே பின் வாசலில் அமர்ந்து கணவனும், மனைவியும் பேசிக்கொண்டு இருந்தனர்.

இத்தனை நாளாக அருகே இருந்தும் இந்த ஒரு விஷயத்தை கவனிக்கவில்லையே என்ற எண்ணத்துடன் சத்தமில்லாமல் வீட்டிற்குள் நுழைந்தாள் சங்கமித்ரா.

அதே நேரத்தில் ரகுவரனுக்கு உடல்நிலை சரியில்லாமல் அன்று மருத்துவமனையில் நடந்த விஷயத்தைக் கணவனிடம் பகிர்ந்த மரகதம், “இந்த மித்ரா பாருங்க. அதற்கு பிறகு இந்தப்பக்கம் வரவே இல்ல. நான் அவ்வளவு வேண்டாதவளாகப் போயிட்டேன்” என்று வருத்தப்பட்டார்.

“இந்த கண்கொள்ளா காட்சியை வர்ணிக்க வார்த்தையே இல்ல அத்த. கிழக்கும், மேற்கும் ஒரு இடத்தில் இருக்கவே முடியாதே. ஆனால் நீங்க இருவரும் சேர்ந்து இருப்பதைப் பார்க்கும்போது அவ்வளவு சந்தோசமாக இருக்கு” சட்டென்று இருவரும் குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தனர்.

அவள் புன்னகையுடன் நின்றிருக்க, “வா மித்தும்மா. இப்போதான் உன்னைப் பற்றி பேசிட்டு இருந்தேன்” என்றவர் எழுந்து சமையலறைக்கு செல்ல நினைக்க, “அத்தை உட்காருங்க” என்று அவரை இழுத்து அமர வைத்தவளின் பார்வை பாஸ்கரின் மீது படிந்தது.

அவர் மெளனமாக இருக்க,“என்ன மாமா திடீர் மாற்றம்” என்ற கேள்வியுடன் மாமியாரின் அருகே அமர்ந்தாள் மித்ரா.

மரகதம் எதுவும் பேசாமல் கணவனை பார்க்க, “எங்க இருவரின் மீதும் தவறு இருக்கும்மா. என்னவோ இதெல்லாம் எங்க வாழ்க்கையில் நடந்துபோச்சு. இப்போ அதெல்லாம் மறந்துட்டு ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழ்கிறோம்” என்று மனநிறைவுடன் கூறினார் பாஸ்கர்.

“இத்தனை வருஷமாக பேசாத நிறைய விஷயங்களை பேசியபோது எவ்வளவு சந்தோஷத்தை இழந்து இருக்கோம்னு புரிஞ்சிது” என்ற மரகதத்தின் முகத்தில் தெளிவாக இருந்தது.

அதற்குள், “மருமகளே நீ மாமாவோடு பேசிட்டே இரு நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என்று எழுந்து செல்ல நினைத்தார் மரகதம்.

அவரின் கையைப்பிடித்து தடுத்த மித்ரா, “நீங்க இருவரும் பேசிட்டு இருங்க அத்தை நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என்றவள் ‘மருமகள்’ என்ற உரிமையை அவள் சொல்லாமல் நிலைநாட்டினாள்.

அவள் செல்வதைக் கவனித்தபடி அமர்ந்திருந்த மரகதம், “எவ்வளவு பேச்சு இவளை தவறாக பேசியிருப்பேன். பாவம் தாயில்லாத பிள்ளையை நானும் வாட்டி வதச்சிட்டேன்” கணவனிடம் சொல்லி வருத்தப்பட்டார்.

தன் மனைவியைப் போல அவரும் அதே மன வருத்தத்தில் தான் இருந்தார். சின்னப் பெண்ணாக இருந்தாலும் அவளுக்கு இருக்கும் மனபக்குவம் தனக்கில்லையே என்று நினைத்தார்.

சட்டென்று நிமிர்ந்து மனைவியைப் பார்த்து, “மித்ரா படபடன்னு பேசுவாளே தவிர கோபத்தை பிடிச்சு வைக்க தெரியாது. இவளைத் தவிர வேற யாரு மருமகளாக நம்ம வீட்டுக்கு வந்திருந்தாலும் நடந்த கதையே வேறாக இருக்கும். நம்ம பசங்க மேல நம்பிக்கை இல்லாமல் என்னன்னவோ பேசிட்டேன்”  என்று சொல்லும்போது அங்கே வந்தாள்.

சிறிதுநேரம் அங்கே அமைதி நிலவியது.

மித்ரா காபியை பருகியபடி அமைதியாக இருக்க, “இந்தர்ஜித் ஆசைப்பட்டு காதலித்த பெண்ணையே கல்யாணம் செய்துகிட்டான். சின்னவன்தான் இன்னும் முரண்டு பிடிச்சிட்டே இருக்கான். அவனுக்கும் ஒரு கல்யாணத்தை பண்ணிட்டா மனசுக்கு நிம்மதியாக இருக்கும்” கணவனிடம் மகனின் திருமணப்பேச்சை எடுத்தார்.

பாஸ்கரும், “ஆமா மரகதம்” என்று சொல்ல சங்கமித்ரா மட்டும் மெளனமாக இருந்தாள். பெரியவர்கள் இருவரும் பேசும்போது தலையிடாமல் மெளனமாக இருந்தாள்.

“என்னடா நீ அமைதியாக இருக்கிற” என்று பாஸ்கர் சிந்தனையோடு கேட்டார்.

“பசங்களை இருவரும் ரொம்ப நல்லாவே வளர்த்தி வச்சிருக்கீங்க.. என்ன சொன்னாலும் காதிலேயே வாங்கமாட்டேன் என்ற லெவலில் இருக்காங்க. அவங்களை வழிக்கு கொண்டுவர என்னவெல்லாம் செய்யணும் தெரியுமா?” சலிப்புடன் கூறவே மற்ற இருவரும் அவளை புரியாத பார்வை பார்த்தனர்.

“ஏன்மா அவனுங்க குணம் சரியில்லையா? வேற ஏதாவது பொண்ணுங்க பின்னாடி சுத்தறாங்களா?” என்று கவலையோடு மருமகளை ஏறிட்டார் மாமியார்.

சட்டென்று கலகலவென்று சிரித்தவள், “அத்தை உங்க பசங்க அதில் எல்லாம் ஸ்ரீ ராமனுங்க. என்ன கல்யாணம் என்று வரும்போது அவங்க யோசிக்காமல் பிடிவாதம் பிடிக்கும்போது தான் எரிச்சலாக வருது. இந்தரை சம்மதிக்க வைக்க மஸ்கெலியா கிளம்பி வந்தேன். இப்போ உங்க இரண்டாவது மகனை சம்மதிக்க வைக்க எந்த ஊரில் போய் தலைமறைவு ஆகலாம்னு திங்கிங்ல இருக்கேன்” என்று அவள் சொல்ல மற்ற இருவரும் சிரித்தனர்.

அதன்பிறகு தனக்கும், இந்தருக்கும் திருமணமாக விஷயத்தை கூறி, “இப்போ விஷ்வாவை வழிக்கு கொண்டுவர இந்தரைப் பிரிந்து போகணும்” என்று விரல்களை ஆராய்ந்தபடி அமர்ந்தவளின் முகம் களையிழந்து இருந்தது.

“இந்தர்ஜித் பாவம்மா. அவன் உன்னைவிட்டு விலகி நிற்க நான் காரணமே தவிர அவன் மேல எந்த தப்பும் இல்லை. அதனால் இந்த பிரச்சனையை முடிந்தவரை பக்கத்தில் இருந்தே முடிக்கப் பாருடா” பாஸ்கரன் தன் தவறை ஒப்புக்கொண்டு அவளிடம் மன்னிப்பும் கேட்டார். மரகதமும் அவரைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்கவே அவளின் மனம் லேசானது.

தன்னை தவறானப் பெண் என்று சொன்னவர்களின் வாயால், ‘நல்ல பெண்’ என்று பெயர் வாங்கினாள். அந்த ஒரு செயலே தன்னை வளர்த்த தந்தைக்குப் பெருமை என்று நினைக்கும்போது அவள் மனம் நிறைந்தது.

சட்டென்று தன்னை மீட்டுக்கொண்டு, “உங்க சின்ன மகனை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கணும். அதே நேரத்தில் இந்தரையும் ரொம்ப தவிக்க விடாதளவிற்கு பக்காவாக ஒரு ப்ளான் போடணும்” என்றவளை இருவருமே கேள்வியாக நோக்கினர்.

அவர்களின் மனநிலை உணர்ந்து, “சம்யுக்தா என் உயிர் தோழி. நம்ம விஷ்வாவிற்கு அவளை ரொம்ப பிடிக்கும். அதுதான் இருவரையும் சேர்த்து வைக்க முடிவெடுத்திருக்கேன். ஆனால் விஷ்வா வீண் பிடிவாதம் பண்ணுவான்” என்று கூறவே அவர்களும் சிந்தனையில் ஆழ்ந்தனர்.

சிறிதுநேர சிந்தனைக்குப் பிறகு, “அவன் ஊரிலிருந்து வந்ததும் ஒரு முடிவெடுக்கலாம்” மரகதம் தன் கருத்தைச் சொல்ல மற்ற இருவரும் அந்த கருத்தை ஏற்றுக்கொண்டனர்.

விஷ்வா சென்னையில் இருந்து கிளம்பியதும், “விஷ்வாவிடம் ஏதாவது மாற்றம் இருக்கா சம்மு”  என்று கேட்கவே அவள் தோழியிடம் விஷயத்தை முழுவதும் கொட்டித் தீர்த்தாள். அவன் ஊரிலிருந்து வந்த நாளில் இருந்து திருமண பேச்சை எடுத்துக்கொண்டே இருந்தாள்.

அவன் வேண்டுமென்றே வெறுப்பது போல நடிக்கவே, ‘என்னிடம் பொய் சொல்றீயா விஷ்வா… நீயே சம்யுக்தாவை விரும்பும் விஷயத்தை சொல்ல வைக்கிறேன் பாரு..’ என்று மனதிற்குள் சபதம் எடுத்தாள். அதற்கு தகுந்த மாதிரியே அண்ணனும், தம்ம்பியும் இணைந்து அவளை வேண்டும் என்றே வெறுப்பேற்ற தகுந்த நேரம் பார்த்து இருவருக்கும் வாய்ஸ் ரெகார்ட் அனுப்பிவிட்டு அத்தையின் வீட்டில் வந்து அமர்ந்துவிட்டாள்.

திடீரென்று வந்து மருமகளிடம், “என்னாச்சு” என்று கேட்ட அத்தையிடம் தன் திட்டத்தை ஒப்பித்துவிட்டு தந்தைக்கு அழைத்து, “அப்பா உங்க மாப்பிள்ளை வந்தால் நான் இங்கே இருக்கேன்னு சொல்லாமல் அவங்க சொல்றதை அப்படியே டெவலாப் பண்ணி அவங்களை திசைதிருப்பி விட்டுடுங்க” என்றாள்.

அவரும் மகளின் செயல் சரியாக இருக்குமென்ற நம்பிக்கையில் சரியென்று சொல்லிவிட்டார்.

அடுத்து மாமனாரின் பக்கம் திரும்பியவள், “மாமா நீங்க அப்பா வீட்டுக்கு போயிட்டு திரும்பும் வழியில் எதிரே போய் நான் எழுதி கொடுத்ததை மட்டும் வரி மாறாமல் பேசிட்டு வந்துவிடுங்கள்” என்று அனுப்பி வைத்துவிட்டாள்.

அதன்பிறகு அவளின் கல்லூரி நண்பர்களுக்கு அழைத்து அனைவரிடமும் தகவல் சொன்னவள் அவர்களின் போன் செய்தால் என்ன பேச வேண்டுமென்று சொல்லிவிட்டு, “எல்லோரும் சீக்கிரம் அனைத்து ஏற்பாட்டையும் கவனிங்க” என்று ஞாபகபடுத்திவிட்டு போனை வைத்தாள்.

இத்தனை நாட்களாக அவளிடம் பாராமுகம் காட்டிய மரகதம் மருமகளுக்கு பிடித்த உணவுகளாக சமைத்து சாப்பிட வைக்க நினைக்க, “இல்ல அத்தை எனக்கு வேண்டாம்.. பாவம் இந்தர், விஷ்வா இருவரும் என்னை தேடிட்டு இருப்பாங்க. இந்த நேரத்தில் நான் சாப்பிட்டு சந்தோசமாக இருக்க முடியாது. அதனால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் என்னை மன்னிச்சிடுங்க அத்தை” என்று நாசுக்காக சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள்.

அவள் தன் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் பாசத்தை உணர்ந்து கண்கள் கலங்கி திரும்பும்போது அவர்களின் வீட்டு வாசலில் கார் வந்து நின்றது. அதிலிருந்து சுரேஷ் மற்றும் சம்யுக்தா இருவரும் இறங்குவதைக் கண்டு புன்னகையுடன் வாசலுக்கு விரைந்தாள் சங்கமித்ரா.

மரகதம் மருமகளைப் பின்தொடர்ந்து வெளியே செல்ல, “சம்மு எப்படி இருக்கிற? பயணம் எல்லாம் எப்படி இருந்துச்சு. நம்ம பசங்க அத்தனை பேரும் உன் கல்யாணத்திற்கு தீயா வேலை செய்துட்டு இருக்காங்க” என்று முகம் மலர கூறியவளின் தோளில் கண்ணீரோடு சாய்ந்தாள் சம்யுக்தா.

அவள் தோளை தட்டிகொடுத்து, “நான் இருக்கும்போது இதுக்கெல்லாம் என் தோழி அழுகவே கூடாது”என்று அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.

சுரேஷ் புன்னகையுடன் இருவரையும் பார்த்தபடி நிற்க, “யாரும்மா இது” என்று கேட்க இருவரையும் அறிமுகபடுத்தி வைத்தாள்.

மரகதம் சிரித்த முகமாக அவர்களை வரவேற்க, “எப்படி இருந்தவங்களை இப்படி மாற்றிவிட்டாயே மித்து.. நிஜமாவே உன்னோட முயற்சி இல்லாமல் இதெல்லாம் நடக்கவே நடக்காது தெரியுமா? ஐயோ இது நம்ம அத்தையா?” என்று தன் தோழியைப் பாராட்டிவிட்டு வியந்தாள் சம்யுக்தா.

மித்ரா எதுவும் பேசாமல் இருக்க, “சம்மு சொல்வது உண்மைதான் மித்து. இன்னைக்கு இவங்க இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக இருப்பது உன்னால்தான்” என்று சுரேஷ் கூறினான்.

அதற்குள் பாஸ்கர் வந்துவிட ஐந்து பேரும் ஐக்கியமாகிவிடவே சிறிதுநேரம் கலகலப்பாக சென்றது. அதன்பிறகு அவனிடம் விஷயத்தை கூறி அனுப்பிவிட்டு மற்றவர்கள் வீட்டில் இருந்தனர்.

அவளின் எண்ணவோட்டத்தை கலைக்கும் விதமாக வீட்டின் உள்ளிருந்து, “சங்கமித்ரா வீட்டிற்குள் வாம்மா” என்றார் பாஸ்கர். அவள் பதில் பேசாமல் எழுந்து உள்ளே செல்ல நால்வரும் கேம் விளையாட கேரம் போர்டை எடுத்துகொண்டு அமர்ந்தனர்.

அதே நேரத்தில் இந்தர் பார்வை யோசனையோடு தந்தையின் வீட்டை நோக்கியது. அங்கே வீடு வாடகைக்கு என்ற போர்டு பார்த்தும், ‘இவரு எப்போ வீட்டைக் காலி செய்தார்? மித்ராவைத் தேட போகும்போது அவர் எப்படி சரியாக அதே நேரத்திற்கு எதிரே வந்தார்’ என்ற கேள்வியுடன் நெற்றியை வருடினான்.

வினோத் மனமோ, ‘எனக்கு தெரிஞ்சு மித்ரா எங்கேயும் போயிருக்க மாட்டாள். இவனுங்க பேசியது தவறுன்னு உணர வைக்க இப்படி பண்ணிருக்கிற. மற்றபடி அவளுக்கு மற்றவர்களை காயப்படுத்தி பார்க்கும் எண்ணம் வரவே வராது’ என்று உறுதியாக நம்பினான்.

‘நான் வந்ததும் உண்மையை அவளிடம் சொல்லி இருக்கணும். அவளிடம் விளையாட நினைத்து நான் செய்த காரியத்தால் எல்லாமே தலைகீழாக மாறிபோச்சு’ என்று மனதினுள் நினைத்தபடி சோர்ந்துபோய் அமர்ந்திருந்தான் விஷ்வா.

சட்டென்று எழுந்த இந்தர் வீட்டின் கதவைத்திறந்து உள்ளே செல்ல மற்ற இருவரும் அவரவர் சிந்தனைகளில் மூழ்கியிருந்தனர். நேராக தங்களின் அறைக்கு சென்றவன் அவளின் பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா என்று ஆராய்ச்சியில் இறங்கினான். அவளின் உடைகள் அனைத்தும் அப்படியே இருப்பதை கண்டு சிந்தனையோடு வேகமாக மாடிக்கு சென்றான்.

அவர்கள் வீட்டின் மொட்டை மாடிக்கும், மரகதம் வீட்டின் மொட்டை மாடிக்கும் இடையே சிறிய கைப்பிடி சுவர் மட்டும்தான் தடையாக இருந்தது. இந்தர்ஜித் மூளை வேகமாக வேலை செய்ய, ‘வாசல் வழியாக சென்றால் மித்ரா மாடியில் இருந்தால் கண்டுபிடிக்க முடியாது’ என்ற சிந்தனையோடு கைப்பிடி சுவற்றை தாண்டி மறுபக்கம் குதித்தான்.

காலடி ஓசை கேட்காத அளவிற்கு மாடிப்படிகளைக் கடந்து வீட்டின் பின் வாசலில் கால் பதித்தான். அங்கே அவன் கண்ட காட்சியில் வியப்பில் விழி விரிய நின்றான் இந்தர்ஜித்.

பாஸ்கர் தன் இரு மருமகள்களுக்கும் நிகராக கேரம் விளையாட, “மாமா நீங்க மட்டும் விட்டுக்கொடுத்தீங்க அவ்வளவுதான் சொல்லிட்டேன்” என்று சம்யுக்தா தன் வருங்கால மாமனாரை பொய் கோபத்துடன் மிரட்டினாள்.

“ஏண்டி மாமாவே இப்போதான் விட்டுகொடுத்து வாழ ஆரம்பிச்சிருக்காரு. அவரை விட்டுகொடுக்க வேண்டான்னு சொல்ற.. உன்னை என்னடி பண்றது? இவங்களை எல்லாம் இப்படி சேர்க்க நான் என்ன பாடு பட்டேன்னு எனக்கு தான் தெரியும்” என்று சிரிப்புடன் தன் மாமியாரைப் பார்த்து குறும்புடன் கண்ணடித்தாள்.

அவள் கண்ணடிப்பதை கவனித்த பாஸ்கர், “மருமகளே அவ என் பொண்டாட்டிம்மா. நீ இந்தரை பார்த்து கண்ணடித்தால் பரவல்ல. இவளை பார்த்து என்ன செய்ய போற.. மாமா பாவம் இல்லையா?” என்று அவளிடம் வம்பு வளர்த்தார்.

“ஐயோ மாமா இந்த வயதில் நீங்க இவ்வளவு ஸ்மார்ட்டாக இருக்கீங்க. ஆனால் உங்களுக்கு எப்படி மாமா முட்டாள் பசங்க பிறந்தாங்க” என்று மித்ரா சளைக்காமல் எதிர் கேள்வி தொடுத்தாள்.

சம்யுக்தா வாயைப் பொத்தி சிரிக்க, “எல்லாம் உங்க அத்தைங்க மாதிரி மக்கு பசங்களாவே பிறந்திருக்கும்மா. அதுக்குதான் அடுத்த குழந்தையாவது என்னை மாதிரி பெத்துக்கலாம்னு சொல்றேன் இவ அதை காதிலேயே வாங்க மாட்டேன்றா..” என்று அவர் மனைவியை காதலாக பார்த்தாள்.

“மாமா இப்படி அவசர முடிவில் இறங்கிடாதீங்க. அப்புறம் எங்க குழந்தைகளை எல்லாம் யார் வளர்க்கிறது” என்று சம்யுக்தா பதற அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதற்குள் மரகதம் ஸ்வீட் எடுத்துகொண்டு மருமகளின் அருகே அமர்ந்தார்.

பாஸ்கர் பேசியதை கேட்டு அத்தையிடம் ரியாக்ஷன் இல்லை என்றதும், “என்ன அத்தை வெக்கமா?” என்று மித்ரா குறும்புடன் கண்சிமிட்டிச் சிரித்தாள்.

“ஏங்க மருமகள்கள் முன்னால் இப்படி மானத்தை வாங்கிறீங்க” என்று கணவனின் காதைப் பிடித்து திருகினார்.

அவரோ சிரித்தபடி, “மரகதம் மருமகள்களின் முன்னாடி இப்படி பண்ணாதே! அப்புறம் என்னை எப்படி மதிப்பாங்க சொல்லு. அவங்க இருவரும் கிளம்பிய பிறகு தனியா நூறு தோப்புகரணம் போடுறேன். ப்ளீஸ் காதை மட்டும் விட்டுவிடேன்” என்று அவர் மனைவியிடம் கெஞ்சுவதை பார்த்து மித்ராவும், சம்யுக்தாவும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

“அது அந்த பயம் இருக்கட்டும்” என்று கணவனை மிரட்டிவிட்டு, “ஏங்க மித்ரா இங்கே இருக்கும் விஷயத்தை பசங்ககிட்ட சொன்னீங்களா? பாவம் எங்கெல்லாம் தேடி அலையறாங்களோ தெரியல” என்று கவலை தோய்ந்த முகத்துடன் கூறினார் மரகதம்.

சங்கமித்ரா மாமனாரின் பதிலை எதிர்பார்க்க, “அவங்களை மதியமே பார்த்தேன். என்னிடம் மித்ரா பற்றிக் கேட்டதும் உன் மருமகள் எழுதி கொடுத்ததை ஒரு வரி மாறாமல் பேசிட்டு வந்துட்டேன்” என்றவர் சொல்லவே மற்றவர்களின் முகத்தில் தெளிவு பிறந்தது.

“பெரியவன் பாவம். சங்கமித்ரா இல்லாமல் ஒரு நிமிஷம் இருக்க மாட்டான். சின்னது சண்டையே போட்டாலும் இவளுக்கு சப்போர்ட் பண்ணுவான். அன்னைக்கு வீடு முழுக்க எண்ணேய் ஒற்றிவிட்டு இவ போய் சொன்னதும் இந்த விஷ்வா அவளுக்குதாங்க சப்போர்ட் பண்ணினான்” என்று கணவனிடம் நடந்ததை பகிர்ந்தார் மரகதம்.

மருமகளிடம், “அன்னைக்கு என்ன சொன்ன வானரங்களை உன் தலையில் நான் கட்டினேனா?” என்று மித்ராவின் காதை பிடிக்க வரும் முன்னே சட்டென்று நகர்ந்து அமர்ந்தாள் மித்ரா.

“இல்லன்னா மட்டும் உன் மகனுங்க ரொம்ப அறிவாளின்னு நினைக்கிறீயா மரகதம். நம்ம வீட்டில் உட்கார்ந்துட்டு அவங்க இருவரையும் ஊரை சுற்றித் தேட விட்டாளே மித்ரா அவதான் அறிவாளி உன் பசங்க அடி முட்டாளுங்க தான்” என்றவர் கேரம் விளையாடியபடி கூறினார்.

மரகதம் கணவனை முறைக்க, “மாமா அத்தை டென்ஷன் ஆகறாங்க” என்று சம்யுக்தா மெல்ல சொல்லிவிட்டு காயை குறிபார்ப்பது போல குனிந்து கொண்டார்.

“அத்தை” என்று மித்ரா அவரை சமாதானம் செய்ய போக, “என் புருஷன் சொல்றதும் உண்மைதானே. இரண்டு பேரும் பிரிந்திருந்து அவங்களை ரொம்ப அறிவாளியாக வளர்த்திவிட்ட மிதப்பில் இருந்தோம். இப்போ தான் தெரியுது இருவருக்கும் அறிவு அரை இஞ்ச் கூட வளரவே இல்லன்னு..” என்று சொல்லவே பாஸ்கர் சிரிக்க தொடங்கிவிட்டார்.

மாமா – அத்தை இருவரும் ஒருவரின் கருத்தை மற்றொருவர் ஏற்றுக்கொள்வதை பிரம்மிப்பாக பார்த்த சங்கமித்ராவின் நினைவுகள் பின்னோக்கி சென்றது. சம்யுக்தா மனநிறைவுடன் தோழியைப் பார்த்து கொண்டிருந்தாள்.

இவ்வளவு நேரமாக பதட்டத்துடன் தேடிய தன்னவள் பாதிப்பு இல்லாமல் தன் எதிரே இருக்கிறாள் என்ற நினைவே அவனின் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைக்க போதுமானதாக இருந்தது. தன் தாய் – தந்தை இருவரும் ஓரிடத்தில் ஒன்றாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியாகவும் இருந்தது.

அத்தோடு சம்யுக்தாவும் அருகில் இருப்பதை கவனித்த இந்தர்ஜித் யோசனையோடு வீட்டிற்குள் நுழைந்தான். ஆனால் அவனின் மனம் மறுநிமிடமே தன்னவளின் பக்கம் திரும்பிவிட்டது. பக்கத்தில் இருந்துகொண்டே தன்னை தெரு தெருவாக அலையவிட்டு அவளின் மீது மனதில் கோபம் வந்தது.

‘என்னை இவ்வளவு முட்டாளாக்கி இருக்கிறாளே’ என்ற கோபத்துடன் அவளின் அருகே சென்றான். அவனின் காலடி ஓசைகேட்டு திரும்பிய மித்ராவின் முகம் மலர, “ஜி..த்..து..” என்று மொத்த காதலை கண்களில் தேக்கியபடி எழுந்து நின்றாள்.

அவளை நேருக்கு நேராக பார்த்த இந்தர்ஜித்தின் கரங்கள் அவளின் கன்னத்தை பதம் பார்த்தது. அவள் அடியை வாங்கிய அதிர்ச்சியுடன் அவனை கண்ணீரோடு நிமிர்ந்து பார்த்தாள். மற்ற மூவரும் மகனை தடுக்க முடியாமல் சிலையாக உறைந்து நின்றனர்.

“எவ்வளவு நேரம் உன்னைத் தேடி அலைந்தேன் தெரியுமா? நீ இங்கே இவ்வளவு சந்தோசமாக இருக்கிற? நானும், என் தம்பியும் அங்கே நாய் மாதிரி எப்படியெல்லாம் உன்னை தேடி அலைஞ்சோம் என்று தெரியுமாடி” என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் தரையைப் பார்த்தபடி அமைதியாக நின்றாள் சங்கமித்ரா.

அவளின் பின்னோடு நின்ற தன் தாய் – தந்தையைப் பார்த்த இந்தர்ஜித், “நீங்க இருவரும் சேர்ந்து இருப்பதைப் பார்க்க ரொம்ப சந்தோசமாக இருக்கு. இவளை தவறாக பேசிய நீங்க இருவரும் அவளை மருமகளாக ஏற்றுக்கொண்டு அவளைத் தான்குவதைப் பார்க்கும்போது மனசுக்கு நிறைவாக இருக்கு. ஆனால் இப்பவும் ஒரு கண்ணில் வெண்ணையும், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கிறீங்களே அதைதான் தாங்கவே முடியல” என்றவன் கலங்கிய கண்களை இடது கையில் சட்டையில் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தான்.

நேராக தந்தையின் எதிரே வந்து நின்றவன், “அப்பா அவதான் விவரம் புரியாமல் விளையாடுறா என்றால் நீங்களும் அவளோடு சேர்ந்து எங்க இருவரையும் காயப்படுத்தி பார்க்கிறீங்களே இது எந்தவிதத்தில் அப்பா நியாயம். நீங்க அவளிடம் ஒரு வார்த்தை இப்படி செய்யாதேன்னு சொல்லாமல் இது என்னப்பா” என்று கேட்டான்.

பாஸ்கர் விளக்கம் கொடுக்கும் முன்னரே கை நீட்டி தடுத்துவிட்டு மனைவியின் பக்கம் திரும்பி, “நீ செய்ததெல்லாம் சரின்னு மட்டும் நினைக்காதே மித்ரா. உன்னை மட்டுமே உலகம்னு நினைக்கிற எங்க இருவரையும் நீ ரொம்ப நோகடிச்சிட்ட. அதனால் இனிமேல் என்னிடம் பேசும் வேலையை வச்சுக்காதே” என்றவன் வேகமாக வெளியேறிவிட்டான்.

அவன் வந்த வழியாக மாடியில் ஏறி மீண்டும் தன் வீட்டின் மாடியில் குதிப்பதைக் கண்ட வினோத், “என்னடா திருடன் மாதிரி சுவரெல்லாம் ஏறிக் குதிக்கிற. ஆமா மித்ரா அங்கேயா இருக்கிற” என்று சிந்தனையோடு அவனை எதிர் கொண்டான்,

அவனின் கேள்விக்கு தலையை ஆடிவிட்டு வேகமாக மாடியிறங்கி வாசலுக்கு செல்ல வினோத் நண்பனைப் பின் தொடர்ந்தான்.

அங்கே தலையைக் கையில் பிடித்தபடி அமர்ந்திருந்த விஷ்வா, “மித்து நீ எங்கிருந்தாலும் வந்துவிடு. நான் சம்யுக்தாவை மனசார விருப்பறேன். அவளைக் கல்யாணம் பண்ணிக்கவும் ஆசைப்படுறேன். என்னை மாற்ற நீ யாரோ வாழ்க்கையை உதாரணமாக காட்ட போறன்னு நினைச்சேன். ஆனால் ஒருநாள் கூட நீ இப்படி எல்லாத்தையும் உதறிட்டுப் போவேன்னு எதிர்பார்க்கல. பிளீஸ் மித்து எங்கிருந்தாலும் வந்துவிடு. நீதான் வின் பண்ணிருக்கிற. நான்தான் தோத்துப் போயிட்டேன்” என்று மனம் போன போக்கில் புலம்பினான்.

இந்தர்ஜித் தம்பியின் புலம்பலைக் கேட்டு தலையிலடித்துக் கொண்டு உண்மையைச் சொல்லும் முன்னரே, “விஷ்வா நீ பொய் சொல்லலையே” என்ற கேள்வி வந்த திக்கில் பார்வையைத் திருப்பினான். அத்தை வீட்டின் கைப்பிடி சுவற்றில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தபிறகு தான் அவனுக்கு உயிரே வந்தது.

இவ்வளவு நேரமாக மனதிலிருந்த பாரம் இறங்கிவிடவே,“எங்க அம்மா வீட்டில் இருந்துட்டு தான் எங்க இருவரையும் இப்படி அலைய விட்டியா?” என்று சண்டைக்கு வந்த விஷ்வா அப்போதுதான் அவளின் கன்னத்தில் பதிந்திருந்த விரல்களின் தடத்தைப் பார்த்தவன் சட்டென்று திரும்பி தமையனைப் பார்த்தான். ஏற்கனவே சங்கமித்ராவின் மீது கோபத்தில் இருந்த இந்தர் தம்பியின் பார்வையைத் தவிர்த்து வேறுபுறம் பார்த்தான்.

“அண்ணா மித்துவை அடிச்சியா?” கேள்வியாக புருவம் உயர்த்தினான் விஷ்வா.

சங்கமித்ரா நண்பனின் கைகளைப் பற்றி மறுப்பாக தலையசைத்தவளின் செயலைக் கவனிக்காமல், “அவளை அடிக்கிற வேலையெல்லாம் வச்சுக்காதே” என்று மிரட்டியவனை முறைத்தான் இந்தர்.

“என்னடா நீயும் அவளுக்கு சப்போர்ட் பண்ற. மத்தியானத்தில் இருந்து இவளை எப்படியெல்லாம் தேடினோம். இவ அங்கே உட்கார்ந்து நிம்மதியா தின்னுட்டு சந்தோசமாக இருக்கிற..” என்று எரிந்து விழுந்தான்.

சங்கமித்ரா அப்போதும் வாய் திறக்காமல் நின்றிருக்க, “அவ சாப்பிட்டதை நீ வந்து பார்த்தியா இந்தர்?” என்ற கேள்வியுடன் கேட்டைத் திறந்துகொண்டு மரகதம் வீட்டிற்குள் நுழைந்தார். அவரின் பின்னோடு ரகுவரன், பாஸ்கர், சம்யுக்தா மூவரும் வருவதைக் கண்டு சிந்தனையோடு நின்றிருந்தான் விஷ்வா.

அவனுக்கு தாய் – தந்தை இருவரும் சேர்ந்த விஷயம் தெரியாது என்றபோதும் இருவரையும் பார்த்தே அவர்களின் மனநிலையைக் கணித்து, ‘எங்களால் முடியாத ஒரு விஷயத்தை இவ எப்படி செய்திருப்பா.. சம்யுக்தா எப்போது வந்தாள்’ என்ற சந்தேகத்துடன் அமைதியாக இருந்தான் விஷ்வா.

மகன் தாயை முறைக்கவே படபடவென்று நடந்ததை கூறியவர், “அவ காலையிலிருந்து இன்னும் ஒண்ணுமே சாப்பிடல. நான் வற்புறுத்தி சாப்பிட அழைத்தபோதும் வரமாட்டேன்னு சொல்லிட்டு உட்கார்ந்து இருந்தா..” என்றவர் சொல்லவே விஷ்வா சம்யுக்தாவை பார்த்தான்.

சடாரென்று அவளை இழுத்துக்கொண்டு வீட்டின் உள்ளே சென்றவன், “நீ வா…” என்று நேராக சமையலறைக்குள் சென்றான் விஷ்வா.

சம்யுக்தா அவனின் பின்னோடு செல்ல வேகமாக அங்கே என்ன இருக்கிறதென்று பார்த்தவன் கோதுமை ரவை கிளறி தொட்டு சாப்பிட தேங்காய் சட்னி இருபது நிமிடத்தில் செய்ய இந்தர் தன்னவளை முறைத்தபடி ஹாலில் அமர்ந்திருந்தான்.

பெரியவர்கள் அமைதியாக இருக்க சம்யுக்தா கையை ஆராய்ந்தபடி இந்தர்ஜித் மற்றும் விஷ்வாவையும் மாறி மாறி பார்த்தாள். அவன் சாப்பாட்டு வேலை முடித்ததும், “ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு மானு” என்று வேகமாக படியேறிச் சென்றவன் அடுத்த சில நிமிடங்களில் உடையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தான்.

நேராக அவளை இழுத்துச்சென்று டைனிங் ஹாலில் அமர வைத்தவன் ரவையை பரிமாறிவிட்டு, “நீ வாயைத் திற நான் உனக்கு ஊட்டி விடுறேன்” என்று பாசத்துடன் சொன்ன விஷ்வாவைப் பார்த்து கண்கள் கலங்கியது சம்யுக்தாவிற்கு!

“சாரி விஷ்வா எனக்கு உன் வாழ்க்கை முக்கியம்னு தான் இப்படி பண்ணேன்” என்று அவள் மன்னிப்பு கேட்க கண்ணீரை இடது கையால் துடைத்துவிட்டவனின் உதட்டில் மென்னகை அரும்பியது.

தன் கட்டுப்பாட்டையும் மீறிய கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு, “மித்து நான் உன்னைத் தவறாக நினைக்கவே இல்லம்மா. நீ சொல்லாமல் போனது கோபம்தான். ஆனால் நீ இல்லாமல் எங்களால் இருக்க முடியாது. அண்ணா கோபத்தில் அடிச்சிட்டான்னு அவன்மேல் கோபபடதே. நீ இல்லாமல் அவன் எவ்வளவு துடிச்சான் தெரியுமா? இன்னொரு முறை இப்படி செய்யாதே” என்று சொல்லியபடி அவளுக்கு ஊட்டிவிட தொடங்கினான்.

அவளும் பசியில் குழந்தை போல வாயைத் திறந்து வாங்குவதைக் கண்ட இந்தரின் கோபமெல்லாம் பறந்துவிட எழுந்து அவளின் அருகே வந்தான். சங்கமித்ரா அமைதியாக தலையைக்குனிந்து கொள்ள அவளின் தலையை இழுத்து வயிற்றுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு, “மித்து நீ அருகில் இருக்கும்போது தொல்லை செய்கின்ற மாதிரி இருந்துச்சு. இன்னைக்கு நீ செய்த காரியத்தால் நான் உன்னை எவ்வளவு விரும்பறேன்னு தெரிஞ்சிகிட்டேன்” என்று சொல்லும்போது அவனின் கண்கள் லேசாக கலங்கி அவளின் உச்சந்தலையில் பட்டுத் தெரித்தது.

அதை உணர்ந்த மித்ரா கதறி அழுகவே, “மித்து சாரிடா. நான் உன்னை அடிச்சிருக்கக் கூடாது” என்றவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அவளின் கன்னங்கள் சிவந்திருப்பதை கண்டு வருடிவிட்ட இந்தர்ஜித் ஒரு சேரில் அமர்ந்து தம்பியிடமிருந்து தட்டைக் கையில் வாங்கி அவளுக்கு ஊட்டிவிட்டான்.

அவள் சாப்பிட்டு முடித்ததும், “இந்தர், விஷ்வா, வினோத் மூவரும் வந்து சாப்பிட உட்காருங்க” என்றவள் மூவருக்கும் பரிமாறினாள். அவர்களின் வட்டத்திற்குள் தனக்கு இடமில்லையா என்ற ஏக்கத்துடன் பார்த்த தோழியை விஷ்வாவின் அருகே அமர வைத்து சாப்பாடு பரிமாறினாள். விஷ்வா விளக்கம் கேட்கவிட்டாலும் அவளை பார்த்தபடி சாப்பிட்டான்.

அவர்களின் சண்டை, சமாதானம் இரண்டையும் நேரில் கண்ட பாஸ்கர், “இவங்களுக்கு இந்த ஜென்மத்தில் அறிவு வருவது கஷ்டம்” என்று சொல்ல மற்ற இருவரும் சேர்ந்து சிரித்தனர்.  

சிறிது நேரத்தில் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு ஹாலிற்கு வந்தவளிடம், “நான் அப்பவே சொன்னேன் மித்ரா. நீ இங்கேதான் எங்கேயோ பக்கத்தில் இருக்கேன்னு. ஆனால் நான் சொன்னதை இவனுங்க நம்பவே இல்ல” என்றான்.

சங்கமித்ரா சிரித்தபடி விஷ்வாவிடம், “அவங்களுக்கு எல்லாம் மூளை இல்லன்னு நினைக்கிறேன். நாளைக்கு காலையில் விடிந்தவுடன் கல்யாணம் அதனால் சீக்கிரம் போய் தூங்குங்க” என்றாள் சாதாரணமாக.

“என்னது நாளைக்கு காலைக் கல்யாணமா? என்னிடம் சொல்லவே இல்ல” என்று அதிர்ந்த நண்பனின் கையைக் கோர்த்து தட்டிகொடுத்தவளை அவன் கேள்வியாக நோக்கினான்.

தாய் – தந்தை மனமாற்றத்தில் இருந்து இன்று நடந்த அனைத்து விசயத்தையும் கூறவே அண்ணனுக்கும், தம்பிக்கு அதிர்ச்சியாக இருந்தது. பெற்றோர்களின் அருகே சென்ற பிள்ளைகளிடம் இருவரும் தாங்கள் பேசிய வார்த்தைகளுக்காக மன்னிப்பு கேட்டனர். சிறியவர்கள் அதை பெருந்தன்மையாக ஏற்று அவர்களை மன்னித்துவிட்டனர்

“உன் மனசு மாறும்னு நம்பினேன் இன்னைக்கு நடந்திடுச்சு. அதே மாதிரி நீ மறுபடியும் மனசு மாறி எனக்கு கல்யாணமே வேண்டாமென்று சொல்லிவிட்டால் நான் என்ன செய்யறது? அந்த பயத்தில் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். விடிந்தால் உனக்கு சீதையம்மன் கோவிலில் கல்யாணம்” என்றவள் கூறினாள்.

ஆனால் ஒரு விதத்தில் அந்த விஷயம் விஷ்வாவிற்கு சந்தோஷத்தை கொடுக்கவே, “அப்போ சரி நான் போய் தூங்கறேன். இல்லன்னா காலையில் மணமேடையில் அமர்ந்து தூங்கினாலும் தூங்கிடுவேன்” என்று எழுந்து தன் அறைக்கு சென்றான்.

சம்யுக்தாவை விஷ்வாவின் பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட வினோத், “நான் விஷ்வாவுடன் தூங்கறேன்” என்று செல்ல ரகுவரனும் அவரின் அறைக்குள் சென்று மறைந்தனர். இந்தர்ஜித் எழுந்து முன் வாசலுக்கு செல்ல அவனைப் பின்தொடர்ந்து சென்றாள் மித்ரா.

அங்கிருந்த படிக்கட்டில் அமர்ந்தவனின் தோளில் சாய்ந்த மித்ரா, “என்மேல் கோபமா?” என்றாள்.

உடனே மறுப்பாக தலையசைத்த இந்தர்ஜித் மெல்ல அவளை விழி சந்தித்த இந்தர், “உன்னை இழந்ததை என்னால் நம்பவே முடியல. இன்னொரு முறை இப்படியொரு விபரீதமான விளையாட்டில் என்னை பகடை காயாக வைத்து விளையாடாதே. என்னால் உன் பிரிவை தாங்கவே முடியாது” என்று காதலை வார்த்தையில் வெளிபடுத்தினான்.

பிறகு அவளின் சிவந்த கன்னங்களை வருடிவிட்டு, “சாரி மித்து” என்றவன் எலும்புகள் நொறுங்கும் அளவிற்கு அவளை இறுக்கியணைத்து கொண்டான். அதிலிருந்த வலியை உணர்ந்து அவள் அவனின் முதுகை வருடிக் கொடுத்தாள்.

மெல்ல அவளின் முகத்தை நிமிர்ந்தி அவளின் இதழில் இதழ் பதித்தவன் தன் இதயத்தின் வலியை அவளுக்கு செயலின் மூலம் உணர்த்திட அதை புரிந்துகொண்ட மீண்டும் கணவனின் இதய வலியைப் போக்கும் விதமாக அடுத்த முத்தத்தை தன் இதழ் முத்தமாக கொடுத்தாள்

அவளின் இதழில் இருந்து தன இதழைப் பிரித்தவன், “ஆளுக்கு ஒரு திசையில் இருந்தவங்களை சேர்த்து வைத்துவிட்டாய் மித்து. உன்னை அவங்க பேசிய வார்த்தைக்கு இன்னைக்கு மன்னிப்பு கேட்டபோது மனசுக்கு அவ்வளவு நிறைவாக இருந்துச்சு மித்து. ஒரு தகப்பனுக்கு மகளாக, புகுந்த வீட்டிற்கு  மருமகளாக, நண்பனுக்கு உற்ற தோழியாக, காதல் கணவனுக்கு மனைவியாக என்று நீ எல்லாவற்றிலும் ஜெய்த்துவிட்டாய்” என்று கணவன் கண்களில் கனிவு பொங்கிட கூறினான்.

மெல்ல அவனின் மார்பில் தஞ்சமடைந்தவளின் காதில் அவன் கிசுகிசுக்க அவளின் முகம் அந்திவானமாக சிவந்தது. மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது.

சங்கமித்ராவின் நண்பர்கள் ஒன்றாக இணைந்து திருமண ஏற்பாடுகளை செய்ய சீதையம்மன் கோவிலில் விஷ்வா – சம்யுக்தாவின் திருமணம் விமர்சியாக நடந்தது. தாய் – தந்தையின் முன்னிலையில் நடந்து முடிந்த நினைத்து விஷ்வாவிற்கு மனதிற்கு நிறைவாக இருந்தது. மணமக்கள் இருவரும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டனர்.

ரிசப்ஷனில் விஷ்வா – சம்யுக்தாவின் வலதுபுறம், இந்தர்ஜித் தன் மனைவி சங்கமித்ராவுடன் இணைந்து நிற்க அவர்களுக்கு அருகே வினோத் மற்றும் சுரேஷ் நின்றனர். மணமக்களுக்கு இடதுபுறம் பாஸ்கர் – மரகதம் ஜோடியாக நிற்க ரகுவரன் அவர்களின் நிற்க போட்டோ எடுக்கபட்டது.

சம்யுக்தா தன் கணவனின் அருகே காதலோடு நின்றிருக்க, இன்றும் சங்கமித்ரா கணவனின் தோளில் காதலோடு சாய்ந்து நின்றிருக்க அவளின் கைகளோ விஷ்வாவின் கரத்தினை இறுக்கமாக பிடித்திருந்தது. கணவன் – மனைவி பந்தம் ஈரேழு ஜென்மம் என்றால், நட்பிற்கு கால வரையறையே இல்லை என்று நிருபித்தாள் சங்கமித்ரா.

மலையோரமாக இருக்கும் இடத்தில் இருந்து வந்த பெண்மான் வேட்டையாட வந்த சிங்கத்தின் பிடியிலிருந்து தப்பிக்க சிதறி ஓடிய மான் கூட்டத்தை மீண்டும் ஒன்றிணைத்து அதில் தானும் ஒருத்தியாக மாறிப்போனாளே அந்த பெண்மான்.

Leave a Reply

error: Content is protected !!