Kandeepanin Kanavu-25

                                                                   காண்டீபனின் கனவு – 25

 

காண்டீப வில்லை அடையும் அனைத்து வழிகளையும் அடைத்து விட்ட சந்தோஷத்தில் அர்ஜுனன் தன் சகோதரர்களுடன் மலையேறச் சென்றான்.

வருண தேவன் நேரே சக்ரவானாவிடம் சென்றார். சக்ரவானா வருண பகவானின் காலில் விழுந்து வணங்க முயன்றான். அவனைத் தடுத்தார்.

“நீ செய்தது குற்றம்.” கோபமாக கத்தினார்.

“ஒரு மகன் தந்தையின் எண்ணத்தை நிறைவேற்றுவது குற்றமா?” பதில் கேள்வி கேட்க,

“அதில் நியாயம் தர்மம் என்ற இரண்டை கடைபிடிக்க வேண்டும். நான் அர்ஜுனன் வாழ்வு சிறக்க காண்டீபவில்லைக் கொடுத்தால், அதனுடைய பனி முடிந்ததும் என்னிடம் அதை அவன் திருப்பித் தந்திருக்க வேண்டும். பேராசை கொண்டு இப்படி அதை தன்னுடனே வைத்துக் கொள்ளும் ஆவல் பெற்றிருக்கக் கூடாது. அவனது பாவத்தில் உனக்கும் பெரும் பங்கு உள்ளது.”

அவர் கூறியதை பொறுமையாகவே ஏற்றுக் கொண்டான் சக்ரவானா.

“பாவம் செய்துவிட்டதாகவே இருக்கட்டும் தேவனே! அதற்கான தண்டனையை எனக்குக் கொடுங்கள். நான் அதை என் சிரசின் மேல் வைத்து ஏற்றுக் கொள்கிறேன்.” அவர்முன் மண்டியிட்டுப் பணிந்தான்.

சக்ரவானாவின் பணிவு ஒரு புறம் வருனதேவனை இரக்கம் கொள்ள வைத்தாலும், காண்டீப வில்லே பிரதானமாக தெரிந்தது.

“நீ நல்லவன் தான். ஆனாலும் என்னால் இந்த தண்டனையை கொடுக்காமல் இருக்க முடியாது.

காண்டீபம் என் உரிமை. அதை நான் எத்தனை காலம் ஆனாலும் என்னிடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அர்ஜுனன் அவனது அடுத்த நூறு பிறவியிலும் தன் எண்ணத்தை மறந்தே பிறப்பான். அது நான் அவனுக்குத் தரும் சாபம்.

ஆனால் ஒவ்வொரு பிறவியிலும் உன் வம்சத்தில் பிறப்பவர்களை அர்ஜுனன் என்று எண்ணி எண்ணி உன் வம்சத்தோர் களைத்துப் போவர். ஒவ்வொருவரும் வில்லை எடுக்க கடும் முயற்சி செய்து இறுதியில் இறந்து போவர்.

கடைசி வரை உங்களில் யாரும் கண்டீபத்தை நெருங்கப் போவதில்லை. நீ எங்கு ஒளித்து வைத்தாயோ அந்த மலையின் வாசல் அடைந்து போகும். அந்த மலையே யார் கண்ணுக்கும் தெரியாமல் மாயமாய் இருக்கும்.இறுதியில் அதை நானே எடுத்துச் செல்வேன்.” மனதில் பொங்கி எழுந்த அனைத்தையும் கூறி சபித்துவிட,

சக்ரவானா துடித்துப் போனான்.

“ஐயனே! இப்படி அனைத்து வழிகளையும் அடைத்தால், நாங்கள் என்ன செய்வது. தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியாத பாவியாக நான் சாக வேண்டுமா! ஒரு மார்க்கம் அருளுங்கள். தயை கூர்ந்து சாப விமோசனம் தாருங்கள்!” அவரின் காலைப்பிடித்தான்.

“கொடுத்த சாபமே உனக்காகத் தான் மட்டுப்படுத்திக் கொடுத்தேன். நான் வந்த வேகத்திற்கு உன் வம்சத்தையே பூண்டோடு அழித்துவிட எண்ணம் கொண்டிருந்தேன்.”

முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றான் வருணதேவன்.

“உங்களைத் தவிற இப்போது எனக்கும் என் வம்சத்திற்கும் வேறு மார்க்கம் இல்லை. தந்தையின் எண்ணம் நிறைவேற எந்த கடினமான மார்க்கம் கூறினாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன். கொஞ்சம் மனம் வைத்துக் கூறுங்கள்.” அவரது காலை அவன் விடுவதாக இல்லை.

வருணனுக்கு வேறு வழி தெரியவில்லை. காண்டீபம் தன்னை விட்டு போகவும் கூடாது. அதே சமயம் சக்ரவானாவின் பணிவிற்கும் வழி செய்யவேண்டும். சிறிது நேரம் யோசித்துப் பின் விமோசனம் வழங்கினார்.

“உன் வம்சத்தில் யார் ஒருவர் பல நூறு வருடங்கள் வாழ்ந்து , தன் வம்சத்தில் இறக்கும் நூறு பேர் இறந்ததும் அவர்களின் சடலத்தை பராமரித்து பின் அதிலிருந்து பெரும் வம்ச சக்தியை வைத்து அந்த மலைகளின் வழியைத் திறக்கும் ஓலையை எழுதலாம்.

அந்த ஓலையும் ஒருவனுக்கு மட்டுமே பயன்படும். அதை சரியான முறையில் தடைகளையும் தாண்டி கடைபிடித்தால், அப்போது உன் தந்தையின் எண்ணத்தை நீ நிறைவேற்றலாம்!” என்று கூறி மறைந்தார்.

‘யார் இந்த பொறுப்பை ஏற்பார்கள்’ என்று சிந்தித்த சக்ரவானா, பல நூறு ஆண்டுகள் வாழும் வழியைத் தேடி அலைய ஆரம்பித்தான்.

அர்ஜுனன் இறந்திருந்தான்.

சக்ரவானா பல கோயில்களுக்குச் சென்று அங்கிருக்கும் பல தவ முனிவர்களிடம் ஆலோசனை கேட்க, அவர்கள் சரியான வழிகளை அருளவில்லை.

மனம் வெறுத்து ஒரு காட்டுப் பாதையில் திரும்பி வர, நள்ளிரவு ஆகி இருந்தது. அங்கே ஒரு மந்திரவாதி பல மந்திரங்களைக் கூறி காளி தேவியை உச்சாடனம் செய்து கொண்டிருந்தான்.

ஒரு மரத்தடியில் அமர்ந்து வெகு நேரமாக அவன் செய்யும் செயல்களை பார்த்துக் கொண்டிருந்தான் சக்ரவானா.

‘இவனுக்கு என்ன கிடைக்கப் போகிறது! என அலட்ச்சியம் காட்ட ஆரம்பிக்க திடிரென அவன் முன்னே காளி பிரத்யக்ஷமானாள்.

அவனும் காலில் விழுந்து வணங்க அவனுக்குக் காளி அருள் செய்வதைக் கண்டான் சக்ரவானா.

அந்த மந்திரவாதி பூஜையை முடித்துக் கொண்டு வரும் வரை காத்திருந்தவன், மெல்ல எழுந்து அவனிடம் சென்றான்.

“நான் சக்ரவானா. அர்ஜுனனின் மகன்.” தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.

எதுவும் பேசாமல் அவனுடையை கண்களையே உற்றுப் பார்த்தான் அந்த மந்திரவாதி.

“உன்னுடைய குறை தீர்க்க நீ ஒரு யாகம் செய்ய வேண்டும். அதை நானே உனக்கு செய்ய உதவுகிறேன். என் பிறவிப் பயனே இனி உன்னுடன் தான்.” என அவனோடு கை கோர்த்தான்.

சக்ரவானா எதுவும் சொல்லாமலே அனைத்தையும் அவன் புரிந்து கொண்டான். சக்ரவானாவின் மனம் நிறைந்தது.

அவனைப் பற்றி கூறினான் அந்த மந்திரவாதி.

“நான் ஒரு மலையாள மாந்திரீகன். அனைத்து யக்ஷிணி தெய்வங்களும் என் கைக்குள் அடக்கம். அந்த காண்டீப வில் தான் இனி உனக்குக் குலதெய்வம். அதை மீண்டும் பிறவி எடுக்கும் உன் தந்தையின் கையில் சேர்ப்பது வரை என் பரம்பரை உன் பரம்பரைக்கு உதவியாக இருக்கும். இது சத்தியம்.” என்றான்.

சக்ரவானா உடனே தன் அரண்மனைக்கு சென்று தன் மனைவி மகனிடம் ரகசியமாக தந்தையின் எண்ணத்தைக் கூறினான். தன் பேரனுக்கும் அவனுக்குப் பிறக்கப் போகும் சந்ததிக்கும் இதைச் சொல்லியே வளர்க்க வேண்டுமென சொல்லிவைத்தான்.

தான் தவம் செய்யப் போவதாகவும் அவ்வப்போது வந்து இவர்களை பார்ப்பதாகவும் கூறிவிட்டு அந்த மந்திரீகனுடன் சென்றான்.

நாட்டைவிட்டு வெகு தொலைவு வந்த பிறகு,

“அந்த பாதாள உலகம் செல்லும் வழி என்ன?” என்றான்.

சக்ரவானா அவனுக்கு வழியைக் கூறினான்.

“அப்போ அதற்குப் பக்கத்தில் தான் உனக்கு குகை தேடிக் கொள்ள வேண்டும். என்னோடு வா!” என அழைத்துச் சென்றான்.

இன்று வீரா ஒரு ராட்ஷச கதவைத் திறந்து கொண்டு ஒரு முனிவரின் சிலையைக் கண்ட இடத்தில் இப்போது இவர்கள் இருவரும் இருந்தனர்.

கோடங்கி சக்ரவானாவிற்கு சில வழிமுறைகளைக் கூறினார். அதன்படி அவன் ஒரு ஏகாதசி அன்று தன் தவத்தை ஆரம்பித்தான்.

கூடவே அமர்ந்த கோடங்கி அவனுக்கு உதவ ஒரு யக்க்ஷி யாகம் செய்தார். பல வருடங்களுக்குப் பிறகு அந்த யக்க்ஷி யாகத்தில் வெளிப்பட்டது.

“யக்க்ஷியே சக்ரவானா தன் பரம்பரையில் உள்ள நூறு பேர் இறக்கும் வரை உயிருடன் இருக்கும் வழி சொல்லு” எனக் கேட்டார் கோடங்கி.

“இவன் உயிருடன் இருந்து இறக்கும் இவன் சந்ததியின் சக்தியைப் பெற நெருப்பை விழுங்க வேண்டும். அந்த நெருப்பை தனக்குள் வைத்து அவனுக்கு உள்ளேயே அவனை எரித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அவன் வாயில் இருந்து வெளிப்படும் நீலக் கல்லை பூஜை செய்து வர வேண்டும்.” யக்க்ஷி கூறியது.

“அப்படி பூஜை செய்தால் நான் உயிருடன் இருப்பேனா?” சக்ரவானா ஆர்வமாகக் கேட்க,

“ஆம்! நூறு பேர் இறந்து அவர்களின் சடலத்தை நீ பாதுகாக்க வேண்டும். அப்போது நூற்றி ஒன்றாவதாக பிறக்கும் உன் பரம்பரைக்கு நீ இந்த நீலக் கல்லைக் கொடுத்து அவர்களை ஒவ்வொரு ஏகாதசிக்கும் பூஜை செய்யச் சொல். அதுவும் வழி வழியாக வர வேண்டும்.

நூற்றி ஒன்றாவதாக நீ இறப்பாய். அதற்கு முன் உன் ஓலையை நீ எழுதி வைத்துக் கொள்.

நீ இறந்தபிறகும் உன்னுடைய சக்தி அந்த நீலக் கல்லுக்குள் சென்று விடும். அது உன் பரம்பரைக்கு உனது பாதுகாப்பை உணர்த்தும்.” யக்க்ஷி கூறி மறைந்தது.

சக்ரவானா குழப்பத்தில் ஆழ்ந்தான்.

“நானும் இறந்த பிறகு தான் என் தந்தை பிரப்பெடுப்பாரா? என் பரம்பரையில் யாரும் அந்த பூஜையை செய்யத் தவறினால்..?!” சக்ரவானா பயந்தான்.

“அந்தக் கவலை உனக்கு வேண்டாம். என் பரம்பரை இருக்கும் வரை உன் பரம்பரையை தவறாமல் அந்தப் பூஜை செய்ய வைப்பது எங்கள் பொறுப்பு.” கோடங்கியின் பேச்சு அவனுக்கு நம்பிக்கை தந்தது.

துணிந்து இறங்கினான். இருவரும் சேர்ந்து வேள்வி வளர்த்தனர். அந்தக் குகையின் உள்ளே ஒரு சிறு யாக குண்டம் வைத்து தீ வளர்க்க, கோடாங்கியின் மந்திரத்தால் அது பெரிதாக கொழுந்துவிட்டு எரிந்தது.

கோடாங்கி அந்தத் தீயை இப்போது சிறு சிறு உருண்டைகளாக உரு மாற்றினான்.

சக்ரவானா தன் தந்தையின் எண்ணம் நிறைவேற வேண்டுமென மனதில் நிறுத்தி, ஒவ்வொரு உருண்டைகளையும் வாயில் போட்டு விழுங்கினான்.

அந்த மாய நெருப்பு அனைத்தும் அவனது வயிற்றில் சென்று அவனது உடலை உள்ளேயே எரித்தது. நீலம் பூத்தது அவனது உடல். மயங்கி அவன் கீழே விழுந்தான்.

கோடங்கி மீண்டும் மந்திரத்தால் அவனது உடலில் சென்ற நெருப்பு உருண்டைகளை அவனது வாய் வழியாக வெளியே கொண்டு வர, விழித்துக் கொண்டான் சக்ரவானா.

வாயிலிருந்து கக்கினான். ஒரு அழகிய நீலக் கல் வெளியே வந்தது. அந்தக் கல் தான் அவனுக்குக் கிடைத்த குகையின் சாவி போல நினைத்தான்.

கல்லைக் கையில் எடுத்ததும் நெருப்புப் போலச் சுட்டது. உடனே கீழே வைத்து விட்டான்.

“இது என்ன இப்படி சுடுகிறதே?”

“கவலைப் படாதே! ஒவ்வொரு ஏகாதசிக்கும் நீ அதற்குப் பூஜை செய்ய வேண்டும்.உனது சந்ததி அனைத்தும் பூஜை செய்யும் அதற்கு. கவலைப் படாதே! நான் அதன் சூட்டைத் தனிக்கிறேன்.” என்று, அந்தக் கல்லின் வெப்பத்தைத் தாங்க குகைக்கு வெளியே ஒரு குளத்தை அமைத்தார்.

அந்தக் குளத்தில் இந்த நீலக் கல்லை போட்டு வைத்தனர். கல்லின் வெப்பம் தனிய ஆரம்பித்தது.

அதற்குப் பிறகு ஒவ்வொரு ஏகாதசிக்கும் சக்ரவானா பூஜை செய்ய, கோடங்கி அவனுக்குத் துணையாக இருந்தார்.

பல ஆண்டுகள் கழித்து சக்ரவானாவின் மகன் இறக்கும் தருவாயில் உள்ளதாக கோடங்கி தன் ஞான திருஷ்டியில் கூற, சக்ரவானா அவன் இறக்கும் வரை கூட இருந்து அவனது உடலை குகைக்கு எடுத்து வந்தான்.

அதே நேரம் கோடங்கியும் தனது ஊருக்குச் சென்று அவன் மகனிடம் சக்ரவானாவின் குடும்பத்திற்கும் தனக்கும் ஏற்ப்பட்ட உறவைக் கூறி, மற்ற கதைகளையும் கூறி, இனியும் இது தொடர வேண்டும் என கட்டளை இட்டான்.

அவர்களும் அதை ஏற்றுக் கொண்டு வாக்களிக்க, மீண்டும் சக்ரவானா இருந்த குகைக்கு வந்து சேர்ந்தான்.

தனது மகனின் உடலை கோடாங்கியின் சொல் படி கேட்டு பதப்படுத்தி ஒரு துணியில் சுற்றி ஒரு இடத்தில் நிறுத்தி வைத்தான்.

அடுத்து வந்த ஏகாதசியில் அந்த சடலத்தின் சக்தியும் சேர்ந்து நீலக்கல்லில் புகுந்தது. கல்லின் வெப்பம் அதிகரித்தது. அதைக் குளத்தில் போட்டு மறுநாள் எடுத்து வந்தான்.

இப்படியே அடுத்து அவன் பேரன் அவனது மகன் என ஒவ்வொருவராக அவன் எடுத்து வந்து பதப் படுத்த,

கோடங்கி ஒரு நாள் தளர்ந்து போனான். அவனது சந்ததியும் சக்ரவானாவின் சந்ததியும் உறுதுணையாக இருப்பதை உணர்ந்தான். அப்போது சக்ரவானாவிடம் இதை தொடர்ந்து செய்யுமாறு கூறினான்.

“நான் இன்னும் சில நாட்களில் இறந்து விடுவேன். நீ நூறு பேர் இறந்ததும் அந்தச் சக்த்தியை இந்தக் கல்லில் சேகரித்து அப்போதைய உன்னுடைய பரம்பரையில் இருப்பவனிடம் இதை ஒப்படைத்து இங்கேயே வந்துவிடு. நீ இறந்ததும் உனது உடல் ஒன்றும் ஆகாது. அப்படியே அது பெரிய சிலையாக மாறி இங்கேயே தங்கிவிடும். அப்போது ஓலை எழுதி உன் சிலைக்கு அடியில் வைத்துக் கொள்.

இங்கே நான் சில மந்திர கட்டுக்களை போட்டு வைத்திருக்கிறேன். உன் தந்தை அனுப்பி வைத்த பிரம்ம ராட்ஷசன் கண்களைக் கட்டிவிட்டேன். இந்த மந்திரக் கட்டை வருபவன் அவிழ்த்ததும் ராட்ஷசன் கண்கள் திறக்கப் படும். அப்போது தான் அவன் அடுத்த அந்த மலைகளில் கால் வைத்து உன் தந்தை ஏற்ப்படுத்திய சிக்கல்களைத் தாண்டிச் செல்வான்.

கடைசியில் அர்ஜுனன் யாராகப் பிறக்கிறானோ அவன் இங்கு வரும் போது தான் உன்னுடைய ஓலை கிடைக்கும். அது வரையில் கவலை இல்லாமல் இரு. நான் சென்று வருகிறேன்.” என்று கூறிவிட்டு தன் குடும்பத்தைத் தேடிச் சென்றார்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!