images - 2020-11-04T134041.813-6708e69d

அத்தியாயம் – 15

நடுஇரவில் வீடு வந்து சேர்ந்த செவ்வந்தி படபடவென்று கதைவைத் தட்டினாள். அந்த சத்தம்கேட்டு கண்விழித்த மைதிலி கடிகாரத்தை பார்த்துவிட்டு எழுந்து வந்து கதவைத் திறந்தாள்.

தன் எதிரே நின்றிருந்த செவ்வந்தியை கண்டவுடன், “என்னடி ஊரில் இருந்து வருவதற்கு ஒரு வாரம் ஆகும்னு எழுதி வைச்சிட்டு போயிருந்த.. இப்படி ஒரே நாளில் திரும்பி வந்திருக்கிற?” என்ற கேள்வியுடன் அவள் வீட்டிற்குள் நுழைய வழிவிட்டு நின்றாள் மைதிலி.

சட்டென்று வீட்டிற்குள் நுழைந்தவள், “ஒரு நாளே என்னால் அங்கிருக்க முடியலன்னு அர்த்தம் மைதிலி. ஆமா நான் ஊருக்குப் போன விசயம் உன்னைத் தவிர வேற யாருக்கும் தெரியாது இல்ல” சோர்வுடன் படுக்கையில் அமர்ந்தாள்.

“வெற்றிதான் உன்னை தேடினாரு. தெரியாத்தனமாக ஒரு பொய்யைச் சொல்லி மனுஷனிடம் வசமாக மாட்டிகிட்டேன். அப்புறம் உண்மையைச் சொன்னபிறகு அமைதியாக போயிட்டாரு” என்று கொட்டாவி விட்டபடியே அவளின் அருகே அமர்ந்தாள்.

செவ்வந்தி அமைதியாக இருக்க, “அலையில் பூவை போட்டுட்டு வந்துட்டியா?” என்று கேட்டாள் மைதிலி.

அவளை கவலையோடு ஏறிட்ட செவ்வந்தி, “என்னால் கொண்டுபோன பூவை முழுவதுமாக போட முடியல. என்னவோ அம்மா, அப்பா பக்கத்தில் இருக்கிற மாதிரி ஒரு எண்ணம் என்னை ஆட்டி படைத்துவிட்டது மையூ. அதுக்கு மேல் என்னால் ஒரு நிமிஷம் கூட அங்கிருக்க முடியல. உடனே கிளம்பி வந்துட்டேன்” என்றவள் அங்கே நடந்த விஷயத்தை தோழியிடம் பகிர்ந்தாள்.

“ம்ஹும் எல்லாமே ஒரு நல்லதுக்கு தான்னு நினைச்சுக்கோ செவ்வந்தி. ஒரே நாளில் பஸில் அலைந்தது களைப்பாக இருக்கும் குளிச்சிட்டு தூங்கு” என்றவள் பாயில் படுத்து விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள். செவ்வந்திக்கு தூக்கம் வர மறுத்தது.

அத்தோடு அலைகள் மேலெழும்பி அவளை உள்ளே இழுத்து செல்வது போன்ற எண்ணம் மனதில் வந்து செல்ல பயத்துடன் அருகில் இருந்த தூக்க மாத்திரையை எடுத்து போட்டு தண்ணீரைக் குடித்தவள் சிறிதுநேரம் மெளனமாக அமர்ந்திருந்தாள்.

மெல்ல அவளின் விழிகளை தூக்கம் தழுவிட படுக்கையில் சரிந்தவள் உதடுகள், “அம்மா, அப்பா என் கையை விட்டுடாதீங்க. என்னை விட்டுட்டு போயிறாதீங்க” என்றவளின் வாய்க்குள் தண்ணீர் செல்ல தன்னை மறந்து மயக்கநிலைக்கு சென்றாள்.

அவளின் புலம்பலைக் கேட்டு பதறியடித்துக் கொண்டு எழுந்த மைதிலி,  “ஏய் செவ்வந்தி இங்கே கொஞ்சம் கண்ணைத் திறந்து பாரு. உன்னை அலை இழுத்துட்டு போகல. நீ நம்ம வீட்டில் தான் இருக்கிற” என்று அவளின் கன்னத்தை தட்டி எழுப்பினாள்.

அவளின் குரல்கேட்டு மெல்ல கண்விழித்த செவ்வந்தி, “மையூ” என்றாள் அழுகையோடு.

“அன்னைக்கு நடந்ததை மறந்து தொலைக்காமல் என்னடி இது சின்ன குழந்தை மாதிரி பண்ற. நான் ஒரு லூசு உன்னை அங்கே அனுப்பியிருக்கக் கூடாது. அங்கே போயிட்டு வந்தால் நீ இப்படித்தான் பல விஷயத்தை மனதில் போட்டு குழப்பிக்கிற. செவ்வந்தி நடந்து முடிந்த எதுக்கும் நம்ம காரணமில்ல. இனி நடக்க இருக்கும் விஷயம் நல்லதாக இருக்கான்னு மட்டும் யோசி” என்று மிரட்டி அவளை படுக்க வைத்து தட்டிக் கொடுக்க தூங்கிவிட்டாள் செவ்வந்தி.

இரவு வெகுநேரம் ஆனபிறகும் தூக்கம் வராமல் மாடியின் கைப்பிடி சுவற்றில் சாய்ந்து அமர்ந்தபடி வானத்தை வெறித்து கொண்டிருந்தான் வெற்றி. இன்று செவ்வந்தி கடைக்கு வரவில்லை என்ற தவிப்பைவிட அவள் சென்ற இடத்தை ஓரளவு கணித்தவனின் மனம் நிம்மதியை முற்றிலுமாக இழந்தது.

அந்த நிகழ்வு நடந்து முடிந்து முழுவதுமாக பதினாறு வருடங்கள் கடந்துவிட்டபிறகும் கூட மனதில் அது ஏற்படுத்திவிட்டு சென்ற காயம்  அப்படியே இருந்தது. எந்தவொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. தோல்வியை சந்தித்த வெற்றியை மட்டுமே அனைவரும் பார்த்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அவன் அனுபவித்த சந்தோசமான பக்கங்களில் அந்த மூன்று ஜீவனுக்கும் ஒரு இடமுண்டு. தங்கையின் மகனை தன் மகனாகவே நினைத்து வளர்த்த ஜெகதீஸ் மாமா. அவனுக்கு இன்னொரு தாயாக மாறிப்போன சங்கீதா அத்தை. இதைவிட ஒவ்வொரு நொடியும் தன்னோடு சண்டை போடும் மாமன் மகள் செவ்வந்தி அவனுக்கு மட்டுமான செவ்வரளி.

இவர்களோடு வாழ்ந்த நாட்களிலே அவனின் வாழ்க்கையில் வசந்தகாலம். அவர்கள் சென்ற பிறகு தேவையில்லாத கட்டுகதைகளை தன் மீது சுமத்திய தந்தை, அதற்கு துணை செல்லும் தாய்க்கு நடுவே அவன் உயிர்ப்புடன் இருக்க ஜமுனாவின் அன்பு மட்டுமே காரணம்!

அவனின் மனம் நிகழ்காலத்தை மறந்து கடந்த காலத்திற்கு செல்ல நினைக்கும்போது, “அண்ணா இன்னும் தூங்காமல் இங்கே என்ன பண்ற” என்ற கேள்வியுடன் அவனின் அருகே வந்து அமர்ந்தாள் ஜமுனா.

சட்டென்று தன்னை மீட்டுக்கொண்ட வெற்றி அமைதியாக இருக்க, “ஜனனிக்கு கல்யாணம் ஆக போகுதேன்னு வருத்தபடுறீயா அண்ணா?” என்ற கேள்வியுடன் அவனை ஏறிட்டாள்.

மறுப்பாக தலையசைத்த வெற்றி, “அவ என்னைத் தூக்கி எறிந்திருந்தால் கண்டிப்பா கவலைபட்டு இருப்பேனோ என்னவோ தெரியல செல்லம்மா. ஆனால் அவளை வேண்டாம்னு சொன்னதே நான்தான். அவளை மாதிரி பணத்தை மட்டும் உலகமாக நினைக்கும் ஒருத்தியுடன் கடைசிவரை நிம்மதியாக வாழ முடியாதுன்னு நான்தான் இப்படியொரு முடிவெடுத்தேன் இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்ல” என்று தன் மனநிலையைத் தங்கையிடம் பகிர்ந்தான்.

“அப்போ பாலைவனத்தில் நிஜ மழைதான் வருது போல?” கிண்டலாக கேட்ட தங்கையின் தலையைச் செல்லமாக ஆட்டியவன்,

“ஆமான்னு சொன்னால் என்ன செய்ய போறீங்க மேடம்” என்றான் குறும்புடன்.

வெற்றியின் பதிலைக்கேட்டு விழிவிரிய அவனைப் பார்த்த ஜமுனா, “அடேயப்பா எங்க அண்ணனுக்குக் கூட மூளை வேகமாக வேலை செய்யுது போல. ஏன் அண்ணா நான் வேணா அண்ணியிடம் பேசி பார்க்கட்டுமா” என்று குறும்புடன் கண்சிமிட்டினாள்.

அவளைக் கையெடுத்து கும்பிட்ட வெற்றி, “செல்லம்மா அப்படியொரு எண்ணமிருந்தால் விட்டுடும்மா. நானே அவளிடம் பேசி சம்மதிக்க வைக்கிறேன்” என்று பொறுப்பை அவனே ஏற்றுக் கொண்டான்.

“அதை முதலில் செய்யுங்கள் அரசே! எவ்வளவு நாள்தான் நானே சமைத்து நானே சாப்பிடுவது.. அண்ணியின் கையால் குட்டு வாங்கிகொண்டு சாப்பிட எனக்கும் ஆசை இருக்குமென்ற உண்மையை தன் வாயால் சொல்லி நீங்கள் அறிய வேண்டி இருக்கிறதே.. இதுதான் கலிகாலம் என்பதோ..” என்று குறும்பு பேசிய தங்கையைப் பார்த்து வாய்விட்டு சிரித்தான் வெற்றி.

“சரி உங்க அண்ணியார் வந்ததும் நானே அவர்களிடம் பேசிவிட்டு ஒரு முடிவு சொல்றேன் போதுமா. இப்போ எழுந்து வா போய் தூங்கலாம்” என்று எழுந்தான் வெற்றி. இருவரும் தூங்குவதற்கு சென்றனர்.

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது.

இரவு மாத்திரை போட்டு தூங்காமல் இருந்ததால் தலைவலி அதிகமாகிவிடவே காலையில் வேண்டா வெறுப்பாக கண்விழித்தாள் செவ்வந்தி. இரண்டு விழிகளும் கனலாக எரிந்திட உடலோ ஓய்வு கொடு என்று கெஞ்சியது.

தலை பாரமாக இருக்கவே, ‘ம்ஹும் இப்படியே உட்கார்ந்திருந்தால் வேலைக்கு ஆகாது. முதலில் போய் குளிச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு வருவோம்’ என்ற முடிவிற்கு வந்தவள் குளித்துவிட்டு ஆரஞ்சு நிறத்தில் காட்டன் சேலையை அணிந்துகொண்டு தயாரானாள்

அந்த சத்தத்தில் தூக்கம் கலைந்து எழுந்த மைதிலி, “என்னடி நைட் எல்லாம் சரியாக தூங்காமல் புலம்பிட்டே இருந்தே.. இப்போ எங்கேயோ கடைக்கு கிளம்பிட்ட மாதிரி தெரியுது” என்றவள் கூந்தலை ஒதுக்கிவிட்டு படுக்கையை மடித்து வைக்க தொடங்கினாள்.

அவளுக்கு உதவிய செவ்வந்தி, “இன்னைக்கு நான் கடைக்கு வரல மையூ. ரொம்ப தலை வலிக்குது. நான் கோவில் வரைக்கும் போயிட்டு வரேன்” என்று கூறியவள் பர்ஸ் எடுத்துக்கொண்டு கிளம்பிச் சென்றாள்.

மைதிலி அவளின் வேலையைக் கவனிக்க ஆஞ்சிநேயர் கோவிலுக்கு சென்று இறைவனை மனதார தரிசித்தவள் பிரகாரத்தில் சிறிதுநேரம் அமர்ந்துவிட்டு மீண்டும் வீடு நோக்கி நடக்க தொடங்கினாள்.

தலைவலி மண்டையைப் பிளக்க, “ஒரு காபி குடிச்சால்தான் சரிவரும்” என்று தனக்குதானே கூறியவள் அருகே இருந்த காபிஷாப் உள்ளே ஆர்டர் கொடுத்துவிட்டு ஓரிடத்தில் அமர்ந்தாள். அப்போது ஜனனி வேறொரு ஆணோடு மும்பரமாக பேசி சிரித்து கொண்டிருப்பதை கண்டாள்.

ஆனால் அவளுக்கு அது பெரியதாக தோன்றவில்லை. ஏனோ அன்று மைதிலி சொன்ன விளக்கம் சரியென்று மனதிற்கு புரியவே கைவிரல்களை ஆராய்ந்தபடி மௌனமாக அமர்ந்தாள். அப்போது தன் எதிரே யாரோ அமரும் ஆரவாரம்கேட்டு சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.

“என்னங்க காபி ஆர்டர் கொடுத்திட்டு உட்கார்ந்திருக்கிற மாதிரி இருக்கு..” கிண்டலடித்தது சாட்சாத் நம்ம வெற்றிதான்.

எதிர்பார்க்காத நேரத்தில் எதிரே வந்து நின்றவனை கண்டவுடன், “என்ன வெற்றி இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வந்து நின்று ஷாக் கொடுக்கிறீங்க” என்று கண்கள் மின்ன கேட்டாள்.

“இல்லங்க இங்கே ஒரு வேலையாக வந்தேன். நீங்க உட்கார்ந்திருந்ததை பார்த்தும் ஒரு விஷயத்தை பேசணும் தோணுச்சு அதன் வந்தேன்” என்றவன் நிறுத்தி நிதானமாக கூறவே அவள் கேள்வியாக புருவம் உயர்த்தினாள்.

‘என்னிடம் பேச என்ன இருக்கு?’என்ற எண்ணம் மனதில் எழுந்தபோதும், “ஓ பேசலாமே..” என்றாள் குறும்புடன்.

பேரர் வந்து ஆர்டர் கேட்க அதை கொடுத்துவிட்டு செவ்வந்தியின் பக்கம் திரும்பியவன், “நேற்று மைதிலி என்னிடம் சொன்னது பொய்யா.. அப்போ நீங்க ஊருக்கு போகவே இல்லையா?” என்று தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் கேட்டான் வெற்றி.

சிறிது நேர சிந்தனைக்கு பிறகு நிமிர்ந்தவள், “அவ உங்களோடு சும்மா விளையாடி இருப்பாள் வெற்றி. நான் போன காரியம் நல்லபடியாக முடிந்ததால் உடனே  கிளம்பி வந்துட்டேன்” என்று உண்மையைச் சொல்லாமல் சமாளித்தாள்.

அந்த பதில் அவனுக்கு பொதுமானதாக இருக்கவே, “இன்னொரு விஷயம் பேசணும்” என்று தொடங்கிய வெற்றிக்கு தயக்கமாக இருந்தது. செவ்வந்திக்கு அவனின் இந்த நடவடிக்கைகள் புதிதாக தோன்றியது.

அவனின் மனதை ஓரளவு கணித்த செவ்வந்தி, “என்னிடம் என்னங்க தயக்கம்? நீங்க எப்போதும்போல கேளுங்க” என்றாள் சாதாரணமாக.

அவளை சில நிமிடங்கள் இமைக்காமல் பார்த்தவன், “அன்னைக்கு நீங்க கேட்டதுக்கு இன்னைக்கு நான் சம்மதிக்கிறேன். அதுக்கு உங்க பதில் என்னன்னு சொல்லுங்க” என்றான் அவளின் மீது பார்த்தபடி.

வெற்றி சொல்ல வருவது புரியாமல் புருவத்தை சுருக்கி யோசித்தவள், “என்ன ஸார் திடீரென்று இப்படியொரு முடிவுக்கு வந்திருக்கீங்க? காதல் தோல்வியா? இல்ல வழக்கமாக பசங்க செய்யும் கழட்டிவிடும் வேலையை நீங்க செய்துவிட்டீங்களா?” என்றாள் குறும்புடன்.

‘வெற்றி’ என்ற அழைப்பு சடுதியில், ‘ஸார்’ என்று மாறிப்போனது அவனுக்கு பிடிக்காமல் போனது. ஏனோ அவளிடம் இன்றே திருமணத்திற்கு சம்மதம் வாங்க வேண்டுமென்ற எண்ணம் அவனை ஆட்டிப் படைத்தது.

சட்டென்று நிமிர்ந்து அவளின் விழிகளை பார்த்தவனின் பார்வை அவளின் மனம் வரை ஊடுருவிச் சென்றது. அவனின் விழி வீச்சை சளைக்காமல் எதிர்கொண்டு, “ம்ஹும் என்ன பதிலே காணோம்” என்றாள்.

“நான் காதலிச்ச பெண் கானல் நீரென்று தெளிவாக புரிஞ்சிட்டேன். அதுதான் வாசமுள்ள மலரைத் தேடி வந்திருக்கேன்” என்று அவளுக்கு புரிய வைக்க முயற்சித்தான்.

“மலர் விட்டு மலர் தாவும் வண்டாக இருக்கீங்களே.. இதே காரியத்தை ஒரு பொண்ணு செய்தால் எல்லா பெண்களும் அப்படிதான்னு முடிவிற்கே வந்திருப்பீங்க இல்ல” என்றாள் வாழைப்பழத்தில் ஊசி ஏறுவது போல.

அவளின் வார்த்தைகள் தடிப்பதை கண்டு, “என்னை அப்படி கம்பேர் பண்ணாதீங்க. நான் மற்றவங்க மாதிரி கிடையாது. என்னை விரும்பிய பெண்ணே வேறொரு ஆணுடன் வாழ தயாராகும்போது நான் ஏன் அமைதியாக இருக்கணும்” என்று அவளை மடக்க நினைத்தான்.

“அதுக்காக ஏட்டிக்கு போட்டியாக வா கல்யாணம் பண்ணிக்கலாம்னு கூப்பிடுறீங்களா வெற்றி” என்று கேட்டவளின் உதடுகளில் புன்னகை அரும்பியது.

தன்னை வேண்டுமென்றே வம்பிற்கு இழுக்கிறாள் என்ற உண்மை புரியவே, “சும்மா விதண்டாவாதம் பேசணும்னு பேசாதீங்க செவ்வந்தி. அவளுக்கு போட்டியாக கல்யாணம் பண்ண நினைச்சிருந்தால் இவ்வளவு நாள் கழிச்சு இவ்வளவு தயக்கத்துடன் உங்களோடு பேசியிருக்க மாட்டேன். இந்நேரம் ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணியிருப்பேன். ஆனால் எனக்கு வாழ ஒரு பொண்ணு வேண்டாம். என்னை நேசிக்க ஒரு காதலி வேணும்” என்று நிறுத்தி நிதானமாக தன் மனதை அவளுக்கு உணர்த்தினான் வெற்றி.

அவள் சட்டென்று கை கடிகாரத்தை பார்த்துவிட்டு அவனை நோக்கினாள்.

அவளின் குறிப்பை உணர்ந்து, “உங்களுக்கு யோசிக்க எவ்வளவு டைம் வேண்டும் என்றாலும் எடுத்துகோங்க. ஆனால் உங்க பதிலை எதிர்பார்த்து நான் காத்திட்டு இருப்பேன் என்பதை மறந்திறாதீங்க” என்றான் வெற்றி.

முதல்நாள் சந்தித்து போலவே மனதிலிருந்து பேசிய வெற்றியை அவளுக்கு பிடித்தது. எந்தவொரு விஷயத்திற்கும் அதிகம் தயக்கம் காட்டுபவன் காதலை வெளிபடுத்திய விதம் அவளின் மனதை வென்றது.

அதற்குள் பேரர் காபி கொண்டு வரவே, “ஆமா நீங்க என்ன காலையில் காபி ஷாப் வந்திருக்கீங்க” வெற்றி பேச்சை மாற்றினான்.

அதை உணர்ந்து, “நைட் தூங்கதால் தலைவலி அதிகமாக இருந்துச்சு. அத்தோடு கோவிலுக்கு கிளம்பி வந்தும் தலைவலி விடல. அதான் காபி சாப்பிட இங்கே வந்தேன்” என்றவள் அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.

செவ்வந்தி காபியை பருகியபடி, “வெற்றி ரொம்ப நேரமாகிவிட்டதா?” என்றாள் கண்கள் மின்ன.

கடிகாரத்தை பார்த்தவன், “இன்னும் மணி எட்டாகலங்க..” என்றான் எதார்த்தமாகவே.

“அப்போ அந்த ஏழரை போயிருச்சா..?” என்று சத்தமாக ஒலித்த பேரர் குரல்கேட்டு இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்தனர்.

சட்டென்று அவர்களின் பார்வை தன்மீது படிவத்தை உணர்ந்த பேரர், “இல்லங்க இந்நேரம் வரை ஒரு கேஸிடம் மாட்டிகிட்டு முழிச்சான் என் நண்பன். அவங்க போனதை நான் பார்க்கவே இல்ல. அதை அவன் சொன்னதும் என்னை அறியாமல் சொல்லிட்டேன்” என்றவர் பொதுவாக விளக்கம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

வெற்றியும், செவ்வந்தியும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர். இருவருக்கும் சிரிப்பு வந்துவிடவே வாய்விட்டு சிரித்தனர்.

இடது கரத்தில் கூந்தலை ஒதிக்கியவள், “நல்ல நேரம் வந்துவிட்டது போல” என்றவள் திருமணத்திற்கு மறைமுகமாகவே சம்மதம் தெரிவித்தாள்.

“ம்ஹும் ஆமாங்க” என்றவன் அதன்பிறகுதான் அதில் பொதிந்திருந்த அர்த்தம் புரிந்து சட்டென்று அவளை நோக்கினான்.

அவளின் முகம் வெக்கத்தில் சிவந்தபோதும் அவனின் பார்வையை எதிர்கொண்டு கேள்வியாக இடது புருவம் உயர்த்தியவளிடம், “எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றான் வெற்றி உற்சாகத்துடன்.

“பொங்கல் முடிஞ்ச பிறகு” என்றாள் அவள் சாதாரணமாக,

“அதுவரைக்கும் காத்திருக்கணுமா?” என்றவன் அவளை பொய்யாக முறைத்தான்.

“ஆக்க பொறுத்தவன் கொஞ்சம் ஆறாவும் பொறுக்கணும்..” என்று குறும்புடன் கூறியவள் எழுந்து கொண்டாள்.

பேரருக்கு பில் காட்டிவிட்டு, “பொங்கல் துணி தைச்சு கொடுத்தும் மாசி பண்டிகை என்று சொல்வ. அப்புறம் பங்குனி உத்திரம் எல்லோரும் ஊர்வலம் போறாங்க தைக்கனும்னு சொல்வ. சித்திரையில் பௌர்ணமி நோம்பு.. வைகாசியில் கல்யாண ஆர்டர் இருக்குன்னு காரணத்தை சொல்லிட்டே இருங்க” என்றான் குறும்புடன்.

அதற்கும் அசராமல், “இந்த ஐடியா நல்ல இருக்கே” என்றவளின் தலைவலி காணாமல் போகவே வாய்விட்டு சிரித்தவளை மன நிறைவுடன் பார்த்தான் வெற்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!