Isai, Iyarkai Matrum Iruvar 3.2

Isai, Iyarkai Matrum Iruvar 3.2

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் – 3

வேணிம்மா அறை

இருவரும் அறையின் உள்ளே வந்திருந்தார்கள்!!

பாதியிலே நின்றவளை பார்த்து, “அங்கே போய் பேசலாமா?” என்று பால்கனியைக் காட்டினான்.

‘ம்ம்’ என்று பாவை தலையாட்டியதும், பாண்டியன் நடக்க ஆரம்பித்தான். அவளும், அவன் பின்னேயே நடந்தாள்.

இருவரும், பால்கனி வந்து நின்று கொண்டனர். 

முதல் முறையாக, இப்படி ஒரு தருணம்! இருவரும் ஓரிரு நொடிகள் இதயத்தில் பறக்கின்ற பட்டாம்பூச்சியின் குறுகுறுப்பை ரசித்துக் கொண்டிருந்தனர்!!

பின், அவளைப் பார்த்தான்! பின், “என்னைப் பாரு? என்றான்!!

இமை விரித்து, இதயத்தில் இருபவனைப் பார்த்தாள்!!

“ஷாக்கிங் பிங்க்” என்றான்.

‘ம்ன்’ என்று பாவையின் குரல்வளையிலிருந்து ஒரு கேள்வியின் குரல் வந்தது.

“ஷாக்கிங் பிங்க்” என்று சொல்லி, அவளது புடவையைக் காட்டினான்.

ஒருமுறை குனிந்து தன் புடவையைப் பார்த்தவளுக்கு, ‘என்ன சொல்கிறான்?’ என்று புரியவில்லை. மீண்டும், ‘ம்ன்’ என்றாள் கேள்வியாக!

“ப்ச்” என்று சலித்துக் கொண்டவன், “பஞ்சு மிட்டாய் கலர்ல சேரி கட்டியிருக்கிற” என்றான் சட்டென்று! 

முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள். அதில் ஒருவித சங்கடம் தெரிந்தது.

“சாரி! சாரி! அது.. அது…” என்று தடுமாறியவன், அவளின் பாராமுகம் பார்த்து… “என்னைப் பாரு” என்றான் மீண்டும்.

திரும்பிப் பார்த்தாள்.

“ஆக்ச்சுவலா நல்லா இருக்கு” என்றான் சமாதானமாக!

ஆனால், அவள் சமாதானம் ஆனது போல் தெரியவேயில்லை.

“சரி அதை விடு” என்றவன், ஏதேதோ பேசினான்.

சில நொடிகளுக்குப் பின்,

“தனியா பேசணும்னு நினைச்சேன். ஆனா, நான் மட்டும் தனியா பேசிக்கிட்டு இருக்கிற மாதிரி இருக்கு” என்றான், அவள் குரலைக் கேட்கும் ஆவலில்!

அவள் சிரித்தாள்.

“ப்ச் சிரிக்காத! ஏதாவது பேசு!!” என்றவன் ஆவல், ஆர்வமாக மாறியது!

‘சரி பேசுறேன்’ என்பது போல் உடல்மொழியை மாற்றிக் கொண்டாள்.

அவனும்… முதன் முதலாகப் பேசப் போகிறாள்!  ‘என்ன பேசப் போகிறாள்?’ என்ற எதிர்பார்ப்புடன், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“நான்…” என்று ஆரம்பித்தவள், கொஞ்சம் தயங்கினாள். பின், “நான் அழுதா, கண்ணீரை துடைச்சி விடுவீங்களா?” என்று கேட்டாள்.

முதலில், ‘என்ன கேள்வி இது?’ என்று தோன்றியது. பின், ‘ஏன் இப்படிக் கேட்கிறாள்?’ என்று தோன்றியது. கொஞ்சம் யோசித்தவன், ‘தன்னை சோதிக்கிறாளோ?’ என நினைத்து, “நான் அழலாம் விடமாட்டேன்” என்றான்.

“கேள்வி அது கிடையாது!” என்று தெளிவாகச் சொல்லிவிட்டு, “நான் அழுதா, கண்ணீரை துடைச்சு விடுவீங்களா?” என்று மீண்டும் கேட்டுவிட்டு… பதிலுக்காக, அவனது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘ஏன், இப்படி ஒரு கேள்வி?’ என்று நினைத்தவன், ‘ஒருவேளை, தன் வீட்டினர் அவளைப் பார்த்துக் கொள்ளும் முறையைப் பற்றிய கேள்வியோ?’ என எண்ணிக் கொண்டு, “எங்க வீட்லயும் உன்னை நல்லா பார்த்துப்பாங்க” என்றான்.

‘இது பதிலல்ல’ என்பது போல் மறுத்துத் தலையசைத்தாள்.

பொறுமை போனதால், “நாம கொஞ்சம் வெளிப்படையா பேசலாமா?” என்று கேட்டான்.

“அப்போ பஞ்சு மிட்டாய் கலர், எந்த லிஸ்ட் -ல வரும்??” என்று கேட்டாள்.

சிரித்துக் கொண்டே, “நீ, அமைதியான பொண்ணு-ன்னு நினைச்சேன்” என்றான் வேடிக்கையாக!

“பதில் சொல்லுங்க” என்றாள் விடாமல்!

“ஓகே” என்றவன், “எதுக்காக அழணும்? அதை பர்ஸ்ட் சொல்லு” என்றான்.

“எனக்கு ஒரு கஷ்டம் வந்தா…” என்று ஆரம்பிக்கும் போதே,

“என்னால உனக்கு எந்தக் கஷ்டமும் வராது. வேற ஏதாவது கஷ்டம்னா… என் மேல நம்பிக்கை இல்லைன்னா மட்டும்தான் நீ அழுவ! என் மேல நம்பிக்கை இருந்தா, ‘இவன் பார்த்துப்பான்-ன்னு’ ஒரு தாட் வரும். அப்போ கண்டிப்பா அழ மாட்ட” என்று, அவன் அன்பின் அறிவியலை விளக்கினான்.

அவள் யோசித்தாள்.

“ஆன்சர் கிடைச்சிருச்சா?”

‘இல்லை’ என்பது போல் தலையசைத்தாள்.

“ஏன்?”

“உங்க மேல எனக்கு நம்பிக்கை இருந்தா மட்டும்தான், நான் அழுவேன்”

“புரியலை”

“எனக்கொரு கஷ்டம் வந்து, நான் அழுதா…  நீங்க, அதைக் கிண்டல் பண்ண கூடாது. அதே மாதிரி, அந்தக் கஷ்டத்தை நினைச்சி… நீங்க கவலைப்படக் கூடாது, ஆறுதல் சொல்லணும்!” என்றாள்.

அவன் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“உங்க மேல இந்த நம்பிக்கை வந்தா மட்டும்தான்…” என்று இடைவெளி விட்டவள், “நான் அழுவேன்” என்றாள், இதழ்கள் விரித்து!

“புரியுது” என்றான் இலகுவாக!

“என்ன புரியுது?”

“நீ மனசால யோசிக்கிற!” என்றான்.

‘என்ன பேசுகிறான்?’ எனப் புரியாமல் பார்த்தவள், “மனசால எப்படி யோசிக்க முடியும்?” என்று கேள்வி கேட்டாள்.

“மனசால யோசிச்சாதான் இப்படிப் பேச முடியும்! ஸோ, எப்பவும் மூளையால யோசிச்சு பேசு” என்று, அவனது அன்பின் அறிவியலைப் புரிய வைக்கப் பார்த்தான்.

“புரியலை”

“சரி விடு! இன்னைக்கே எல்லாம் புரிஞ்சிக்கணும்னு அவசியமில்லை. போகப் போக பார்த்துக்கலாம்” என்றவன், “ம்ம்ம்?” என்று அவளிடம் கேள்வியாகக் கேட்டான்.

“ம்ம்ம்” என்றாள், அதையே பதிலாய்!

ஓரிரு நொடிகள் இங்கேயும் அங்கேயும் பார்த்தவன், “நேத்து உன்னைப் பத்திதான் யோசிச்சிகிட்டு இருந்தேன், தெரியுமா?” என்று, தன் ஆசையைப் பற்றிப் பேச ஆரம்பித்தான்.

அழகாக சிரித்தாள்.

“ஹனி லோகஸ்ட்… வாங்கி வச்சி, அதுகூட பேசிக்கிட்டு இருந்தேன்” என்று, நேற்றைய தினத்தின் நேயங்களின் நேரங்களைப் பற்றிச் சிலாகித்துச் சொன்னான்.

“ஹனி லோக்ஸ்ட்!?” என்று வினவியவள், “அப்படின்னா ஏதாவது சாப்பிடற பொருளா?” என்றாள் விருட்டென!

சிலாகித்துக் கொண்டிருந்தவன், சில்லு சில்லாக உடைந்து போனான்!

மேலும், “சாப்பிடற பொருளா?” என்று நெடில் விகுதியில் கேட்டவன், “எப்படி சாப்பாட்டை இதோட கம்பேர் பண்ற?” என்று நொந்து போய் கேட்டான்.

“அதான் பேர்-லயே ஹனி இருக்கே?!!”

 “அது மரத்தோட பேரு” என்றான்.

“மரமா?” என்று காற்றாகிப் போனக் குரலில் கேட்டு, “ஆனா, என்னை நினைச்சி ஏன் அதுகூட பேசினீங்க?” என்று கேட்டாள்.

“ஹனி-னா தேன்”

“ஓ! ஹனி… தேன்… தேன்பாவை! கரெக்ட்டா?” என்றாள் உற்சாகமாக!

“ம்ம்ம்” என்றவன், “சரி! நீ சொல்லு, நேத்து என்னை நினைச்சியா?” என்று கேட்டான் உரிமையாக!

“ம்ம்ம்” என்றாள். நேற்றைய நாளின் நீள அகலங்கள் முழுவதையும் நிரப்பியவனால், இன்றைய நொடிகளிலும் நாணம் வந்தது!!

“எப்போ? எப்படி?” என்றான் ஆர்வமாக!

“நேத்து நானும் வேணிம்மாவும்…” என ஆரம்பிக்கும் போதே, 

“வேணிம்மா?” என்றான் வேள்வியாக!

“என் பாட்டி” என்றாள்.

“ஓ! சொல்லு சொல்லு” என்றான் மீண்டும் ஆர்வமாக!

“நேத்து நானும் வேணிம்மாவும் கோவிலுக்குப் போனோமா!! அங்க சிவ-சிவ அப்படி-ன்னு எழுந்திருந்தது! உடனே உங்க நியாபகம் வந்தது”

“ஓ!” என்றவனின் ஆர்வம் கொஞ்சம் குறைந்தது!

“அப்புறம்… ஒரு இடத்தில சிவாலயம்-ன்னு பார்த்தேன். அப்பவும் உங்க நியாபகம் வந்தது”

“ஓ!” என்றவனின் ஆர்வம் பாதி குறைந்தது!

“அப்புறம் வேணிம்மா கார் டிரைவர் ரிங்க்டோன் ‘ஹர ஹர சிவனே அருணாசலனே’ பாட்டு! அப்பவும் உங்க நியாபகம் வந்தது”

“ஓ!” என்றவனின் ஆர்வம் மொத்தமாக வடிந்து போனது!!

“அப்புறம்…” என்றவளிடம்,

நெற்றியைப் பிடித்துக் கொண்டிருந்தவன், “போதும் போதும்” என்றான் பொறுக்க முடியாமல்!

“ஏன்? உங்களை விட நிறைய டைம் நினைச்சிருக்கேனா?” என்றாள் பெருமையாக!

“ம்ம்ம்”

“இன்னும் ஃபுல்லா சொன்னா, நீங்க ஷாக் ஆகிடுவீங்க” என்றாள்.

“இப்பவும் அப்படித்தான் இருக்கேன்” என்றான்!

“என்ன சொல்றீங்க?”

‘கொஞ்சம் கருத்து வேறுபாடு இருக்கிறது’ என்று கண்டுகொண்டவன், “ஓகே! லீவ் இட்” என்று விட்டுவிட்டான்.

ஓரிரு நொடிகள் மௌனத்தில் கரைந்தன!

பின், “ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்றான்.

“என்ன?” என்றாள்.

“நான் என்ன வேலை பார்க்கிறேன்-ன்னு தெரியுமா?”

“ம்ம்ம், போட்டோகிராபர்”

“லாண்ட்ஸ்கேப் ஆர் நேச்சர் போட்டோக்ராபர்-னு சொல்லணும்” என்று திருத்தினான்!

“சரி! இன்னொரு தடவை கேளுங்க, நீங்க சொன்ன மாதிரி சொல்றேன்” என்று சிரித்தாள்.

அவனும் சிரித்துக் கொண்டான்.

பின், “நான் சொல்ல நினைச்சது, என் அப்பா பிசினஸ்-ஸ நான் பார்க்கலை. நளினிதான் பார்த்துக்கிறா! அதுல என்ன ப்ராபிட் வருது? என்ன பண்றாங்க? எதுவுமே எனக்குத் தெரியாது. நான்… என்னோட… இன்கம்… ” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, 

கிரி மாமா கேட்டதற்காகப் பேசுகிறான் என்று புரிந்தது. உடனே, “பணம் பத்திப் பேசுறீங்களா?” என்றாள் நேரிடையாக!

“அப்படியில்லை” என்றான் மழுப்பலாக!

“அப்படித்தான்” என்றாள் முறைப்பாக!

“ம்ம்ம் கிட்டத்தட்ட!” என்றான் முடிவாக!

ஒரு நிமிடம் தீர்க்கமாக யோசித்தவள், “உங்ககூட வாழ்க்கையைத்தான் ஷேர் பண்ணிக்க வர்றேன். வருமானத்தை இல்லை” என்றாள் உணர்வுப் பூர்வமாக!

அவளின் வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்ந்தவன், அப்படியே உறைந்து போய் நின்றான்.

அதற்குள், “டைம் ஆகிடுச்சு போகலாம்” என்று சொல்லி, இரண்டு எட்டு நடந்தாள்.

உறைந்து போனவன், உணர்வு வந்து… அவள் முன்னே சென்று நின்றான்.

‘என்ன?’ என்பது போல் பார்த்தாள்.

“கோபமா?” என்று கேட்டான்.

“இல்லை” என்றாள் பொய்யாக!

“இல்லை! கோபம்தான்” என்றான் பொறுமையாக!

“ஆமா! கோபம்தான்” என்றாள் பொசுக்கென்று!

சிரித்துக் கொண்டான். பின், “உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றான் உள்ளத்திலிருந்து!

“தேங்க்ஸ்” என்றாள் உடனடியாக!

‘தேங்க்ஸா? அவ்வளவுதானா??’ என்று உற்சாகம் வடிந்து நின்றுவிட்டான்.

குறுக்கே நின்றவனைச் சுற்றி நடந்து போனாள். ‘இவ ஏன் இப்படி?’ என்று எண்ணியவன், மீண்டும் அவள் முன்னே வந்து நின்றான்.

“இப்போ என்ன?” என்றாள் அசட்டையாக!

‘ஓ! அவ்வளவு தூரம் ஆகிப்போச்சா?’ என எண்ணியவன், “53712392” என்ற எண்களைச் சொல்லிவிட்டு, நடக்க ஆரம்பித்தான்.

‘இது என்ன?’ என யோசித்தவள்… அவன் முன்னே சென்று, “இது என்ன நம்பர்?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.

“நீதான் கண்டுபிடிக்கணும்” என்று அசட்டையாகச் சொல்லிவிட்டு, நடந்தான்.

‘கண்டுபிடிக்கணுமா?’ என தனக்குள் சொல்லியவள், மீண்டும் அவன் முன்னே சென்று, “உங்க ஃபோன் நம்பரா?” என்று கேள்வி கேட்டாள்.

“எந்த ஊர்ல ஃபோன் நம்பர் எட்டு டிஜிட்-ல இருந்தது?” என்று பதில் கேள்வி கேட்டான்.

“ஓ!” என்றவள், ” ப்ளீஸ் சொல்லுங்க” என்று கெஞ்சினாள்.

“நல்லா கேட்டுக்கோ! 53712392” என்று திரும்பவும் எண்களையே சொன்னான்.

மீண்டும் யோசித்தவள், “ஆங்! இந்த எ பி சி டி போட்டுக் கண்டுபிடிக்கணுமா?” என்று கேட்டாள்.

“ஓ! இன்னும் நீ எ பி சி டி லெவல்தான் இருக்கியா?” என்றான் நய்யாண்டியாக!

“விடுங்க! நானே கண்டுபிடிக்கிறேன்” என்றாள் நம்பிக்கையாக!

“ஓகே” என்றவன், “உன் ஃபோன் நம்பர் சொல்லு” என்றான்.

குறித்து வைத்துக் கொள்ள… செல்பேசியைத் தன் பான்ட் பாக்கெட், சட்டை பாக்கெட்களில் தேடியவன், “ஐயோ! ஃபோன் கார்-ல இருக்கு போல” என்றான்.

‘இப்போ என்ன செய்ய?’ என்பது போல் பார்த்தாள்.

“சரி, நான் சொல்றேன், நீ உன் ஃபோன்-ல சேவ் பண்ணிக்கோ” என்றான்.

“என் ஃபோன் வெளியில இருக்கு” என்றாள்.

“சரி, பென் இருக்கா?”

சுற்றும் முற்றும் பார்த்தாள். அவனும் பார்த்தான்.

எதுவும் இல்லை என்று தெரிந்ததும், சட்டென, ட்ரெஸிங் டேபிள் முன்னே சென்றான். அங்கிருந்த லிப்ஸ்டிக் எடுத்து, கப்போர்டை திறந்து…. “இதுல நம்பர் எழுதி வைக்கிறேன்? அப்புறமா சேவ் பண்ணிக்கோ” என்று சொல்லி, தன் செல்பேசி இலக்கத்தை எழுதிவிட்டு, லிப்ஸ்டிக்கை அவளிடம் கொடுத்தான்.

வாங்கியவள், “ஒரு லிப்ஸ்டிக் வேஸ்ட்” என்று சலித்துக் கொண்டாள்.

“வாங்கித் தந்திடுறேன்-மா” என்று சத்தியம் செய்யாதக் குறையாகச் சொன்னான்.

பின், அர்த்தமாக ஓர் புன்னகை செய்தான். அவளும் புன்னகை செய்தாள்.

அவர்களின் பேச்சில் இருந்த பிரியங்களை விட… புன்னகையில் இருந்த பிரியங்கள் அதிகம்!!

சற்று நேரத்தில்…

பாண்டியனும் பாவையும் பேசி முடித்து வந்த பின்னும், திருமணம் குறித்த சில விடயங்கள் பேசினார்கள்.

பின்… பாண்டியன் வீட்டினர் விடைபெற்றுக் கிளம்பினார்கள். கிரியும், மீனாட்சியும் குடியிருப்பின் கீழே சென்று, அவர்களை வழியனுப்பி வைத்தார்கள். வேணிம்மா கேட்டுக் கொண்டிருந்தார். ஆதலால் இப்படி!

வீட்டில்

“பாவை வாம்மா” என்று வேணிம்மா அழைத்ததும், வரவேற்பறையில் இருந்த தன் செல்பேசியை எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தாள்.

“நான் கொஞ்ச நேரம் படுத்திருக்கேன்” என்று வேணிம்மா சொன்னதும், ” சரி வேணிம்மா” என்றாள்.

அவர் படுத்துக்க கொண்டதும், கப்போர்ட்-ல் இருந்த இலக்கத்தை தன் செல்பேசியில் ஒவ்வொன்றாக அழுத்தி… பாண்டியனை அழைத்தாள்.

மகிந்திரா தாரில் சென்று கொண்டிருந்தவனை, செல்பேசி சத்தம் கலைத்தது.

அழைப்பை ஏற்றவன், “ஹலோ யாரு?” என்றான்.

“யாருன்னு கேட்கிறீங்க?” என்றவள், “இது என் நம்பர்! உங்க ஃபோன்-ல சேவ் பண்ணிக்கோங்க” என்றாள்.

“சரிங்க” என்று அவன் சொன்ன விதத்தில், சிரித்துக் கொண்டே அழைப்பைத் துண்டித்தாள்.

அவன் ‘ஹனி’ என்று சேமித்தான். இவள், ‘பாண்டியன்’ என்று!

இருவரின் நாட்களும் திருமண நாளை நோக்கி நகர்ந்தன! அது எப்படி என்றால்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!