Malar – 19
Malar – 19
அத்தியாயம் – 19
திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் மனைவியோடு சென்று அவளின் வீட்டிலிருந்த உடமைகளை எடுத்து வந்தனர். அவள் தனித்திருப்பது மைதிலிக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
நாட்கள் அதன் போக்கில் வேகமெடுத்து சென்று மறைய தொடங்கியது. மற்ற மூவரும் தங்களின் வேலையில் கவனத்தை திருப்பினர். புதுமணத் தம்பதிகளின் இடையே இருக்கும் நெருக்கம் இல்லாமல், நண்பர்கள் போல கைகோர்த்து வலம் வந்த இருவரையும் கண்டு சுற்றியிருப்பவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
வீட்டில் இருக்கும் நேரங்களில் செவ்வந்தியும், ஜமுனாவும் வீட்டை மாற்றி அமைப்பதில் கவனம் செலுத்தினர். அன்றும் அதுபோல வீட்டின் பழைய பொருட்கள் போட்டு வைத்திருக்கும் அறையை இரண்டு பெண்களும் புரட்டிப்போட்டு சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அங்கே ஜமுனாவின் சின்ன வயது ஆல்பம் கிடைக்கவே, “என்ன உன்னோடது மட்டும் இருக்கு. உங்க அண்ணனோட போட்டோ எதையுமே காணல” என்று ஆர்வத்துடன் அங்கிருந்த பொருட்களை நகர்த்திவிட்டு தீவிரமாக தேடினாள்.
“அடேயப்பா புருஷனோட போட்டோ பார்க்க இவ்வளவு ஆர்வமா?” இடையில் கையூன்றி நின்றவள் வேண்டுமென்று அவளை வம்பிற்கு இழுத்தாள்.
தீவிரமான தேடலில் ஈடுப்பட்டிருந்த செவ்வந்தி சட்டென்று எழுந்து, “என்ன சொன்ன எனக்கு புருஷனா? அப்போ உனக்கு அவரு அண்ணன் இல்லையா?” சின்னவளின் காதைப் பிடித்து திருகினாள்.
“ஐயோ அண்ணி வலிக்குது.. ப்ளீஸ் நான் சும்மா வம்பிழுத்தேன்.. வெற்றி எனக்கு அண்ணன்! அப்புறம்தான் உங்களுக்கு புருஷன் ஓகே வா” பொய்யாக நடிக்க சிரிப்புடன் அவளின் காதை விட்டாள் பெரியவள்.
தன் அண்ணியை சிரிப்புடன் ஏறிட்ட ஜமுனா,“அண்ணாவின் சின்ன வயசு போட்டோ இந்த வீட்டில் ஒன்றுகூட இல்லங்க அண்ணி. இங்கிருக்கும் பொருள்கள் எல்லாமே அப்பாவும், அம்மாவும் கஷ்டப்படும்போது வீட்டில் இருந்தவை. இன்னும் நானே அண்ணாவோட சின்ன வயசு போட்டோ பார்த்ததில்லை” என்று சொல்லவே செவ்வந்தி யோசனையுடன் நின்றிருந்தாள்.
அவள் சொன்னதுபோலவே அனைத்தும் கஷ்டப்படும் போது வாங்கிய பொருட்களாகவே இருந்தது. அதே நேரத்தில் வெற்றி தன் சொந்த தங்கையுடன் ஒரு போட்டோ கூட இல்லாமல் எப்படி போகுமென்ற சந்தேகம் மனதில் எழுந்தது.
அவளின் முகத்தில் வந்து சென்ற உணர்வுகளை கண்டுகொள்ளாமல், “அதுமட்டும் இல்ல அண்ணி. உங்க கல்யாணத்திற்கு முன்னாடி ஒருமுறை அப்பா, அம்மா இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. அப்போது வெற்றி அண்ணா வாய் திறக்காமல் இருப்பதால் தான் நாம் இன்னைக்கு இவ்வளவு வசதியாக இருக்கோம்னு சொன்னாரு. அது ஏன் என்று புரியவே இல்ல” வாய்விட்டு புலம்பியபடி அந்த அறையைவிட்டு வெளியேறினாள் ஜமுனா.
அவளின் பின்னோடு சென்ற செவ்வந்தி, “நீ இதுபற்றி உங்க அண்ணனிடம் கேட்டியா?” என்று அவள் விசாரிக்க சடர்ன் பிரேக் போட்டது போல நின்றாள் ஜமுனா.
“அதெல்லாம் எப்படி அண்ணனிடம் கேட்க முடியும். வெற்றி அண்ணா இதுவரை என்னிடம் எந்த விஷயமும் மறைத்ததில்லை. அதே நேரத்தில் இதைக் கேட்டால் உடனே பதில் சொல்வார் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை” என்று கூறவே செவ்வந்தியின் புருவங்கள் சுருக்கியது.
ஜமுனா மற்ற வேலைகளைக் கவனிக்க சென்றுவிட, ‘இந்த வீட்டில் இருப்பது நான்கே பேர். அதில் அண்ணனும், தங்கையும் மட்டுமே எதார்த்தமாக இருக்காங்க. ஆனால் மாமா, அத்தையிடையே அந்த இயல்பில்லை” செவ்வந்தியின் கரங்கள் தன் வேலை செய்தபோதும் மனம் ஏனோ சிந்தனையில் உழன்றது.
அந்த நினைவிலேயே எதையோ எடுக்க திரும்பினாள். அப்போது வெளியே சென்று வீடு திரும்பிய வெற்றி தண்ணீர் குடிக்க வேகமாக சமையலறைக்குள் நுழைந்தான். இருவருமே ஒருவரையொருவர் கவனிக்கும் மனநிலையில் இல்லை.
இருவரும் நேருக்கு நேர் மோதிட செவ்வந்தி தடுமாறிக் கீழே விழப்போக, “ஏய்”என்றபடி அவளின் இடையில் கைகொடுத்து தாங்கிப் பிடித்து நிறுத்தினான். அவனின் கரங்கள் படிந்த இடம் கூச்சத்தில் குறுகுறுப்பு மூட்டிட அவளின் முகமோ செவ்வானமாக சிவந்தது.
அவளின் மனதினுள் திக்கென்ற உணர்வு எழுந்து பயமுறுத்தியது. அவளின் மனம் படபடவென்று துடித்த இதயத்தை அடக்கும் வழி தெரியாமல் அவனின் விழியை நோக்கினாள் பாவை. அவனின் பார்வையில் தெரிந்த தாபம் அவளை வாயடைக்க வைத்தது.
சட்டென்று தன்னை மீட்டுக்கொண்டு, “வெற்றி சமையலறைக்குள் உங்களுக்கு என்ன வேலை?” என்று எரிந்து விழுந்தவள், அவளின் இடையில் பதிந்த கையை வெடுக்கென்று தட்டிவிட்டு விலகி நின்றாள்.
செவ்வந்தியின் செயல் அவனுக்கு கோபத்தை வரவழைக்க, “உங்க பதட்டத்தை மறைக்க என்னிடம் எரிந்து விழுகாதீங்க” நிதானமாக கூறியவன் ப்ரிஜ்ஜை திறந்து ஐஸ் வாட்டரை எடுத்துகொண்டு வெளியே சென்றான்.
தன்னிடம் கண்ணியமாக நடக்கும் அவனைத் திட்டிவிட்ட குற்ற உணர்ச்சியில், “ஸாரி நான்..” என்றவள் விளக்கம் கொடுக்க முயற்சிக்க அதை காதில் வாங்க அவன் அங்கில்லை.
மதியம் சாப்பிட அமர்ந்த வெற்றி தானே பரிமாறிக்கொண்டு சாப்பிட தொடங்க, “அண்ணா ஏன் இவ்வளவு அவசரம். அண்ணி வந்து பரிமாறுவாங்க இல்ல” என்றாள் அவசரமாக.
வெற்றியோ, “அதுவரை என்னால் பசி தாங்க முடியாது செல்லம்மா. அதனால் தான்” என்றவன் சாப்பாட்டில் கவனத்தை செலுத்த செவ்வந்தியின் முகம் வாடிப் போனது. அவனின் செயல் அவளை விலகி நிறுத்தியதைப் போல உணர்ந்தாள்.
அவன் சாப்பிட்டு எழுந்து சென்றபிறகு பெண்கள் இருவரும் சாப்பிட அமர்ந்தனர். செவ்வந்தி சாப்பிடுவதாக பேர் செய்துவிட்டு எழுந்து சென்றாள்.
நேராக அறைக்குள் செல்ல முடியாமல் அவள் தயக்கத்துடன் அவனை பார்க்க, வெற்றியோ அவளை கண்டுகொள்ளாமல் புத்தகமும் கையுமாக அமர்ந்திருந்தான். அவனின் மனநிலையை கணிக்க முடியாமல், “வெற்றி ஸாரி” என்றாள் கரகரப்பான குரலில்.
அவளின் குரலில் மாற்றத்தை உணர்ந்து சட்டென்று நிமிர்ந்து அவளை நோக்கினான். அவளின் கண்கள் லேசாக கலங்கியிருக்க, தவறு செய்துவிட்ட குழந்தைபோல நின்றிருந்த மனையாளை கண்டவுடன் கோபம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
அவள் தன் பதிலை எதிர்பார்த்து நிற்பது புரிய, “என் மீதுதான் தவறு. நான்தான் தேவையில்லாமல் கோபபட்டுட்டேன்” என்று சாதாரணமாகக் கூறினான்.
செவ்வந்தி அமைதியாக அவனையே பார்க்க, “என்னதான் நம்ம இருவரும் காதலிச்சு கல்யாணம் பண்ணியதாக ஊரில் இருப்பவங்க நினைத்தாலும், அந்த காதல் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை நீங்க இன்னும் உணராத நிலையில் நான் உங்களை நெருங்க நினைத்தது தவறுதான்” என்றவன் அவளை இழுத்து அருகே அமர வைத்தான்.
“அப்படி சொல்லாதீங்க வெற்றி. அலையில் மிதந்த மலரைப் பாதுகாப்பாக எடுத்து வந்து கரை சேர்த்தது நீங்கதான் வெற்றி.. நீங்க என் வாழ்க்கையில் வராமல் போயிருந்தால் அநாதை மாதிரி அப்படியே வாழ்க்கை போயிருக்கும்” என்றவளின் கையைப் பிடித்து அழுத்தம் கொடுத்தான்.
அவள் நிமிர்ந்து பார்க்க, “வாழ்க்கை என்ற கடலில் வாழ தெரியாமல் சுவாசத்திற்கு தத்தளிச்ச என்னைக் காப்பாற்றியது நீங்கதான்” என்றவன் அவளை விட்டுக்கொடுத்தாமல் பேசினான்.
அவன் பேசும்போது அவளின் குற்ற உணர்வு அதிகரிக்க, “நான் ஏன் திடீரென்று அப்படி நடந்துகிட்டேன் என்று எனக்கே புரியல” என்றவள் ஏதேதோ புலம்ப தொடங்கினாள்.
அவள் வெளியே தைரியமான பெண் என்றபோதும் அவளின் பாதிப்புகள் இப்படி தடுமாற்றமான நிலையில் கண்ணீரோடு வெளிபடுவதை அவனும் மெல்ல உணர தொடங்கினான்.
“நான் உரிய பாதுகாப்புடன் வளர்ந்தவ இல்ல வெற்றி. என்னைச்சுற்றி இருந்தவங்க ஏதோவொரு நிலையில் எல்லையைக் கடந்து வர முயற்சி பண்ணியிருக்காங்க. அப்போது என்னைத் தற்காலிகமாக பாதுகாக்க முயற்சி செய்து ஆண்களைவிட்டு விலகி நிற்க தொடங்கினேன். என்னோட படிப்பு, வேலை இதில் எல்லாமே நான் மட்டும் முடிவெடுத்து செயல்படுத்துவது மாதிரி அமைச்சது” என்றவள் இடையில் நிறுத்தினாள்.
அவளின் பேச்சிலிருந்தே எந்தளவு பிரச்சனைகளைக் கடந்து வந்திருக்கிறாள் என்று வெற்றியால் உணர முடிந்தது.
“உங்களைப் பார்த்த இரண்டாவது சந்திப்பில் கல்யாணம் பண்ணிகிறீங்களான்னு கேட்டு இருக்கேன். நீங்க கூட என்னைத் தவறான பொண்ணுன்னு நினைச்சிருக்கலாம். ஆனால் உண்மையாக சொல்லணும் என்றால் உங்களிடம் ஒரு பாதுகாப்பை நான் உணர்ந்தேன்” என்று அவள் இடது கையால் கண்களைத் துடைத்தபடி அழுகையுடன் முடிக்கும் முன்னரே அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் வெற்றி.
அவள் அழுகை அதிகரிக்க, “இன்னைக்கு எதர்ச்சியாக நடந்ததை நான்தான் குழப்பத்தில்.. தெரியாமல்..” என்றவள் அழுகையூடே கோர்வையாக சொல்ல தடுமாறினாள்.
அவளின் புலம்பலை தடுக்க நினைத்த வெற்றி தன் மார்பில் புதைந்தவளை வலுக்கட்டாயமாக தன்னிடமிருந்து பிரித்தான். மறுநிமிடமே எதைப்பற்றியும் யோசிக்காமல் அவளின் மலர் முகத்தை கையில் ஏந்தியவன் அவளின் இதழ்களைத் தன் இதழால் சிறைப்பிடித்தான்.
செவ்வந்தியின் அழுகை சட்டென்று நின்றுவிடவே அவனை விழி விரிய பார்த்தாள். அவள் முகத்தில் தெளிவைக் கண்டு அவளின் இதழில் இருந்து தன் இதழைப் பிரித்தான் வெற்றி.
பிறகு, “செவ்வந்தி இனிமேல் நீ புலம்பினால் இதுதான் ட்ரீட்மெண்ட். நான் உன்னைத் தவறாக நினைக்கிறேன்னு நீயே கற்பனை பண்ணாதே. நான் வேறொரு பெண்ணை காதலித்தது பற்றி உனக்கு தெரியும். ஆனால் அவளுக்காக நான் இப்படியெல்லாம் துடித்ததில்லை” என்றவன் அவளுக்கு உணர்த்திவிடும் நோக்கத்துடன் பேசினான்.
“மத்தவங்களுக்கு முன்னால் எப்படி நடக்கிறேனோ தெரியாது. ஆனால் என் மனசுக்கு தெரியும். உன்னை மட்டும் உயிராக நேசிச்சு கல்யாணம் பண்ணிருக்கேன் என்று! நீ இன்னும் உன் காதலை உணராதபோது நெருங்க நினைத்தது தவறு என்றுதான் மன்னிப்பு கேட்டேன்” என்றவன் சொல்லி முடிக்கும்போது அவள் இமைக்கமறந்து அவனையே பார்த்தாள்.
வெற்றியின் விளக்கம் அவளின் மனதில் இருந்த வெறுமையை விரட்டிட போதுமானதாக இருந்தது.
செவ்வந்தியின் பார்வையை தன் மீது நிலைப்பதை உணர்ந்து, “நீ அநாதை இல்ல. உனக்கு இங்கே அனைத்து உறவுகளும் இருக்கு” அவளின் கலங்கிய கண்களை துடைத்துவிட்டு எழுந்து சென்றான்.
அவன் ஆணென்ற போது அவளுக்கென்று ஒரு மனம் இருப்பதை உணர்ந்து கண்ணியமாக நடந்து கொண்ட கணவனை நினைத்து, ‘நான் இன்னுமா என் காதலை உணராமல் இருக்கேன்’ என்ற சிந்தனையில் இறங்கினாள்.
அவர்களின் வாழ்க்கை தெளிந்த நீரோடை போலவே செல்ல தொடங்கியது.
இதற்கிடையே கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய ஜமுனாவின் அனுமதியைக் கேட்டபோது, “எனக்கு அதில் விருப்பமில்லை. நான் எப்போதும்போலவே இருக்கேனே” என்று சொல்லிவிடவே அதன்பிறகு கணவனும், மனைவியும் எதுவுமே பேசவில்லை.
அன்று வழக்கம்போலவே கடைக்குள் நுழைந்த வெற்றியும், செவ்வந்தியும் அவரவர் வேலைகளைக் கவனிக்க சென்றனர். அங்கே பிரகாஷ், ஜோதி, மைதிலி, ஜமுனா நால்வரும் மும்பரமாக தைத்துக்கொண்டு இருந்தனர்.
செவ்வந்தி கட்டிங் வேலையைக் கவனிக்க, “ச்சே” என்ற எரிச்சலோடு கையோடு கொண்டு வந்த பார்சலை மிஷின் மீது போட்டுவிட்டு கோபத்துடன் சேரில் அமர்ந்தாள் சரண்யா.
“ஏய் என்னாச்சு இன்னைக்கு உனக்கு?” என்று மைதிலி கேட்டதற்கு,
“நல்ல கேளுங்க சிஸ்டர். காலையில் இருந்து இப்படித்தான் இருக்கிற?” தன் பங்கிற்கு கோபபட்டு மிஷினில் அமர்ந்தான்.
அவள் மெளனமாக இருக்க, “அதென்ன கையில் பையுடன் வந்திருக்கிற? ஆமா என்னதான் பிரச்சனை?” என்று ஜோதி ஆராய்ச்சியோடு சரண்யாவை பார்த்தாள்.
அவளைச்சுற்றி எல்லோரும் கேட்க அவளோ மௌனமாகவே இருப்பதை கண்டு, “சரண்யா இப்போ வாய் திறந்து பேசறீயா இல்லையா?” யாருமே எதிர்பாராத நேரத்தில் அதட்டல் போட்டாள் செவ்வந்தி.
“அக்கா என்னோட ப்ரெண்ட் தென்றல் உங்களுக்கு தெரியுமில்ல?” என்று கேட்டவளை மற்றவர்கள் குழப்பத்துடன் நோக்கினர்.
செவ்வந்தி சிறிதுநேர சிந்தனைக்குப் பிறகு, “ஓ அவளா?! ஆமா அவளுக்கு என்ன பிரச்சனை?” என்றாள் கண்ணில் குறும்பு மின்னிட.
அண்ணியின் குதுகலமான பேச்சைக்கேட்டு சுவாரசியமாக இருவரையும் வேடிக்கைப் பார்க்க தொடங்கினாள் ஜமுனா. மற்றவர்களோ காரணம் புரியாமல் அமர்ந்திருந்தனர்.
“போன மாசம் வேலை செய்த சம்பளத்தில் ஆசை ஆசையாக இரண்டு சுடிதார் மெட்டிரீயல் துணியெடுத்து தைச்சேன். நேற்று துவைத்து காயப்போட்டு பின் பண்ணி வைத்த துணியை எடுத்துக் கொண்டுபோய் எந்த வீதியில் போட்டான்னு தெரியல அக்கா” என்றவள் மீண்டும் அழுகையைத் தொடங்கிவிட்டாள்.
“சுடிதார் செட்டாக காணாமல் போயிருச்சா?” என்று மைதிலி கேட்க மறுப்பாக தலையசைத்தாள்.
“இல்லக்கா ஒரு சுடிதாரோட டாப்பும், இன்னொரு சுடிதாரின் பேண்டும் காணோம்” என்று தீவிரமாக பதில் சொன்ன சரண்யாவைக் கண்டு செவ்வந்தியால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
“நீ நல்ல தேடி பார்த்தீங்களா?” என்று ஜோதி அக்கறையுடன் விசாரிக்க அவளும் ஒப்புதலாக தலையசைத்தாள்.
மற்றவர்களின் கவனம் முழுவதும் சரண்யாவின் மீதே நிலைத்திருந்ததால் செவ்வந்தியை யாருமே கவனிக்கவில்லை. ஆனால் அவள் சிரிப்பை அடக்க முயற்சிப்பதை கவனித்த வெற்றி கண்களில் கேள்வியுடன் அவளை நோக்கினான்.
அவளோ பார்வையால் அவனை அருகே அழைக்க மறுப்பு சொல்லாமல் அங்கே சென்றபோது, “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். அன்னைக்கு அடுத்தவங்க துணியை எடுத்து ஆந்திரா பார்டரில் போட சொன்னீயே சரண்யா. இப்போ உன் தோழி உன்னுடைய துணியைக் கொண்டுபோய் இந்தியா – பாகிஸ்தான் பார்டரில் போட்டுவிட்டாளோ?” என்று குறுஞ்சிரிப்புடன் கேட்டாள் செவ்வந்தி.
அவள் சொன்னதைக் கேட்டவுடன், “என்னாச்சு செவ்வந்தி” என்று தீவிரமான பாவனையோடு விசாரித்தான் கணவன்.
அவனிடம் நடந்ததை விளக்கமாக சொல்லவே அவனும் வயிற்றைப்பிடித்துக் கொண்டு சிரிக்க தொடங்கிட, “அக்கா சிரிக்காதீங்க அக்கா” என்றாள் சரண்யா கோபத்துடன்.
“அதென்ன உனக்கு வந்த மட்டும் அது இரத்தம்.. அடுத்துவனுக்கு வந்தா அதுக்குக்குப் பேரு தக்காளி சட்னியா?” என்று வடிவேல் பாணியில் கேட்டுவிட்டு மீண்டும் சிரிக்க தொடங்கிவிட்டாள்.
ஜமுனா காரணம் புரியாமல் கேட்கவே நடந்ததை வெற்றி விளக்கமாக சொல்ல அதைக்கேட்ட அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.
“அக்கா நானே வருத்தத்தில் இருக்கேன். நீங்க வேற கிண்டல் பண்ணாதீங்க?” என்று கோபத்தில் கத்தினாள்.
“இயற்கைக்கு நம்ம எல்லோரும் சரி சரிசமம். அதுக்கு ஏழை பணக்காரன் வித்தியாசம் தெரியாதுன்னு அன்னைக்கு நான் சொன்னதுக்கு இப்போ அர்த்தம் புரிந்ததா?” என்று கேட்டதும் அவளும் ஒப்புதலாக தலையசைத்தாள்.
மற்றவர்கள் சிறிதுநேரம் சிரித்துவிட்டு வேலையைக் கவனிக்க தொடங்கிவிட்டனர். அந்தநேரம் எப்.எம்.மில். “ராஜா சின்ன ரோஜாவோடு” பாடல் ஒளிபரப்பாகவே செவ்வந்தியின் புன்னகை விரிந்தது.
“வினை விதைத்தவன் வினையறுப்பான்
திணை விதைத்தவன் தினையறுப்பான்.
நன்மை ஒன்றை செய்தீர்கள் நன்மை விளைந்தது..
அட தீமை ஒன்றை செய்தீர்கள் தீமை விளைந்தது..
தீமை செய்வதை விட்டுவிட்டு நன்மை செய்வதை தொடருங்கள்” என்று அவள் வாய்விட்டு பாடினாள். அதன்பிறகே தன் தவறை உணர்ந்த சரண்யா அவளின் எண்ணவோட்டத்தை மாற்றிக் கொண்டாள்.