Malar – 20
Malar – 20
அத்தியாயம் – 20
வெற்றிவேந்தன் – செவ்வந்தியின் திருமணம் முடிந்து கிட்டதட்ட மூன்று மாதங்கள் சென்று மறைந்திருந்தது. இருவரின் உறவில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்போல அப்படியே இருந்தது.
தன் மனையாள் காதலை உணர்ந்தபிறகு வாழ்க்கையைத் தொடங்க நினைத்தான் வெற்றி. ஆனால் அவளின் கவனம் முழுவதும் கடையின் மீதே இருந்தது. கணவன் தன் அருகே இருக்கின்றான் என்ற எண்ணம் ஒன்றே அவளுக்குப் பொதுமானதாக இருந்ததால் அடுத்த அடியை நோக்கி பயணிக்கும் எண்ணமில்லாமல் இருந்தாள் செவ்வந்தி.
மதிய நேரத்தில் சுள்ளேன்று சுட்டெரிக்கும் சூரியனை வழிமறித்து முற்றுகையிட தொடங்கியது கார்மேகங்கள். சில்லென்ற காற்று இதமாக வீசி எப்போது வேண்டுமானாலும் மழை வர வாய்ப்புள்ளது என்று உணர்த்தியது.
இந்த மாதிரி தருணத்தில் தன்னவளோடு வெளியே செல்ல நினைத்தவன் சிந்தனையோடு கணக்கு நோட்டை மூடி வைத்துவிட்டு நிமிர்ந்து கடிகாரத்தை பார்த்தான் வெற்றி.
மணி ஒன்று என்றது கடிகாரம். அப்போது கடையில் வேலை செய்தவர்கள் மதிய உணவை சாப்பிட சென்றிருப்பதை கவனித்தான். மைதிலி – ஜமுனா இருவரும் படம் பார்க்க வெளியே சென்றுவிட்டதால் தேங்கி இருந்த வேலையைக் கவனிக்கும் பொறுப்பு செவ்வந்தியின் தலையில் விழுந்தது.
அவள் மிஷினில் அமர்ந்து தைப்பதை பார்த்த வெற்றியின் பார்வை அவளைவிட்டு அசைய மறுத்தது. அவளின் கவனம் முழுவதும் துணியின் மீதே இருந்தது. கழுத்தில் போட்டு இருந்த டேப் அவளின் அழகிற்கு அழகு சேர்த்தது. தன் கன்னத்தில் கைவைத்துபடி அவளையே இமைக்க மறந்து பார்த்தான்.
செவ்வந்திகோ யாரோ தன்னை வெகுநேரமாக பார்ப்பது போன்ற உறுத்தல் எழவே, ‘யாரு?’ சட்டென்று நிமிர்ந்து கடையைச் சுற்றிலும் பார்வையை சுழல விட்டாள்.
கடைசியாக அவளின் பார்வை வெற்றியின் மீது படியவே, ‘ம்ஹும் மேடம் கடைக்கண் பார்வைக்கு கால் மணிநேரம் வெயிட் பண்ண வேண்டியிருக்கே?!’ என்று மனதிற்குள் நினைத்தவன் எழுந்து அவளை நோக்கி சென்றான்.
கணவனின் பார்வைக்கான அர்த்தம் புரியாமல் கேள்வியாக நோக்கிய செவ்வந்தியின் மிஷின் எதிரே ஒரு சேரைப் போட்டு அமர்ந்த வெற்றி, “இன்னைக்கு கிளைமேட் நல்ல இருக்கே வெளியே போலாமா?” என்றான்
அவனின் கேள்வியில் சட்டென்று தடுமாறிய செவ்வந்தி, “என்ன வெற்றி புரிந்துதான் பேசறீங்களா? நாளைக்கு முகூர்த்தநாள் துணி கொடுக்கணும். முக்கியமா மணப்பெண் ஜாக்கெட் வேலையே இன்னும் முடியல” என்று சொல்லிவிட்டு அவனின் பார்வையைத் தவிர்க்க நினைத்து தலையைக் குனிந்து கொண்டாள்.
செவ்வந்தி சொல்வது உண்மை என்றபோதும் அதை அவனின் உள்ளம் ஏற்க மறுத்தது. இருவருக்கும் திருமணம் ஆனா நாளில் இருந்து கடைக்கு வருவதும் வீட்டிற்கு செல்வது இது மட்டுமே அவர்களின் அன்றாட வேலையாகிப் போனது.
அதனால், “இல்லங்க இந்த பொறுப்பை வேற யாரிடமாவது கொடுத்துட்டு என்னோடு கிளம்புங்க” என்றான் வெற்றி பிடிவாதமாகவே.
“என்ன வெற்றி இன்னைக்கு இப்படி அடம்பிடிக்கிறீங்க?” என்று பார்வையால் அவனிடம் கெஞ்சினாள்.
அவளின் பார்வையை தயக்கமின்றி எதிர்கொண்டவன், “என்னங்க நல்ல நாளில்தான் வெளியே போக முடியாது. இப்படி சாதாரண நாளிலும் மிஷினை கட்டிப்பிடிச்சிட்டு தான் உட்கார்ந்திருப்பேன்னு சொன்னால் என்ன அர்த்தம்?” என்றான் கொஞ்சம் கோபமாகவே.
அவனின் பேச்சில் அவளுக்கு சிரிப்பு வரவே, “பொண்ணு டெய்லர் என்று தெரிஞ்சபிறகும் கல்யாணம் பண்ணியது உங்க தப்பு வெற்றி. இப்போ வந்து இப்படி புலம்பினால் நானும் என்னதான் பண்றது?” என்றாள் கிண்டலோடு.
அவளின் சாதுர்யமான பேச்சைக் கேட்டவன், “உங்களை வெளியே கூட்டிட்டு போகணும்னு பிளான் பண்றதுன்னா முதலில் கடைக்கு லீவ் தான் விடணும்” என்றவன் அதற்கும் ஒரு காரணம் கண்டுபிடிக்கவே கலகலவென்று சிரிக்க தொடங்கினாள் செவ்வந்தி.
சட்டென்று எழுந்த வெற்றி கண்ணிமைக்கும் நொடியில் கண்ணாடி கதவை தாழிட்டு திரையை இழுத்துவிட்டு, “என்னோட புலம்பல் உனக்கு சிரிப்பாக இருக்கிறதா?” என்று கேட்டபடி அவளை நெருங்கினான் வெற்றி.
தன்னை நோக்கி வந்த கணவனைக் கண்டு அவளின் சிரிப்பு உதட்டுடன் உறைந்து போக, “வெற்றி என்ன பண்ண..” என்று கேட்டு முடிக்கும் முன்னரே அவளின் முகத்தைக் கையில் ஏந்திய அசுர வேகத்தில் முகம் முழுவதும் முத்தமிட்ட தொடங்கினான்.
அவளோ படபடவென்று அடித்துக் கொண்ட மனதை அடக்க முடியாமல் விழி மூடி கிறங்கி நிற்கும் நேரத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய வெற்றியோ, “இன்னைக்கு நம்ம இருவரும் வெளியே போகப் போறோம்” என்று தன் முடிவை சொல்லி முடிக்க அவள் விழி திறந்து அவனை பார்த்தாள்.
அந்த நேரம் வாசலில் ஸ்கூட்டி வந்து நிற்கும் சத்தம்கேட்டு, “மைதிலி – ஜமுனா இருவரும் வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன். இனிமேல் அவங்க இருவரும் கடையை பார்த்துப்பாங்க” என்றவன் அவளின் இடது கையைப்பிடித்து அழைத்துச் சென்றான்.
அவர்கள் இருவரும் கடைக்குள் நுழைவதற்குள் திரையை விளக்கிவிட்டு கண்ணாடி கதவைத் திறந்தான். அவளோ இன்னும் அவன் கொடுத்த முத்தத்தில் இருந்து வெளிவராமல் இருந்தாள். அதுமட்டும் இல்லாமல் சின்ன பெண்ணின் முன்னால் தன் தடுமாற்றத்தை காட்டக் கூடாதென்று குனிந்த தலை நிமிராமல் நடந்தாள் செவ்வந்தி.
இருவரும் ஜோடியாக வெளியே வருவதைக் கவனித்த மைதிலி ஏதோ கேட்க வாயெடுத்தாள்.
அதற்குள் அவர்களை நெருங்கிய வெற்றி, “நாங்க ஒரு முக்கியமான வேலையாக வெளியே போறோம். அதனால் கடையை நீங்க இருவரும் பார்த்துகோங்க” என்றவன் கடையின் சாவியை தங்கையிடம் கொடுத்தான்.
ஜமுனா தமையனை கேள்வியாக நோக்கிட, “நாங்க வர லேட்டானால் கடையைப் பூட்டிட்டு மைதிலியுடன் போய் வீட்டில் இறங்கிக்கோ செல்லம்மா. இல்லன்னா நேரத்தோடு கடையைப் பூட்டிட்டுங்க” என்றவன் வேகமாக செல்வதை கண்டு யோசனையோடு நின்றாள்.
செவ்வந்தி தலை நிமிராமல் சோகமாக இருப்பதை போல தோன்றவே, “அவங்க இருவருக்குள் ஏதோ சண்டை போல ஜமுனா. அதனால் தான் உங்க அண்ணா இவ்வளவு கோபமாக பேசிட்டுப் போறாருன்னு நினைக்கிறேன்” என்றாள் மைதிலி யோசனையோடு.
அவளும் அதே எண்ணத்துடன் நின்ற ஜமுனா, “அவங்க பிரச்சனை நமக்கு எதுக்குக்கா. வாங்க நம்ம போய் வேலையைப் பார்ப்போம்” என்று மைதிலியுடன் வேலையைக் கவனிக்க சென்றாள்.
அவனோடு பைக்கில் ஏறிய செவ்வந்தி, “நீங்க முதல் மாதிரியே இல்ல. உங்க பார்வையில் ஏதோவொரு மாற்றம். சில நேரங்களில் தேவையில்லாத விஷயத்திற்கு எல்லாம் கோபபடுறீங்க” என்று குற்றம் சாட்டினாள்.
முன் கண்ணாடி வழியாக அவளின் முகம் பார்த்தவன், “ஓ இதெல்லாம் கவனிக்க மேடம்க்கு நேரம் இருக்கா?” என்று நக்கலாக கேட்டபடியே வண்டியை ஸ்டார்ட் செய்தான். அவனின் பேச்சில் கோபமடைந்த செவ்வந்தி மௌனமாகிவிட்டாள்.
கடையில் இருந்து நேராக வீட்டிற்கு அழைத்து வந்த வெற்றி, “ம்ம் சீக்கிரம் கிளம்பி வாங்க, மழை வருவதற்குள் அங்கே போயிட்டால் பரவால்ல.” என்றவன் படுக்கையில் விழுகவே எரிச்சலோடு எதுவும் பேசாமல் குளியலறைக்குள் சென்று மறைந்தாள்.
அவள் குளித்து உடைமாற்றி வருவதற்குள் இரண்டு நாட்களுக்கு தேவையான துணியை எடுத்து வைத்துவிட்டு, “ஒரு பத்தே நிமிஷம் இதோ இப்போ வந்துவிடுகிறேன்” என்று குளியலறைக்குள் புகுந்தான்.
செவ்வந்தி கை விரலை ஆராய்ந்தபடி, ‘வெற்றி நெருங்கி வந்தால் எல்லாமே மறந்து போகுதே ஏன்? எங்க இருவருக்கும் இடையே கணவன் – மனைவி உறவைக் கடந்த ஏதோவொன்று இருக்கிறது’ என்று நினைத்தாள்.
என்றும் இல்லாத திருநாளாக மதிய நேரத்தில் வீட்டிற்கு வந்த மகனையும், மருமகளையும் கவனித்த விமலா, ‘இந்தப் பெண்ணை காதலிச்சு கல்யாணம் பண்ணியவன் மாதிரியா இருக்கிறான். அவளை எங்காவது வெளியே கூட்டிட்டுப் போனால் தானே இருவருக்கும் இடையே புரிதல் அதிகரிக்கும்.’ என்று தனக்குள் நினைத்தபடி ஹாலுக்கு விரைந்தார்.
ஆரஞ்சு நிற சேலையில் தேவதைப் போல கிளம்பிய செவ்வந்தி, “வெற்றி இன்னும் நீங்க ரெடியாகாமல் என்ன பண்றீங்க?” என்றவள் ஹாலில் நின்றிருந்த அத்தையைப் பார்த்தவுடன் தயங்கியபடி எழுந்து வெளியே சென்றாள்.
அவளின் பின்னோடு சர்ட் கையை மடித்துவிட்டபடி வந்த வெற்றியோ, “உங்களை வெளியே அழைச்சிட்டுப் போக கடைக்கு லீவ் கொடுத்தா தான் சரிவரும் போலங்க. நீங்க கடையே உலகம்னு இருக்கீங்க.. உங்களுக்கு தாலி கட்டிய இந்த அப்பாவியைப் பற்றி நீங்க யோசிக்கவே மாட்டிங்கிறீங்க” என்று புலம்பிட அதைக் கேட்டு விமலாவின் உதட்டில் புன்னகை அரும்பியது.
“என்னங்க பதிலையே காணோம்” என்றவன் அவளின் பார்வை சென்ற திசையை நோக்கினான். அங்கே விமலா சிரித்தபடி நிற்பதைப் பார்த்தும் இடது கையால் பின்னதலையைத் தட்டி, ‘இப்படியா சொதப்புவ’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டான்.
அவனின் மனசாட்சியோ, ‘நீ செய்ததுக்கு என்னை ஏண்டா சொல்ற?’ அவனை கேலி செய்து சிரித்தது.
அவன் காரணத்தை சொல்லும் முன்னரே, “செவ்வந்தி பிரிஜ்ஜில் மல்லிகை பூ காட்டி வச்சிருக்கேன். அதை எடுத்து வச்சிட்டு கிளம்புங்க. ரொம்ப நேரம் வெளியே சுற்றாமல் நேரத்தோடு வீட்டுக்கு வந்திருங்க” என்று சொல்லவே அவள் சரியென்று தலையாட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
தன் மகனின் அருகே சென்ற விமலா, “நீ கல்யாணம் ஆனதில் இருந்து மாமா வீட்டு பக்கமே போகலன்னு நினைக்கிறேன். அதனால் செவ்வந்தியை அங்கே கூட்டிட்டுப் போடா” என்றார்.
“சரிம்மா” என்ற மகனிடமிருந்து விலகி நடந்த விமலா ஒரு நிமிடம் நின்று மகனை நோக்கினார்.
அவரின் பார்வைக்கான அர்த்தம் புரியாமல், “என்னம்மா?” என்றான் மகன்.
“இல்ல செவ்வந்தி அப்படியே எங்க அண்ணன் மாதிரியே இருக்கிற இல்ல” என்று கேட்டதும் வெற்றியின் முகம் பேய் அறைந்தது போலானது. ஆனால் அதெல்லாம் ஒரு நொடி மட்டுமே!
தன்னை மீட்டுக்கொண்டு, “மாமா குடும்பமே அந்த கோர சம்பவத்தில் இறந்துட்டாங்ளே அம்மா.. அப்புறம் எப்படி செவ்வந்தி அவங்க மகளா இருப்பாளோன்னு நினைக்கிறீங்க?” என்று தாயை குழப்பிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான் வெற்றி.
“சரிம்மா நாங்க கிளம்பறோம்” என்று சொல்லவே விமலாவும் குழப்பத்துடன் சரியென்று தலையசைத்தார். வெற்றி பைக் ஸ்டார்ட் செய்ய அவனின் பின்னோடு அமர்ந்தாள் செவ்வந்தி. இருவரும் ஜோதியாக வெளியே செல்வதை கண்டு அவரின் மனம் அமைதியடைந்தது.
வெற்றி பைக்கில் வேகமாகச் செல்ல அவனின் தோளைப் பிடித்து அமர்ந்தவள், “இவ்வளவு வேகமாக எங்கே போறீங்க?” என்று கேட்க அவனோ கண்ணாடி வழியாக அவளை முறைக்க உதட்டை சுழித்துவிட்டு மெளனமாக அமர்ந்தாள்.
அவனோடு பைக்கில் செல்வது அவளுக்கு சந்தோசமாக இருந்தது. சின்ன வயதில் இருந்து ஜெகதீஸுடன் பைக்கில் செல்வது அவளுக்கு பிடிக்கும். அதனால் வெற்றிக்கும், அவளுக்கும் இடையே பெரிய சண்டையே நடக்கும்.
அதையெல்லாம் நினைத்தபடி அமர்ந்திருந்த செவ்வந்தி அப்போதுதான் பைக் செல்லும் திசையைக் கூர்ந்து கவனித்தாள். அது கொல்லிமலை செல்லும் மெயின் ரோட்டில் இருந்து கிளையாக பிரிந்த ஒரு மண்வழிப் பாதையில் வண்டியைத் திருப்பினான் வெற்றி.
செவ்வந்தி அமைதியாக வரவே பைக்கை ஒரு பெரிய வீட்டின் முன்னே நிறுத்தினான். இரண்டு வீடுகள் ஒரே மாதிரி அமைப்புடன் எதிர் எதிரே அமைக்கட்டிருந்தது. அவளின் பார்வையோ சாலைக்கு மறுபுறம் இருந்த வீட்டின் மீது ஏக்கத்துடன் படிந்து மீண்டது.
வீட்டின் வாசலில் பைக் வந்து நின்ற சத்தம்கேட்டு சம்யூரணம் சமையலறை ஜன்னலின் வழியாக வெற்றியைப் பார்த்தும், “என்னங்க நம்ம வெற்றி வந்து வாசலில் நிற்கிறான் பாருங்க” என்று உள்ளிருந்த கணவனுக்கு தகவல் சொன்னபடி வாசலுக்கு விரைந்தார்.
“வெற்றி எப்படி இருக்கிற? உனக்கு இந்தப்பக்கம் வர இப்போது தான் நேரம் கிடைச்சுதா?” என்றவரின் குரல்கேட்டு தன்னிலைக்கு மீண்ட செவ்வந்தி தன் அருகே வந்தவரின் முகத்தை வைத்து அடையாளம் கண்டு கொண்டாள்.
‘சம்பூரணா அத்தை..’ என்றவள் உதடுகள் முணுமுணுத்தன.
அவளின் கவனம் இங்கில்லை என்று உணர்ந்து,“செவ்வந்தி வண்டியிலிருந்து இறங்கு” என்றான் வெற்றி.
அவள் பைக்கில் இருந்து இறங்கி நிற்க, “வெற்றி அப்பாவுக்கு விருப்பம் இல்லாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டேன்னு சொன்னாங்க. இதுதான் அந்த பொண்ணா?” என்று கேட்டபடி வந்த மனோஜ் முகம் பார்த்தவள், ‘மாமா’ என்று நினைத்தாள்.
அவரின் கேள்விக்கு வெற்றி புன்னகையை பதிலாக கொடுக்க, “வாங்க வீட்டுக்குள் போய் பேசலாம்” என்று இருவரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். இருவருக்குமே செவ்வந்தியை அடையாளம் தெரியவில்லை. அவளும் உண்மையைச் சொல்ல முன் வரவில்லை என்பதை கவனித்த வெற்றியும் மெளனமாக இருந்தான்.
அவளின் முகம் இயல்பாக இல்லாததை கவனித்த வெற்றியோ அவளின் கரத்தை பிடித்து அழுத்தம் கொடுக்க, “என்ன வெற்றி கேள்வி கேட்டால் சிரிச்சு மழுப்புற?” என்று கேட்டபடி சம்பூரணம் சமையலறைக்குள் சென்றார்.
“அப்பாவிற்கு பெண் பிடிக்கல என்பதற்காக நான் கல்யாணம் பண்ணிக்காமல் இருக்க முடியாதே அம்மா. அதுதான் உங்க மருமகளை பிடிவாதமாக இருந்து கல்யாணம் பண்ணிட்டேன்” என்று குறும்புடன் பதில் கொடுத்தான்.
அவர்களை சோபாவில் அமர வைத்த மனோஜ், “என்னம்மா பையன் ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறான் போல தெரியுதே?!” என்று கேட்க அவளோ சிரிப்புடன் மறுப்பாக தலையசைத்தாள். அவள் சிரிக்கும்போது அவரின் மனதினுள் ஜெகதீஸ் முகம் தோன்றி மறைந்தது.
அவளின் ஜாடை அப்படியே தன் உயிர் நண்பன் ஜெகதீஸ் போல இருக்கவே, “உன்னோட பேரு என்னம்மா?” என்று கேட்டார்.
“செவ்வந்தி” என்று சொல்லவே அவருக்குத் தூக்கி வாரிப்போட்டது.
அவரின் முக மாற்றத்தைக் கவனித்த வெற்றியிடம், ‘இந்த பொண்ணு?’ என்று பார்வையால் வினாவினார். அவனோ கண்ணசைவில், ‘பிறகு சொல்றேன்’ என்றான்.
இருவருக்கும் இடையே நடக்கும் பார்வை பரிமாறுதலைக் கவனிக்காமல் சிந்தனையில் அமர்ந்திருந்தாள் செவ்வந்தி. அதற்குள் சம்பூரணம் கையில் காபியுடன் வரவே, “எங்களுக்கு வீட்டுக்கு மனைவியோடு வாடா என்று சொல்வதற்கு முன்னால் வந்துட்ட வெற்றி. இல்லன்னா அம்மாவிடம் நீ அடிதான் வாங்கியிருப்ப” என்று புன்னகையுடன் கூறினார்.
“அதுக்கு பயந்துதான் நானே கிளம்பி வந்தேன் அம்மா” என்றான் வெற்றி சிரிப்புடன்.
அதன்பிறகு மூவரும் இயல்பாக பேச, “இவங்க என்னோட அப்பா, அம்மான்னே சொல்லலாம் செவ்வந்தி. அந்தளவுக்கு என்மேல் உண்மையான பாசத்தை வைத்திருப்பவர்கள்’ என்று செவ்வந்திக்கு அவர்களை அறிமுகம் செய்து வைத்தான். அவளும் புன்னகையுடன் தலையசைத்துவிட்டு கையில் காபியை எடுத்துக்கொண்டு, “நான் மழையை வேடிக்கைப் பார்க்கிறேன் வெற்றி” என்று சொல்லிவிட்டு வாசலுக்கு விரைந்தாள்.
இடியின் சத்தத்துடன் மழை வேகமாக பொழிய தொடங்கிட அவளின் விழிகள் எதிர் வீட்டின் மீதே நிலைத்தது. அவளின் மனதில் தாய் – தந்தையின் முகங்கள் தோன்றி மறைய, ‘என்னை இப்படி அனாதையாக தவிக்க விட்டுட்டு எப்படி உங்களால் போக முடிந்தது’ என்று நினைத்தவால் அழுகையைக் கட்டுபடுத்த முடியவில்லை.
அவளையும் அறியாமல் அவளின் கால்கள் அந்த வீட்டை நோக்கி ஓடிட, “செவ்வந்தி” என்ற அழைப்புடன் அவளின் பின்னோடு ஓடினான் வெற்றி.
இருமனமும் கடந்தகாலம் நோக்கி பயணிக்கத் தொடங்கியது..