Malar – 3

EQjG51fXUAAgKlh (1)-6ce7a9a4

அத்தியாயம் – 3

இதற்கிடையே வேளாங்கண்ணியில்..

கடற்கரைக்கு அருகில் அமைந்திருந்த மீனவர் குடும்பங்கள் வசிக்கும் இடங்களில் கட்டுமரங்களும், படகுகளும் நிறுத்தப்பட்டு அழகுற காட்சியளித்தது. மணற்பரப்பில் மீன்களையும், கருவாடுகளை காய வைப்பதில் மும்பரமாக பெண்கள் மும்பரமாக இருந்தனர். அங்கிருந்து சற்று தூரம் நடந்து சென்றால் அங்கே நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் காம்பவுண்ட் வீடுகள் அமைக்கப்பட்டிருந்தது.

அங்கிருந்த வீட்டின் ஒன்றில் சமையலறையில் பம்பரமாக சூழந்து கொண்டிருந்தார் ஜெகதீஸ். அதே நேரத்தில் குளித்துவிட்டு வந்த தன் மனையாளிடம், “சங்கீதா நான் வேலைக்குப் போனதும் கடலுக்குப்  போய் வெகுநேரம் உட்கார்ந்திருக்கக்கூடாது. பாப்பா உன்னைத் தேடி சீக்கிரமே வந்துவிடுவா. அதனால் கவலைப்படாமல் சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு” என்றவர் சமையலை கவனித்தார்.

மனைவியிடம் இருந்து பதில் வரவில்லை என்றதும் சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்தார். அங்கே சங்கீதா விட்டத்தை பார்த்தபடி மெளனமாக அமர்ந்திருப்பதைக் கண்டு, “என்னம்மா நான் சொன்னது புரிகிறதா?” என்று மெல்ல கேட்டார்.

“எனக்கு அவளை எவ்வளவு பிடிக்கும்னு அவளுக்கு தெரியுங்க. ஆனால் இத்தனை வருடம் ஆகியும் அவ வரவே இல்லையே. அவளை சீக்கிரமே வர சொல்லுங்க” என்றவர் கணவனிடம் சொல்ல அவரும் சரியென்று தலையசைத்தார்.

உடனே மனையாளின் முகம் மலர, “பாப்பா வராமல் இந்த ஊரைவிட்டு வரமாட்டேன் என்று சொன்ன ஒரே காரணத்திற்காக இங்கே வேலையைத் தேடிக்கொண்டு இத்தனை வருடமாக இந்த அரைப் பைத்தியத்துடன் இருக்கோமோ என்று கவலையாக இருக்கிறதா மாமா” என்றவரின் குரல் கரகரத்தது.

சட்டென்று அடுப்பை ஆப் செய்துவிட்டு மனையாளின் அருகே சென்றவர், “இப்படியெல்லாம் பேசாதே சங்கீதா. எனக்கு நீயும், பாப்பாவும் தான் உலகமே. என்னைக்காவது ஒருநாள் அவ நம்மளை தேடி வருவா என்ற நம்பிக்கையில் தானே நானும் நடமாடிட்டு இருக்கேன்” என்று மனைவியைத் தேற்றி அவரின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தார்.

கணவனின் தோள் சாய்ந்த அந்த தாயுள்ளம், ‘என் மகள் வருவாள்’ என்று தனக்குள் சொல்லிகொண்டது. அதன்பிறகு அவர் குளித்து தயாராகி வேலைக்கு கிளம்பி வெளியே வந்தவரின் பார்வை கடலின் மீது படிந்தது. இன்று இவ்வளவு அமைதியாக இருக்கும் கடல் அன்று ஏன் அப்படி மாறிப்போனது.

கடலின் அந்த கோர தாண்டவத்தை இன்று நினைத்தாலும் மனதிற்குள் திக்கென்றது. அந்த நிகழ்வு நடந்து முடிந்து கிட்டதட்ட பதினைந்து வருடங்கள் முற்றிலுமாக கடந்துவிட்டது. ஆனாலும் அது ஏற்படுத்திவிட்டு சென்ற தாக்கம் சற்றும் குறையாமல் இருந்தது.

சற்று நேரம் நின்று கடலை வெறித்தவர் ஒரு பெருமூச்சுடன் வேலைக்கு செல்ல, கணவன் சென்ற பிறகு காலை உணவை முடித்துக்கொண்டு கடலை நோக்கி நடந்தார் சங்கீதா.

கடல் அலைகள் கரையோடு உறவாடிட அங்கே விளையாடிக்கொண்டு இருந்த மழலைகளின் மீது பார்வையை பதித்தபடி மணலில் அமர்ந்தார். சட்டென்று அந்த பிள்ளைகளின் நடுவே தன் மகளின் முகம் கண்டு அவரின் முகம் பூவாய் மலர்ந்தது.

“அம்மா இங்கே பாருங்க.. கடல் அலை என் காலை நனைச்சிட்டுப் போகுது.. எவ்வளவு அழகாக இருக்கு தெரியுமா அம்மா.. என் காலை செல்லமாக தழுவிச் செல்லும் கடல் அன்னைக்கு பூக்களை பரிசாக கொடுத்துட்டு வரேன்” என்றவளின் கை நிறைய இருந்த பூக்களை கடல்நீர் விடுவதை கண்டு சங்கீதாவின் கண்கள் கலங்கியது.

அந்த பூக்கள் அலையில் மிதப்பதை கண்டு மலர்ந்து சிரித்த தன் மகவின் சிரிப்பில் தன்னிலை மறந்தார். சட்டென்று யாரோ பெயர் சொல்லி அழைக்கும் சத்தம்கேட்டு திரும்பி பார்க்க அங்கே விளையாடிய பிள்ளைகளின் நடுவே தன் பெண்ணைக் காணாமல், ‘இன்றும் கனவுதான் கண்டேனா? என் மகள் எப்போது என்னை தேடி வருவாளோ?’ என்று கலங்கியது.

நேர் மறையான எண்ணங்கள் தான் நம் வாழ்க்கையின் நல்ல பாதையை நிர்ணயம் செய்கிறது. அந்த எண்ணங்களின் மொத்த உருவம் தான் ஜெகதீஸ் – சங்கீதா தம்பதியினர். ஒருமுறை வேளாங்கண்ணி வந்து தன் பிள்ளையைத் தொலைத்துவிட்டு இன்றும் அவள் வருவாள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் அவர்களின் நம்பிக்கைக்கு பலன் கிடைக்குமா? அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்..

காலையில் வழக்கம்போல வேலை தேடி கிளம்பிய அண்ணனை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தாள் ஜமுனா. அவள் மீண்டும் வீட்டிற்குள் நுழையும்போது, “உன்னோட அண்ணனுக்கு வேலை கிடைக்க போவதே இல்ல. நீ அவனுக்காக செய்வது பிடிக்கல ஜமுனா” என்றார் நரசிம்மன்.

அவரின் முகத்தில் அதிருப்தி நிலவிட அவளோ தாயின் பதிலை ஏற்பார்க்க, “உங்க அப்பா சொல்வதில் என்னம்மா தப்பு இருக்கு. அவன் எப்படி இருந்தாலும் உருப்பிடாமல் தன் போக போறான்” என்றார் கணவனுக்கு சிறந்த மனைவியாக.

விமலாவின் பதிலில் உள்ளம் குளிர்ந்து போக, “நல்ல சொல்லு அப்போதாவது உன் மகள் காதில் ஏறுதான்னு பார்க்கிறேன்” என்றார் நரசிம்மன்.

இருவரும் ஒருவரையொருவர் விட்டுகொடுக்காமல் தன் அண்ணனை மட்டம் தட்டுவதை நினைத்து மனம் கசந்தபோதும், “ஒருத்தன் நல்லவனாக இருக்க நினைச்சாலும் உங்களமாதிரி சிலரின் பேச்சால் அவன் தவறான பாதைக்கு போய்விடுகிறான். பிள்ளையை நல்ல வளர்க்கலன்னு கவலைப்படும் பெற்றோரை பார்த்து இருக்கேன். நல்ல இருக்கும் ஒருவனை ஊதாரின்னு சொல்லும் பெற்றோரை இப்போதான் பார்க்கிறேன்” முகத்தில் அடித்ததுபோல பதில் கொடுத்துவிட்டு தன் அறைக்குள் சென்று மறைந்தாள்.

மரியாதை இல்லாமல் பேசிவிட்டு செல்லும் மகளைப் பார்த்து, “இவளுக்கு அவனைபற்றி தெரியல விமலா. அவனைப்பற்றி புரிஞ்சிக்கும்போது நம்மள ஏன் எடுத்தெறிந்து பேசினோம்னு வருத்தப்பட போறாள்” என்று சொல்லி முடிக்கும் முன்னே அறையிலிருந்து அடுத்த பதில் வந்தது.

“அப்படி ஒரு நிலை எனக்கு வராது. எங்க அண்ணன் மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கை நிச்சயம் ஒருநாள் ஜெய்க்கும். அவனை எடுத்து எறிந்து பேசிட்டோம்னு நீங்க இரண்டு பேரும் வருத்தப்படும் நாள் ரொம்ப தூரத்தில் இல்ல” என்று சொன்னாள்.

அவள் பட்டு பட்டென்று பேசுவதை நினைத்து வருத்தம் கொள்ளாத விமலாவோ தன் கணவனின் முகம் வாடுவதை ஏற்றுகொள்ள முடியாமல், “விடுங்க அவ என்னைக்கு தான் அண்ணன்னு சப்போர்ட் பண்ணாமல் இருந்து இருக்கிறா” என்றார்.

கணவன் சாப்பிட்டுவிட்டு வேலைக்கு கிளம்பியதும் நேராக மகளின் அறைக்கு வந்த விமலா, “நீ அப்பாவை எதிர்த்துப் பேசாமல் இரு ஜமுனா” என்று சொல்லிவிட்டு செல்ல அவளோ அலட்சியமாக தாயை பார்த்தாள்.

‘என்னைக்கு தான் நீயெல்லாம் திருந்த போகிறாயோ தெரியல’ என்று நினைத்த ஜமுனா தன் அறையில் அமர்ந்து கதைகளை படிக்க தொடங்கினாள்.

அவள் பார்த்த வரையில் வெற்றி ரொம்ப நல்லவன். யாருக்கும் கெடுதல் நினைக்காதவன். ஏதோ நேரம் அவன் தொட்டது அனைத்தும் தோல்வியில் முடிகிறது. அதுக்காக அவனை தவறு சொல்வதால் யாருக்கு என்ன லாபம் என்று யோசித்த ஜமுனா அன்று முதல் இன்றுவரை தமையனுக்கு ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து ஊக்கம் கொடுக்கிறாள்.

அது வீட்டில் இருப்பவர்களுக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்தபிறகும் அவனை மற்றவர்களிடம் விட்டுகொடுக்காமல் பேசுவாள். அவளின் இந்த பாசம் தான் வெற்றியை இன்னும் உயிர்ப்புடன் வைத்து இருக்கிறது. அணைய போகும் விளக்கின் திரியை தூண்டிவிடும் வேலையை அவள் செய்கிறாள். அதுக்கும் பலன்  இருக்கும் என்றே அவள் நம்புகிறாள்.

தினமும் காலையில் வீடு விட்டு கிளம்பும்போது செவ்வந்திக்கு இருந்த நம்பிக்கை ஒவ்வொரு நாளும் கடக்கும்போது குறைந்துகொண்டே வந்தது. அவளின் எதிர்பார்ப்பை சரி செய்யும் அளவிற்கு அவள் தேடும் இடம் கிடைக்கவில்லை.

அன்றும் தொழிலுக்கு இடம் தேடி பஸ் ஸ்டாப்பில் நின்றிருக்க நேரம் சென்றதே தவிர பஸ் வரவில்லை. அவள் பொறுமை மெல்ல மெல்ல குறைய தொடங்கியது.

அந்தநேரம் இண்டர்வ்யூவை முடித்துவிட்டு அந்த வழியாக வந்த வெற்றி அவளை கடந்து சென்றான். சட்டென்று பஸ் ஸ்டாப்பிள் நின்ற பெண் தோற்றம் மனதினுள் வந்து செல்ல, ‘ஒருவேளை அவங்கதான் நிற்கிறாங்களோ’ என்ற சிந்தனையோடு யூடர்ன் எடுத்து பஸ் ஸ்டாப் சென்றான்.

அவன் பஸ் ஸ்டாப்பை நெருங்க பஸ் வந்து ஸ்டாப்பில் நின்றது. இவன் சடன்பிரேக் போட்டு நிறுத்த, “அட யாருங்க அது பஸில் ஏற விடாமல் வண்டியை கொண்டுவந்து குறுக்கே நிறுத்துவது” எரிச்சலோடு திரும்பினாள்.

அவனை பார்த்தும் அவளின் முகம் சட்டென்று மலர, “ஐயோ வெற்றி நீங்களா? ஸாரி நான் வேற யாரோன்னு நினைத்து பேசிட்டேன்” என்று உடனே மன்னிப்பு கேட்டாள்.

சற்றுமுன் அவள் பேசிய பேச்சும் அவள் தவறு உணர்ந்து மன்னிப்பு கேட்பதை நினைத்து அவனின் முகம் பிரகாசமாக மாறியது. அவளிடம் சில விஷயங்கள் அவனின் மனத்தைக் கவர்ந்தது. ஜனனி தன்னிடம் தவறு இருந்தாலும் ஒருநாள் கூட அவனிடம் மன்னிப்பு கேட்டதில்லை என்று உடனே செவ்வந்தியையும் காதலியையும் ஒப்பிட்டுப் பார்த்தது.

அது தவறு என்று புரிய, ‘ச்சே நான் ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறேன்’ என்று தலையைக் குலுக்கிக்கொண்டு,“சரி அதைவிடுங்க. ஆமா இங்கே ஏன் நின்னுட்டு இருக்கீங்க” என்று அவளிடம் காரணத்தை விசாரித்தான்.

“என் தொழிலை தொடங்க ஒரு இடம் தேடிட்டு இருக்கேன். என் எதிர்பார்ப்பை பூர்த்து செய்கின்ற மாதிரி எந்த இடமும் அமையவில்லை” அவள் வருத்தத்துடன் கூறவே அது அவனை பாதித்தது.

சிறிதுநேரம் சிந்தித்த வெற்றி, “என்னோடு வரீங்களா? நான் உங்களுக்கு நல்ல இடமாக பார்த்து கொடுக்கிறேன்” என்று கேட்க அப்போதுதான் அவன் பைக்கில் வந்து இருப்பதை கவனித்தாள்.

அவன் தன்னோடு வா என்று கட்டளையிடாமல் அவளின் விருப்பத்தை கேட்டது அவளுக்கு பிடித்து இருந்தது. அவளின் மனதில் சில படிகள் உயர்ந்தான் வெற்றி.

“சரிங்க” என்று சம்மதம் தெரிவித்தவள் பைக்கின் பின்னோடு ஏறினாள். அவனும் நிறைய இடங்கள் அழைத்து சென்று காட்டிட எதுவும் அவளுக்கு பிடிக்கவில்லை. அவள் ஏதோவொரு காரணம் சொல்லி தட்டி கழிப்பதை உணர்ந்து ஒரு காஃபி ஷாப் முன்னாடி பைக்கை நிறுத்தினான்.

அவள் சிந்தனையோடு இறங்க இருவரும் காபி ஷாப் உள்ளே நுழைந்தனர். வழக்கம்போல அவள் இரண்டு காபி ஆர்டர் செய்துவிட்டு அவனின் எதிரே வந்து அமர்ந்தாள்.

“உங்களோட பிளான் என்னன்னு தெரியாமல் சரியான இடம் அமைதியாதுங்க. நீங்க என்ன தொழில் தொடங்க போறீங்க அதுக்கு எப்படிட்ட இடம் வேண்டும் என்று நீங்க எதிர்பார்க்கிறீங்க” என்று நேரடியாக அவளிடம் கேட்டான்.

அவனின் இந்த நேரடி தாக்குதலை அவளும் எதிர்பார்த்து இருந்ததால், “நான் டெய்லர் கடை மற்றும் ஜவுளிக்கடை இரண்டையும் ஒரு இடத்தில் தொடங்க நினைக்கிறேன்” அவன் கேள்வியாக புருவம் உயர்த்தினான்.

அவனுக்கு புரியவில்லை என்று உணர்ந்து, “அதாவது எங்களிடமே துணியை எடுத்து அங்கேயே தைக்க கொடுப்பதுபோல..” என்றாள்.

அவள் சொல்ல வரும் விஷயத்தை புரிந்துகொண்டு, “அடுத்து இடம் எந்த மாதிரி இடத்தில் இருக்கணும்னு நினைக்கிறீங்க” என்று அவளின் எதிர்பார்ப்பை பற்றி கேட்டான்.

அவனின் கேள்விகளுக்கு ஏன் இவ்வளவு பொறுமையாக பதில் சொல்கிறோம் என்று அவளுக்கு புரியவில்லை. ஆனால் அவன் காலையிலிருந்து தன்னோடு அலைவது அவளுக்கும் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

“நான் வைக்க போறது ஜவுளிக்கடை. அது மக்கள் தினமும் வந்துபோகும் இடமாக மெயின் இடத்தில் இருக்கணும். முக்கியமா அங்கே டெயிலர் கடையோ துணிக்கடைகளோ அதிகம் இருக்கக்கூடாது” என்று இரண்டு கண்டிஷனை தெளிவாக கூறினாள்.

அவளின் தொழில் நுணுக்கம் அவனுக்கு பிடித்திருக்க, “ம்ம் முன்னாடியே எல்லாம் பிளான் பண்ணிட்டு தான் இடத்தை தேடிட்டு இருக்கீங்க” என்று சொல்ல இருவருக்கும் காபியை கொண்டு வந்து வைத்தான் பேரர்.

அவனின் பேச்சில் அதுவரை இருந்த டென்ஷன் குறைய, “எதையும் பிளான் பண்ணி பண்ணனும், பிளான் பண்ணாமல் பண்ணக்கூடாது” என்று அவள் வடிவேல் பாணியில் சொல்ல, “சரிங்க மேடம்” என்றான் வெற்றி புன்முறுவலோடு.

அவன் சிந்தனையோடு திரும்ப காஃபி ஷாப் எதிரே ஒரு பெரிய கட்டிடம் இருப்பதை கண்டான். அங்கே கடை வாடகைக்கு என்ற போர்டு பார்வையை சுழற்ற நான்குவழி சாலை எல்லோரும் வந்து செல்லும் இடம். கிட்டதட்ட செவ்வந்தி எதிர்பார்த்தது போலவே இருக்க, “ஒரு நிமிஷம் இருங்க” என்று எழுந்தான்.

“வெற்றி முதலில் காஃபியை குடிங்க” என்று அவள் சொல்ல, “நீங்க குடிங்க நான் வந்து குடிக்கிறேன்” என்று சொன்னவன் கடையைவிட்டு வெளியே சென்றான்.

அவனை திரும்பிப் பார்க்க அவன் வாசலில் நின்று சிந்திப்பதை கண்டு, “தேவை இல்லாமல் தொல்லை தருகிறோமோ’ என்று நினைத்தாள்.

அவள்  யோசனையோடு அமர்ந்திருக்க அவளின் எதிரே வந்து அமர்ந்தவன், “ஏங்க உங்க எதிர்பார்ப்புக்கு இந்த கடை சரியாக இருக்குன்னு தோணுதான்னு பாருங்க” என்று கண்ணாடி வழியாக எதிரே இருந்த கடையைக் காட்டினான்.

செவ்வந்தி அவன் காட்டிய இடத்தைப் பார்த்துவிட்டு, “ம்ம் இந்த மாதிரி இருந்தால் ஓகே” என்று அவள் சொல்ல, “சரி அப்போ வாங்க நம்ம போலாம்” என்று அவளை வெளியே அழைத்துச் சென்றாள்.

அவள் பில்லைக் கட்டிவிட்டு வெளியே வர, “நீங்க காஃபி குடிக்கல” என்றாள் வருத்தத்துடன்.

“அதை அப்புறம் குடிக்கலாம். இப்போ வாங்க” என்று சொல்லி அவளின் கரம்பிடித்து எதிர்புறம் அழைத்துச் சென்றான். அவனின் கரங்களுக்குள் சிக்குண்ட கரங்களில் அவளின் பார்வை பதிய மனதினுள் ஒருவிதமான பாதுகாப்பை உணர்ந்தாள் பெண்ணவள்.