Malar – 8

images - 2020-10-26T134440.753-85f61e56

Malar – 8

அத்தியாயம் – 8

அவள் கேள்வியாக நோக்கிட, “இந்த பணத்தை நீங்க வாங்கிக்கணும்” என்று சொல்ல, “எதுக்கு” என்றாள் செவ்வந்தி.

“உங்க தொழிலில் அண்ணா பார்ட்னர்தானே? அப்போ இந்த பணத்தை நீங்க வாங்கிக்கணும். என் அண்ணன் யார் முன்னாடியும் தரம்தாழ்ந்து போகக்கூடாது என்பது என் எண்ணம்” அவளின் வெளிப்படையான பேச்சும் வெற்றியின் மீது அவள் வைத்திருக்கும் பாசத்தை உணர்ந்த செவ்வந்தியின் இதழ்களில் புன்னகை அரும்பியது.

“சரி உனக்காக இந்த பணத்தை வாங்கிக்கறேன். நீ கொண்டுபோய் உங்க அண்ணாவிடம் கொடுத்து பேங்கில் இன்வெஸ்ட்மெண்ட் பண்ண சொல்லு” என்று சொல்லிவிட்டு அவள் வேலையைக் கவனிக்க சென்றாள்.

செவ்வந்தி ஜமுனா கொடுத்த பணம் எவ்வளவு என்று கூட கேட்கவில்லை. அதில் இருந்தே அவள் பணத்தை மதிக்காதவள் என்ற விஷயமும் புரிந்துபோகவே நேராக அண்ணனிடம் சென்றாள்.

“அண்ணா இந்தா பணம்” என்று அவனின் கையில் கொடுக்க, “இதை அவங்க வாங்கலையா?” என்று கேட்டான்.

“நீ இதை இன்வெஸ்ட்மென்ட்டாக பேங்க்ல போட்டு வைக்க சொன்னாங்க” என்றவள் அங்கிருந்து கிளம்பவே குழப்பத்துடன் தங்கையை வழியனுப்பிவிட்டு கடைக்குள் நுழைந்தான் வெற்றி.

அடுத்துடுத்து வேலைகள் சரியாக இருக்கவே அன்றைய பொழுது வேகமாக ஓடி மறைந்தது. இரவு வேலையாட்களை எல்லாம் அனுப்பிவிட்டு ஓய்வெடுக்கும் அறைக்கு சென்று அமர்ந்தாள் செவ்வந்தி.

“நான் உள்ளே வரலாமா” என்ற வெற்றியின் குரல்கேட்டு சட்டென்று நிமிர்ந்தவள், “வாங்க வெற்றி” என்றாள் சோர்வுடன் கண்களை கசக்கியபடி.

அவன் அவளின் எதிரே அமர, “இன்னைக்கு வேலை எல்லாம் எப்படி போச்சு” என்று கேட்க, “ம்ம் பரவல்ல” என்றான்.

பிறகு வந்த பணத்தை எண்ணி கணக்கு எழுதி அவளிடம் கொடுத்தான். முதல் நாளே நல்ல வருமானம் வந்திருப்பதை பார்த்து சந்தோசப்பட்டாள்.

அவள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, “சரி வெற்றி வீட்டுக்கு கிளம்பலாம்” என்று சொன்னவள் அவனிடம் அந்த பணத்தைப் பற்றி பேசவே இல்லை. இருவரும் கடையை சாத்திவிட்டு வீட்டிற்கு கிளம்பினர்.

அவன் தன் பைக்கை எடுத்து வரவே, “இல்ல வெற்றி நீங்க கிளம்புங்க. நான் இப்படியே ஆட்டோ பிடிச்சு வீட்டுக்குப் போறேன்” என்றதும் அவனுக்கு சுள்ளேன்று கோபம் வந்தது.

“ஏங்க என்னோடு பைக்கில் வருவது உங்களுக்கு பாதுகாப்பாக இருக்காதுன்னு நினைக்கிறீங்களா?” என்று முகத்தில் அடித்தாற்போல கேட்டுவிட இப்படியொரு கேள்வியை எதிர்பார்க்காத செவ்வந்தி விதிர்விதிர்த்து போனாள்.

“என்ன நீங்க இப்படி கேட்டுடீங்க” என்று வருத்ததுடன் கேட்க, “பின்ன நைட் பத்துமணிக்கு ஆட்டோவில் வீட்டுக்கு போறேன்னு சொன்னால் கோபம் வராமல் என்ன பண்ணும்” என்று சிடுசிடுத்தவன் அவளை ஒருமையில் அழைத்ததை கவனிக்கவில்லை.

அதை கவனித்த செவ்வந்தி மறுப்பேச்சு இல்லாமல் அவனோடு பைக்கில் ஏறியமர வண்டியை எடுத்தான் வெற்றி. அவளை வீட்டின் முன்னே இறக்கிவிட்டுவிட்டு எதுவும் பேசாமல் சென்றவனை பார்த்தபடி வீட்டின் வாசலில் நின்றாள்.

வீட்டுக்கு வந்ததும் பைக் சாவியை தூக்கி படுக்கையில் வீசிவிட்டு அமர்ந்த வெற்றிக்கு கோபம் அடங்க மறுத்தது. ஒரு நிமிடம் தனக்கு ஏன் கோபம் வந்தது என்று அவன் யோசித்து இருந்தால் அவனுள் நிகழ்ந்து இருக்கும் மாற்றத்தை உணர்ந்து இருப்பானோ என்னவோ?

அவன் வீட்டிற்குள் நுழையும்போது கவனித்த ஜமுனா, “என்ன அண்ணா செம வேலைபோல” அறையின் வாசலில்  நின்றபடி அவனை வம்பிற்கு இழுத்தாள்.

“ம்ம் ஆமா” என்றவன் வார்த்தைகளை கடித்து துப்பினான்.

“யார் மேலயோ இருக்கிற கோபம் திசை மாறி என்பக்கம் திரும்புவது போல தெரியுது” என்றாள் கிண்டலோடு.

“ஏன் ஜமுனா அவங்க அப்படி பேசினாங்க” என்று கேட்க அவள் காரணம் புரியாமல் திருதிருவென்று விழித்தாள். அதன்பிறகு வெற்றி தங்கையிடம் நடந்ததை சொல்ல அவனின் கோபத்திற்கான காரணம் புரிந்து தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

அவன் சொல்லும் வரை பொறுமையாக கேட்டுவிட்டு, “இந்த கேள்விக்கு பதில் எனக்கு தெரியல. பாலைவனத்தில் கானல்நீரை பார்த்து நீருன்னு நினைச்சிட்டு இருந்தல்ல அதுக்கு பெயர் முட்டாள்தனமா? இப்போ பாலைவனத்தில் மழையே வரும்போது அதை ஏற்றுகொள்ள மறுப்பது தான் புத்திசாலிதனமா? நீயே தெளிவா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா அண்ணா”  அவனை தெளிவாக குழப்பிவிட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் ஜமுனா.

அவனோ கைகளில் முகத்தை புதைத்துவிட்டு குழப்பத்தில் ஆழ்ந்தான். ஜமுனா அவளின் அறைக்கு செல்லும்போது தாய் – தந்தையின் அறைகதவுகள் சாத்தபட்டு இருப்பதைப் பார்த்து, ‘எந்த கவலையும் இல்லாத பெற்றவர்கள் இருப்பதும் ஒன்று இல்லாமல் இருப்பதும் ஒன்று’ என்று நினைத்துக் கொண்டாள்.

வெற்றி சென்ற பிறகு வீட்டிற்குள் நுழைந்தவளை தனிமை இரு கரம் நீட்டி அரவணைத்துக்கொண்டது. இரவு நேரம் நிசப்தமான சூழல் இரண்டுமே அவளின் நிம்மதியைக் குலைத்தது.

‘இன்னும் எத்தனை நாள் தான் நான் தனிமையில் சிறையில் சிக்கி தவிக்க போறேனோ?’ என்ற எண்ணத்துடன் படுக்கையில் சரிந்தவள் தன்னை மறந்து தூக்கத்தில் ஆழ்ந்தாள்.

அடுத்தடுத்து வந்த நாட்கள் சீரான வேகத்தில் சென்று மறைந்தது.

அவளின் எண்ணத்தின் படியே தொழில் நல்ல முன்னேற்றம் இருந்தது. அந்த ஏரியாவை சுற்றி இருந்தவர்கள் கடையின் வாடிக்கையாளராக மாறிப் போயினர்.  வெற்றிக்கும் அந்த வேலை மிகவும் பிடித்திருந்தது என்று சொன்னால் அது மிகையில்லை.

எந்தநேரமும் கடைக்கு வெளியே இருக்கும் வேலைகளை முடித்துவிட்டு கடைக்குள் நுழைந்தால் இரவு வரை அவன் பொறுப்பில் இருக்கும். செவ்வந்திக்கு சேல்ஸ்மேன் முதல் டெயிலர்கள் வரை அனைவரும் ஒரு குடும்பம் போல பழகியது அவளின் மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

அவர்களை கடையில் துணியெடுத்து அங்கேயே தைக்க கொடுத்தால் வேலைகள் அதிகரித்தது. வாடிக்கையாளர்களின் இடையே நல்ல ஒரு பெயரை எடுக்க தங்களால் முடிந்தளவு முயற்சித்தனர். 

செவ்வந்திக்கு துணியை தைப்பதும், ஆர்டர்களை முடித்து தருவதும் வேலையாக இருந்ததால் அவள் அதிகநேரம் டெய்லரிங் அறையில் இருந்தாள்.  மதிய நேரம் மட்டும் வெற்றியும், செவ்வந்தியும் இணைத்து சாப்பிடுவார்கள். மற்றபடி இருவருக்கும் இடையே எந்த மாற்றமும் வரவில்லை. 

அதே நேரத்தில் வேலையும் அதிகமாகவே இருந்ததால் இரவு வீட்டிற்கு வர தாமதம் ஆனது. கடைக்கு அருகே ஒரு வீட்டைப் பார்த்து மாற்றிவிட்டாள்.  அதற்குள் ஒரு மாதம் ஓடி மறைந்தது.

காலையில் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே கடைக்கு வந்த செவ்வந்தியை பார்த்ததும், “அக்கா வந்துட்டாங்க” என்று சந்தோஷமாக கூச்சலிட்டாள் சரண்யா.

“ஏண்டி இதுக்கு இந்த குதி குதிக்கிற” அவளிடம் சண்டைக்கு வந்தான் ராம்மோகன்.

“இன்னைக்கு சம்பளநாள் என்ற விஷயத்தையே மறந்திட்டியா” கிண்டலாக கேட்டான் பிரகாஷ்.

“அவ வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்தே இந்த நாளுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கிறா அதன் இந்தளவு உற்சாகமாக இருக்கிறா” என்று தோழிக்கு பரிந்து வந்தாள் ஜோதி.

இவர்கள் நால்வரும் பேசுவதைக் கேட்டுகொண்டே உள்ளே நுழைந்த செவ்வந்தி, “என்ன இன்னைக்கு சம்பளம் வாங்க எல்லோரும் தயார் நிலையில் இருக்கிற மாதிரி இருக்கே” என்று அவர்களை வம்பிற்கு இழுத்தாள்.

“அதெல்லாம் இல்ல அக்கா” என்றான் பிரகாஷ் மற்றவர்களை பார்வையால் அடக்கியபடி.

அவனின் பார்வைக்கு அடிபணிந்து மற்றவர்கள் அமைதியாகிவிட, “சரி எல்லோரும் கணக்கு போட்டு வைங்க” என்ற செவ்வந்தி வேலையை துவங்கினாள்.

அவளின் கவனம் துணியை வெட்டுவதில் திரும்பிவிட மற்ற நால்வரின் கவனமும் தைப்பதில் திரும்பிவிட்டது. அன்றைய பொழுது சீக்கிரம் சென்று மறைய வரிசையாக எல்லோருக்கும் கணக்கு பார்த்து சம்பளத்தைக் கொடுத்தனர் வெற்றியும் செவ்வந்தியும்!

அனைவரும் சம்பளம் வாங்கிய சந்தோஷத்தில் அடுத்து என்ன செய்வது என்று திட்டமிட்டபடி வீடு திரும்ப சோர்வுடன் தன் சேரில் சாய்ந்து அமர அவளோ கணக்கு அனைத்தையும் சரிபார்த்தாள்.

அதன்பிறகு பணத்தை எண்ணி அவனிடம் நீட்டியவளை அவன் கேள்வியாக நோக்கிட, “ஹலோ சாரே இது உங்க முதல் மாச சம்பளம் வாங்கிகோங்க” முகத்தின் முன்னே சொடக்குபோட்டு அவனின் கவனத்தை ஈர்த்தாள்.

“எனக்கு சம்பளமா?” அவன் வியப்புடன் கேட்க, “செய்கின்ற வேலைக்கு சம்பளம் வேண்டான்னு சொல்ல நீங்க என்ன அம்பரண்டிஸ் ஆ” என்று அவனை வம்பிற்கு இழுத்தாள்.

அதில் கடுப்பானவன் அவளை கொலைவெறியோடு நோக்கிட, “கோபம் வருது இல்ல? அப்புறம் எதுக்கு இந்த கேள்வியை கேட்கணும்”  சிடுசிடுத்தவள் அவனிடம் சம்பளத்தைக் கொடுத்தாள்.

அவன் மறுப்பு சொல்லாமல் வாங்கி எண்ணிப் பார்க்க இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் இருக்க, ‘என்ன இது’ என்பது போல அவளை புருவம் உயர்த்திப் பார்த்தான்.

“நீங்க படிச்ச படிப்புக்கு இந்த வேலை குறைந்த தகுதிதான் மற்ற நிறுவனங்களில் உங்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை உங்களால் கொடுக்க முடியாமல் போனாலும் ஓரளவு நல்ல சம்பளம் தான் கொடுத்து இருக்கேன்” என்று மெல்லிய குரலில் கூறியவளின் சமாதானத்தை அவன் மனம் ஏற்க மறுத்தது.

“என் வேலைக்கு இந்த சம்பளம் அதிகம் இந்தாங்க மீதியை நீங்களே வச்சுக்கோங்க” அவன் தனக்கு தேவையான பணத்தை எடுத்துகொண்டு அவளிடம் மீதியைக் கொடுத்தான்.

அதை வாங்க மறுத்த செவ்வந்தி, “ப்ளீஸ் வெற்றி இது உங்க முதல் மாச சம்பளம் வேண்டான்னு சொல்லாதீங்க..” தயக்கத்துடன் அவனை ஏறிட்டவளின் பார்வை அவனை என்னவோ செய்ய மறுக்காமல் மெளனமாக இருந்தான்.

ஒரு பார்வையால் தன்னை அவள் கட்டிப்போட்டு விடும் வித்தையை எங்கே கற்றாள்? என்ற கேள்வி நேரம் காலம் பார்க்காமல் அவனின் மனதில் ஊர்வலம் போனது.

அவள் மீண்டும் ஒரு தொகையை அவனிடம் நீட்டி, “உங்க தங்கச்சிக்கு நீங்க ஏதாவது வாங்கித்தர நினைத்தால் இந்த பணத்தில் வாங்கிட்டு போங்க” என்று சொல்லி அவனிடம் கொடுத்தாள்.

அவளின் மீது வந்த கோபத்தை பல்லைக்கடித்துக்கொண்டு அடக்கிய வெற்றி, “என் தங்கச்சிக்கு வாங்கிட்டு போக என்னிடம் காசு இருக்கு” என்று மறுக்க அத்தோடு இன்னும் கொஞ்சம் பணத்தை சேர்த்து அவனின் கையில் கொடுத்தவள்,

“என் சார்பாக அவளுக்கு நல்ல ஒரு கிப்ட் வாங்கி கொடுங்க வெற்றி” அவன் பணத்தை வாங்க மறுக்கவே, “என்னை முதல் முதலாக உறவு முறை சொல்லி அழைத்தவள் அவ மட்டும்தான். என் சார்பாக அவளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்க வெற்றி” என்றவளின் குரல் கரகரப்புடன் ஒழிக்க பட்டென்று நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.

அவளின் பேச்சில் வித்தியாசத்தை உணர்ந்தவனின் பார்வை அவளை கூர்மையாக அளவிட்டது. அவளின் முகம் வேதனையில் கசங்கி இருப்பதை கண்டு அவனின் மனதில் வலி ஏற்பட்டது. எந்தநேரமும் சிரித்த முகமாக இருக்கும் அவளுக்குள் இருக்கும் தனிமையை முதல் முறையாக உணர்ந்தான்.

ஆனால் அதன் பின்னோடு இருக்கும் காயத்தின் வீரியத்தை அறியாமல் போனான். இந்நாள்வரை அவளைப் பற்றி எந்தவொரு தகவலையும் அவன் அறிந்து கொள்ளவில்லை. ‘நான் இந்த ஊருக்கு புதுசு’ என்று அவள் அன்று சொன்ன விஷயம் தவிர இன்னும் அவளின் பின்னணியை அறியவில்லை.

அவன் அந்த விஷயத்தை தெரிந்து கொள்ள நினைக்கும்போது செவ்வந்தி பேச்சில் அவனை திசைதிருப்பிவிடுவாள். இப்போது வேலை தொடங்கிய பிறகு இருவரின் இடையே பேச்சுவார்த்தை குறைந்து கொண்டே வந்தது. நிமிடத்திற்குள் நடந்ததை நினைத்துப் பார்த்துவிட்டு அவன் நிமிரும்போது செவ்வந்தி அவனின் அருகே இல்லை.

தன் கையில் இருந்த சம்பள பணத்தைப் பார்த்தும் ஜமுனாவின் நினைவுதான் வந்தது. காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போதே, “அண்ணா நைட் வரும்போது எனக்கு ஏதாவது வாங்கிட்டு வா” என்றாள்.

தங்கைக்கு என்ன வாங்கலாம் என்ற சிந்தனையோடு இருக்கையில் இருந்து எழுந்தான். செவ்வந்தி ஹென்பெக்கை எடுத்துகொண்டு அவனின் அருகே வரவே, “ஏங்க ஒரு நிமிஷம்” என்று அவளைத் தடுத்தான் வெற்றி.

அவள் கேள்வியாக நோக்கிட, “நீங்க ஏன் தனியாக இருக்கீங்க? உங்க வீட்டில் யாரும் இல்லையா? இல்ல வேறு ஏதாவது பிரச்சனையால் வீட்டைவிட்டு பிரிந்து வந்து இருக்கீங்களா?” பலநாள் மனதிலிருந்த சந்தேகத்தை அவளிடம் கேட்டான்.

செவ்வந்தி சிந்தனையோடு நின்றது சில நிமிடங்கள் மட்டுமே. அவளின் மனதில் மாறாத வடுவாக மாறிவிட்ட கடந்த காலத்தை புறம்தள்ளிவிட்டு, “என்னைப் பற்றி சொல்ல ஒன்னும் இல்ல வெற்றி” என்றவள் அவனை கடந்து செல்ல அவனின் புருவங்கள் ஏறி இறங்கியது.

அவன் கடையைப் பூட்டிவிட்டு வந்து அவளிடம் சாவியை கொடுத்துவிட்டு கிளம்பினான். செவ்வந்தி அவன் கையில் இருந்த பார்சலை பற்றி ஒரு வார்த்தை கூட விசாரிக்காமல், “பாய் வெற்றி நாளை பார்க்கலாம்” என்று அவனிடமிருந்து விடைபெற்று கிளம்பினாள்.

செவ்வந்தியின் செயல் அவனுக்கு வியப்பை கொடுத்தது. அவள் இடத்தில் மற்ற பெண்கள் இருந்தால் என்னவென்று கேட்டு ஒரு வழி செய்துவிடுவார்கள். அவள் மெளனமாக இருப்பதை கண்டவனுக்கு அவளை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. அவன் தன் எண்ணங்களில் உழன்றபடி வீடு நோக்கி பயணித்தான்.

அவளின் சந்தோஷமான நாட்களின் பட்டியலில் இந்த நாளும் சேர்ந்தது. வெற்றியின் மனதில் நம்பிக்கை என்ற விதை விழுந்து துளிர்விட்டு வளர்வதை நினைத்து மனநிறைவு அடைந்தாள்.

அவளை பொறுத்தவரை யாரின் மனதையும் காயபடுத்தாமல் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் அந்த நாளை கடத்திவிட வேண்டும் என்று நினைப்பாள். அதைதான் இன்றும் நினைத்து அவனுக்கு பதில் கொடுத்துவிட்டு வந்தாள்.

வீட்டை திறந்தது மின்விளக்கை ஒளிரவிட்டு வீட்டைச் சுற்றி பார்வையை சுழற்றினாள். இரண்டு அறையுள்ள வீடு சமையலறையில்தேவையான  பொருட்கள் மட்டுமே இருந்தது. ஹாலில் ஒரு பீர்வா, கட்டில் யாராவது வந்தால் உட்கார இரண்டு பிளாஸ்டிக் சேர், பாடல்கள் கேட்க எப். எம் இவ்வளவு தான் இருந்தது.

அத்தோடு தனிமை என்ற தோழியின் அரவணைப்பும் இருக்கவே இரவு உணவை முடித்துக்கொண்டு கட்டிலில் வந்து படுத்த செவ்வந்தியின் கரங்கள் வழக்கம்போல தூக்க மாத்திரையை தேடியது. கட்டிலின் அருகே இருந்த டிராவில் மாத்திரையை எடுத்து போட்டுகொண்டு மீண்டும் படுக்கையில் சரிந்தாள்.

சற்றுநேரத்தில் கண்கள் சொருக ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள். அவள் பகல் முழுவதும் உழைத்து களைத்து இருந்தாலும் இரவு தூக்க மாத்திரை இல்லாமல் அவள் ஒருநாளும் தூங்கியது இல்லை. அதன் பின்னாடி இருக்கும் காரணம் என்னவென்று அவள் மட்டுமே அறிந்த உண்மை.

Leave a Reply

error: Content is protected !!