Malar – 9

images - 2020-11-04T133408.569-e030942b

அத்தியாயம் – 9

அதே நேரத்தில் அண்ணனின் வரவை எதிர்பார்த்து சோபாவில் அமர்ந்திருந்த மகளின் அருகே வந்தார் விமலா. நரசிம்மன் நியூ சேனல் பார்த்துக் கொண்டிருக்க ரிமோட்டை வாங்கி வேறு சேனலை வைத்தாள் மகள்.

“ஏன் ஜமுனா சேனலை மாத்திர” என்று தந்தை அவளை கடிந்து கொள்ள, “எனக்கு பிடிக்கல” என்றவள் பாட்டு சேனலை வைத்தாள். சிறிது நேரத்தில் அவளின் கவனம் டி.வி.யில் ஒளிபரப்பான பாடலில் திரும்பிவிட விமலா மெல்ல கவனின் அருகே வந்தார்.

“என்னங்க நம்ம பாப்பாவுக்கு நகை எடுத்து வைக்கணும். அப்போதான் கல்யாணத்தின் போது எந்த பிரச்சனையும் வராது” என்றதும் கணவனின் சிந்தனையோடு புருவம் சுருக்கி யோசித்தார்.

அவளுக்கு திருமண வயது ஆகிவிட்டதை உணர்ந்தவர், “சரி விமலா” என்று சொல்ல அதுவரை அமைதியாக இருந்த ஜமுனா வாயைத் திறந்தாள்.

“எனக்கு நீங்க எந்த நகையும் எடுத்து தர வேண்டாம்” என்றாள் எரிச்சலோடு.

“அப்போ யார் எடுத்து தருவாங்கன்னு நினைச்சிட்டு இருக்கிற” மகளின் பேச்சில் கடுப்பான நரசிம்மன் அவளை முறைத்தபடியே கேட்டார்.

அவரின் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்து சட்டென்று திரும்பிய ஜமுனா, “என் அண்ணன் இருக்கும்போது நான் ஏன் கவலைபடனும்” என்றாள் கோபமாக.

அவளின் பேச்சைக்கேட்டு கடகடவென்று சிரித்த நரசிம்மன், “இன்னுமா நீ அவனை நம்பர? அவனால் ஒண்ணுமே பண்ண முடியாது ஜமுனா. அவன் நகை பண்ணி போட்டபிறகுதான் நீ கல்யாணம் பண்ணிக்குவேன்னு அடம்பிடித்தால் அது இந்த ஜென்மத்தில் நடக்காது” என்று ஏளனமாக கூறியவர் எழுந்து அறைக்கு சென்றார்.

அவர் செல்லும் வரை அமைதியாக இருந்த விமலா மகளின் அருகே வந்து, “உங்க அப்பா சொல்வதில் தவறு என்ன இருக்கு? அவனை நம்பின நீ காலம் முழுக்க கன்னியாகத்தான் இருக்கணும்”  என்று  கணவனை பின் தொடர்ந்து செல்லும் முன்னே வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம்கேட்டு வாசலுக்கு விரைந்தாள்.

ஜமுனா எப்போதும் போல வாசலுக்கு வந்து அவனை வரவேற்க, “என்னடா இன்னும் தூங்காமல் என்ன பண்ற” என்றபடி அவளோடு வீட்டிற்குள் நுழைந்தான்.

“உனக்காக தான் அண்ணா வெயிட்டிங்” என்று சிரித்துக்கொண்டே கூறிய தங்கையின் தலையை வருடியவனின் கண்கள் லேசாக கலங்கியது. தனக்கு பிறகு பிறந்தவள் தன் மீது வைத்திருக்கும் பாசம் நினைத்து உள்ளம் பூரித்தது.

“அண்ணா நான் கேட்டேனே எனக்கு என்ன வாங்கிட்டு வந்த” என்று அவளின் குரல் சத்தமாக ஒலித்தது. மகளின் குரல்கேட்டு நரசிம்மன், விமலா இருவரும் அறையிலிருந்து வெளியே வந்து எட்டிப்பார்த்தனர்.

நடுஹாலில் நின்றிருந்த மகனைப் பார்த்தும், “என்ன வாங்கிட்டு வந்தான் உன்னோட பொறந்தவன்” என்று நக்கலோடு கேட்ட தந்தையை முறைத்தாள் சின்னவள். அவரின் பேச்சும், தந்தையின் எதிர்ப்பார்ப்பையும் வைத்து ஏதோ நடந்திருப்பதை உணர்ந்து தன் கையிலிருந்த பார்சலை அவளிடம் கொடுத்தான்.

ஜமுனா பார்சலை வாங்கி ஆர்வத்துடன் பிரிக்க இரண்டு பட்டுபுடவைகள் ஒரே டிசைன் வெவ்வேறு நிறத்தில் எடுக்கப்பட்டிருந்தது. வாடாமல்லி நிறத்தில் ஒரு புடவையும், இளம்பச்சை நிறத்தில் மற்றொரு புடவையும் அழகான ஸ்டோன் வொர்க் உடன் இருந்தது.

அத்தோடு சேர்த்து ஒரு தங்க மோதிரம் இருப்பதை பார்த்தும், “அண்ணா நிஜமாவே சூப்பரா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..” என்று சந்தோஷமாக கூறிய தங்கையின் தலையை கலைத்துவிட்டு சிரித்த வெற்றி அவளிடம் மீதி பணத்தை கொடுத்தான்.

அவள் சம்பளப் பணத்தை கையில் வாங்கியதும், “இந்த முறை தங்கத்தில் மோதிரம் வாங்கிட்டு வந்திருக்கேன். அடுத்த முறை உன்னை அழச்சிட்டு போய் பிடிச்ச டிசைனில் செயின் எடுத்துவிட்டு வரலாம், பட்டுசேலை கலர் உனக்கு ஓகே வா என்று பாரு. பிடிக்கலன்னா மாத்திக்கலாம்” என்றான்.

அவன் கொடுத்த இரண்டு புடவையையும் பார்த்தவள், “எனக்கு டிசைன் ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா. அதனால் நான் பச்சை நிற புடவை எடுத்துக்கறேன். ஆமா இன்னொரு புடவை யாருக்கு” என்று தெரியாதது போல கேட்ட ஜமுனாவின் பார்வை இம்முறை தாய் தந்தையின் மீது நிலைத்தது.

வெற்றி நொடியும் தாமதிக்காமல் புடவையை கையில் எடுத்து வருடிக் கொடுத்து, “உங்க அண்ணிக்கு” என்றான் புன்முறுவலோடு.

அவன் ‘அண்ணி’ என்றதும் பெரியவர்களுக்கு தூக்கி வாரிப்போட, ஜமுனா இன்ப அதிர்ச்சியோடு தமையனை ஏறிட்டாள். அவனின் ‘அண்ணி’ என்ற வார்த்தை அவளுக்கு அப்படியொரு சந்தோஷத்தை கொடுத்தது.

அவன் தன்னறை நோக்கி செல்ல, “ஏய் வெற்றி ஒரு நிமிஷம் நில்லு” என்றார் நரசிம்மன் கடுமையான குரலில்.

வெற்றி நின்று அவரை திரும்பிப் பார்த்து, “என்னப்பா” என்றான்.

கணவனை தடுத்த விமலா, “எங்களுக்கு தெரியாமல் லவ் பண்ணி கல்யாணம் வேற பண்ணிக்கிட்டியா? ஏன்டா எங்களிடம் ஒரு வார்த்தை கூட சொல்லல?” மகனிடம் கேட்டார்.

தாயின் கேள்விக்கு அவன் பதில் சொல்லும் முன்னரே இடையில் புகுந்த ஜமுனா, “அம்மா அண்ணா புடவை எடுத்த அவன் கல்யாணத்திற்கு தயாராகிட்டான்னு அர்த்தம். அவனே கல்யாணம் பண்ணி தனிக்குடித்தனம் நடத்தறான்னு அர்த்தம் இல்ல. அவனோட வருங்கால பொண்டாட்டிக்கு அவன் எடுத்ததை அண்ணிக்குன்னு உரிமையோடு சொல்றான். அதில் உங்களுக்கு எங்க குத்துது” என்று கேள்வியாக புருவம் உயர்த்தி கேட்டவளின் கேள்வியிலிருந்த நியாயம் அவர்களை சுட்டது.

கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் பார்வையை பரிமாறிக்கொள்ள, “ஒரு கேள்வி கேட்கும் முன்னாடி யோசிக்கணும்” என்று அழுத்தம் திருத்தமாக கூறியவள் தமையனின் புறம் திரும்பினாள்.

“அண்ணா அந்த புடவை என்னிடம் இருக்கட்டும். நானே ஒருநாள் அண்ணிக்கு கொடுத்துவிடுகிறேன்” ‘அண்ணி’ என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்த தங்கையை அவன் திகைப்புடன் ஏறிட்டான்.

அவனை அதற்கு மேலும் குழப்ப விரும்பாமல் கையிலிருந்த புடவையை வாங்கிகொண்டு, “நீங்க போய் ட்ரஸ் மாத்திட்டு வாங்க அண்ணா” அங்கிருந்து தமையனை அனுப்பிவிட்டு பெற்றோரின் பக்கம் திரும்பினாள் ஜமுனா

தன் கையிலிருந்த பணத்தை விசிறி போல வீசியவள், “யாரை குறைச்சு எடைபோட கூடாதுப்பா. ஏன்னா நம்ம பக்கம் வீசும் காத்து நாளைக்கு அவங்கபக்கம் வீசவும் வாய்ப்பு இருக்கு” என்று தந்தையின் பேச்சிற்கு பதிலடி கொடுத்துவிட்டு தாயின் அருகே வந்தாள்.

விமலா மகளை முறைக்க, “என் அண்ணா எனக்கு மோதிரம் வாங்கிட்டு வந்திருக்கிறான். அதுவும் முதல் மாத சம்பளத்தில்.. சீக்கிரமே எனக்கு மாப்பிள்ளை பார்த்து ஜாம் ஜாம்னு கல்யாணமும் பண்ணி வைப்பான் அம்மா..” ஏளனமாக கூறியவள் இருவரையும் முறைத்தாள்.

பெற்றவர்கள் மகளின் பேச்சில் அதிர்ச்சியில் சிலையென உறைந்து நின்றிருக்க, “என் அண்ணனை பேசற தகுதி உங்க இருவருக்கும் இல்ல. இன்னொரு முறை பேசினீங்க என்னோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி வரும்” என்று மிரட்டிவிட்டு தன்னிடம் கொடுத்த பொருட்களை எடுத்துகொண்டு அறைக்கு செல்லும்போது டிவியில் பாடல் ஒலித்தது.

“வெற்றி மேல வெற்றிதான் நம்ம கையிலே.. வெள்ளிக்காசு என்றுமே எந்தன் பையிலே” என்ற பாடலைகேட்டு நமட்டு சிரிப்புடன் பெற்றோரை கடந்து சென்றாள் ஜமுனா.

அதே நேரத்தில் தன் அறைக்கு சென்ற வெற்றி படுக்கையில் சிந்தனையோடு அமர்ந்திருந்தான். அவன் சேலை எடுத்து வரும்போது கூட செவ்வந்தியின் நினைவு அவன் மனதில் எழவில்லை. ஜனனிக்காக அவன் சேலை எடுத்து வரவும் இல்லை.

ஆனால் எப்படி தங்கை கேட்டதும், ‘அண்ணிக்கு’ என்று அழுத்தத்துடன் சொன்னேன் என்ற கேள்விக்கு அவனுக்கே விடை தெரியவில்லை. அவள் வாழ்க்கையில் வந்தபிறகு எத்தனை மாற்றங்கள் என்று யோசித்த வெற்றியின் முகம் பிரகாசமானது.

அவனுக்கே தெரியாமல் அவனுக்குள் சில மாற்றம் என்ற விதைகளை விதைத்துவிட்ட பாவையின்  நினைவுடன் அன்று தூக்கத்தை தொலைத்துவிட்டான்.

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது..

வழக்கம்போல காலையில் சீக்கிரமே எழுந்துவிட்ட செவ்வந்தி குளித்துவிட்டு சமையலறைக்குள் நுழைத்தாள். தேவையான காய்கறிகளை எடுத்து வைத்துவிட்டு நறுக்கும் முன்னர் எப். எம்.மை ஒலிக்கவிட்டு வேலையை தொடங்கியவள் சுறுசுறுப்பாக வேலையை முடித்து சீக்கிரமே கடைக்கு கிளம்பிவிட்டாள்.

அங்கே சென்று வேலையைத் தொடங்க ஒவ்வொரு ஆளாக வேலைக்கு வர தொடங்கினர். அவள் சென்றதும் கல்லாவை திறந்துப் பார்க்க இரண்டு புடவைக்கு உண்டான பணத்துடன் சேர்த்து, ‘உங்க கடையாக இருந்தாலும் காசு கொடுக்கணும் இல்ல. அதுதான் பணத்தை இதுல வெச்சிட்டு இரண்டு சேலை எடுத்துகிட்டேன்’ என்ற குறிப்பைக் கண்டு அவளின் உதட்டில் புன்னகை அரும்பியது.

எல்லோரும் வந்துவிட துணியை வெட்டுவதற்கு உள்ளே சென்ற செவ்வந்தி வேலையில் மும்பரமாக இருந்ததால் வெற்றி வந்ததை அவள் கவனிக்கவில்லை.

அதே நேரத்தில் கடைக்குள் நுழைந்த ஜனனி, “என்ன வெற்றி என்னை மறந்துட்டியா? ஒரு போன் பண்ணின கூட எடுக்காமல் இருக்கிற” என்று அவனிடம் கேட்டாள்.

“ஜனனி நான் இங்கே வேலை பார்க்கிறேன். அதனால் நீ என்ன வேலைக்கு வந்தியோ அதை முடிச்சிட்டு கிளம்பு” என்று சன்னக்குரலில் வார்த்தைகளை கடித்து துப்பிவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தான்.

அவனிடம் பழகிய இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட அவன் இப்படி பேசியதில்லை என்ற காரணத்தினால் வேகமாக கடைக்குள் சென்றவள் இரண்டு சேட் அனார்கலி சுடிதாரை எடுத்துவிட்டு கல்லாவில் வந்து பணத்தை கட்டிவிட்டு சென்றாள். அங்கே நடப்பவற்றை செவ்வந்தி கவனித்தபோதும் அதை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அவளின் சிந்தனையை கலைப்பது போலவே, “அக்கா” என்று அழைத்தாள் சரண்யா.

சட்டென்று திரும்பிப் பார்த்த செவ்வந்தி, “என்னாச்சு சரண்? ஏதாவது வேணுமா?” என்று அக்கறையுடன் கேட்டாள்.

“அக்கா ஒரு எப். எம். இருந்தா வேலை செய்ய கொஞ்சம் வசதியா இருக்கும்” என்றாள். அன்று மதியமே வெளியே சென்ற வெற்றியிடம் சொல்லி வாங்கி வந்து வைத்தவள் அங்கே வேலை செய்பவர்களின் பக்கம் திரும்பினாள்.

“இங்கே பாருங்க நீங்க பாடல் கேட்பதை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன். ஆனால் எனக்கு வேலை சீக்கிரம் முடியணும்” என எச்சரித்தாள். அவர்களும் சரியென்று தலையசைக்க அன்றிலிருந்து பாடல் கேட்டுகொண்டே தைப்பது அவர்களின் முறையானது.

அதன்பிறகு வந்த நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது. வைகாசி மாதம் கல்யாண ஆர்டர்கள் வேலை இருந்துகொண்டே இருந்தது. ஆனி மாதம் பிறந்ததும் வேலை அப்படியே குறைய தொடங்கியது. ஆடி மாதத்தில் கோவிலுக்கு செல்லும் சிலர் மட்டுமே வந்து துணியெடுத்து தைக்க கொடுத்தார்.

அன்றும் மதியம் வீட்டிற்கு சென்று மீண்டும் கடைக்கு வரும்போது கடையின் மாடிபடிக்கட்டின் அருகே நின்று யாருடனோ வெகு தீவிரமாக பேசிகொண்டிருந்த சரண்யாவை பார்த்தும், ‘இவ என்ன பண்ணிட்டு இருக்கிற’ என்ற சிந்தனையோடு அவளின் அருகே சென்றாள்.

“தென்றல் இங்கே பாரு. வீட்டின் கொடியில் காயப்போட்டு இருக்கும் புதிய துணிகளை மட்டும் தூக்கிட்டுப் போய் ஊர் எல்லை இல்ல வேண்டாம் ஆந்திரா எல்லையில் வீசிட்டு வந்துவிடு. அப்புறம் அவங்க எல்லாம் வந்து துணி எடுப்பாங்க. எனக்கும் தொடர்ந்து வேலை இருக்கும்” என்று டீல் பேசியதை கேட்டு அதிர்ந்த செவ்வந்தியின் உதடுகளில் அவளின் குழந்தைத்தனமான பேச்சில் புன்னகையாக மாறிப் போனது.

“ஏய் இங்கே நின்று யாரிடம் டீல் பேசற” என்ற செவ்வந்தியின் குரல்கேட்டு தூக்கிவாரிப்போட்டது சரண்யாவிற்கு!

அவள் அசடு வழிய சிரித்தபடி, “இல்லக்கா தென்றல் என் க்ளோஸ் ப்ரெண்ட். இப்போ நமக்கு வேலையில்லாமல் இருக்கு இல்ல அதன் அவளிடம் ஹெல்ப் கேட்டேன். அவளும் உடனே செய்யறேன்னு சொல்லிட்டா” என்று மென்று முழுங்கியபடி மெல்ல கூறினாள்.

சரண்யாவின் பேச்சு செவ்வந்திக்கு சிரிப்பை வரவழைக்க, அதுக்காக இப்படியுமா யோசிப்பாங்க சரண்? உன்னை நினைச்சா எனக்கு சிரிப்பா வருது. அவங்க துணி காணாமல் போனால் எப்படி வருத்தப்படுவாங்க” என்றாள்.

“அதுக்காக நம்ம அமைதியாக இருந்தால் வேலை வராது அக்கா” என்றவளை கோபமாக முறைத்தாள் செவ்வந்தி.

அவளின் கனல் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் சரண்யா மௌனமாக நின்றிருக்க, “நீ ஏன் இப்படி நினைக்கிற.. கண்டிப்பா துணி வரும்னு நம்பிக்கையோடு நினை. அப்போது பாசிடிவ்வாக மட்டும் தான் யோசிக்கணும்” என்றவள் சொல்லிவிட்டு இருவரும் கடைக்குள் செல்ல ஒரு பெண்மணி சேலைக்கு மேச்சாக ஜாக்கெட் எடுத்து தைக்க கொடுத்தார்.

அதை பார்த்தும், “இப்போதாவது புரியுதா?” என்று முணுமுணுத்தாள்

“அக்கா ஏன் இப்போ திடீரென்று ஜாக்கெட் எடுக்கிறீங்க” வந்திருந்த பெண்ணின் வாயைக் கிளறினாள் சரண்யா.

“அதை ஏன்மா கேட்கிற? கொடியில் காயப்போட்ட துணியை காற்று தூக்கிட்டு போயிருச்சு. நாளைக்கு இந்த சேலை கட்டிட்டு போகணும் இல்லன்னா என் பக்கத்து வீட்டுக்காரி திட்டியே என் மானத்தை வாங்கிடுவா” என்று அவர் போகின்ற போக்கில் சொல்லிவிட்டு செல்லவே சரண்யா வெற்றி புன்னகையோடு செவ்வந்தியை நோக்கினாள்.

செவ்வந்தி, “இவளை எல்லாம் என்ன பண்றதுன்னு எனக்கே தெரியல” என்று தலையிலடித்துகொண்டு நகர்ந்துவிடவே அங்கே நடந்த அனைத்தையும் பார்வையாளனாக பார்த்துக் கொண்டிருந்த வெற்றி செவ்வந்தியிடம் விளக்கம் கேட்டான்.

சரண்யாவின் சந்தோஷத்தை பார்த்துக்கொண்டே, “கெட்ட எண்ணங்கள் வெற்றி அடைந்துவிட்டது போல ஒரு பிரம்மையை உருவாக்கும் வெற்றி. ஆனால் அது நிஜமான வெற்றி இல்ல. இப்போ சரண்யா வெற்றி அடஞ்சிட்டதாக நினைக்கிற” என்றதும் வெற்றியின் மனம் எங்கோ சென்றது.

செவ்வந்தி அதை கவனிக்காமல் தொடர்ந்து, “அது அவளோட எண்ணங்களின் வெளிப்பாடு. இதே சரண்யா துணியைக் கொடியில் போட்டேன் காத்து தூக்கிட்டு போயிருச்சுன்னு சொல்வா பாருங்க. இயற்கைக்கு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு தெரியாது என்ற நிதர்சனம் புரியாமல் இருக்கிறா. என்னைக்குமே நேர் வழியில் சென்றவனுக்கு மட்டும்தான் வெற்றி கிடைக்கும். அதை அவளும் ஒருநாள் புரிஞ்சிக்குவா” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள்.

அவள் சொன்னதில் இருந்த உண்மை அவனை வியப்படைய வைத்தது. நம்ம எண்ணங்களின் குவியலுக்கும், நடக்கும் செயல்களுக்கும் இடையே நிறைய தொடர்புகள் உள்ளதென்று செவ்வந்தியின் பேச்சில் புரிந்து கொண்டான்.