Manmo final

 

கார்த்திக் அமெரிக்கா கிளம்பிப் போய் ஆறு மாதங்கள் கடந்திருந்தன. வீட்டில் பாட்டியும் அம்மாவும் மித்ராவோடு பேசுவதையே நிறுத்தி இருந்தார்கள்.

 சக்ரதேவ் முகம் அவ்வப்போது மருமகளைச் சங்கடமாகப் பார்க்கும். ஆனால், எப்போதும் அவளோடு துணை நின்றது பத்மா தான்.

உங்களுக்குள்ள இப்போ என்ன பிரச்சினை ன்னு எனக்குத் தெரியாது மித்ரா. எதுவா இருந்தாலும் உனக்கு நான் இருக்கேன். என் பையனை டிவோர்ஸ் பண்ணிட்டு நீ இன்னொரு துணையைத் தேடிக்கிறதா இருந்தாலும் எனக்குச் சந்தோஷம் தான்.”

பத்மாவின் வார்த்தைகளில் மித்ரமதி உறைந்து போனாள். இன்னொரு துணையா? அவன் இல்லாமலா? வண்டெனக் கேள்விகள் மனதைத் துளைத்தன.

ஆன்ட்டி… எம் மேல உங்களுக்கு வருத்தமே இல்லையா?”

வருத்தம் நிறையவே இருக்கு. ஆனா உம்மேல இல்லைம்மா. எம்மேல. பையன் தப்புப் பண்ணினப்போ புருஷன் என்னன்னு தட்டிக் கேக்கலை. ஆனா நான் அப்படி இருந்திருக்கக் கூடாது. இழுத்து வச்சு நாலு அறை அறைஞ்சிருக்கணும். விட்டுட்டேன்… இன்னைக்கு எல்லாமே கை மீறிப் போச்சு.” சொல்லி விட்டுப் போன பத்மாவின் முகத்தில் கவலை அப்பியிருந்தது.

மித்ரமதி அமைதியாக உட்கார்ந்திருந்தாள். குழந்தைக்கு ஏழு மாதங்கள் ஆகியிருந்தது. குண்டுக் கன்னங்களும், பால் சதையுமாக கொள்ளை அழகாக இருந்தது.

கார்த்திக்கின் சாயல் அப்பட்டமாகக் குழந்தையின் முகத்தில் தெரிந்தது. இவள் திரும்பிப் பார்க்கவும் அதை எதிர்பார்த்திருந்தது போல அழகாகச் சிரித்தது. மித்ரமதிக்குக் கண்கள் கலங்கிப் போனது.

கர்ப்பமாக இருக்கும் போதுதான் அந்தக் குழந்தையைப் பற்றி அவனிடம் எதுவும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்றால்… இப்போதும் அதே நிலைமை தான் தொடர்ந்தது.

என்ன மாதிரியான வாழ்க்கை இது! கார்த்திக்கை அடித்து நொறுக்கலாம் போல வெறி வந்தது.

உங்க பெயருக்கு ஒரு லெட்டர் வந்திருக்கும்மா.” ராசாத்தி கொண்டு வந்து நீட்டவும் அதை வாங்கினாள் மித்ரமதி.

யாருக்கா?”

வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் போல இருக்கும்மா.” அவர் சொல்லவும் படபடவென அதைத் திறந்தாள் மித்ரமதி.

கார்த்திக் தான் அனுப்பி இருந்தான். ஆனால்… விவாகரத்துப் பத்திரம்! அந்தப் பத்திரத்தையே உறுத்து விழித்தபடி இருந்தாள் மித்ரா.

குழந்தை தனக்கேயுரிய பாஷையில் அவளை அழைத்தது. திரும்பிப் பார்த்தாள். மீண்டும் தன் அம்மாவைப் பார்த்துச் சிரித்தது. ஏதேதோ மிழற்றியது.

ஃபோனை எடுத்தவள் மார்க்கை அழைத்தாள். முகத்தில் ரௌத்திரம் தெரிந்தது.

மார்க்!”

சொல்லுங்க மேடம்?”

கார்த்திக் எங்க?”

சார் லண்டன் போயிருக்காங்க.”

எப்போ அமெரிக்கா ரிட்டர்ன்?”

இன்னும் ஒன் வீக் அங்க தான் மேடம்.”

ஓகே பை.” அவசரமாக லைனைத் துண்டித்தவள் இன்னும் ஒரு சில கால்கள் பண்ணினாள்.

வீட்டிலிருப்பவர்களிடம் தான் லண்டன் போவதாக அவள் அப்போதே அறிவிக்கவும் தேவகி உடன் கிளம்ப ஆயத்தம் ஆனார். ஆனால் பாட்டி விடவில்லை.

தேவகி… நீ எங்க கிளம்புற?”

என்ன அத்தை இப்படிக் கேக்குறீங்க? மித்ரா தான் லண்டன் போறேன்னு சொல்லுறாளே.”

அதுக்கு? நீ எதுக்கு வால் மாதிரி?”

அத்தை?”

உம் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிக் குடுத்தாச்சு. அவங்கவங்க வாழ்க்கையை வாழுறதும் வீணடிக்கிறதும் அவங்க சாமர்த்தியம்.”

இல்லை அத்தை… கைக்குழந்தையை வச்சுக்கிட்டுத் தனியாப் போகப்போறா… அதான்…”

வயசு போன காலத்துல புருஷனும் இல்லாமப் புள்ளையும் இல்லாமக் கஷ்டப்படுறது நான். உனக்கு இந்தக் கிழவியை கவனிக்கிறதுக்கும் கடமை இருக்கு தேவகி.”

ஐயோ அத்தை! கண்டிப்பா… நான் உங்களை விட்டு எங்கயும் போகமாட்டேன்.”

சாவித்திரியின் பேச்சில் பத்மாவும் வாயடைத்துப் போனார். புருஷன் பொண்டாட்டி பிரச்சினை. அவர்களே எந்த இடையீடும் இல்லாமல் பேசித் தீர்த்துக் கொள்ளட்டும் என்று அந்த வயதான பெண்மணி நினைப்பது அவருக்கும் புரிந்தது. மௌனமாகி விட்டார்.

ஆனால் மித்ரா யாரையும் எதிர்பார்க்கவில்லை. குழந்தைக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டாள். தன்னிடம் இருந்த லண்டன் வீட்டுச் சாவியையும் பத்திரப் படுத்திக் கொண்டாள்.

விவாகரத்துப் பத்திரம் கைக்குக் கிடைத்த அடுத்த நாளே ஃப்ளைட்டைப் பிடித்திருந்தாள் பெண்.

லண்டன் ஹீத்ரோவை அவள் வந்து சேர்ந்த போது மணி மதியம் ஒன்று.‌

ஏர்போர்ட்டிலேயே ஒரு டாக்சியைப் பிடித்தவள் நேராக வீட்டுக்கு வந்திருந்தாள்.

கார்த்திக் ஆஃபீஸ் போயிருந்தான். அவளிருந்த போது வீடு எப்படி இருந்ததோ அதே போலவே இப்போதும் இருந்தது.

மேலே மாடிக்கு வந்தவள் தான் முன்பு பயன்படுத்திய ரூமிற்கு வந்தாள். கார்த்திக் அந்த ரூமைத்தான் பாவனை செய்கிறான் என்பதற்கு சாட்சியாக அவன் பொருட்கள் ஆங்காங்கே இருந்தன.

ஆமா! இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை. அதான் நமக்குன்னு தனியா ரூம் இருக்கில்லை. அங்க போக வேண்டியது தானே!” அவள் நொடித்துக் கொள்ளவும் அம்மா தன்னிடம் தான் பேசுகிறாள் என்று நினைத்துக் குழந்தை அவளைப் பார்த்துச் சிரித்தது.

குழந்தை சிரிப்பதைப் பார்த்த பிறகு தான் மித்ரமதிக்குத் தான் தனியே புலம்புவது புரிந்தது. வாய்விட்டுச் சிரித்தவள் குழந்தையோடு வம்பு வளர்த்தாள்.

உங்கப்பாவை நான் திட்டுறேன் நீ சிரிக்கிறே! வெரி பாட் நேயா.” அவள் பேசவும் குழந்தை மீண்டும் சிரித்தது.

உங்கப்பாக்கு என்னைத் தனியாப் புலம்ப விடுறதே பொழைப்பாப் போச்சு. இன்னைக்கு வரட்டும். வெச்சுக்கிறேன் கச்சேரியை.” தனியே பொருமியவள் பீட்சா ஒன்றை ஆர்டர் பண்ணி உண்டாள்.

நன்றாக அம்மாவும் மகளும் ஒரு தூக்கம் போட்டுவிட்டு எழுந்தபோது நேரம் ஆறு மணி. குளிரகாலம் லேசாக ஆரம்பித்திருந்தது. ஆறு மணிக்கெல்லாம் நன்றாக இருள் பரவி இருக்கவும் வீடு முழுக்க லைட்டை ஆன் பண்ணியவள் டீவி ஐ ஓட விட்டாள்.

தனியே இருக்க லேசாக பயமாக இருந்தது. பெரிய வீடு வேண்டும் என்பதால் கார்த்திக் புறநகர்ப் பகுதியைத் தான் தெரிவு செய்திருந்தான்.

வீடும் சற்று உள்ளே இருந்ததால் ஆட்கள் நடமாட்டமே இருக்கவில்லை.‌ ஃபோன் பண்ணலாமா என்று பரபரத்த மனதை அடக்கிக் கொண்டாள். எத்தனை மணிக்குத் தான் வருகிறார் என்று பார்ப்போமே! ஆவலாகவே காத்திருந்தாள் மனைவி.

***

அன்று கார்த்திக்கிற்கு சீக்கிரமே வீட்டுக்குப் போனால் நன்றாக இருக்கும் போல தோன்றியது. வீட்டுக்குப் போயும் இதே லாப்டாப்பைத் தான் கட்டிக் கொண்டு அழவேண்டும்.

அன்றொரு நாள் மித்ரா கூட அப்படித்தானே சொன்னாள். மனைவியை நினைத்த மாத்திரத்தில் இலவச இணைப்பு போல குழந்தையின் முகம் ஞாபகம் வந்தது.

பாட்டியிடம் ஃபோட்டோ கேட்டிருந்தான். ஆனால் மறுத்து விட்டார். அவர் சொல்லச்

சொல்லக் கேட்காமல் இவன் புறப்பட்டு வந்த கோபம் அவருக்கு.

ஆனால் இவனும் தான் என்ன பண்ணுவான்? தன்னை முழுதாக வெறுக்கும் மனைவியோடு இருந்து மேலும் மேலும் சங்கடங்களை வளர்க்க அவன் விரும்பவில்லை.

அவளாவது நிம்மதியாக இருக்கட்டுமே! லாப்டாப்பைத் தூக்கிக் கொண்டு காருக்கு வந்து விட்டான் கார்த்திக். ரிச்சர்ட் ஆச்சரியமாகப் பார்க்கவும் ஒரு புன்னகையைப் பரிசாகத் தந்தவன் கிளம்பி விட்டான்.

 இந்தியாவிலிருந்து கிளம்பி வந்த புதிதில் கார்த்திக் மிகவும் கஷ்டப்பட்டான். முதலில் மனைவியின் பிரிவு மட்டும் தான்.‌ ஆனால் இப்போது குழந்தையும் சேர்ந்து அவனை வதைத்தது.

நள்ளிரவில் கூட கண்விழித்து பால்கனி இருளில் நின்றிருக்கிறான். முன்பானால் சிகரெட் பாக்கெட் பாக்கெட்டாகக் கரைந்து போயிருக்கும். ஆனால் இப்போதெல்லாம் அவன் அதைத் தொடுவதே இல்லையே.

ஏதேதோ எண்ணமிட்ட படி காரை வீட்டை நோக்கித் திருப்பினான் கார்த்திக். தூரத்தில் வரும் போதே வீட்டில் தெரிந்த வெளிச்சம் அவனை ஆச்சரியப்படுத்தியது.

யாராக இருக்கும்?’ வீட்டின் சாவிகளில் ஒன்று பத்மாவிடம் உண்டு. அம்மா லண்டன் வருவதைத் தன்னிடம் சொல்லவே இல்லையே!

சத்தியமாக மித்ரமதியை அங்கு அவன் அப்போது எதிர்பார்க்கவில்லை. மணி ஏழு. கதவைத் திறந்தான் கார்த்திக்.

சோஃபாவில் அமர்ந்த படி மித்ரா டீவி பார்த்துக் கொண்டிருக்க, குழந்தை அவள் அருகில் கையைக் காலை ஆட்டி விளையாடிக் கொண்டிருந்தது.

கார்த்திக் திகைத்துப்போய் நின்று விட்டான்.

மித்ரா!” அவன் உதடுகள் அவனைக் கேளாமலேயே அவள் பெயரை உச்சரித்திருந்தது.

மித்ரா! எப்போ வந்தே? சொல்லவே இல்லையே.” அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் முகத்தைத் திருப்பவும் கார்த்திக் இன்னுமொரு முறை அடி வாங்கினான்.

குழந்தையின் அருகில் போனவன் ஆசையாக அதன் முகத்துக்கே நேரே சொடக்குப் போட முகம் தெரியாத அப்பாவை அதுவும் எதிர்த்தது. தன் அம்மாவைப் போல.

குழந்தை அழ ஆரம்பிக்கவும் மித்ரா நேயாவைத் தூக்கிக் கொண்டாள். அம்மாவின் தொடுகை புரியவும் குழந்தை அமைதியாகிப் போனது.

எத்தனை மணிக்கு வந்த மித்ரா? என்ன சாப்பிட்ட நீ?” அவன் கேட்ட வண்ணம் இருக்க சற்று மெலிந்தாற் போல இருந்த கணவனையே அளவெடுத்தாள் மனைவி. அவள் மௌனம் அவனுக்கு வேறு அர்த்தம் கற்பித்தது.

லண்டன் வந்தா நீ இங்க வருவேன்னு நான் எதிர்பார்க்கலை மித்ரா. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.‌ நாளைக்கு ஏதாவது ஹோட்டல்ல ரூம் போடுறேன்.” அவளுக்கு உபகாரம் பண்ணுவதாக நினைத்துக் கொண்டு எரியும் நெருப்பில் எண்ணெயை அள்ளி அள்ளி ஊற்றிக் கொண்டிருந்தான் கார்த்திக்.

அவன் மாடியை நோக்கி நகரவும் மித்ரமதி வாயைத் திறந்தாள்.

டின்னருக்கு ஏதாவது ஆர்டர் பண்ணுறீங்களா? இல்லை நான் ஆர்டர் பண்ணட்டுமா?”

இல்லையில்லை… நானே ஆர்டர் பண்ணுறேன்.”

போகும் கணவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள் மித்ரா. பழைய சுறுசுறுப்பு, மினுமினுப்பு எல்லாம் காணாமற் போயிருந்தது. கண்களின் கீழே கருவளையம் அவன் நீண்ட இரவுகளுக்குச் சாட்சி சொல்லின.

உணவை முடித்து விட்டு அவன் ரூமிற்குள் போய் அடைந்து கொண்டான் கார்த்திக். மித்ரமதியும் எதுவும் பேசவில்லை. குழந்தையை உறங்க வைத்தவள் கையில் அந்தக் கவரோடு அவன் மற்றைய ரூமிற்குள் போனாள்.

இருட்டில் நின்றபடி அன்றைய அமாவாசை வானைப் பார்த்திருந்தான் கார்த்திக். லைட்டை ஆன் பண்ணினாள் மனைவி. சட்டெனத் திரும்பினான் கார்த்திக்.

மித்ரா!”

என்ன இது?” கையில் இருந்த கவரை தூக்கிக் காட்டினாள்.

“……………” அவனும் அந்தக் கவரை அடையாளம் கண்டு கொண்டாலும் எதுவும் பேசவில்லை.

மித்ரமதி அந்தக் கவரை ஆவேசம் வந்தவள் போல கிழித்து அவன் முகத்தில் விட்டெறிந்தாள். மூச்சு வாங்கியது பெண்ணுக்கு.

என்ன நினைச்சுக்கிட்டு இதெல்லாம் பண்ணுறீங்க கார்த்திக்?”

நீதான மித்ரா டிவோர்ஸ் கேட்டே?” அவன் சொல்லவும் அவன் பக்கத்தில் வந்தவள் ஓங்கி ஒரு அறை விட்டாள்.

கார்த்திக் இதை எதிர்பார்க்கவில்லை. அவன் அவளைத் தடுப்பதற்குள் அந்தக் கை அவன் கன்னத்தில் இறங்கி இருந்தது.

கார்த்திக் கன்னத்தைத் தடவிக் கொண்டான். அவன் காலரைக் கொத்தாகப் பிடித்தாள் மித்ரமதி.

நாலு வார்த்தை நாங்க உங்களைக் கேட்டா உங்களுக்கு ரோஷம் பொத்துக்கிட்டு வந்திருமோ? நீயும் வேணாம் உம் பொண்ணும் வேணாம்னு நீங்க பாட்டுக்கு கிளம்பி வந்திருவீங்களோ?” அவள் ஆங்காரமாகக் கேட்கக் கார்த்திக்கின் கண்கள் கூர்மையானது.

என்னைப் பத்தி எப்பவுமே யோசிக்க மாட்டீங்களா கார்த்திக்?”

உன்னைப் பத்தி யோசிச்சதால தான் நான் கிளம்பி வந்தேன் மித்ரா.”

மண்ணாங்கட்டி. என்னத்தை யோசிச்சீங்க?” 

நான் உம் பக்கத்துல இருந்தா உன்னால சரியா யோசிக்க முடியாது மித்ரா.”

யோசிச்சு…”

உனக்குன்னு ஒரு வாழ்க்கையை நீ அமைச்சுக்க வேணாமா மித்ரா?”

அப்போ சார் என்ன பண்ணப் போறீங்க? யாராவது அமெரிக்காக் காரியைப் பார்த்துட்டீங்களா?” அவள் சொல்லவும் முகத்தைத் திருப்பிக் கொண்டான் கார்த்திக்.

எனக்கு நீ போதும் மித்ரா.”

இங்கப்பார்ரா!” அவள் வேண்டுமென்றே அவனைக் கேலி பண்ணினாள்.

மேய்ஞ்சு திரிஞ்ச இவருக்கே நான் போதுமாம். ஆனா எனக்கு வேறொரு வாழ்க்கையாம்!” வாய் விட்டுச் சிரித்தவள் அவன் காலரை மீண்டும் பற்றித் தன்னை நோக்கி இழுத்தாள்.

உங்க மனசுல என்னைப் பத்தி என்ன கார்த்திக் நினைச்சிருக்கீங்க? உங்களை மாதிரி ன்னா? நீங்க சொன்னதை எல்லாம் நினைச்சு இன்னைக்கும் மனசு வலிக்குது கார்த்திக். எம் புருஷன் வாழ்க்கையில வந்த முதல்ப் பொண்ணு நானில்லை ன்னு நினைக்கிறப்போ ரணமா வலிக்குது கார்த்திக். அதுக்காக… உங்களை விட்டுட்டு வேற தேடுவேன்னு நினைச்சீங்களா?” ஆங்காரமாக ஆரம்பித்த அவள் குரல் கண்ணீரில் முடிவடைந்திருந்தது.

நீதானே மித்ரா டிவோர்ஸ் கேட்டே?” என்ன சொல்வதென்று தெரியாமல் புலம்பினான் கார்த்திக்.

ஆமா! கேட்டேன் தான். அப்போ தான் நேயா பத்தித் தெரிஞ்சுது. உங்களுக்கு அந்த விஷயம் தெரிஞ்சா விடமாட்டீங்கன்னு தெரியும். அதுதான் கேட்டேன்.”

அப்போ பிரியணும்னு தானே நினைச்சிருக்கே?”

ஆமா! அப்போ நினைச்சேன் தான். மனசு முழுக்க வலி இருந்துச்சு. இப்படிப்பட்ட ஒரு மனுஷனோட வாழணுமான்னு தோணிச்சு.” அவள் குரல் லேசாக இப்போது நலிந்தது.

ம்… இப்போ…” அவன் குரல் கேள்வியாக வந்தது. உன் மனதில் இருப்பதை நீயாகவே சொல் என்பது போல நின்றிருந்தான் கார்த்திக்.

மித்ரமதி திணறிப் போனாள். ஆறு மாதப்பிரிவு அவளையும் வெகுவாக வாட்டி இருந்தது. முன்பும் கணவனைப் பிரிந்து இருந்தவள் தான்.

ஆனால் அப்போது மனம் முழுக்கக் கவலையும் வேதனையும் மட்டுமே நிறைந்திருந்தது. இலகுவாகக் கணவனைத் தூர நிறுத்த முடிந்தது.

இப்போது நிலைமை அப்படி இல்லையே! கணவனின் அருகாமையை, அரவணைப்பை முழுதாக அனுபவித்து விட்டு… திடீரென்று தட்டிப் பறித்தால்?

கூடினால் மட்டும் தான் காதலா? குழந்தை பிறந்த அந்த ஒரு மாதத்தில் அவன் காட்டியதற்குப் பெயரும் காதல் தானே!

இப்போது அவனை நெருங்கும் வழி தெரியாமல் திண்டாடினாள் பேதை. கார்த்திக் அசைந்து கொடுக்கவே இல்லை. மரம் போல நின்றிருந்தான். கணவனின் அரவணைப்பிற்காக மனம் கிடந்து ஏங்கியது.

கார்த்திக்… கார்த்திக்…” அவன் ஷேவ் பண்ணாத அந்தக் கன்னங்களை அவள் விரல்கள் வருடிக் கொடுத்தது. நெருங்கவும் முடியாமல், தள்ளிப் போகவும் இயலாமல் அவள் தவிக்க… நீ ஆரம்பித்ததை நீயே முடித்து விடு என்பது போல பார்த்திருந்தான் கார்த்திக்.

கார்த்திக்… உங்களால என்னைப் புரிஞ்சுக்க முடியலையா?” இதற்கு மேலும் அவனுக்குத் தன்னை விளக்க அவளுக்குத் தெரியவில்லை.‌ கணவனின் ஒற்றைத் தீண்டலுக்காக அவள் மனம் ஏங்கியது.

அப்போதும் அவன் சும்மாவே நிற்கவும் மித்ராவிற்குக் கோபம் வந்தது. அங்கிருந்த கட்டிலில் அவனை எதிர்பாராத பொழுது பிடித்துத் தள்ளி இருந்தாள் மித்ரா. கார்த்திக் நிலைகுலைந்து போய் கட்டிலில் சரிந்திருந்தான்.

கொழுப்பு… உடம்பு முழுக்கக் கொழுப்பு… இவ என்ன பண்ணிடப் போறாங்கிற திமிரு. காட்டுறேன்டா உனக்கு நான் யாருன்னு!” சூளுரைத்தபடி அவள் அவன் உதடுகளை நெருங்கவும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான் கார்த்திக்.

சரியாக அந்த நேரம் பார்த்துக் குழத்தை அழும் சத்தம் கேட்கவும் அனைத்தையும் மறந்து அவள் ரூமிற்கு ஓடி விட்டாள் மித்ரா. கார்த்திக் கட்டிலில் கிடந்த படியே தலையைக் கோதிக் கொண்டான். மனது நிறைந்து போனது. புன்னகைத்தான்.

மனைவியின் மனம் நன்றாகவே புரிந்தது அவனுக்கு. தன்னை வாட்டிய அதே பிரிவு அவளையும் வாட்டி இருக்கிறது. தான் தேடிய தன் இணையின் துணையை அவள் மனமும் தேடி இருக்கிறது.

கட்டிலை விட்டு இறங்கியவன் அடுத்த ரூமை எட்டிப் பார்த்தான். குழத்தை பசியாறிக் கொண்டிருந்தது. சட்டென்று வெளியேறப் போனவனை தடுத்தது அவள் குரல்.

கார்த்திக்!”

நான் கொஞ்சம் லேட்டா வர்றேன் மித்ரா.” இப்போது கணவன் தடுமாறினான்.

இல்லை… பரவாயில்லை. வாங்க கார்த்திக்.” அவள் அழைக்கவும் அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தான் கணவன். தனக்கு முதுகு காட்டி அமர்ந்திருப்பவனை ஒரு புன்னகையோடு பார்த்தாள் மித்ரா.

சற்று நேரத்தில் குழந்தை உறங்கிப் போனது. தலையணையை மகளுக்கு அணைவாக வைத்தவள் கணவனை மீண்டும் சரணடைந்தாள்.

கார்த்திக்.”

ஷ்…” முதுகோடு ஒன்றிய மனைவியை இப்போது அடக்கியது அவன் குரல். கண்கள் மனைவியையும் தாண்டி உறங்கும் மகளிடம் போனது.

மித்ரமதி கணவனையே பார்த்தபடி இருந்தாள். இமைக்காமல் குழந்தையையே பார்த்திருக்கும் அவனைப் பார்த்த போது கொஞ்சம் குற்ற உணர்ச்சியாக இருந்தது பெண்ணுக்கு.

இன்னும் எதையெல்லாம் அவர்கள் இழக்கப் போகிறார்கள்!

என்ன சொல்லுறா உங்க பொண்ணு?”

ஷ்… சத்தம் போடாத மித்ரா. அதுதான் தூங்கிறா இல்லை.” அவன் கிசுகிசுத்தான்.

இல்லையில்லை… இனி எழும்ப மாட்டா.”

ஓ…‌ என்ன கேட்டே?”

என்ன சொல்லுறா உங்க பொண்ணு ன்னேன்.”

யாரு பொண்ணு?” இதைக் கேட்கும் போது அவன் முகம் கொஞ்சம் கசங்கியது.

கணவனைத் தன்புறமாகத் திருப்பியவள் அவன் மடியில் உட்கார்ந்து கொண்டாள். அவள் கைகள் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டது. அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டாள்.

அன்னைக்கு ரொம்பப் பேசிட்டேன் இல்லை கார்த்திக்?”

இல்லைடா…”

எனக்கே புரிஞ்சுது. தெரியலை கார்த்திக். இப்போல்லாம் ரொம்பவே கோபம் வருது. அதுவும் நீங்க சம்பந்தப் பட்டதுன்னா இன்னும் நிறையவே வருது… சாரி…”

சேச்சே! அடிதான் வாங்கப் போறே மித்ரா. நீ எங்கிட்ட சாரி சொல்லுவியா?”

சாப்பாட்டுக்கு என்ன பண்ணுறீங்க கார்த்திக்? டெய்லி ஆர்டர் பண்ணுறீங்களா?”

ம்… டைம் கிடைச்சா நானே ஏதாவது பண்ணிக்குவேன். இல்லைன்னா வெளியே தான்.”

மெலிஞ்சு போய்ட்டீங்க.” அவனை அண்ணார்ந்து பார்த்தபடி அந்தச் சொரசொரப்பான தாடையை வருடிக் கொடுத்தாள். கார்த்திக் மனைவியையே பார்த்தபடி இருந்தான்.

என்ன?” அவள் புன்னகைக்கவும் ஒன்றுமில்லை என்பது போல் தலையாட்டினான். எம்பி அந்தத் தாடையில் இதழ் பதித்தாள் மித்ரா.

இல்லை… என்னமோ இருக்கு. சொல்லுங்க கார்த்திக்.”

நீ தூங்கு டா. நாளைக்குப் பேசலாம். பேபியோட அவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணினது டயர்டா இருக்கும்.”

பரவாயில்லை…” கணவனை விட்டு நகர மனமில்லாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

யாரையாவது கூட்டிக்கிட்டு வந்திருக்கலாம் இல்லை?” அவன் கேட்கவும் அவள் முகம் சுணங்கியது.

பாட்டி விடலை.”

பாட்டியா! ஏன்?”

நீங்க வந்ததுக்கு அப்புறம் பாட்டியும் அம்மாவும் எங்கூடப் பேசுறதே இல்லை.” அவள் புகார் படித்தாள்.

ஐயையோ! ஏன்?”

தெரியலை… நான் தான் உங்களைத் துரத்தி விட்டேனாம்.”

என்னடா பேச்சு இது?”

உங்க அம்மா மட்டும் இல்லைன்னா எனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கும்.”

ஓ…”

ம்… இப்பக்கூட அம்மா கிளம்பினாங்க. பாட்டி விடலை. சரிதான் போங்க எல்லாரும்ன்னு நான் கிளம்பிட்டேன்.”

ஒரு கால் பண்ணி இருந்தா நானே வந்திருப்பேனே மித்ரா. எதுக்கு இவ்வளவு கஷ்டப்படணும்?”

தெரியலை… உடனே கிளம்பி வரணும்னு தோணிச்சு. வந்து இந்தக் கன்னத்துல நாலு அறை அறையணும் போல இருந்திச்சு. இன்னும் மூனு பாக்கி இருக்கு.” அவள் சிரித்தாள்.

நீ என்ன பண்ணினாலும் ஓகே தான்.”

எனக்கு இப்போ பார்கவி போடுற பாட்டுக் கேக்கணும் போல இருக்கு கார்த்திக்.” மனைவி சொல்லவும் கார்த்திக் புன்னகைத்தான்.

அவள் முற்றாகக் கனிந்து போயிருப்பது புரிந்தது. இருந்தாலும் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான். அந்தக் கண்களில் அயர்ச்சி தெரிந்தது.

மனைவியை அப்படியே கைகளில் அள்ளிக் கொண்டவன் அவளைக் கட்டிலில் கிடத்தினான்.

தூங்குடா… ரொம்ப டயர்டாத் தெரியுறே.”

கார்த்திக்… நீங்களும் இங்கேயே இருங்க.” இப்போதும் அவன் காலர் அவள் கைகளில் அகப்பட்டுக் கொண்டது.

ம்… சரிடா.” மனைவியின் கண்களில் தெரிந்த அழைப்பு அவனை லேசாக அசைத்தது. அந்த இதழ்களில் மென்மையாக முத்தம் வைத்தான் கார்த்திக். அவன் அணைப்புக்கு ஏங்கியவள் போல முழுதாக அவனோடு ஒன்றிக்கொண்டவள் உறங்கிப் போனாள்.

கார்த்திக் நிறைவாக உணர்ந்தான். அருகே மனைவி… அதற்கு அடுத்தாற் போல மகள். சொல்லில் வடிக்க முடியாத இன்பம் அவனைச் சூழ்ந்து கொள்ள நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆழ்ந்து உறங்கினான் கார்த்திக்.

***

குழந்தையின் அழகிய மிழற்றலில் தான் கண்விழித்தான் கார்த்திக். அடித்துப் போட்டாற் போல உறங்கி இருந்தான். பக்கத்தில் கிடந்தபடி கையைக் காலை ஆட்டி விளையாடிக் கொண்டிருந்தாள் சின்னவள்.

மித்ராவைக் காணவில்லை. குழந்தையைத் தன் அருகில் கிடத்தி விட்டு எங்கோ போயிருந்தாள். பாத்ரூமிலும் சத்தம் கேட்கவில்லை. கிச்சனில் நிற்பாள் போலும்.

குழந்தையின் அருகில் போனவன் தன் விரலை நீட்டினான். அழகாகப் பற்றிக் கொண்டு தன் அப்பாவைப் பார்த்துச் சிரித்தது. கார்த்திக் நெகிழ்ந்து போனான். கண்கள் கலங்கி விட்டது.

குழந்தையின் விரல்களைப் பற்றியபடி அவன் விளையாடிக் கொண்டிருக்க மித்ரமதி உள்ளே வந்தாள். கையில் ஃபீடிங் பாட்டில் இருந்தது.

ரெண்டு பேரும் எழும்பிட்டீங்களா?” இயல்பாகக் கேட்டபடி குழந்தையிடம் போனாள்.

இது எதுக்கு மித்ரா?”

இல்லை கார்த்திக், டாக்டர் தான் இதையும் குடுக்கச் சொன்னாங்க.”

ஓ…”

நேயா ரொம்ப வீக்கா இருந்தா இல்லை? அதனால தான்.”

ம்…”

கார்த்திக், நேயாக்கு வின்டர் க்ளோத்ஸ் எதுவும் இல்லை. அவசரமா கிளம்பினதால நான் எதுவும் வாங்கலை. இன்னைக்கு நீங்க ஃப்ரீன்னா போய் வாங்கலாமா?”

போகலாம் டா. இதை எப்படிக் குடுக்கிறது?” அவன் கேட்கவும் குழந்தையைத் தூக்கி அவன் மடியில் வைத்தவள் பாட்டிலை அவன் கையில் கொடுத்து குழந்தைக்குப் புகட்ட வைத்தாள்.

குழந்தையும் அவனோடு ஒட்டிக்கொண்டது. அந்த ஸ்பரிசம் கொடுத்த மகிழ்ச்சியை கார்த்திக் மனதுக்குள் பத்திரப் படுத்திக் கொண்டான்.

தன் ஃபோனை எடுத்த மித்ரமத அப்பாவையும் மகளையும் ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டாள்.

நான் டீ போடுறேன் கார்த்திக்.”

நான் வர்றேன் மித்ரா.” அவளுக்கு அது கூட ஒழுங்காக வராது என்று அவனுக்குத் தெரியும்.

இல்லையில்லை… இப்போ கொஞ்சம் சமையல் கூடத் தெரியும்.” சொல்லியபடி நகர்ந்து விட்டாள்.‌

பாட்டில் காலி ஆகும் போதே குழந்தை மீண்டும் தூங்கி விட்டிருந்தது. அதை மெதுவாக கட்டிலில் கிடத்தியவன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு கீழே வந்தான்.

அவள் அப்போதுதான் ஒரு வழியாகப் போராடி டீயைத் தயாரித்து முடித்திருந்தாள்.

நேயா தூங்கிட்டாளா கார்த்திக்?”

ம்…” டீயை வாங்கிக் கொண்டான்.

எப்படி இருக்கு?”

நல்லா இருக்கு டா.” சொல்லிக் கொண்டிருக்கும் போது அவன் ஃபோன் சிணுங்கியது.

வாட்ஸ்அப்பில் ஏதோ மெஸேஜ். எடுத்துப் பார்த்தவனின் முகம் சிரித்தது.

யாரது?”

பார்கவி.”

என்னவாம்?” அவள் கேட்கவும் ஃபோனை அவள் புறம் திருப்பினான்.

இந்தப் பாட்டை ஒலிக்கவிட்டு மித்ராவின் காலில் சாஷ்டாங்கமாக விழவும்.என்றிருந்தது மெஸேஜ்.

என்ன பாட்டு அது?” மித்ராவும் சிரித்தபடியே கேட்டாள். தோளைக் குலுக்கியவன் பாடலை ஒலிக்க விட்டான்.

சாதனாவின் குரலில் ஸ்நேகிதனே… ஸ்நேகிதனே…‌ ரகசிய ஸ்நேகிதனே…ஒலித்தது. மித்ரமதி புன்னகைத்துக் கொண்டாள்.

கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில்…  கர்வம் அழிந்ததடி… என் கர்வம் அழிந்ததடி…

பாடலோடு லயித்திருந்த கார்த்திக் மனைவியைத் தன் புறமாகத் திருப்பினான். அவள் கண்களையே சில கணங்கள் பார்த்திருந்தான்.

என்ன கார்த்திக்?” அந்த முகம் நேற்றைய அசதியில் இருந்து மீண்டிருந்தது.

இன்னும் மூனு அடி பாக்கி இருக்கில்ல மித்ரா?” 

மூனா? அது இருக்கு நிறைய. இன்ஸ்டால்மென்ட் ல வரும்.” அவள் குறும்பாகச் சொன்னாள். ஆனால் அவன் முகம் தீவிர பாவம் காட்டியது.

மொத்தமா இன்னைக்கே குடுத்திருவேன்… ஆனா நீங்க திரும்பவும் எங்கேயாவது ஓடிருவீங்கள்ல. அதால தான் சும்மா விடுறேன்.”

இல்லை மித்ரா. நீ அன்னைக்குப் பேசினதுக்காக நான் கிளம்பி வரலை. நேயாவை எம் பொண்ணு ன்னு சொல்ல…” கார்த்திக்கிற்கு வார்த்தைகள் வர மறுத்தன.

சாரி கார்த்திக்.”

இல்லையில்லை… உனக்கு எம்மேல எவ்வளவு வெறுப்பு இருந்திருந்தா அப்படியொரு வார்த்தை வரும். இதுவரைக்கும் ஒரு நல்ல வாழ்க்கையைக் குடுக்கலை. அட்லீஸ்ட் இனியாவது நீ சந்தோஷமா இருக்கட்டுமே ன்னுதான்.” 

நீங்க இல்லாம எங்கிருந்து கார்த்திக் எனக்கு சந்தோஷம் வரும்?” கேட்ட மனைவியைத் தன்னை நோக்கி இழுத்தான் கார்த்திக்.

 இல்லேங்கிறியா?” அவன் பார்வை அவளைத் துளைத்தது. அவள் தலை இடம் வலமாக ஆடியது. அவன் தாடையில் இதழ்பதித்தாள் மனைவி.

சந்தோஷமா இருந்தாலும் சரி… கஷ்டமா இருந்தாலும் சரி… இனி எல்லாமே இந்தக் கார்த்திக்கோட தான். சாகுற வரைக்கும்.” அவள் வார்த்தைகள் சாசனம் போல வந்தது.

பேபீ…” அந்த வார்த்தைக்காகவே காத்திருந்தவள் போல அவனுள் புதைந்து போனாள் மனைவி. இரவைத் தவற விட்டவர்கள் அந்த அழகான இளங்காலைப் பொழுதைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

***

காரை அந்தப் பார்க்கின் முன்னால் நிறுத்தி இருந்தான் கார்த்திக். கணவன் மனைவி இருவரும் மட்டுமே வந்திருந்தார்கள்.

 பூமாவும் கணவரும் லண்டன் வந்துவிட்டார்கள். ஒரு வாரத்திற்கு மேல் நேயாவைப் பார்க்காமல் அவர்களால் இருக்க முடியவில்லை.

 குழந்தையை அம்மாவிடம் கொடுத்து விட்டு மனைவியோடு வந்திருந்தான் கார்த்திக். அது அவள் பர்த்டே நடந்த பார்க். கார்த்திக் முதல் முதலாக அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக எல்லோரிடமும் அறிவித்த இடம்.

 இடத்தைப் பார்த்த போது மித்ரமதி புன்னகைத்தாள். அவனும் சிரித்துக் கொண்டான்.

இப்பல்லாம் அடிக்கடி இங்க வர்றேன் மித்ரா.”

ஏன்?”

தெரியலை. வரப்பிடிக்குது. அந்த மரத்துக்குக் கீழேயும் கொஞ்ச நேரம் நிற்பேன்.” இருவரும் கை கோர்த்தபடி அந்த மரத்தை வந்து சேர்ந்தார்கள்.

கார்த்திக்… அப்பா இருந்த வரைக்கும் நான் சம்பந்தப்பட்ட எல்லாத்துக்கும் எனக்குப் பூரண சுதந்திரம் இருந்துச்சு. அம்மா அதனாலேயே ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்க.” அவள் பேச ஆரம்பிக்கவும் கார்த்திக் அமைதியாகக் கேட்டிருந்தான். அவன் விரல்கள் அவள் கூந்தற் சுருளை காதோரம் ஒதுக்கியது.

 அப்பா போனதுக்கு அப்புறமா… அம்மா மாமா மாரையே எல்லாத்துக்கும் எதிர்பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. இருந்தாலும் எனக்கு நானே தான் முடிவெடுத்தேன். அதுவே பழகியும் போச்சு.”

ம்…”

திடீர்னு ஒரு மனுஷன் என்னோட லைஃப்ல வந்து எனக்கும் சேர்த்து முடிவெடுத்தப்போ… எனக்குப் பிடிக்கலை கார்த்திக்.” இப்போது கார்த்திக் சிரித்தான்.

எனக்கு இப்படியெல்லாம் யோசிக்கத் தெரியலை மித்ரா. உன்னைப் பார்த்தப்போவே நான் விழுந்துட்டேன்னு தான் நினைக்கிறேன்.”

ஏய்!” அவள் குறும்பாகச் சிரித்தாள். ஆனால் கார்த்திக் தொடர்ந்தான்.

எனக்கே அது புரியலைன்னு தான் நினைக்கிறேன் மித்ரா. இல்லைன்னா முதல் சந்திப்பிலேயே உன்னை உக்கார வெச்சு அவ்வளவு பேசி இருப்பேனா?”

ஆமாமில்லை…”

ம்…”

ஏன் கார்த்திக்? என்னை அதுக்கு முன்னாடி நீங்க பார்த்ததே இல்லையா?”

ஆக்ஸ்போர்ட் ல வெச்சுப் பார்த்திருக்கேன். அப்போ நீ ரொம்பச் சின்னப் பொண்ணு பேபி.”

சின்னப் பொண்ணு மேல வன்மம் வைக்குறோமே ன்னு தோணலையா?” அவள் விளையாட்டாகக் கேட்டாள். அவன் இல்லை என்று தலையாட்டினான்.

அப்போ எங் கண்ணுக்கு நந்தகுமார் மட்டும் தான் தெரிஞ்சான் மித்ரா.”

ம்…”

பழிவாங்கணும்னு எல்லாம் பண்ணிட்டு… லண்டன் வரைக்கும் வந்ததுக்கு அப்புறமா மனசு மாறிப்போச்சு.”

அது ஏன்னு நீங்க யோசிக்கலையா?”

எனக்கு இன்னைக்கு வரைக்கும் இந்தக் கேள்விக்கு பதில் தெரியலை மித்ரா. எவ்வளவு பெரிய முடிவை அவ்வளவு அசால்ட்டா எடுத்திருக்கேன்!”

ம்…” மித்ரா சிரித்தாள்.

உன்னை சீக்கிரமா என் பக்கத்துல கொண்டு வரணும்னு தோணிச்சு. ஆனா நீ கல்யாணத்துக்கு சம்மதிக்கலை. அதனாலதான்… ஏதேதோ பண்ணி…”

“……………”

ஃபர்ஸ்ட் நைட்லயே உன்னைக் கஷ்டப்படுத்தணும்னு நினைக்கலை. உன்னை விட்டுத் தள்ளி இருக்க முடியலை பேபி.” அவன் கைகள் லேசாக அத்து மீறியது.

ஆனா அடுத்த நாளே என்னைத் தூக்கித் தூரப் போட்ட பாரு! நான் அப்படியே ஆடிப்போயிட்டேன். இது அத்தனை லேசுப்பட்ட பொண்ணில்லைன்னு நல்லாவே புரிஞ்சுது.”

கோபம் வந்துச்சா?”

நோ… நோ… நான் அந்த நாளை ரொம்பவே என்ஜாய் பண்ணினேன். நீ என்னை

தைரியமா எதிர்த்து நின்னது எனக்கு ரொம்பவே புடிச்சுது.”

போதும் கார்த்திக்.” அதற்கு மேல் நடந்த கசப்புகளை அவள் பேச விரும்பவில்லை.

செகண்ட் ஹனிமூன் எப்போ போறோம் பேபி?” அவன் சரசமாகக் கேட்டான்.

அட! இந்த ஐடியா நல்லா இருக்கே. நேயாவையும் கூட்டிக்கிட்டுப் போறோமா கார்த்திக்?”

கண்டிப்பா. எம் பொண்ணு இல்லாம நான் இனி எங்கேயும் போறதா இல்லை.”

அப்போ… அமெரிக்கா?” தயங்கிய படி கேட்டாள் மித்ரா. மனைவியைத் தன் கை வளைவிற்குள் நெருக்கமாகக் கொண்டு வந்தான் கார்த்திக். அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டான்.

என்னோட வைஃபுக்கு அமெரிக்கா பிடிக்கலையாம் மித்ரா. அதனால அமெரிக்கா பிஸினஸை அப்பாக்கிட்டக் குடுத்திட்டு நான் லண்டன்லயே செட்டில் ஆகலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.” அவன் சொல்லவும் அவள் பிரமித்துப் போனாள்.

கார்த்திக்!” மனைவியின் இறுகிய அணைப்பில் கார்த்திக் புன்னகைத்தான்.

உன்னை விட எனக்கு எதுவுமே பெரிசில்லை மித்ரா. அதை நீ புரிஞ்சுக்கணும்.” சொன்னவனுக்கு அழகான இதழ் முத்தம் ஒன்று பரிசாகக் கிடைத்தது.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு…

பாட்டியின் வீடு ஜே ஜே என்று இருந்தது. மித்ராவும் கார்த்திக்கும் ஒரு வாரத்திற்கு முன்பே இந்தியா வந்திருந்தார்கள். பார்கவியின் சீமந்தம் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வெகு விமர்சையாக நடந்தேறி இருந்தது.

கார்த்திக் ப்ளீஸ்…”

நீ அடிதான் வாங்கப் போற மித்ரா.” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கெஞ்சிய மனைவியை அதட்டி விட்டு டைனிங் டேபிளுக்குப் போய் விட்டான் கார்த்திக்.

அடடா! என்னதான் அப்படிக் கேக்குறா கார்த்திக் இந்த மித்ரா? ரெண்டு நாளா முகம் வாடியே கிடக்குது?”

உங்க பேத்தியையே கேளுங்க பாட்டி.” கார்த்திக் நழுவிக் கொண்டான்.

என்ன வேணும் மித்ரா? பாட்டிக்கிட்டச் சொல்லு, நான் வாங்கிக் குடுக்கிறேன்.” பாட்டி ஜம்பமாகச் சொல்லவும் முறைத்து விட்டு மாடிக்குப் போய் விட்டாள் பெண்.

ஏய் மித்ரா! சாப்பிட்டுட்டுப் போம்மா.” நேயாவுக்கு ஊட்டிக் கொண்டிருந்த தேவகி சத்தமாகச் சொன்னார். பேத்தியைக் கவனிக்கவே அவருக்கு நேரம் சரியாக இருந்தது.

ஒன்னும் வேணாம் போங்க.” முணுமுணுத்த படியே போகும் மனைவியை ஒரு சிரிப்போடு பார்த்திருந்தான் கார்த்திக்.

சற்று நேரத்திலெல்லாம் கையில் ப்ளேட்டோடு ரூமுக்கு வந்தவனைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள் பெண்.

மித்ரா சாப்பிடு.”

“……………”

இப்போ நீ சாப்பிடப் போறியா இல்லையா?”

இந்த மிரட்டுற வேலையெல்லாம் வேற எங்கேயாவது வச்சுக்கோங்க கார்த்திக்.” அவன் எகிற அதற்கு மேலாக எகிறினாள் மனைவி.

சாப்பிடு மித்ரா.”

வேணாம்.”

சரி… சாப்பிடு.” அவன் அந்த வார்த்தையைச் சொன்ன மாத்திரத்தில் அவள் கண்கள் மின்னியது.

நிஜமா?”

ம்…” அவன் சிரித்தான்.

சாப்பிட்டதுக்கு அப்புறமா பேச்சு மாறக்கூடாது கார்த்திக்.”

ம்ஹூம்… மாட்டேன்.”

அப்பச் சரி. குடுங்க ப்ளேட்டை…‌ யம்மா! என்னப் பசி.” மளமளவென்று சாப்பிட

ஆரம்பித்தாள் மித்ரா. கார்த்திக் மௌனமாகிப் போனான்.

இரவில் இருவரும் தனித்திருந்தார்கள்.‌ இங்கு வரும்போதெல்லாம் நேயா பாட்டிமாரோடு தான்.

பயமா இருக்கு மித்ரா.”

அட ஆண்டவா! பெத்துக்கப் போற நானே கவலைப்படலை. உங்களுக்கு என்ன கார்த்திக் வந்தது?”

நேயா பொறந்தப்போ நடந்ததெல்லாம் ஞாபகம் வருது மித்ரா.”

அதுக்கு?”

டாக்டர் கிட்டயும் ஒரு வார்த்தை கேக்குறது பெட்டர் ன்னு தோணுது எனக்கு.”

அதெல்லாம் கேட்டாச்சு”

வாட்! அப்படி என்ன அவசரம் பேபி உனக்கு?”

பார்கவியைப் பார்த்தீங்க இல்லை கார்த்திக். எனக்கும் அதைப் பார்த்ததும் ஆசையா இருக்கு.” கணவனின் ஷர்ட் காலரைத் திருகினாள் பெண்.

இனி எங்கேயாவது வளைகாப்புன்னு கிளம்பினே… பின்னிடுவேன் மித்ரா.”

ஆமா… நீங்க பின்னிட்டாலும்… எவ்வளவு மிஸ் பண்ணி இருக்கோம் கார்த்திக்.” விளையாட்டாக ஆரம்பித்தவள் குரல் வலியோடு முடிந்தது.

இழந்தது எல்லாத்தையுமே இப்போ ஈடுகட்டணும் கார்த்திக். உங்களை நைட்டெல்லாம் தூங்க விடாம அங்க வலிக்குது, இங்க வலிக்குது ன்னு தொல்லை பண்ணணும். டெய்லி உங்க ஷர்ட்ல வாமிட் பண்ணணும். ஒவ்வொரு செக்கப் க்கும் நீங்க எங்கூட வரணும். கார்த்திக் என்னை நல்லாவே கவனிக்க மாட்டேங்கிறார் டாக்டர் ன்னு உங்களை நான் கம்ப்ளைன் பண்ணணும். டாக்டர் உங்களை நல்லா மிரட்டணும். பேபி மூவ் பண்ணுறப்ப எல்லாம் உங்ககிட்டச் சொல்லணும். இப்படி நிறைய இருக்கு கார்த்திக்.”

அவள் சொல்லிக்க முடிக்க கார்த்திக் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

சாரி பேபி… சாரி டா.”

சீச்சீ… உங்களை வருத்தப் படுத்தச் சொல்லலை கார்த்திக். எம் மனசுல தோணினதைச் சொல்றேன்.”

புரியுது டா.”

கார்த்திக் மாதிரி… ஒரு பையன் வேணும். ஊர்ல உள்ள அத்தனை பொண்ணுங்களும் சைட் அடிக்கணும்… எம் பையனை.”

அப்படியா?”

அன்னைக்கு டாக்டரே சொல்லலை? நர்சுங்களே சைட் அடிக்கிற மாதிரிப் புருஷன் ன்னு.” மனைவி சொல்லவும் கார்த்திக்கின் பார்வை மாறிப்போனது.

அநியாயத்துக்கு அழகா இருக்கேடா!” பல்லைக் கடித்தபடி அவள் கிறக்கமாகச் சொல்லவும் கார்த்திக் சிரித்தான்.

போதும் நிறுத்து மித்ரா. வேணாம்… நொந்து போயிடுவே.”

கொஞ்ச நேரம் என்னைக் கொல்லைய்யா…” வேண்டுமென்றே அவள் பாட கார்த்திக் வேறாகிப் போனான். காட்டாற்று வெள்ளமது. அந்தப் பூங்கொடியை தனக்குள்ளே சுருட்டிக் கொண்டது.

இப்போது… லண்டன் பிடிவாதமும், அமெரிக்க அழகும், இந்தியக் கலரும் ஒன்று சேர்ந்தது.