‘ஹேய் ரதி!’ அவள் இடை வளைத்த கார்த்திக் அந்த அடர்ந்த மல்லிகை சூடியிருந்த கூந்தற் காட்டிற்குள் முகம் புதைத்துக் கொண்டான்.
‘கார்த்திக்!’
‘யெஸ்! கார்த்திக்கே தான். ஏன்? என்னோட ரதிக்கு இந்தக் கார்த்திக் வேணாமா?’ அவன் சேட்டைகள் அத்துமீற, ‘வேணாம் கார்த்திக்!’ என்றாள் மித்ரமதி அவன் கைகளைப் பிடித்துத் தடுத்தபடி.
‘என்ன வேணாம்? இந்தக் கார்த்திக்கா?’ குறும்பாகச் சிரித்தவன் அவள் முகம் நோக்கிக் குனிந்தான்…
சட்டென்று கண்விழித்தாள் மித்ரமதி. கனவு! லேசாக உடம்பில் ஒரு பதட்டம். எழுந்து உட்கார்ந்து கொண்டாள். விடிந்து விட்டிருந்தது. இனித் தூக்கம் வரும் போலத் தெரியவில்லை.
பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டவளின் மனது முழுதும் சஞ்சலமே நிறைந்திருந்தது. பொய்யின் முழு உருவமாக அவன் இருந்தாலும் தான் அவன் மேல் வைத்தது உண்மைக் காதல் தானே?
இப்போதெல்லாம் அன்னியோன்யமான தம்பதிகளைப் பார்க்கும் போதெல்லாம் மனது வலித்தது. ஏன் எனக்கு இப்படியெல்லாம் அமையவில்லை என்று மனது கிடந்து பரிதவித்தது.
வாழ்க்கை எல்லோருக்கும் அவர்கள் நினைத்தது போல வசப்படுவதில்லை தான். அது அவளுக்கும் நன்றாகத் தெரியும். ஏன்? தன் கண் முன்னாலேயே பணத்தைத் துரத்திய அப்பாவோடு அம்மா வாழவில்லையா?
ஆனால், எத்தனை சங்கடங்கள் இருந்த போதும் அவர்களெல்லாம் சேர்ந்து தானே வாழ்கிறார்கள். ஏதோ ஒரு பொழுதில் தங்கள் காதலைப் பகிர்ந்து கொள்கிறார்களே! தனக்கு மட்டும் தான் அது எதுவும் விதிக்கவில்லையா?
ஒரு பெருமூச்சோடு ரூமை விட்டு வெளியே வந்தாள் மித்ரமதி. துளசி மாடத்திற்குப் பக்கத்தில் இருந்த சோஃபாவில் அமர்ந்த படி பாட்டி பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.
“குட் மார்னிங் பாட்டி.”
“குட் மார்னிங் பட்டுக்குட்டி. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமே டா?”
“தூக்கம் வரலை பாட்டி. அதான் வந்துட்டேன்.” இவள் சொல்லும் போதே தேவகி இருவரிடமும் டீ யை நீட்டினார்.
“அத்தை!”
“என்ன தேவகி?”
“மித்ராவை டாக்டர் கிட்டக் கூட்டிக்கிட்டுப் போகலாம் அத்தை.”
“நானும் நினைச்சேன் தேவகி. ரொம்பவே வீக் ஆ இருக்கா. உடம்பும் கொஞ்சம் தேஞ்சா மாதிரித்தான் இருக்கு.”
“ஆமா அத்தை. ஒழுங்கா சாப்பிட்டாத்தானே. ஏதோ பேருக்குக் கொறிக்கிறா.”
“நான் நம்ம டாக்டர் கிட்டயே கூட்டிக்கிட்டுப் போறேன். மித்ரா நீ கொஞ்ச நேரம் கழிச்சு ரெடி ஆகும்மா.”
“எதுக்கு பாட்டி? ஏதாவது டானிக் குடிச்சா சரியாயிடும்.”
“ம்ஹூம்… அதை டாக்டர் சொல்லட்டும். நீ ரெடியாகு பட்டுக்குட்டி.” பாட்டி பேத்தியின் கன்னத்தில் கிள்ளிச் செல்லம் கொஞ்ச பேத்தியும் அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். சிரித்தபடி தேவகி உள்ளே போய் விட்டார்.
“பாட்டி…”
“என்னடா?”
“உங்ககிட்ட குட்டி குட்டியா காயின் மாதிரி ஒரு நீள செயின் இருக்குமே? கோவிலுக்குப் போகும் போது போடுவீங்களே?”
“காசு மாலையா?”
“ம்… பெயர் தெரியாது. ஆனா ஸ்டோன்ஸ் எல்லாம் பதிச்சு சூப்பரா இருக்குமே?”
“ஆமா… காசு மாலை.”
“அது எனக்கு வேணும் பாட்டி.”
“அடி என் தங்கம்! அது பாட்டியோட பழசு. நான் உனக்குப் புதுசா, இந்தக் காலத்துப் பசங்க போடுற மாதிரி சூப்பரா ஒன்னு பண்ணித்தாரேன்.”
“ம்ஹூம்… இல்லையில்லை. புதுசுன்னா நானே வாங்க மாட்டனா? எனக்கு அதுதான் வேணும் பாட்டி.” கெஞ்சினாள் மித்ரமதி.
“என் சந்ரு பொண்ணுக்கு இல்லாததுன்னு இந்தக் கிழவிக்கிட்ட ஏதாவது இருக்கா என்ன? அத்தனையும் உனக்குத்தான்டி பட்டு.”
“எல்லாம் வேணாம். அது மட்டும் போதும் பாட்டி.”
“பாட்டிக்கிட்ட நிறைய பட்டுப் புடவையும் இருக்கு.”
“ஐயையோ! அதெல்லாம் வேணாம். ரொம்ப கனமா இருக்கும்.”
“அப்படிச் சொல்லாதடி தங்கம். பாட்டி உன்னை அப்படியெல்லாம் பார்த்ததே இல்லையில்லையா? ஒரு நாளைக்கு புடவை கட்டி, நகையெல்லாம் போட்டுக் காட்டுவியாம், சரியா?”
“ம்… ம்… பார்ப்போம் பார்ப்போம்.” மெதுவாக மித்ரமதி நழுவ அங்கே வந்த தேவகி சிரித்தார்.
“யாரு? உங்க பேத்தி? புடவை கட்டவா அத்தை? அவ புடவை கட்டினா அன்னைக்கு ஏதோ நல்ல மூட்ல இருக்கான்னு அர்த்தம். கோவிலுக்குக் கூட… ம்ஹூம்…”
“நீ பழக்கலை தேவகி. ஏன் குழந்தையைக் குறை சொல்லுற?”
“ஆமா! நான் சொன்ன உடனேயே கேட்டுட்டுத் தான் உங்க பேத்தி மறு வேலை பார்ப்பா!” முணுமுணுப்போடு உள்ளே போய்விட்டார் தேவகி.
***
டாக்டரின் வீட்டுக்கு வந்திருந்தார்கள் மூன்று பெண்களும். சாவித்திரி க்கு டாக்டர் மிகவும் வேண்டப்பட்டவர். நீண்ட நாள் பழக்கம் வேறு.
பெரியவர்கள் இருவரையும் ஹாலில் இருத்தி விட்டு மித்ரமதியை மட்டும் உள்ளே அழைத்துக் கொண்டு போயிருந்தார் டாக்டர்.
மிகவும் கை ராசியான பெண்மணி. அவர் மித்ரமதியைப் பார்த்ததும் கேட்ட கேள்விகளைப் பார்த்த போது இவர்கள் இருவருக்கும் அழுவதா சிரிப்பதா என்று இருந்தது.
“அப்படியும் இருக்குமா தேவகி?”
“எனக்கு ஒன்னுமே புரியலையே அத்தை.”
“சரி விடு. டாக்டரே என்னன்னு சொல்லட்டும். இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடப் போகுது.” இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கதவு திறக்க பெண்கள் இருவரும் அமைதியாகிவிட்டார்கள்.
“என்ன சாவித்திரி? எப்படி இத்தனை நாளும் பார்க்காம விட்டீங்க?” டாக்டர் கேட்கவும் பாட்டி மலைத்து விட்டார்.
“என்ன டாக்டர் சொல்லுறீங்க?”
“கிட்டத்தட்ட மூனு மாசம் இருக்கும்ன்னு நினைக்கிறேன். ஹாஸ்பிடல் கூட்டிட்டு வாங்க, ஸ்கேன் பண்ணிப் பார்த்திடலாம்.”
“மித்ரா இந்தியா வந்தே மூனு மாசம் தான் ஆகுதே டாக்டர்!”
“அப்போ அப்ப இருந்தே உங்களுக்கு ஏதாவது மாற்றம் தெரிஞ்சிருக்கணுமே?”
“இல்லையே டாக்டர்! அப்படி எதுவும் தெரியலையே?”
“ஒரு சிலரோட உடம்பு அப்படித்தான் இருக்கும். சிலருக்கு ஏழு மாசம் வரைக்கும் வித்தியாசமே தெரியாது. எனக்குத் தெரிஞ்சு ஒரு பொண்ணுக்கு குழந்தை அசைய ஆரம்பிச்சதுக்கு அப்புறமாத்தான் கர்ப்பம் ன்னே தெரிய வந்தது.”
இவர்கள் இவ்வளவும் பேசிக் கொண்டிருக்க மித்ரமதி அமைதியாக உட்கார்ந்திருந்தாள். வார்த்தைகளில் வர்ணிக்கத் தெரியாத உணர்வொன்று அவள் உடலையும் உள்ளத்தையும் ஊடுருவி இருந்தது.
ஒரு மாத வாழ்வு அவளுக்கு அளித்த பரிசு இது. இப்போது கசந்தாலும் இனிப்பாக இருந்த போது விளைந்தது தானே! மூன்று மாதங்களா? ஆச்சரியத்தின் உச்சத்தில் இருந்தாள் மித்ரமதி.
அடிக்கடி வந்து போன தலை சுற்றலின் காரணம் இப்போது பிடிபட்டது. கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
தன் முன் மண்டியிட்டு மோதிரம் அணிவித்த உருவமொன்று மின்னாமல் முழங்காமல் அவள் கண்களில் வந்து நின்றது. மழை நாள் ராத்திரியில் அந்த ஒழுகும் குடையின் கீழ் அவன் காதல் சொன்னது காரணமே இன்றி அவள் மனக்கண்ணில் கண் சிமிட்டியது.
தேனிலவின் போது இனிக்க இனிக்கக் காதல் சொன்னவன். இடைவெளி இல்லாமல் இன்பத்தை மட்டுமே காட்டியவன். அவளைப் பெண்ணாக உணரச் செய்தவன்.
காதலிக்கக் கற்றுக் கொடுத்தவன்…
தலையைப் பிடித்துக் கொண்டாள் மித்ரமதி. டாக்டரோடு பாட்டி அளவளாவிக் கொண்டிருக்க மகளின் மேல் ஒரு கண்ணை வைத்திருந்த தேவகி மாமியாருக்கு ஜாடை காட்டினார்.
“அப்போ நாங்க கிளம்புறோம் டாக்டர்.”
“சரி சாவித்திரி. கண்டிப்பா மித்ராவை ஹாஸ்பிடல் கூட்டிக்கிட்டு வாங்க.”
“சரி டாக்டர்.”
மூவரும் கிளம்பி விட்டார்கள். வீட்டுக்கு வரும் வரை எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
“மித்ரா!”
“பாட்டி…”
“எதையும் யோசிச்சு மனசைக் குழப்பிக்காம போய் ரெஸ்ட் எடு.”
“சரி பாட்டி.” மித்ரமதி நகர்ந்து விடவும் தேவகி லேசாக விசும்பினார். பாட்டியும் மௌனமாக யோசித்த படியே இருந்தார்.
“அத்தை!” தேவகியின் குரல் விம்மியது.
“அமைதியா இரு தேவகி. இதை நான் எதிர்பார்க்கலை. வந்த நாள்ல இருந்து மித்ராவும் சாதாரணமா இருந்ததால நான் தப்புக் கணக்குப் போட்டுட்டேன். ஆண்டவனோட கணக்கு வேற மாதிரி இருக்கு போல.”
“பத்மாக்குத் தகவல் சொல்றது நல்லது ன்னு எனக்குத் தோணுது அத்தை.”
“கொஞ்சம் பொறுமையா இரு தேவகி. நம்ம வீட்டுல ஒரு விசேஷம் நடந்திருக்கு. நம்மளால சந்தோஷப்பட முடியலை. அதுக்காக அவசரப்படாத. மித்ராவோட அடுத்தகட்ட நடவடிக்கை என்னன்னு பார்ப்போம்.”
“நீங்க மித்ராக்கிட்ட பேசுங்க அத்தை.”
“பேசலாம்… பேசணும்… அவளே தெளிவா ஒரு முடிவெடுப்பா. அதை நம்மக்கிட்டக் கண்டிப்பாச் சொல்லுவா. அப்போ பேசலாம். இப்போ வேணாம்.”
“ம்…”
***
அடுத்து வந்த இரண்டு மூன்று நாட்களும் மித்ரமதி மிகுந்த குழப்பத்தில் இருந்தாள். ஆதரவாக அவள் கரம் வயிற்றை அடிக்கடி தடவிக் கொடுத்தது.
இனம்புரியாத ஒரு சந்தோஷம். இது வேண்டுமா? வேண்டாமா?என்று கூடத் தெரியவில்லை. ஆனால் மகிழ்ச்சியாக இருந்தது. அடிக்கடி சிரிக்கத் தோன்றியது. சம்பந்தமே இல்லாமல் சிரிப்போடு கண்ணீரும் சேர்ந்து கொண்டது.
ஃபோனை எடுத்து ரிச்சர்ட்டை அழைத்தாள். வாரத்தில் ஒரு நாளாவது இருவரும் பேசிக் கொள்வார்கள்.
“சொல்லுங்க மேடம்.” அவன் குரலில் பூரிப்பு.
“ரிச்சர்ட்… டிவோர்ஸுக்கு அப்ளை பண்ணலாம் ன்னு முடிவெடுத்திருக்கேன்.”
“மேடம்!”
“ஏன் ரிச்சர்ட்? எதுக்கு இப்படி ஷாக் ஆகுற?”
“இல்லை மேடம்… ஷாக் எல்லாம் இல்லை…” ரிச்சர்ட் தடுமாறினான். திருமணமாகி ஒரு வருடம் கூட ஆகவில்லையே? இது சாத்தியமா?
மித்ரமதி இந்தியா கிளம்பிப் போய் மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. இதுவரை எந்த விதமான முடிவிற்கும் அவள் வராததால் கார்த்திக் உடன் சேர்ந்து வாழும் வாய்ப்புகள் அதிகமிருப்பதாகத்தான் அவன் நினைத்திருந்தான்.
“ரிச்சர்ட்?”
“சொல்லுங்க மேடம்.”
“என்ன யோசனை?”
“இல்லை… என்ன திடீர்னு இப்படியொரு முடிவு?” இப்போது மித்ரா மௌனித்தாள்.
ரிச்சர்ட் மிகவும் நெருக்கமானவன் தான். தன் துன்பங்களின் போதெல்லாம் தோள் கொடுத்தவன் தான். இருந்தாலும்… அந்த மகிழ்வை அவனோடு பகிர்ந்து கொள்ள மனம் தயங்கியது.
ஆனால் ரிச்சர்ட்டுக்கு இதெல்லாம் எதுவுமே தோணவில்லை. அவள் தட்டுத் தடுமாறி விஷயத்தைச் சொல்லி முடித்த போது மகிழ்ந்து போனான்.
“கன்க்ராட்ஸ் மேடம்! வாவ்!”
“ரிச்சர்ட்! இப்போ… இதுக்காகச் சந்தோஷப் படுறதா இல்லையான்னு கூட எனக்குத் தெரியலை.”
“ஏன் மேடம் லைஃபைப் போட்டுக் குழப்பிக்கிறீங்க? இது எவ்வளவு சந்தோஷமான விஷயம். கார்த்திக் சாரை நீங்க உங்க வாழ்க்கையில சேர்க்கிறதும் சேர்க்காததும் வேற பிரச்சினை. அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை.”
“கார்த்திக் க்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கே ரிச்சர்ட்!”
“அதை நீங்க தான் முடிவு பண்ணணும். சம்பந்தப்பட்டவரை எங்க நிறுத்தணும்னு ஆறுதலா யோசிங்க. ஆனா இந்த சந்தோஷத்தைக் கொண்டாடுங்க மேடம்.”
“ம்…”
“ஆண்டவன் உங்களுக்கு ஒரு கிஃப்ட் குடுத்திருக்கான். அந்த உயிருக்கு நியாயம் பண்ணுங்க மேடம். இது உங்களோடது. உங்களைத் தாண்டி யாரும் எதுவும் பண்ணிட முடியாது.”
“இதை ஒரு காரணமா வெச்சு கார்த்திக் என்னை நெருங்க வாய்ப்புகள் இருக்கு ரிச்சர்ட். அதனால… டிவோர்ஸுக்கு அப்ளை பண்ணலாம்னு நினைக்கிறேன்.”
“டைம் எடுக்கும் மேடம்.”
“ஐ நோ. இப்போ அப்ளை பண்ணலாம் ரிச்சர்ட். கிடைக்கும் போது கிடைக்கட்டும்.”
“நோ ப்ராப்ளம் மேடம். தாராளமா செய்யுங்க. அந்த சாப்டரைத் தூக்கித் தூரப் போட்டுட்டு ஹாப்பியா இருங்க மேடம்.”
“ரிச்சர்ட்… தான்க் யூ.”
“எதுக்கு மேடம்?”
“நான் எப்போல்லாம் குழப்பத்துல இருக்கேனோ அப்பல்லாம் என்னைச் சரியா கைட் பண்ணுற நீ. எப்போ இன்டியா வர்றே?”
“கண்டிப்பா வருவேன் மேடம். உங்களுக்காக இல்லைன்னாலும் என் மேடமோட பேபியைப் பார்க்க வருவேன் மேடம்.”
அந்த ‘பேபி’ என்ற வார்த்தை அவளை லேசாக உலுக்கியது. போதையோடு ஒரு குரல் அந்த வார்த்தையைத் தன் காதுகளில் சொல்லியதே!
“ஓகே ரிச்சர்ட். பை.”
“பை மேடம்.”
***
இன்னும் ஒரு மாதம் கடந்திருந்தது. அம்மாவும் பாட்டியும் மித்ரமதியைத் தாங்கிக் கொண்டார்கள். மனம் வெகுவாகப் பாதிக்கப் பட்டிருந்ததாலோ என்னவோ உடல் உபாதைகள் எதுவும் இருக்கவில்லை பெண்ணுக்கு.
சாதாரணமாகவே வலம் வந்தாள் மித்ரா. ஸ்கேன் பண்ணுவதற்காக ஒரு முறை ஹாஸ்பிடல் போய் வந்திருந்தாள். அதுவும் பாட்டியின் வற்புறுத்தலின் பெயரில்.
பாட்டி அன்று அவர் நகைப் பெட்டியை லாக்கரில் இருந்து கொண்டு வந்திருந்தார். பேத்தி அவரிடம் ஆசையாக ஒன்றைக் கேட்டிருந்தாளே.
“மித்ரா!”
“என்ன பாட்டி?”
“இங்க கொஞ்சம் வாயேன்.” பாட்டி அழைக்கவும் துளசி மாடத்திற்கு வந்தாள் இளையவள். பாட்டி கொலு வீற்றிருப்பது அங்கே தானே!
“இதைப் பாரு பட்டுக்குட்டி.” பாட்டி தூக்கிக் காட்டவும் குதூகலித்தது பெண்.
“இதுதான் பாட்டி. ரொம்ப அழகா இருக்கு இந்தச் ஜ்வெல்.”
“ஆனா எங்க காலத்து மாடலே டா?”
“அதுதான் சூப்பரா இருக்கு பாட்டி.”
“இதைப் பாருடி செல்லம்.” பாட்டி இன்னொரு ஆபரணத்தை எடுத்துக் காட்ட முகத்தைச் சுழித்தாள் பெண்.
“இதைப் போட்டா எனக்குக் கழுத்து வலிக்கும் பாட்டி. கிட்டத்தட்ட ஒரு கிலோ வெயிட் இருக்குமா?” கேலி பண்ணினாள் மித்ரா.
“அடிப்போடி குட்டிக் கழுதை. உங்க தாத்தா எனக்கு ஆசையாப் பண்ணிக் குடுத்தது.”
“அப்போ நீங்களே அதை வெச்சுக்கோங்க பாட்டி.” இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே காலிங் பெல்லின் சத்தம் கேட்டது.
“ராசாத்தி… யாருன்னு பாரு…”
“சரிம்மா.” அந்தப் பெண் கதவைத் திறந்த மாத்திரத்தில் புயல் போல உள்ளே வந்தான் கார்த்திக்.
அவனை அப்போது அங்கு யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. எங்கேயும் அவன் ஓய்வெடுக்கவில்லை என்பதை அவன் களைத்த தோற்றமே சொன்னது.
வந்த வேகத்தில் அவன் கையிலிருந்த காகிதங்களை விசிறி அடித்தான். மூலைக்கொன்றாகப் பறந்தது அவன் கையொப்பத்திற்காக அவளனுப்பிய விவாகரத்துப் பத்திரம்.
“என்ன இது?” நடு வீட்டில் நின்று சத்தம் போட்டான் கார்த்திக். சென்னை வெயிலோடு சேர்ந்து அவன் உள்ளக் கொதிப்பும் அந்த அமெரிக்காக் காரனை சிவப்பாக மாற்றி இருந்தது.
மடியிலிருந்த நகைகளை மறந்து பாட்டி எழுந்து நிற்க, தேவகியும் இவன் போட்ட சத்தத்தில் உள்ளேயிருந்து ஓடி வந்தார்.
“என்ன இதுன்னு கேட்டேன்?” அவன் குரல் இன்னும் ஓங்கி ஒலித்தது.
“ஏன்? பார்த்தாத் தெரியலை?” அவனைத் திடீரெனப் பார்த்த அதிர்ச்சி நீங்க… இப்போது மித்ரமதிக்கும் கோபம் வந்தது.
“மித்ரா!” கார்த்திக்கின் கர்ஜனையில் அந்த இடமே அதிர்ந்தது.
“என்ன பண்ணுறேன்னு தெரிஞ்சு தான் பண்ணுறியா?”
“உங்களோட வாழப் பிடிக்கலை. அந்த வாழ்க்கையைத் தொடரணும்னு ஆசைப்படலை.”
“ஏன்? இந்த நாலு மாசமும் இது தோணலையா? இப்போ என்ன புதுசா?”
“எப்போ என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியும். உங்களுக்கும் பிடிக்காத வாழ்க்கை தானே? எதுக்கு வீணான விவாதம்? பேசாம சைன் பண்ண வேண்டியது தானே?”
“எனக்குப் பிடிக்காத வாழ்க்கைன்னு நான் எப்போ சொன்னேன்?”
“ஏன்? என்னைப் பழிவாங்கத் தான் கல்யாணம் பண்ணினேன்னு நீங்க சொல்லலை?”
“சொன்னேன் தான். யாரு இல்லேன்னா? அதுக்காக… இந்த வாழ்க்கை பிடிக்கலைன்னு உங்கிட்ட நான் சொன்னேனா?”
“கார்த்திக்! என்ன பேசுறீங்க ன்னு புரிஞ்சு தான் பேசுறீங்களா?” இது தேவகி.
“ஆன்ட்டி ப்ளீஸ்… இது எனக்கும் மித்ராக்கும் நடுவில நடக்கிற விஷயம். இதுல நீங்க யாரும் தலையிடாதீங்க.”
“அது உங்க வீட்டுல இருக்கிற வரைக்கும் தான் கார்த்திக். எம் பொண்ணு உங்களை விட்டு என்னைத் தேடி வந்திருக்கா. இதுவே மித்ராவோட அப்பா இருந்திருந்தா உங்களுக்கு இப்படி நடக்கத் தைரியம் வந்திருக்குமா?”
“மித்ராவோட அப்பா இல்லை… தாத்தா இருந்திருந்தாலும் இது தான் நடந்திருக்கும். உங்க பொண்ணால என் தம்பி செத்துப் பொழைச்சிருக்கான். அது உங்களுக்குத் தெரியலையா ஆன்ட்டி?”
“உங்க தம்பி பண்ணின முட்டாள்த் தனத்துக்கு எம் பொண்ணு என்ன பண்ணுவா கார்த்திக்? இது என்ன புது நியாயமா இருக்கு?”
“புது நியாயமா? பழைய நியாயமா ன்னெல்லாம் எனக்குத் தெரியாது. இது தான் கார்த்திக்கோட நியாயம். அதுக்கு உங்க பொண்ணு பதில் சொல்லித் தான் ஆகணும்.” அவன் குரல் இப்போது ஆணித்தரமாக வந்தது.
“யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. பேப்பர்ஸ்ல சைனைப் போட்டுட்டு நீங்க போய்க்கிட்டே இருக்கலாம்.”
“எங்கிட்ட சைனை வாங்கிட்டு நீ என்ன பண்ணப்போறே?”
“அது என்னோட இஷ்டம். நான் என்ன வேணாப் பண்ணிட்டுப் போறேன். அது எதுக்கு உங்களுக்கு?”
“அப்படி நடுவில என்ன வேணாப் பண்ணுன்னு விட்டுட்டுப் போறதுக்காக நான் கல்யாணம் பண்ணலை.” இதை அவன் சொல்லும் போது மித்ரமதியின் முகத்தில் ஒரு ஏளனப் புன்னகை வந்தது.
“பழிவாங்கக் கல்யாணம் பண்ணினவர் இந்த டயலாக் எல்லாம் அடிக்கக் கூடாது.”
“பழிவாங்குறது மட்டும் தான் என்னோட நோக்கம் ன்னா கல்யாணம் தான் பண்ணணுங்கிற அவசியமே எனக்கில்லையே!”
“ஆ… அன்னைக்கு சொன்னீங்க இல்லை? எதுக்காக நீங்க உங்க மனசை மாத்திக்கிட்டீங்க ன்னு. பேசாம போயிடுங்க கார்த்திக். இல்லைன்னா இவங்க முன்னாடி நான் எதையாவது சொல்லிடப் போறேன்.” பல்லைக் கடித்துக் கொண்டு வார்த்தைகளைத் துப்பினாள் மித்ரமதி.
“ஏன்? இதுக்கு முன்னாடி நீ யார்கிட்டயும் என்னைப் பத்திப் பேசலையா? அது என்ன வேர்ட் அது? பஞ்சாயத்து. ஆங்… பஞ்சாயத்து வெக்கலியா? புதுசா நல்லவ மாதிரி நடிக்கிற. ஆமா! நீ அழகா இருந்த. உங்கூட வாழ்ந்து பார்க்கணும்னு தோணிச்சு. உனக்கும் எனக்குமா நாலு குழந்தைங்க பொறந்தா அவ்வளவு அழகா இருக்கும்னு தோணிச்சு. ஏன்? எங்கேயாவது ஹோட்டல் ரூமுக்குக் கூப்பிட்டேனா? இல்லையில்லை. கல்யாணந் தானே பண்ணிக்கிட்டேன். சொல்லேன். இதை இந்த ஊரைக் கூட்டியே சொல்லு. ஐ டோண்ட் கெயார். நான் என்ன பண்ணுறேன்னு எனக்குத் தெரியும் மித்ரா. அது நியாயமா… அநியாயமா… அதைப்பத்தி எல்லாம் எனக்குத் தெரியாது. அதை யார்கிட்டேயும் மறைக்கணுங்கிற அவசியமும் எனக்குக் கிடையாது. புரியுதா?”
“………………” அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“நீ ஸ்மார்ட் லேடி ன்னு எனக்குத் தெரியும். ஆனா அதை எங்கிட்டேயே காட்டாதே. இனிமேல் ஏதாவது பேப்பர்ஸ் என் பார்வையில பட்டுச்சு… அப்புறம் தெரியும் இந்தக் கார்த்திக் யாருன்னு உனக்கு. சீக்கிரமா வீட்டுக்கு வர்ற வழியைப் பாரு.”
மூச்சு விடாமல் பேசிபடி நகரப் போனவன் மீண்டும் நின்று திரும்பிப் பார்த்தான்.
“இந்த நடுரோட்டுல காரை நிப்பாட்டிட்டு ரிச்சர்ட்டோட தோள்ல சாஞ்சு அழுறதை முதல்ல நிப்பாட்டு. இல்லைன்னா அவனையும் தூக்குவேன் ஜாக்கிரதை!”
மிரட்டியவன் விடுவிடுவெனப் போய் விட்டான். மித்ரமதிக்கு ஆத்திரத்தில் கை, கால்கள் எல்லாம் நடுங்கியது.
“டாமிட்!” சத்தமாகவே சொன்னவள் ரூமிற்குள் போய்விட்டாள். சாவித்திரியும் தேவகியும் மட்டுமே மலைத்துப் போய் நின்றிருந்தார்கள்.
“என்ன அத்தை? அந்தப் பையன் அவ்வளவு பேசுறான். நீங்க எதுவுமே பேசாம நிக்கிறீங்க?” கேட்டபடியே அழுது விட்டார் தேவகி.
“அதான் நானே சும்மா நிக்குறேன் இல்லை. நீ எதுக்கு தேவகி வாயைத் தொறந்தே?”
“உங்க பையன் உயிரோட இருந்திருந்தா இப்படியெல்லாம் பேச விட்டிருப்பாரா?”
“எம் பையன் இல்லை… எம் புருஷனே உயிரோட இருந்திருந்தாலும் அவன் இப்படித்தான் பேசியிருப்பானாம். அவன் தான் சொன்னானே.”
“அதுக்காக? நாம எதுவும் கேக்கக் கூடாதா?”
“நாளைக்கே அதுங்க ரெண்டும் ஒன்னா சேந்திடும். அவன் பேசினதை அவ மறந்திடுவா. அவ பேசினதை அவனும் மன்னிச்சிடுவான். ஆனா… எம் மாமியார்க்காரி இப்படியெல்லாம் கேள்வி கேட்டான்னு காலத்துக்கும் சொல்லிக் காட்டுவான். இது தேவையா தேவகி உனக்கு?”
“ஒன்னா சேருவாங்களா அத்தை?”
“கண்டிப்பா! எம் பேத்தி அடம்புடிப்பா. ஆனாப் பையன் அத்தனை லேசில விடமாட்டான்.”
“எம் பொண்ணைக் கொடுமைப் படுத்தினா என்ன பண்ணுறது அத்தை?”
“ஏன் தேவகி? அந்தப் பையனைப் பார்த்தா கொடுமை பண்ணுறவன் மாதிரியா தெரியுது? அப்படியே பண்ணினாலும் உம் பொண்ணு பொறுத்துக்குவாளா? உனக்கே இது கொஞ்சம் ஓவராத் தெரியலை?”
“……………”
“அடேங்கப்பா! தப்பு முழுதும் அவன் பேர்ல இருக்கு. அப்படி இருந்தும் என்ன தெனாவட்டாப் பேசிட்டுப் போறான். இப்போப் புரியுது தேவகி எனக்கு.”
“என்ன புரியுது அத்தை?”
“இத்தனை நாளும் கல்யாணத்துக்குச் சம்மதிக்காத எம் பேத்தி இப்போ எப்படிச் சம்மதிச்சான்னு எனக்குப் புரியுது. ஃபோட்டோ ல பார்த்ததை விட பய நேர்ல நல்லாவே இருக்கான்.” சொன்ன மாமியாரை ஒரு தினுசாகப் பார்த்தார் தேவகி.
இங்கே நடப்பது என்ன? இவர் பேசிக் கொண்டிருப்பது என்ன?
“என்னடா… அத்தை லூசு மாதிரிப் பேசுறாங்களே ன்னு யோசிக்கிறியா தேவகி?”
“…………….”
“இத்தனை நாளும் என்ன நடக்குதுன்னு நமக்குத் தெரியலை. புருஷன் பொண்டாட்டிக்குள்ள பிரச்சினை நடக்குது. நாம மூக்கை நுழைச்சா அது நல்லா இருக்காது. அவங்களே ஒரு முடிவுக்கு வரட்டும்னு பேசாம இருந்தேன்.”
“…………….”
“ஆனா இப்போ அப்படியில்லை. உம் பொண்ணு விவாகரத்துப் பத்திரம் அனுப்பி இருக்கா. அதுவும் நமக்கு யாருக்கும் தெரியாம.” இதைச் சாவித்திரி சொல்லும் போது தேவகியின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தது.
“அழாத தேவகி. எல்லாம் நல்லபடியாவே நடக்கும். எனக்கு அந்தப் பத்மாவோட டெலிஃபோன் நம்பரை இப்போக் குடு. மீதியை நான் பார்த்துக்கிறேன். இந்தக் கார்த்திக் என்ன சுண்டைக்காப் பையன். உம் மாமனாரையே சமாளிச்ச ஆளு நானு. போ… போய்க் கவலைப் படாம வேலையைப் பாரு.”
“சரி அத்தை.” தேவகி நகர, பாட்டி நகைகளைப் பத்திரமாகப் பெட்டிக்குள் வைத்தார். முகத்தில் அத்தனை சிந்தனை தெரிந்தது.