Mathu…Mathi!-17

Mathu…Mathi!-17
மது…மதி! – 17
“மூன்றாவது ஒற்றுமையை கேளுங்களேன்” அவள் சற்று கம்மலான குரலில் ஆரம்பிக்க, அவன் அவளை அசட்டையாகப் பார்த்தான்.
“குழந்தை” அவள் குரல் இப்பொழுது அழுத்தமாக ஒலித்தது. “போதும். நிறுத்து.” அவன் ஆவேசமாக எழுந்து நிற்க, “நமக்கு பிரச்சனை வர காரணம் இது தான்.” அவள் இன்னும் அழுத்தமாக கூற, “மதுமதி” அவன் கர்ஜித்தான்.
“நீங்க கோபமாக உறுமினாலும், கத்தினாலும் சரி. இது தான் நிஜம்” அவள் நிதானமாக கூற, அவளை அடிக்கும் வேகம் அவனுள் எழுந்தது. அவன் தன் கைகளை இறுக மூடி அழுத்திக்கொண்டான்.
“ஒரு குடிகாரனோட என்னால் வாழ முடியாதுன்னு நான் நினச்சேன். ஆனால், அப்படி இல்லைன்னு என்னை உங்க அன்பு மாத்திருச்சு.” அவள் குரல் உடைய, “மதும்மா, நான் குடிகாரனே இல்லை” அவன் குரலில் விளக்கும் தன்மை இருந்தது.
“நீங்க பேச வேண்டாம்” அவள் ஆணையிட்டாள். “ஒரு குடிகாரனோட என்னால் வாழ முடியுது. ஆனால், என்னால் குழந்தை பெத்துக்கவே முடியாது.” அவள் ஆணித்தரமாக கூறினாள்.
“ஒரு குடிகாரனுக்கு பிறக்க போற குழந்தைக்கு ஆயிரம் பிரச்சனை வரும்.” அவள் பேச, ‘இல்லை…’ என்று அவன் மறுப்பு தெரிவிக்க எத்தனிக்க, “இல்லைன்னு நீங்க சொன்னால், அது அறிவீனம்” அவள் கூற, அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்ற அறியாமையில் இயலாமையோடு பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான்.
“அப்படியே குழந்தை நல்லபடியா பிறந்தாலும், உங்க கிட்ட போராடி போராடி நான் சீக்கிரம் செத்துருவேன்.” அவள் பேசி முடிக்குமுன் அவன் அவளை அறைந்திருந்தான்.
அவள் தன் கன்னத்தில் கை வைத்து, “அப்படி நான் சாகலைனாலும், சோசியல் ட்ரிங்க்ஸ் பண்றவன் இப்ப நல்லாருந்தாலும், நாற்பது, அம்பது வயசுக்கு மேல நல்லாருக்க வாய்ப்பே இல்லை” அவள் அவன் அடியை உதாசீன படுத்திவிட்டு மேலும் தொடர்ந்தாள்.
“ஏய், உன் கற்பனைக்கு ஒரு அளவே இல்லை?” அவன் மீண்டும் கைகளை ஒங்க, “இது தான் நான்காவது ஒற்றுமை” என்று அவன் கைகளை சுட்டி காட்டினாள்.
“குடிகாரன் குடிச்சிட்டு வந்து பொண்டாட்டியை அடிப்பான். நீங்களும், அதுக்கு விதி விலக்கில்லை” அவள் அடுக்க, அவன் அறையை விட்டு வெளியே செல்ல திரும்ப, “என்ன அதுக்குள்ள போறீங்க. இன்னும் ஆயிரம் ஒற்றுமை சொல்லுவேன்” அவள் வீராவேசமாக கூற, அவன் கதவை மடாரென்று அடைத்துக்கொண்டு வெளியே சென்றான்.
அவன் ஹால் சோபாவில் கால் நீட்டி படுக்க, “ஏதாவது சாப்பிட்டியா கெளதம்?” என்று லலிதா அவன் அருகே வந்தமர்ந்தார். “சாப்பிட்டேன் அம்மா” என்றான் எழுந்தமர்ந்து. “என்னப்பா சண்டையா?” அவர் கரிசனத்தோடு கேட்டார்.
‘ஆம்…’ என்பது போல், கெளதம் மேலும் கீழும் தலையசைத்தான்.
“கெளதம்” என்று அவர் தன்மையாக அழைத்தார். அவர் குரலை சரி செய்து கொண்டார். தன் தாய் பேச வருவதை அறிந்தவன் போல், “அம்மா…” என்றான் கண்டிப்பான குரலில்.
“இந்த அம்மா சொல்றதை கேட்க கூடாதா? அம்மாவை விட உன் மனைவி உசத்தியா?” என்று அவர் கேட்க, அவன் அமைதியாக அமர்ந்து, “சொல்லுங்க அம்மா” என்றான் பொறுமையாக.
“மதுமதி நல்லவ தான்” அவர் நிறுத்த, அவன் எதுவும் பேசவில்லை. “நல்லவ என்ன? ரொம்ப நல்லவ. நல்ல குணம். ஆனால், நம்ம குடும்பத்துக்கு செட் ஆக மாட்டா” அவர் கூற, அவன் மெளனமாக அமர்ந்திருந்தான்.
“இன்னைக்கு தான் வீட்டுக்கு வந்திருக்கா. இன்னைக்கே சண்டை போடணுமா உன்கிட்ட?” அவர் கேள்வியாக நிறுத்த, ‘இன்னைக்கு தான் வந்திருக்கா, நான் இன்னைக்கே குடிக்கணுமா?’ அவன் தன்னையே நொந்துக்கொண்டான்.
“அவ வேண்டாம்ப்பா” அவர் கூற, “அம்மா…” என்றான் வருத்தமாக, “மதுமதிக்கும் உனக்கும் பெரிய சண்டை எல்லாம் இல்லை. எப்பவாது சாப்பிடுற ட்ரிங்க்ஸை வைத்து தான் மதுமதி பிரச்சனை செய்யறா. இதெல்லாம் எனக்கும் தெரியும்” அவர் பேச, அவனிடம் மௌனம்.
“ஆனால், இதை வைத்து அவ குழந்தை விஷயத்தெல்லாம் கொண்டு வர்றது ரொம்ப ஓவர். அவ உனக்கு சரிப்பட்டு வரமாட்டா. மதுமதி பிரிந்து போனது, பிரிந்து போனதாகவே இருக்கட்டுமே” அவர் கூற, அவன் தன் கண்களை இறுக மூடினான்.
“அவளுக்கு ஏதோ ஆபத்து. நீ உதவி பண்ணின. நம்ம வீட்டுக்கும் கூட்டிட்டு வந்துட்ட. அது சரி. ஆனால், அவளை சீக்கிரம் இங்கிருந்து அனுப்பிடு.” அவர் பேசிக்கொண்டே போக அவன் பதிலேதும் பேசவில்லை. ‘தான் சொல்வதும் தன் மகனின் மனதில் பதிகிறது’ என்ற திருப்தி அவர் முகத்தில்.
“நாம அவளுக்கு தேவையான பணத்தை கொடுத்திருவோம். அவ வாழ வீடு எல்லாம் கொடுத்திருவோம். அவளுக்கு சமூகசேவையில் தான் விருப்பம். அவ அதை செய்யட்டும். அவளுக்கு குடும்பம் குழந்தை குட்டி எல்லாம் விருப்பமே கிடையாது. அதை நேரடியா சொல்லாம, உன் சோசியல் ட்ரிங்கிங்கை காரணம் காட்டுறா. நீயும், எத்தனை தடவை தான் அவ கிட்ட சொல்லி புரிய வைப்ப?” அவர் கேள்வியாக நிறுத்த, அவன் பதில் பேச முடியாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.
‘ம்… நானும் தான் அவளுக்கு எத்தனை முறை சொல்லி புரிய வைக்க முயன்றிருப்பேன்’ என்ற சலிப்பு அவனிடம்.
“சோசியல் ட்ரிங்கிங் அதெல்லாம் நம்ம ஸ்டேட்ஸில் சாதாரணம். அதில் என்ன தப்பு இருக்கு? ஒரு கெட் டுகெதர் அப்படின்னா, நாம்ம எல்லாரும் ட்ரிங்க்ஸ் பண்றது சகஜம் தான். நாம மாட்டோமுன்னு சொன்னா தான் அசிங்கம். உன் அப்பா ட்ரிங்க்ஸ் பண்ணலியா? அவர் உடலுக்கு என்ன? இப்பவும் ஹீரோ மாதிரி இருக்கார். உன் மனைவிக்கு இதெல்லாம் புரியாது” அவர் கூற, ‘என்னால் புரிய வைக்க முடியும்’ என்ற எண்ணம் அவனுக்கு தோன்றினாலும், அதை நம்பிக்கையோடு சொல்ல முடியாமல் தடுமாறினான்.
அவர் எழுந்து கொண்டார். மகன் முகத்தில் இருந்த குழப்பத்தில், குடும்பத்திற்கு சாதகமான முடிவை எடுப்பான் என்று அவர் நம்பினார். அவர் எழுந்து தன் மகனின் தலை கோதி,”போய் படுப்பா. உன் முகம் சோர்வா இருக்கு” என்று அவர் கன அக்கறையோடு கூற, சரேலென்று எழும்பினான் கெளதம்.
‘சோர்வா…’ என்ற சொல்லில் அவனுக்கு மதுமதியின் முகமே கண்முன் வந்தது. “அம்மா, மதுமதி சாப்பிட்டாளா?” என்றான் அத்தனையும் விடுத்து. அவர் தன் மகனை புரியாமல் பார்க்க, “இல்லை அம்மா, நான் வரும் பொழுது மதுமதி முகம் ரொம்ப சோர்வா இருந்தது. அவள் சாப்பிட்டாளா?” என்று அவன் பதட்டமாக கேட்டான்.
“அவளுக்கு சாப்பாடு கொடுக்காமலா நாங்க சாப்பிட்டிருப்போம்? எல்லாம் அவ ரூமுக்கு அனுப்பிட்டோம்” அவர் சிடுசிடுக்க, “நீங்க அனுப்பிருப்பீங்க. அவ சாப்பிட்டாளான்னு பார்த்தீங்களா?” அவன் கேட்டு கொண்டே, அவர்கள் அறை நோக்கி படியேற, “சாப்பாட்டை அனுப்பத்தான் முடியும். ஊட்டியா விட முடியும்.” அவர் புலம்பல் காற்றோடு தான் போனது. அதை கேட்க, கெளதம் அங்கு இல்லை.
‘நான் சொல்றதெல்லாம் கேட்டுக்குற மாதிரி சும்மா உட்கார்ந்திருந்தான். இப்ப என்னன்னு பார்த்தா, மதுமதின்னு அவளை தேடி போய்ட்டான்.’ அவர் சோகமாக சிந்திக்க, அவனோ மதுமதியை தேடி அவர்கள் அறைக்கு சென்றிருந்தான்.
அங்கு மூடி வைத்திருந்த பாத்திரங்களைப் பார்த்தான். “மதுமதி சாப்பிடலியா?” அவன் அவர்களுக்கு இடையே நடந்த அத்தனை வாக்குவாதங்களையும் ஒதுக்கி, கேள்வியாக அவன் முன் நின்றான்.
“அதை இப்ப எதுக்கு கேட்கறீங்க? ஒரேடியா நான் பசியில் செத்த பிறகு காலையில் கேட்க வேண்டியது தானே?” அவள் சிடுசிடுக்க, அவன் சமையலறை நோக்கி சென்றான்.
சில நிமிடங்களில் திரும்பி வந்த அவன், “சில்லுனு பாதாம் பால். பெரிய பாட்டில்ன்னு நினைக்காத. அதெல்லாம் குடிக்க முடியும்” அவன் பாட்டிலை திறந்து கொடுக்க, “இதை குடிக்க முடியாதுனு யார் சொன்னா? எனக்கு இன்னொரு பாட்டில் வேணும். எடுத்துட்டு வாங்க” அவனிடம் கூறிவிட்டு, அதை குடிக்க ஆரம்பித்தாள்.
அவன் கொடுத்த மற்றோரு பாட்டிலையும் குடித்துவிட்டு சற்று தெம்பாக அமர்ந்தாள். அவள் முகத்தில் தெளிவு இருந்தது. “இப்ப பேசுங்க. பசியில் என்னால் உங்க கிட்ட நல்லாவே சண்டை போட முடியலை” அவள் கூற, “ஓ, தெம்பில்லாமல் என் கிட்ட சுமாரா சண்டை போட்டதா நினைப்பா?” என்று அவன் கேட்க, “ம்…” அவள் மேலும் கீழும் தலையசைத்தாள்.
“ஏன் சாப்பிடலை?” அவன் கேட்க, அவள் நடந்ததை கூறினாள். அவன் இப்பொழுது பெருங்குரலில் சிரித்தான். “என்ன என் வீட்டில் இருக்க மாட்டேன்னு சொல்றதுக்கு பதிலா, என்னை இப்படி எல்லாம் மிரட்டி பார்க்கலாமான்னு திட்டமா? இப்படி எல்லாம் கதை விட்டுட்டு, சாப்பிடாம இருந்தெல்லாம் நீ என்னை விட்டுட்டு போக முடியாது” அவன் அவள் தலையில் செல்லமாக தட்ட,
“நான் மரமண்டை இல்லை. நீங்க தான் மரமண்டை. இப்ப குடிச்சிருக்கீங்கள்ல? உங்க மூளை சுமாரா தான் வேலை செய்யும். படுத்து தூங்கிட்டு, காலையில் யோசிங்க. உங்க மூளை நல்லா வேலை செய்யும்.” அவள் கோபமாக படுத்துவிட, அவன் அவர்கள் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தான். அதீத சோர்வில் மெத்தையில் படுத்தவன் கண்ணயர்ந்துவிட்டான்.
மறுநாள் காலையில்,
மருந்தின் அசதியில் மதுமதி அயர்வாக தூங்கி கொண்டிருந்தாள். கெளதம் எழுந்து அமர்ந்தான். அவன் தலை விண்விண்ணென்று வலித்தது.
“ஹேங் ஓவர்” அவன் இதழ்கள் முணுமுணுத்தன. ‘இதைச் சொன்னா அவ்வளவு தான் மது ருத்திர தாண்டவம் ஆடிருவா. இது தான் குடி. இது தான் போதைன்னு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிருவா. முதலில் குளிக்கணும்’ எண்ணியப்படி குளியலறை நோக்கி சென்றான்.
தன் குளியலை முடித்துவிட்டு, ஜன்னல் பக்கம் வந்தான். நேற்றிரவு மதுமதி சொன்னதை அசைப்போட ஆரம்பித்தான். ஜன்னலில் பால் சிந்தியிருந்தது. சமையலறை நோக்கி சென்றான். அங்கு ரம்யா இருக்க, “நேத்து மதுமதிக்கு பால் நீ தான் கொண்டு போனியா?” என்று கேட்டான் கெளதம்.
“ஆமா அத்தான். பால் கொடுத்திட்டு பேசிட்டு இருந்தேன். அப்பறம் குடிக்கறேன்னு மதுமதி சொன்னாங்க.” அவள் கூற, “பாலை யார் கலந்தாங்க?” அவன் கேட்க, “வழக்கம் போல் வேலை செய்யற அம்மா தான். அவங்க தான் கொடுக்க போனாங்க. ஆனால், நான் தான் மதுமதியை பார்த்து பேசிட்டு போகலாம்முனு கொண்டு போனேன்” ரம்யா கூற, அவன் தலையசைத்துக்கொண்டான்.
“ஏன் உன் பொண்டாடி பாலில் சீனி பத்தலைன்னு சொன்னாளா?” என்று ரம்யாவின் தாய் பார்வதி கேட்க, “இல்லை அத்தை, சீனி அதிகமா இருக்குனு சொன்னா. அது தான் கேட்டுகிட்டு இருக்கேன்” அவன் கூறிவிட்டு மடமடவென்று செல்ல, ‘இவளுக்கெல்லாம் சீனியா போடணும்? விஷம் தான் கலக்கணும்’ என்று எண்ணியபடி, தலையில் அடித்துக் கொண்டு வேறுபக்கம் சென்றார் பார்வதி.
கெளதம் ஜன்னலின் வெளி பக்கம் சென்றான். அங்கு ஒருவன் தோட்ட வேலை பார்த்துக் கொண்டிருக்க, “பூனை, எலி எதுவும் இங்க செத்து போச்சா? ஏதோ
நாற்றம் வருதே?” என்று வினவினான் கெளதம். “இல்லங்கையா, நான் இங்கதான் வேலை பார்க்குறேன் அப்படி எதுவும் இல்லையே” என்றான்.
“நேத்து?” என்று கௌதம் கேட்க, “நேத்தும் இங்க தான் ஐயா இருந்தேன்” என்று கூற கெளதம் தலையசைத்துக் கொண்டு, அவர்கள் அறை நோக்கி நடந்தான்.
அவர்கள் அறைக்கு போகும் பொழுது, அவளுக்கு தேவையான சில பதப்படுத்தப்பட்ட உணவையும், பழங்களையும் எடுத்துச் சென்றான். மதுமதி, எழுந்து குளித்துவிட்டு அமர்ந்திருந்தாள்.
“நீ தனியா கஷ்டப்பட்டு எல்லாம் செய்தியா? நான் வந்திருக்க மாட்டேனா?” அவன் சிடுசிடுத்தான். “நீங்க எந்த பாரில் எப்ப இருப்பீங்கன்னு எனக்கு என்ன தெரியும்?” அவளும் சிடுசிடுக்க, “ஆமா, நான் மொடா குடிகாரன் பாரு. எப்பப்பாரு பாரு பப்புன்னு திரிஞ்சிக்கிட்டு இருக்கேன்” அவன் எரிந்து விழுந்தான்.
“நம்ம, ரூம்க்கு பிரிட்ஜும் அடுப்பும் கொண்டு வர சொல்லிருக்கேன். நான் இல்லாத நேரத்தில் நீ இங்கயே சாப்பிடு” அவன் ஒட்டுதல் இல்லாத குரலில் கூற, “நான் சொன்னது சரி தானே? என்னை யாரோ கொல்ல பார்க்குறது நிஜம் தானே?” அவள் படபடப்பாக கேட்டாள்.
“அப்படி எல்லாம் இல்லை. ஒன்னு அது உன் பிரமையா இருக்கணும். இல்லை, நீ பொய் சொல்லணும். இருந்தாலும், உனக்கெதுக்கு வீண் சந்தேகம். மனக்குழப்பம். நீ பசியோட இருக்க வேண்டாமுன்னு கொண்டு வந்தேன்.” அவன் கூற, மதுமதியின் கண்கள் சுருங்கியது.
‘இவங்க என்னை நம்பலையா? வாய்ப்பில்லையே. நம்பாமல் இருக்க மாட்டங்களே’ என்று அவள் அவனை கூர்மையாக பார்க்க, ‘இவளை நம்பாமல் இருக்க முடியலை. ஆனால், எப்படி நடந்திருக்கும். நடந்ததற்கு சாட்சின்னு எதுமே இல்லை. ரம்யா செய்திருக்க மாட்டா. வேலைக்கார அம்மாவும் செய்ய வாய்ப்பில்லை’ அவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.
அதே நேரம், தேவராஜின் வீட்டில் சரண்யா குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள். ‘மதுமதி உயிருக்கு ஆபத்து. அவங்க வீட்டில் யாரோ அதுக்கு உதவி பண்ணறாங்க. இதை எல்லாம் எப்படி கெளதம் கிட்ட சொல்றது?’ என்று துடியாய் துடித்து கொண்டிருந்தாள்.
மது… மதி! வருவாள்…