Mathu…Mathi!-19 (Prefinal Episode)

mathu...mathi!_Coverpic-6e136261

Mathu…Mathi!-19 (Prefinal Episode)

மது…மதி! – 19

மழைநீரில் நனைந்த கெளதம், தன் தாய் தந்தையின் அழைப்பில் உள்ளே வந்தான். அவர்கள் இருவரும் இவனிடம் ஏதோ பேச முற்பட, அவன் அவர்களுக்கு பதில் கூறாமல் நின்று கொண்டிருந்தான்.

‘இது ரம்யா வேலையா இருக்காது.’ அவன் ரம்யாவை முழுமையாக நம்பினான். அவனுக்கு ரம்யாவை நன்றாக தெரியும். அவள் மனதில் அத்தனை பெரிய எண்ணம் எல்லாம் இவன் மேல்  இல்லை என்று அவளை ஒதுக்கினான்.

‘ஆனால், பார்வதி அத்தை?’ அவன் சந்தேக வட்டத்தில் அவர் வந்து விழுந்தார். ‘பார்வதி அத்தைக்கு அத்தனை ஆள் பலம் உண்டா?’ அடுத்த கேள்வியும் உடனே வந்து விழுந்தது. ‘அம்மா, அப்பா?’ இருவர் மீதும் அவனுக்கு ஒரு சேர சந்தேகம் வந்து விழுந்தது. ‘அம்மாவுக்கு தெரியாமல் அப்பாவோ, அப்பாவுக்கு தெரியாமல் அம்மாவோ இதை செய்திருக்க முடியுமா?’ அவன் மறுப்பாக தலையசைத்தான்.

‘யாராக இருக்கும்? இவர்கள் பங்கு என்னவாக இருக்கும்? தேவராஜின் பங்கு என்ன? கார்மேகத்தின் பங்கு என்ன?’ அவன் கைகளை இறுக மூடி சுவரில் குத்தினான்.

“ஏண்டா, மழையில் நனைஞ்சிட்டு அப்படியே வந்து நிக்குற? எல்லாம் அவ படுத்துற பாடு” லலிதா சீற, அவன் தன் கண்களை திறந்தான். “அவ வேண்டாம் வெட்டி விடுன்னு சொன்னா…” அவன் தாயும் தந்தையும் ஒரு சேர கூற, அவன் கண்கள் அவர்களை பார்த்த பார்வையில் இருவரும் கப்சிப்பென்று வாயை மூடி கொண்டனர்.

“மதுமதி வேண்டாமுன்னு இனி யாரும் சொல்ல கூடாது. சொன்னால், இந்த வீட்டில் என்ன நடக்குமுன்னு எனக்கே தெரியாது” அவன் தன் ஆள் காட்டி விரலை உயர்த்தி, அவர்களை எச்சரிக்க, “மழையில் எங்க போய்ட்டிங்க? இவ்வளவு நேரமாகுது?” என்று அவள் நான்கு படியிறங்க, “இறங்காத அங்கையே நில்” என்றான் அதிகாரமாக.

கால் வலியால் அவளும் அங்கையே நிற்க, அவன் வேகமாக படியேறி அவளை அலேக்காக தூக்கிக்கொண்டு அவர்கள் அறைக்குள் நுழைந்து கதவை வேகமாக அடைத்தான். “என்னை எதுக்கு இப்படி பொசுக் பொசுக்குன்னு தூக்கறீங்க?” அவன் அவளிடமிருந்து விலகி நின்றாள்.

“உங்களோட சேர்ந்து நானும் ஈரமாகிட்டேன்” அவள் தண்ணீரை தட்டிவிட, அவன் அவளை இழுத்து தன்னோடு அணைத்து மீண்டும் ஈரமாக்கினான். அவன் அவளை பின்னோடு அணைத்திருக்க, “என்ன ஆச்சு உங்களுக்கு?” அவள் முகம் திருப்பி, அவன் முகம் பார்த்து கேட்டாள். அவன் கண்கள் கலங்கி அவள் முதுகை நனைக்க, குளிர் நீருக்கு பதிலாக சூடான நீர் தன் தேகத்தின் மீது பட்டதும் அவள் பதறினாள்.

“என்ன ஆச்சு? நான் ரொம்ப திட்டுறேனா? நான் இனி திட்டலை. உங்களை திட்டமா இருக்க, நான் உங்களை விட்டுட்டு போயிடுறேன். நீங்க இப்படி எல்லாம் ஃபீல் பண்ண வேண்டாம்” அவள் கூற, அவன் அவளை திருப்பி அவள் விழிகளை ஆழமாக பார்த்தான்.

“எனக்கு ஒரு சத்தியம் பண்ணுவியா?” அவன் கைகளை நீட்டினான். “என்ன சத்தியம்?” அவள் கேட்க, “உனக்கும் எனக்கும் என்ன பிரச்சனை?” அவன் கேட்க, அவளிடம் மௌனம்.

“பெருசா ஒண்ணுமில்லை தானே?” அவன் குரல், அவன் கேட்ட விதம் அவன் அருகாமை என அனைத்திலும் தன்னை இழந்து, “பெருசா ஒண்ணுமில்லை” என்றாள் பட்டென்று. அவன் முகத்தில் புன்னகை. அந்த புன்னகையில் மயங்கிய மனதை சட்டென்று பிடிமானத்தில் கொண்டு வந்து சுயநினைவு வந்தவளாக “பெரிய பிரச்சனை தான்.” என்றாள் கறாராக.

“அப்படி என்ன பிரச்சனை?” என்று அவன் வினவ, “நீங்க குடிக்கறீங்க” அவன் ஆரம்பிக்க, “அதை விடு. அதை தவிர வேற சொல்லு.  அதை நாம அப்புறம் பேசுவோம்” என்றான் அவன் சமாதானமாக. “குடிகார அப்பனுக்கு பிள்ளை வேண்டாம். அதை சொன்னா உங்க வீட்டில் எல்லாரும் என்னை திட்டுவாங்க. என்னை வெளிய போக சொல்லுவாங்க. நீங்களும் அவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவீங்க” அவள் கூற, அவன் எதுவும் பேசவில்லை.

‘இதை எல்லாம் காரணம் காட்டி மதுமதி வெளியே சென்றதை நான் தடுக்காமல் இருந்திருக்க கூடாது.’ அவன் மனம் இப்பொழுது வருந்தியது.

“மதும்மா, நீ என்னை விட்டு போகணுமுன்னு நான் நினைக்கலை. ஆனால், சின்ன பிரிவு உனக்கு என் அன்பை புரிய வைக்குமுன்னு நினைச்சேன். நீ என்னை தேடி வருவன்னு நினைச்சேன். ஆனால், இப்படி ஊரு பிரச்சனை எல்லாம் இழுத்திட்டு வருவன்னு நான் நினைக்கலை” அவன் கூற, அவளிடம் மௌனம்.

“உன் எல்லா பிரச்சனைக்கும் காரணம் ஒன்னு தான். என் சோசியல் ட்ரிங்கிங் அப்படித்தானே?” அவன் கேட்க, “இல்லை குடி” என்று அவள் அழுத்தமாக கூற, “அதை உனக்கு புரிய வைக்க வேண்டியது என் பொறுப்பு. நீ என்னை ஏத்துப்ப” அவன் கூற, அவள் மறுப்பு தெரிவிக்க வாயை திறக்க, “ப்ளீஸ்…” என்று அவளிடம் வாதிட வேண்டாம் என்று கெஞ்சினான்.

அவன் முகவாட்டத்தில், அவன் நனைந்திருந்த கோலத்தில் அவளும் தன் வாயை இறுக மூடிக்கொண்டாள்.

“சத்தியம்…” என்று அவன் கைகளை நீட்ட, “என்னனு நீங்க சொல்லல்வே இல்லையே” என்று அவள் தன் கைகளை இறுக மூடிக்கொண்டாள்.

“எந்த சூழ்நிலையிலும் எதுக்காகவும் நீ என்னை பிரிய மாட்டேன்னு” அவன் கைகளை நீட்ட, “டிரஸ் மாத்துங்க. இப்படி ஈரத்தில் நின்னா, உடம்பு சரி இல்லாம போய்டும்” அவனுக்கு தலை துவட்ட, அவள் துண்டை எடுக்க, அவள் மழுப்பலுக்கு மதிப்பு கொடுத்து அவன் உடை மாற்றிவிட்டு வந்து மெத்தையில் அமர்ந்தான்.

அவனுக்கு தலையை துவட்டியபடியே, “தேவராஜை என்ன பண்ணீங்க?” என்று கேட்க, “ஏய், என்ன விளையாடுறியா?” அவன் அவள் கைகளை பிடித்தான்.

“தேவராஜ் ஒரு பெரிய தில்லாலங்கடி. அவன் காணுமுன்னா நம்புற மாதிரியா இருக்கு?” என்று மதுமதி கேட்க, “கெளதம்… கெளதம்…”என்று வீராவேசமாக கத்திக் கொண்டு சரண்யா வந்தாள்.

“என் புருஷனை எங்க?” என்று அவள் கோபமாக கேட்க, “என் கிட்ட கேட்டா எப்படி சரண்யா? அவன் உன்னை ஹவுஸ் அர்ரெஸ்ட்டில் வைத்திருந்தான். அவனை காணுமுன்னு தெரிஞ்சபிறகு தான் நீயே வெளிய வர முடிஞ்சிருக்கு. இப்படி உன் புருஷன் எத்தனை பேருக்கு என்னென்ன பண்ணானோ?” கெளதம் சற்று அசட்டையாக கூற,

“கெளதம்” என்று சீறினாள் சரண்யா. “உனக்கு தான் உன் புருஷன் வேண்டாமே? நீ எதுக்கு இப்படி துடிக்கிற?” என்று கேட்டான் கெளதம். “நான் அவர் வேண்டாமுன்னு ஒரு நாளும் நினைக்கலை. அவர் திருந்தணுமுன்னு நினைச்சேன் அவ்வுளவு தான்.” சரண்யா கடுப்பாக கூற, “அதுக்கு கூட இருந்திருக்கணும். விட்டுட்டு போக கூடாது.” சற்று அழுத்தமாக கூறினான்.

“உன்னை, அப்புறம் கவனிசிக்குறேன். நான் அவர் சபந்தப்பட்ட எல்லாரையும் வெளிய கொண்டு வரேன்” சரண்யா கோபமாக வெளியே சென்றாள்.

“சரண்யா பாவம்” கௌதமின் தாயும் தந்தையும் பதட்டமடைய, “சில நேரம் அறுவை சிகிச்சை நடந்துதான் ஆகணும். சும்மா சும்மா எடுத்ததுக்கெல்லாம், இவ தேவராஜை விட்டுட்டு போறது தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம். தேடட்டும்.” அவன் கூற, “நீ அவளுக்கு துணையா…” என்று லலிதா ஆரம்பிக்க, “அம்மா…” என்றான் அதட்டலாக.

“நான் ஒரு வக்கீல். இப்படி எல்லா விஷயத்துலையும் மூக்கை நுழைக்க முடியாது.” கூறிவிட்டு மடமடவென்று வெளியே சென்றான்.

இரண்டு நாட்கள் அதன் போக்கில் நகர, தேவராஜ் இருக்கும் இடத்தை மட்டும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மூன்றாம் நாள் அதிகாலையில், கௌதமின் அலைபேசி ஒலித்தது.

       “ஹல்லோ…” என்றான் கெளதம். “தேவராஜ் எங்க?” எதிர்முனை உறுமியது.

“என் கிட்ட கேட்டா என்ன அர்த்தம்? ஒன்னு போலீஸ் கிட்ட கேட்கணும். இல்லை கடத்தினவன் கிட்ட கேட்கணும். இல்லை, அவன் யார் கிட்ட அடியாள் வேலை பார்த்தானோ அங்க கேட்கணும். அட்வகேட்  கிட்ட கேட்டா என்ன அர்த்தம்?” என்றான் அசட்டையாக.

“கெளதம் நீ யாருன்னு எனக்கு தெரியும்.” என்று அவர் கூற, “ஓ அப்படியா?” என்றான். “நான் யாருனு உனக்கு தெரியும்” அவர் கூற, “இல்லையே, எனக்கு நீங்க  யாருனு தெரியலையே. நீங்க சொன்னா தெரிஞ்சிக்குறேன்” என்றான் பவ்யமாக.

“என்ன நான் சொல்றதை அப்படியே ரெகார்ட் பண்ணலாமுன்னு பார்க்குறியா? முட்டாப்பயலே” என்றார் அவர்.

“ஐயையோ, ரெகார்ட் பண்ற அளவுக்கு நீங்க என்ன தப்பு பண்ணீங்க?” என்று வினவினான் கெளதம்.

“என்ன பொண்டாட்டி கூட உல்லாசமா இருக்கியா?” என்று எதிர்முனை கேட்க, “அதெல்லாம் உங்க கிட்ட எப்படி சொல்றது?” என்று கேலியாக கேட்டான் கெளதம். “உன் பொண்டாட்டி தான்டா எல்லா பிரச்சனைக்கும் காரணம். அவளை தூக்கி, அவளை அசிங்கப்படுத்தி…” என்று எதிர்முனை ஆரம்பிக்க, “மூடுறா நாயே” என்றான் கெளதம்.

“மவனே, அவ என்னை விட்டு தனியா இருக்க போய் விளையாடி பார்த்துடீங்க.  இப்ப, என் பொண்டாட்டி என் கூட இருக்கா. மவனே என்னை சீண்டி பார்க்கனுமுனு நினைசீங்க குடலை உருவி மாலையா போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன்.” கௌதம் சீற எதிர்முனை அமைதியானது.

“என்ன கார்மேகம், அள்ளுவிடுதா? உன் ஒயின் ஷாப் பத்தியும் தெரியும். தேவராஜ் அந்த விஷயத்தில் உன் கிட்ட மாட்டிகிட்டான்னு தெரியும். அவன் தோட்டா, நீ தான் எய்தவன்னு எனக்கு தெரியும். சின்ன சந்தேகம் இருந்தது. முழுசா கண்டுபிடிச்சிட்டேன். நீ குழப்ப முடியாத ஆதாரம் வேணுமுன்னு தான் உட்காந்திருக்கேன். இப்ப சொல்லு தேவராஜ் எங்க?” என்று கேட்டான் கெளதம்.

“தேவராஜ் பத்தி எனக்கு தெரியாது. எல்லாரும் எனக்கு நெருக்கடி கொடுக்குறாங்க. எனக்கு தெரியாது” என்றார் கார்மேகம். “எனக்கு எல்லாம் தெரியும். சொல்லறா” என்று கெளதம் எகிற, “கிழிச்ச… உனக்கு என்ன ம** தெரியும்?” என்று இப்பொழுது, கார்மேகம் பெருங்குரலில் சிரித்தான்.

அவன் சிரிப்பில் கெளதம் சற்று மௌனம் கொண்டான்.

“என்ன அமைதியாகிடீங்க வக்கீல் சார்?” என்று மீண்டும் சிரித்தான் கார்மேகம். “…” கௌதமின் நெற்றி சுருங்க, “உங்க அப்பா பண்ண வேலையே உனக்கு தெரியாது” அவர் சிரித்துக் கொண்டே அலைபேசி பேச்சை துண்டித்தார்.

‘என் சாம்ராஜ்யம் அழியுமுன்னா, உனக்கு உன் குடும்பமாவது அழியனும்’ கார்மேகத்தின் கண்களில் கொலைவெறி தாண்டவமாடியது.

தூக்கத்திலிருந்து எழுந்த மதுமதி, “என்ன ஆச்சு?” என்று கேட்க, “ஒண்ணுமில்லை, எனக்கு இன்னைக்கு நிறைய வேலை இருக்கு. ராத்திரி தான் வருவேன்” கூறிவிட்டு மடமடவென்று வெளியே சென்று எங்கெங்கோ அலைந்தான்.  அவன் வீடு திரும்பும் பொழுது மணி, ஒன்பதை தாண்டியிருந்தது.

அவன் சோபாவில் சோர்வாக அமர, அவன் எதிரே வந்தமர்ந்தார் லலிதா.

“அம்மா, அப்பா எங்க?”  என்று அவன் கேட்க, “அப்பா ரூமில்…” என்று லலிதா வாக்கியத்தை முடிக்குமுன் அவன் தன் தந்தையின் அறைக்குள் சென்றிந்தான். அந்த பிரமாண்ட அறைக்குள், ஒரு அழகான கண்ணாடி கிண்ணத்தில் மது அருந்திக்கொண்டிருந்தார் பாலகிருஷ்ணன்.

“ஹலோ மை ஸன்” என்றார். அவன் எதுவும் பேசவில்லை. அவர் எதிரே அமர்ந்தான். லலிதாவுக்கு ஏதோ சந்தேகமாக இருக்க, அவரும் பின்னோடே அவர்கள் அறைக்குள் சென்றார்.

“கோப்பையில் என் குடியிருப்பு. கோலமயில் என் உடனிருப்பு” என்றார் கேலி போல். “கோல மயில் உங்க அம்மா தான்” என்று கூறி, மதுவின் போதையில் அவர் கிண்டல் பேச, “உங்க அப்பா இப்படி தான். ட்ரிங்க்ஸ் பண்ணிட்டா இப்படி தான் கண்டபடி ரொமான்ஸ் பண்ணுவார்” லலிதாவின் முகத்தில் வெட்கம். இந்த கேலி பேச்செல்லாம் சகஜம் என்றாலும், கௌதமால் இன்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“ஒரு பெக்?” என்றார் தன் மகனை பார்த்து, அவன் தன்னை நிதானிக்க நேரம் எடுத்துக் கொண்டான்.  சம்மதமாக தலையசைத்தான். அவர் கொடுக்க, அதை மடமடவென்று அருந்தினான். கௌதமின் குரல் கேட்டு வந்த மதுமதி, இந்த காட்சியை பார்த்ததும் வெறுத்துப் போனாள். அவர்கள் அறை நோக்கி திரும்பி நடக்க ஆரம்பித்தாள். இரண்டு மூன்று நாளில் அவள் கால் சற்று குணமாகிருந்தது.

‘இவங்க பெரிய குடும்பம். நான் இவங்களுக்கு தகுதி இல்லாதவள்ன்னு பேச்சு. அப்பா ஊத்தி கொடுக்க, மகன் குடிக்கறது கெளரவம். அதுவும் வீட்டிலே…  ச்சீ…’ முகம் சுளித்து அவர்கள் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

கெளதம் முதல் கோப்பையை குடித்துவிட்டு, அடுத்த கோப்பையை ஊற்றி அருந்தினான். “என்ன ஆச்சு கெளதம்?” என்று அவர் கேட்க, “அதை நான் கேட்கணும்?” என்றான் அழுத்தம் திருத்தமாக.

“என்ன ஆச்சு உங்களுக்கு? நீங்க இப்படி எல்லாம் இல்லையே!” என்றான் பூடகமாக. அவர் நெற்றி சுருங்க, “என்ன யோசிக்கிறீங்க? இவன் கிட்ட எதை சொல்லலாம்? எதை மறைக்கலாமுன்னு யோசிக்கறீங்களா?” என்று அவன் கேட்க, “நீ எதை பத்தி கேட்குற கெளதம்?” என்றார் நிதானமாக.

“நான் எதை பத்தி கேட்குறேன்னு உங்களுக்கு தெரியலை?” அவன் குரல் உயர, “நீ வெளிய தான் அட்வகேட். வீட்டில் இல்லை” என்றார் லலிதா பொறுமையாக. “வீட்டில் குற்றவாளி இருந்தால், நான் எங்க வேணுமினாலும் அட்வகேட்டா மாறுவேன்” அவன் எழுந்து நின்று கர்ஜிக்க, “என்ன விஷயம்?” என்று அவர் மீண்டும் தொடங்க, “தெரியாத மாதிரியே பேசாதீங்க அப்பா. மது…மதி!” என்று அவன் ஆரம்பிக்க, அவர் நெற்றியில் வியர்வை துளிகள்.

தன் நெற்றியை துடைத்தார். ‘தன் மகனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டதா? எப்படி? எப்படி?’ என்ற கேள்வியோடு அவர் முதுகு பக்கம் வியர்த்தது. லலிதா எதுவும் புரியாமல் பார்க்க, “சொல்லுங்க அப்பா. உங்க பங்கு என்னன்னு சொல்லுங்க?” அவன் அங்கிருந்த மேஜையை வேகமாக தட்ட, அது விலகி செல்ல பாலகிருஷ்ணன் நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்து விழுந்தார்.

மது… மதி! வருவாள்…

Leave a Reply

error: Content is protected !!