Mayam 11

 

இருள் சூழ்ந்த பின்பும் தான் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தாள் அனுஸ்ரீ.

எவ்வளவு நேரமாக அந்த இடத்திலேயே அவள் நின்றாள் என்பது அவளுக்கு தெரியாது.

தன் கையில் இருந்த தொலைபேசி ஒலிக்க அந்த சத்தத்திலேயே தன் சுய நினைவுக்கு வந்தவள் அப்போது தான் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தாள்.

“அய்யோ! இவ்வளவு இருட்டு ஆனதற்கு அப்புறமும் இப்படியே நின்னுட்டு இருந்துருக்கேனே” அவசரமாக அவள் வீட்டிற்குள் ஓடி செல்ல மறுபடியும் அவளது கையில் இருந்த தொலைபேசி ஒலித்து என்னையும் கொஞ்சம் பாரேன் என்பது போல அவளை அழைத்தது.

புதிய எண்ணாக இருக்கவும் சிறிது நேரம் யோசித்தவள் பின்னர் போனை அட்டன்ட் செய்து தன் காதில் வைத்தாள்.

“ஹலோ தேவியாரே! எப்படி இருக்கீங்க?” ரிஷியின் குரல் கேட்டதுமே வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறப்பது போல இருக்க சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டவள் வேகமாக தன்னறைக்குள் வந்து அடைந்து கொண்டாள்.

“ஹலோ அனு! லைன்ல இருக்கியா?” நீண்ட நேரமாக அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் இருக்கவே மீண்டும் தன் போனை எடுத்து பார்த்து விட்டு பேசினான் ரிஷி.

“ஆஹ்! யாஹ் லைன்ல தான் இருக்கேன் சொல்லுங்க”

“அப்புறம் என்ன பண்ணுறீங்க? காலையில் பர்சேஸ் எல்லாம் சிறப்பாக முடிஞ்சதா?”

“முடிஞ்சது முடிஞ்சது”

“என்ன தேவிக்கு காலையில் நான் வரலேன்னு கோபமோ?”

“எனக்கு என்ன கோபம்? அப்படி எல்லாம் எதுவும் இல்லை வன் டே லீவு எடுக்க முடியாத அளவுக்கு உங்களுக்கு வேலை இருக்கும் போது நாங்க கோபப்பட முடியுமா?”

“ஓகே ஓகே புரியுது செம்ம கோபம் தான் போல” அவனது கேள்விக்கு எதுவுமே பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள் அனுஸ்ரீ.

“ஸாரி டா காலையில் கடைக்கு வர்றதுக்கு தான் ரெடி ஆனேன் திடீர்னு செக்யூரிட்டி சிஸ்டமில் ஏதோ ப்ராப்ளம் ஆகிடுச்சு புது கம்பெனி டீடெய்ல்ஸை பழைய டீடெய்ல்ஸோடு ஜாயின் பண்ண முடியலனு சொல்லிட்டாங்க திரும்ப அந்த டீடெய்ல்ஸ் எல்லாம் எடுத்து கரெக்ஷன் பண்ணி சிஸ்டம்ல ஏட் பண்ணி காலையில் இருந்து சாப்பிடக் கூட நேரம் கிடைக்கல இப்போ தான் எல்லா வேலையும் முடிஞ்சுச்சு எப்படியும் நீ கோபமாக இருப்பேன்னு தெரியும் அம்மா வேற போன் பண்ணி நீ என்னை கேட்டதா சொல்லி ஒரே பாராட்டு கடைக்கு வராததுக்கு அது தான் பர்ஸ்ட் வேலை முடிஞ்சதுமே உனக்கு போன் பண்ணிட்டேன் ரியலி ஸாரி டா”

“அய்யோ! பரவாயில்லைங்க நான் ஒண்ணும் தப்பாக நினைக்கல காலையில் இருந்து எதுவுமே சாப்பிடலனு வேற சொன்னீங்க நீங்க முதல்ல போய் சாப்பிட்டு வாங்க நம்ம அப்புறம் பேசலாம்”

“ஸ்யூரா? அப்புறம் நான் போனை வைச்சதுக்கு அப்புறம் பீல் பண்ண மாட்டியே?”

“அய்யோ! சத்தியமா பீல் பண்ண மாட்டேன் நீங்க பர்ஸ்ட் சாப்பிடுங்க பாய்!”

“ஓகே ஓகே தாங்க்ஸ் தேவியாரே! பாய்!” சிறு புன்னகையோடு தன் காதில் இருந்து போனை எடுத்து பார்த்தவன் அதில் ஸ்க்ரீன் ஷேவராக இருந்த அனுஸ்ரீயின் புகைப்படத்தை ஒரு விரலால் வருடிக் கொண்டே லிப்டை நோக்கி நடந்து சென்றான்.

ஒரு வாரமாக சரியாக தூக்கமும், சாப்பாடும் இல்லாமல் செய்ததால் என்னவோ அவனுக்கு உடம்பெல்லாம் அடித்துப் போட்டாற் போல வலித்தது.

வீட்டுக்கு வந்து குளித்து விட்டு அவசரமாக சாப்பிட்டு விட்டு மீண்டும் தன்னறைக்குள் வந்து தன் கட்டிலில் வீழ்ந்தவன் ஆழ்ந்து உறங்கிப் போய் விட மறுபுறம் அனுஸ்ரீ அவனது புகைப்படங்கள் எல்லாவற்றையும் கட்டிலின் மேல் பரப்பி வைத்து கொண்டு பார்த்து கொண்டு இருந்தாள்.

“உங்க கிட்ட எப்படி இந்த விஷயத்தை சொல்லப் போறேன்னு தெரியல ரிஷி ஆனா இதை மறைத்து வைக்கவும் நான் விரும்பல உங்களை பர்ஸ்ட் டைம் உங்க ஆபிஸில் பார்க்கும் போது எனக்கு சின்ன தடுமாற்றம் வந்தது உண்மை நீங்க இன்னொரு பெண்ணை விரும்புறீங்கனு தெரிஞ்சும் என் மனசு உங்க பக்கம் சாய்ந்தது அதை என்னால கட்டுப்படுத்த முடியல இப்போ வரைக்கும் நான் அப்படி என் மனசை அலை பாய விட்டது தப்பாக இருக்குமோனு தினமும் பீல் பண்ணிட்டு இருக்கேன் உங்க ஆபிஸில் இருந்த அந்த வன் வீக் உங்களை ஒவ்வொரு விதமாக ரசிச்சேன் அது தப்புன்னு தெரிஞ்சும் நான் பண்ணேன் உங்க என்கேஜ்மண்ட் நியூஸ் என் காதில் விழுகிற வரைக்கும் நான் பண்ணிட்டு இருந்த முட்டாள்தனம் எனக்கு புரியல உங்க என்கேஜ்மண்ட் நியூஸ் கேட்ட அப்புறம் தான் நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணேன்னு புரிஞ்சது

இனி உங்களை பற்றி நினைக்கவே கூடாதுனு தான் இருந்தேன் பட் முடியல அம்மா ஒரு பக்கம், அப்பா ஒரு பக்கம் அவங்களையும் என்னால சேர்த்து வைக்க முடியல கடைசியில் அது எல்லாத்தையும் மறந்து இருக்கலாம்னு தான் இங்கே வந்தேன் ஆனால் மறுபடியும் கடவுள் உங்களை என் கிட்ட கொண்டு வந்துட்டாரு இது தான் கடவுளோட விளையாட்டு போல கல்யாணமே வேண்டாம்னு சொன்ன என்னை இப்போ இப்படி மாற்றிட்டாரு அந்த பிள்ளையார்! ஆனாலும் எனக்கு கல்யாணம் பற்றிய பயம் மட்டும் போகவே மாட்டேங்குது அது தான் ஏன்னு புரியல

உங்க கூட மற்ற எல்லா விஷயங்களையும் இலகுவாக சொல்ல முடிஞ்ச எனக்கு இதை சொல்ல முடியல நான் உங்களை விரும்புனது எனக்கு மட்டும் தான் தெரியும் அது என் மனசோடு இருக்கட்டும் உங்களுக்கு அது தெரிய வேண்டாம் ஒரு வேளை நீங்க என்னை தப்பாக நினைத்து கொண்டால்! இல்லை இல்லை அப்படி நடக்க கூடாது! நான் உங்க ஆபிஸில் ஒரு வாரம் வேலை பார்த்ததை மட்டும் அடுத்த தடவை உங்களோடு பேசும் போது சொல்லிடுவேன் இந்த விஷயம் என்னோடு மறைந்து போகட்டும்” அவனது நிழலுருவத்தோடு பேசி கொண்டு இருந்த அனுஸ்ரீ தன்னை அறியாமலே தனக்கு ஒரு ஆழ் குழியை வெட்டிக் கொண்டு இருந்தாள்.

அந்த ஆழ் குழியில் அவள் விழுந்தே ஆக வேண்டும் என்று அவளுக்கு விதிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்த உலகில் அவளைப் போன்ற அதிர்ஷ்டசாலி யாரும் இருந்திருக்க மாட்டார்கள்.

அனுஸ்ரீ மற்றும் ரிஷியின் திருமணத்திற்கு இன்னும் மூன்று வாரங்களே இருந்தது.

காலில் சக்கரத்தை கட்டி விட்டது போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் ஆளுக்கொரு வேலையாக ஓடி கொண்டு இருக்க அனுஸ்ரீக்கு தன் தாயையும், தந்தையையும் தனியாக பேச வைப்பதற்கான நேரம் தான் கிடைக்கவில்லை.

திருமணம் அதன் பின்னரான சடங்குகள் என எல்லாம் முடிவடைந்து விட்டால் அதன் பிறகு அவர்கள் இருவரையும் இவ்வாறு ஒன்றாக ஒரே இடத்தில் பார்க்க முடியாது.

எப்படியாவது இருக்கும் இந்த குறுகிய காலத்திற்குள் ஒரு இறுதியான முயற்சி செய்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டவள் அதற்காக என்ன செய்யலாம் என்றும் யோசிக்கத் தொடங்கினாள்.

அன்று இரவு வழக்கம் போல எல்லோரும் சாப்பிடுவதற்காக டைனிங் டேபிளில் வந்து அமர சரியாக அந்த நேரம் பார்த்து மின்சாரமும் இல்லாமல் போனது.

“ச்சே நம்ம நேரம் இப்போ தானா கரண்ட் போகணும்? நமக்கு சம்சாரமும் வாய்க்கல மின்சாரமும் வாய்க்கல” முத்துராமன் என்னவோ சற்று மெதுவாக தான் அவ்வாறு கூறி கொண்டு இருந்தார்.

ஆனால் சுற்று வட்டாரத்தில் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்க கிராமம் வேறு அன்று வெகு நிசப்தமாக இருந்ததனால் அவர் கூறியது சற்று நன்றாக சத்தமாக அந்த வீடு முழுவதுமே எதிரொலித்தது.

டைனிங் டேபிள் அருகில் நின்று கொண்டிருந்த தெய்வநாயகி மற்றும் அனுஸ்ரீ அவர் சொன்னதைக் கேட்டு சத்தமிட்டு சிரிக்க சமையலறைக்குள் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த ராதாவின் காதிலும் அவர் கூறியது நன்றாக விழுந்தது.

“என்ன சொன்னீங்க?” ராதா கோபமாக தன் கையில் இருந்த பாத்திரத்தை டைனிங் டேபிளில் மேல் வைத்து விட்டு முத்துராமனின் முன்னால் இடுப்பில் கை வைத்து முறைத்த வண்ணம் வந்து நிற்க

அவரை அங்கு எதிர்பார்க்காத முத்துராமனோ இருட்டில் தன் முன்னால் திடீரென்று ஒரு உருவம் வந்து நிற்க
“அய்யோ! அம்மா நான் இல்லை!” என அலறிக் கொண்டு விலகி ஓட அதைப் பார்த்த அனுஸ்ரீயோ விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினாள்.

முத்துராமன் பயந்து ஓடியதை பார்த்து ராதாவின் முகத்திலும் புன்னகை வந்து ஒட்டிக் கொள்ள நீண்ட நாட்கள் கழித்து அவர் மனம் விட்டு சிரித்தார்.

அவர்கள் அனைவரது சிரிப்பு சத்தத்திலும் அந்த வீடு நிறைந்து போக அந்த நேரம் பார்த்து மீண்டும் மின்சாரம் வந்து சேர்ந்தது.

மனம் விட்டு சிரித்துக் கொண்டு நின்ற தன் மனைவியை தன் கண்கள் குளிர பார்த்து கொண்டு நின்ற முத்துராமன் மெல்லிய புன்னகையோடு அவரருகில் வந்து
“ராதும்மா நீ இப்படியே சிரிச்சுட்டு இருடா ரொம்ப அழகாக இருக்க” என்றவாறே அவரது தலையை வருடிக் கொண்டு கூற ராதாவோ சற்று கூச்சத்தோடு தன் தலையை குனிந்து கொண்டார்.

வருடத்தில் எப்போதாவது தான் தன் தாயும், தந்தையும் இப்படி பேசிக் கொள்வதை அனுஸ்ரீ கண்டு இருக்கிறாள்.

இப்போது வசந்தபுரத்திற்கு வந்ததன் பின்னர் அவர்கள் இவ்வாறு அடிக்கடி பேசிக் கொள்வதை பார்த்ததும் அவளுக்கோ எல்லையில்லா ஆனந்தமாக இருந்தது.

“பாட்டி! அப்பாவும், அம்மாவும்” குரல் தழுதழுக்க கூறிய தன் பேத்தியை தன் தோளோடு அணைத்துக் கொண்டவர் புன்னகையோடு தன் மகளை பார்த்து கொண்டு நின்றார்.

இத்தனை வருடங்களுக்கு பின்னர் இப்போதாவது தன் மகளின் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் வந்து இருக்கிறே என்று எண்ணி மனதார கடவுளுக்கு நன்றி செலுத்தி கொண்டவர்
“க்கும் இங்கே நாங்களும் இருக்கோம்” என்று சற்று சத்தமாக கூற அவரது சத்தத்தில் சட்டென்று முத்துராமனும், ராதாவும் விலகி நின்றனர்.

அவர்கள் முன்னிலையில் இருவரும் சற்று வெட்கத்தோடு நின்று கொண்டிருக்க
“ம்மா இன்னைக்கு டின்னர் போடுற ஐடியா இருக்கா? இல்லை இப்படியே ஆஹா தானா?” என்று அனுஸ்ரீ கண்ணடித்தவாறே கேட்கவும்

புன்னகையோடு அவளருகில் வந்து அவளது தோளில் தட்டியவர்
“ரொம்ப வாய் தான் உனக்கு பேசாமல் உட்காரு” என்றவாறே உணவைப் பரிமாறத் தொடங்க முத்துராமனும் புன்னகையோடு வந்து சாப்பிடுவதற்காக அமர்ந்து கொண்டார்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் எல்லோரது மனமும் ஒரு இதமான நிலையில் இருந்து கொண்டு இருந்தது.

ராதா என்ன தான் தன் கணவரோடு அடிக்கடி சண்டை போட்டு கொண்டாலும் அவர் மனதில் முத்துராமன் மீது காதல் இல்லாமல் இல்லை.

தன் தேவைகளுக்கு முன்னால் இது நாள் வரை அவரது காதல் அவருக்கு பெரிதாக தெரிந்திருக்கவில்லை.

ஆனால் இப்போது தன் உடனிருந்தவர்கள் எல்லாம் தன்னை விட்டு விலகி சென்றதன் பின்னரே உண்மையான தேவை எது என்று அவருக்கு புரிந்து இருந்தது.

இத்தனை நாள் வீராப்பாக இருந்து விட்டு இப்போது திடீரென தன் மனதை மாற்றிக் கொள்ளவும் அவருக்கு மனது இல்லை.

இரு வேறு மனநிலையில் அவர் இருந்து கொண்டிருந்தாலும் இந்த நொடி அவர் மனம் தன் குடும்பத்தின் பாசத்தில் கட்டுண்டு இருந்தது.

வெகு நாட்களுக்குப் பிறகு மனம் விட்டு சிரித்துப் பேசி விட்டு தூங்குவதற்காக தன்னறைக்குள் அனுஸ்ரீ செல்ல போக
“அனு ஒரு நிமிஷம்” என்றவாறே அவள் முன்னால் வந்து நின்றார் ராதா.

“என்னம்மா?”

“உன் கூட கொஞ்சம் பேசணும் டா”

“சொல்லுங்க ம்மா என்ன விஷயம்?”

“இங்க வேணாம் தோட்டத்தில் வைத்து பேசலாம் வா”
அனுஸ்ரீ பின்னால் நடந்து வர தோட்டத்தில் இருந்த தாமரை பொய்கை அருகில் அமர்ந்து கொண்டவர் அவளை தன்னருகில் அமர்ந்து கொள்ளுமாறு கூறினார்.

“என்னம்மா விஷயம் சொல்லுங்க?”

“அனும்மா பர்ஸ்ட் என்னை மன்னிச்சுக்கோடா”

“மன்னிப்பா? ஏன்ம்மா? நீங்க என்ன தப்பு பண்ணீங்க?”

“உன் சின்ன வயதிலிருந்தே உன்னை நான் ஒரு அம்மாவா சரியாக கவனிக்கல என் விருப்பப்படி ஏதேதோ பண்ணிட்டு இருந்துட்டேன் ஒரு அம்மாவா நான் என் கடமையை சரியாக செய்ததே இல்லை உனக்கு எது பிடிக்கும், பிடிக்காதுனு கூட நான் கேட்டதில்லை ஏன் இப்படி உன் கூட ஒரு ஐந்து நிமிஷம் கூட நான் உட்கார்ந்து பேசுனது இல்லை எதை நோக்கி ஓடுறோம்னே தெரியாமல் ஓடிட்டு இருந்துருக்கேன் இந்த கல்யாண வேலை எல்லாம் தொடங்கின பிறகு தான் ஒரு அம்மாவா நான் எதை எதையெல்லாம் இழந்து இருக்கேன்னு புரியுது உனக்கு என்ன கலர் பிடிக்கும்னு கூட எனக்கு தெரியல ஆனா என் அம்மாவுக்கு தெரிஞ்சு இருக்கு, உன் அப்பாவுக்கு தெரிஞ்சு இருக்கு இப்போ என் மனதில் உனக்கு நிறைய நிறைய ஒரு அம்மாவா என் கடமை எல்லாம் செய்யணும்னு ஆசை இருக்கு ஆனா இரண்டு, மூணு வாரத்தில் நீ வேற வீட்டுக்கு போயிடுவ எல்லாம் காலம் கடந்த ஞானோதயமா போயிடுச்சு” மனம் வருந்தி ராதா பேசவும் அனுஸ்ரீக்கு அந்த நொடி அவர் மேல் இருந்த கோபம், ஆற்றாமை எல்லாம் விலகி போய் இருந்தது.

என்ன தான் கோபதாபங்கள் இருந்தாலும் அவர் அவளை பத்து மாதங்கள் சுமந்து பெற்ற தாய் அல்லவா?

“யாரு அப்படி சொன்னா? இரண்டு, மூணு வாரம் தான் இருக்குன்னு இல்லை இருபது நாள் இருக்கு அதற்கும் மேல நான் உங்க பக்கத்தில் தானே இருக்கப் போறேன் நீங்க அங்க சென்னையில் தனியாக போய் கஷ்டப்படாமல் இங்கே பாட்டியோட இருக்கலாமே?”

“இருக்கலாம் தான் ம்மா உங்க அப்பா அங்கே தனியா?” ராதா தயக்கத்துடன் கூறவும்

“அம்மா!” என்று கூவலுடன் அவரை அணைத்துக் கொண்டவள்

“அப்போ அப்பாவும், நீங்களும் சென்னையில் தனியாக இல்லையா?” என்று கேட்டாள்.

“நீ இங்க வந்ததுக்கு அப்புறம் உங்க அப்பா நம்ம இருந்த ப்ளாட்க்கு எதிர் ப்ளாட்ல தான் வந்து இருந்தாங்க ஆரம்பத்தில் ஹோட்டல் சாப்பாடு அவருக்கு ஒத்துக்கல அப்புறமாக நான் இரண்டு பேருக்கும் சேர்த்து சமைத்து வீட்டு வேலை செய்ய வர்ற ஆனந்தி கிட்ட அவருக்கு கொடுத்து அனுப்புவேன் அப்படி தான் இந்த ஒரு வருஷம் போகுது இப்போ நான் இங்கேயே இருந்துட்டா அப்புறம் அவருக்கு கஷ்டம் ஆகிடுமே?”

“பார்த்தீங்களா? இந்த விஷயத்தை யாரும் என் கிட்ட சொல்லல அப்பா கூட நான் இங்கே வந்த புதிதில் போன் பேசும் போது வீடு மாறி இருக்கேன்னு சொன்னாங்க பட் எங்கேன்னு சொல்லல”

“ஹ்ம்ம்ம் அதை விடு அனும்மா அம்மாவை மன்னிச்சுட்டேலே”

“நோ!”

“ஏன்டா? இன்னும் என் மேல உனக்கு கோபமா?” கவலையுடன் முகம் வாட கேட்ட தன் அன்னையின் கழுத்தைக் கட்டி கொண்டவள்

“கோபம் எல்லாம் நிறைய இருந்துச்சும்மா ஆனா இப்போ எல்லாம் ஒரே செக்கனில் காணாமல் போயாச்சும்மா இப்படி உங்க கூட ப்ரண்ட்லியா பேசணும்னு எத்தனை தடவை ஏங்கி இருக்கேன்னு தெரியுமா? ஐ யம் ஸோ ஹெப்பி” என்று கூறவும்

அவளது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தவர்
“உன் சின்ன வயதை மொத்தமாக நான் ஸ்பாயில் பண்ணிட்டேன் உன் கல்யாணத்துக்கு அப்புறம் வர்ற உன் லைஃப் நிச்சயமாக உனக்கு சந்தோஷத்தை மட்டுமே தரணும்டா” என்று கூற அவளோ புன்னகையோடு மேலும் தன் அன்னையை நெருங்கி அமர்ந்து கொண்டாள்.

“கல்யாணத்துக்கு அப்புறம் தான் உண்மையான ஒரு வாழ்க்கை உனக்கு இருக்கு அதை எந்த காரணத்தை கொண்டும் என்னை மாதிரி கோட்டை விட்டுடாதேம்மா அனு”

“ஏன்ம்மா இப்படி எல்லாம் பேசுற? நீங்களும், அப்பாவும் நல்லா தானே இருக்குறீங்க?”

“நாங்க டிவோர்ஸ் பண்ணிட்டோம்மா எங்க லைஃப் அவ்வளவு தான் அதை எல்லாம் பார்த்து நீ உன் லைஃப்பை விட்டுடக் கூடாது”

“ஏன் டிவோர்ஸ் பண்ணவங்க திரும்ப சேரக் கூடாதாம்மா?”

“டிவோர்ஸ் எப்படி இரண்டு பேரும் சம்மதிச்சு நடக்குமோ அதே மாதிரி தான் வாழ்க்கையும் இரண்டு பேரும் சம்மதிச்சா தான் சந்தோஷமாக வாழலாம் நான் உங்க அப்பாவுக்கு இது வரை கொடுத்த கஷ்டத்திற்கு அவர் எதிர் ப்ளாட்டில் வந்து இருக்கிறே பெரிசு என் லைஃப் அவ்வளவு தான் டா இட்ஸ் ஓவர் இனிமேல் உன் லைஃப் தான் எனக்கு முக்கியம்”

“அம்மா நான் உண்மையாக ஒரு விஷயம் சொல்லவா?”

“என்னம்மா சொல்லு?”

“எனக்கு ஆரம்பித்தில் கல்யாணம் பண்ணிக்குறதுக்கு இஷ்டமே இருக்கல ஏன் தெரியுமா?”

“ஏன்?”

“உங்களையும், அப்பாவையும் பார்த்து தான்”

“என்ன?” இம்முறை அதிர்ச்சியாக அனுஸ்ரீயை நோக்கினார் ராதா.

“ஆமா ம்மா ஆரம்பத்தில் இருந்து உங்க இரண்டு பேர் சண்டையையும் தான் தினமும் நான் பார்த்து வந்தேன் அதனால என்னவோ கல்யாணம்னு சொன்னாலே எனக்கு பயம் எங்கே நானும் இப்படி தினம் தினம் சண்டை போட வருமோனு பாட்டி கிட்ட கூட ஆரம்பத்தில் கல்யாணம் வேணாம்னு தான் சொல்லி இருந்தேன் ஆனா அவங்க கொஞ்சம் பேசி பேசி என் மனசை மாற்றி இருந்தாங்க அதற்கு அப்புறமாக இந்த கல்யாண பேச்சு தொடங்கிய நாளில் இருந்து உங்க கிட்டயும், அப்பா கிட்டயும் நிறைய மாற்றங்களை நான் பார்த்தேன் நான் சின்ன வயதில் நீங்க எப்படி இருக்குணும்னு ஆசைப்பட்டேனோ அதை இப்போ பார்த்தேன் அப்போ தான் முடிவு பண்ணேன் இந்த கல்யாணத்தில் தான் இது வரை நடந்த எல்லா பிரச்சினைக்கும் முடிவு இருக்குன்னு இப்போ சொல்ல போனால் கல்யாணத்துக்கு நான் விருப்பம் சொல்ல நீங்களும் அப்பாவும் தான் ஒரு வகையில் காரணம் நீங்க இப்போ மாதிரி ஆரம்பத்தில் சந்தோஷமாக இருந்திருந்தால் நிறைய விஷயங்களை நாம இழந்து இருக்க மாட்டோம்மா”

“உன் மனதில் இவ்வளவு விஷயம் இருக்கும்னு எனக்கு தெரியாமல் போயிடுச்சே அனும்மா” கண்கள் கலங்க கூறிய தன் அன்னையின் கண்களை துடைத்து விட்டவள்

“அதுதான் எல்லாம் சரியாக மாறிடுச்சு தானே ம்மா ஒரு கெட்டதற்கு பின்னால் தான் ஒரு நல்லது இருக்கும் இனி எப்போதும் நீங்களும், அப்பாவும் சந்தோஷமாக இருக்கணும் ஓகே வா?” என்று கேட்கவும்

சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தவர்
“அது பின்னாடி பார்க்கலாம் இப்போதைக்கு உன் கல்யாணம் நல்ல படியாக நடக்கட்டும் இப்போ வா உள்ளே போகலாம் பனி தூர ஆரம்பிக்குது” என்றவாறே அனுஸ்ரீயின் கை பிடித்து நடந்து சென்றார்.

“நல்ல படியாக தூங்கி எழும்புமா”

“ஓகே ம்மா குட்நைட்!” புன்னகையோடு தன் அன்னையின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு தன்னறைக்குள் வந்து நின்ற அனுஸ்ரீக்கோ நடப்பது எல்லாம் கனவு போல இருந்தது.

தான் தன் வாழ்வில் எது எல்லாம் தனக்கு நடக்காது என்று நினைத்து இருந்தாளோ அது எல்லாம் இப்போது அவள் எதிர்பாராமலேயே நடந்து கொண்டு இருக்கிறது.

தன் தாயின் அரவணைப்புக்காக இத்தனை வருடங்களாக ஏங்கி கொண்டிருந்த அனுஸ்ரீயோ இன்று அது கிடைத்து விட்ட சந்தோஷத்தோடு நிம்மதியாக உறங்கச் சென்றாள்….