Mayanginen kiranginen 03

eiS8VZ63923-ae4ce202

அத்தியாயம் 03

காலமும் விதியும்

இருவரின் பயணத்தை

ஒருங்கிணைக்க

இவர்களோ ஏதும்

அறியா சண்டை

கோழிகளாகப் பயணத்தை

தொடர்ந்தனர்…!

இருவரின் பயணமும் அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் செல்ல, இனியாவால் அமைதியாக வாயை மூடிக்கொண்டு வர முடியவில்லை.

அனைவரிடத்தும் அன்போடும் கனிவோடும் பேசும் வெற்றியால், ஒரு வார்த்தை கூட இவளிடம் பேச இயலவில்லை.

தன் இசையுடன் தான் சேர்ந்து செல்ல வேண்டிய பயணத்தை, இப்படி யாரோ ஒரு பெண்ணுடன் செல்லுகிறோமே என்று நினைக்கும்போதே மூச்சு முட்டுவது போல் இருந்தது அவனுக்கு.

காதல் ஒரு அழகான உணர்வு என்று புரிய வைத்தும் அதை அனுபவிக்க வைத்ததும் அவளே.! அவனின் இசையே.!

அதனை முழுமையாக அனுபவிக்க விடாமல் அவனை உயிரோடு மண்ணுக்குள் புதைத்ததும் அவனின் இசையே.

எங்கும் எதிலும் அவனின் இசையே அவனுக்கு நிரம்பி இருக்க, பக்கத்தில் இருக்கும் பெண் கூட அவன் எண்ணத்தினுள் நுழையவில்லை.

அவனையும் அந்த இருட்டையும் மாறி மாறிப் பார்த்தவள், சலிப்போடு அமர்ந்திருந்தாள்.

“பச், இப்போ நாம எங்க போய்ட்டு இருக்கோம்.?” என அமைதியை மெதுவாகக் கலைத்தாள் இனியா.

” என்னது நாமளா.? நான் மட்டும் தான்” என்றவனின் பேச்சில் தன்னை அவன் அசிங்கப்படுத்துவது புரிந்தும் அதை உதாசினப்படுத்தினாள்.

“சரி, நீங்க எங்க போய்ட்டு இருக்கீங்க.?”

” அதை எதுக்கு நான் உன்கிட்ட சொல்லணும்.?”

“அப்போ தானே, நான் எங்க இறங்கணும்னு சொல்ல முடியும். உங்க டெஸ்டினேஷன் தெரியாம, என்னோட டெஸ்டினேஷனை எப்படி சொல்றது சொல்லுங்க”

” நான் எங்க போறேன்னு நீ தெரிஞ்சிக்க வேண்டிய அவசியமில்லை” என‌ அவளோடு ஒத்தைக்கு ஒத்தை வாதம் புரிய,

“அவ்வ், ஏன் தடியன் சார், நீங்க இப்படி இருக்கீங்க.? உங்களுக்கு வரப்போற வீட்டம்மா ரொம்பவே பாவம் சாரே” நமட்டு சிரிப்புடன் அவள் சொல்ல,

” அதான் அவ பறந்து போய்ட்டாளே, இது காதலே இல்லைன்னு” அவன் வேதனையுடன் கூற, அவனுக்கு ஆதரவாய் அவன் கரம்பற்றி அதனின் அழுத்தத்தைக் கொடுத்தாள்.

ஏனோ, அந்த அழுத்தம் அவனுக்குத் தேவைப்பட்டது. ஆனாலும் அது இசைக்குத் தான் செய்யும் துரோகம் என்றெண்ணி அவள் கையைத் தட்டி விட்டான்.

” என்னைய டச் பண்ணி பேச வேண்டிய அவசியம் இல்லை. இன்னொரு தடவை இப்படி பண்ண, தென் யூ ஹேவ் டூ பேஸ் மை அனதர் ஃபேஸ் காட் இட்” கோபமாக மொழிந்தவன் அவள் தொட்ட இடத்தைக் கர்சீப் கொண்டு துடைத்து, அதைத் தூக்கியும் எறிந்தான் வெற்றிமாறன்.

அவனின் செய்கையைப் பார்த்து “பைத்தியம் முத்திடுச்சி போலையே” என நினைத்துக் கொண்டாள்.

சிறிது நேரத்திலே,” ஹலோ, ஏதோ உன்னோட வண்டி மாதிரி ஒய்யாரமா உக்காந்துட்டு வர.நீ எங்க இறங்கணும்னு யாரு சொல்லு வா?” அவன் அவளைப் பார்த்துக் கோபமாய் மொழிந்தான்.

‘காதல் தோல்வில ஏதாவது ஆகியிருக்குமோ, இறங்கும்போது நல்ல ஹாஸ்பிட்டலா பார்த்துப் போய்ச் செக் பண்ணிக்க சொல்லணும்’ மனதோடு பேசியவள் அவனையே பார்த்திருந்தாள்.

” என் முகத்துல என்ன படம் கிடம் ஏதாவது ஓடுதா என்ன?” அவள் புறம் திரும்பிப் புருவம் உயர்த்திட,

” படம் ஓடுனா கூட நான் பாக்க மாட்டேன் தடியன் சார்” என்று இதழ் சுளித்தாள் இனியா.

அவளை முறைத்தவன்,” இப்போ நீ எங்க இறங்கணும்னு சொல்லப் போறியா இல்லையா?”

” சரி சரி நான் சொல்றேன். ஆனா எனக்கு ஒரு டௌட் அது மட்டும் க்ளியர் பண்றீங்களா “

அவளை ஏற இறங்க பார்த்தவன்,”சரி கேளு” என்றான்.

” இதே கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி தானே, நான் நீங்க எங்க போறீங்கன்னு சொல்லுங்க. நான் இறங்குற இடம் சொல்றேன்னு சொன்னேன்.அப்பவே நீங்கப் பதில் சொல்லி இருக்கலாமே தடியன் சார். எதுக்கு எனக்குப் பதில் சொல்லாம அதே கேள்விய திரும்ப நீங்கக் கேக்குறீங்க” தன் சந்தேகத்தை முன் வைத்தாள்.

” ஹான், இந்தக் கார் என்னோடது தானே. அப்போ நான் தானே கேள்வி கேக்கணும். அதான் நீ கேட்கும்போது நான் சொல்லல தட்ஸ் இட்” என்றவன் பேச்சு முடிந்தது என்பது போல் வண்டி ஓட்டுவதில் கவனம் வைத்தான்.

” யார்ரா இவன்?” என்பது போல் பார்வையை அவன்மீது செலுத்தினாள்.

” என்னைய லால்குடில இறக்கி விட முடியுமா” எனக் கனிவாய் கேட்க,

” ஹோ, லால்குடியா சரி சரி விட்டறேன்” என்றான்.

சிறிது நேரம் மௌனமாகவே அந்தப் பயணம் செல்ல, இனியாவிற்கு இந்த அமைதி பிடிக்கவில்லை.

அவனின் முகத்தை ஓர விழிகளால் ஏறிட்டு பார்க்க, அவனோ இறுகிய முகத்துடன் கடமையே கண் கண்ட தெய்வம்போல் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான்.

‘பச், என்ன டா இது இனியாக்கு வந்த சோதனை’ என்று மனதினுள் நினைத்தவள், அமைதி பொறுக்காமல் மெதுவாக அவனிடம் பேச்சு கொடுக்கத்தாள்.

“தடியன் சார்…”

“தடியன் சார்…”

“தடியன் சார்ர்ர்ர்ர்…” என இழுத்து அழைக்க,

அவனின் கோபப் பார்வை மட்டுமே அவள்மீது செலுத்தப்பட்டது.

‘ஹோ, கோபமாக்கும் பார்க்கக் காமெடி பீசாட்டம் இருந்துக்கிட்டு கோபடுறானாமே’ மனது அவனுக்காய் கவுண்டர் கொடுத்தது.

“தடியன் சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…” என ராகம் போட,

” பச், இப்போ உனக்கு என்ன தான் வேணும்? “

” உங்களுக்குக் கொஞ்சமாவது மேனர்ஸ் இருக்கா சார்ர்ர்ர்ர்ர்” என்றிட,

அவளை அனல் தெரிக்க பார்வை பார்த்து வைத்தான் வெற்றிமாறன்.

“சொல்லுங்க சார்ர்ர்ர்ர்ர்…” என மீண்டும் ராகம் பாட,

தன் கோபத்தை சமநிலை படுத்த, பெரிய மூச்சொன்றை இழுத்து வெளியே விட்டவன்,” இப்போ உனக்குத் தான் பிரச்சனை?” எனப் பொறுமையாகவே கேட்டான் வெற்றி.

” உங்க கிட்ட நான் என்னோட பேரு சொன்னேன்ல, அப்போ நீங்களும் உங்களோட பேரை என்கிட்ட சொல்லணும்ல சார்?” எனக் கேள்வியாய் அவனை நோக்கினாள்.

” நானா வந்து உன்கிட்ட பேரைச் சொல்லச் சொல்லிக் கேட்டேன்” எனப் புருவம் உயர்த்திட,

“அது… அது… அது…வந்து” எனத் திக்கியவள் பார்வையை அங்கும் இங்கும் அலைய விட்டாள்.

“என்ன அது அதுன்னு திக்குற, உனக்கே தெரியுதுல அப்புறம் எதுக்கு நொய் நொய்யுன்னு மனிசன் உயிரை வாங்குற. என்னைய கொஞ்சமாவது காதல் தோல்வியை ஃபீல் பண்ண விடுறீயா” என்றவன்,

” இனியாவது கொஞ்சம் அமைதியா வா” என்று முடித்தான்.

” தடியன் சார்ர்ர்ர், நான் சொல்றேனேன்னு கோவப்படாதீங்க. உங்களோட காதல் கதையை என்கிட்ட பகிர்ந்துகலாம்ல. உங்களுக்கும் ஒரு ஆறுதல் கிடைக்குமே சார். வேணாம்னு சொல்லிட்டு போனவுங்களையே நினைக்கிறது முட்டாள் தனமா தெரியலையா சார்” என‌ அவனுக்காய் இனியா பேச,

” எது முட்டாள்தனம், அவளைப் பத்தி நினைக்கிறதா. அவளை நான் இன்னைக்கு தான் முதல் முறை பார்த்தேன். அவ எப்படி இருப்பான்னு தெரியாத போதே காதலிச்சவன் நான். அவ வேண்டாம்னு சொன்னதும் அவளை விட்டுட்டு போய்டுவேன்னா என்ன “

” சரி, நீங்க உண்மையா காதலிச்சீங்கன்னே வச்சிக்குவோம். ஆனா அந்தப் பொண்ணு உங்களை உண்மையா தான் காதலிச்சான்னு எப்படி உங்களால சொல்ல முடியும் சொல்லுங்க” எனக் கேள்வியாய் நோக்க

” அவளோட காதல் ஒன்று மட்டும் தான், இப்போ அவளை நினைச்சு புலம்ப வைக்குது. ஒருத்தவுங்க உண்மையா காதலிக்கிறாங்களா இல்லையான்னு நமக்குத் தெரியாதா என்ன‌.அவ தான் என்னோட வாழ்க்கைன்னு என்னை நினைக்க வச்ச தேவதை அவள்” என்றான் காதலை உள்ளார்ந்து உணர்ந்து.

” முட்டாள் மாதிரி பேசுறீங்க? இப்போ இருக்கிற பாதி பொண்ணுங்க டைம் பாஸ்க்கு தான் லவ் பண்றாங்க” எனக் கோபமாய் மொழிய,

” நீயே சொல்லிட்டியே பாதி பேருன்னு, அப்புறம் என்ன? நீ சொன்ன பாதி பேருல என்னோட இசை வர மாட்டா” என்றான் உறுதியாக.

“ஹோ, அப்போ உங்க காதல் கதையை என்கிட்ட சொல்லுங்க. உங்க இசை எப்படி பட்டவன்னு நான் சொல்றேன் “

” என்னோட இசை உண்மையா தான் காதலிச்சான்னு, உனக்கு நான் காதல் சர்ட்டிபிகேட் தரணும்னு எனக்கு அவசியம் கிடையாது. ஆனாலும் நான் சொல்றேன், அவளோட காதல் டெப்த்தை பத்தி தெரிஞ்சிக்கோ மிஸ். இனியா” என்றவன் தனது காதல் கதையைச் சொல்லத் துவங்கினான்.

அவளும் கதை கேட்க ஆர்வமாய் அவன் புறம் திரும்பி அமர்ந்து, கதவு புறம் சாய்ந்து கொண்டாள்.