Mayanginen kiranginen

Mayanginen kiranginen

ஆறு மாதங்களுக்கு முன்பு…,

திருச்சி – வயலூர்

வயலூர் பெயருக்கு ஏற்றவாறு சுற்றிலும் வயல்களாகவே அமைந்திருக்கும். ஒரு பகுதியில் ஆறு ஓடிட, மற்றொரு பகுதியில் வயல்கள் இடம்பெற்றிருக்கும். அவ்வூரை பார்க்கவே பச்சை பசேல் என்று ரம்மியமாக இருக்கவே, முருகனின் திருக்கோவிலும் அங்கே இடம்பெற்றிருந்தன.

காலை ஐந்து மணி என்பதற்கு சாட்சியாய், அவர்கள் வீட்டில் வளர்க்கும் சேவல் கூவி விடியலை காட்டி கொண்டு இருந்தது.

” அய்யோ !இங்க வந்தா நிம்மதியா தூங்கலாம்னு பார்த்தா, இந்த உயிருள்ள இருக்கிற அலாரம் சரியா எழுப்பி விட்டுடுதே. எல்லாம் அவரால வரது” எனப் புலம்பியவாறே கட்டிலிலிருந்து எழுந்தான் வெற்றி.

எழுந்தவன், உடனே பால்கனி பக்கம் வந்து, மரத்தின் மேல் நிற்கும் சேவலை பார்த்து” அதான் நான் எழும்பிட்டேன்ல, போப் போய் உன்னோட வளர்ப்பு தந்தையை போய் எழுப்பி விடு” எனக் கோபமாய் துரத்தி விட

” ஹான் அது, நான் இருக்கிற வரைக்கும் நீ நிம்மதியா தூங்க முடியாது” என்பது போல் அவனைப் பார்த்துக் கூவி விட்டுச் சென்றது அந்த வெட‌ சேவல்.

“ச்சை” என்றவன் குளியலறைக்குள் புகுந்து தன்னை சுத்தப் படுத்தி கொண்டு வெளியே வந்தான்.

வந்தவன், ஜாகிங் செல்வதற்கான உடையை அணிந்து அவனது அறையிலிருந்து வருகை புரிய, அவன் தந்தை பரமசிவமோ அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் செய்தித்தாளை வாசிக்கத் தொடங்கினார்.

நடு ஹாலில் நின்று,” ம்மா, உங்க வீட்டுக்காரர் ஆசையா வளர்க்கிற அந்தச் சேவலை ஒரு நாள் இல்ல ஒரு நாள் நாம குழம்பு வச்சி சாப்பிடணும் மா” மொழிந்து விட்டு வெளியேறினான்.

” சொல்லி வை உன் புள்ள கிட்ட, அது நான் வளர்க்கிற சேவல். எனக்குப் பாதகமான எந்த வேலையையும் செயாதுன்னு”

சமையலறையில் இருந்த விஜயசாந்தியோ யாரோ யாரோடோ பேசிக்கொண்டு இருப்பது போல் அந்தக் காலை நேரத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார்.

” இவருக்கு இருக்கிற திமிரு தான் அந்தச் சேவலுக்கும் இருக்கும்” என்று பொறுமிய படியே சென்றான்.

“ஏங்க, இந்தாங்க சுக்கு காபி” கணவனிடம் நீட்ட,

அதை வாங்கி கொண்டவர்,” உன் பையனுக்கு இருபத்தி எட்டு வயசாகுது. பூங்கோதையோட ஒன்னு விட்ட தங்கச்சி அம்முக்கு மாப்பிள்ளை பாக்குறாங்களாம் கேள்வி பட்டேன். அவன் சரின்னு சொன்னா அந்தப் பொண்ணுக்கு இவனைப் பேசலாம்னு தோணுது. அவன்கிட்ட பேசிட்டு என்னென்னு சொல்லு” என்றவர் காபியை குடிக்க தொடங்கினார்.

” சரிங்க, நான் அவன்கிட்ட பேசுறேன். அம்முவும் நல்ல பொண்ணு தான்.பூங்கோதை கல்யாணத்துலயே எல்லார் கிட்டயும் கலகலன்னு பேசுச்சி “

” உன்னோட பொழுதுபோக்குக்கு அவளை இந்த வீட்டு மருமகளாக்க நினைக்கில, பையனுக்குப் பொருத்தமா இருப்பான்னு தான் பாக்கலாம்னு சொன்னேன்” எனச் சடுதியில் மனைவியைச் சீண்டினார் பரமசிவம்.

” நமக்கு மட்டும் ஒரு பொண்ணு பிறந்திருந்தா, நான் ஏன் இப்படி இருக்கேன். உங்களால எனக்கு ரெண்டுமே பையனா போச்சி” என முகம் திருப்பிக் கொள்ள,

” நானா உன்னைய ரெண்டோட போதும்னு சொன்னேன். நீதான் போதும்னு சொன்ன. வேணும்னா இப்ப கூட முயற்சி செய்யலாம்” என மனைவியைக் காதலாய் சீண்ட

” பையனுக்கே புள்ள பிறக்கப் போகுது தாம், இதுல இவரு புள்ளைக்கு அடி போடுறாரு. போங்க அந்தச் சைடு” எனக் கணவனைச் சாடிய படியே வெட்கத்தை மறைக்க அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

இருவரும் வாழ்வில் இணைந்த நாள் முதல் காதலுடனே வாழ்கையை சேர்ந்து பயணிக்கின்றனர். சண்டை சச்சரவுகள் எதாவாகினும் அது சிறிது நேரத்திற்கு மட்டுமே. அதன் பின், இருவருக்குமா சிறிது நேரத்திற்கு முன்பு சண்டை வந்தது என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அவர்களின் பிணைப்பு இருக்கும்.

எட்டு மணிபோல் வீட்டிற்கு வந்த வெற்றி, குளித்து முடித்துச் சாப்பிட அமர, அவனுக்கு முன்பே அவனின் அண்ணன் மணிமாறன் சாப்பிட்டு கொண்டு இருந்தான்.

” ஏன்டா, இப்படி என்னோட அண்ணிய கஷ்டப்படுத்துற?” கோபமாய் தமையனை நோக்கினான்.

” நான் எங்க டா என் பொண்டாட்டிய கஷ்ட படுத்துறேன்.அவளை ராணி மாதிரி வச்சி பாத்துக்குறேனாக்கும்” என மீசையை முறுக்கினான்.

” அப்புறம் ஏன் டா அண்ணியை பரிமாற வைக்கிற?”

” அதை உன் நொண்ணி கிட்டயே கேளு” என மனையாளை காட்டி விட,

” அது வந்து கொழுந்தனாரே, அவரு வேணாம்னு தான் சொன்னாரு. ஆனா எனக்குத் தான் மனசு கேக்கள, அதான் நானே பரிமாறுனேன்” பூங்கோதை சொல்ல,

தன் அண்ணியின் முகத்தினை பார்த்த வெற்றிக்கு, சந்தோஷமாகவே இருந்தது.

நான்கு வருடத்தின் தவமாகத் தான் இன்று எட்டுமாத கருவை வயிற்றை சுமக்கிறாள் பூங்கோதை. திருமணமான ஆறு மாதத்திலே குழந்தையைப் பற்றிப் பூங்கோதையிடம் கேட்க, அவளுக்குத் தான் சங்கடமாய் போனது. போகப் போக அதையே கேட்கவும் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலைக்குத் தள்ளப்பட, இப்போது தான் வரமாய் அவள் வயிற்றில் ஒரு சிசு உருவாகியது. இதோ இப்போது எட்டு மாதம் ஆகிற்று.

தனக்கு வேண்டியதை போட்டு உண்டவன், அமைதியாக ஹாலில் சென்று அமர்ந்து பேப்பர் படிக்கத் தொடங்க, அவனின் பக்கத்தில் அமைதியாக அமர்ந்தார் விஜயசாந்தி.

“மகனே…” விஜயா பாசமாய் அழைக்க,

‘எதுக்கோ, இந்த மம்மி அடிப்போடுது டோய்’ என அவன் மனம் எச்சரித்தது.

” சொல்லுங்க ம்மா “

” உங்க அண்ணன் சந்தோஷமா இருக்கிற மாதிரி, நீயும் சந்தோஷமா இருக்கிறதை பார்க்க எனக்கு ஆசையா இருக்கு டா “என மெதுவாய் அடித்தளம் போட,

“அப்போ சரி மா, என்னோடு இன்னைக்கு நைட்டே ஊருக்குக் கிளம்பி வந்துடுங்க. நான் சந்தோசமா இருக்கிறதை உங்க முட்டை கண்ண வச்சி பாருங்க” அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்தும் அன்னையை வம்பிழுத்தான் மைந்தன்.

“என்ன டா, ஓவரா பேசிட்டு இருக்க. நான் என்ன சொல்ல வரேன்னு உனக்குப் புரியுது தானே. அப்புறம் எதுக்கு என்னை வம்பிழுக்கிற “

” அதான், நீங்கச் சொல்ல வரது எனக்குப் புரியதுன்னு உங்களுக்குத் தெரியதுல. அப்புறம் எதுக்கு காதைச் சுற்றி மூக்க தொடுறீங்க. எதுவா இருந்தாலும் நேரடியா கேளுங்க” என்றான்.

” அப்போ சரி, உனக்கு நாங்க பொண்ணு பாக்கலாம்னு இருக்கோம்.அதுக்கு நீ சரின்னு சொல்லு அது போதும்”

” நாங்கன்னா உங்க புருஷனுமா, அவரு எப்படி எனக்குப் பொண்ணு பாப்பாரு.? அதான் ஆசை ஆசையா என் பேரு வச்சி என்னைக் கடுப்பேத்த வளர்க்கிறாறே, அந்தச் சேவலுக்கு தானே பொண்ணு பார்க்கனும். நான் தான் அவருக்கு விரோதியாச்சே மா” என்று சீண்டலுடன் தந்தையை பார்த்துப் பேச,

அவன் தலையில் குட்டு வைத்தவர், “அது என்ன டா உங்க புருஷன். ஒழுங்கா, மரியாதையா அப்பான்னு சொல்லிக் கூப்பிடு” அன்னை மிரட்டல் விட,

” அவரு தான மா சொன்னாரு, ‘என்னய‌ உன் வாயால அப்பான்னு சொல்லிக் கூப்பிடாத டான்னு’, இப்போ நீங்க ஏதோ நானா சொல்ற மாதிரி திட்டுறீங்க.இது நல்லா இல்ல பாத்துக்கோங்க” எனச் சிறுபிள்ளையாய் சிணுங்க,

“அண்ணன் கல்யாணத்துக்கு கூட வரமுடியாம, அந்த வேலைய கட்டிட்டு அழுது, என்னைய அவமானம் படுத்துவான். நான் சும்மா இருக்கனுமோ” என அவரும் அவனுக்கு ஈடு கொடுக்க

மணிமாறனும் பூங்கோதையும் இதில் தலையிடவில்லை. இவர்கள் அடித்துக் கொள்வது ஒன்னும் புதிதில்லை. இது வாரம் வாரம் நடைபெறுவது தானென அவர்களது உலகத்தில் அவர்கள் சஞ்சரிக்க தொடங்கினர்.

விஜயசாந்தி தான்,” ரெண்டு பேரும் உங்க விளையாட்டைக் கொஞ்சம் நிறுத்துங்க” எனப் பொறுமை இழந்து கத்தியவர், தன் சிறிய மகனிடம் திரும்பி” உனக்குப் பொண்ணு பாக்குற ஐடியால நாங்க இருக்கோம். நீ என்ன சொல்ற உனக்கும் வயசாகுது பாரு” எனத் தவிப்போடு மகனைப் பார்க்க,

அன்னையின் தவிப்பை உணர்ந்தவன்,” சரி பாருங்கள்” என்று இடத்தைக் காலி செய்தான்.

அன்றிரவே சென்னைக்கு செல்லும் இரயில் ஏறியவனின் வாழ்வில் தான் அடுத்தடுத்த நாளில் இசை என்னும் அத்தியாயம் அவன் வாழ்வில் தொடங்க இருந்தது.

காதல்.! காதல்.!

ஏங்கிய காலமாக

அவளின் மணிவயிற்றில்

குழந்தையாய் உருவாக்கி

சந்தோஷம் அடையசெய்தது…!!!

தந்தைக்கும் மைந்தனுக்கும்

ஏழாம் பொருத்தமாய்

ஒரு செயலில் அமைந்திட

காலம் அவர்களை

விதியின் விளையாட்டில்

நடு புள்ளியாக வைத்து

ஆட்டம் காட்டியது…!!

திருமணத்தின் சம்மதத்தில்

காதல் என்னும் இசையின்

அத்தியாயம் தொடக்கமாக

அவளின் காதலில்

மயங்கியவன் மீள்வானா…!??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!