mayavanin mayilirage

mayavanin mayilirage

மாயவனின் மயிலிறகே 23 (இறுதி பதிவு)

 

 

அவள் “ஜித்து” எனவுமே அபி விலகியிருந்தான். அவன் விலகுவதை உணர்ந்த மது, கள்ளுப்பானையின் கடைசி சொட்டினைப் போல, மீதியிருந்த மயக்கத்துடனே  மெதுவாக கண்களைத் திறந்து அவனைப் பார்த்தாள். 

 

 

ஆனால் அபியின் கோபம், ஆற்றாமை, கலந்த வெற்றுப்பார்வை அவளது மயக்கம் தெளிவித்து, அவளை புருவம் சுருங்கச் செய்தது. 

 

 

‘என்னவாயிற்று? உடல் நலம் ஏதும் சரியில்லையோ?’ என  எண்ணியவள், “என்ன ஆச்சு… தலை ஏதும் வலிக்குதா?” என்றவாறே, கை  அவனை நோக்கி நீள, அதைத்  தவிர்த்தவாறு பின்னோக்கி அடிவைத்தான் அபி.

 

 

நீண்ட கை அப்படியே நிற்க, “என்ன?” என்றாள் குழப்பத்துடன். அவள் “ஜித்து” என உளறியது அவளுக்கே நினைவில்லை. 

 

 

எங்கே? அவளை மனம் மயங்கச் செய்தல்லவா உண்மையை வாங்கியிருந்தான். 

 

 

“ஏன் இப்படி பண்ணின?” வெறுமையான குரலில் கோபத்தை அடக்கி அவன்  கேட்க,

 

 

“என்ன… என்ன பண்ணினேன் நான்!” என விழித்தாள். 

 

 

‘இன்னமும் மறைக்கிறாயா?’ என மனம் வெதும்ப, அவளைப் பார்த்தவனிற்கு, ‘இல்லை அவள் நிஜமாகவே குழப்பத்தில் இருக்கிறாள்’ என அவளது பாவனைகள் கூறியது.  

 

 

ஓரெட்டில் அவளை அடைந்தவன் , அவள் தோள்களைப் பற்றி,  “கொஞ்ச நேரத்துக்கு முன்ன என்னை என்னன்னு கூப்பிட்ட” எனக் கேட்டவனால் மருண்டு விழித்த அவளது முகத்தைப் பார்த்து முழுதாய் கோபப்படக்கூட முடியவில்லை.  

 

 

அவனின்  இந்த திடீர் மாற்றத்தில் அதிர்ந்து அவன் முகத்தையேப்  பார்த்தவள் , மெல்ல இதழ் விரித்து,  “நானா? நான் என்ன சொன்னேன் ஜித்…” என கூற வந்தவள் அப்போதுதான் உணர்ந்தாள் அவனை “ஜித்து” என அழைத்ததை.

 

 

அதுவரை குழப்பத்தில் சுருங்கியிருந்த அவளின் கண்ணின் கருமணி, இப்போது  அதிர்ச்சியில் சற்றே விரிந்தது. 

 

 

அவளது முகமாற்றங்களைப் பார்த்தவன், “இப்ப புரிஞ்சிடுச்சா? மது…மிளா. மறைச்சிட்டல்ல!” குரல் கம்ம கூறியவன், 

 

 

“ஏன்? எதுக்காக இந்த நாடகம்? என்ன  பண்ணிடுவேன்னு என்கிட்ட இருந்து விலகின. என் பாப்புவ என்கிட்ட இருந்து மறைச்ச.” என ஆதங்கத்தில் அவள் தோள்களின் மீதிருந்த அவனின் பிடியை இன்னும் அழுத்த, அது தந்த வலியில் முகம் சுருக்கினாள். 

 

 

பாப்புவும் இவளே… மதுவும் இவளே என அறியாவதனா இவன்?  அப்படி இல்லை,  இது அவன் பாப்புவின் மீதான உணர்வுகளைக் கொண்டு  வந்த ஆதங்கம். 

 

 

 இந்நிலையிலும் அவளது வலிமிகுந்த கண்களைக் கண்டு, தனது செயலை தானே வெறுத்தவன், “ச்சே…” என்றவாறு  அவளிடமிருந்து விலகி திரும்பி நின்றான். தலையை அழுந்த கோதியவனின் மனம் எந்த வகையிலும் சமாதானப்பட மறுத்தது.

 

 

மது அதிர்ந்து நின்றது சில நொடிகளே, பின்  மெல்ல அவனருகில் வந்தவள் அவன் தோளைத் தொட, இவள் கையைத் தட்டிவிட்டிருந்தான்.

 

 

 அவனது புறக்கணிப்பில் சட்டென இவளது கண்கள் கரையுடைத்தது. அவனது முதல் புறக்கணிப்பு! 

 

 

மதுவிற்கு அவன் கோபம் கண்டு பயமில்லை. அது  இவளை பாதிப்பதை விட, அவனையேத்  தாக்கிப் பதம் பார்க்கும் “இவள்புறம் கூர் மழுங்கிய   இருமுனைக் கத்தி”  என்பதை இவள் அறிவாளே! இவளை விட அவனுக்குதான் வேதனை  அதிகம்.

 

 

 ஏனெனில் திருமணமான இந்த ஒரு மாதத்தில் நேசத்தை பெருமழையாய் பொழிந்திருந்தான் அவள் மீது.  மோகம் கொள்ளும் சில மணித்துளிகள் மட்டுமே கணவனாய் அவளை ஆள்பவன், மற்ற நேரங்களில் சேயாய்த் தாங்குவான். 

 

மெல்ல அவன் முன் வந்து நின்று,  “ஜித்து…ஐ ம் சாரி…” என நா தழுதழுக்க கூறியவளுக்கு,  அசையாமல் கல் போல நின்றவனை கண்டு உள்ளம் வலித்தது. 

 

 

என்ன சொல்லி சமாதானப்படுத்துவேன். சொன்னால் என்னை புரிந்து கொள்வானா? என மருகியவள் இல்லை, எப்படியாவது புரியவைத்துதான் ஆகவேண்டும், வேறுவழியில்லை… என மனதை தயார்செய்து கொண்டு  “ஜித்து” என்றாள் மீண்டும். 

 

 

“ஜித்து” என உயிர் உருகும் அவளின் குரல் அவன் உயிரை உருக்குலைக்கத்தான் செய்தது. இத்தனை நாள் கேட்க ஏங்கிய அழைப்பல்லவா!

 

‘இதைக் கூற இத்தனை நாள் ஆனதா? ‘ எனக் கடிந்து  அவளை அணைக்கத் துடித்த கையை மனதோடு இரும்புக் கவசம் கொண்டு கட்டி சுவற்றின் மீது பார்வையைப் பதித்திருந்தான்.  

 

 

” இப்ப நான் சொல்லப்போறது உங்க கேள்விக்கான பதிலா தெரியாது. ஆனா  இத்தனை நாளா உங்ககிட்ட சொல்ல முடியாம நான் தவிச்ச தவிப்புகள்ல இருந்து எனக்கு விடுதலையா நினைக்கறேன்.”  எனக் கூறியவள் அவனைப் பார்த்து பேசத்தொடங்கினாள்.  

 

 

” எங்கம்மா அடிக்கடி அவங்களோட அண்ணன பத்தியும் அவர்  குடும்பத்த பத்தியும் எங்ககிட்ட பேசிட்டே இருப்பாங்க. சின்ன வயசுல இருந்து  அத கேட்டு கேட்டு  உங்கள  எல்லாம் பார்க்கலன்னாலும்  ஒருவித பாசம் உங்க மேல எல்லாம் உருவாகிடுச்சு.”

 

“அப்படி இருக்கும் போது ஒருநாள் ,  இதோ! என் அண்ணன் பையன் எவ்வளவு கம்பீரமா இருக்கான் பாருன்னு, ஒரு ஹேண்ட்சம் கலெக்டரோட போட்டோ காட்டினாங்க”

 

 

‘முன்பே என்னைத் தெரியுமா?’ சிறு இளகல் அவனிடம்!

 

 

அதைக் கண்டும் காணாமல் மேலும் தொடர்ந்தாள் மது. 

 

 

“பார்த்ததும் காதல்ன்னெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனா! ஒருவித ஈர்ப்பு  உண்டு.”

 

காதல் இல்லையில் சுருங்கி பின் ஈர்ப்பில் இயல்பானது அவன் முகம்.

 

“அதுக்கப்பறம் உங்களோட ஒவ்வொரு தகவலும் நான் மிஸ் பண்ணதில்ல.  அப் டூ டேட் என் விரல் நுனில இருக்கும்.”  இதைக் கூறும்போது சற்று கர்வம் தெரிந்ததோ?

 

“அப்பறம் அப்பா உங்கள எல்லாம் பார்க்க போலாம்னு  சொன்னப்ப நிஜமாவே ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதுவும் முக்கியமா உங்கள பார்க்க போறேங்கறதுதான் என் அதிகபட்ச சந்தோஷத்துக்கு காரணம்.

 

 

 ஆனா! அப்ப அதை பெருசா நினைச்சுக்கல. ஏதோ ஒரு ஆர்வம்,  ஒரு அழகான கலெக்டர் அத்தை பையனா இருக்கறப்ப யாருக்குதான் பார்க்க ஆர்வமிருக்காது? ” என கண்களில் நேசத்தைத் தேக்கி அவனை ரசித்துப் பார்த்து கூறியவள் மேலும் தொடர்ந்தாள்.

 

 

“அந்த சமயத்துலதான் அப்பா, அம்மாவுக்கு  ஆச்ஸிடென்ட் ஆச்சு.” என்றவள் சில நொடிகள் மௌனித்து கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு,

 

 

“கடைசியா அம்மா என்கிட்ட சொன்னது மாமாகிட்ட போயிடுன்னுதான்.  அதான் எதுவும் யோசிக்காம ஏதோ ஒரு தைரியத்துல ஷௌரியாகிட்டகூட சொல்லாம திருவள்ளூர் கிளம்பிட்டேன்.”

 

“எனக்கு தெரியும் நீங்க அங்கதான் ட்ரான்ஸ்ஃபர் ஆகிருக்கீங்கன்னு. அதோட தாத்தா பாட்டியும் உங்ககூடதான் இருப்பாங்கன்னும் தெரியும். அதான் முதல்ல தாத்தா, பாட்டிய பார்க்கலாம்னு  தேனி போகாம இங்க வர முடிவு பண்ணினேன். “

 

 

“அப்ப எதிர்பாராம நடந்ததுதான் அந்த நாலுபேர் துரத்தினது. அவ்ளோதூரம் பாதுகாப்பில்லாம வந்த என்னோட முட்டாள்தனம் அப்பதான் புரிஞ்சது. என்னை காப்பாத்திக்க  ஒடி வந்தவ உங்ககிட்ட உதவி கேட்டேன்.  அந்த இருட்டுல  உங்கள எனக்கு சரியா தெரியல. அந்த ரௌடிங்க உங்கள  தாக்க வந்தப்ப பயந்தாலும் என்னையும் அறியாமதான் நான் குறுக்க வந்தது.” 

 

 

அதை நினைத்துப் பார்த்த அபிக்கு அன்று ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தவளை நினைத்து  இன்றும்  வேதனையாய் இருந்தது. மனம் அவளை தன் கைக்குள் உணரத் துடித்தாலும்,  அவன் அறிய வேண்டியது இன்னும் வரவில்லையே அதனால் அமைதி காத்தான்.

 

 

“நான் அடிபட்டு உங்க மடியில இருந்தப்பதான் உங்க முகம் நல்லா தெரிஞ்சது. அதுவரை, உங்கள எல்லாம் பார்க்காம, அம்மாவோட ஆசைய நிறைவேத்தாமயே செத்துடுவோமோன்னு நினைச்ச எனக்கு, உங்கள பார்த்த பிறகுதான் அட்லீஸ்ட்  சேரவேண்டிய இடத்துக்காவது வந்துட்டோம்னு அந்த வலியிலயும் கொஞ்சம் நிம்மதியா இருந்தது. அதுதான் கடைசியா எனக்கு நினைவு இருந்தது.”

 

 

“அப்பறம் ஹாஸ்பிட்டல்ல கண்ணு முழிச்சப்ப பார்த்தது அத்தை மாமாவதான். நடுவுல நடந்த எதுவும் ஞாபகமில்ல அப்ப…”

 

 

“அப்ப”என்பதை அவனைப் பார்த்து அழுத்திக் கூறியவள் மேலும் தொடர்ந்தாள். 

 

 

“அதுவரை எல்லாமே சரியாதான் போச்சு. அத்தை மாமாவ பார்த்தது, அம்மா, அப்பா மேல அவங்களுக்கு கோபமில்லன்னு தெரிஞ்சது வரை”. 

 

 

“ஆனா!  அதுக்கப்பறம் அத்தைதான் சொன்னாங்க …நான் அடிபட்டதுல அம்னீஷ்யாவால பழசை மறந்து,  மனநிலையும் பாதிக்கப்பட்டு உங்களோட  வீட்டுக்கு வந்தது, பழகினது எல்லாம் அவங்களுக்கு தெரிஞ்சவரை…” என நிறுத்தினாள். 

 

 

 

 

‘இனி, நான் சொல்லப்போகும் என் உணர்வுகளை நீ சரியாக புரிந்து கொள்ள வேண்டுமே’ என்ற வேண்டுதலை கண்களில் தேக்கி தயக்கத்துடன் ஆரம்பித்தாள் மது.

 

 

“அதுக்கப்பறம்தான் கொஞ்சம் கொஞ்சமா உங்களோட எனக்கு நடந்ததெல்லாம் ஞாபகம் வர ஆரம்பிச்சது… எல்லாமே…” எனக் கூறியவள் மேலும் தயங்கினாள்.

 

 

அவள் தயங்குவதை ஒரக்கண்ணால் பாரத்தவன் இதில் தயங்குவதற்கு என்ன இருக்கிறது என யோசிக்க ஆரம்பித்தான். 

 

 

அவனுக்கு புரியவில்லை… பெண்ணின் உணர்வுகள் யாராலும் அறியமுடியாத நுண்ணியமானவை என்று. 

 

 

சில செயல்கள், செய்த  அவனுக்கு இயல்பாக தோன்றலாம். ஆனால் பெண்ணவளுக்கு!  தன் அன்னையே  ஆனாலும் அவர்முன் செய்ய விரும்பாத, அவரிடமும் கூட சொல்ல முடியாத சில செயல்களை உரிமையில்லாதவனிடம் சொல்லி அவன் நமக்கு செய்திருக்கிறான் என்பது அவ்வளவு உவப்பாக இருக்குமா என்ன? 

 

 

யோசித்துக் கொண்டிருந்தவனை அவளது குரல் கலைத்தது. 

 

 

“அ…து ஒன்னொன்னா ஞாபகம் வர ஆரம்பிச்சதும் நான் உங்ககிட்ட ஹாஸ்பிடல்ல நடந்துகிட்டது, நீங்க  என்கிட்ட நடந்துகிட்டது…” என இழுக்கவும்  பட்டென்று அவன் திரும்பி பார்த்தான். அதில் பதறியவள்,  “இல்ல…அது கண்டிப்பா தப்பா இல்ல…. இது  வேற…” என்றவள் அவனைப் பார்க்காது ஜன்னலின்புறம் திரும்பியவாறு,

 

 

“அது … நான் ரொம்பவே ஷை டைப். அம்மாகிட்ட கூட சில விஷயங்கள் சொல்ல சங்கடப்படுவேன்.  ஆனா உங்ககிட்ட நான் நடந்துகிட்டது… என்னால நம்ப முடியல. ரொம்ப ஆக்வோர்டா ஃபீல் பண்ணினேன்.  அது நான்தானா? எப்படி யாரோ ஒருத்தர்கிட்ட இப்படி நடந்துகிட்டேன்னு.” 

 

 

‘நான் யாரோ ஒருத்தனா?’ என இவன் மனதுக்குள் நினைக்க அது புரிந்தவள் போல,

 

 

“சாரி…அப்ப நீங்க யா…ரோ ஒருத்தர்தான… நேர்ல பாத்தது கூட இல்லல்ல, அதத்தான் சொல்ல வந்தேன்.  தெரியுது எனக்கு அப்ப சுயநினைவு  இல்லன்னு… ஆனா இப்ப இருக்குதான?  அது ஞாபகம் வரவும்  எனக்கு … எனக்கு உங்கள பாக்கவே சங்கடத்த கொடுத்தது” 

 

 

“அதுவுமில்லாம நினைவு தெரிஞ்ச பிறகு ஹாஸ்பிடல்ல  பாப்புன்னு நினைச்சு நீங்க என்கிட்ட எப்பவும்போல நடந்துகிட்டதும் என்னால அத சாதாரணமா ஏத்துக்க முடியல. பாப்பு உங்கள ஏத்துப்பா! ஆனா மது?  மதுவா இருந்த என்னால  எப்படி   உங்கள இயல்பா ஃபேஸ் பண்ண முடியும்? ரொம்பவே தவிச்சு போய் நின்னேன் அப்ப… உங்க பாசத்தால மூச்சுவிட முடியாத அளவுக்கு நீங்க என்னை பாதிச்சீங்க. பட்! கண்டிப்பா அது  நல்ல விதமாதான். இருந்தாலும் அந்த நிமிஷம் ஐ ம் டோட்டலி ஹெல்ப்லெஸ்… “

 

 

கலங்கிய குரலில் அவள் கூற இவன் அவள் உணர்வுகளை மெல்ல உள்வாங்கிக் கொண்டிருந்தான். 

 

 

“என்ன செய்யறதுன்னு யோசிச்சேன். நான் யோசிச்ச அந்த சில நிமிசத்துல  நீங்களே என்கிட்ட இருந்து விலகி நின்னீங்க. அ…ப்ப அந்த நிமிசம்  எனக்கு தோணினது இதுதான். உங்க நெருக்கம் பாப்புகிட்டதான் . மதுகிட்ட இல்லன்னு. முடிவு பண்ணினேன். பாப்புவ மறைச்சேன்.”

 

 

இப்பொழுது அவன் முறைக்கவும் அவளும் அவன் கண்ணோடு கண் பார்த்தாள்.  என் இயல்பு இப்படிதான் நான் செய்தது சரிதான் என்ற எண்ணம் அவளுள் ஒரு நிமிர்வைத் தந்திருந்தது. 

 

 

” இதுல என்ன தப்பு? எனக்கு புரியுது, பாப்பு உங்கள விட்டு போய்ட்டான்னு நீங்க இப்பவும் வருத்தப்படறீங்க. ஆனா நான் அத செய்யாம இருந்திருந்தா, ஒருவேள மதுவும் உங்களவிட்டு போயிருக்கலாம். ஏன்னா? அப்ப அந்தளவு குழப்பத்துல இருந்தேன்.” 

 

 

“அதோட சில சமயம் என்னை கூறுபோடற உங்களோட பார்வை… அதுக்கு அர்த்தம் தெரியாத சின்னக் குழந்தை இல்ல நான்!” என  அவனை தீர்க்கமாகப் பார்த்து கூறியவள் ,  ‘ஓ..அதுவும் தெரியுமா?’ என்ற அவனின் தெனாவட்டான பார்வையைக் கண்டு முனுமுனுப்புடன் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள்.  

 

 

“அதோட கூர்க்ல நடந்ததும்…” என்றாள் மிகவும் மெல்லிய குரலில், முத்தமிட்டதைக் கூறுகிறாள் என அறிந்தவன்  அப்போதும் தலைகுனிந்து நின்றிருந்தவள் மீது அதே பார்வையை தொடர்ந்தான். 

 

 

“பாப்புவா உங்களோட இருந்த ஒவ்வொரு நினைவும் எனக்கு  அவ்ளோ சந்தோஷத்த கொடுத்துச்சு. அப்பா அம்மாக்கு திதி கொடுத்த அன்னைக்கு தோள் சாய்ஞ்சு என் வேதனைய ஷேர் பண்ண உங்களதான்  ரொம்ப தேடினேன். அந்த நிமிசம்   உங்களோட அந்த பாசம், அந்த பாதுகாப்பு என் வாழ்நாள் முழுக்க வேணும்னு தோணிச்சு.   ஆனா, அத மதுவா உங்ககிட்ட சொல்ல தயக்கம்.”

 

 

“எப்பவுமே நீங்க பாப்புவோட ஜித்துவா  எனக்கு  ஸ்பெஷல்தான். ஆனா மதுவா  உங்கள தேடின அந்த நிமிசம் அது ஈர்ப்ப தாண்டி பல படி முன்ன போயிடுச்சுன்னு எனக்கு புரிஞ்சுது. எஸ், அட் தி மொமண்ட் ஐ வான்ட் டூ  ஷேர் மை லவ் வித் யூ டில் தி என்ட் ஆஃப் மை லைஃப்.” என அவன் முகத்தைப் பார்த்து கூறி முடித்தாள். 

 

 

எதுவும் பேச தோன்றாமல் அப்படியே நின்றிருந்தான் அபி. தன்னை விருப்பத்துடன் மனம்  புரிந்திருக்கிறாள் என நினைத்த அவனிற்கு, தன்னை ‘விரும்பி’ மனம் புரிந்திருக்கிறாள் என்பது புரிய மகிழ்ச்சியில்   மனம் நிரம்பி தழும்பியது.  ஆனால் அதை சாமர்த்தியமாக மறைத்தான். 

 

 

“சொல்லலயே தவிர எனக்கு உங்கமேல ரொம்ப நம்பிக்கை இருந்தது. என்னை எப்படியும் விட்டுட மாட்டீங்கன்னு. அந்த டாக்டர் சம்பந்தம் வந்தப்ப கூட நீங்க  உங்க விருப்பத்த சொல்லிடுவீங்க நினைச்சேன். ஆனா நீங்க அப்படி செய்யல….” 

 

 

“நிச்சயம் ஏற்பாடு பண்ணிட்டாங்க… அப்பவும் நீங்க எதுவும் சொல்லல. இப்ப சொல்லுவீங்க அப்ப சொல்லுவீங்கன்னு பாத்து பாத்து ஏமாந்தேன். எனக்கு புரியல! ஒருவேள நான்தான் உங்கள தப்பா புரிஞ்சிட்டனோன்னு கூட நினைச்சேன்.”

 

 

” கடைசியா ஒருவழியா உங்ககிட்ட  என்னை உணர்த்தினேன்.  நீங்க எல்லாம் பாத்துக்கீட்டீங்க.” 

 

 

பேசி முடித்தவள் சில நிமிடங்கள் அமைதியாக நின்றாள்.

 

 

“இப்ப சொல்லுங்க. என்மேல தப்பிருக்கா?” என தவிப்புடன் கேட்டுவிட்டு அவன் முகம் பார்க்க,  அவனுக்கோ அவளது நிலையும் தவிப்பும் அவன் மீதான நேசமும் புரியத்தான் செய்தது. ஆனாலும் ஏதோ ஒன்று மிச்சம்மீதியாய் மனதின் ஒரம் புகைந்து கொண்டிருந்தது. 

 

அவளைப் பார்த்தவன், “எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. ஆனா உன்னோட உணர்வுகள மதிக்கறேன். அதே மாதிரி என்னோட உணர்வுகளையும் என்னால உடனே உதறித் தள்ள முடியல.” என்றவன் திகைத்து நிற்கும் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறையை விட்டு வெளியேறிவிட்டான். 

 

 

மது அதிர்ந்த நிலையில் அப்படியே கீழே அமர்ந்துவிட்டாள். 

 

 

தாமரை இலை நீர் போல அடுத்தடுத்த நாட்கள் கடந்தது. அவள் இவன் முகம் பார்ப்பதும் இவன் அவளைத் தவிர்த்து சுற்றுப்புறமெல்லாம் பார்ப்பதும் இவர்களை வீடே  பார்ப்பதும் என நாட்கள் கடந்தது. எப்போதும் விட அதிக நேரம் அலுவலக வேலையில் தன்னை நுழைத்துக் கொண்டான் அபி. இவளுக்கோ  அவனைத் தவிர மற்ற அனைத்தும் உறைந்த நிலையிலேயே இருக்க காலம் வேகமாக கடந்தது. 

 

இப்படியே ஒரு மாதம் கடந்திருந்தது. 

 

 

அடுத்த மாதம் அவளின் அந்த மூன்று நாள் வரவும் எப்போதும் போல அவன் அவளுக்கு தேவையானதை வாங்கி கொடுக்க, “பேசமாட்டானாம்….ஆனால் இது மட்டும்…” என ஹார்மோன்களின் தாக்கத்தில் உச்சபட்ச கோபத்தில் பல்லைக் கடித்தவளுக்கு, “ஒன்றும்  தேவையில்லை போடா”  என அதை தூக்கி எரியும் ஆத்திரம் வந்தது. 

 

 

ஆனால் செய்யவில்லை. மாறாக  அவனின் அன்பை நினைத்து அழுகைதான் வந்தது. அவனும் அலுவலகம் சென்றுவிட்டான். 

 

 

அன்று பக்கத்து ஊரில் கோவில் திருவிழா என்பதால் இவளைத் தவிர்த்து அனைவரும் சென்றிருந்தனர்.  

 

 

பசி வயிற்றைக் கிள்ள பதினொரு மணி அளவில் சமையலறை வந்தவள்  உலக நாட்டுகளின் வரைபடத்தைப் போல தோசை ஊற்றி அதை கல்லிருந்து இருந்து பிரித்தெடுக்க போராடிக் கொண்டிருந்தாள். அது நீயா? நானா? பார்க்கலாம் என மல்லு கட்டியது இவளுடன். பல தோசைகள் தீய்ந்து உயிரை விட்டிருக்க, தன்னவன் மீதான கோபம், அகோரப் பசி, அதீத வயிற்றுவலியில்  இருந்தவளுக்கு தோசையும் வருவேனா என்று இருக்கவும் ஆத்திரத்தில் மாவு டப்பாவை கீழே தள்ளிவிட்டு விட்டாள்.

 

 

புசுபுசுவென்று மூச்சை விட்டவள்  கொட்டிய மாவையே பார்த்திருக்க, மெல்லிய சிரிப்பு சத்தம் கேட்டது. 

 

 

அபிதான் நின்றிருந்தான். சிரிப்பை அடக்கியபடி. 

 

 

முன்பே வந்திருந்தவன் நிலைப்படியில் சாய்ந்து அவள் தோசை ஊற்றும் அழகை  வேடிக்கைப் பார்த்திருந்தான். 

 

 

அவனது அடக்கப்பட்ட சிரிப்பைக் கண்டு மேலும் ஆத்திரம் பொங்க தோசைக் கரண்டியை தூக்கி  எறிந்தவள் வெளியே செல்ல எத்தனிக்க, கொட்டிய  மாவின்மீது கால் வைத்து வழுக்கி கீழே விழுந்துவிட்டாள்.

 

 

இதை எதிர்பார்க்காத அபி, “ஏய் மது பாத்து” என பதறியபடி அவளை தூக்கிவிட, எழுந்து  அவன் சட்டையை கொத்தாக பிடித்தவள், “போடா! நான் விழுந்தா என்ன? செத்தா என்ன? உனக்கென்ன கவலை. நீ என்கூட பேசாத போ! எனக்கு தெளிஞ்சிருக்கவே வேண்டாம். அப்படியே பைத்தியமாவே இருந்திருக்கனும். தெளிஞ்சு இப்பதான் பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு. எல்லாம் உன்னால உன்னால மட்டும்தான்.” என வெடித்தவள் அவன் மார்பிலேயே சாய்ந்து கதற, அவளது பேச்சிலும்,அழுகையிலும் அதிர்ந்தவன் அவளை இறுக  அணைத்தவாறு, “மிளா என்னடா…” என அவள் முகம் பார்க்க முயன்றான். 

 

 

ஆனால் அவளோ விடாமல்  கதறிக் கொண்டிருந்தவள், “போ… நான் மறுபடியும் பைத்தியமாகறேன். அப்பதான் உனக்கு என்னை பிடிக்கும்” என விடாமல் பிதற்றினாள். 

 

அதில் மேலும் அதிர்ந்தவன் , “மிளா…இப்படிலாம் பேசாத” என கண்டித்தான். 

 

 

அதில் அவனிடமிருந்து பிரிந்தவள், கண்கள் கலங்கி சிவந்திருக்க, “என்னை விட்டுட்ட நீ” என்றாள் பரிதாபமாக. 

 

 

அதில் உருகியவன், “இல்லடி” என்றான் ஆதூரமாய் அவள் கண்களைத் துடைத்து. அவன் கைகளை கோபமாய் தட்டி விட்டவள், “இல்ல நீ என்னை விட்டுட்ட…” என்றவாறு என்ன செய்கிறோம் என யோசிக்காமல் மீதியிருந்த மாவை எடுத்து அவன் தலையோடு  கவிழ்த்தியிருந்தாள். 

 

 

அவன் ஒன்றும பேசாமல் முகத்தில் வழிந்த மாவை துடைத்து, “கோபம் போச்சா” என கேட்க,  இப்பொழுது இவள் அதிர்ந்து  பார்த்திருந்தாள். 

 

 

காரணம் பின்னால் நின்றிருந்த காயத்ரியும், ஜனனியும். ஜனனியின் “அண்ணா” என்ற  அதிர்ந்த  குரலில் பின்னால் திரும்பியவன், மீண்டும் திரும்பி மதுவைப் பார்க்க, ‘அச்சோ’ என்றானது. அத்தனை குற்றவுணர்ச்சி, இயலாமை, தவிப்பு அவள் கண்ணில்!

 

 

மதுவிற்கும் தான் செய்தது மிகவும் அதிகப்படி என்றே தோன்றியது.   யாரையும் கண்கொண்டு காண முடியவில்லை. தலை கவிழ்ந்து நின்றவளுக்கு யாரையும் பார்க்காமல் இங்கிருந்து செல்ல வேண்டும் என மனம் நினைத்தாலும் செல்ல முடியாதபடி கால் சுளுக்கி இருந்தது. ஒரு எட்டு கூட  அவளால் வைக்க முடியவில்லை.

 

 

அபி  அவளை உணர்ந்தவனாய், “அம்மா இத க்ளீன் பண்ணிட்டு மதுக்கு சாப்பிட எடுத்து வாங்க. ஜனனி அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணு” என்றவாறு மதுவை  கையில் ஏந்திக்கொண்டு அறைக்கு சென்றுவிட்டான். 

 

 

அதிர்ந்து நின்ற ஜனனி , “ம்மா என்ன நடந்துச்சு இங்க?”  

 

 

“ச்சு…அதெல்லாம் நீ ஏன் பாக்கற… இதை யார்கிட்டயும் சொல்லாத. மாவ துடைச்சு விடு நான் தோசை ஊத்தறேன்.” என்றவாறு வேலையைப் பார்க்கச் சென்றார். அதன்பின் ஜனனியும் அமைதியாக வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

 

 

மேலே சென்ற அபி, மதுவை குளியலறையில்  விட்டு மாற்றுடை எடுத்து கொடுத்துவிட்டு வேறு அறைக்கு குளிக்கச் சென்றுவிட்டான். 

 

 

சற்று தெளிந்திருந்த மதுவிற்கோ, “போச்சு… போச்சு… ஒன்னும் பண்ணாதப்பவே பேசாம இருந்தான்… இப்ப மாவபிஷேகம், போடா வாடான்னு வேற பேசியிருக்கேன், அதுவும் அத்தம்மா ஜனனி முன்னாடி. என்ன பண்ண போறானோ? அடிச்சிருவானோ?  ச்சே … ச்சே அவ்ளோ தூரம் போகமாட்டான்…” என்று பலதும் யோசித்தவாறு படபடப்பிலேயே குளித்து மெதுவாக பெட்டில் வந்து அமர்ந்தாள். 

 

 

அப்போது  சரியாக அபி உள்ளே வரவும், காயத்ரியும் தோசையை கொண்டு வந்திருந்தார். அதை வாங்கியவனிடம் “வேறு எதுவும் வேண்டுமா?” என கேட்க, “வேண்டாம்” என்று அவரை அனுப்பி கதவை சாற்றிவிட்டு வந்தான். 

 

  தலை குனிந்து அமர்ந்திருந்தவள் முன் தோசை பிய்த்து நீட்டினான்.  அவனை ஏறிட்டுப் பார்த்தவள்,  கண்கள் கலங்கியவாறே அதை வாங்கிக் கொண்டாள். அவனைப் பார்த்தவாறே அனைத்து தோசையையும் உண்டுமுடித்தாள். பின் அபி கை கழுவிவிட்டு வந்தவன் அவளருகில் வந்து  அவளைப் படுக்க வைத்து மெதுவாக தட்டி கொடுக்க அனைத்தும் மறந்து அவனை இறுக்கி அணைத்தவாறே தூங்கிப்போனாள். 

 

 

அவள் தூங்குவதை உறுதி செய்தவன் நெற்றியில் முத்தமிட்டவாறு, “என்ன கோபம் வருது உனக்கு. காட்டு பூனையாட்டம் பிராண்டி வைக்கற…ம்.” என மெல்லிய குரலில் அவளுடன் பேசினான். 

 

 

அவனுக்கு மதுவின் மேல் கோபம் எல்லாம் இல்லை. ஒரு ஆதங்கம் மட்டுமே.  அதுவும் அன்று அவள் சொன்ன விளக்கத்தில் சென்றுவிட்டது. ஆனால் , என்னை  பாப்புவ நினைச்சு தவிக்க வச்சல்ல அத நீயும் கொஞ்ச நாள் அனுபவி…” என்ற சிறுபிள்ளை தனத்தில்தான் பேசாமல் இருந்தான். 

 

 

 ஆனால் தன்னை பார்க்கும் போதெல்லாம் அவள் விடும் பரிதாப லுக் இவனுக்கு சிரிப்பை வரவழைக்கும். அதில்தான் இல்லாத வேலையெல்லாம் இழுத்துபோட்டு செய்துவிட்டு இரவு தாமதமாக  வருவது. 

 

 

தாமதமாக வருபவன் அவள் உறங்கியதை உறுதி செய்து கொண்டு தன் கை வளைவுக்குள் அவளை கொண்டுவந்து தானும் நிம்மதியாக உறங்கிவிடுவான். காலையிலும் இவன் முதலில் எழுந்து கொள்வதால் இதுவரை அவனது அணைப்பு அவளுக்கு தெரியாமல் போனது. 

 

 

விட்டிருந்தால் இன்னும் இரண்டு நாளில் அவனே சமாதானப்படுத்தி இன்ப அதிர்ச்சி அளித்திருப்பான். அதற்குள் இவள் அவனுக்கு பேரதிர்ச்சி அளித்துவிட்டாள். 

 

 

அவள் தூங்கியதும் அலுவலகத்திற்கு தயாராகி  கீழே வந்தவனை அவனது  அன்னை பிடித்துக்கொண்டார் சாப்பிட்டு செல்லச் சொல்லி, அவனும் தட்டாமல் உணவு மேசையில் அமர்ந்து கொண்டான். 

 

 

அவர் பரிமாற மௌனமாக உண்டவன்,  உணவு முடியும் தருவாயில், “ம்மா…”

 

 

“ம்…என்ன கண்ணா…” 

 

 

“உங்களுக்கு என்ன எதுக்குன்னு தெரிய வேண்டாமா?”

 

 

எதைக் கூறுகிறான் என்று அறிந்தவர், “அது எதுக்கு எனக்கு? அது உங்க அந்தரங்கம். அதுல நான் நுழையமாட்டேன்.” என்றிருந்தார். 

 

 

 “அப்ப சண்டை போட்டுகிட்டா கூட என்னன்னு கேட்க மாட்டீங்களா?” என்றான் சிரிப்புடன்.

 

 

“சண்டை இல்லாத குடும்பம் எங்க இருக்கு? ஆனா! என்ன சண்டை வந்தாலும் நீ அவள விடமாட்ட… அவளும் உன்ன விட்டு போக மாட்டா. அதனால நீங்களே  பேசி தீர்த்துக்கோங்க.” என்றவர் இவன் உண்டு முடிக்கவும் தட்டை எடுத்துக்  கொண்டு சென்றுவிட்டார். 

 

 

அன்னையின் பதிலில் அத்தனை நிறைவாய் உணர்ந்தான் அபி.  அடுத்த இரண்டு நாட்கள் அப்படியே செல்ல, மூன்றாம் நாள் அபி இரண்டு விமான டிக்கெட்டுகளுடன்  வந்திருந்தான். 

 

 

மதுவையும் தயாராகச் சொல்ல, “மும்பைக்கே கொண்டுவிடப் போகிறானா?” என அதிர்ந்தவள்  பேக்கிங் செய்யும் அவனையே பார்த்திருக்க அதைக் கண்டும் காணாமல் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆம்! அன்று அப்படி நடந்ததில் இருந்து அவனுடன் பேசுவதில்லை. காந்த முனைகளைப் போல வடக்கும் தெற்குமாய் இருந்தனர் இருவரும். 

 

“எங்க போறோம்” ஒருவழியாக மௌனத்தை உடைத்து கேட்டிருந்தாள். 

 

 

“ஏன் எங்கன்னு சொன்னாதான் வருவீங்களோ மேடம்” என இடக்காய் கேட்டவன், “எனக்கு அபீஷியலா ஒரு வேலை.” என்றான் சாதாரணமாய்.

 

 

“அதுக்கு நான் எதுக்கு?” 

 

 

“உன்ன வரியான்னு கேக்கல… நீ வர அவ்வுளவுதான்” 

 

 

“அதிகாரம் …அதிகாரம்” என அவளால் பொருமதான் முடிந்தது.

 

 

அடுத்த சில மணிநேரங்களில் இருவரும் பெங்களூரை நோக்கி பறந்து கொண்டிருந்தனர். 

 

 

ஆம்! அதே கூர்க். அதே காட்டேஜ். 

 

 

கூர்க் என்றதும் மதுவும் அமைதியாகிவிட்டாள். என்னவோ நடக்கட்டும் என்று. 

 

 

இம்முறை தனி குடிலாக பதிவு செய்திருந்தான் அபி. இவர்கள் அங்கு செல்ல நடு இரவானதால் சென்றதும் படுத்து உறங்கிவிட்டனர்.

 

 

காலையில்  அவள் எழும் முன்பே எழுந்தவன், சாப்பிட்டு தயாராகி அவளை வெளியே அழைத்துச் செல்ல அவளும் அமைதியாக இணைந்து கொண்டாள். 

 

 

அவளுக்கும் சென்றமுறை வந்த போது நடந்தவற்றை அசைபோட வேண்டியிருந்தது. ஃபால்ஸ், பார்க், தேயிலைத் தோட்டம் என வரிசையாய் சென்றனர். 

 

 

அத்தனை இனிமையான நினைவுகள். அதுவும் அவன் முத்தமிட்ட அந்த இடம் சற்று நேரம் நின்று பார்த்துவிட்டுதான் வந்தாள்.  அபியும் தடுக்கவில்லை. 

 

 

காலை மதியமானது… மதியம் மாலையானது… தேவையானதை தவிர ஒரு வார்த்தை பேசவில்லை அவன். 

 

 

சாவி கொடுத்த பொம்மை போல அவன் இழுத்த இழுப்புக்கு செல்வது அவளுக்கு சலிப்பைக் கொடுத்தது.

 

 

“கைடு கூட பேசிட்டு வருவான்…இப்படி உம்முனு மூஞ்சிய வச்சிக்க ஏன் இங்க கூட்டிட்டு வரனும். அதுவும் அஃபீஷியல்னு பொய் சொல்லி. ” என கோபம் மூள, ஒரிடத்தில் அமர்ந்து விட்டாள். குளிர் வேறு ஊசியாய்க் குத்த கைகளை உரசி கன்னத்தோடு வைத்துக் கொண்டிருந்தாள். 

 

 

அபி சற்று முன்னே சென்றுவிட்டான். இவளைத் திரும்பி பார்க்க இவள் அங்கேயே அமர்ந்துவிட்டது தெரிந்தது. 

 

 

‘கால் வலிக்கிறதோ’ என நினைத்து அருகில் வந்தவன், “இன்னும் கொஞ்ச தூரம்தான். காட்டேஜ் வந்துடும்” என கூற  அவனை முறைத்தவள் அசையவே இல்லை.

 

 

“ம்…பார்றா முறைக்கறா…” என நினைத்தவன், “இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டிடும்” என தகவல்போல சொல்ல, யாருக்கோ என அசட்டையாய்  அமர்ந்திருந்தாள் மது.

 

 

வந்ததில் இருந்து பேர் சொல்லிகூட  அழைக்கவில்லை. என்னவோ யாரிடமோ பேசுவது போல பேசுகிறான் என நினைத்தவள் “போடா” என்னும் பார்வை பார்த்துவிட்டு வேடிக்கை பார்க்கலானாள். 

 

இது சரிவராது என நினைத்தவன், “காலுகிட்ட பூரான்…” என கத்தவும் தன்னைமீறி, “எங்க… எங்க…”  என குதித்தவாறு எழுந்திருந்தாள் மது.

 

 

இதுதான் சமயமென அவளை கையில் ஏந்திக்கொண்டான்.

 

 

அதில் அவனை முறைத்தாலும் அசையாமல் வந்தாள். 

 

 

“கையில் மிதக்கும் கனவா நீ… ன்னு பாடதான் நினைக்கறேன் . ஆனா எங்க?  இங்க பாறையால்ல கனக்குது” என ஓரக்கண்ணில் அவளைப் பார்த்து முனுமுனுக்க, வெகுண்டவள் அவன் மேலிருந்தவாறே, “கேட்டனா…நான் கேட்டனாடா தூக்குன்னு… விடு விடு என்னை…” என திமிறி அவனை அடித்து வெளுத்துக் கொண்டிருந்தாள். 

 

 

“ஷ்… சும்மா வாடி… எல்லாரும் வேடிக்கை பாக்கறாங்க…” என அவன் கடியவும்தான்  சுற்றுபுறத்தை கவனித்தாள். நிஜமாகவே சிலர் இவர்களை ஆர்வமாய் பார்க்கவும் அதன்பின் அமைதியாக வந்தாள். 

 

 

குடிலிற்கு வந்ததும்  அவளை இறக்கிவிட, ” என்ன நினைச்சிட்டு இருக்க நீ.  நான் … ” என ஏதோ கூற வந்தவள் அவன் அசையா பார்வையில் கட்டுண்டாள்.

 

 

 அவளருகில் வந்தவன், “இன்னும் அஞ்சு நிமிஷம்தான் டைம். போய் குளிச்சிட்டு வர. இல்லனா நான் குளிக்க வைப்பேன். வசதி எப்படி?” என நிறுத்த, “ரௌடிசம் பண்ற நீ ” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு . மரியாதை எல்லாம் எங்கேயோ போய்விட்டது. 

 

 

“அஃப்கோர்ஸ் … இப்ப நீ போகல நான் செயல்ல காட்டுவேன்”  என்றான் விஷமமாக. அதில்  கோபமாக மாற்றுடையுடன் குளிக்க சென்றுவிட்டாள்.

 

 

அவள் சென்றதும் அபி இரவு உணவிற்கு கூறிவிட்டு வெளியில் வேடிக்கை பார்க்கலானான். 

 

 

அவள் வரவும் தானும் சென்று குளித்து வர உணவும் வந்துவிட்டது. மணி ஏழுதான். ஆனால் நடுஇரவைப்போல இருந்தது.  குளிரும் உடலைத் துளைத்தது. 

 

 

அவளுக்கு பரிமாறிவிட்டு தானும் சாப்பிட்டவன் மீண்டும் மௌனியானான். 

 

 

மதுவால் புரிந்து கொள்ள முடியவில்லை. சற்று நேரம் முன் பேசிய பேச்சென்ன இப்போது அமைதியாக  உண்பதென்ன, “யார்டா நீ?” என்றவாறு அவனைப் பார்த்திருந்தாள். இந்த நிலை எப்போது சரியாகும். அவனுடனான அந்த ஒருமாத  வாழ்வுக்கு மனம் அப்பட்டமாய்  ஏங்கியது. 

 

 

அமைதியாக உண்டு முடித்து எழுந்தவள் ஜன்னலில் சாய்ந்தவாறு  நிலவைப் பார்த்திருந்தாள்.

 

 

குளிர்க்  காற்று உடலைத் துளைத்து ஊடுருவியது. மேனி சிலிர்க்க மெல்லிய நடுக்கம் கண்டது உடல். ஆனால் அதுவும் பிடித்திருந்தது. 

 

 

கண்மூடி அதை ரசித்திருந்தவளின் காதில் , “இப்ப சொல்லுடி…” என்ற குரல் உஷ்ணமான மூச்சுடன் மோதியது. 

 

 

அதில் பட்டென்று திரும்பியவளை இரு கரம் வளைத்துப் பிடித்தது. 

 

 

அபிதான், “இப்ப சொல்லுடி… அன்னைக்கு என்ன சொன்னயோ அத இப்ப  சொல்லு…” என்றான் ஒவ்வொரு சொல்லுக்கும் இறுக்கத்தை கூட்டியவனாக.  

 

 

இந்த “டி” புதிது. முன்பு இதுபோல அழைத்ததில்லை. ஆனால் அவளுக்கு மிகவும் பிடித்தும் இருந்தது. 

 

 

அன்று அவளது பேச்சுகள் அவனை மிகவும் பாதித்திருந்தது உண்மை. இவள் மறைக்கலாம் இதே நான் பேசாமல் இருந்தால் என்னென்ன பேசுகிறாள் என்று.  ஆனால் அவளின் அப்போதைய நிலையறிந்து அமைதி காத்திருந்தான். 

 

 

அவனது கேள்வி புரிந்ததும் திமிராக அவனைப் பார்த்தவள், ‘ஏன் சொல்ல மாட்டனா?’ என்ற வீம்புடன், “இப்பவும் சொல்லுவேன். நான் பை…”  வார்த்தைகள் தடைபட்டது.

 

 

எய்தவளை விட்டு அம்பை தண்டித்துக் கொண்டிருந்தான். கடுமையான தண்டனைதான். ஆனால் எய்தவளுக்கோ தண்டனையில்  மனம் குளிர்ந்து அமைதியடைந்ததுதான் உண்மை.

 

 

நெடுநேரம் கழித்து அவன் பிரிய தன் கோபம் தொலைத்து அவனைக் கேட்டிருந்தாள், “கோபம் போயிடுச்சா?” என்று. 

 

 

“இல்ல போகாது… என்ன பேச்சு பேசற நீ. நான் உன்னை விட்டுட நினைப்பனா?” என ஆதங்கப்பட குட்டி குட்டி முத்தங்கள் வைத்து அவனை சமாதானப்படுத்தினாள்.

 

 

 சிறிது நேரம் அவள் சமாதானத்தில் கரைந்தவன், “மிளா!” என்றான். 

 

 

இப்போது தண்டனையளிப்பது அவள் முறையானது.  சிறிது நேரத்தில் விலகியவள், அவன் மேலே சாய்ந்து கொண்டு, “இப்படி கூப்பிட ஒரு மாசம் ஆச்சா?” என மேலும் அவனுள் புதைய தானும் அணைத்தவன், “இப்ப புரியுதா அன்னைக்கு எனக்கும் இப்படிதான் இருந்தது.”

 

 

புரிந்தது என்று தலையசைத்தவள், “அதுக்காக இப்படியா? அது சின்ன விஷயம். இனி இப்படி பண்ணாதீங்க.  ஐ ஃபெல்ட் லோன்லி.” என குரல் கமற கூறினாள். 

 

 

” உணர்வுகள்ள சின்னது பெருசுன்னு இல்ல மது.  என்னோட சின்ன உலகத்துல என்னையே சுத்தி வந்து என்னை கொண்டாடின பட்டாம்பூச்சி திடீர்னு  காணாம போகவும் ஐ ம் ஆல்சோ ஃபெல்ட் லோன்லி.  எனக்கு, நீ ஞாபகம் வந்தத மறைச்சன்னு தெரிஞ்சப்போ கோபம், ஆதங்கம் எல்லாம் வந்ததுதான். ஆனா நீ உன்னோட உணர்வுகள சொன்னப்ப என்னால புரிஞ்சிக்க முடிஞ்சது.” 

 

 

முகத்தை நிமிர்த்தி அவனைப் பார்த்தவள், “அப்பறமும் ஏன் என்கிட்ட பேசல?” 

 

 

” அது சும்மா… நான் பட்ட அவஸ்தைய நீயும் கொஞ்சம் படலாமேன்னுதான்…” எனக் கூறவும்  ‘அடப்பாவி’ என பார்த்திருந்தாள்.

 

 

“ஃபிராடு” என முனுமுனுக்க, “உன்கிட்ட மட்டும்” என்றான் கொஞ்சலாக. 

 

 

“ஆமா அதென்ன அப்பப்ப மரியாதை காணாம போய் வாடா போடான்னு வானத்துல பறக்குது” என காதை பிடிக்க,  அசடு வழிந்தவள் , “ஹி..ஹி அது ஒரு ஃப்ளோல வந்துடுது…”

 

 

“ஹான் வரும்…வரும்.  இனி வரட்டும்…” 

 

 

“வந்தா என்ன பண்ணுவீங்களாம்… பாப்புவா மாறி ஜித்துகிட்ட போட்டு குடுப்பேன் ஆமா!” என்றாள் கெத்தாக.

 

 

அதில் சிரித்தவன், “நிஜமா இப்பவும் சில சமயம்  பாப்புவ உன்கிட்ட தேடி பாப்பேன். ” என்றான் சீரியஸாக.

 

 

அதில் இவளும் முகம் மாறியவள், “அதுவும் நான்தான… எனக்கே என்மேல பொறாமை வர வச்சிடுவீங்க போல…”  என்றாள் பெருமிதம் கலந்த சிரிப்புடன் . 

 

 

“ஹேய்…அப்படிலாம் கெளம்பிறாத…” என சிரித்தவன், “ஆனா பாப்பு என்கிட்ட உரிமையா நடந்துப்பா… என்கிட்ட எந்த எல்லைகளும் இல்ல அவளுக்கு. அஃப்கோர்ஸ் எனக்கும் பாப்புகிட்ட அப்படிதான். அதுதான் எனக்கும் பிடிச்சிருந்தது.”  என வேறெங்கோ பார்த்துக் கொண்டு கூறினான்.

 

 

அவன் கண்களில் தெரிந்த ஏக்கத்தில், “இப்ப பாப்புவ தேடறீங்களா?” என்றிருந்தாள். 

 

 

“என்ன? புரியல…” என்றவன் அவளைப் பார்க்கவும், 

 

 

“இல்ல இப்ப என்கிட்ட பாப்புவ தேடறீங்களான்னு கேட்டேன்”

 

 

“ம்ஹீம்… இப்ப என்னோட மிளா வ தேடத்தான் ஆசை” என்றவன் அவளை அள்ளிக் கொண்டான். 

 

 

இனி அவர்களுக்குள் கேள்விகளும் விளக்கங்களும் தேவையில்லை. 

 

 

உண்மையான உறவென்பது உணர்வதும்… உணர்த்துவதும்…

 

 

இங்கு அபி உணர்த்த மது உணர்ந்து கொண்டிருந்தாள். 

 

 

 

காலை அணைப்பின் வாசமும் 

காதில் கிறங்கும் சுவாசமும் 

சாகும் வரையில் தீர்ந்திடாது வா உயிரே…

காதில் உதைக்கும்  பாதமும் 

மார்பில் கிடக்கும் நேரமும் 

வாழும் வரைக்கும் தேய்ந்திடாது வா உயிரே…

ஆணில்  தாய்மை கருவாகும்

ஈரம் பூத்து மழையாகும் 

கண்ணீர் சுகமாய் இமைமீறும்  

காலம் உந்தன் வரவாகும்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!