am30

am30

ஆசை முகம் 30

 

அதிகாலையிலேயே வாணிக்கு விழிப்பு வந்திட, முதலில் தான் எங்கு இருக்கிறோம் என நிதானமாய் யோசித்து உணர்வுக்கு வந்தாள்.

முந்தைய நாளின் இரவுப் பொழுது நினைவில் வந்திட, அனைத்தும் கனவா இல்லை நனவுதானா என  உறுதிப்படுத்திக் கொண்டாள்.  அவளால் அத்தனை சீக்கிரமாய் நடந்ததை உண்மை என நம்ப இயலாத நிலை.

உணமை புலப்பட்டதும், அப்போதைய உணர்வுகள் தற்போதும் தோன்றி, உற்சாகத்தோடு உல்லாச மனநிலைக்கு வந்திருந்தாள்.

தனதருகே வேந்தன் முதுகுகாட்டி உறங்குவது தெரிந்தது. வாணிக்கு அதற்குமேல் உறக்கம் வராது என்பது திண்ணம்.

எழுந்து செல்ல முடியாத அளவிற்கு, துறைமுகத்தை நெருங்கும் கப்பலின் நிலையில் பெண் இருந்தாள்.

படுக்கையில் படுத்தவாறே, புரண்டு புரண்டு முந்தைய நாளின் யோசனையில் நேரம் விரைந்தது.

வாணியின் புரளலால் உண்டான அணுக்கத்திலேயே வேந்தனது தூக்கம் கலைந்திட, “எழுந்தாச்சா!”

“…”

பதிலில்லாமல்போகவே, தூக்கத்தில்தான் கால் வலியால் புரண்டு கொண்டிருக்கிறாளோ என எண்ணித் திரும்ப, வேந்தனைப் பார்த்தபடியே, ஆனால் பெண்ணது சிந்தனை இங்கில்லை.

வேந்தன், “கண்ணை திறந்துட்டே கனவு காணுறியா!”

வேந்தனது பேச்சில் நனவிற்கு வந்தவள், “கனவெல்லாம் காணல!”

“அப்ப நான் கேட்டதுக்கு பதிலே வரல!”

“என்ன கேட்டீங்க!”

“அப்ப கனவுலதான இருந்திருக்க!”

“அப்டியே வச்சுக்கங்க!” சரணடைந்தவளை, தனது கரங்களுக்குள் கைது செய்திருந்தான்.

இதயங்களின் ஓசை பரிமாறப்பட்டது. அத்தனை நெருக்கம்!

இதழ் வழி உபசரிப்பில் தேனமிர்தம் பகிரப்பட்டது.

இதய சந்தங்கள் எழுப்பிய சத்தத்தில் இனிய மௌன இசை இருவரது இதயங்களுக்கிடையே இடம்பெயர்ந்திருக்க, அந்த இனிமையில் சஞ்சரித்திருந்தனர்.

வாணிக்கு, அனுசியா கூறியது சட்டென நினைவில் வந்திட, “மாமூ! பாட்டிகிட்ட போகணும்!”

இடையில் எழுந்த தடையில் உண்டான எரிச்சலோடு, “எதுக்கு?”

“எதுக்கா?  நாளைக்கு கொஞ்சம் வெளியலாம் போக வேண்டியிருக்கு, காலையில எழுந்ததும் என்ன ஏதுன்னு சொல்றேன்னு சொன்னாங்களே!”

“ம்ச்சு” சலித்துக் கொண்டாலும், பெண்ணை தனது அணைப்பில் வைத்தபடியே, “இன்னிக்கு கீழயே போகக்கூடாது!” ஆனால் அதற்குமாறாக தாபத்தின் தாகம் காரணமாக மேலும் முன்னேறியிருந்தான்.

அவனிடமிருந்து விலக நினைத்தவளின் உடல்மொழியின் ஒத்துழையாமை இயக்கத்தினை உணர்ந்தவன், சற்று நிதானிக்க அதைப் பயன்படுத்த எண்ணியவள், “லேட்டா போனா பாட்டி எதாவது நினைச்சிப்பாங்க!”

“அதுலாம் ஒன்னும் நினைக்கமாட்டாங்க!” சமாதானம் செய்தாலும், பெண்ணது கழுத்து வளைவில் வேந்தன் முகம் புதைத்திருக்க, வாணிக்கு கூசியது.

தாயின் வார்த்தைகள், மனைவியின் தயக்கம் அனைத்தும் வேந்தனை நிதானிக்கச் செய்திருக்க ஒரு முடிவுக்கு வந்தவனாய், நெளிந்தவளை விடாமல் கைவளைவில் வைத்தபடி, “இங்க உனக்கு எல்லாம் சௌகர்யமா இருக்கானு பாக்கறியா!”

“இப்டிப் புடிச்சிட்டா எப்டிப் பாக்கறதாம்” இடக்காகக் கேட்க, வாணியை விட்டவன், தானும் உடன் எழுந்து அறையைவிட்டு வெளியே வந்தார்கள்.

கால்வலி தற்போது எப்படி இருக்கிறது எனக் கேட்டு, பரவாயில்லை என பெண் கூறியதும், ஒவ்வொரு இடமாய் அழைத்துச் சென்று காட்டத் துவங்கினான்.

வெளியில் வந்ததும், “அங்க ரூம்லயும் பெட், இங்க வெளியேயும் எதுக்கு?”

“இது…” என வேந்தன் வாணியின் காதில் கிசுகிசுக்க “ச்சே போங்க மாமூ…” பெண் சிவந்து போனாள்.

குங்குமமாகக் காட்சியளித்த கன்னத்தை ஆட்காட்டி விரலால் தொட்டுப் பார்த்தான் வேந்தன்.

“என்ன மாமூ!”

“ம்.. என் பேச்சைக் கேட்டதும், கன்னம் சிவந்த மாதிரி இருந்தது.  அதான் தொட்டுப் பார்த்து, கலர் கூடுதா, குறையுதானு செக் பண்ணேன்”

வாணி நாணம் கலந்து பொய்யாய் முறைத்தபடியே, “என்ன தெரிஞ்சுது இப்ப!”

“பச்சையா பேசுனாலும், சிவப்பாதான் தெரியுது. பசக்குனு தொட்டாலும் சிவப்பாதான் தெரியுது!”

“ஆங்!” என வாயை மூடாமல் திறந்தபடி ‘இவங்கதானா… இப்டியெல்லாம் பேசுறது’ என யோசித்தவள், வேந்தனது பேச்சின் சாராம்சம் புரிந்திட, “என்ன மாமூ இப்டியெல்லாம் பேசுறீங்க!” உடல் கூசக் கேட்டாள்.

“நம்பாட்டா போ!” என்றவன் சட்டென நடப்பிற்கு வந்து, “நம்ம போர்சன்கு ஏற்கனவே உன்ன கூப்பிட்டேன்.  நீதான் வரலை!” பழைய மனத்தாங்கல் இன்று வெளிவந்திருந்தது.

“அப்ப கீழ யாரும் இல்ல.  வீட்டை அப்டியே போட்டுட்டு உங்ககூட மேல வந்தா, தேவையில்லாத பேச்சு வரும்ல!”

“வரும்… ஆனா இனி வராது!”, என பின்னால் இருந்தவாறு பெண்ணை அணைத்தவன், முகத்தை வாகாய் இழுத்து கன்னத்தில் பொய்க்கடி ஒன்று கடிக்க,

“ஆவ்…” என்று கத்தினாலும், கிறங்கினாள் பெண்.

விலகவும் முடியாமல், விரைந்து முனையவும் முடியாமல் இருந்த நிலை இருவருக்குமே தர்மசங்கடமாய்.

“அன்னைக்கும் இதுக்குத்தான் கூப்டீங்களா!” அதே கிறக்கத்தோடு மெய்மறந்த நிலையில் வாணி கேட்டதும், அத்தனை இயக்கத்தையும் நிறுத்தி சில நொடி நிதானித்தவன், சட்டென பெண்ணை விட்டு விலகியிருந்தான்.

பெண் விழப் போய் சமாளித்திருந்தாலும், பதறாமல் பற்றற்றவனைப்போல பெண்ணை விட்டு வெகுதூரம் சென்றிருந்தான் வேந்தன்.

பெண்ணுக்குள் அத்தனை ஏமாற்றம்.  இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்பதுபோல. ஆனால் விலகியவன் விரைப்பாய் அடுத்து கவனத்தோடு அங்கிருந்தவற்றைப் பற்றி இயந்திரமாய் கூறியவாறே முன்னேறிச் சென்றான்.

சடுதியில் மாறியிருந்தான்.  அவன்தான் சற்று முன்பு தன்னை அணைத்திருந்ததா, சல்லாபித்தா என பெண்ணுக்கு சந்தேகமே வந்திருந்தது.

தயங்கி நின்றவளைப் பார்த்து, எதுவுமே நடவாததுபோல “ஏன் அங்கயே நின்னுட்ட, சீக்கிரமா வா, அடுத்து பாக்கலாம்” என முன்னே அகல, வேந்தனது முகத்தொனி தனது பேச்சால்தான் வாடியதாக வாணிக்குத் தோன்றியது. அது வருத்தத்தை தர, சற்று நேரம் அவன் சொன்னதைக் கவனித்து, தலையசைத்தாலும், கவனம் செலுத்த இயலாமல் இருந்தாள். வேந்தனது இறுக்கம் பெண்ணைத் துன்புறுத்தியது.

வேந்தனது நிலை கவலையைத் தந்திட, “மாமூ… பாட்டீமா நாளு கிழமை பாத்து சொல்றேன்னு சொன்னாங்களே! என்னிக்காம்”, என பேச்சை மாற்ற

“மேபி டுடே நைட்” தோளைக் குலுக்கியவன், அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமில்லை என்பது போன்ற பதிலோடு முடித்திருந்தான்.  அதன்பிறகும் இலகுவாகி சரியாகவில்லை.

பெண் முதலிரவைப் பற்றிக் கேட்டதே, பழையபடி இலகுவாவான் என நினைத்துக் கேட்க, வேந்தனது உடல்மொழி மட்டுமல்லாது, அவளை பொருட்டாகக்கூட அதன்பின் கருதாது, வீட்டின் பகுதியை பற்றிய விளக்கங்களை அளித்தபடியே நடந்தான்.

பெண்ணாக அருகில் சென்றாலும் தள்ளிச் சென்றான். கையைப் பிடித்து நிறுத்தியவள், “விளையாட்டுக்குத்தான கேட்டேன்.  அதுக்கு கோவிச்சிட்டீங்களா?” என தனதிரு கரங்களைக் கொண்டு வேந்தனது கன்னம் தாங்கிக் கேட்டாள்.

“…” பெண்ணது கண்களை ஊடுருவிச் சென்றது பார்வை. சிலநொடியில் வாணியின் கைகளை விலக்கிக் கொண்டவன், “நேரம் போகுது வாணீ” என அதே இறுக்கத்தோடு தனது பணியைத் துவங்கியிருந்தான்.

என் கடன் பணி செய்து கிடப்பதே என்பதுபோல நடந்து கொண்டவனை, தொடர இயலாமல், மாற்ற முடியாமல் திணறினாள்.

பெண்ணுக்குத்தான் தர்மசங்கடமாக இருந்தது.  வேந்தன் இலகவே இல்லை. ஆனால் பெண் கேட்டதற்கு இயந்திரத்தனமாய் பதில் வந்தது.

பேசவாவது செய்கிறானே என வம்படியாய் பெண் எதாவது கேட்டு வைக்க, சிரத்தையோடு பதில் கூறியவாறு வந்தான்.

“கீழ கிச்சன் இருக்கும்போது இங்கயும் எதுக்கு மாமூ?”

“முத முதல்ல கட்டின வீடு இதுதான்.  இங்கதான் வெற்றிக்கு கல்யாணம் ஆகி அவங்க ஃபேமிலி, அம்மா, நான், கலை எல்லாம் ஒன்னா இருந்தோம். லேட் நைட் வீட்டுக்கு வந்தா, கீழ போயி அவங்களை தொந்திரவு பண்ண முடியாதுல்ல.  அப்ப யோசிச்சுப் பண்ணதுதான் இங்க”

“ஓஹ். அப்ப சமைப்பீங்களா?”

“அவசியத்துக்கு சிம்பிளா எதாவது செய்துப்பேன்”

“அப்புறம் ஒரு வீடு கட்டி, அதை கலை மாமாக்கு குடுத்திட்டீங்களாக்கும்”

“எப்டி சரியாச் சொல்ற!”

“இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு!”

சமீபமாய் இங்கிருந்தபோது அனைத்தையும் பார்த்திருந்தவள்தானே.

இப்படி பல கேள்வியின் வாயிலாகக் குத்தல்கள்.  அது புரிந்தாலும், புரியாததுபோல வேந்தனது பதில்கள்.

“இங்க உனக்கு போரா ஃபீல் பண்ணும்போது பெயிண்டிங் வர்க் எல்லாம் பாத்துக்கலாம்” என்றபடியே, அங்கு தான் சமீபத்தில் வரைந்திருந்த வாணியின் படத்தை எடுத்துக் காட்டினான்.

மித்ராவின் திருமணத்திற்கு சென்று வந்த அன்று, உயர்த்திப் போட்ட ஒழுங்கில்லாத கொண்டையுடன் சிலும்பலான முடிகள் ஆங்காங்கே அழகு சேர்க்க, தலைக்கு குளித்திருந்ததால் புத்தும் புது மலரைப்போல இருந்த வாணியை மிக அற்புதமாக வரைந்திருந்தான் வேந்தன்.

“என்னைக்குனு உனக்கு ஞாபகம் இருக்கா?”

தன்னைக் கண்டுகொள்ளவே மாட்டேன் என்கிறான் என மனம் முழுக்க வருத்தமாய் இருந்த சமயம் அது.  அது பெண்ணது நினைவுக்கு வந்தது.  ஆனால் அதனைக் காட்டிலும், வேந்தனது கைவண்ணத்தில் தான்!

அந்த உணர்வில், “வாவ்… மாமூ! இது நானா?”

“அது நீயேதான்” லேசாக புன்முறுவலோடு ஆமோதித்தவன், “எப்டி இருக்க?”

“என்னைவிட நீங்க வரஞ்சதுதான் ரொம்ப அழகா இருக்கு” வாணி முகம் கொள்ளாப் புன்னகையோடு கூற

“என் கண்ணுக்கு எப்டித் தெரிஞ்சியோ, அப்டி வரைஞ்சிருக்கேன்.  உனக்கு நீ எப்டித் தெரிஞ்சேங்கறதை மனசுல வச்சிட்டு, என்னோட டிராயிங்ல குறையோ, குவஷினோ பண்ணக் கூடாது” என்றவனை மனதிற்குள் சிலாகித்தபடியே, அவனது விலகல் தந்த வருத்தத்தை மறைத்தபடியே தொடர்ந்தாள்.

அன்றும், தற்போதைப்போல பற்றற்றுத்தானே மூன்றாம் நபரைப்போல தள்ளி இருந்தான்.  ஆனாலும் தன்னை எத்துணை தூரம் துல்லியமாக, கவனிப்பது தெரியாமலேயே கவனித்திருந்திருக்கிறான். ஆச்சர்யமாய் இருந்தது பெண்ணுக்கு.

“வேல வேலன்னு திரியறதுக்கு இடையிலே இதுக்கெல்லாம்கூட உங்களுக்கு நேரங்கிடைச்சுதா?”

“இது நீ பங்களூரு போனபின்ன வரைஞ்சது”

வாணிக்கு வேந்தனது அரவணைப்பு தேவையாய் இருக்க, தானே சென்று அவனது மார்பில் சாய, மனம் துடித்தது.  ஆனால் எதோ ஒன்று தடுக்க அமைதியாக வந்தாள்.

வாணிக்கு அந்தத் தளம் முழுமையுமாகப் பார்த்து முடித்தபோது தோன்றிய உணர்வு, ‘கலா  ரசிகனா இருக்கற மனுசன் என்னைக் கண்டுக்காம போறாறேன்னு தப்பா நினைச்சது மடத்தனம்போலயே! எல்லாம் என்னோட பிரமை’ என்பதுதான் அது.

தன்னை பிறர் முன் எளிதாக காட்டிக் கொள்ளாத திறன் வாய்த்தவன் தனது மாமூ என்பதும் புரிந்திட ‘என்னோட ஸ்வீட் திருட்டுப் பூனை!’ என மனம் வேந்தனை நினைத்து குதூகலித்தது.

நுணுகிய பார்வையும், நுண்ணறிவும், செயல்திறனும், பொருளாதார நிலையும் ஒருங்கே பெற்றவனால் மட்டுமே, தனது தேவைகளுக்கு ஏற்ப பூரணமான செயலைச் செய்து நிறைவடைய இயலும் என தளத்தில் இருந்த சிறு மாற்றம் துவங்கி ஒவ்வொன்றிலும், வேந்தனது ஈடுபாட்டைக் கண்டு மெய்சிலிர்த்தாள் வாணி.

அன்றைய தினம் கோவிலுக்கு சென்று, அனுசியாவின் நேர்த்திகள் அனைத்தையும் முடித்து வந்தார்கள்.

வீடு வந்ததும், தாயிடம் வந்த வேந்தன், “ம்மா இன்னும் ஒன் வீக் நம்ம ஃபார்ம் ஹவுஸ்ல போயி ஸ்டே பண்ணிட்டு வரோம்”

வேந்தனது இந்த முடிவு வாணிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

“அவளுக்கு அங்க தோதுபடுமான்னு பாத்துக்க வேந்தா!” என மருமகளின் மனதை நோக்க வழி சொன்னவர்,

வாணியிடம் தனியே அழைத்து, “பாத்து புரிஞ்சு நடந்துக்கணும்மா.  வேந்தனை நினைச்சு ரொம்ப பயந்துட்டே இருந்தேன்.  இப்ப மகராசி நீ வந்த நேரம் ரெண்டு பேருக்கும் வாழ்க்கைல நிறைவும், சந்தோசமும், நீளாயுளும், சகல சௌபாக்கியமும் நிலைக்கணும்.  நீயும் எதுக்காகவும் தயங்காம, அவங்கிட்ட மனசு விட்டுப் பேசு.  சின்னப் பொண்ணுனு மத்தவங்க ரொம்ப கீழ நினைக்கிற மாதிரி நடந்துக்கக் கூடாது. சந்தோசமா போயிட்டு வாங்க! எதுனாலும் எனக்கு பேசு” என வழியனுப்பி வைத்திருந்தார் அனுசியா.

திட்டமிட்டவாறு வாணியை அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.

ஆனால் தாயின்முன் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும், தனிமையில் வேந்தனது வித்தியாசத்தை உணரவே செய்தாள் வாணி.

வாணிக்கு, வேந்தனை மலையிறக்கும் வழி தெரியாமல், வாய்ப்பு கிட்டாதா எனும் ஏக்கத்தோடு உடன் கிளம்பி வந்திருந்தாள்.

………………

ஆண்!

தோன்றியதை

செய்து

நிம்மதியுறுகிறான்!

பெண்!

சந்தோசமெனக்

கருதுவதை செய்து

நிம்மதியுறுகிறாள்!

………………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!