Mazhai – 18

2a81e7fea7d8b4e0417017850c8a9236-0433748e

Mazhai – 18

அத்தியாயம் – 18

இத்தனை நாளாக அவள் இலகுவாக அனைத்தையும் எடுத்துக் கொள்வதை பெரிய விஷயமாக நினைக்கவில்லை. ஆனால் அவளுடைய மறுபக்கம் அறிந்ததும், முகிலனின் நெஞ்சமெங்கும் வலி பரவியது.

அவளை உடனே நேரில் பார்த்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று மனம் படபடத்தது. தன்னவளை நெஞ்சுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு, ‘உனக்கு எல்லாமாக இனி நான் இருப்பேன்’ என்று சொல்ல துடித்தான்.

இவை அனைத்தும் செய்ய முடியாது என்ற நிதர்சனம் உணர்ந்ததும், ‘அவளிடம் பேசணும். இல்லன்னா அட்லிஸ்ட் அவளோட குரலாவது காதில் கேட்கணும்’ என்று மனம் பரிதவித்தது.

திவாகரிடம் அவளின் நம்பர் இருக்கிறது என்றாலும், அதற்கு அழைத்து பேச முடியாது. அடுத்து என்ன செய்வது என்று அவன் தீவிரமாக சிந்திக்க, அன்று கோவிலில் அவளுடன் பார்த்த பெண்ணின் ஞாபகம் வரவே, உடனே ராகுலுக்கு அழைத்தான்.

மறுபக்கம் அவனது அழைப்பை ஏற்றவன், “என்னடா இந்த நேரத்தில் கால் பண்ணிருக்கிற? அங்கே ஏதாவது பிரச்சனையா?” என்று பதட்டத்துடன் விசாரித்தான்.

அப்போதுதான் கடிகாரத்தைக் கவனித்த முகிலன், “அது எல்லாம் எந்த பிரச்சனையும் இல்லடா. எனக்கு சிற்பிகா கூட பேசணும் போல இருக்குடா. பழைய நம்பருக்கு அடித்தால் ராங் நம்பர்னு சொல்றாங்க. அநேகமாக இப்போது நம்பர் மாத்தி இருப்பான்னு நினைக்கிறேன். அந்த  நம்பர் என்னிடம் இல்ல” என்றவன் முடிக்காமல் பாதியில் நிறுத்திவிட, ராகுலுக்கு அவனின் நிலை புரிந்தது.

“இப்போது என்னிடமும் தங்கச்சி நம்பர் இல்ல. அவ நீ ஊருக்குப் போனதும் எங்களோட பேசுவதை விட்டுட்டா. நானும் அவளை நேரில் பார்த்து ரொம்பநாள் ஆகிடுச்சு” என்றான் சிந்தனையுடன் நெற்றியை வருடியபடி.

அதைகேட்டு மனம் துவண்டபோன போதும், “ப்ளீஸ் மச்சி! நான் நேரடியாக பேசினாலும் அவ என்னோடு பேசுவாளா என்று தெரியலடா. அவளுக்கு நெஞ்சழுத்தம் அவ்வளவு இருக்கு. சரி அதைவிட அவ கிளாஸ்மேட் யாரோட நம்பராவது வாங்கி அனுப்புடா. அவ வாய்ஸ் கேட்ட நிம்மதியாக  இருக்கும்” என்றான்.

“அதுக்கு வாய்ப்பே இல்ல மச்சி! இப்போ அவ காலேஜ் முடிச்சிட்டு பி.எல் ஜாயின் பண்ண போகிறாள். இன்னும் காலேஜ் ஓபன் ஆகல. அதை மறந்துவிட்டாயா?” என்றவன் கேள்வியில் அவனின் தவிப்பு இன்னும் அதிகரிக்க, சட்டென்று அழைப்பைத் துண்டித்தான்.

அன்று இரவு முழுவதும் முகிலனுக்கு உறக்கம் வரவில்லை. ஏனோ தன்னவளை நினைக்கும்போது பரிதவிக்கும் மனதை அடக்கும் வழி தெரியாமல் வெகுவாக திண்டாடிப் போனான். அவளைப் பற்றிய சிந்தனையில் உறங்கிய அவனுக்கு மறுநாள் தன்னுடைய பிறந்தநாள் என்ற நினைவே மறந்து போனது.

அதே நேரத்தில் அன்றைய வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பியவள் இரவு உணவை முடித்துக்கொண்டு கதவை தாழிட்டு, படுக்கைக்குச் சென்றவளின் மனம் தன்னவனை மட்டுமே சுற்றி வந்தது. ஹெட் செட்டில் பாடல்களை கேட்டபடி தன்னையும் அறியாமல் உறங்கி போனாள் சிற்பிகா.

திடீரென்று அவள் அருகே யாரோ அமரும் ஆராவாரம் கேட்டு அவள் கண்ணைத் திறந்து பார்க்க, அவளின் அருகே அமைதியாக அமர்ந்திருந்த முகிலனின் விழிகள் கலங்கியிருக்க, அவனது கரங்கள் அவளின் தலையை வருடியது.

அவனை இமைக்காமல் பார்த்தவள், “நீங்க எப்போ வந்தீங்க” என்றவள் பதட்டத்துடன் எழுந்து அமர்ந்தாள்.

“ஹே ரிலாக்ஸ்டாக இரு. எனக்கு என்னவோ இன்னைக்கு உன்னைப் பார்க்கணும் போல இருந்தது. அதுதான் வேலை எல்லாம் அப்படியே விட்டுட்டு உன்னைத் தேடி வந்துட்டேன்” என்றவன் அவளை இழுத்து அணைத்துக் கொள்ள, அவனின் இதயத்துடிப்பின் சத்தம் அவளை என்னவோ செய்தது.

“என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு திடீர்னு என் நினைவு ஏன் வந்தது?” என்றவள் மெல்லிய குரலில் கேட்க, அதற்கு அவன் மௌனத்தை மட்டுமே பதிலாக தந்தான்.

“உனக்காக இனி நான் இருக்கேன் என்ற நம்பிக்கையுடன் நீ இருக்கணும் சரியா?” என்றதும் சட்டென்று நிமிர்ந்து அவன் முகம் நோக்கினாள்.

அவளின் பிறை நெற்றியில் இதழ்பதித்த முகிலனின் பார்வையில் காதலையும், அவளின் கைவளைவில் இருப்பது பாதுகாப்பாக உணர்ந்தவள் மெளனமாக சரியென்று தலையசைக்க, “நாளைக்கு எனக்கு பிறந்தநாள் விஷ் பண்றீயா?” என்றவன் குரலில் இருந்த ஏக்கம் அவளை வெகுவாக பாதித்தது.

அவளது மௌனம் கண்டு ஒரு விரலால் முகத்தை உயர்த்தி விழிகளில் ஊடுருவி, “என்ன பதில் சொல்லாமல் இருக்கிற?” என்றான்.

“நாளைக்கு காலையில் விஷ் பண்றேன். இப்போ எனக்கு தூக்கம் வருதுங்க” என்றவள் சிணுங்க, “சரியான தூங்கு மூஞ்சி” என்று அவளை கொஞ்சியவன் அவளை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு தோளில் தட்டிக்கொடுக்க, அதில் தன்னை மறந்து உறங்கினாள்.

மூடாத ஜன்னலின் வழியாக வீட்டிற்குள் புகுந்த பூனை பாத்திரங்களை கீழே தள்ளிவிட, அந்த சத்தத்தில் கண்விழித்து பார்க்கும்போது முகிலன் அருகில் இல்லை என்ற விஷயம் உணர்ந்தாள். சட்டென்று நிமிர்ந்துப் பார்க்க, மணி ஐந்து என்றது கடிகாரம்.

அது கனவு என்றபோதும் மனம் ஏனோ அவன் கோரிக்கையை நிறைவேற்ற நினைத்தது. அது முடியாது என்று நினைக்கும்போது மனதில் வலி எழ, ‘பக்கத்தில் இருக்கும்போது ஒரு முறைகூட இப்படி பேசியது இல்ல. ஆனால் கனவில் நமக்கு வருவதைப் பார்த்தால் ஷ்ப்பா முடியல. இப்படி ஒவ்வொரு நாளும் கனவிலேயே போனால் நிஜவாழ்க்கை பற்றி மறந்தே விடுவேன்’ என்று புலம்பியபடி எழுந்து குளியலறைக்குள் புகுந்தாள்.

கொஞ்ச நேரத்தில் குளித்துவிட்டு வெளியே வந்த சிற்பிகாவிற்கு ஏனோ மனம் ஒரு நிலையில்லாமல் தவிக்க, ‘இந்த இரண்டு ஆண்டுகளாக என் நினைவு வரவில்லையா? இப்போது மட்டும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லு என்றால் நான் என்ன செய்யறது?’ என்ற சிந்தனையுடன் செல்போனை கையில் எடுத்தாள்.

முகிலன் வெளிநாடு சென்ற ஒரே வாரத்தில் அவனது ஸ்கைப் அக்கௌன்ட் ஐடி நேம் மற்றும் அவனது புதிய செல்போன் நம்பர் இரண்டையும் அனுப்பி வைத்தான். அந்த நம்பர் தேவை இல்லை என்று முற்றிலுமாக ஒதுக்காமல் செல்லில் பதிவு செய்து வைத்திருந்தாள்.

அவனுக்கு அழைத்துப் பேச நினைத்து நம்பரை அழுத்திவிட்டு வேண்டாம் என்று முடிவெடுத்து போனை கீழே வைத்துவிட்டாள். அதன்பிறகு அவள் வழக்கம்போலவே ஆபீசிற்கு கிளம்பிச் சென்றாள். அன்று மதியம் ‘நீங்காத நினைவுகள்’ என்ற தொகுத்து வழங்க நிகழ்ச்சிக்குள் நுழைந்தாள்.

“உன் காதலுக்காக ஏங்கி

நிலமங்கையான நான்

வானம் நோக்கினேன்…

என் மனம் உணர்ந்த

கார்முகில்களின் அரசன்

மழைத்துளியை தூதாக

பூமிக்கு அனுப்பி வைக்க..

என் காதல் என்றோ ஒருநாள்

கைசேரும் என்ற நம்பிக்கையுடன்

நீ வரும் அந்த நன்னாளை

எதிர்பார்த்து காத்திருக்க

தொடங்கிவிட்டேன் என்னவனே!”  அழகிய கவிதையுடன் நிகழ்ச்சிக்குள் நுழைவது உங்களின் சிற்பிகா என்றவள் சொல்லிவிட்டு, அன்றைய நிகழ்ச்சியில் தன்னுடைய உயிர் நண்பர்களின் பிரிவு எப்படி இருக்கும் என்று டாப்பிக் கொடுத்தாள்.

அதன்பிறகு அவள் சொன்ன எண்ணிற்கு டயல் செய்த ராகுல் லைனில் காத்திருக்க, “ஹலோ யார் பேசறீங்க?” முதல் காலராக பேசும் வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது.

“என் பெயர் ராகுல். நான் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன் மேடம்” என்றான் புன்னகையுடன்.

“ஓ சூப்பர்! உங்க உயிர் நண்பனின் பிரிவு உங்களை எந்தளவு பாதிச்சிருக்கு என்று சொல்லுங்கள்” என்றாள்.

“என் நண்பன் பெயர் முகிலரசன். எங்க கேங்கில் அவன்தான் ரொம்ப பிடிவாதக்குணம் உடையவன். ஆனால் எங்களுக்கு எந்த நேரத்தில் என்ன தேவை என்று புரிந்து வைத்திருப்பான். அவனுக்கு பிடிச்சவங்களுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வான்” என்று இடைவெளிவிட, “ஓகே” மறுபக்கம் உன்னிப்பாக கவனித்தாள் சிற்பிகா.

“அவன் வெளிநாடு போய் முழுவதும் இரண்டு வருடம் முடிந்துவிட்டது. ஆயிரம்தான் போனில் பேசினாலும் நேரில் பேசுவது மாதிரி வருவதில்லை. இன்னைக்கு அவனோட பிறந்தநாள்” என்றதும் அவளுக்கு உண்மை இன்னது என்று சொல்லாமல் விளங்கிவிட்டது.

“அப்படியா ராகுல்” என்றவள் சாதாரணமாக கேட்க,

“உங்க நிகழ்ச்சி அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் நீங்க முகிலனுக்கு விஷ் பண்றீங்களா மேடம். உங்க வாய்ஸ்ல விஷ் பண்ணியதைக் கேட்டால் அவன் ரொம்ப சந்தோசப்படுவான்” என்று கூறிவிட்டு அவளது பதிலுக்காக காத்திருந்தான் ராகுல்.

அன்று அதிகாலை கண்ட கனவின் பிடியில் இருந்தவள், ‘என்னுடைய வாழ்த்து யார் மூலமாக போனால் என்ன?’ என்று நினைத்தவள்,  “வாவ் எனக்கு இவ்வளவு பெரிய ரசிகர் இருக்கிறாரா? அப்போ கண்டிப்பா விஷ் பண்ணித்தான் ஆகணும். விஷ் யூ மேனி மோர் ஹாப்பி ரிட்டன்ஸ் ஆஃப் தி டே! அவருக்கு என்ன பாடல் கொடுக்கலாம் ராகுல்?” என்று அவனிடம் கேட்டாள்.

ஏற்கனவே அவள் பேசுவது அனைத்தும் கால் ரெக்கார்ட் மூலமாக பதிவாகி இருக்க, “பிரியாத வரம் வேண்டும் படத்தில் பிரிவொன்றை சந்தித்தேன் பாடல் போடுங்க” என்றவன் சொல்ல, “உங்க நண்பருக்கு பிடித்த பாடல் வருகிறது.. நிங்காத நினைவுகளுடன் இணைந்திருங்கள்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்து பாடலை ஒலிக்க விட்டாள்.

அந்த பாடலை அவளும் ஆயிரம் முறை கேட்டு இருந்தாலும், இன்று ஏனோ அந்த பாடலின் உள் அர்த்தம் என்னவென்று தெரிந்துகொள்ள மனம் நினைக்க உன்னிப்பாக பாடலைக் கவனித்தாள்.

“கீழ் இமை நான் மேல் இமை நீ

பிரிந்ததில்லை கண்ணே கண்ணே

மேல் இமை நீ பிரிந்ததனால்

புரிந்து கொண்டேன் காதல் என்றே” என்ற நான்கு வரிகள் அவன் மனதை அவளுக்கு உணர்த்தியது. இதழ்கள் சொல்லாத காதலை விழிகள் காட்டிக் கொடுத்துவிடும். விழிகளின் மௌனத்தை இதழ்கள் உடைத்துவிடும். இவர்களின் காதலில் இவை இரண்டும் சொல்லி வைத்தாற்போல பொய் சொல்ல, இதயங்கள் மெளனமாக காதலை  உணர்த்திக் கொண்டு இருக்கிறது.

அந்த உண்மையை உணர்ந்தவளின் இதழ்களில் அவளையும் அறியாமல் ஒரு புன்னகை அழகாக தோன்றி மறைந்தது. அதே நேரத்தில் அவளின் குரல் வழியாக வாழ்த்தைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த முகிலன் நண்பனுக்கு தன் நன்றியைத் தெரிவித்தான்.

அடுத்தடுத்து வந்த நாட்கள் ரேக்கைக்கட்டி பறந்தது.

சிற்பிகாவிற்கு கல்லூரி திறந்துவிட, மீண்டும் பகுதிநேர வேலைக்கு மாற்றிக்கொண்டு தன்னுடைய படிப்பில் கவனத்தைத் திருப்பினாள். முதல்நாள் வகுப்பிற்கு சென்றவளுக்கு அங்கே இருந்த ஆண்களைக் கண்டு படபடப்பாக இருந்தது.

அவள் வேண்டும் என்றே ஒதுங்கிப்போனால் கட்டாயம் அவர்கள் பின்தொடர்வார்கள் என்று உணர்ந்து அனைவரிடமும் இயல்பாக பழகினாள். அவளுடன் பழகிய கொஞ்சநாளில் அவளுக்கு திருமணமான விஷயம் தெரிந்தது. அந்த உண்மைத் தெரிந்தபிறகும் மற்றவர்கள் எப்போதும் போலவே இருக்க அவள் நிம்மதியாக உணர்ந்தாள்.

அடிக்கடி முகிலனின் நினைவு வந்தாலும் முடிந்தளவு அதை தனக்குள் மறைத்துக்கொண்டு நடமாடினாள். தன்னவளின் மறுபக்கம் அறிந்த முகிலனோ அவளுக்கு எப்போது படிப்பு முடியும் என்று நினைத்து நாட்களைக் கடத்தினான். இப்படியே இரண்டு ஆண்டுகள் ஓடி மறைந்தது.

அன்று வகுப்பு ஒருப்பக்கம் நடந்து கொண்டிருக்க, இருள் மூடிய வானத்தை ஓரவிழியால் வேடிக்கைப் பார்த்தபடி வகுப்பைக் கவனித்தாள் சிற்பிகா. ஏதோ ஒரு மரத்தின் விளிம்பில் அமர்ந்திருந்த குயில் கூ.. கூ.. என்று கானம் இசைக்க, சில்லென்ற தென்றல் உடலைத் தழுவிச்செல்ல, மண்வாசனை நாசியைத் தொலைத்தது.

அந்த வகுப்பு முடிந்து பேராசிரியர் வெளியேற, “சிற்பிகா” என்று அவள் முன்பு வந்து நின்றான் நிசாந்த்.

ஜன்னலின் வழியாக வேடிக்கைப் பார்த்தவள், “என்ன விஷயம்னு சொல்லு” என்றாள் சாதாரணமாக.

அவள் முகத்தை ஒரு நொடி கூர்ந்து பார்த்தவன், “உன்னை இரண்டு வருடமாக பார்க்கிறேன் சிற்பிகா. உன்னோட குணங்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஐ லவ் யூ” என்றவன் தன்னுடைய காதலை வெளிபடுத்த, சட்டென்று இருக்கையைவிட்டு எழுந்தாள்.

அவன் காதலிக்கிறேன் என்றவுடன் கோபம் சுர்ரென்று உச்சிக்கு ஏறிவிட்டது. அத்துடன் தன்னை இவ்வளவு கீழ்த்தரமான நினைத்துவிட்டானே என்று அவள் திட்டுவதற்கு வாய் திறந்தவள் தன்னுடைய நிதானத்தை கையாண்டாள்.

அவனை கோபத்தில் பேசிவிட்டு பின்னால் வரும் பிரச்சனைகளை நாம்தான் சந்திக்க வேண்டும் என்று உள்மனம் சொல்ல, முகத்தில் தோன்றி மறையும் உணர்வுகளை உன்னிப்பாக கவனித்தவன், “என்ன பதில் சொல்லாமல் ஷாக்கிங் ஆகி நிற்கிற?” என்று அவள் முகத்திற்கு நேராக சொடக்குப்போட்டு அவளை நடப்பிற்கு அழைத்து வந்தாள்.

“எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்ற உண்மைத் தெரிந்தபிறகும் உன்னால் எப்படி இப்படி பேச முடியுது. நான் உன்னிடம் லிமிட் தாண்டி பழகவில்லையே! அப்புறம் எப்படி உனக்கு இப்படியொரு எண்ணம் வந்தது?” என்று பொறுமையை இழுத்து பிடித்தபடியே பேசினாள்.

தன்னுடைய கையோடு எடுத்து வந்த பேப்பரை அவளிடம் நீட்டி, “உன்னோட நோட்டில் கிடைத்தது. ஏதோ முக்கியமான பேப்பரோ என்று நினைத்து படித்துவிட்டேன். அதில் உன்னோட பர்சனல் விஷயத்தை எழுதி வைச்சிருக்கிற என்று தெரியாது. பிடிக்காத திருமணத்தில் நிறைய சண்டைகள் வரும். ஆனால் அவங்கதான் ஒருத்தரை மற்றொருவர் உயிராக நேசிப்பங்கன்னு படிச்சிருக்கேன்” என்றவன் இடைவெளிவிட, அவன் சொல்ல வருவதை உன்னிப்பாக கவனித்தாள்.

“இவ்வளவு பெரிய முடிவை எடுப்பதற்கு முன்னால் கொஞ்சம் யோசித்து இருக்கலாம் சிற்பிகா. உனக்கு அந்த வயசில் மனப்பக்குவம் குறைவு. அதனால் இந்த ஈகோவை ஓரம்கட்டிவிட்டு நீ செய்தது சரிதானா என்று யோசிச்சுப் பாரு. எந்தவொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு” என்று அவளுக்கு நடப்பை உணர்த்திவிட்டு, “ஐ லவ் யூ சொன்னதுக்கு ஸாரி கேட்டுக்கிறேன்” என்று விலகிச் செல்ல தொப்பென்று சேரில் அமர்ந்தாள்.

இதுநாள்வரை தான் செய்தது சரியென்று நினைத்திருந்தாள். தெளிவான குளத்தில் கல்லை விட்டு எறிந்தால் நீரில் சலனம் ஏற்படுவதுபோல, நிசாந்த் பேசிய பேச்சு சிற்பிகாவின் மனத்தைக் குழப்பிவிட்டது. மற்றொரு பக்கம் இன்னும் ஓராண்டு மட்டுமே என்று நினைத்து படிப்பின் பக்கம் கவனத்தைத் திருப்பினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!