Mazhai – 19

2af4aabe96ebc0e35b0f1d182ad7a949-1b25697d

Mazhai – 19

அத்தியாயம் – 19

காலமும் நேரமும் யாருக்கும் நிற்காமல் ஓடி மறைந்தது. இதோ இந்த வருடம் சிற்பிகா கல்லூரி படிப்பின் இறுதியாண்டில் காலடி எடுத்து வைத்தாள். மற்றொரு பக்கம் தமையனிடம் ஒவ்வொரு முறையும் பொய்யை மட்டுமே சொல்லிக் கொண்டு இருந்தாள்.

திவாகர் எவ்வளவுதான் இந்தியா வர முயற்சித்த போதும் அடுத்தடுத்து ப்ராஜெக்ட்டில் அவனை அங்கிருந்து நகரவிடாமல் செய்தது என்று சொல்லலாம். அதே நேரத்தில் தன்னுடைய காதல் மனைவியை பிரிந்திருந்த முகிலனின் காதல் வான்நிலவை போல நாளுக்கு நாள் வளர்ந்தது.

 மற்றொரு பக்கம் சிந்துவிற்கு நல்ல மாப்பிள்ளை தேடுவதில் மும்பரமாக இருந்தனர் ராஜசேகரும் – கனகவள்ளியும். ஆனால் அவளின் குணத்திற்கும், எதிர்பார்ப்புக்கும் தகுந்த மாப்பிள்ளை அமைவது குதிரை கொம்பாக இருக்க, நாளுக்கு நாள் தன்னுடைய குணத்தை மாற்றிக் கொள்ள முயற்சித்தாள்.

வீட்டிற்கு வந்த மருமகளை கரித்துக் கொட்டுவதில் முன்னோடியாக திகழ்ந்த கனகவள்ளி தன் மகளுக்கு ஏற்ற வரன் அமையவில்லை என்ற கவலையில் கோவில் கோவிலாக ஏறியிறங்கினாள். இந்த சமயத்தில் அந்த வீட்டின் சந்தோசத்தை மீட்டுத்தருவது போல ஒரு நிகழ்ச்சி நடந்தது.

நிரஞ்சன் – மிருதுளா திருமணமாகி கிட்டதட்ட எட்டு வருடத்தில் அடியெடுத்து வைத்தனர். வழக்கம்போலவே சீக்கிரம் எழுந்து வீட்டின் வேலையை முடித்துக்கொண்டு கோவில் கிளம்புவதற்கு முன்னால் மாமனார் – மாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்க அவர்களின் அறைக்குச் சென்றாள்.

காலை நேரத்தில் தயாராகி வந்த மருமகளைக் கண்ட கனகவள்ளி, “என்ன இந்த நேரத்தில் எங்க ரூமிற்கு வந்திருக்கிறம்மா?” என்று கனிவுடன் விசாரிக்க, அவளின் உதட்டில் புன்னகை அரும்பியது.

வீட்டில் இருந்த அனைவரையும் ஆட்டிப்படைத்த கனகவள்ளி இப்போது வெகுவாக மாறி இருந்தார். தன்னுடைய மகளின் திருமணம் தள்ளி போவதை ஊருக்குள் தவறாக பேசியத்தைக் கேட்டு அவர் வருந்தும்போது அவள் மட்டுமே பக்கபலமாக இருந்தாள்.

அத்துடன் அவளின் பொறுமையால் சிந்துவும் தன்னுடைய சில குணங்களை மாற்றிக்கொண்டு வளையவர, அந்த வீட்டில் நிரந்தரமான சந்தோசம் இல்லை என்றபோதும், அனைவரின் மனதிலும் ஏதோவொரு நிம்மதி இருக்கவே செய்தது.

“இன்னைக்கு எங்களுக்கு கல்யாண நாள் அத்தை” என்று சொல்லும்போது வெளியே செல்ல தயாராகி வந்த கணவனுடன் சேர்ந்து இருவரின் காலிலும் விழுக, “நீங்க நீண்டநாள் இதே சந்தோஷத்துடன் வாழணும்” என்று மனதார வாழ்த்தினர்.

அதன்பிறகு இருவரும் கோவிலுக்கு செல்ல வெளியே வர, “ஹாப்பி அன்வர்சரி அண்ணா – அண்ணி” என்ற சிந்து இருவரின் வாயிலும் மைசூர்பாகு ஊட்டிவிட, தங்கையின் தலையைப் பாசத்துடன் வருடினான் நிரஞ்சன்.

அதே நேரத்தில் அந்த ஸ்வீட்டை சாப்பிட்ட மிருதுளாவிற்கு வயிற்றைப் பிரட்டிவிட, சட்டென்று வாயை மூடிக்கொண்டு வாஸ்பேசன் இருக்கும் இடம் நோக்கி ஓடியவள் வாந்தியெடுக்க, “என்னம்மா ஆச்சு?” என்ற கேள்வியுடன் மனைவியை நெருங்கினான்.

அதற்குள் முகம் கழுவிவிட்டு திரும்பிய மிருதுளா கணவனின் தோள் சாய்ந்து, “என்னன்னு தெரியலங்க. இப்போ ஒரு வாரமாவே எதை சாப்பிட்டாலும் வாந்தி வருது. சில நேரத்தில் வாய் ரொம்பவே கசந்து போகுது. அதே மாதிரி உடல்சோர்வு அதிகமாக இருக்கு” என்று அவள் வரிசையாக பட்டியல் போட, அதை கேட்டபடி அங்கே வந்த கனகவள்ளியின் முகம் கேள்வியாக சுருங்கியது.

“நீ இதுபற்றி முதலில் சொல்லியிருந்தால் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருப்பேன் இல்ல” என்றபடி அவளை சோபாவில் உட்கார வைத்து, தானும் அமர்ந்தான்.

ராஜசேகரன் மனைவியின் முகம் பார்க்க, “என்னங்க என்னை பார்த்துட்டு இருக்கீங்க. நம்ம குடும்ப டாக்டருக்கு போன் பண்ணி அப்பாயின்மென்ட் வாங்குங்க” என்று கணவனுக்கு கட்டளை பிறப்பித்துவிட்டு, மகனின் பக்கம் திரும்பினாள்.

அவர்களுக்கு உடனே அப்பாயின்மென்ட் கிடைத்துவிட, “நீ நம்ம காரை எடுத்துட்டு முதலில் ஹாஸ்பிட்டல் போய் என்னன்னு பாருப்பா” என்று சொல்லிவிட்டு நேராக பூஜையறைக்குச் சென்று திருநீறு எடுத்து வந்து மருமகளின் நெற்றியில் வைத்துவிட்டு, ‘எங்க வம்சம் தழைக்க ஒரு குழந்தையைக் கொடு ஆண்டவா’ என்று மனதார வேண்டிக்கொண்டு  இருவரையும் வழியனுப்பி வைத்தார்.

“அம்மா அண்ணியின் முகம் நிலவு மாதிரி ஒளிவீசுது. இன்னொன்னு கவனிச்சியா? அவங்க இப்போ பார்க்க ரொம்ப அழகாக இருக்காங்க” என்ற மகளின் தலையில் நறுக்கென்று கொட்டி, “என் மருமகளை கண்ணு வைக்காமல், முதலில் போய் குளிச்சிட்டு வா” என்றார்.

அவள் தாயைப் பொய்யாக முறைத்தபடி தன்னுடைய அறைக்குச் செல்ல, நிரஞ்சன் – மிருதுளா இருவரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிற்பிகா பஸ் ஸ்டாப்பில் நிற்பதைக் கண்டு காரை நிறுத்தி கீழே இறங்க, “அண்ணி” என்ற அழைப்புடன் அவளை வந்து பாசத்துடன் அணைத்துக்கொண்டாள்.

“சிற்பிகா எப்படிம்மா இருக்கிற? உன்னோட படிப்பு எல்லாம் எப்படி போகுது?” என்றவன் அக்கறையுடன் விசாரிக்க, சட்டென்று மிருதுளாவை விட்டு விலகி நின்றாள்.

“நான் ரொம்ப நல்லா இருக்கேன் அண்ணா. ம்ஹும் இன்னும் ஒரு ஆறு எட்டு மாதத்தில் காலேஜ் முடிஞ்சிடும். அப்புறம் பெரிய வக்கீலிடம் ஜூனியராக பிராக்டீஸ் பண்ண போலாம்னு இருக்கேன்” என்றவள் தன்னுடைய எதிர்கால திட்டங்களை புன்னகையுடன் விவரித்தாள்.

அதைகேட்டு கணவன் – மனைவி இருவரும் தங்களுக்குள் பார்வையை பரிமாறிக்கொண்டு, “அப்புறம்” என்று தலைசாய்த்து மிருதுளா வினாவிட, சிற்பிகாவின் செயற்கை புன்னகையும் அவளின் உதட்டுடன் உறைந்து போனது.

அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்ற குழப்பத்துடன் தலையைக்குனிய, “இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி ஒருவரையொருவர் ஏமாத்திகிட்டு வாழ போறீங்கன்னு எனக்கு தெரியல. இது உங்களோட வாழ்க்கை நீங்கதான் ஒரு முடிவிற்கு வரணும். இதை நிறைய முறை முகிலனிடம் சொல்லிட்டேன். ஆனால் ஒரு முறைகூட அவன் அதை பெருசா எடுத்துக்கல” என்றாள்.

அவள் சொல்வதை கூர்ந்து கவனித்த சிற்பிகாவின் மனதில் ஏதோ இதம் பரவிட, அதற்குள் அவள் கல்லூரிக்கு செல்லும் பேருந்து வந்துவிட, “சரி நான் கிளம்பறேன் அண்ணா – அண்ணி” என்றவள் அதில் ஏறிச் சென்றுவிட்டாள்.

அதன்பிறகு இருவரும் மருத்துவமனைக்கு சென்று செக்கப் செய்ய, மிருதுளா கருவுற்றிருந்த விஷயமறிந்த அடுத்த நிமிடம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான் நிரஞ்சன். அவன் உடனே மனைவியை அழைத்துக்கொண்டு வீடு வரவே, இந்த தகவல் கேட்டு மூவரும் சந்தோசப்பட்டனர்.

மற்றொரு பக்கம் மிருதுளா போன் செய்து இந்த சந்தோசமான விஷயத்தைப் பகிர, சதாசிவம் – மகேஸ்வரி இருவரும் நேரில் கிளம்பி வருவதாக கூறினார். அடுத்ததாக முகிலனுக்கு விஷயம் தெரியவரவே, “வாழ்த்துக்கள் அக்கா” என்றான்.

அவனிடம் இன்று சிற்பிகாவை பஸ் ஸ்டாப்பில் சந்தித்த விஷயத்தை அவள் கூற, “இப்போ நல்லா இருக்கிறாளா அக்கா? என்னைப்பற்றி ஏதாவது விசாரித்தாளா?” என்று கேள்விகளை அடுக்கினான்.

“உன்னைப்பற்றி நான்தான் சொன்னேன். அவ அதைக் காதில் வாங்கின மாதிரியே தெரியலடா. இத்தனை வருடமாக இல்லாமல் இப்போதுதான் உன் வாழ்க்கையைக் கேடுத்துவிட்டேனோ என்று குற்ற உணர்ச்சி வருதுடா” என்றவளின் கண்கள் சட்டென்று கலக்கிவிட, “எல்லாமே சரியாகிடும் அக்கா” என்றான் முகிலன் புன்னகையுடன்.

அவள் சிறிதுநேரம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டிக்க, ‘என்மீதான காதலை வெளிக்காட்டாமல்  நெஞ்சில் வச்சிட்டு எப்படித்தான் இப்படி இவ்வளவு சாதாரணமாக இருக்கிறாளோ?’ என்று நினைவுடன் சிரித்தபடி அறையைவிட்டு வெளியேறினான்.

வெகுநாட்களுக்குப் பிறகு நண்பனின் முகம் பிரகாசமாக இருப்பதைக் கண்டு, “மச்சி என்னடா இன்னைக்கு இவ்வளவு சந்தோசமாக இருக்கிற என்ன விஷயம்?” என்று விசாரித்த திவாகரிடம் தமக்கை கருவுற்றி விஷயத்தைப் பகிர, அந்த சந்தோசம் அவனையும் தொற்றிக் கொண்டது.

“இதை காரணமாக வைத்து அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு டாட்டா சொல்லிட்டு இந்தியா போயிடணும்” என்றவன் பிளான் போட, ‘உன் தங்கச்சி படிப்பை முடிச்ச மறுநிமிஷம் நான் இந்தியா போயிடுவேன் திவா’ என்று மனதிற்குள் சொன்னான்.

இன்றுவரை தன்னுடைய தங்கையின் கணவன் முகிலன் என்ற விஷயம் அவனுக்குத் தெரியவில்லை. தன்னை நம்பி அனைத்து விஷயத்தையும் வெளிப்படையாக பகிரும் நண்பனிடம் இத்தனை வருடங்களாக உண்மையைச் சொல்லாமல் மறைப்பதை நினைத்து வருந்தினான் முகிலன்.

அவனுக்கும் அதைத்தவிர வேறு வழியில்லை என்று மொத்த பாரத்தையும் கடவுளின் பாதத்தில் வைத்துவிட்டு தன்னுடைய வேலையைத் தொடர்ந்தான். அதே நேரத்தில் திவாகர் இன்னும் தன்னுடைய தங்கை புராணம் பாடுவதை நிறுத்தவில்லை. அதன் மூலமாக தன்னவள் தன்னை எந்தளவு உயிராக விரும்புகிறாள் என்று உணர்ந்தான்.

அடுத்தடுத்து வந்த நாட்கள் ரேக்கைக்கட்டி பறக்க, மிருதுளாவைஅந்த குடும்பம் உள்ளங்கையில் வைத்து தாங்க, ஏழாம் மாதம் வளைகாப்பு போட்டு தங்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

தன்னுடைய வளைகாப்பிற்கு கூட முகிலனும் – சிற்பிகாவும் வரவில்லை என்று அவள் மனம் வருந்த, “அவங்க தனியாக வருவதைவிட ஜோடியாக வருவதுதான் எல்லோருக்கும் நிம்மதியைக் கொடுக்கும். அதனால் அவங்க வரலன்னு வருத்தப்படாதே! நம்ம மகன் பிறக்க போகின்ற நேரத்தில் எல்லோரும் ஒன்னு செர்ந்துவிடுவாங்க பாரு” என்று சொல்லி மனைவியைத் தேற்றினான் நிரஞ்சன்.

அவள் பிரசவத்திற்காக தாய்வீடு சென்றபோதும், நேரம் கிடக்கும்போது மற்ற மூவரும் சென்று நேரில் பார்த்துவிட்டு வந்தனர்.மிருதுளாவிற்கு பிரசவநாள் நெருங்கிக் கொண்டிருக்க, இது எந்த விஷயமும் அறியாமல் தன்னுடைய படிப்பை முடித்த கையுடன் கோவையில் ஒரு பெரிய வக்கீலிடம் பிராக்டீஸ் செல்லத் தொடங்கினாள்.

அதற்குள் முகிலன் தன்னுடைய ப்ராஜெக்ட்டை முடித்துவிட, அவர்களிடம் காரணத்தைச் சொல்லி இந்தியா செல்வதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க, திவாகரும் அவனுடன் கிளம்பினான்.

அன்று வழக்கம்போலவே ஸ்கைப் அக்கௌன்ட்டில் தன்னுடைய தங்கை அனுப்பிய மெசேஜ் படித்துக் கொண்டிருந்தவன், “மேடம் முதல் மாதம் சம்பளம் வாங்கிட்டங்கலாம் என்ன ஆர்ப்பாட்டம் பாரேன். என்ன இதை எல்லாம் பார்க்க விஜிம்மாவும், ராஜ் அப்பாவும் தான் இல்ல” என்றான் திவாகர் வருத்தத்துடன்.

அவனது மனநிலையை மாற்ற நினைத்த முகிலனோ, “உன் தங்கச்சியிடம் டீரீட் கேளுடா” என்று பட்டாசைக் கொளுத்திபோட, அவனும் அதை டைப் செய்து அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருந்தான்.

“என்னடா பழையபடி குடிக்க தொடங்கிட்டியா?” என்றவள் எடுத்த எடுப்பில் எரிந்து விழுக, “இந்த பிசாசு பாருடா! என்ன கேள்வி கேக்குதுன்னு” என்று அலுத்துக்கொண்டு பதிலை டைப் செய்து அனுப்பிவிட்டு தண்ணீர் குடிக்க எழுந்து சென்றான்.

பக்கத்தில் நின்றிருந்த முகிலனிடம், “டேய் அவ என்ன அனுப்பறான்னு எனக்கு சொல்லு” என்று சொல்லிவிடத் செல்ல, அவனுடைய இருக்கையில் அமர்ந்து அவள் அனுப்பிய குறுஞ்செய்தியை வாசித்தான்.

“நீ எப்போ ஊருக்கு வர போறேன்னு ஆர்வமாக  கேட்டு இருக்கிற?” என்றவன் சொல்ல, “இன்னும் நான்கு நாட்களில் இந்தியாவில் இருப்பேன்னு அனுப்புடா” என்று நண்பனிடம் கூறியபடி, ஆப்பிள் பழத்தை கட் பண்ணினான்.

அதை டைப் செய்து அனுப்பிய முகிலன், ‘இவ என்னைக்கு விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்ட விஷயத்தை சொல்ல போறா?’ என்றவன் தீவிரமாக சிந்திக்கும்போது, ‘கீன்’ என்ற சத்தம் அவனது கவனத்தைக் கலைக்க சட்டென்று கணினி திரையில் பார்வையைப் பதித்தான் முகிலன்.

“அண்ணா நான் ரொம்ப நாளாக இல்ல.. கிட்டதட்ட ஆறு வருசமாக ஒரு விஷயத்தை விஷயத்தை உன்னிடம் மறைச்சிட்டேன்’ என்றவள் தயக்கத்துடன் எழுதிருக்க, இந்த முறை என்ன விஷயம் என்று ஓரளவு யூகித்துவிட்ட முகிலன் கோபமாக இருப்பது போல, “என்ன பொய் சொன்னே” என்று அனுப்பினான்.

சிறிதுநேரம் அவளிடம் எந்த பதிலும் இல்லை.

அதற்குள் திவாகர் வந்துவிட, “என்னடா சொன்னா?” என்றவன் விசாரிக்க, சிற்பிகாவிடம் இருந்து அடுத்த செய்தி வந்தது.

“அண்ணா அவர் வெளிநாடு போவதற்கு முன்னால் விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டேன். அவர் வந்தவுடன் அனேகமாக கோர்ட்டிற்கு போய் பைல் பண்ணினால் சீக்கிரமே விவாகரத்து கிடைச்சிடும்” என்றவள் சத்தமின்றி குண்டைத்தூக்கி போட, அதை வாசித்த திவாகருக்கு ஒரு நிமிடம் தலையே சுற்றியது.

‘நீயே வந்து வசமாக மாட்டினியா?’ என்று முகிலன் மனதிற்குள் நினைக்க “வாட்?” அதிர்ச்சியுடன் அவன் அனுப்பினான்.

“நான் என்ன கதையா சொல்றேன்?” என்று எரிந்து விழுந்தவள், ஸ்கைப் அக்கௌன்ட்டை லாக் அவுட் செய்துவிட்டு ஆப்லைன் சென்றுவிட, திவாகர் கோபத்தில் அங்கிருந்த சில பொருட்களை கீழே தள்ளிவிட்டு கோபத்தைக் காட்டினான்.

அவனை எப்படி சமாளிப்பது என்று முகிலன் யோசிக்க, “என்ன தைரியம் இருந்திருந்தால் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு தந்துட்டேன்னு சொல்வாள். இது என்ன சந்தைக்கடை வியாபாரமா?” என்று எரிச்சலுடன் கூண்டுக்குள் அடைபட்ட புலிபோல அங்குமிங்கும் நடை போட்டான்.

“என்னை என்ன லூசுன்னு நினைத்துவிட்டாளா? இவ இஷ்டத்திற்கு வாழ்க்கையை அமைத்துக்கொண்டாள் சரி. கணவனும், மனைவியும் சந்தோசமாக இருக்காங்க என்று இத்தனை நாள் நினைச்சிட்டு இருந்தேன். இப்போது இப்படி வந்து சொல்ற? இவளை சும்மா விட்டால் சரி வராது. டேய் நமக்கு என்னைக்கு டிக்கெட் போட்டு இருக்கிற?” என்று முகிலனிடம் விசாரிக்க, “இன்னும் மூணு நாள் இருக்குடா” என்றான்.

“நாளைக்கே சென்னைக்கு டிக்கெட் இருக்கான்னு பாரு. அப்படி டிக்கெட் கிடைத்தால் அதை உடனே புக் பண்ணு. இவளை சும்மா விட்டால் சரி வராது. வக்கீல் ஆகிட்டும்னு திமிரில் பேசிட்டு போற. இந்தியா போனால்தான் இன்னும் இவ என்னன்னா பொய் சொன்னான்னு தெரியும்” என்று கோபத்தில் கத்தியவன் கணினியின் முன்பு அமர்ந்து டிக்கெட் இருக்கிறதா என்று பார்க்க தொடங்கினான்.

அவன் தேடியது உடனே கிடைக்க, “இதோ இரண்டு டிக்கெட் இருக்கு” என்று புக் செய்துவிட்டு, அங்கிருந்து கிளம்புவதற்கான ஏற்பாடுகளை கவனிக்க சென்றான்.

அவன் அங்கிருந்து நகர்ந்தும் நாற்காலியில் அமர்ந்த முகிலன், ‘இந்தியா போனதும் சிற்பிகாவை நேரில் பார்த்து பேசணும்’ என்ரூ முடிவெடுத்தான். மறுநாளே இருவரும் லண்டனிலில் இருந்து தங்களின் பயணத்தை தொடங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!