Mazhai – 20

Mazhai – 20
அத்தியாயம் – 20
முகிலன் இந்தியா வரும் விஷயத்தை பெற்றவர்களிடம் பகிர, அதற்குள் மிருதுளாவிற்கு பிரசவவலி எடுத்துவிட அவளை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த தகவல் அறிந்தும் நிரஞ்சனின் குடும்பத்தினரும் வந்து சேர, அவளுக்கு அழகான ஆண்குழந்தை சுக பிரசவத்தில் பிறந்தது.
மருத்துவமனையில் இருந்து பூர்வீக வீட்டிற்கு சென்று வருவதற்கு தாமதமாகும் என்ற காரணத்தால் முகிலன் தங்கிருந்த வீட்டை சுத்தம் செய்ய சொல்லி அங்கேயே அனைவரும் தங்கினர்.
கிட்டதட்ட பதினோரு மணிநேர பயணத்திற்கு முகிலரசன் – திவாகர் இருவரும் சென்னை மண்ணில் காலடி எடுத்து வைத்தனர். கொஞ்சநேரத்தில் கோவை பிளைட்டிற்கு டிக்கெட் கன்பார்ம் ஆனது.
உடனே அடுத்து சொந்த ஊரில் காலடி எடுத்து வைக்க, “உன் கோபத்தில் கையை நீட்டிவிடாதே. இருவருக்கும் இடையே என்ன பிரச்சனைன்னு முதலில் விசாரி” என்று நண்பனிடம் பேசியபடி நிமிர்ந்தான்.
அங்கே அவனது அன்னை – தந்தை இருவரையும் பார்த்தவுடன் முகம் மலர, “என்னோடு வா” என்று அவர்களின் அருகே அழைத்துச் சென்றவன், “இரண்டு பேரும் எப்படி இருக்கீங்க? அக்கா – மாமா ஏர்போர்ட் வரவில்லையா?” என்று கேள்விகளை அடுக்கினான்.
“உங்க அக்காவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு. அதனால் அவளால் வர முடியலப்பா. நீ எப்படி இருக்கிற? ஆமா இந்த தம்பி யாரு?” அவன் கேள்விக்கு பதில் சொன்ன சதாசிவம் பார்வை திவாகர் மீது நிலைத்தது.
“எல்லாம் நமக்கு வேண்டபட்டவர்” என்று சிரித்த மகனை இருவரும் சிந்தனையுடன் பார்க்க, முகிலனின் குறும்புத்தனம் அவனுக்கு அத்துபடி என்பதால் நண்பனின் முதுகில் செல்லமாக இரண்டடி போட்டான்.
“நான் திவாகர், நாங்க இருவரும் ஒரே நிறுவனத்தில் தான் வேலை செய்தோம்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, மற்ற இருவரின் முகமும் மலர்ந்தது.
“இவன் உன்னைப்பற்றி நிறைய சொல்லி இருக்கிறான் தம்பி” என்றாள் மகேஸ்வரி புன்னகையுடன்.
நால்வரும் தங்களுக்குள் பேசியபடி நடக்க, “அம்மா இவனுக்கு ஒரு தங்கச்சி இருக்கு. நீ ஓகே சொன்னால் அவனோட தங்கச்சியை கல்யாணம் செய்து கொள்ளட்டுமா?” முகிலன் சத்தமில்லாமல் சிரிக்க, சதாசிவம் புருவங்கள் கேள்வியாக சுருங்க, தன் நண்பனை அதிர்ச்சியுடன் நோக்கினான் திவாகர்.
அந்த சூழ்நிலையில் மகேஸ்வரி முகத்தில் வெளிச்சம் பரவ, “உனக்கு விருப்பம் இருக்கிறது என்று சொல்கிறாய். அப்போ முறைப்படி பேசி ஒரு முடிவிற்கு வரலாம்” பட்டென்று அவர் தன் முடிவைக் கூற, அவரைக் கையெடுத்துக் கும்பிட்டான்.
“ஐயோ அம்மா ஆளைவிடுங்க. ஒரு விளையாட்டுக்குச் சொன்னால் நீங்க அதை நிஜமாக்க பார்க்கிறீங்க. இவன் பாருங்க உனக்கு ஒரு கல்யாணம் போதாதா என்று முறைக்கிறான். அது மட்டும் இல்லாமல் அவன் தங்கச்சிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு” என்று சொல்லி அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நண்பனின் பக்கம் திரும்பினான்.
அவனது பேச்சில் இழுத்து பிடித்திருந்த மூச்சை வெளியிட்டவன், “ஏன்டா இப்படிதான் அதிர்ச்சி தருவாயா? இன்னைக்கு என்று பார்த்து உன் மனைவி ஏர்போர்ட் பக்கம் வரல. அவங்க வந்திருந்தால் உன்னைப்பற்றி ஏ டூ ஜெட் நானே சொல்லி இருப்பேன். ச்சே நல்ல சான்சை அவங்க மிஸ் பண்ணிட்டாங்க” என்றான் திவாகர்.
“நான் போட்ட பிளானை கேன்சல் பண்ணிய கோபத்தில் ஏர்போர்ட் வரலன்னு நினைக்கிறேன். இனிதான் நான் போய் மேடம் சமாதானம் செய்யணும்” என்று அவன் சோகமாக புலம்ப, பெற்றவர்கள் மௌனமாக நின்றிருந்தனர்.
அவன் விடைபெற்றுக் கிளம்பும் வரை பொறுமையை இழுத்துப் பிடித்திருந்த மகேஸ்வரி, “நீ இன்னும் மனசில் அவளைத்தான் நினைச்சிட்டு இருக்கிறாயா? எங்களைவிட்டு அவ்வளவு தூரம் போய் இருந்தவனுக்கு அவளை மறக்க நேரம் கிடைக்கல” என்று சகட்டுமேனிக்கு பொரிந்து தள்ளினார்.
அவர் பேசுவதைக் காதில் வாங்காமல் முன்னாடி சென்ற முகிலனின் லக்கேஜ் அனைத்தையும் டிரைவர் கார் டிக்கியில் வைக்க, முன்பக்க கதவைத் திறந்து முகிலன் சீட்டில் அமர, சதாசிவம் – மகேஸ்வரி இருவரும் பின் சீட்டில் அமர, டிரைவர் வந்து காரை எடுத்தார்.
வீடு வந்து சேரும் வரை அவன் எதுவும் பேசவில்லை. கார் வீட்டின் முன் நின்றது தான் தாமதம் காரில் இருந்து இறங்கியவன் பார்வை வீட்டின் மீது படிந்தது. இந்த ஆறு ஆண்டுகளில் எந்தவிதமான மாற்றமும் இன்றி அப்படியே இருந்தது. வீட்டிற்குள் நுழைந்ததும் அவள் தங்கியிருந்த அறையைத் திறந்து பார்க்க, அது வெறுமையாக இருந்தது.
அவனது செயல்களைக் கவனித்த சதாசிவத்திற்கு மகனின் மனம் அவருக்குத் தெள்ளதெளிவாக புரிந்துவிட, “முதலில் போய் குளிச்சிட்டு ரெஸ்ட் எடுப்பா” என்றார்.
அவரின் குரல்கேட்டு தன்னிலைக்கு மீண்டவன் சரியென்று தலையசைத்து மாடியேறிச் செல்ல, முகிலனின் தவிப்பை உணர்ந்த தாயின் மனம் நிலையில்லாமல் தவித்தது.
‘ஆறு வருடங்களுக்குப் பிறகும் அவளையே தேடுகிறானே! அந்தளவுக்கு மனசில் நேசம் வைத்திருப்பவன், எதுக்காக அவளை இங்கிருந்து அனுப்பணும்’ என்று தீவிரமான சிந்தனையில் இறங்க, கடைசிநாள் இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தது நினைவிற்கு வந்தது.
ஆகமொத்தத்தில் இருவரும் தங்களைப் பற்றிய விஷயத்தை பகிராமல் விலகி நின்றிருக்கிறார்கள் என்ற உண்மை புரிய, ‘பிடிக்காத திருமணம் என்றாலும் என் மகன் சிதறிவிட்ட வார்த்தைகள் அவளை எவ்வளவு தூரம் பாதித்து இருக்குமோ’ என நினைத்து மனம் வருந்திய மகேஸ்வரிக்கு சிற்பிகாவின் மீதான கோபம் கொஞ்சம் தணிந்தது.
மற்றொரு பக்கம் மகனின் மனம் என்னவென்று துல்லியமாக உணர்ந்த சதாசிவம், ‘இந்த சிக்கலை எப்படி சரி செய்வது?’ என்று யோசிக்க தொடங்கினார்.
ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பிய திவாகர் நேராக அவள் சொன்ன முகவரிக்கு சென்றடைந்தான். வீட்டின் முன்பக்கம் முல்லைப்பந்தல் சிறிய கேட்டுடன் கூடிய சுற்றுபுறச் சுவருடன் இருந்த வீட்டின் வலதுபுறம் மாடிக்கு செல்லும் படி இருந்தது.
அவன் கேட்டைத் திறந்து உள்ளே நுழைய, “நாளைக்கு இந்த அண்ணா வந்தால் கண்டிப்பா எனக்கு மண்டகப்படி கிடைக்கப்போவது உறுதி. இத்தனை நாளாக எத்தனைப் பொய் சொல்லி இருக்கேன்” என்று தனியாக புலம்பியபடி வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.
விஜி இருந்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் அப்படியே இருந்தது. ஒரு ஹால், படுக்கையறை மற்றும் சமையலறை என்று கட்சிதமாக இருந்தது வீடு. பெரிய ஜன்னலின் வழியாக பரவிய சூரிய வெளிச்சம் வீட்டின் இருளைப் போக்கியது.
தற்சமயம் அவள் எடுத்த புகைப்படத்தில் ஒன்று சுவரை அலங்கரிக்க, அவள் படித்த புத்தங்களை ரேக்கில் அடுக்கும் வேலையில் மும்பரமாக ஈடுபட்டு இருந்தாள்.
திடீரென்று வீட்டின் வாசலில் நிழலாடக் கண்டு நிமிர்ந்த சிற்பிகாவின் பார்வை தமையனின் மீது நிலைத்தது. அவனது கண்ணில் தெரிந்த கோபக்கனல் கண்டு, “அண்ணா” என்றாள் அதிர்ச்சியுடன்.
அவன் முதல்நாளே வருவான் என்று அவள் கனவிலும் நினைக்காததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவள் சிலையென உறைந்து நின்றிருக்க, “இப்போதான் என்னோட நினைவு வருது இல்ல” என்ற கேள்வியுடன் வீட்டிற்குள் நுழைந்தவன் பேக்கை ஓரமாக வைத்தான்.
அவனது குரல்கேட்டு தன்னிலைக்கு மீண்டவள் மனம் படபடவென்று அடித்துக்கொள்ள, “நாளைக்குதானே வர்றேன்னு சொன்னீங்க அண்ணா” என்றவள் பதட்டத்துடன் வார்த்தைகளை சிதறவிட, இப்போது நேரடியாக அவளை முறைத்தான்.
அவனது கோபம் உணர்ந்து அவள் கப்பென்று வாயை மூடிக்கொள்ள, “இப்போ நான் கேட்கும் கேள்விக்கு எல்லாம் உண்மையை மறைக்காமல் சொல்லணும்” என்ற பேச்சில் அவனது கண்டிப்பு தெரிய, இனியும் அவனிடம் தப்பிக்க முடியாதென்று சரியென்று தலையசைத்தாள்.
“நீ என்னிடம் சொன்னது உண்மையா?” என்றவன் பார்வை அவள் மீதே நிலைக்க, “ம்ம்” என்று மேலும் கீழும் தலையாட்டினாள்.
“விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடும் அளவுக்கு இரண்டு பேருக்கும் இடையே என்ன பிரச்சனை?” என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தடுமாறினாள். இதுவரை சரளமாக அண்ணனிடம் பொய் சொன்னவளுக்கு இன்று உண்மையைச் சொல்வது கடினமாக இருந்தது.
“அவர் ஆரம்பத்தில் என்னிடம் விவாகரத்து கேட்டு, சில சண்டைகள் நடந்தது. ஒருநாள் வந்து பொய்யாக என்னைவிட்டு பிரிந்து இருக்க முடியாது என்று சொல்லி நடித்தார். அவரை வேண்டும் என்றே இந்த பந்தத்தில் இணைத்தால் வந்த விளைவு என்றுதான்” என்றவள் பாதியில் நிறுத்த, அவன் பார்வையில் கடுமை அதிகரித்தது.
“அவர் வெளிநாடு போவதற்கு முன்னால் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு கொடுத்துவிட்டு, இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து இங்கே வந்துட்டேன்” திக்கித்திணறி ஒருவழியாக சொல்லி முடித்துவிட்டு, தமையனின் பதிலை எதிர்பார்த்தாள்.
“இந்த ஆறு வருடம் என்னிடம் சொன்னது எல்லாமே பொய்தான் இல்லையா?” எனக் கேட்க, வேறு வழியின்றி தலையாட்டி ஒப்புக்கொண்டாள்.
அவளைக் கூர்ந்து கவனித்த திவாகர், “நீயே கையெழுத்துப் போட்டுக் கொடுக்க என்ன காரணம்னு நான் தெரிஞ்சிக்கலாமா? ஐ மீன் அவனுக்கு சிகரெட், தண்ணி இன்னும்…” என்றவன் முடிக்காமல் இழுக்க, சட்டென்று நிமிர்ந்து தமையனை முறைத்தாள்.
“நீ நினைக்கிற மாதிரி அவர் அவ்வளவு மோசமானவர் இல்ல. தாலி கட்டிய மனைவி என்மீதே அவர் பார்வை தவறாக படிந்தது இல்லை. கொஞ்சம் பிடிவாதக்குணம் கொண்டவர் என்றாலும் பக்கா ஜென்டில்மேன். ஆரம்பத்தில் அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது, ஆனால் ஒரு விபத்துக்கு பிறகு விட்டுவிட்டார்” தன்னுடைய கணவனை விட்டுக்கொடுக்காமல் பேசியதில் இருந்தே, அவளின் மனதைப் புரிந்து கொண்டான் திவாகர்.
“அப்புறம் வேறென்ன காரணம்” என்றவன் விஷயத்தை விடாமல் துருவ, அடுத்தடுத்த கேள்வியில் முற்றிலுமாக பொறுமை இழந்தாள் சிற்பிகா.
“பிடிக்காத நபரை திருமணம் என்ற சங்கலியில் பிணைத்து வைத்தால் வந்த பிரச்சனைதான். அவருக்கு என்னை பிடிக்கல, அதனால் விவாகரத்து தர சொன்னார். எனக்கும் அவரை இந்த பந்தத்தில் பிடித்து வைக்க விருப்பம் இல்லாததால் கையெழுத்து போட்டுக் கொடுத்தேன் போதுமா?” என்றவள் வெடிக்க, அவளது கன்னத்தில் பளாரென்று அறைந்தான்.
விஜயலட்சுமி அடித்தால் கூட அவளிடம் சண்டைக்குப் போகும் திவாகர், தன்னை மீறி அவளை அடித்திருந்தான். இடது கன்னத்தில் கைவைத்தபடி மிரண்டு விழித்தவளின் கண்களில் கடகடவென்று கண்ணீர் முத்துக்கள் சிதறியோட,‘அண்ணா என்னை அடிச்சானா?’ என்றபடி தமையனை நிமிர்ந்து பார்த்தாள்.
“உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. கல்யாணம் என்ன குழந்தைகள் வைத்து விளையாடும் பொருள்னு நினைச்சியா? அவன் கேட்டானாம், இவ கொடுத்தாளாம்” அடிக்குரலில் சீறியவனை இமைக்காமல் நோக்கினாள்.
“நீ பிறந்ததில் இருந்து தூக்கி வளர்த்த நான் இருக்கும்போது எனக்கு யாரும் இல்லன்னு சொல்லி கல்யாணம் பண்ணிகிட்ட சரி. ஆரம்பத்தில் உன்மீது கோபத்தைக் காட்டி இருந்தாலும், அதுக்குப்பிறகு அவன் மாறி இருக்கலாம்னு யோசிக்காமல் ஏன் இப்படி செஞ்ச?” என்றவனுக்கு தங்கையின் வாழ்க்கையை எப்படி சரி செய்வது என்றே புரியவில்லை.
அன்று அவன் கண்ணில் தெரிந்த காதல் அவளை வாயடைக்க வைக்க, ‘ஒருவேளை அவரும் என்னை விரும்பி இருப்பாரோ?’ என்று யோசிக்கும்போது, ‘யாரு எக்கேடுகேட்டால் எனக்கென்ன என்று இருக்கும் அவனா?’ என்று மற்றொரு மனம் எதிராக வாதாடியது.
“நீ விரும்பிய படிப்பு, உன் ஆசைப்படி சேர்ந்த வேலை எதுக்கும் தடை சொல்லல. நீ ஏட்டிக்குப் போட்டியாக செய்த அனைத்திற்கும் பொறுத்துக்கொண்டு கடந்து சென்று இருக்கிறார். உனக்கு இன்னும் பக்குவம் வரலன்னு நினைத்து புரிதலோடு முடிவெடுத்து விலகி இருப்பவனை நோகடிச்சிட்டு வந்திருக்கற” என்றவன் ஓரளவு விஷயத்தை யூகித்துவிட, அவன் சொன்னதைக் கேட்டு அவளின் முகத்தில் குழப்பம் சூழ்ந்தது.
“அவனோட இடத்தில் இருந்தால் வேற ஒருத்தன் இருந்திருந்தால், வலுகட்டமாக உன்னோடு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு இருப்பாங்க. ஆனால் நீ விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு தந்தபிறகும், படிப்பை மட்டும் விட்டுவிடாதேன்னு அட்வைஸ் பண்ணியிருக்க மாட்டாங்க” என்ற திவாகருக்கு சிற்பிகாவின் கணவன் மீதான கோபம் அதிகரித்தது.
‘சிறுபெண் என்ன சொன்னாலும் தலையாட்டி அவள் இஷ்டத்திற்கு விட்ட அவனை முதலில் கட்டிவைத்து உதைக்கணும்’ என்று மனம் சொல்ல, “ஏய் உன் கணவன் பேரும், அவனோட போட்டோவையும் கொடு” என்றான் மிரட்டலாக.
அவன் முகிலன் பற்றிய விவரம் கேட்டவுடன் சட்டென்று சுதாரித்த சிற்பிகா, ‘இவனிடம் சொன்னால் அவருக்கு வீண் பிரச்சனை வரும். அண்ணன் இதை இப்படியே விட மாட்டான். அதனால் முடிந்தவரை உண்மையைச் சொல்லக்கூடாது’ என்று மனதிற்குள் முடிவெடுத்தாள்.
“எனக்கு யாரோட முகவரியும் தெரியாது. திருமணம் தவிர நாங்க தனியாக எந்தவொரு போட்டோவும் எடுத்துக்கல” என்றவள் விழிகளில் இருந்த தீர்க்கம் கண்டு, அவள் சொல்வது பொய் என்று உணர்ந்தான் திவாகர்.
இனி இவளிடம் பேசி பயனில்லை என நினைத்து, “எனக்கு இங்கே யாரையும் தெரியாது என்ற நினைப்பில் இருக்கிற. அவனைக் கண்டுபிடிச்சபிறகு இருக்கு உனக்கு கச்சேரி” என்றவன் வீட்டைவிட்டு வெளியேற, அந்த இடம் மழையடித்து ஓய்ந்தது போல அமைதி நிலவியது.
தன்னுடைய உதவியின்றி அவனால் உண்மையைக் கண்டுபிடிக்க முடியாது என்பதால், அவள் கவலைபடாமல் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தாள்.
சிற்பிகாவின் மனம் முகிலனைச் சுற்றி வரவே, ‘வெளிநாடு போய் அங்கேயே தங்கிவிட்டான்னு நினைக்கிறேன். எனக்கு நல்ல வாழ்க்கை அமைந்தும் வாழ தெரியல. சரி என்னுடைய தொந்தரவு இல்லாமல் அவனாவது எங்கோ நிம்மதியாக இருக்கிறானே அது போதும்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
வீட்டைவிட்டு வெளியேறிய திவாகருக்கு சிற்பிகாவின் கணவனை எப்படி அடையாளம் கண்டு பிடிப்பது என்று புரியவில்லை. அவனுடைய பெயர், வீட்டின் முகவரி, புகைப்படம் எதுவுமே இல்லாமல் என்னவென்று சொல்லி யாரிடம் விசாரிப்பது என்று அவன் யோசிக்கும்போது முகிலனின் நினைவு வரவே, உடனே போனை எடுத்து அவனுக்கு அழைத்தான்.
தன்னவளை சந்திக்க செல்ல தயாராகிக் கொண்டிருந்த சமயம் அவனது செல்போன் சிணுங்க, புதிய எண்ணில் இருந்து வரும் அழைப்பைக் கண்டு கேள்வியாக புருவங்கள் சுருங்க, “ஹலோ” என்றான்.
மறுபக்கமிருந்து அவனிடம் பேசிய திவாகர் ஒன்றுவிடாமல் அனைத்தையும் ஒப்பித்து, “இப்போது இவளோட உதவி இல்லாமல் அவரை நான் கண்டு பிடிக்கணும். பெயர், போட்டோ எதுவும் இல்லாமல் எப்படி அவரைக் கண்டு கண்டு பிடிக்கறது என்று ஒண்ணுமே புரியலடா” தங்கையின் வாழ்க்கையை சீராக்கிவிட நினைத்தான்.
அவன் சொன்னதை உன்னிப்பாகக் கேட்ட முகிலனின் மனதில் அந்த எண்ணம் உதயமாக, “ம்ஹும்! உன் தங்கச்சி முதலில் தங்கிருந்த வீட்டில் போய் விசாரிடா. ஒருவேளை அவங்களில் யாராவது திருமணத்தில் கலந்து கொண்டிருந்தால், அவனை கண்டுபிடிப்பது ரொம்ப ஈஸி” என்றான்.
திவாகருக்கும் அவன் சொல்வது சரியென்று மனதிற்கு பட, “ம்ஹும் நான் போய் விசாரிக்கிறேன்” என்று அழைப்பைத் துண்டிக்க, இதுதான் சமயம் என்ற முடிவிற்கு வந்தவன் தன்னுடைய அலைமாரியைத் திறந்து பேப்பர் மற்றும் பைக் சாவியை எடுத்துக்கொண்டு கீழே வந்தான்.