Mazhai – 23

2a3b726ba9a50ac907d5d37a12334f0c-ee17b4f6

அத்தியாயம் – 23

வீட்டின் ஹாலில் நின்றிருந்த இருவரையும் கண்டு கொஞ்சம் தயங்கியவள் ஏதோ சொல்ல வாய் திறக்க, “நீ இந்த வீட்டுப்பொண்ணு. அதனால் இந்த தயக்கத்தை வாசலோடு விட்டுட்டு உரிமையுடன் வா. அப்புறம் எங்களுக்கு பின்னாடி கிளம்பி வந்திருக்கிற சாப்பிட்டியா?” பரிவுடன் அவளின் தலையை வருடியபடி பாசமாக விசாரித்தாள் மகேஸ்வரி.

அதை புன்னகையுடன் பார்த்த சதாசிவத்திடம், “உங்க யாருக்குமே என்மேல் கோபம் வரலயா?” என்றாள் மெல்லிய குரலில்.

இரண்டே எட்டில் மருமகளை நெருங்கியவர், “அப்படி மேடம் என்ன தப்பு பண்ணிட்டீங்க. நீயே சம்பாரித்து உன் படிப்பை முடிச்சிருக்கிற. இதோ இப்போ உன் கையில் ஒரு நிரந்தரமான வேலை இருக்கு. ஒரு பொண்ணுக்கு இதுதான் தேவை. உன்னிடம் இருக்கின்ற இந்த தைரியமும், துணிச்சலும் மிருதுளாவிற்கு கூட வராது” என்றவர் சிரித்தபடி அவளின் தலையைப் பாசத்துடன் வருடினார்.

அதில் அவளின் மனம் லேசாகிவிட, ‘அனுபவமே சிறந்த ஆசான் என்று சொல்வது போலவே, நம்ம என்னதான் அதிகமாக படித்தாலும், பெரியவர்களின் அனுபவ அறிவின் முன்பு நாம் தோற்றுப் போக நேரிடும்’ என்று உணர்ந்தாள்.

 “மாமா” என்றவள் தொடங்க, “மேலேதான் இருக்கான் போய் பாரு” என்று சொல்ல, விறுவிறுவென்று படியேறி மாடிக்குச் சென்றாள்.

“ஆனாலும் உங்க மகனுக்கு பிடிவாதம் அதிகம்தான்” என்று  மகேஸ்வரி சிரிக்க, அவரும் மனைவியுடன் சேர்ந்து சிரித்தார்.

தாழ் போடாமல் இருந்த கதவு அவளின் கரங்கள் பட்டவுடன் தானாக திறந்துகொள்ள, படுக்கையில் அமர்ந்து அவன் கல்யாண ஆல்பத்தைப் புரட்டுவது கண்ணில்பட புயல் வேகத்தில் அறைக்குள் நுழைந்தாள் சிற்பிகா.

யாரோ வரும் ஆராவாரம் கேட்டு நிமிர்ந்த முகிலனுக்கு அவள் மீதான கோபம் அதிகரிக்க, “என்னோட அறைக்குள் என் மனைவியைத் தவிர வேறொரு பெண்ணுக்கு இடம் கிடையாது. அதனால் நீங்க வெளியே போகலாம்” என்று எந்தவிதமான உணர்ச்சியையும் வெளிகாட்டாமல் இறுகிய குரலில் கூறினான்.

“அப்போ இந்த யெல்லோ திரட்டை கட்டியவர் யாரு?” என்று கேட்க அவளை சலனமே இல்லாமல் ஏறிட்டான்.

“இதை உன் கழுத்தில் கட்டிவிட்டால் மட்டும் நான் உன் புருஷன் ஆகிடுவேனா? கோவிலில் பயத்துக்கு கட்டுவது சிவப்பு, கருப்பு கயிறு போல இதுவும் உனக்கு சாதாரண கயிறுதானே. அதை ஏன் இன்னும் கழுத்தில் கட்டிகிட்டு இருக்கிற கழட்டி வீசிவிடு. உன் கழுத்தை சுத்திய பாம்பு  இத்தோடு தொலையட்டும்” என்றான் எரிச்சலோடு.

தான் அவளைத் தேடிச்சென்றபோது அவள் பேசவிடாமல் செய்ததால் வந்த கோபத்தின் வெளிபாடு என்று புரிந்துக்கொண்டு, “சாதாரண கயிறாக இருந்திருந்தால் நீங்க சொன்னதை செய்திருப்பேன். ஆனால் அதையும் தாண்டி இதை கட்டியவன் மேலே முதல்நாளில் இருந்தே காதல் வந்து தொலைத்தால் இன்னும் கழுத்தில் இருக்கு” என்று உண்மையைப்  போட்டு உடைத்தாள்.

“ஏய்” என்று அடிக்க எழுந்த முகிலனுக்கு அப்போது தான் அவள் சொன்ன வாக்கியத்தின் முழு அர்த்தம் விளங்க, “நீ என்ன சொன்ன?” என்றான் சந்தேகமாக.

அவனை நிதானமாக பார்த்த சிற்பிகாவோ, “நீங்க என்ன அர்த்தம் உணர்ந்தீங்களோ அது உண்மைன்னு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்” என்றவள் அவனின் பதிலை எதிர்பார்க்காமல் அறையைவிட்டு வெளியேற நினைக்க, அவளின் கரம்பிடித்து சுண்டி இழுக்க, அவள் நிலைத்தடுமாறி அவன்மீது போய் விழுந்தாள்.

அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டு அமைதியாக முகிலன் நின்றிருக்க, அவனின் அணைப்பில் பந்தமாக அடங்கியவள் மௌனம் சாதிக்க, நொடிகள் நிமிடங்களாக மாறி கரைந்து சென்றது.

இத்தனை நாட்களாக நெஞ்சில் வளர்த்த காதல் கை சேர்ந்த திருப்தி அவனிடமும், தன்னுடைய காத்திருப்பு பொய்யாகவில்லை என்ற நிம்மதி அவளிடமும் இருக்க, இரண்டு இதயங்கள் சத்தமாக துடிப்பது இருவரின் காதிலும் தெளிவாகக் கேட்டது.

அவனது அணைப்பு நொடிக்கு நொடி இறுகிக்கொண்டே போக, “மெல்ல” என்றாள் சிற்பிகா. சட்டென்று அவளின் பளிங்கு முகத்தைக் கையில் ஏந்தி, அவளின் முகம் முழுவதும் அசுர வேகத்துடன் முத்தமிட தொடங்கிய முகிலன் அவளின் இதழில் வந்து முற்றுகையிட, பட்டென்று கண்திறந்து அவனின் முகம் நோக்கினாள்.

அவன் உதடுகள் சொல்லாத காதலை அவனது விழிகள் அவளுக்கு உணர்த்தியது. அவன் இதழைப் பிரித்து நகர நினைக்க, “உங்களிடம் நான் கொஞ்சம் பேசணும்” என்றாள்.

அதற்குள் கதவைத் தாழிட்டு அவளை நெருங்கியவன், “நமக்கிடையே பேசுவதற்கு ஏதும் இல்ல” என்றபடி அவளை இரு கரங்களில் ஏந்திக்கொண்டு படுக்கையை நோக்கி நகர, அவனது மனம் புரிந்தபோதும் எந்தவொரு விஷயமும் அவனுடன் கலக்க மனமின்றி திமிறினாள்.

அவளின் எதிர்ப்புகளை இலகுவாக சமாளித்த முகிலன் அவளின் கழுத்து வளைவில் முகம் புதைக்க, இம்முறை அவளின் கண்களில் வழிந்த கண்ணீர் அவனுக்கு தடைவிதிக்க, “சிற்பிகா” என்ற அழைப்பு அவளை நடப்பிற்கு இழுத்து வந்தது.

அவள் உதட்டைக் கடித்து அழுகையை அடக்கிட, “நீ அழுதால் உங்க அம்மாவுக்கு மட்டும் இல்ல எனக்கும்தான் பிடிக்காது” என்றவன் சொல்ல, அவளின் கண்ணீர் கன்னத்தில் வழிய திடுக்கிட்டு நிமிர்ந்தவளின் பார்வை அவன் மீதே நிலைத்தது.

அவளைவிட்டு விலகிய முகிலனின் கரம்பிடித்து தடுத்தவளிடம், “நான் சிரித்துக்கொண்டே இருப்பதால், நீ பேசும் வார்த்தைகள் என்னை பாதிக்கவே இல்லன்னு சொல்ல முடியாதுடி. ஒவ்வொரு முறை நீ பேசும் வாக்கியம் என்னை உயிரோடு கொன்றது எனக்கு மட்டும்தான் தெரியும்” என்றது பட்டென்று தன் கரங்களை எடுத்துக் கொண்டாள்.

அவனது முகத்தில் தோன்றி மறையும் உணர்வுகளை உன்னிப்பாக கவனித்தவள், “நீங்க எப்போ இருந்து என்னைக் காதலிக்கிறீங்க?” என்றாள் குழப்பத்துடன்.

“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட” என்ற முகிலன் உதட்டில் புன்னகை அரும்பிட, அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் தலை குனிந்தாள்.

அவளின் முகத்தை ஒரு விரலால் நிமிர்த்தி அவளின் விழிகளை சந்தித்து, “இந்தளவுக்கு நடிச்ச உங்களுக்குப் போதுமா என்று கேட்டபோதே என் மனசில் நீ வந்துட்டன்னு நினைக்கிறேன். முதலிரவு அதுக்குப்பிறகு நான் பேசிய வார்த்தைகள் ரொம்ப தவறு என்று பின்னாடிதான் உணர்ந்தேன்” என்றவன் இடைவெளிவிட்ட முகிலனின் பார்வை தன்னவளை அளந்தது.

கழுத்தில் தாலி கயிறுடன் ஒரு ஜெயின், காதில் சின்னதாக ஒரு தோடு, ஒரு கையில் வாட்ச், மற்றொரு கையில் ஒரே ஒரு கவரிங் வளையல். அவன் பார்வை பாதத்தை அளவிட கொலுசு அணியாமல் விரலில் மட்டும் மெட்டி அணிந்திருந்தாள்.

“அக்கா சொன்ன மாதிரி ரொம்ப கோபத்துடன் நடந்துகிட்டேன் இல்ல. என்னை திருத்த உன்னைக் கல்யாணம் பண்ணி வச்ச கோபத்தில் ஏதேதோ பேசிட்டேன். அதுக்காக எந்த நகையுமே போடாமல் நீ இப்படி இருப்பதை பார்க்க மனசுக்கு கஷ்டமாக இருக்கு” என்றவன் தன்னுடைய அலமாரியைத் திறந்து நகை பெட்டியை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அதை வாங்காமல் அவள் முறைக்க, “என்னை ஆப் செய்யும் இந்த கண்ணை” என்றவன் குனிந்து அவளின் கண்களில் இதழ்பதிக்க, அவனின் கையில் நறுக்கென்று அவள் கிள்ளி வைக்க, “ஏய் இம்சை வலிக்குதுடி” என்றான் மெல்லிய குரலில் அலறியபடி!

அவன் வழக்கமான பேச்சில் உதட்டில் புன்னகை அரும்பிட, “என் கேள்விக்கு பதில் சொல்லாமல் கிட்ட வந்தால் இப்படித்தான்” என்றவள் சொல்லிவிட்டு நகர்ந்து அமர, இப்போது அவளை முறைப்பது அவனது முறையானது.

சிறிதுநேரத்தில் ஒருவரையொருவர் பார்த்துகொண்டு சிரித்துவிட, “நீ காலேஜ் படிக்கும் விஷயமே எனக்கு தெரியாது சிபி. அப்படி தெரிந்திருந்தால் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லியிருக்கவே மாட்டேன்” என்றான்.

“மாமா என்னைப்பற்றி உங்களிடம் சொல்லிவிட்டதாக சொன்னாரே” என்று அவள் தாடையைத் தட்டி யோசிக்க, “அதை சரியாக காதில் வாங்காததால் தான், அன்னைக்கு நைட் பதறியபடி, ஊரெல்லாம் உன்னைத் தேடி அழைத்தேன்” என்று சொல்ல அவளின் பார்வை வியப்பு அதிகரித்தது.

“நான் சொல்லிட்டுப் போகலாம்னு தானே வந்ததை நீங்க காதிலேயே வாங்கல. பிறகு அப்பா கேட்டால் அவருக்கு என்ன பதில் சொல்வது என்ற பயத்தில் தேடி இருப்பீங்க” என்றவள் காரணத்தை சரியாக யூகிக்க, அவளை மேச்சுதலாக பார்த்தான்.

“நீ சொல்வது உண்மையாக இருந்தால் கொஞ்ச நேரம் தேடிட்டு கண்டுக்காமல் விட்டு இருப்பேன், அந்தளவுக்கு தவிச்சிருக்க மாட்டேன். நீ என்னுடன் வம்பு வளர்ப்பது, சாயங்கால நேரத்தில் உன்னோடு செலவழிக்கும் நேரத்திற்காக ஓடி வருவேன். இதுக்கெல்லாம் காரணத்தை நானே யோசிக்காத சமயத்தில் தான் அந்த விபத்து நிகழ்ந்தது” என்றான்.

அதுவரை கிண்டலடித்த சிற்பிகா மௌனமாகிவிட, “அன்னைக்கு நீ கோபப்படும் போது எனக்கு எரிச்சலாக இருந்தது. அதே நேரத்தில் சிந்துவோட அப்பா – அம்மா உன்னை குற்றவாளி ஆக்குவதை தாங்க முடியாமல் கட்டுகடங்காத கோபத்தில் என்னன்னவோ பேசிட்டேன்” என்று அன்று மருத்துவமனையில் நடந்ததை மனைவியிடம் கூறினான்.

தன்னைப்போலவே ஆரம்பத்தில் இருந்து அவனும் தன்னைக் காதலித்து இருப்பதை உணர்ந்தவள் உள்ளம் சந்தோசத்தில் துள்ளிட, அவளின் கரங்களை எடுத்து முத்தமிட, அவளின் உடல் சிலிர்த்து அடங்கியது.

அவள் முகத்தில் சிவப்பு ரோஜாக்கள் எட்டிப் பார்ப்பதை ரசித்தவன், “அது மட்டும் இல்லாமல் உன் வயசும், படிப்பும் எனக்கு மிகபெரிய தடையாக இருந்தது. நீ வேலைக்கு போகும் விஷயம் பேசும்போது மொத்த பழியையும் உன்மேல் போட்டுக் கொண்டது. நான் உன் அறையில் இருக்கும்போது நீ மொட்டை மாடியிலேயே இருந்தது எல்லாமே உன்னைவிட்டு விலகி நிற்க வைத்தது” என்று காரணங்களை அடுக்க, தன்பக்கம் இருக்கும் தவறை அப்போதுதான் உணர்ந்தாள்.

சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்த சிற்பிகா, “மாமா திட்டக்கூடாது என்று பலியை என்மேல் போட்டுகிட்டேன். அப்புறம் அறைக்கு வராமல் இருந்தது, என் மனதை மறைக்கத்தான் விலகி போனேனே தவிர உங்களைப் பிடிக்காமல் இல்ல” என்றவள் தன்னிலை விளக்கம்  கொடுக்க, அதைக்கேட்டு அவன் மனதில் சாரலடித்தது.

“ஒருநாள் நீ மழையில் நனைந்தது அன்னைக்கு நீ அழுதது என்னை ரொம்பவே பாதிச்சது. அதுக்குப்பிறகு உன்னோட விலகல், நீயாக வந்து பேசிய பேச்சு என்னை சீன்டிவிட்டது. எனக்குள் இருந்த ஈகோவால் டைவர்ஸ் கொடுத்துட்டு போன்னு சொன்னேன்” என்று முகிலன் அமைதியாக இருக்க, அவனின் கரம்பிடித்து அழுத்தினாள்.

அந்த ஸ்பரிசத்தில் தன்னிலைக்கு மீண்டவன், “நிஜமாவே நீ விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு தருவேன்னு எதிர்பார்க்கல. நான் கேட்டது கிடைத்துவிட்ட சந்தோசம் எனக்கு கிடைக்கல. மாறாக உன்னைவிட்டு நிரந்தரமாக பிரிய போகின்ற என்ற கவலை என்னை வாட்டி வதைத்தது. அதை வெளிபாடுதான் அந்த முத்தம்” என்றவன் விளக்கம் கொடுக்க, சிற்பிகாவிற்கு அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று புரியவில்லை.

மற்றவர்கள் சொல்வது போலவே தன் பக்கம் இருந்த தவறை உணர்ந்து, “சாரிங்க! எல்லோரும் சொல்வதைபோல என்மேல்தான் தவறு. நான் பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்க கூடாது” என்றவள் அவனின் தோள் சாய, இரண்டு கரங்களால் அவளை வாரியணைத்துக் கொண்டான்.

“இப்போதும் பலியை உன் தலை மீதே போட்டுக் கொள்ளாதே, நானாக விவகாரத்தைக் கேட்காவிட்டால் நீயும் கொடுத்திருக்க மாட்டே! அப்படி பார்த்தால் நடந்ததில் எனக்கும் பாதி பங்கு இருக்கு. உன்னை மட்டும் குற்றவாளி போல நிற்க வைத்து கேள்வி கேட்பது சரியில்லை” என்றவன் அவளின் உச்சந்தலையில் தடையைப் பதித்து அமைதியாக இருந்தான்.

சிறிதுநேரம் இருவருக்கும் இடையே மௌனம் குடிகொள்ள, “நான் உங்களை” என்றவள் தொடங்க, “எல்லாமே எனக்கு தெரியும்” என்று ஒரே  வாக்கியத்தில் முடித்துவிட்டான் முகிலன்!

சட்டென்று அவனிடமிருந்து விலகியவள், “கொஞ்சநேரத்திற்கு முன்னாடி  வீட்டிற்கு வந்த மாமாவும், அத்தையும்கூட அதைதான் சொன்னாங்க. நான் சொல்லாமல் என்னோட காதல் உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றவளின் முகத்தில் வழக்கத்தைவிட குழப்பம் அதிகரித்தது.

“அவங்க அங்கே வந்தாங்களா?” என்று நம்பாமல் கேட்ட கணவனிடம் வீட்டில் நடந்த வாக்குவாதத்தை அவனிடம் அப்படியே ஒப்பிக்க, “ஓ அதுதான் மேடம் கிளம்பி வந்திருக்கீங்க. என்னோடு பழகிய நாட்களில் நான் உன்னை விரும்புவதை ஒரு பர்சண்ட் கூடவா நீ உணரவே இல்ல” என்ற கேள்விக்கு மறுப்பாக தலையசைத்தாள்.

“அம்மாவோட இறப்பு, என்னோட வேலை, பாதியில் நின்ற படிப்பு இதைக் கடந்து என்னால யோசிக்க முடியல. அதே மாதிரி நீங்களும் காதலிப்பதை சொல்லவே இல்லையே. அதனால்தான் எனக்கு எதுவும் தெரியாமல் போயிடுச்சு” என்றாள் வருத்தத்துடன்.

அப்போதுதான் தன்னுடைய காதல் அவனுக்கு எப்படி தெரிந்தது என்ற கேள்வி நெஞ்சில் எழவே, “நான் ஊரில் இல்லாத தைரியத்தில் நீ ஊருக்கே மைக் போட்டு அலோன்ஸ் பண்ணியது எனக்கு மட்டும் தெரியாமல் போகுமா?” என்றான் குறுஞ்சிரிப்புடன்.

“நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல” என்றவளிடம் ராகுல் தனக்கு அனுப்பும் வாய்ஸ் மெசேஜ் எடுத்துக் காட்ட, “ஐயோ” என்றவள் வெக்கத்தில் சிவந்த முகத்தை மறக்க அவன் மார்பில் புதைய, பலநாட்களுக்கு பிறகு மனம்விட்டு கலகலவென்று சிரித்தான் முகிலன்.

கொஞ்ச நேரத்தில் அவனைவிட்டு விலகிய சிற்பிகா, “ஆனால் எப்போது இருந்து நான் உங்களைக் காதலிக்க ஆரம்பிச்சேன் என்று உங்களுக்கு தெரியாதே!” என்றவள் சிறுபிள்ளைபோல குதுகலத்துடன் சொல்ல, “அதுவும் தெரியுமே” என்றான் சிரிப்புடன்.

அவளின் முகத்தில் வந்து சென்ற உணர்வுகளை படித்தவன், “உன் உடன்பிறவா சகோதரன் சொன்னதுதான். அவனைப் பகடைக்காயாக மாற்றி உன்னோட கடந்த காலத்தில் இருந்து, எந்த நேரத்தில் எப்படி இருப்ப? உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும். எது எல்லாம் பிடிக்காது.. என்று எல்லாமே தெரிஞ்சிகிட்டேன்” என்றவன் உண்மையைப் போட்டு உடைக்க, இப்போது அவளுக்கு தெள்ளதெளிவாக புரிந்தது.

பக்கத்தில் கிடந்த தலையணையை எடுத்து அவன் முதுகில் நாலு போட்டவள், “அப்போ நீங்க என் கணவர் என்று தெரிந்த பிறகுதான் அண்ணன் என்னை அடிச்சானா? இப்போ நான் இங்கே கிளம்பி வந்ததைக் கூட அவன் உங்களிடம் சொல்லிட்டான் இல்ல” என்றவளின்  முகம் களையிழந்து போனது.