Mazhai – 22

2c03f46590feccdcb42ac1242e897703-3ed6dbe0

Mazhai – 22

அத்தியாயம் – 22

‘இத்தனை வருடமாக அவனுடைய முகத்தை நேரில் பார்க்க மாட்டோமா? அவனோடு சேர்ந்து வாழ ஒரு வாய்ப்பு அமையாதா?’ என்று மனதிற்குள் நினைத்து மருகியவள், இன்று அவனது பேச்சில் அனைத்தையும் மறந்தாள்.

சட்டென்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், “அதைப் பற்றி யோசிக்க ஒண்ணுமே இல்ல. உங்களுக்கு ஆறு வருடத்திற்கு முன்னாலேயே டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்துப் போட்டு கொடுத்துட்டேன். நீங்க எப்போ கோர்ட்டிற்கு வர சொன்னாலும் வர நான் தயார்” என்றாள் வெடுக்கென்று.

அவளிடம் இந்த பதிலை ஏற்கனவே எதிர்பார்த்த முகிலன், “சிற்பிகா” என ஏதோ சொல்ல தொடங்கும் முன்பே கையமர்த்தி அவனைத் தடுத்துவிட்டு, அவளே மீண்டும் தொடர்ந்தாள்.

“எங்க அண்ணனிடம் இத்தனை நாளாக சொன்ன பொய் எல்லாமே அவனுக்கு தெரிந்துவிட்டது, இப்போதுதான் என்னை அடிச்சிட்டு உங்களைத் தேடி போயிருக்கிறான். ஒவ்வொரு நாளும் பொய் சொல்லி சலிப்பு தட்டிப்போச்சு. சாதாரணமான பொய்க்கே இந்த நிலை என்றால், ஒவ்வொரு நாளும் பிடிக்காத என்னை நீங்க சகிச்சுகிறது நல்ல இருக்காது” அவனின் மீது பார்வையைப் படரவிட்டாள்.

தன்னை பேச விடாமல் செய்கிறாளே என்று நினைத்தவன் கோபம் மெல்ல அதிகரிக்க, “நீங்க என்னிடம் கேட்டது விவாகரத்து. அதைத்தான் அப்போதே கொடுத்துட்டேனே! அப்புறம் எதுக்காக என்னைத் தேடி வந்து தொல்லை தறீங்க. இனிமேலாவது இந்த பக்கம் வராமல் இருங்க உங்களுக்கு புண்ணியமாக போகும்” என்று கையெடுத்துக் கும்பிட்டவள், சட்டென்று இருக்கையைவிட்டு எழுந்து நின்றாள்.

அவள் தன் மனதை வெளிபடுத்தாமல் இறுகிய பாறைபோல நின்றிருக்க, “நான் உன்னிடம் டைவர்ஸ் கேட்டது மறுக்க முடியாத உண்மைதான். ஆனால் அதை நான் கேட்டபோதே தந்திருக்கணும். அதனால் இப்போது இந்த பேப்பர் எனக்கு பயன்படவே இல்ல” என்றவன் கையெழுத்து போட்டு தந்த பேப்பரை சுக்குநூறாக கிழித்து அவளின் கையில் கொடுத்தான்.

அவனது இந்த செயல் அவளை அதிர்ச்சியடைய செய்ய, “இந்த உலகத்தில் காசு கொடுத்து எதை வேண்டுமானாலும் வாங்கலாம். ஏன் நமக்கு தேவைப்படும்போது சில பொருட்களை இரவலாக கேட்டுகூட வாங்கலாம். ஆனால் இரண்டை மட்டும் கேட்டு வாங்க முடியாது” என்றவன் பாதியில் நிறுத்த, அது என்னவென்று யோசித்தபடி அவனை ஏறிட்டாள் சிற்பிகா.

“நீ காசை தண்ணியாக செலவழித்தபோது நல்ல நண்பர்கள் கிடைக்க மாட்டாங்க. இன்னொன்னு உயிருக்குள் உணரும் காதல். இதை இரவல் கேட்டு வாங்க முடியாதுடி!” என்று நிதானமாக சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேற, தன்னவனை இமைக்காமல் நோக்கினாள்.

அவன் சொன்ன விஷயம் கொஞ்சம் நேரத்திற்கு பிறகே அவளுக்குப் புரிய, ‘இவர் என்னை காதலிக்க வாய்ப்பே இல்ல. வீட்டில் இருப்பவங்க கட்டாயத்தில் கிளம்பி வந்திருப்பாரு’ என்று நினைத்தபடி தன் கையில் இருந்த பேப்பரைத் தொட்டியில் போட்டுவிட்டு மற்ற வேலைகளைக் கவனிக்க சென்றாள்.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஆனபிறகு வீட்டிற்கு வந்த மகனின் முகத்தை ஆராய்ந்த மகேஸ்வரி, “ஏன்டா அவளை நீ பார்க்கவே இல்லையா?” என்று கவலையுடன் கேட்டார்.

தாயின் முகத்தை ஏறிட்ட முகிலனின் கண்களில் வலி அப்பட்டமாகத் தெரிய, “நீ போன விஷயம் என்னடா ஆச்சு” என்று மகனை விசாரித்தார் சதாசிவம்.

சட்டென்று தாயின் அருகே சென்று அமர்ந்த முகிலனோ, “எனக்கு மனசு முழுக்க பாரமாக இருக்கும்மா. உன் மடியில் ஆறுதல் கிடைக்கும்னு தேடி வந்திருக்கிறேன். நீயும் ஏதாவது கேட்டு என்னை நோகடிக்காதே!” என்றவன் சோபாவில் கால்நீட்டி மகேஸ்வரியின் மடியில் தலைவைத்து படுத்தான்.

தன் மகனின் பேச்சில் இருந்தே அவன் மனவலியைப் புரிந்து கொண்ட சதாசிவம் அமைதியாக இருக்க, “இந்த ஆறு வருடத்தில் ஒருநாள்கூட அவளை மறக்கவே இல்லம்மா. இன்னைக்கு பேச போன என்னை பேச விடாமலே பண்ணிட்டம்மா. நான் சொல்ல போன விஷயத்தை சொல்லாமலே திரும்பி வந்துட்டேன்” கலங்கிய விழிகளைத் மெல்ல துடைத்தான்.

தான் பெற்ற பிள்ளையை அந்த நிலையில் பார்த்த பெற்றவர்களின் உள்ளம் பரிதவிக்க, “சரிப்பா நான் எதுவும் பேசல. நீ ரூமில் போய் கொஞ்சநேரம் படுத்து ரெஸ்ட் எடு! உங்க அப்பாவும், நானும் ஹாஸ்பிட்டல் போய் மிருதுளாவை பார்த்துவிட்டு வருகிறோம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

அதே நேரத்தில் முகிலன் சொன்னது போலவே அவர்கள் தங்கியிருந்த பழைய ஏரியாவில் சென்று விசாரித்ததில், சிற்பிகாவின் கணவன்  இருக்கின்ற வீட்டின் முகவரி கைக்கு கிடைத்தது. அதை பார்த்த திவாகருக்கு உண்மை வெட்டவெளிச்சமானது என்று சொல்லலாம்.

அவன் வீட்டிற்குள் நுழையும்போது சிற்பிகா சமையல் செய்து கொண்டிருக்க, “சிற்பி” என்ற அழைப்பில் சட்டென்று அடுப்பை அணைத்துவிட்டு வெளியே வந்தாள்.

“சீக்கிரம் குளிச்சிட்டு என்னோடு கிளம்பு. உன்னை உங்க வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்” என்று அவன் சொன்னதைக் காதிலேயே வாங்காமல் மார்பின் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டு அசையாமல் நின்றவளை கோபத்துடன் முறைத்தான்.

“இதுதான் என்னோட வீடு. ஆமா நீ யாரோட வீட்டில் என்னை கொண்டுபோய் விடணும்னு சொல்லிட்டு இருக்கிற?” என்றாள் நிதானமாகவே.

“உங்க இருவருக்குள் என்ன பிரச்சனை என்று இன்றுவரை எனக்கு தெரியாது. ஆனால் உன்பக்கம் தான் தவறு இருக்குன்னு நினைக்கிறேன். அதனால் அடபிடிக்காமல் சொன்னப்பேச்சை கேட்டு என்னோடு கிளம்ப பாரு” என்று சொல்லும்போது, “நாங்க உள்ளே வரலாமா?” என்ற குரல்கேட்டு அண்ணனும், தங்கையும் திரும்பி வாசலைப் பார்த்தனர்.

அங்கே நின்றிருந்த சதாசிவம் – மகேஸ்வரி முகம் பார்த்ததும், “வாங்க மாமா, அத்தை” என்று புன்னகையுடன் வரவேற்ற சிற்பிகா இருவருக்கும் குடிப்பதற்கு ஏதாவது எடுத்து வரலாம் என நினைத்து சமையலறை நோக்கி நகர்ந்தாள்.

அதே நேரத்தில் அங்கே நின்றிருந்த திவாகரைப் பார்த்து, “நீ எப்படிப்பா இங்கே?” என்று சதாசிவம் விசாரிக்க, “சிற்பிகா என் தங்கச்சிதான்” என்றான் மெல்லிய குரலில்.

அப்படியொரு அண்ணன் தனக்கு இருப்பதை அவள் இதுவரை யாரிடமும் சொல்லவில்லை. புவனாவிற்கு மட்டும் திவாகர் பற்றிய உண்மை தெரியும். அதனால் அவர்களிடம் தங்களின் கடந்தகாலம் பற்றி இரத்தின சுருக்கமாக சொல்லி முடிக்க, மூவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாள்.

இதுநாள்வரை மருமகளின் மீது கோபமாக இருந்த மகேஸ்வரிக்கு இன்றுதான் முகிலன் மனம் புரிந்தது. அவளைத் தவிர வேறொரு பெண்ணை தன் மகன் கரம்பிடிக்க மாட்டான் என்ற உண்மை உணர்ந்ததும், மருமகள் மீதான கோபத்தை ஒதிக்கிவிட்டு அவள் கொடுத்த கப்பை வாங்கி வைத்துவிட்டு நிமிர்ந்தாள்.

“எங்கமேல உனக்கு என்னம்மா அவ்வளவு கோபம்? அவன் உன்மீது வெறுப்பை காட்டி இருந்தாலும், நாங்க உன்மேல பாசமாகத்தானே இருந்தோம்?” என்றவரின் குரலில் ஆதங்கம் தெரிந்தது.

அவள் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றிருக்க, “உன்னிடம் நான் என்னைக்காவது சராசரி மாமியாராக நடந்துக் கொண்டிருக்கிறேனா? இல்ல உன்மனசு கஷ்டப்படும் படி பேசித்தான் இருக்கிறேனா? அப்புறம் எதுக்காக இந்த வனவாசம்?” என்று நேரடியாக கேட்டாள்.

“ஐயோ அத்தை நீங்க அப்படி எல்லாம் இல்ல. உங்க கட்டாயத்திற்காக தாலி காட்டியவருக்கு என்னோடு வாழ விருப்பம் இல்லன்னு டிவோஸ் கேட்டார். அதை அவர் ஊருக்குப் போகும் முன்னாடியே கொடுத்துட்டேன். அதுக்குப்பிறகு உங்க வீட்டில் மருமகளாக நான் எப்படி இருக்க முடியும்னு நீங்களே சொல்லுங்க பார்ப்போம்?” என்று தன் கருத்தை அவள் முன் வைக்க, இம்முறை சதாசிவம் அவளிடம் பேசினார்.

“நீ சொல்வது நியாயம்தான். ஆனால் ஆறு மாசம் ஒரே வீட்டில் வாழ்ந்து இருக்கீங்க. ஏன் அவன் கடைசியாக ஊருக்குப் போகும்வரை ஒரே அறையில் தங்கி இருக்கீங்க. அவனோட மனசில் என்ன நினைக்கிறான்னு கூடவா உன்னால புரிஞ்சிக்க முடியாது?” என்றவர் பார்வை அவளின் மீது நிலைத்தது.

திவாகர் அமைதியாக அங்கே நடப்பதை வேடிக்கைப் பார்க்க, “ஒரே வீட்டில் இருந்தால் வாழ்ந்ததாக அர்த்தமா மாமா? அப்புறம் கடைசிநாள் ஒரே அறையில் தங்கியது உங்க எல்லோரையும் கஷ்டபடுத்த வேண்டாம்னு தான். இதோ இடைபட்ட இந்த ஆறு வருசத்தில் உங்க வீட்டிலோ இல்ல உங்க மகன் வாழ்க்கையில் என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது” என்றவள் இரண்டு கைகளையும் விரித்து உதட்டைப் பிதுக்கிவிட்டு மறுப்பாக தலையசைத்தாள்.

அவளது செய்கை திவாகருக்கு கோபத்தை வரவழைக்க, ‘எந்தநேரமும் பட்டாம்பூச்சி மாதிரி இருக்கும் என் தங்கையா இது?’ என்ற சந்தேகம் கூட அவன் நெஞ்சில் எழுந்தது.

 “இன்னைக்கு வரைக்கும் சிற்பிகா என்ற ஒருத்தி இருக்கேனான்னு கவலைபடாமல் இருந்தீங்க தானே? இப்போ உங்க மகன் வாழ்க்கைக்காக பேச வந்திருக்கீங்க இல்ல. இதே எனக்கு அப்பா – அம்மா இருந்திருந்தால் எனக்காக பேசி இருப்பாங்க. யாரும் இல்லாதவ என்ற ஒரே காரணத்தால் தானே என்னை இப்படி கண்டுக்காமல் விட்டுடீங்க?” என்ற கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

அவர்கள் அமைதியாக இருப்பதைகே கண்டு, “இதுவரை என்னை பார்த்துக்க தெரிஞ்ச எனக்கு இனிமேலும் என்னைப் பார்த்துக்கொள்ள தெரியும். உங்க விருப்பத்துக்கு கல்யாணம், அவர் விருப்பத்துக்கு விவாகரத்து என்று எல்லாமே என் வாழ்க்கையில் நடந்து முடிஞ்சிடுச்சு. இன்னும் கொஞ்சநாள் நிம்மதியாக இருக்க நினைக்கிறேன். அதனால் என்னைத் தேடி யாரும் வராதீங்க. உங்க மகனுக்கு வேறொரு பெண்ணாகப் பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க” என்றாள் முடிவாக.

அவளைப் பொறுத்தவரை அவள் செய்தது சரியென்று இதோ இந்த நிமிடம் வரை நினைக்கிறாள். இந்த உலகில் ஆயிரம் உறவுகள் இருந்தாலும், அவளுக்காக இருப்பது முகிலன் மட்டுமே. அவனை தான் இழந்தாலும், அவன் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று மட்டுமே நினைத்தாள், நினைக்கிறாள்.பாவம் அவளுக்குத் தெரியாது அவனுடைய சந்தோசம் அவள்தான் என்று!

சட்டென்று உட்கார்ந்த இடத்தில் இருந்து எழுந்த சதாசிவம், “நீ நினைக்கிற மாதிரி என் மகனோடு சேர்ந்து வாழ வான்னு உன்னை நாங்க கூப்பிட வரல. அவனோட வாழ்க்கையில் உன்னைத் தவிர இன்னொரு பெண்ணுக்கு இடம் இல்லன்னு உனக்கு தெரியாமல்  இருக்கலாம். ஆனால் எங்களுக்கு நல்லாவே தெரியும்” என்று இடைவெளிவிட, அவளது முகத்தில் குழப்பம் சூழ்ந்தது.

“இத்தனை நாளாக உன்னைத் தேடி வரலன்னு சொல்ற. உன்னைத் தொந்தரவு செய்ய வேண்டான்னு சொன்னது உன்னோட புருஷன்தான். அப்புறம் இந்த ஆறு வருசத்தில் உன் வாழ்க்கையில் என்னன்னா நடந்தது எங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்” என்று இடைவெளிவிட்ட மாமனாரின் மீது அவளின் பார்வை கேள்வியாக படிந்தது.

“என்ன மாமா சொல்ல வந்ததை பாதியில் நிறுத்திட்டீங்க?” அவள் இடதுபுருவத்தை மட்டும் உயர்த்த, “உன் கணவனுக்கு நீ காலையில் எழுவதில் இருந்து தூங்குவது வரை என்ன நடக்குதுன்னு எல்லாமே தெரியும். அது எப்படின்னு அவனிடம் கேட்டு தெரிஞ்சிக்கோ” என்றவர் பார்வை திவாகரின் மீது படிந்து மீண்டது.

அவர் சொன்னதை சிந்தித்தபடி நின்றிருந்த சிற்பிகா அவரின் பார்வையைக் கவனிக்க தவறிவிட, “பெத்தவங்க எங்களைவிட்டு கடல்கடந்து போய் வேலை செய்ய வேண்டிய தேவையே என் மகனுக்கு இல்ல. ஆனால் அவன் போய் இவ்வளவுநாள் இருக்க காரணம் உன்னோட படிப்புதானே தவிர நாங்க இல்ல” என்றவர் தன்னுடைய மகனின் மனம் பற்றி மேலோட்டமாக குறிப்பை மட்டும் காட்டிவிட்டு கடைசியாக அவர் சொன்ன விஷயம் அவளை யோசிக்க  வைத்தது.

“என் மகன் ஒரு சராசரி ஆணாக நடந்திருந்தால் நீ எங்க முன்னாடி இப்படி நின்று கேள்வி கேட்க முடியாதும்மா. உங்க இருவருக்குள் பிரச்சனையாக இருந்த அந்த விவாகரத்து பத்திரம் இப்போ உன் வீட்டு குப்பைத் தொட்டியில் கிடக்கிறது. அதுக்கு என்ன காரணம் இருக்க முடியும்னு நீயே யோசி. அவன் விரும்பி கேட்டதாக இருந்திருந்தால் இவ்வளவு நாள் கழித்து உன்னைத் தேடி வர வேண்டிய அவசியம் என்ன இருக்கு?” என்றவர் தன் மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார்.

இந்த இடைபட்ட ஆறு வருடத்தில் அவனைப் பற்றி நன்றாக புரிந்து வைத்திருந்த திவாகருக்கு மனம் வலித்தது. அவன் மனதில் இருக்கும் காதலை தான் அவளிடம் சொல்லக்கூடாது என்ற முடிவிற்கு வந்தான். அத்துடன் அவன் தன்னிடம் இதுவரை உண்மையை மறைத்தது கோபத்தை கொடுக்க, ‘உன்னை வீட்டில் வச்சு கவனிக்கிறேன்’ என்று மனதிற்குள் நினைத்தான்.

சதாசிவம் – மகேஸ்வரி இருவரும் கிளம்பி சென்றவுடன் அங்கிருந்த சோபாவில் அமைதியாக அமர்ந்தான் திவாகர். அன்று நடந்த அடுத்தடுத்த பிரச்சனையில் தான் செய்தது சரியா? மற்றவர்கள் சொல்வதுபோல அவன் பக்கம்தான் நியாயம் இருக்கிறதா? என்ற சிந்தனையுடன் கடிகாரத்தின் மீது பார்வையைப் படரவிட்டாள்.

கடிகாரம் முள் மணி எட்டு என்றது!

இங்கிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் தனக்கு மட்டுமே தலைவலியை அதிகரிக்க செய்யும் என்ற முடிவிற்கு வந்தவள், “திவா அண்ணா நான் முகிலனைப் பார்க்க போறேன். உனக்காக சமைத்து வச்சிருக்கேன். நீ சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடு. மற்ற எதுவாக இருந்தாலும் காலையில் பேசலாம்” என்றவள் தன்னுடைய அறைக்கு சென்று புடவையை மாற்ரிவிட்டு வெளியே வந்தவள் செல்போன் மற்றும் ஸ்கூட்டி சாவியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

அவன் எவ்வளவு தடுத்தும் அவள் கேட்காமல் சென்றுவிட, “இவனுக்கு போன் பண்ணி சொல்லலாமா?” என நினைத்த திவாகர், அந்த யோசனையைக் கைவிட்டு வீட்டிற்குள் விரைந்தான்.

அங்கிருந்து கிளம்பியவள் அரை மணி நேரத்தில் முகிலனின் வீட்டுக்கு சென்றாள். கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேல் ஆகியும் அந்த வீட்டின் தோற்றமும், பொலிவும் அப்படியே இருந்தது. முகிலனிடம் பொய் சொல்லிவிட்டு சிற்பிகாவின் வீட்டிற்கு சென்ற இருவரும் அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்தனர்.

அவர்களின் பின்னோடு வந்து நின்ற ஸ்கூட்டியின் சத்தம்கேட்டு கணவனும், மனைவியும் வாசலைப் பார்க்க வேகமாக  வீட்டிற்குள் நுழைந்தவளைக் கண்டு ஒருவரையொருவர் பார்த்துகொண்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டனர்.

error: Content is protected !!