mazhai – 9

8dc8fb3ab364ebcb78890aa4e60bf241-a725787b

அத்தியாயம் – 9

அந்த அறையின் ஒருபக்க செல்ப் முழுவதும் நேர்த்தியாய புத்தகம் அடுக்கபட்டிருக்க, அதற்கு அருகே லைட்டுடன்கூடிய டேபிள் இடம் பிடித்திருந்தது. மற்றொரு பக்கம் அலைமாரியுடன் கூடிய ட்ரசிங் டேபிள் இருக்க, இரண்டுக்கும் நடுவே போடபட்டிருந்த கட்டிலில் மலைபோல கரடி மற்றும் நாய் பொம்மைகளும் குவிந்து கிடந்தது.

அதைக் கண்டவுடன், “எங்க வீட்டில் பேபிஸ் இல்லையே.. ஆனால் இந்த அறையில் இத்தனை பொம்மை இருக்கே” என்ற கேள்வியுடன் மனைவியின் மீது அவன் பார்வை படிந்து மீண்டது.

தன்னை அவன் குழந்தை என்று சொன்னதும் லேசாக கன்னம் சிவந்தவள், “அந்த பொம்மை எல்லாம் என்னோடது” என்று கூறியவள் வேகமாக சென்று அந்த பொம்மைகளை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு,

“நீங்க ரெஸ்ட் எடுத்துகோங்க” என்றதும் அவன் தடுமாற்றத்துடன் அடுத்த அடி எடுத்து வைப்பதைக் கவனித்தவள் வேகமாக ஓடிவந்து அவனை கைத்தாங்கலாக அழைத்து சென்று படுக்கையில் அமர வைத்தாள்.

அவள் படுக்க வேண்டிய இடத்தில் பொம்மைகள் கிடப்பதைக் கண்டவன், “இவ்வளவு பொம்மைகள் வாங்கி தந்துருக்காங்களே பெரிய விஷயம்தான்” பொம்மைகள் ஒவ்வொன்றாக எடுத்து இடமாற்றி வைத்து கொண்டிருந்தவள்,

“எனக்கு யாரும் வாங்கி தரல. இதெல்லாம் நான் சம்பாரித்த காசில் வாங்கியது. நான் வளரும்போது கேட்ட எந்த பொம்மையும் வாங்கி தரும் அளவிற்கு அம்மா சம்பாரிக்கல. நான் கொஞ்சம் பெருசான பிறகு வீட்டு வீடு பேப்பர் போட்டு சம்பாரித்த காசில் வாங்கிய பொம்மைகள்” குரலில் மாறுதல் இன்றி கூறியவள் தன் வேலையைக் கவனித்தாள்.

சிறுவயதில் கேட்டது கிடைக்காமல் போகும்போது அது எப்படியொரு வலியைத் தருமென்று அவன் உணர்ந்ததில்லை. ஏன்னென்றால் இன்றளவும் அவனின் விருப்பத்திற்கு வீட்டினர் மறுப்பு சொன்னதில்லை. அவன் மனதில் நினைப்பதைக் கூட வாங்கித்தரும் அளவிற்கு செல்வாக்கு படைத்த குடும்பத்தில் வளர்ந்திருந்தான். அதனால் வருத்தமென்றால் என்னவென்று அவன் அறிந்ததில்லை.

இன்று சிற்பிகா சொன்னதைக் கேட்டவுடன், “அந்தளவுக்கு கஷ்டப்பட்டாயா?” என்றவன் கேள்விக்கு ஒப்புதலாக தலையசைத்தாள்.

ஓரளவிற்கு படுக்கையில் இருந்த பொம்மைகள் அனைத்தையும் இடம் மாற்றியவள், “உங்களுக்கு கால் சரியாகும்வரை இந்த அறையை நீங்க பயன்படுத்திக்கோங்க. உங்க கால் சரியாகிவிட்டால் நீங்க மாடியில் இருக்கும் உங்க அறைக்கு போயிடுங்க” சிரித்தபடி சொல்லிவிட்டு நகர நினைத்தாள்.

“இப்போது எதுக்கு ரூம்மெட்க்கு கண்டிஷன் போடுகின்ற மாதிரி பேசற?” இலகுவாக அவன் கேட்டான்.

சட்டென்று அவனின் பக்கம் திரும்பியவள், “உங்களுக்கு நடிப்பு கைவந்த கலை. ஆனால் விளையாட்டுக்கு கூட தினம் தினம் உங்களிடம் நடிக்க முடியாது. அது எனக்கு சரிவராததும் கூட! அதுதான்  அட்வான்ஸா இப்பவே சொல்றேன்” என்று சாதாரண குரலில் கூறினாள்.

மார்பின் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டு கம்பீரமாக பேசும் மனையாளின் வார்த்தைகள் வெகுவாக அவனின் மனத்தைக் காயப்படுத்தியது.

அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல், “ம்ஹும் முடியாது என்று சொன்னால்..” என்ற கேள்வியுடன் இடது புருவத்தை ஏற்றி இறக்கினான்.

“சிம்பிள் நான் உங்க அறைக்கு சிப்ட் ஆகிடுவேன்” பட்டென்று அவளிடம் பதில் வரவே, ‘இம்சை எல்லா கேள்விக்கும் டான் டானென்று பதில் சொல்லுது’ மனதிற்குள் அவளை வறுத்தேடுத்தான்.

கொஞ்ச நேரம் இருவருக்கும் இடையே மௌனம் நிலவிட, “இந்த அன்பு, பாசம், காதல் இதெல்லாம் உன் வாழ்க்கையில் இல்லவே இல்லையா.. இப்படி மனசாட்சியே இல்லாமல் பேசற?” என்றான்.

“அதுக்கெல்லாம் இடம் கொடுத்தால் நானெப்படி வக்கீல் ஆக முடியும்? இப்பதான் பி.ஏ. படிக்கிறேன், அதுக்கு பிறகு பி.எல். பண்ணனும்.. அப்புறம் கொஞ்சநாள் வொர்க் போகணும்.. அப்புறம்தான் மத்ததெல்லாம்” விரல்விட்டு எண்ணியபடி அவள் கூறுவதைக் கேட்டு அவனுக்கு சிரிப்பு வந்தது.

‘இன்னும் ஆறு வருஷம் வெயிட் பண்ணணுமா? சுத்தம் முகிலா கடைசிவரை உன் வாழ்க்கை இப்படித்தான் போகுமா?’ மனதினுள் நொந்து கொண்டான்.

எந்தவொரு நிலையிலும் மனம் தளராமல் படிக்க வேண்டும் என்று நினைக்கும் சிற்பிகாவின் எண்ணத்தை ஊக்குவிக்கும் வகையில், “நீ இப்போது படிப்பில் மட்டும் கவனம் செலுத்து.. அதுதான் உனக்கு நல்லது” முகிலன் கூற சரியென்று தலையாட்டிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

அவனுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து அனைத்தையும் கொடுத்துவிட்டு தேர்வு படிக்க அமர்ந்த சிற்பிகாவைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்று நினைத்தவன் கண்ணை மூடி படுத்தான்.

சிறிதுநேரத்தில் தன்னையும் அறியாமல் அவன் உறங்கிப் போக, “முகில்” என்ற அழைப்புடன் உள்ளே நுழைந்த நிரஞ்சனைக் கண்டு சட்டென்று எழுந்து நின்றாள்.

அவள் கையில் புத்தகத்தையும், படுக்கையில் முகிலன் உறங்குவதையும் கவனித்தவன், “சும்மா பேசிட்டு இருக்கலாம்னு வந்தேன்மா. அவன் நல்லா தூங்கறான். சரி நீ படி” அவன் அங்கிருந்து சென்றுவிட தன்னுடைய சேரில் அமர்ந்தபடி தூங்கும் கணவனை நோக்கினாள்.

இந்த வீட்டிற்கு வந்த புதிதில் அபூர்வமாக இரண்டொரு நாள் இருவரும் ஒரே அறையில் தங்கிய ஞாபகம். அவனின் கடுஞ்சொல்லில் தப்பிக்க விலகி போனது மனதில் படமாக விரிந்தது. அவர்களைக் கணவன் – மனைவி என்று ஊரே சொன்னாலும் தாமரை இலையில் தண்ணீரைப்போல இருவரின் வாழ்க்கையும் நகர்ந்தது என்றே சொல்லலாம்.

இன்று தன்னுடைய அறையின் உள்ளே அவனை கண்ட சிற்பிகா மெல்ல எழுந்து என்று அவனின் மற்றொரு பக்கம் அமர்ந்தவள், மெல்ல அவனின் சிகைக்குள் கையை நுழைத்து கோதிவிட்டாள்.

அவளின் ஸ்பரிசம் உணராத முகிலன் ஆழ்ந்த நித்திரையில் இருக்க, ‘உனக்கு வரும் மாப்பிள்ளை என்னைவிட இரண்டு மடங்கு பேசுபவனாக இருக்கணும். அப்போதான் மகளே உன்னை ஒருத்தியை சமாளிக்க முடியும்’ தாயார் அலுத்துக் கொண்டு பதில் சொல்வது மனக்கண்ணில் வந்து சென்றது.

‘இந்த அம்மாதான் இவனை எனக்காக அனுப்பி இருக்காங்களா? ஹப்பா வாயைத் திறந்தால் சண்டைப்போட்டு ஒரு வழியாகுது! ஆனாலும் அக்கறையுடன் கவனிச்சுக்கறேன். ஒரு வருஷம் கழிச்சு என்னைப் போக சொன்னால்.. அப்புறம்..’ என்று நினைத்தவள் சட்டென்று தலையை உதறிவிட்டு அவனின் தலையில் இருந்து வெடுக்கென்று கையெடுத்துக் கொண்டாள்.

படுக்கையில் அவனருகே போடப்பட்டிருந்த ஆளுயர கரடியை எடுத்து அணைத்துக்கொண்டு அருகே படுத்த சிற்பிகா தன்னையும் அறியாமல் உறங்கி போனாள்.

சிறிதுநேரத்தில் பொம்மையை இழுத்து அணைப்பதாக நினைத்து வலது கையால் அவளை இழுத்து தன்மேல் போட்டுகொண்டு உறங்கியவன் நாசியைத் துளைத்த மல்லிகை வாசனையில் கண்விழித்து பார்த்தான்.

தன் கரங்களில் சிறைபட்டிருந்த சிற்பிகாவின் முகம் கண்டவுடன், ‘இவ எப்போ என்மேலே வந்து படுத்தாள்?’ என்ற சிந்தனையுடன் இடது கையை சற்று நகர்த்தி வைத்து கொண்டு வலது கையால் அவளை அணைத்துக்கொண்டு மீண்டும் உறங்கி போனான்.

தாயின் கதகதப்பான அணைப்பில் உறங்கியே பழக்கப்பட்டிருந்த சிற்பிகாவிற்கு கணவனின் அணைப்பினில் தாயையே உணர்ந்தாள் என்று சொல்லலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளின் கணவன் தந்தையைப் பிரதிபலிப்பான். ஆனால் இங்கோ தாயின் பிரதிபிம்பமாக முகிலனையே நினைத்தால் பாவைக்கு அணைப்பில் வேற்றுமை காண முடியவில்லை.

இருவரின் மனதிலும் கணவன் – மனைவி என்ற உறவைக் கடந்து ஆழமான அன்பை ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருந்ததால் காமம் இல்லாத அணைப்பில் அன்பால் கட்டுண்டு உறங்கியிருந்தனர்.

“சிற்பிகா” என்ற அழைப்பைக் கேட்டு பதறியடித்து எழ முயற்சித்தபோது முகிலனின் கைவளைவில் இருப்பதை அவள் உணர, அதே நேரத்தில் அவளின் அசைவினால் தூக்கம் கலைந்து கண்விழித்தான்.

நான்கு விழிகளும் சந்தித்துக்கொள்ள, “சாரி..” என்றனர் இருவரும் ஒருமித்த குரலில்.

அடுத்த நிமிடமே அவன் கரங்களை விலக்கி கொள்ள, சட்டென்று அவனைவிட்டு விலகி எழுந்து வெளியே சென்றவளின் மனம் படபடவென்று துடிக்க தொடங்கியது.

தன் மருமகளின் நிலை உணராத மகேஸ்வரி, “இந்தம்மா இந்த காபியை அவனுக்கு கொடுத்துட்டு நீயும் குடிச்சிட்டு தலைவாரி பூ வச்சிட்டு வீட்டில் விளக்கு போடு” என்றதற்கு சரியென்று தலையசைத்துவிட்டு அறைக்குள் சென்று மறைந்தாள்.

முகிலனின் முகத்தை நேருக்கு நேர் பார்க்கும் தைரியம் இன்றி, “இந்தாங்க” அவனிடம் காபியை நீட்டினாள்.

தன்னை நிமிர்ந்து பார்க்காமல் தயக்கத்துடன் இருப்பதை கவனித்தவன், “தேங்க்ஸ்” என வாங்கிக் கொண்டான்.

சதாசிவம், நிரஞ்சன் இருவரும் நியூஸ் சேனலை பார்த்து விவாதத்தில் இறங்க, மற்றொரு பக்கம் தாயோடு பேசியபடி சமையலில் ஈடுபட்டிருந்தாள் மிருதுளா. அத்தை சொன்னதை செய்துவிட்டு அறைக்குள் தஞ்சமடைய மனமின்றி வேகமாக மாடிக்கு சென்று அமர்ந்து கொண்டாள்.

‘இத்தனை நாளாக இல்லாமல் இன்னைக்கு எப்படி? அவருக்கு ஏற்கனவே என்னைக் கண்டால் பிடிக்காது.. எந்த நேரமும் கடுகடுன்னு இருப்பவர் இப்போதுதான் கொஞ்சம் பேச ஆரம்பித்தார். ஆனால் இன்னைக்கு நான் செய்த காரியத்தினால் எல்லாமே போச்சு’ மனதினுள் புலம்பினாள்.

இருள் சூழ்ந்த வானில் பௌர்ணமி நிலவு பூரண ஒளியுடன் நட்சத்திர தாரகைகளுடன் வலம் வரும் வேளைதனில், சில்லென்ற குளிர் காற்று உடலைத் தழுவிச் சென்றது.

அந்த ஏகாந்த நேரத்தை ரசிக்கும் மனநிலை இன்றி அமர்ந்திருந்தவளின் கவனத்தை ஈர்த்தது அலைபேசி.

திரையில் ஒளிர்ந்த புகைப்படம் கண்டவுடன் போனை எடுத்து காதில் வைத்தபடி அவள் மெளனமாக இருக்க, “சிற்பி நீ எங்கிருக்கிற?” என்ற குரலில் படபடப்பை உணர்ந்து, “மொட்டை மாடியில் இருக்கேன்” பதில் கொடுத்தாள்.

“அங்கே என்ன பண்ணிட்டு இருக்கிற?” அவன் காரணமே இன்றி எரிந்து விழுக, அவள் மெளனமாக இருந்தாள்.

பிறகு, “உன்னோட அறையில் நான் தங்கி இருப்பது உனக்கு பிடிக்கல என்று செயலில் காட்டுகிறாய். ம்ஹும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் என்னுடைய அறைக்குப் போக முயற்சி செய்யறேன். அதுவரைக்கும் உனக்கு தொந்தரவு தராமல் இருக்கிறேன்” என்று இடைவெளி விட்டு,

“உன்னைக் கட்டியணைத்தது தவறுதான் என்னை மன்னிச்சிடு. இப்போ வீட்டில் எல்லோரும் இருக்காங்க தயவு செய்து உன் கோபத்தை கொஞ்சம் விட்டுட்டு கீழே வருகிறாயா?” என்றவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் போனை வைத்துவிட்டான்.

‘நீ என்னுடைய ரூம்விட்டு போறேன்னு சொல்லிட்டு என் மனசில் நிரந்தரமா குடி வந்துட்டியே.. காதலிக்காதே என்று மனசை எவ்வளவோ தூரம் எச்சரிக்கை செய்தேன். ஆனால் அது என் பேச்சைக் கேட்காமல் உன் பின்னாடி போகுது’ பெருமூச்சுடன் கீழிறங்கி சென்றாள்.

அவளைக் கண்ட மிருதுளா, “நீ போய் முகிலனைக் கூட்டிட்டு வா. நம்ம எல்லாம் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம்” என்று சொன்னதற்கு சரியென்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

இரவு உணவை முடித்துக்கொண்டு அறைக்குள் நுழைந்த மிருதுளாவின் பார்வை கணவனின் மீது கேள்வியாக படிந்தது. நிரஞ்சனின் அருகே சென்று அமர்ந்தவள், “என்னங்க யோசனையெல்லாம் பலமாக இருக்கு?” என்று விசாரித்தாள்.

அவளின் குரல்கேட்டு தன்னிலைக்கு மீண்டவன், “இல்ல உனக்கு சிற்பிகா பற்றிய விவரம் ஏதாவது தெரியுமா?” என்று கேட்டதற்கு மறுப்பாக தலையசைத்தாள்.

நிரஞ்சன் அவளை கூர்மையாக நோக்கிட, “அவளை பஸில் சந்திச்சேன். அம்மா இறந்த விஷயத்தை பேச்சு வாக்கில் சொன்னால் அப்படியே அவங்க வீடு இருக்கும் ஏரியா கண்டுபிடித்து விசாரிச்சப்போ நல்ல பொண்ணு என்று சொன்னாங்க. அவ்வளவுதான்..” என்று சாதாரணமாக கூறினாள்.

மனைவி சொல்வதைப் பொறுமையாக கேட்ட நிரஞ்சன், “இல்ல நானும் அந்த பெண்ணை சந்தித்த நாளில் இருந்தே பார்க்கிறேன். எந்தவொரு விஷயத்தையும் அவள் பெருசாக எடுத்துக்காமல் கடந்து போறா.. அதே நேரத்தில் மத்தவங்க முன்னாடி அவள் அழுதும் பார்க்கல” சந்தேகத்துடன் இழுத்தான்.

கணவனின் சந்தேகத்திற்காக காரணம் புரியாமல் குழப்பமான மனநிலையுடன், “நீங்க ஏன் திடீரென்று இப்படி கேட்கிறீங்க?” என்றாள்.

“இல்ல நீ அழுதால் உன்னை சமாதானம் செய்ய நானிருக்கேன். ஆனால் அந்த பொண்ணு உன் தம்பி அடிப்பட்ட அன்னைக்கு கூட அழுகாமல் இருந்ததாக ராகுல் சொன்னான். அதெப்படி ஒரு கணவன் அடிபட்டு சீரியசாக மருத்துவமனையில் இருப்பதைக் கேட்டு மனைவியால் அழுகாமல் இருக்க முடியும்?” என்று கேட்க மிருதுளாவின் மனதில் அதே கேள்வி எழுந்தது.

சட்டென்று கணவனை நிமிர்ந்து பார்த்த மிருதுளா, “இதை நான் யோசிக்கவே இல்லையே” வேகமாக எழுந்து வெளியே செல்ல ஹாலில் அமர்ந்திருந்த இருவரையும் கண்டு அவர்களை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.

அவளின் பின்னோடு வந்த நிரஞ்சன் மனைவியைப் போக வேண்டாமென்று தடுத்து மறுப்பாக தலையசைக்க, சற்றுமுன் நிரஞ்சன் அறைக்குள் கேட்ட கேள்வியை முகிலன் சிற்பிகாவிடம் கேட்டான்.

கணவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், “அம்மா சொல்வாங்க நம்மள அழ வைக்க நினைக்கிறவங்க முன்னாடி கண்ணீர் சிந்தினால் அவங்க ஜெய்த்துவிட்டதாய் அர்த்தமாம். இதுவரை அழுக்காமல் இருந்து நிறைய பேரை தோற்கடித்து இருக்கேன்” கலகலவென்று சிரித்துவிட்டு எழுந்து நின்றாள்.

முகிலன் பார்வை அவளின் மீதே நிலைத்திருக்க, “தொண்டை அடைக்கும் அளவுக்கு மனபாரம் இருந்தால் மழையில் நனைந்தால் சரியாகிடும்னு எங்கம்மா சொல்வாங்க. இப்போவெல்லாம் அவங்க சொன்னது எவ்வளவு பெரிய உண்மைன்னு தெரிஞ்சிக்கிட்டேன்” பீடிகையுடன் சொல்லிவிட்டு எழுந்தவள் முகிலனை கைத்தாங்கலாக பிடித்து அறைக்குள் அழைத்துச் சென்றாள்.

அவள் பேசும் வரை பொறுமையாக கேட்ட முகிலன், ‘நானொரு கேள்வி கேட்டால் இவ ஒரு பதில் சொல்றாளே’ முற்றிலும் குழம்பி போனான். அதே மனநிலையுடன் நிரஞ்சனும், மிருதுளாவும் தங்களின் அறையை நோக்கி சென்றனர்.

அடுத்தடுத்து வந்த நாட்கள் இனிமையாக கழிய முகிலனின் கால் கட்டு பிரிக்கப்பட்டது. அந்த வார இறுதியில் ராகுல், தன் தாய் மற்றும் தங்கையை அழைத்துக்கொண்டு முகிலனின் வீட்டிற்கு வருவதாக சொல்லி இருந்தான்.